Tuesday, 9 September 2025

உலக வரலாற்றில் தமிழனின் பெருமை,தமிழனின் வாழ்வியல்,தமிழன் கொடுத்த நூல்கள்.

 தொன்று தொட்ட காலம் முதல் தமிழர்களின்  வாழ்வியல் வரலாறு  முறை உலகமே வியக்கும் வண்ணம் அமைந்தது என்பதுதான் உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை!அதில் மாற்றுக்கருத்தோ, இட்டுக்கட்டியோ  அல்லது  மறைத்து வைத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை!

                                                               


பெரியபுராணம் தொடங்கி இன்றைய அகழ்வாராய்ச்சி வரையிலும் தமிழர்களின் வரலாறு ,அவன் வாழ்ந்த வாழ்க்கை முறை ,அவன் இயற்றிய நூல்கள் அனைத்துமே ஒவ்வொரு உயிருக்கும் உபயோகமாகவும்,  உயிர்ப்பாகவும் உவமையாகவும் இருந்தது என்றால் அதுவே உண்மையும் நமது பெருமையும் கூட  !

 ஒரு மனிதன் வாழ்க்கையில் அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியவை :

யாரைப்போல வாழவேண்டும் “பெரியபுராண நாயகர்களை பார்,

வாழ்க்கைக்கு எது அவசியம்   “திருக்குறளைப்” படி ,

நீதி வேண்டுமா?ஒளவை கிழவியின் நூல்களை புரட்டு,

எப்படியெல்லாம் வாழவேண்டும்,தெரிந்துகொள்ள   “அர்த்தமுள்ள இந்து மதம் “

 இப்படி பொக்கிஷங்களாக விளங்கும்  எத்தனையோ அரிய பெரிய நூல்களை,நாம் வாழ்வியலில் பின்பற்றினாலே நம் இனம்,மொழி,சமுதாயம்  மிகவும் உயர்ந்த நிலைக்குச் செல்லும் என்றால் அது மிகையாகாது!நமக்குப்  பெருமை சேர்த்த பல நூல்களையும் மாமனிதர்களையும் சற்றே நினைவு கூர்ந்து பார்ப்போமானால் ,நமக்குள் ஒருவித ஆக்கக்கிளர்ச்சி ,மெய் சிலிர்ப்பு, கம்பீரமும் கர்வமும் கட்டாயம்  வந்துபோகும்!

மேற்கூறிய  ஒரு சில நூல்களிலிருந்து நம் தமிழனின் பெருமை  எத்தகையது? என்பதைக்  காண்போம்!எவையெல்லாம் நமக்கு உயிர்ப்பாய் இருந்தன? 

முதலாவதாக ,சேக்கிழார் கொடுத்த பெரியபுராணத்தை ஒரு சிறு கண்ணோட்டமிடுவோம்.

பெரியபுராணம் எனும் மாக்கதையில் அறம் ,ஒழுக்கம் ,விருந்தோம்பல்,கொடை என ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் பயனுள்ள முக்கிய தகவல்களை எவ்வாறு சேக்கிழார் மிக அழகாக வர்ணித்து வடித்துள்ளார் என்று அறிவோமாக!

தில்லையில் ,சேக்கிழார் பெருமான் ,தான் ஊர் ஊராய் சென்றுத்  தேடி அலைந்து  திரட்டிய “பெரிய புராணத்தை”எப்படி ஒப்புவிக்க வேண்டும்   என்று நினைத்தவேளையில்,  ஆடலரசன் அம்பலவாணனே புராணத்தின் முதல் வரியை ‘உலகெலாம் உணர்ந்து’என

வான் ஒலியாக எடுத்துரைக்க,அதுவே அந்த மாக்கதையின் முதல் பதிகமாக பதிவாகிறது! அநபாயசோழன் என்ற இரண்டாம் குலோத்துங்க சோழமன்னன்,தன் அமைச்சரான சேக்கிழாரை யானை மீது ஏற்றி ,சாமரம் வீசிய பெருமையே ,தமிழனின் பெருந்தன்மையன்றோ?ஓர் அமைச்சருக்கு அரசன் சாமரம் வீசிய செயலைத்தான் ,திருக்குறளில்  தெய்வப்புலவர் திருவள்ளுவர் “செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்” என்று கூறிச்சென்ற குறளோ?


அடுத்ததாக நாயன்மார்களின் வரலாறுகள் :

ஒவ்வொரு நாயன்மார்களும் அவர்கள் வாழ்க்கை  வரலாற்றில் எப்படியெல்லாம் இறைவன் மேல் கொண்ட பக்திக்காக ,கொள்கையுடன் வாழ்ந்து முக்தியடைந்த   பல தகவல்களையும் நாம் கேட்டதும் வாசித்ததும் உண்டு.

