Tuesday, 25 December 2012

இறக்கும் வரை நடைபிணமாகவே வாழ்ந்தான்

                                                                                         
  இன்றோடு என் நண்பனும் என் தோழியின் காதலனுமான திரு.போல் அண்டனி இறந்து 12 வருடங்கள்.எனக்கு என் தோழி அறிமுகமானது நாங்கள் இருவரும் வேலை நிமித்தமாக ஜப்பான்  சென்ற போது ,ஒரே அறையில் தங்கினோம்.போல், அவர் காதலி ,நான் மூவரும் இதற்கு முன்பு பார்த்துதுண்டு ,ஒரே கம்பெனியில் வேலை செய்தோம்  ஆனால் பேசியது இல்லை.போல் உயர்பதவியில் இருந்தவர் ,எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன் கொஞ்சம் proud என்றே நினைத்தேன். போல் அடிக்கடி அவளோடு ஜப்பானுக்கு போன் பண்ணி பேசுவார் ஆனால் போன் பண்ணும்வேளைகளில் அவள் இல்லாவிட்டால் என்னோடு பேசுவார்.’செல்வி அவளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்,அவள் என் உயிர்’என்றெல்லாம் உருகுவார்.போலும் அவர் காதலி இருவருமே கிறிஸ்துவர்கள்.மேலும் இருவருமே ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவார்கள் .என் தமிழ் போலுக்கு ரொம்ப பிடிக்கும் என்பார்.

             அவர்கள் காதைலைக்கண்டு பொறாமைப்படாத  ஆட்களே இல்லை.
     ஆனால் எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை  பட் என்னையும் இப்படி யாராவது காதலிப்பார்களா”என்று ஏங்கியதுண்டு.அப்படி ஒரு காதல்.போல் அவளை மனைவி தன் மனைவி  என்றே சொல்லுவார்.போலின் காதலி ,யூரேசன் என்று அழைக்கப்படும் கலப்பு திருமணத்தில் பிறந்தவள். அப்பா தமிழ் ,அம்மா யூரேசன் ,ஆகவே அவளுக்கு வெள்ளைக்காரர்கள் பழக்க வழக்கம் அதிகம்.ஜப்பானிலிருந்து திரும்பிய சில மாதங்களில் அவள் வேலை மாற்றலாகி சென்றாள்.போல் எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை.போலின் பயமே ,அவள் யாரிடமாவது பழகி மனம் மாறிவிடக்கூடும் என்ற காரணமே.இறுதியில் நடந்ததும் அதுதான்.போன இடத்தில் வெள்ளைக்காரனைப்பார்த்ததால் ,கருப்பு போலைக் கை கழுவினாள்.வெளியூருக்கு பறந்தாள்.மீண்டும் வந்தாள் ,மீண்டும் பறப்பாள்.போலும் வசதியானவர்தான் ஆனால் குடும்ப சுமை அவர்மேல் நிறுத்தப்பட்டது.ஆகவே இவளுக்கு சுமை எல்லாம் சுமக்க முடியுமா என்ன?போல் இடிந்து போனார்.என்னிடம் அழுதார்.நண்பர்களிடம் அழுதார்.காலில் விழாத குறையாக கெஞ்சினார்.நடைபிணமானார்.ஒருமுறை ,போலுக்காக அல்ல அவரின் காதலுக்காக அவளோடு பேசினேன்.அவள் சொன்னது ‘அவருக்கு அவர் குடும்ப சுமை ,வேலை அதிகம் ,சோ என்னால் வெயிட் பண்ண முடியாது!’இனி நான் என்ன பேசமுடியும்.

              ‘நீங்களாவது சொல்லுங்க செல்வி அவளிடம் ,அந்த வெள்ளைக்காரனெல்லாம் ,பாசமாக இருக்கமாட்டான்.காமம்தான் பெரிதாக நினைப்பான் ,அவளை அனுபவித்தவுடன் தூக்கி வீசிச்செல்வான் என்று வெட்கத்தை விட்டு என்னிடம் பேசினார்!எனக்கோ செய்வதறியாது வாயடைத்துப்போனேன்.இந்த அளவு ஒரு ஆண் என்னோடு பேசும் ஒரு நட்பாக நான் போலைக்கருதவில்லை ,அப்படி ஒரு நெருக்கமும் இல்லை.போலும் அந்த அளவுக்கு தரம் இறங்கி பேசும் ஆடவரும் இல்லை .அப்படி பேசுகிறார் என்றால் அந்த அளவுக்கு உடைந்து போயிருக்கார் என்று என் மனம் குமுறியது.என்னோடெல்லாம் பேசுவதற்கே யோசிக்கும் போல் ,இப்படி உரிமையோடு பேசுகிறார் என்றால் ,ஜப்பானில் நான் அவளைக் கவனித்துக்கொண்ட விதம்.மூச்சுக்கு மூச்சு என்னை ,உடன் பிறவா அக்கா ,அக்காவென சொல்லிக்கொள்வாள்.போலுக்காக பல மானேஜர்கள் ,உயர்பதவியில் உள்ள சில தமிழர்கள் எல்லாம் அவளிடம் பேசி பார்த்தனர்.வென்றது வெள்ளைத்தோலும் பணமும் மாயையும் மட்டுமே!அந்த காரணத்தால் போல் தன் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

           ஒரு நாள் இரவு  வேலை முடிந்து  நெடுஞ்சாலையில் தூக்கலக்கம் காரணமாக காரை நிறுத்திவிட்டு ,தூங்கும்வேளையில் எவனோ இடித்து விட்டு போய் விட்டான்.மூன்று நாட்கள் கோமாவில் இருந்து ,அப்படியே இறந்தும் போனார்.போலின் அசைவற்ற உடலைக்கண்டு அழாத ஆண்களே இல்லை .சீனன் ,மலாய்க்காரன் என்று அனைத்து நண்பர்களும் அழுதனர்.நான் போல் வீட்டு வாசலை மிதித்தேன்.என் வாழ்வில் நான் என் அப்பாவின் இறப்பைத் தவிர்த்து ,முதன்முதலாக கதறி அழுத ஒரு மரணம் என்றால் அது போலுடைய மரணம்தான்.என்னைக்கட்டியணைத்து அழுத அவருடைய அம்மா ‘என் பையன் அவன் அப்பா மாதிரிம்மா ,இனி ஒவ்வொரு கிறிஸ்மஸ் நாளும் எனக்கு இருள் சூழ்ந்த நாளே.எப்படி என் பிள்ளை இல்லாத நாட்களை நான் கடக்கப்போகிறேனோ?என்று வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதார்.என்னதான் அவள் எடுத்த முடிவு அவள் சொந்தவிசயமோ அவள் வாழ்க்கையோ ,இறைவனிடம் பதில் சொல்லனுமே?அவர் அவளுக்கு செலவழித்த பணத்தையோ பொருளையோ திரும்ப கொடுக்கலாம ஆனால் அவர் உயிரை? என் வாழ்வில் ஒருவளை நான் மன்னிக்கவேமுடியாது  என்றால் அது அவளாகத்தான் இருக்க முடியும்.
                                                                             



                                                                       
                                                                     
                                                                             

Saturday, 22 December 2012

மழலைக்கல்வி என்பது......?

                                                                                 
            இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி திறக்கப்படும் இந்த சீசனில் பல பெற்றோர்களுக்கு பல கவலைகள்.அதாவது தங்கள் பிள்ளைகளின் கல்வியைப் பற்றிதான்..4 வயது குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர் போன் செய்து,’டீச்சர் என் பிள்ளையை இப்போ பள்ளிக்கு அனுப்பலாமா,அல்லது அடுத்த வருடம் அனுப்பலாமா?என பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன!நாம் அனைவரும் தற்பொழுது too ambitious parents என்றால் அது பொய்யா என்ன?
                                                                                 
           மலேசியாவில் கல்வி அமைச்சின் சட்டதிட்டங்களின்படி ஒரு குழந்தை  தனது ஏழாவது வயதில்தான் தன் ஆரம்பகல்வியை அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றான்.அது ஒன்றாம் ஆண்டு .அதற்கு முன் அவன் பயிலும் மழலைக்கல்வி என்பது பெற்றோர்களின் விருப்பமே ,பள்ளிக்கு அனுப்புவதும் ,அனுப்பாமலிருப்பதுவும்.ஆம் கடந்த சில் வருடங்களாகத்தான் அரசு பாலர்பள்ளிகள்(6வயது மாணவர்களுக்கு) ,தற்பொழுது தமிழ்ப்பள்ளிகளிலும்,இயங்கி வருகிறது.அதற்கு முன் 4 -6 வயதுக்குள் ,தங்கள் பிள்ளைகளை மழலைக்கல்விக்கு அனுப்பவிருபும் பெற்றோர்கள் பணம் செலுத்திதான்  அனுப்ப வேண்டும் .இது 4 மற்றும் 5 வயதுக்கு இன்னும் அப்படியே.
                                                  
                                                                                     
         ஆனால் ஒரு குழந்தை தன் அதிகாரப்பூர்வ கல்வியை தொடங்கும் முன் ,தொடக்ககல்வி அல்லது மழலைக்கல்வி எனக்கூறும் preschool education-ஐ அவசியம் ஒரு வருடமாவது அதாவது தனது ஆறாம் வயதில் கற்க வேண்டும் என்பதே மழலைக்கல்வி ஆசிரியைகளான எங்களுக்கு வலியுறுத்தி போதிக்கப்படுகிறது.அதற்காக 4 வயதிலும் ஐந்து வயதிலும் வசதியும் விருப்பமும் உள்ள பெற்றோர்கள் அனுப்பலாம.அல்லது ஒரு சில பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் ,தங்கள் 3 வயது குழந்தையைக்கூட நர்ஸரி மற்றும் டே கேர் போன்ற பராமறிப்பு இல்லங்களுக்கு அனுப்புகின்றனர்.
                                                                                     
                ஓர் ஆசிரியையாக அல்லாமல் ஒரு தாயாக , 4 வயது மாண்வர்களுக்கு மழலைக்கல்வி கட்டாயம் என்றும், அதுவும் அதனை மழலைக்கல்வி மையங்களில்தான் சென்று பயிலவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றே சொல்லுவேன்.ஒரு தாய் வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கும் கற்றுத்தேர்ந்த தாயாக இருந்தால்,குழந்தைகளின் வயதுக்கு ஏற்றவாறு
எழுத்துப்பயிற்சி புத்தகங்களை வாங்கி வீட்டிலே எழுத வைக்கலாம.earlychildhood education சம்பந்தப்பட்ட குறுந்தட்டுகளை வாங்கி கூட குழந்தகளைப் ப்ர்க்க வைக்கலாம்.பொதுவாக 4 வயது மாணவர்களுக்கு play therapy எனும் விளையாட்டின் வழி கல்விதான் மழலைக்கல்வியில் கற்றுக்கொடுக்கபடுகிறது.
                                                                       