இறைவன் தன்னிலையிலிருந்து  இறங்கி, மானுட வேடம் பூண்டு ,தம்  அடியார்களுக்காக  அம்மையும் அப்பனாக,தோழமையாக ,குருவாக நாயர்மார்களைத் தடுத்தாண்ட கருணையே கருணை!

 

மேலே குறிப்பிட்டது போல,பெரியபுராணம் நமக்கு இறைத்  தன்மையையும் பக்தியை மட்டுமே கற்றுக்கொடுக்கவில்லை.தமிழனின் மரபுகள் அங்கே குறிப்பிடப்பட்டிருக்கின்றன  .ஒழுக்கம் ,நன்னெறி ,விருந்தோம்பல்,அறம் சார்ந்த வாழ்வியல் ,தானதர்மம் என்று எண்ணற்ற குறிப்புகளை நாம் காண்கிறோம்!கற்கிறோம்!

 

பெரிய புராணத்தில் ஒழுக்கத்தைப் பற்றி ஓரிடத்தில் சேக்கிழார் மிகவும் நயமாக கூறியதை இங்கே நம்  நினைவுக்குக்  கொண்டு வருவோம்!

திருமருகல் என்கிற ஊருக்கு,திருஞனசம்பந்தர்  சென்றபோது,

கோவிலில் ,உடன்போக்கு திருமணம் செய்துகொள்ள ஊரை விட்டு ஓடிவந்த வணிகரின் மகளும் அவளின் முறைப்பையனும்  தங்கியிருந்த  சமயம், முறைப்பையனைப் பாம்பு தீண்டி இறந்துபோகிறான்.அங்கே அவள் ,அவனைத் தொடாமல்,தூரத்தில் நின்று அழுகிறாள்,என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல அந்த வணிகரின் மகளைத் தேடி,அந்த கிராமத்துக்கு வணிகரின் உதவியாளர்கள் தேடிப்போகிறார்கள்.இரவில் கண்ணில் தென்பட்ட சில இளைஞர்களிடம் ;இந்த வழியில் ஓர் ஆணும் பெண்ணும் போவதைப் பார்த்தீர்களா?என கேட்ட போது ,அந்த இளைஞர்கள் சொன்ன பதில் ,ஆமாம் ஓர் ஆண் மகன் இந்த வழியில்  போனதாக கூறுகிறார்கள்! இதிலிருந்து என்ன தெரிகிறது?உடனிருந்த பெண் பிள்ளையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை!இதுவன்றோ ஒழுக்கத்தின் உச்சம்! 

திருக்குறளில் சொல்லப்பட்ட “ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்”என்கிற குறளைத்தான் இங்கே   மேற்கோள் கட்டியிருப்பதாக தெரியவருகிறது.

 

விருந்தோம்பல் என்றால் ,அனைத்தும் இருந்து, பல்சுவை உணவைக்கொடுப்பது அல்ல!இளையான்குடிமாறன் என்ற நாயன்மாரைச் சோதிக்க இறைவன் வயோதிக வேடம் பூண்டு,இரவோடு இரவாக உணவருந்த வருகிறார்.வீட்டில் சமைக்க ஒன்றுமே இல்லாத தர்மசங்கடமான சூழல் அது.வீட்டின் நாயகன் ,விளைச்சலில் இட் ட நெல்லை கொண்டு வர,நாயகியும் இருள் சூழ்ந்த இரவில்,கீரைகளைக்கொண்டு வந்து  சமைத்து உணவு பரிமாறுகிறார்கள்.

அது ஒரு பக்கம் இருக்க ,குருவையே இறைவனாக நினைத்து உருகிய அப்பூதி அடிகளார்,வீட்டிற்கு உணவருந்த வந்த அப்பருக்கு,தன் மகன் நாகம் தீண்டி இறந்த பின்பும் ,அதனை மறைத்து விருந்து கொடுப்பதை மட்டுமே கடமையாக கொண்டவராக நாம் அறிகிறோம்! 

ஆனால் இன்றைக்கு அனைத்தும் உள்ளங்கையில் இருந்தும் இப்படி விருந்தோம்பல் கிடைக்குமா?உங்களின் எண்ணத்திற்கே விட்டுவிடுவோம்!

 

மாக்கதையில் வரும் நாயன்மார்கள் அனைவருமே தனக்காக எதையுமே இறைவனிடம் கேட்டதாக தெரியவில்லை.பக்தியின் உச்சமாக இறைவனை அடையும்  குறிக்கோள் மட்டுமே நாயன்மார்களின் எண்ணத்தில் வேரூன்றி கிடந்ததை நாம்  நன்கு அறிகிறோம்.