            ஆனால் பெரிய அளவில் பணம் செலுத்தி குழந்தைகள் செல்லும் கிண்டர்கார்டனில் பொதுவாக 4 வயது மாணவர்களை கட்டாயப்படுத்தியும் (சிலவேளைகளில் விரல்களில் அடித்தும்)எழுத படிக்க பயிற்றுவிக்கப்படுகின்றனர்.இதற்கெல்லாம் காரணம் ,பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பும்தான்.புள்ளைங்க கிண்டர்கார்டனிலே எழுதனும் ,பக்கம் பக்கமாய் படிக்கனும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் பேராசை என்றே சொல்லலாம்..இது பல கிண்டர்கார்டன் மற்றும் பிரிஸ்கூலில் பார்த்ததும் உண்டு செவி வழி பல ஆசிரியர்கள் ,சொல்ல கேட்டதும் உண்டு.இது தவறே என்று சொல்லுவேன் .சுமார் 4 வயதில் கல்வியைத் தொடங்கும் ஒரு குழந்தை குறந்த பட்சம் 20 வயது வரை பயில்கிறான்.கற்கும் குழந்தைகள் எப்படியும் கற்றுக்கொள்ளும் .கருத்தரித்த மூன்றாவது மாதத்தில் ஒரு குழந்தை கற்க தொடங்குவது நாம் அறிந்ததுதானே?கர்ப்பிணிக்கு ஏழாம் மாதம் வளைக்காப்பு போட்டு ,கிண்ணத்தில் பாலை  எடுத்து ,தாயின் பின் கழுத்துப்பகுதியில் ஊற்றும் போதுஅவளுக்கு உடல் சிலிர்க்கும் சமயம் அவள் காதில் மந்திரம் சொல்வது நம் சடங்குகளில் ஒன்றுதானே?அங்கேயே அந்த குழந்தைக்கு போதனையை (இறை நாமத்தை)சொல்லுகிறோம்தானே?
                                                                               
           சிலர் டே கேர் என்னும் பராமறிப்பு இல்லங்களில் காலையில் கல்வி கற்கவும் பிறகு மதியம் தொடங்கி மாலை வரை டியூசன் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.இதுவே அந்த குழந்தைகளுக்கு ஒருவித வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும்.ஆகவேதான் 4 வயதில் குழந்தைகளை கல்வி கற்க அனுப்புவது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விசயம் என்றே சொல்கிறேன்.என்னதான் காசு கட்டி அனுப்பினாலும் கற்கும் குழந்தைள் மட்டுமே வெகு விரைவில் அனைத்தையும் கிரகித்துக்கொள்ளும்.ஆகவே மழலைக்கல்வி என்பது ஒரு குழந்தையை ஆரம்பக்கல்விக்கு தயார் படுத்துவது,அதாவது பென்சிலைப்பிடிக்க பழக்குவது,பக்கங்களைப்புரட்ட,எழுத்துக்களையும் எண்களையும் அறிந்துகொள்ள ,பள்ளி மற்றும் அந்த சூழலை அவனுக்கு அறிமுகபடுத்துவதுதான்  நோக்கமே தவிர அந்த பிஞ்சுகளிடம் அதிகம் எதிர்பார்ப்பது என்பது கூடவே கூடாது!ஆறு வயது மாணவர்களுக்கு தேர்வு தாளில் ஆங்கிலத்தில் examination  என்று கூட அச்சிடாமல் assesment என்றே அச்சிட வேண்டும்.காரணம் எக்ஸாம் என்றாலே அதுகளுக்கு பயம் வந்துவிடும் என்பதால்.
                                                                               
மலேசியா பொறுத்தவரையில் ஒரு மாணவன் ஆறு வயதில் கற்கும் அதே syllabus தான் ஒன்றாம் ஆண்டிலும் பயில்கிறான்.ஒருக்கால் தனியார் பள்ளி அல்லது இண்டர்நேஷனல் பள்ளியாக இருந்தால் கொஞ்சம் வேறு பட்டிருக்கும் .4 தொடங்கி 6 வ்யது வரை ,ஒரே விசயத்தை ,அரைத்த மாவை கற்றுக்கொள்கிறான்.மீண்டும் ஒன்றாம் ஆண்டிலும் அதே கல்விதான்.அதை தெளிவாக பெற்றோர்கள் புரிந்து கொண்டாலே எதிர்பார்ப்பு குறைய வாய்ப்புகள் பிரகாசமா இருக்கு
                                                                               

Thursday, 6 December 2012

ஈகோ என்ற ஈரெழுத்து

                                           
     அந்த ஈரெழுத்து ,உடல் என்ற மூவெழுத்துக்குள் புகுந்து இந்த ஆன்மாவை  ஆட்டிப்படைக்கும் ஆதிக்கம் இருக்கே?ஆங்கிலத்தில் ஈகோவை edging god out என்று சொல்வதாக ஒரு புத்தகத்தில்  படித்த ஞாபகம்!படிக்காதவனுக்கு  பணம் இருந்தால் ஈகோ.படித்தவனுக்கு தான் வகிக்கும் பட்டம் பதவியில் ஈகோ.பணமும் இருந்து பதவியும் இருந்தால்...கேட்கவா வேண்டும் ஆனால் எல்லோரும் அப்படி அல்ல!மனைவி கணவனை விட கொஞ்சம் அதிகம் படித்திருந்தாலோ அல்லது சம்பாதித்தாலோ,கணவனுக்கு கண்டெய்னர் கணக்கில் ஈகோ வந்துவிடும்.அவள் ரெண்டும் ரெண்டும் நான்கு என்று சொன்னாள் கூட ,சில கணவர்மார்கள் இல்லை ’4’ என்று ஆங்கிலத்தில் சொல்வதும் சில இடங்களில் கண்டதுண்டு.நன்றாக ஆங்கில புலமை நம்மில் சிலருக்கு இருந்தால்,தாய்மொழி பேசும் தமிழனைக்கண்டால் ஈகோ!
                                   
         எத்தனை மனிதர்கள் தாங்கள் செய்தது தப்பு என்று தெரியவரும் வேளையில், மனசார மன்னிப்புக்கேட்கிறோம்?எப்படி கேட்பது,மன்னிப்பு கேட்பது நமெக்கெல்லாம் அம்புட்டு பெரிய கேவலமான செயலாச்சே?மன்னிப்பது வெட்கமல்ல,மன்னிக்காமல் இருப்பதுதான் கேவலமான செயல் என்று எங்கோ படித்த ஞாபகம்.நமக்கு எப்போது கோபம் வருகிறது?நாம் எங்கே தோற்றுப்போகிறோமோ,அங்கேதான் நமக்கு கோபமும்..அதனையடுத்து ஈகோவும் தலைத்தூக்கி நிற்கும்.ஒரு சிலகுருமார்களுக்கு தன் சிஷ்யன் தன்னைவிட கொஞ்சம் முதிர்ச்சியடைந்திருந்தாலும் ஏற்றுக்கொள்ள மனம் இடம் கொடுப்பதில்லை. ஒரு சிலரிடம் ஒரு பழக்கம் உண்டு.அவர்கள் படித்த ஒன்றை நம்மிடம் பகிரும்போது ,’ஓ இதுவா ,நான் ஏற்கனவே படிச்சிட்டேன்’என்று உண்மையைச் சொன்னால் கூட அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது?அதெப்படி நான் இலக்கியவாதி ,படைப்பாளன் என்னை முந்திக்கொண்டு நீ படித்திருக்கமுடியும்?
                                       
      உன் மதம் பெரிசா என் மதம் பெரிசா?என்பதில் ஒரு ஈகோ,அதைவிட,உன் ஜாதி பெரிசா என் ஜாதி பெரிசா என்பதில் ஓர் அகங்காரம்.என் கடவுள்தான் முதலில் வந்தார்,பிறகுதான் உன் கடவுள் என்று கூவும் ஒரு ரகம்.இனங்களுக்குள் ஒரு பிரச்சனை.எந்த இனம்,எவன் பெரியவன்?ஆப்ரிக்க கறுப்பின மக்களுக்கு தங்களை ‘கறுப்பன்’என்று சொன்னால்தான் விரும்புவார்களாம்.ஆனால் எங்கள் ஊரில் சீனன் ,எங்களை கறுப்பன் என்றால் ,அடித்தே கொன்று விடலாம் போல  ஓர் உணர்வு வரும்!ஏன் அவ்வளவு தூரம் போவானேன்,நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூட சாமிகளுக்கிடையே யார் பெரியவன் என்ற ஆணவம் உள்ள  கதைகள் கேட்டதுண்டு.அதெவெல்லாம் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்தவே ஒழிய வேறொன்றுமில்லை.அவருக்கே அப்படி என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?அப்படித்தானே கேட்க தோணுது?

                                  
      தெரிந்த தோழி ஒருவள் அரசு வேலை.நம்மில் சிலபெண்களுக்கு ,அரசுப்பணி என்றால் சொல்லவே தேவையில்லை.திருமணம் ஆகி பல பிரச்சனைகளோடு வாழ்க்கை.எல்லோருக்கும் அப்படித்தானே ஆனால் கண்வன் குடும்பத்தில் பிரச்சனை.கணவ்ர் குடும்ப உறுப்பினர்கள் படிக்காதவர்கள் தான் படித்தவள் என்கிற அகங்காரம் தலைத்தூக்கவே,ஆட்டமாய் ஆடுகிறாள்.விளைவு, விவாகம் ரத்து!தன் கண்வன் ரொம்ப நல்லவர்,’அவருக்கு என்னைத் தள்ளிவைக்க மனம் இருக்காது ,அவர்கள் குடும்பம்தான் இப்படி செய்ய தூண்டியது?ஆமாம் குடும்ப உறுப்பினர்கள் தம்பி மனைவியோடு சேரவே கூடாது என்ற ஈகோ?இந்த வரட்டுக்கெளரவம் ,கணவன் மனதில் ஆசை இருந்தாலும் ,எப்படி நாமாக போவது?குடும்பத்தை எதிர்த்துக்கொண்டு எப்படி செயல்படுவது என்று தன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.

                              
      இன்னொருபுறம் ,கண்வனுக்கும் மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு.மாமியார் மருமகள் பிரச்சனைதான்.ஊதி ஊதி பெரிதாக வெடிக்க,மருமகள் வெளியேற்றம்.அம்மாவுக்கு கணவர் இல்லை,கருணையால் மகனைத் தன் வசம் இழுக்கிறார்.மருமகளிடம் தோற்றுப்போகக்கூடாது என்ற ஈகோ?விளைவு மகனின் வாழ்க்கை பகடைக்காய்!மகனும் அம்மா பிள்ளையாம்,எங்கம்மாவை மதிக்காதவள் என்று பிள்ளையை தாயிடம் இருந்து அபகரித்துக்கொண்டு ,மனைவியை தள்ளி வைக்கிறான்.தாயோடு அந்த கணவன் இருக்கிறான் ஆனால் அவன் பிள்ளை மட்டும் தன் தாயோடு இல்லாமல் பாட்டியோடு?என்ன நியாயம்?இப்படி எத்தனை வாழவேண்டிய தம்பதிகள் அகங்காரம் ஆணவச் செருக்கினால் ,மனதில் ஆசை இருந்தும் ஈகோ தடுக்கிறது.இன்னும் தனிமனிதனாய் ஆனால் ஆசைகளை சுமந்துகொண்டு.எத்தனைக் காதல்கள் ஈகோ என்ற கல்லறைக்குள் உயிருடன் புதைக்கப்பட்டு ,வாழத்துடித்துக்கொண்டிருக்கின்றன?

                                
          ஒரே குடும்பத்தில் ஒரே வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் எத்தனைக் குடும்பத்தில் உறவாடிக்கொண்டிருக்கின்றன?அவன் அதைச் சொன்னான்,இவள் இதைச் செய்தால் ,நான் சாகும்வரை முகத்திலே விழிக்கவேண்டாம்?நாம் யார் பிறரை அப்படி சொல்ல.நம்மில் இருக்கம் ஆன்மாதானே இந்த உடலுக்கு சொந்தல்.இடையில் வாடிக்கையாக  வந்து இவ்வுடலில் புகுந்துகொண்ட நமக்கு என்ன உரிமை இருக்கு?ஆனால் மாற்றான் தாயின் வயிற்றில் பிறந்தாலும் ,நட்பு என்கிற பெயரில் எத்தனை உயிர்கள் உடன்பிற்ப்புகளாகவே வாழ்ந்து வருகிறோம்?என்றாவது ஒருநாள் இதைப்பற்றி யோசித்திருப்போமா?நமக்குத்தான் அதுக்கெல்லாம் நேரம் இல்லையே?உயிருக்குயிராய் இருந்த நட்புகள் ,இன்று கண்ணுக்குத்தெரியாத தூரத்தில் முடங்கிக்கிடப்பதுவும் ஈகோவின் வருகைதானே?ஒருவர் அடிக்கடி இப்படி சொல்வாராம்,’என்னைக் கேட்காமல் என் வீட்டில் மூச்சுக்கூட விடமாட்டார்கள் ,அப்படி ஓர் ஆணவம்,அகங்காரம்!இறுதியில்,அவர் இறக்கவிருந்த சமயங்களில் அவர் மூச்சை அவரே விடமுடியாமல் செயற்கை மூச்சு(கேஸ்) வழி அவருக்கு போய்க்கொண்டிருந்ததாம்.சுகி.சிவம் ஐயாவின் புத்தகத்தில் படித்து நன்றாக சிரித்தேன். 
                                   

       ஒரு கதை.ஒரு காகம் ஒரு மாமிசத்துண்டைக் கவ்விக்கொண்டு பற்க்கிறது.அதனைத் துரத்திக்கொண்டு கழுகும் சில பறவைகளும் பறக்கின்றன.காகமும் உயரப் பறக்கிறது.பறவைகள் விட்டபாடில்லை.இறுதியில் காகம் உயரப் பறந்து சென்று மாமிசத் துண்டை ,கீழே போடுகிறது,மற்ற பறவைகள் ,அதனை நோக்கி கீழே பறக்கின்றன.காகத்துக்கு மற்ற பறவைகளிடமிருந்து விடுதலை கிடைக்கிறது.அப்ப்போதான் காகத்துக்குப் புரிந்ததாம் ‘நான் மாமிசத்துண்டி இழந்தது என்னவோ உண்மைதான் ஆனால் நான் இப்போது பெற்றிருப்பது எத்தனைப் பெரிய சுதந்திரம்’என்று?
நமக்குள் இருக்கும் அகங்காரம் கூட இந்த மாமிசத் துண்டைப்போலத்தான்.இதை நாம் கைவிட்டுவிட்டால் வாழ்க்கை லேசானதாக ஆகிவிடும்.


      விட்டுப்போன உறவுகள்,பந்தங்கள் ,நட்புகள் ,காதல்கள் ,திருமணங்கள் அனைத்தையும்  இனி எப்பொழுது மீட்டுக்கொண்டு வரப்போகிறோம் அல்லது அவைகளாக வரத்தான் போகுதா?நாம் வாடிக்கையாக வந்து குடியிருக்கும் இவ்வுடலுக்கு எப்பொழுது காலாவதி நோட்டிஸ் இறைவன் அனுப்பபோகிறானோ?பிறரை மகிழவைத்துப்பார்,உனக்கு மகிழ்ச்சி கிட்டும் என்பது போல்,நம்மால் முடிந்தவரை ஈகோவை தூரவைத்து இன்பத்தை அருகில் கொண்டு வருவோம்.இந்த உலகில் நாம் ஒரு சுற்றுப்பயணியாக வந்திருக்கிறோம்.மீண்டும் திரும்பிபோக,வண்டியைத் தயார் நிலையில் வைத்திருக்கிறான் இறைவன்.நாம் கடந்து போகும் காலம் வெகுதூரமில்லை.உண்மையாக நேசித்தவர்களைத்தான் நாம் உரிமையோடு கோபித்துக்கொள்வோம்.அதே உரிமையில் மீண்டும் உறவைப் புதுப்பித்துக்கொள்ளுவதில் என்ன தயக்கம்?

                                                       
      நமது வேதத்தில் அர்த்த சாஸ்த்திரம் ,தர்ம சாஸ்த்திரம்,காம சாஸ்த்திரம் ,மோஷ சாஸ்த்திரம் என்று நான்கு வகைகள்.இதில் கடைசியாக சொல்லும் மோஷ சாஸ்த்திரத்தில் ‘அகங்காரத்தை விட்டொழித்தால்தான் நமக்குள் இருக்கும் ஆனந்த சொரூபத்தை நம்மால் தரிசிக்க முடியும்’என்று கூறப்படுகிறது.(மனசே ரிலாக்ஸ் பிளிஸ்).இறைவன் என்கிற கடலில் நாம் ஒரு அலை என்பதை உணராத அகங்கார ஆட்டங்கள் அவஸ்தை..அசிங்கம்..அலங்கோலம்.நமது ஒவ்வொரு இயக்கமும் கடவுளின் இயக்கமே என்பதை உணரும் பூரண சரணாகதியே ஞானத்தின் பிறப்பு,நிம்மதி  நிலை!                     


                  

                                                               

Thursday, 29 November 2012

கருணை இல்லம் நோக்கி என் பயணம்

             வருடா வருடம் ஏதாவது ஒரு நடவடிக்கைச் செய்வதில் தீவிரமாக செயல்படும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த சைல்டு(CHILD NGO) ஆசிரியைகள் ,இந்த வருடம் ஏதாவது  ஒரு பயனுள்ள காரியம் செய்வோம் என்று யோசித்தபோது தோன்றியதுதான் இந்த ‘ரவாங் சாரதா இல்லத்துக்குப் பயணம்.Selangor Teachers Club ,president அடியேன் என்ற முறையில் ,ஆசிரியர்களோடு இது பற்றி கலந்தாலோசிக்க எனக்கு உத்தரவு வழங்கப்பட்டது.சுமார் 35 ஆசிரியைகளைக்(சிலாங்கூரில் மட்டுமே) கொண்ட இயக்கம் அது.மலேசியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலர்பள்ளிகள் சைல்ட் (அரசு சார்பற்ற  இயக்கம்)வழி இயங்கி வருகின்றன.
                                                                                               
       இந்த அரிய திட்டத்திற்கு எல்லா ஆசிரியைகளும் பச்சைக்கொடி காட்டவே ,தேதியும் நிர்ணயிக்கப்பட்டது.கேட்டதும் கொடுக்கும் மனப்பக்குவம் கொண்ட எனதருமை பெற்றோர்களிடமும் ,என் பள்ளி செயற்குழு உறுப்பினர்களிடமும் விசயம் தெரிவிக்கப்பட்டவுடன்,’டீச்சர் எப்போ பணம் வேணும்னு சொல்லுங்க ,வங்கி அக்கெளண்ட் எண்களை கொடுங்க ,பணம் அதில் போட்டு விடுகிறோம் ‘என்று உரிமையோடு சொன்ன அந்த நல்ல உள்ளங்களின் சப்போர்ட்டுடன் களத்தில் இறங்கினோம்.
                                                                                     
            24 நவம்பர் காலையில் கோலாலும்பூரில் இருந்து மின்ரயில்(commuter)ஏறினோம்.கொஞ்சம் தாமதமாக ரயில் ஏறினோம்(எப்போதுமே தமிழன் சொன்ன நேரத்துக்கு போகமாட்டோமே?)
என் சக ஆசிரியை கொஞ்சம் தாமதமாகமாக்கிவிட்டாள்.கோலாலும்பூரில் இறங்கி,அங்கே பசியாறையை வாங்கிக்கொண்டு ,ரயில் வ்ரும் நேரம் வரை ,உணவை அருந்தினோம்.அப்படித்தானே நேரத்தை மிச்சம் பண்ண முடியும்.
குறித்த நேரத்தில் ரயில் வந்தது.பயணம் தொடர்ந்தது.நல்ல வேளை அன்று சனிக்கிழமை காலை என்பதால் ,அவ்வளவாக கூட்டம் இல்லை என்றே சொல்லலாம்.தாரளமாக உட்கார்ந்து செல்ல சீட் கிடைத்தது.இம்முறை மாற்றுத்திறனாளிகள் சீட்களில் நான் உட்காரவில்லை-முக்கிய குறிப்பு!
                                                                                     
                 ரவாங் நகரத்தை அடைய சுமார் அரைமணி நேரம் ஆனது.எந்த தடங்கலும் இல்லாம்ல் போய்ச் சேர்ந்தது மனதுக்கு நிம்மதியாய் இருந்தது.ஏதும் நல்ல காரியம் செய்வதென்றால் நமக்கு பல தடைகள் வருமே?அங்கே எங்களுக்காக தயார் நிலையில் இருந்த காரில் இல்லைத்தை அடைந்தோம்.ஒரே பச்சைபபசேல் என்ற சூழல்.பூச்சோங்கில் வீடுகளைச் சுற்றிலும் கட்டடங்கள்தான் இருக்கும்.மரங்கள் இருப்பது அரிது.சோ ,எனக்கு ரொம்ப பிடித்த வீடாக அமைந்தது.உள்ளே நுழைந்ததும் ,நான் தடையின்றி அங்கே சென்றதன் காரணமும் புரிந்தது.ஆம், மிகவும் புனிதமாக அமைதியாக என்னை வரவேற்கவே காத்திருந்ததுபோன்ற அந்த பூஜையறையும் அங்கே உள்ள படங்களும்.பொதுவாகவே சமய சொற்பொழிவுகளிலோ, சமயம் சார்ந்த நிகழ்வுகளிலோ நாம் கலந்து கொள்ள வாய்ப்புக்கிடைத்தால் ,என் குரு சொல்வது ஒன்றுதான்’உங்களை ,இன்று இங்கே கலந்து கொள்ள வைத்தது நாங்களோ ,நீங்கள் எடுத்த முடிவோ இல்லை ,இறைவன் உங்களை அனுப்பிவைத்திருக்கிறான்,மேலும் நீங்கள் செய்த புண்ணியம்!எனக்கு பதில் கிடைக்க ,இறைக்கு நன்றி சொல்லி உள்ளே நுழைந்தேன்.
                                                                                                     
                   நேரத்தை வீணடிக்காமல் உடைகளை மாற்றிய பின்பு சமையலில் இறங்கினோம்.ஆளுக்கொரு வேலையாக செய்தோம்.கொஞ்சம் அசுத்தமாக கிடந்த பொருட்களை (சிரித்துக்கொண்டே..அதான் நமக்கு நல்லா வருமே)சுத்தம் செய்ய சொல்லி அங்கேயுள்ள பெண்பிள்ளகளைப் பணித்தேன்.’அதுக்கு செல்வி டீச்சர்தான் லாயக்கு சிரித்துக்கொண்டே திட்டுவாங்கன்னு ,என் சக டீச்சர்கள் நல்ல பெயரை எடுத்துக்கிட்டாங்க.
சொல்லிய வேலைகளை சிரமம் பாராமல் செய்துகொடுத்த
பெண்பிள்ளைகளுக்கு,நன்றிடா செல்லங்களே!(கொஞ்சம் பயம்தான் ,என்னடா அறிமுகமே இல்லை,திட்டி திட்டி வேலை வாங்குறாங்களேன்னு?)