பிறர் (மக்கள்)மகிழ்ச்சிக்காகவும் ,திருத்தல திருப்பணிகளுக்காகவும் பொது  நலன் கருதி, நாயன்மார்கள் வாழ்ந்ததை அதில்  காணமுடிகிறது.

 

ஒருமுறை பரவை நாச்சியாரின் மடத்துக்கு உணவு வழங்கமுடியவில்லை என இரவு முழுவதும் உண்ணாமல் உறங்கமால் வருந்துகிறார் குண்டையூர்க்கிழார்.நிலைமையை அறிந்த  சுந்தரமூர்த்தி நாயன்மார் இறைவனிடம் வேண்டுகிறார்.

மறுநாள் குண்டையூரில் ,வானை முட்டும் அளவு நெல்மூட்டைகள் கொட்டிக்கிடக்கின்றன.பூதகணங்களை அனுப்பி அவற்றைக்கொண்டுச்  சேர்க்குமாறு சுந்தர் கேட்டுக்கொள்கிறார்!இறைவனும் அதற்கிணங்க செயல்படுகிறார் என்பதை அறிகிறோம். .இங்கே நாம் அறிந்துகொள்ளவேண்டிய விஷயம் ,தனக்கென கேட்காமல்  பிறருக்காக கேட்கும்பொழுது,கேட்டதை விட அதிகமாக இறைவன் படியளக்கிறான்  என்பதுதான் கருப்பொருள்!

 

இறைவன், சுந்தரமூர்த்தி நாயன்மாருடன் ஒரு தோழனாக இருந்து வந்தாலும் ,தவறு செய்தால் அதன் வினையை ஒவ்வொருவரும் அனுபவித்தே ஆகவேண்டும் என்பதை சுந்தரமூர்த்தி நாயன்மாரின்  வரலாற்றில் மிக தெளிவாக சேக்கிழார் எழுதியுள்ளார். கண்களை இழக்கிறார்,தோல் நோய் என எல்லாவித வினைகளையும் அனுபவிக்கிறார் சுந்தமூர்த்தி நாயனார். 

ஒவ்வொரு உயிரின் தன்மைக்கேற்ப இறைவன் ஆற்றிய திருவிளையாடல்கள் யாவும் நமக்குச் சொல்லும் பாடம் ,ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ!

 

அடுத்ததாக சங்ககால மன்னன் பாரி வேந்தன்,முல்லைக்குத்  தேர் கொடுத்த வரலாற்றை அறியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

வாயுள்ள உயிர்கள் தனக்கு வேண்டியதை தன் மொழியில் கேட்டுப்பெறும்,ஆனால் ஓரறிவு உள்ள தாவரங்கள் தன் தேவைகளை எப்படி கேட்டுப்பெறும் ?ஓரறிவுகொண்ட முல்லைப் படர்ந்து செல்ல தனது தேரைக்கொடுத்தவன் பாரி வேந்தன்!இவையாவும் எப்படி மன்னனின் அறிவுக்கு எட்டியிருக்கும்  என வியந்து போகிறோம் அல்லவா?

 

ஒருவருக்கு எதையும் எதிர்பாராமல் செய்யும் உதவி ,மீண்டும் நாம் எப்படி திரும்ப பெறுகிறோம் என்பதை ஒளவைகிழவி மூதுரையில் பாடிய செயுள் ,கேட்கும்போதே மெய்சிலிர்க்கிறதல்லவா ?

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கோல் என வேண்டா - நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்.

 

நாம் கண்ட நூல்கள் ஒருபக்கம் இருக்க ,இன்றைய அகழ்வாராய்ச்சியில் பல சுவடுகள் ,நம் இனம் எத்துணை நாகரீகமாக வாழ்ந்து  வந்தது என்பதைச் சான்றுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஆம்!அகழ்வாராய்ச்சியில்,தமிழன்  வீட்டில் அவன் வெட்டிய கிணறு ,உள்பக்கம் அவன் வீட்டு உபயோகத்திற்கும் ,வெளிப்புறம் அந்த கிணறு வேறொருவன் புழங்கும்  வண்ணமும் ,பிற உயிர்களுக்கு பயன்படும் வகையாகவும்  அமைந்தது .இதுவன்றோ அறம் சார்ந்த மனிதனின் மனம். 

கிராமங்களில் இரவு நேரங்களில் ஊர் ஊராய் யாத்திரை செய்து ஓய்வெடுக்க வரும் அடியார்களுக்கும் ,யாசகர்களுக்கும்   திண்ணையில் சோறும்,படுக்க பாயும் ,அருந்த நீரும் வைத்துவிட்டு ,கதவை தாழிட்டு உறங்கச் செல்லும் உறவுகள் யாவும் எம் இனமே!

 

தமிழனென்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா!

                                                                   


No comments:

Post a Comment