        ”too many cooks will spoil the soup”என்ற கூற்றினைப் பொய்யாக்கினோம்.ஆமாம் ,ஒவ்வொரு சமையலையும் எல்லோருடைய ஆலோசனைப்படிக் கேட்டு மகிழ்ச்சியுடன்  சமைத்துமுடித்தோம்.சமைத்த உடன் அங்கே இருந்த பாத்திரங்களையெல்லாம் சொல்லாமலேயே வந்து ‘விடுங்க டீச்சர் ,இன்று எங்கள் ரூட்டின் சமையலறை சுத்தம் செய்வது’என்று சில பெண்பிள்ளைகள் சுத்தம் செய்ய ஒரு கூட்டம் ,சமைத்தை  கொண்டு போய் அடுக்கி வைக்க ஒரு கூட்டம் என சுலபமாய் எங்கள் வேலைகளை ,குட்டிகள் முடித்துக்கொடுத்தனர்.

         சமையலை முடித்தபின்பு ,உணவுக்கு தயாரானோம்.எல்லோரும் அங்கே உணவைச் சுவைத்துக்கொண்டிருக்கும் நான் கொஞ்சம் தாமதமாக சென்றேன்.அங்கே  எல்லோரும் முறையாக அமர்ந்து ,அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்ததைப்பார்த்தபோது ,எங்களுக்கு 70 மார்க்குகள் கிடைத்திருக்கும் போல?ஆமாம் ,தினமும் ஒரே சமையல்காரரின் கையில் சமைத்து உண்பது நமக்கே ( தினமும் நம் வீட்டின் புலம்பல்கள் அதானே)பிடிக்காது.4 முதல் 19 வயது பெண்பிள்ளைகள் ,அதுகளுக்கு மட்டும் எப்படி பிடிக்கும்?’சமையல் சூப்பர் டீச்சர்,ரொம்ப நல்லா இருக்கு (இருங்கடி அவுங்க போகட்டும் ,உங்களுக்கு இருக்கு என்ற சமையல்காரம்மாவின் இன்னர் வாய்ஸ்??).நான் சமைத்த இறால் சம்பல் ,கொஞ்சம் காரம் இருப்பினும் ,பசங்க சுவைத்து சாப்பிடும்போது அதன் சுவையும் எனது மகிழ்ச்சியும் இரட்டிப்பானது போல இருந்தது.
சாப்பிட்ட பின்பு .......உறக்கம்தான்(நம் பிரச்சனை நமக்கு)ஆனால் எல்லோருக்கும் கேம்ஸ் தயாரித்து வைத்திருந்தோம்.அதுக்கான சாக்லெட்கள் ,பரிசுப்பொட்டலங்கள் எல்லாம் கொண்டு சென்றிருந்தோம்.ஒவ்வொரு விளையாட்டிலும் சளைக்காமல் விளையாடிய குழந்தைகள் என்றால் அது 4 வயது குழந்தைகள்தான்.’டீச்சர் ,மிட்டாய் கொடுங்க டீச்சர் ,நான் ஜெயிச்சிட்டேன் ‘என்று கேட்டு கேட்டு விளையாட்டில் ஆர்வமாய் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து வயது பிள்ளைகளையும் பார்க்கும்போது என்னையறியாமல் என் கண்கள் கலங்கின .நமக்கு ஏதும் ஆகிவிட்டால் ?நம் பிள்ளைகளின் நிலை?இந்த பயம் எனக்கு அடிக்கடி வந்து போகும்!

ஒரு குரூப் விளையாட்டுகளைக் கவனிக்க ,நாங்கள் தேநீர் தயாரிக்க ஆயத்தமானோம்.சத்தியமாக நான் தேநீர் கலக்கவில்லை,அந்த பிள்ளைகளுக்கு என்னால் அந்த கொடுமை நேரக்கூடாது என்பதில் ரொம்ப கவனமாய் இருந்தேன்.’தேநீர் ரெடியாவிட்டது,வாங்க சீக்கிரம் ,நாம் கிளம்பும் நேரம் வந்துவிட்டது’என்று அறிவித்தவுடன் ,அந்த பிஞ்சுகளின் கண்களில் ஒரு சோகம்?அதைப்பார்க்க எங்களுக்கு நிஜமாக மனமில்லை.ஆனால் எல்லோரும் அதைக்காட்டிக்கொள்ளாமல் ,தேநீர் பறிமாறப்பட்டது.சென்வீச் தயார் பண்ணிக்கொடுத்தோம்.ஏதோ முழுமையடைந்தது போல உணர்ந்தேன்.

மணி மாலை 4 ஆகவே ,கிளம்ப தயாரானோம்.அதுக்கு முன்பு எங்களுக்கு ஸ்பான்சர் மூலம் கிடைத்த பணத்தைப்,பண உறைகளில் போட்டு ,அங்கே இருந்த அனைவருக்கும் (சமையல்காரம்மா ,வார்டன் உட்பட)எல்லோருக்கும் கொடுத்தோம்.எதிர்பார்த்தைதைவிட பணம் அதிகமாகவே கிடைத்தது.அதிலும் என் பள்ளியில் நான் அங்கே போன பிறகும் ,போனில் அழைத்து ,பணம் போட்டிருக்கேன் ,எடுத்துக்கொள்ளுங்கள் செல்வி என்ற நல்ல உள்ளங்கள் இருப்பதுவும் ஆச்சரியம்தானே?கொடுக்கப்பட்ட பிறரின் பணம் சரியான முறையில் போய்சேர்க்கவேண்டியது நம் கடமையாச்சே?அதில் நான் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டேன்.அனைத்து ஆசிரியைகள் கையிலும் சுமார் ஐந்து உறைகளைக்கொடுத்து ,பிள்ளைகளிடம்  கொடுக்க சொன்னேன்.அந்த கணம் அந்த பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.மீதப்பணத்தை அங்கே இருந்த உண்டியலில் போட்டேன்.

நாங்கள் விடைபெறும் நேரம் .அணைத்து முத்தமிட்டு ,இனி அப்படியொரு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் வெளியேறினோம்.இந்த புனித காரியம் செவ்வென நடந்தேற எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.வேலை நடக்க வேண்டும் என்றால் ,’திட்டவும் செய்வேன் ,சிரிக்கவும் செய்வேன்’ என்ற என் செயலுக்கு எதிர்ப்பு சொல்லாமல் எனக்கு அனைத்து வகைகளிலும் ஒத்துழைத்த என் உடன்பிறவா சகோதரிகளுக்கு நான் நன்றி சொல்லியே ஆகனும்.சில குறைகள் இருந்தாலும் ,99% திருப்தியுடன் திரும்பினேன்.

.இதுவரையில் இதுபோன்ற இல்லங்களுக்கு நிதியுதவியும் பொருளுதவியும் செய்தால் மட்டும் போதும் என்று தவறாக நினைத்துக்கொண்டிருந்த எனக்கு ,முடிந்த வரையில் நாமாக சென்று ,அங்கே உள்ளவர்களுக்கு விருப்பமானவற்றை தெரிந்துகொண்டு ,அதனை செயல்படுத்தினால் அவர்கள் அடையும் எல்லையில்லா மகிழ்ச்சியை   உணரமுடிந்தது.மேலும் நன்கொடையாக கொடுக்கப்படும் பொருட்கள் அங்கே மிதம்மிஞ்சி கிடைப்பதைக்கண்டோம்(தெர்ந்துகொண்டோம்)இனி வரும் காலங்களில் இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக்கொள்ள எண்ணம் கொண்டுள்ளேன்.இன்று இந்த பொன்னான வாய்ப்பை அளித்த இறைக்கு நன்றி  கூறியே ஆகவேண்டும்.என் கடன் பணி செய்து கிடப்பதே!

(’அர்த்தமுள்ள தீபாவளி விருந்து’என்ற ஆல்பம் என் முகநூலில் ,ஏனைய படங்களுடன் )






















                                                                                     

Saturday, 20 October 2012

சொர்க்கமே ஆனாலும் அம்மா வீட்டு தீபாவளிபோல வருமா?

                   தீபாவளி என்றாலே எங்கள் வீடுதான் எல்லோருக்கும் பிடிக்கும் .இதற்கு காரணம், என் அப்பாவும், என் அம்மாவும் அவர்களின் குடும்பத்தில்மூத்தவர்கள்.என் அப்பா பத்து பேர்களில் மூத்தவர்,என் அம்மாவும் மூத்த பெண்(முதலாவது என் தாய்மாமன்)அம்மாவின் உடன்பிறப்புகளும் பத்துபேர்.இதுபோக ,என் அப்பா என்றால் ,உறவினர்களுக்கு ரொம்ப பிடிக்கும்!அவ்ர் ரொம்ப உதவி செய்பவர்,சாது,கொடுக்கும் மனப்பான்மை!இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.அப்பவை மணந்ததால் அம்மாவும் ,அந்த குணஙகளைப் பெற்றார்!
                                                                                                                                                      
     நாங்கள் வசித்து வந்தது டிப்பிக்க்கல் தமிழர்கள் வசிக்கும் (கம்போங்)கிராமம்!ஆகவே அங்கே தமிழர்கள் பெருநாட்கள் என்றாலே,ஒரே ஆர்ப்பாட்டம்!அதிலும் தீபாவளி என்றால் கேட்கவே வேண்டாம்!ஒருமாதத்துக்கு முன்பே,வீட்டைச் சுத்தம் செய்வது,அலங்காரம் செய்வது,புத்தாடைகள் வாங்குவது,பலகாரங்கள் செய்வது என பல வேலைகள் மும்முரமாக நடக்கும்.போட்டாபோட்டி போட்டுக்கொண்டுதான் பல வேலைகள் செய்வோம்.பக்கத்துவீட்டுத்தோழியின் வீட்டில்,5 விதமான பலகாரங்கள் என்றால்,உடனே நாங்கள் எக்ஸ்ட்ரா ஒன்னு செய்வோம்,அதையும் போய் உடனே, அவுங்க வீட்டில் பெருமையாய் சொல்லிட்டு வருவோம்.அவளும் அவள் தங்கையும் சளைத்தவர்கள் அல்ல,உடனே அடுத்தநாள் ,அவுங்க வீட்டில் இன்னொரு பலகாரம் இடம்பெறும்,அந்த விசயம் எங்களுக்கு தெரியவந்தால் உடனே,அம்மாவிடம் போய்,பலகாரம் செய்யனும்னு காசு கேட்போம்,ஆப்பைக்கரண்டியில் அடி விழும் ஆனால் வலிக்கவே வலிக்காது ,பக்கத்து வீட்டு எக்ஸ்ட்ரா பலகார தகவல்தான் அதிகமாக வலிக்கும்!

       என் அக்காள்கள் இருவரும் திருமணம் ஆகும்வரை,நானும் என் தங்கையும்  சின்னப்பிள்ளை,செல்லப்பிள்ளை.தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்பொழுது,பலகார வேலைகள் அனைத்தையும் முடித்துவிடுவோம்.பிறகு அந்த வாரத்தில் வீடு கழுவுதல்,ஒட்டடை அடித்தல்,பக்கத்துவீட்டை எட்டிப்பார்த்து ஏதாவது ஐடியாவைத் திருடி,வீட்டை அலங்கரித்தல் இப்படியே ஓடும்!தீபாவளி முதல்நாள்,யாராவது உறவினர் கண்டிப்பாக குடும்ப சகிதம்(அப்பா வழி)நம் வீட்டுக்கு வருவாங்க.அப்படி வரும் உறவினர்களில் எங்கள் வயது உள்ள சித்தப்பா பிள்ளைகள் என்றால்,கேட்கவா வேண்டும் எங்க சந்தோசத்திற்கு!தீபாவள் ஈவ், காலையில் ,பொதுவாக சீக்கிரமே  எழனும்!அப்போத்தான் அப்பாகூட காரில் மார்க்கெட் போகமுடியும்.லேட் என்றால்,தண்டனை வீட்டில் வேலை செய்து சாகனும்??ஊர் சுத்த முடியாதே!அப்பா காரில்,பக்கத்து வீட்டுத்தோழி(அவளுக்கு அப்பாவும் இல்லை,அண்ணனும் இல்லை)ஆகவே ,நாம்தான் எங்கு போனாலும் அழைத்துச் செல்வோம்.அப்புறம் ,அப்பாவின் இரண்டாம் தங்கை(சின்ன அத்தை)அவருக்கு கணவர் இல்லை,ஆகவே அவரையும் போய் ,காரில் அழைத்துக்கொண்டுதான் மார்க்கெட் போவோம்!                                                                         
                                                                           
                மூன்று மணி நேரம் ,மார்க்கெட்டிங்,முடித்து வீடு திரும்புவோம்.அதற்குள், வீட்டில் அக்காள் மற்றும் எங்களோடு வளர்ந்த என் அப்பாவின் கடைசி அத்தையும் எல்லா வேலைகளையும் முடித்துவிடுவர்!நானோ வாங்கி வந்த பூக்களையெல்லாம்,ஜாடியில் அழகுபடுத்தி வைப்பேன்,அண்ணா இருவர் மற்றும் தம்பியும் சேர்ந்து வீட்டை ரொம்ப அழகாக அலங்கரிப்பார்கள்!!அப்படி இப்படின்னு ,இரவாகி விடும்!குளித்த உடன்,இறந்த பெருசுகளுக்கு படையல் போடுவோம்!கண்டிப்பாக அந்த நிகழ்வில் ,அழையா விருந்தாளியாகா யாராவது வந்து கலந்து சாப்பிட்டு செல்வார்கள்(அப்படி படையல் விருந்தில் அழையாமல்  வருபவர்கள்,இறந்தவர்கள்தான் அவர்கள் உருவில் வருவதாக பக்கத்து வீட்டுப் பாட்டி சொல்லும்?)ஆனால் இது வருடா வருடம் நடக்கும் என்பதுதான் ஆச்சரியமும் உண்மையும் கூட!

  என்னதான் செய்வோம்னு தெரியாது ,ஆனால் விடிய விடிய விழித்துக்கொண்டு வேலைகள் இருந்த வண்ணம் இருக்கும்.விடியற்காலை ஐந்து மணிக்கு ,அம்மா வெந்நீர் போட்டு ,ஒவொருவருக்கும் எண்ணெய் தேய்த்து விடுவார்.பிறகு புது உடை ,நகைகள் போட்டுக்கொள்வோம்.அன்று மட்டும் அம்மா கையில் ஸ்பெசல் தோசை இட்லி கிடைக்கும்(மற்ற நாட்கள் ,நாங்க்ள் (பெண்பிள்ளைகள்)சாப்பிடாவிட்டாலும் அம்மா வருத்தப்படமாட்டார்.).யாராவது உறவினர்கள் அல்லது நண்பர்கள் ,நம் வீட்டில் காலைப்பசியாறைக்கு வருவது வழக்கமான ஒன்று.

             அண்டைவீட்டாருக்கு பலகாரம் ,பசியாறைக்கொடுக்கும் சம்பிரதாயம் எங்கள் கம்போங்கில் முக்கிய கலாச்சாரம் என்றே சொல்லலாம்.அப்படி ஒரு சகோதரத்துவமாக பழகி வந்தோம்.மதிய உணவுக்கு தயார் செய்தல்,மாலை காப்பி டீ என்று இரவாகிவிடும்.சுமார் ஐந்து நாட்களாக தொடந்து ஒவ்வொரு சித்தப்பா குடும்பம்(அப்பா வழி)சித்தி குடும்பம்(அம்மா வழி)என்று விருந்தாளிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.வீடே குதூகலமாய் இருக்கும்.வேலையே ஓயாது ஆனால் களைப்பு தெரியாது காரணம் விரும்பியும் பகிர்ந்தும் வேலைகளைச் செய்வோம்!

 இப்படியெல்லாம் கொண்டாடிய தீபாவளி ஒரு வருசம் ,அம்மா வரவேற்பறையின் மூளையில் கண்ணீர் (அலங்)கோலமாக.அண்ணா மற்றும் தம்பி மூவரும் செய்வதறியாது டிவியில் லயித்துக்கிடக்க,நானும் தங்கையும் எதையும் பார்க்க விருப்பம் இல்லாமல் அறையில் வெறுமென படுத்துக்கொண்டும் அழுதுகொண்டும் .போன் மேல் போன் அலறியவாறு அப்பா உற்வினர்களும் ,அம்மா உறவினர்களும் !அண்டைவீட்டாரின் விதவிதமான பலகாரங்கள் எங்கள் டைனிங் மேஜையில் குவிந்து கிடக்க.எல்லாத்துக்கும் மேலாக எங்கள் அப்பா ,வெறும் நிழற்படமாக மட்டுமே வரவேற்பறையில் மேல், எங்களைப்பார்த்து கவலையாக இருப்பதை உணர்ந்தேன்.ஆம் 1992 அப்பா இறந்த வருட தீபாவளி கோலம் அது!
                                                                           
                                                                                       

Monday, 1 October 2012

கண்ணை விட்டு போகலாம்,மனதில் இன்னும்!

எனது அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய என் முன்னால் தலைமையாசிரியர் திரு.ஜோன் போஸ்கோ அவர்கள் ,பதவி உயர்வு  காரணமாக ,தற்பொழுது வேலை செய்யும் (என் பிள்ளகள்படிக்கும் )பள்ளியிலிருந்து மாற்றலாகி வேறு பள்ளிக்குச் செல்கிறார்.இன்று நான் அனுபமிக்க ஆசிரியையாகவும் ,ஓரளவு கடமைகளை செவ்வென செய்யும் பள்ளியின் பொறுப்பாசிரியையாக இருக்கிறேன் என்றால் அதற்கு இவரும் ஒரு காரணமே.
                                                                     
ஆம் கடந்த 2005-இல் ,என் மகன் பிறந்து(2002) ,அவன் மூன்றரை வயதை தொட்டவுடன் நிதி பிரச்சனையால் மீண்டும் வேலைக்கு செல்ல நினைத்தேன்.ஆனால் அது அரை நாள் வேலையாக இருந்தால் சிறப்பு காரணம் பிள்ளைகளின் படிப்பும் ,அவர்களை நானே பராமறிக்கவும் எண்ணினேன்.அதுக்கு சிறந்தது ஆசிரியைத் தொழில் என்று ப்டவே,என் மகள் படித்தே அதே பள்ளியில் விண்ணப்பம் செய்தேன்.தலைமையாசிரியர் என்னை அழைத்து ,இண்டர்வியூ செய்து திருப்தியாக இருக்கிறது நாளையே வந்து சேர்ந்துகொள்ளுங்கள் என்றார்.
                                                                           

நான் பள்ளிக்கு போனவுடன் நிறைய மாற்றங்கள் செய்தேன் காரணம் அந்த சமயம் அங்கே வேலை செய்த ஆசிரியைகள் யாவும் திருமணமாகாத இளசுகள் ,மேலும் வேலை அனுவமே இல்லாமல் அங்கே காலைத்தை ஓட்டினர்.ஆகவே என் மாற்றங்கள் தலைமையாசிரியருக்கு ரொம்பவும் பிடித்திருந்தன.அடுத்த வருட ஆரம்பத்தில் பல ஆசிரியைகளை அவர் மாற்றம் செய்தார்.ஆனால் புதிதாக வேலையில் செய்த எனக்கு மீண்டும் அங்கேயே வேலை ,சம்பளமும் உயர்வு கண்டது.நாம் வகுப்பறையிலும் சரி ,கற்றல் கற்பித்தலிலும்  சரி ஏதேனும் புதிய ஐடியாக்கள் கொண்டு அவரிடம் காண்பித்தால் ,அவருக்கு பிடித்திருந்தால் உடனே செய்ய சொல்வார்.அதிருப்தியாக இருந்தால் ,நம் மனம் சிறிதும் கோணாமல் அதை மாற்றம் செய்ய சொல்லும் விதம் இருக்கே ,;செல்வி இதை இன்னும் கொஞ்சம் அப்படி செய்யுங்கள் ,அதை இப்படி செய்வதை விட ,இந்த முறை வேறு மாதிரி செய்யுங்களேன்’ என்று சொல்லும் விதம் ஒவ்வொரு பாஸ்களும் பின்பற்றவேண்டிய ஒன்று என்றே கூறலாம்!
                                                               
நண்பனின் கைக்குட்டை கீழே விழுந்தால் ,அதை எடுத்துக்கொடுப்பதும்,எழுந்து நின்று வரவேற்பதுவும்,வாயில் வரை சென்று வழி அனுப்புவதும் நல்ல பழக்கங்கள் ,இவை யாவும் அவரிடம் நான் கண்டு ரசிக்கும் பழக்கமும் கூட.என் மகள் சிலாங்கூர் பள்ளிகளுக்கிடையிலான சொற்போர் போட்டிக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டாள் .அந்த சமயம் போட்டிக்கி இரண்டே நாட்கள் ,அவள் மோசமான தொண்டை வலிக்கு ஆளானாள் .நான் மனம் தளர்ந்தேன் ,சரி நீ போக வேண்டாம் என்றேன்.ஆனால் அவரோ அவளை அழைத்து ‘உன்னால் முடியும் ,கனிமொழி உன் திறமை எனக்கு தெரியும் ,நீ பரிசை வென்று வருவாய் ,நீ போ ,நாங்கள் அருகில் இருப்போம்’என்று தைரியம் சொல்லி ,அந்த போட்டியில் அவள் மேடைக்கு போகும் வரை அமைதியாய் இருந்தவர் ,அவள் பேச ஆரம்பித்தவுடன் ,தூரத்திலிருந்து  ‘நீதான் அருமையாக பேசுகிறாய் ‘ என்று கையை அசைத்துக் காட்டிய விதம் ,இன்னும் எனக்கு பசுமையாய் இருக்கிறது.பிறகு அவள் ’இரண்டாம் நிலை’என்று அறிவித்தவுடன் ஓடி வந்து ‘அவளுக்கு முதல் பரிசு கிடைத்திருக்க வேண்டியது,என்ன காரணமோ ?நீதிபதிகள் எங்கே தவறு செய்து விட்டார்கள்’என்று எனக்கே புரியவில்லை’என அவளை அரவணைத்து ,ஊக்குவித்த விதம் ,’செல்வி ம்களை அருமையாக கொண்டு வந்திருக்கிங்க ,என்று என்னையும் பாராட்டிய விதம் இரட்டிப்பு மகிழ்ச்சியே.

                                                                             

2010 சில தவிர்க்க முடியாத காரணங்களால் ,அந்தப் பள்ளியிலிருந்து  வெளியேறினேன்.சில மனக்கசப்புகள் இருந்தாலும் ,நானும் சரி,அவரும் சரி ஒரே கொள்கை கொண்டவர்கள் ,அதாவது எதிரிகளை சம்பாதிக்க வேண்டாம்,இருக்கும் வரை எல்லோரும் நட்பைப் பாராட்டுமோம் என்ற எண்ணம்.இதனாலேயே என்னவோ கதிரவனைக்கண்ட பனிபோல அனைத்து மனஸ்தாபங்களையும் மறந்து என் புதிய பாலர்பள்ளிக்கு பொருள்வழியில் நிறைய செய்தார்.’நான் இங்கு இருக்கும் வரை ,உங்களுக்கு எல்லா உரிமைகளும்  இந்தப் பள்ளியில் உண்டு,எப்போதும் போல வந்து போகலாம்’என்று கூறினார். பிறப்பால் ஒரு கிறிஸ்துவர் என்றாலும் ,எந்த மத பேதமும் இல்லாமல் பள்ளியில் அனைத்து மத மாணவர்களும் பயன்பெறுமாறு செயல்படுவார்.இது அவருடைய ப்ளஸ் பாய்ண்ட்.
                                                                         

கடந்த யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 7 ஏக்கள் பெறும் மாணவர்களைப் பள்ளி அறவாரியம் தமிழ்நாட்டுக்கு அனுப்புவதாக அறிவித்தது.என் மகள் உட்பட நான்கு மாணவர்கள் 6ஏக்கள் பெற்றிருந்தனர்.சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு பணமும் சர்டிஃபிகேட்டும் கொடுக்கும் விழாவில்,வாரிய தலைவர் ‘வருகின்ற மார்ச் மாதம் 7 ஏக்கள் பெற்ற மாணவர்களைத் தமிழ்நாட்டுக்கு அனுப்புகிறேன்’என்று அறிவித்த சமயம் ,6ஏக்கள் பெற்ற மாணவர்களின் நிலையை அறிந்த தலைமையாசிரியர்,வாரியத்தலைவரிடம் ‘ஏதோ கிசு கிசுவென்று பேசினார்.பிறகு சிறிதுநேரத்தில் ,எழுந்து வந்து ‘6ஏக்கள் பெற்ற மாணவர்களே,உங்களுக்கு ஒரு நற்செய்தி,உங்களையும் தலைவர் தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்க சம்மதித்தார்’என்றதும் ஒருகணம் அங்கே கூடியிருந்த மக்களின் கரகோசம் மண்டபமே அதிர்ந்தது.’நாங்களும் பெண்பிள்ளைகளோடு வர இருக்கிறோம்,ஆனால் வேறு வண்டியில் வருகிறோம் ,உங்களுக்கு தொந்தரவு கொடுக்கமாட்டோம்’ என்று நான் கேட்டதற்கு ‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் செல்வி ,தயக்கமில்லாமல் உங்கள் பிள்ளைகளோடு வந்து தங்கலாம்’என்று பச்சைக்கொடி காட்டினார்.

                                                                         
                             
 மார்ச் மாதமும் வந்தது என் மகள் உட்பட ஒன்பது மாணவர்கள் ,ஆசிரியைகள்  தலமையாசிரியர்  அவர் குடும்பம் மற்றும் நானும் தமிழ்நாட்டுக்கு சென்றோம்.அங்கே எங்களை பள்ளி மாணவர்களைப்போலவே அக்கறையுடன் கவனித்துக்கொண்டார்.தன் மாமியாரின் கிராமத்துக்குச் சென்று,அங்கிருந்து முறுக்கு,சீடை என்று நிறைய திண்பண்டங்களை கொண்டு வந்து எங்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார்.சின்ன குழந்தையைப் போல என்னை அழைத்து ‘செல்வி என் மாமியார் என்னவெல்லாம் கொடுத்து இருக்காங்க பாருங்க;என்று எல்லாவற்றையும் எடுத்துக்காட்டி பூரித்துப்போனார்.நாங்கள் தமிழ்நாட்டில் போன கோவில்களின் சிறப்புக்களையும் வரலாறுகளையும் (எனக்குத் தெரிந்தை)சொல்லிக்கொண்டே வந்தே போது’பரவாயில்லையே நமக்கு பணம் இல்லாமல் டுவர் கையிட் இருக்கே’ என்று அடிக்கடி சிரித்துக்கொள்வார்.அவரும்  அனைத்துக் கோவில்களுக்கும்ம் எங்களுடன் வந்து வழிபட்டுச் சென்றார்
                                                                                 
இறுதி நாளும் வந்தது ,நாங்கள் கிளம்பும் நேரம் ,எனக்கு உடல் நலமில்லாமல் போகவே ,அவரிடம் தெரிவித்தேன்.உடனே என்னை அருகில் உள்ள ஃபார்மாஸிக்கு அழைத்துச் சென்று ,இரத்த அழுத்தம் மற்றும் சக்கரை அளவை பரிசோதிக்க சொன்னார்.’ஒன்னும் டென்சன் வேண்டாம் செல்வி ,தூக்கமின்மைத்தான் காரணம் ,எதையும் நெகட்டிவாக நினைக்கவேண்டாம்’என்று ரத்த பரிசோதனை ரிசல்ட் வந்ததும் ‘என்னை விட அவர்தான் பெருமூச்சு விட்டபடி ,நாந்தான் சொன்னேனே ஒன்னும் இருக்காதுன்னு,சரி உங்கள் பேக் மற்றும் லக்கேஜ்-ஐ வையுங்கள் ,நாங்கள் கொண்டு வருகிறோம்’என்று இறுதிவரை என்னை ஓய்வெடுக்க சொல்லியும் ,நலம் விசாரித்துக்கொண்டும் வந்தார்.
                                                                             
கோலாலும்பூர் வந்தடைந்தோம்.எல்லோரிடமும் விடைபெற்ற என் தலைமையாசிரியர்,’செல்வி இருந்ததால் ரொம்ப கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகும் போனது . பெற்றோர்கள் அனைவரும்  ,அவுங்களுக்கும் நன்றி சொல்லுங்க’என்று சொல்லி விடைபெற்றார்.நான் பலமுறை குடும்பத்துடன் தமிழ்நாடு சென்றிருந்தாலும் இந்த சுற்றுலா என்னால் மறக்கவே முடியாத ஒன்று.அதற்கு தலைமையாசிரியரும் ஒரு காரணம்!குட் பை எச்.எம்(headmaster)
                                                                                   

Friday, 28 September 2012

மூன்றே நாளில் தாலியை இழந்த புதுமணப்பெண்

இப்படி ஒரு தலைப்பை சினிமாவில்தான் கண்டிருப்போம் ,கேட்டிருப்போம்.ஆனால் என் வீட்டில் எங்களை வளர்த்த ,எங்களோடு வளர்ந்த எங்க கடைக்குட்டி அத்தையின் வாழ்க்கையில் நடந்த அவலம்தான் அது.என் அத்தை  ஆறு அண்ணன்களுக்கு கடைசி தங்கையாக  பிறந்தவர்.என் அப்பாவுக்கு மூன்று தங்கைகள்.அதில் என் லட்சுமி அத்தை,பத்து பிள்ளைகளில் கடைசிக்கு இரண்டாவது .என் அம்மா திருமணம் செய்து போன பொழுது என் அத்தைக்கு ஏழு வயதுதானாம்.என் பாட்டி என் அம்மவிடம் என் அத்தை மற்றும் இன்னும் திருமணமாகாத மற்ற சித்தப்பாக்களையும் ஒப்படைத்து ,;இனி இவர்களுக்கு நீயும் ஒரு தாய் என்று சொன்னாராம்’.

அப்பா வேலை விசயமாக கோலாலும்பூர் வந்தவுடன் அத்தையையும் கடைசி சித்தப்பாவையும் கூடவே அழைத்து வந்தாராம்.அதனால் அந்த அத்தையோடு சேர்த்து என் அம்மாவுக்கு ஐந்து பெண் குழந்தைகள் என்றே சொல்லலாம்.என் மூத்த அக்காவுக்கும் அத்தைக்கும் ஏற்த்தாழ ஏழெட்டு வய்சுதான் வித்தியாசம்.அத்தைக்கு கல்யாண வயசு வந்தது.அப்பா உட்பட சித்தப்பாக்கள் எல்லோரும் மாப்பிள்ளைத் தேடினார்கள் .அத்தை ஒரு சீனர் கம்பெனியில் வேலைக்குச் சென்றார்.நல்ல வேலை ,நல்ல சம்பளம் .அத்தை ரொம்ப சுறுசுறுப்பானவர்.ஆகவே சீனர்களுக்கு அத்தை வேலையில் காட்டிய ஆர்வம் ரொம்ப பிடித்துப்போனது.

நிறைய மாப்பிளைகள் அத்தைக்கு வந்தார்கள் ,பொருத்தம் சரியில்லாமல் போனது ,நல்ல வேலை இராது,இன்னும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அத்தைக்கு மாப்பிள்ளை ராசியகவே இல்லை.சில சமயங்களில் அத்தையைப் பார்க்க வரும் மாப்பிள்ளைகள் ,என் அக்க்காள்களை விருப்பட்டு கேட்ட கதைகளும் உண்டு.இதெல்லாம் அத்தையை வேதனையின் உச்சத்துக்கு இட்டு சென்றது .பைய பைய அக்காள்கள் இருவருக்கும் மாப்பிள்ளை வந்தார்கள் ,அப்பாவுக்கு அதில் பெருத்த சோகமதான் ,இருந்தாலும் அப்பா ரொம்ப அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்.அத்தையும் ‘அண்ணா எனக்காக ,பிள்ளைகள் காலம் தாமதிக்க வேண்டாம் ,திருமணம் பண்ணி வையுங்கள் ‘என்றார்,கனத்த இதயத்துடன் என் அம்மாவும் அக்காள்களுக்கு திருமணம் பண்ணிக்கொடுத்தாங்க.

அத்தைக்காக, அப்பா உட்பட அனைவரும் சாங்கியம் ,பரிகாரம்னு என்னன்னவோ செய்தனர்.செலவழித்தனர்.போலி சாமியார்களும் ம்ந்திரவாதிகளும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி பணம் கறந்தனர்.அப்பாவுக்கு இதிலெல்லாம் உடன்பாடில்லை ஆனால் சித்தப்பா ஒருவரின் வற்புறுத்தலினால் ,வேண்டா வெறுப்புக்காக ஒத்துக்கொள்வார்.நாட்கள் உருண்டோடின.பாட்டி இறந்தார் ,பிறகு பத்து வருடங்கள் கழித்து என் அப்பா இறந்தார்.அடுத்த ஒரே ஆண்டில் என் தாத்தாவும் இறந்தார்.அதற்குள் நானும் கல்யாண வயதுக்கு தயாரானேன்.அத்தையும் தான் வேலை செய்த கம்பெனியில் சுமார் 18 வருடங்கள் வேலை செய்தார் .ராணிப்போல வாழ்க்கை வாழ்ந்தார்.எனக்கே சில வேளைகளில் பொறாமையாய் இருக்கும்.அத்தை மூன்றாம் வகுப்பு வரைக்கூட போகவில்லை ஆனால் நிறைய சம்பாதித்தார்.

எனக்கும் மாப்பிள்ளை வந்தார்.நானும் வெளியானேன் .அந்த சமயம் ,சித்தப்பா ஒருவர் வேலை விசயமாக வெளியூர் போனதால் ,சின்னம்மா பிள்ளைகளுடன் தனியாக இருந்ததால் ,அத்தை அவர்களோடு போய் தங்க வேண்டிய சூழல் .அத்தைக்கு வயது 45 .என் தங்கையும் திருமணமானாள்.
இந்த வயதில்தான் அத்தைக்கு அந்த மாப்பிள்ளை வந்தார்(அவர் கூடவே ஏழரையை கூட்டி வந்தவர்)இரண்டாம் தாரமாக அத்தையைப் பெண் கேட்டு வந்தார்.எம் அம்மாவுக்கு விருப்பமே இல்லை ,இருப்பினும் ‘என் தலையெழுத்து அப்படித்தான் போல ‘என்று அத்தை ஏற்றுக்கொண்டார்.அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் நடந்தன.மாப்பிள்ளை ரொம்ப வசதியானவர் ,என்ப்தால் அத்தையின்  வேலையை ராஜினாமா செய்ய சொன்னார்.அத்தையோ ;முடியாது ,முடியாது இன்னும் ஒரிரு மாதங்களில் இருபது வருட அவார்ட் கிடைக்க போகுது ,நான் நின்றால் நட்டம் ‘என்று போராடினார்.அந்த ஏழரையோ விட்டபாடில்லை .’இல்லை.என் மனைவி ஒரு சீன கம்பெனியில் வேலை செய்வ்தா ‘என்று பெரும்பேச்சு பேசினார்.இந்த வயதில் ,யார்தான் மாப்பிள்ளை பேச்சை பெரிசா நினைக்க மாட்டார்கள் .அத்தையின் வேலையை ராஜினாமா செய்தார்.பதுவு திருமணத்துக்கு அப்ளை பண்ணி இருந்தார்கள் .சில டாக்குமெண்ட் காரணங்களால் தாமதமாகியது(அங்கேயும் ஏழரைப்போல).அவசர அவசரமாக கோவிலில் தாலி கட்டினார்.என் சித்தாப்பாக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் .அம்மா பொண்ணை பிறந்த வீட்டிலிருந்து அனுப்பி வைத்தார்,மிகுந்த கவலையுடன்.

அந்த ஏழரை மாப்பிள்ளைக்கு வயது 52.இரண்டு பிள்ளைகள் .மனைவி இறந்துவிட்டாராம் .பெரிய பிள்ளைகள் ,வேலைக்குப் போகும் வயது.என் அத்தை திருமணம் செய்து போன அன்றிரவு நல்ல பொழுதாக கழிந்தது.இரண்டாம் நாள் ,அந்த திடுக்கிடும் செய்தி வந்தது.ஆம் ,அந்த ஏழரை மாப்பிள்ளைக்கு ஹார்ட் அட்டாக் என்றும் ,அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும்.என் குடும்பமே மருத்துவமனையில் .அம்மா ஒருபுறம் அழுதுகொண்டு ,சித்திகள் அத்தைக்கு ஆறுதலாய் ,நாங்க ஒருபுறம் .எங்கலையெல்லாம் ஆறுதல் படுத்திக்கொண்டு சித்தப்பாக்கள்.மூன்றாம் நாள் ,மாலையில் நான் அலுவலகத்தில் இருந்த போது ,என் அண்ணா போன் பண்ணி ,’அந்த மனுசன் இறந்துட்டாரு ,வீட்டுக்கு வா’என்று.மூன்று நாட்களுக்கு முன்புதான் அத்தைக்கு திருமணம் என்று ஒரு வாரம் முன்பே (மகிழ்ச்சிதான்)விடுமுறை எடுத்தேன் ,அதே அத்தையின் கணவர் இறந்துவிட்டார்,என்று சொல்லமுடியாமல் சொல்லி வெளியேறினேன்.மருத்துவமனையில் அவர் இறந்த செய்தியைக் கேட்டவுடன் ,அத்தைக்கு அந்த மாப்பிள்ளையைப் பார்த்த என் சித்தப்பாவுக்கு (ஏறத்தாழ அம்மாவை வயதுதான் இருக்கும் )அம்மா கையில் ஓங்கி ஓர் அறை விழுந்தது.பிள்ளையை விசாரிக்காமல் நோய்க்காரன் கையில் புடிச்சிக்கொடுத்துட்டானே பாவி ‘என்ற அம்மாவின் வயித்தெரிச்சல் கலந்த ஆக்ரோசம்!

எங்களால் அத்தையின் நிலையைப் பார்த்து அழ மட்டுமே முடிந்தது.அந்த ஏழரை மாப்பிள்ளைக்காக நான் என் கண்ணீரை விரயம் பண்ணவே இல்லை.பதிவு திருமணம் செய்யாததால் அந்த மனுசனின் சல்லிக்காசு கூட அத்தையால் உரிமைக் கொண்டாட முடியல.செய்த வேலையும் போனது.கருமைக்கிரியை முடிந்து 16ம் நாள் அம்மாவின் ஆலோசனைப்படி ,சித்தப்பாக்கள் அத்தையை அந்த வீட்டுக்கு கும்பிடு போட்டு ,அழைத்து வந்துவிட்டனர்.அத்தை எதிர்பார்த்தது போல ,அங்கே சொத்தும் இல்லை ,சொந்தமும் இல்லை ,சொல்லப்போனால் ,எங்க கூட்டுக்குடும்பத்துக்கு ,கொஞ்சம் கூட தகுதி இல்லாத ஒரு குடும்பம் என் அந்த 16 நாட்களில் தெரிய வந்தது.

அத்தையின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலந்து(அந்த ஏழரையை மறக்கத்தான்)வேறு வேலைக்குப்போக வைத்து ,தற்பொழுது அனைத்தையும் ஒரு கனவாக மறந்து பழைய நிலைக்கு வந்து வேறு வேலை செய்கிறார்.அந்த சம்பவம் நடந்து ஒரு பத்து வருடங்கள் ஆகிவிட்டன.இப்போ என் அத்தை மீண்டும் ராணிப்போல வாழ ஆரம்பித்துவிட்டார் ஆனால் என்ன லட்சுமி என்ற பெயருடன் விதவை என்ற அடைப்பெயரும் சேர்ந்துகொண்டது.
                                                                                 

Wednesday, 26 September 2012

ஒரு தாயின் குற்ற உணர்வு


 தன் பத்து வயது  மகன் அண்டைவீட்டாருடன் பழகுவது ,அவன் அப்பாவுக்கு பிடிக்கவில்லை.ஒருவகை ஈகோ என்று சொல்லமாம் (காரணமில்லா வெறுப்பு) இவர் வெறுக்கும் அளவுக்கு  அந்த அண்டைவீட்டுக் குடும்பம் மோசமில்லை,இது,கணவன் அளவுக்கு படித்திருக்கும் அந்த பையனின் தாய்க்கும் நன்றாகவே தெரியும்.

 எல்லா தந்தையைப்போல ,இந்த அப்பாவும் வீட்டில் இருக்கமாட்டார் ,வேலைக்குப் போய் இரவில்தான் வீடு திரும்புவார்.அம்மா வீட்டில் இருப்பார்.ஆகவே ஒருநாள் முழுக்க பிள்ளைகளோடு நேரத்தை செலவிடும்  தாய்க்கு புரியும் மகனின் விருப்பு வெறுப்பு.பையனோ,வீட்டில் தன்னுடன் விளையாடும் அக்காவும் தங்கையும் பள்ளிக்குபோய் விடுவதால் ,தன்னுடன் விளையாட ஆள் இல்லாமல் ஏங்குவான் ,அதுவே அவனுக்கு ஒருவித சோர்வு போல ,இருப்பதை தாயும் உணர்கிறாள்.

பக்கத்து வீட்டில் இந்த பையனை அவுங்க சொந்த பிள்ளைப்போல பாசத்துடன் பார்த்துக்கொள்கின்றனர் ,அவர்கள் வீட்டில் இரண்டு ஆண்பிள்ளைகள் என்பதால் ,இந்த பையன் அங்கே போய் விளையாட ஆசைப்படுகிறான்.ஆனால் தந்தையோ சரியான காரணம் சொல்லாமல்  திட்டவட்டமாக அவனை அங்கே போகக்கூடாது என்று கூறுகிறார்.ஆனால் பையனோ ,அந்த வீட்டு ஆண்பிள்ளைகள் விளையாடுவதைப்பார்த்து ஏங்குகிறான்.இதைப்பார்த்த தாய் ,’சரி நீ போய் விளையாடு ,அப்பா வருவதற்குள் வீட்டிற்கு வந்துவிடு என்கிறாள்,பையனும் சந்தோசமாய் உற்சாகமாய் விளையாடுகிறான்.

அப்பா வருவதற்குமுன் வீட்டிற்கு வந்து வீட்டுப்பாடங்களை செய்கிறான்.தன் வீட்டிலிருந்து கல்லெறி தூரம்தான் அந்த அண்டை வீடு.ஆகவே தாய் அனுப்பிவிட்டு ,அவன் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டுதான் ,இவளுடைய வேலைகளை செய்கிறாள்.இது நாலைந்து நாட்களுக்கு தொடர்கிறது.அப்பா வீட்டிற்கு வந்து ,.............நீ அங்கே போனாயா?’என்று பையனிடம் கேட்கும்போது ,அம்மா ’இல்லை என்று சொல்’ என கண் ஜாடைக் காட்டுகிறாள்.பையனும் அது போலவே சொல்கிறான் .இப்பொழுது பையன் அடிக்கடி அங்கே போய் விளையாட போகிறான் .அம்மா ,அப்பா கேட்டால் ,நான் போகவில்லைன்னு சொல்லுங்கஎன்று தைரியமாக சொல்லிவிட்டு போகிறான்.

இந்த தாயும் படித்தவள்தான் ,நல்லது கெட்டது தெரியுது.ஆனால் இப்போ பிரச்சனை என்னவென்றால் ,தன் பையன் பொய் சொல்ல தானே ஒரு காரணமாக விடுவதுபோல உணர்கிறாள் !ஒரு தாயாக அவள் செய்வது சரியா? அல்லது ஒரு தந்தையாக காரணமில்லாமல்(சரியா காரணம் சொல்லாமல்)பிள்ளையின் சந்தோசத்தை தடைப்போடுவது முறையா?

(தயவு செய்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.ஒரு தாயின் குற்ற உணர்வுக்கு உதவுவோமே!)

                               

ஒரு தாய்க்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை!

Sunday, 26 August 2012

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

மனித மனம் சில விசயங்களுக்கு ஆட்கொண்ட மனம்.அதில் இசை முதன்மை வகிக்குது ,அது என் மனம்.சில நேரங்களில் என்றோ,பல வருடங்களுக்கு முன் கேட்ட பாடல்கள் ,நம் மனதில் மிக பசுமையாக சில நினைவுகளை வருடி செல்லும்.அதில்  இனிமையான நினைவுகளும் உண்டு ,  கசப்பான நினைவுகளும் உண்டு. அந்த வகையில் ,ஒரு சில பாடல்களை நான் கேட்கும்பொதெல்லாம் ,என் கண் முன் நிழலாடும் சில சம்பவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

                                                                                 
அந்த வகையில் முதலாவதாக வரும் பாடல்:

http://www.youtube.com/watch?v=v7D7qcMX3x0
மருத மலை மாமணியே முருகையா’(தெய்வம்).

இந்த பாடலைக் கேட்டால்,எனக்கு என் அம்மா வழி தாத்தா (திரு.குஞ்சாம்பு)அவர்களின் இறப்புதான் நினைவுக்கு வரும்.அந்த சமயம் எனக்கு வயது ஐந்தோ?ஆறோ இருக்கும்.என் அம்மா சத்தம்  போட்டு அழுது நான் பார்த்தது அன்றுதான்.நாங்கள் இறப்பு வீட்டையடைந்த பொழுது ,என் அம்மாவைக் கட்டியணைத்து அழுத என் மாமாக்கள்,சின்னம்மாக்களின் அழுகைக்கு இடையே ,அங்கே ஒலியேறிய பாடல் .அன்றுமுதல் இந்தபாடலைக்கேட்டால் ஏதோ ஓர் இழப்பை நினைவுபடுத்தும்.(இறப்பு வீட்டில் முன்பெல்லாம் பாடல்கள் ஒலியேறுவது வழக்கத்தில் இருந்தது)


http://www.youtube.com/watch?v=h4IHiOAZ918(நீயா)
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா

எங்கள் குடும்பமும்  என் தோழியின் குடும்பமும் ,இந்த படம் பார்க்க தியேட்டருக்கு குடும்பமாக சென்றோம்.வறுமையில் இருந்த காலங்களில் கூட என் தந்தை எங்களை குடும்பமாக அழைத்துச் சென்று நாங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம்.இரு குடும்பங்களாக சென்றோம்,இன்று ,என் அப்பா இல்லை,என் தோழி(அண்ணியின்)அப்பா அம்மா இல்லை,அவளுடைய அண்ணன் அக்காளும் கூட இறந்துவிட்டனர்.இன்றும் இந்த பாடலைக்கேட்டால் ,இறந்து போன அந்த ஆன்மாக்களும் அன்றைய பழைய தியேட்டர்,அன்று திண்ண தின்பண்டம்,குளிர்பானம் இவை யாவும் என் கண் முன்னே!

http://www.youtube.com/watch?v=pECeEaM_2tA&feature=related
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே(சிவகாமியின் செல்வன்)

என் மாமாவின் உறவு வ(லி)ழி ஒருவர் எங்கள் வீட்டுக்கு பெண்ணைக்கூட்டிக்கிட்டு ஓடி வந்து ,ஒரு விபத்தில் மரணமடைந்தார்.(என் பதில் எழுதியுள்ளேன்)அந்த இறப்பு எங்கள் குடும்பத்தை மிகவும் வருத்திய ஒன்று.அவர் உடலை அவர் ஊருக்கு கொண்டு சென்றனர்.வீட்டில் எல்லோரும் சென்றனர்,நானும் என் தங்கையும் செல்ல தடை.வீடே வெறிச்சோடிக்கிடந்த சமயத்தில் ,எங்கள் வீட்டு வானொலியில் எங்களுக்காகவே ..இல்லை அந்த காதலிக்காகவே ஒலியேறியது போல இந்த பாடல்.

http://www.youtube.com/watch?v=kmyzafV8Vko
ஏய் கிளி இருக்கு ,ஏரிக்கரை இருக்கு(முதல் மரியாதை)

இந்த படம் ரிலீசான புதிதில் ,எங்கள் கிராமமே இந்த பாடல்களில் மூழ்கிகிடந்தது. பாடல்கள் பட்டி தொட்டிய்யெல்லாம் ஒலித்தது.வைரமுத்து அழகான வரிகளை வர்ணித்து கூறிய பின்பு கேசட்டில் பாடல்கள் ஒலியேறும்.பசுமையான,ஓரளவு என் கிராமத்தைப்போலவே ,இந்த படம் ஷூட்டிங் செய்த கிராமத்தின் சூழல்.இன்று கேட்டாலும் என் வீட்டு பின்னால் இருந்த குட்டை,கொய்யா மரம் ,கோழிகள் ,ஆடுகள் என்ற கிராமிய வீட்டுக்கு செல்லும் என் நினைவு.


http://www.youtube.com/watch?v=dGhkH958nHo
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை(சிவந்த மண்)

நான் முதன்முதலாக வெளிநாடு (முதன்முறையாக குடும்பத்தை விட்டு மூன்று மாதங்கள்)செல்லும்போது ,என் உடன் பல பாடல்கள் கொண்ட கேசட்களைக் கொண்டு சென்றேன்.விமான நிலையம் சென்று விடைபெற்ற அந்த தருணம்,என் கண்ணில் மாலை மாலையாய் கொட்டிய கண்ணீர்.என் குடும்பமும் அப்படியே.விமானத்தில் ஏறி உட்கார்ந்தும் என் அழுகை நின்றபாடில்லை.என் அருகில் அமர்ந்த என் தோழி ,என்னை மகிழ வைக்க ஒரே வழி இதுதான் என்று என் கையில் இருந்த வாக்மென்(அப்போவெல்லாம் அதுதானே பயணத்தில் கைகொடுக்கும் வனொலி) என் காதுகளில் போட்டு ,ப்ளேய் பட்டனை அழுத்தினாள் ..நான் நடுவானில் ..என் காதில் ஒலித்த இந்த பாடல் ..ஐயோ என் கண்ணீருக்கு மருந்தாக...இன்றும் மனதில் சோகம் என்றால் ,மொபலை அழுத்துவேன்..என்னை நடு வானுக்கு பறக்க விடும் ..பாடல்!

http://www.youtube.com/watch?v=im8ounEVVwM
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்

என் கண்வர் என்னைப் பெண் பார்த்து சென்ற புதிதில் ,சரியாக ஒரு மணிக்கு அவருக்கு மதிய உணவு நேரம்.எங்கள் அலுவலகத்தில் 12.30-க்கு லன்ச்.எல்லோரும் உணவருந்திவிட்டு ,கொஞ்ச நேரம் அவரவர் மேஜையில் ஒரு குட்டி தூக்கம் போடும் நேரமாக பார்த்து ,ஒரு மணிக்கு எனக்கு போன் வரும்..இது நாலைந்து நாளுக்கு தொடரவே ,அந்த ஒருமணிக்கு யாருக்கு போன் வந்தாலும் ,இந்த பாடலைப்பாடிக்கொண்டே போனை எடுப்பார்கள் என் சக தோழிகள்.நாளடைவில் என் சீன மற்றும் மலாய்க்கார நண்பர்களும் இந்த பாடலைப் பாடித்தான் ,போனை என்னிடம் கொடுப்பார்கள்.அது ஒரு கனாக்காலம்.

http://www.youtube.com/watch?v=4mMVY2zExis
இயற்கை எனும் இளையகன்னி ஏங்குகிறாள்(சாந்தி நிலையம்)

நானும் என் தோழி இளவரசியும்,ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்த சமயம் ,ஒருநாள்  ஏதோ ஒரு தப்பினால் ,என் லைன் லீடர் (line leader)என்னைத் திட்டிவிடவே எனக்கு கோபம்.முதல் நாள் நடந்த இந்த சம்பவம் ,என்னைப்பாதிக்கவே ,மறுநாள் வேலைக்கு விருப்பமின்றி சென்றேன்.என் நிலையை அறிந்த இளவரசி ,’அக்கா எனக்கும் மூட் இல்லை,வாங்க ,கிளினிக் போய் பொய் சொல்லி மருத்துவ விடுப்புக்கு முயற்சிப்போம் ,கிடைத்தால் வெளியே எங்கேயாவது போய் நிம்மதியாக உட்கார்ந்து பேசிவிட்டு ,வீட்டுக்கு போகலாம்;என்றாள்.எனக்கு தேனாய் இனித்தது அந்த ஐடியா.இருவரும் கிளினிக் புத்தகம் எடுத்துக்கொண்டு ,கிளினிக் போனோம்.என்ன ஆச்சரியம் ,காது வலி ,வயிற்றுப்ப்போக்கு என்று மருத்துவரை ஏமாற்றி லீவ் கிடைத்தது.எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..வெற்றி ..வெற்றி...இருவரும் பேருந்தில் ஏறி ,அங்கேயும் என் வாக்மென்,இருவரின் காதிலும் ,ஒன்று என் காதில்,மற்றொன்று அவள் காதில் ,ப்ளேய் பட்டன் அழுத்தியபோது ஒலித்த கானம் ,இயற்கை....!இன்றும் வானொலியில் பாடல் ஒலியேறினால் ,அவள் என்னை அழைத்து’அக்கா ,பொய் சொல்லி வாங்கிய எம்.சிக்கு கிடைத்த பாடல் ,கேளுங்க’என்று நினைவு படுத்துவாள்.


http://www.youtube.com/watch?v=NCtON6_mpzY
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்.(ஜீன்ஸ்)

என் கணவர் முதன்முறையாக என் அண்ணனின் அனுமதியோடு என்னை வெளியே அழைத்துச் சென்றது இந்த படம் பார்க்க.அழகான இருள் ,முதன் முதலாய் எங்களுக்கு கிடைத்த தனிமை.அருமையான் சூழல் ,ஆனால் இருவருமே ஒரு வார்த்தைக்கூட பேசாமல் ,இந்த பாடலில் லயித்துபோனோம் என்பதுதான் பகிரங்கமான உண்மை.அந்த அளவு சங்கர் படத்தை இயக்கிய விதம் .எதையும் ரசிக்க முடியாமல் முதன்முறையாய் சந்திக்கும் காதலர்களையே தன் வசம் இழுத்துக்கொண்ட பாடல்.இன்றும் அந்த பாடல் ஒலித்தால் ,திருமணமாகாத அந்த கணங்களுக்குள்  நான் மூழ்கிவிடுவேன்.


http://www.youtube.com/watch?v=th3LJyFDZzY
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தத(இளைமை ஊஞ்சலாடுகிறது)

எங்கள் ஊர் வானொலியில்’ 80-களின் பாடல்கள்’ என்ற தலைப்பில்,ஒரு நிகழ்ச்சி ஒலியேறும்.நான் முதன்முறையாக எழுதி அனுப்பிய இந்த பாடலுக்கான கடிதம் மிக சிறந்த கடிதமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ,இந்த் பாடலை ,என் பெயரை அறிவிப்பாளர் வாசித்து ‘செல்விக்காகவே இந்த பாடல்’என்று ஒலியேற்றிய  விதம் ,ஐயோ எனக்கு அன்று முழுவதும் போன் அழைப்புகள்,பாராட்டுகள்!நான் தீவிரமாக வானொலிக்கு எழுத தூண்டிய பாடல்.


http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0110'&lang=en
உன்னைக்கண்டு நான் ஆட(கல்யாண பரிசு)

தீபாவளி என்றாலே எங்கள் ஊர் வானொலியில் அன்று முதல் இன்று வரை இந்த பாடல்தான் முதல் வரிசையில்.எத்தனை தீபாவளி பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு இணையாக பாடலே இல்லை  என்றுதான் சொல்வேன்.அதிலும் அந்த காலத்தில் அப்பா இருக்கும்போது ,அவருடன் கொண்டாடியே தீபாவளியை நினைவுபடுத்தும் பாடல்.
(ஆனால் சந்தோசமாக ஒலிக்கும் பாடல் கிடைக்கவே இல்லை)

                                                                                                                                                           
                             
.