Saturday 5 December 2020

ஈகம்!

            அடியேனின் பாலர்பள்ளி ஆசிரியர் பயிற்சியில், தமிழ்மொழி விரிவுரையாளராக அறிமுகமான ஐயா,தற்போது நினைவில் மட்டுமே வாழ்கிறார் என் பள்ளியைக் கண்காணிக்க வரும்போதெல்லாம்,நீ இறுதியாக எந்த புத்தகம் படிச்சம்மா ?அதிலிருந்து என்ன தகவல் பெற்றுக்கொண்டாய்மா?என்றெல்லாம் சோதிப்பார்.அவர் வரும் நாள் தெரிந்துவிட்டால்,அந்த கேள்விகளுக்காகவே நான் எதையாச்சும் வாசித்துவிட்டுப் போவதுண்டு!



ஆசிரியர்களுக்கு வாசிப்புப்பழக்கம் அதிகமாக இருக்கவேண்டும் என்று ஊக்குவிக்கும் ஒரு விரிவுரையாளர் களில் ஐயாவும் ஒருவர்.அநேக பாராட்டுகள் ,சிலவேளைகளில் திட்டும் கிடைத்ததுண்டு! பயிற்சி நாட்களில் ஐயா அவர்களுடன், கழித்த தருணங்களை இப்போது நினைத்தாலும் கண்கள் பனிக்கின்றன!

நாளை (6 டிசம்பர் 2020) இரண்டாம் நாள் நிகழ்ச்சி இரவு 7.30 முதல் 8.30 வரை எழுத்தாளர்/சமூக செயற்பாட்டாளர் திரு. வ. முனியனுக்கு ஈகம் செய்யும் சிறப்பு அங்கம் திரு. வ முனியனின் கல்வித் துறை பணிகள் குறித்து திரு. மொ. முத்துசாமி அவர்களும் அவரின் இலக்கிய படைப்புகள் குறித்து விரிவுரையாளர் திரு. சேகரன் முத்தப்பன் அவர்களும் உரையாற்றுவார்கள் நிகழ்ச்சியை நேரலையாக கீழ்க்காணும் வலையொளி (YouTube) இணைப்பில் (https://www.youtube.com/channel/UChXRF4yEtWZlcL9y4rQtnZA) காணலாம் நண்பர்களுக்குப் பகிருங்கள்.

ஐயா அவர்களுக்குச் சமர்ப்பணம்!

Monday 8 June 2020

How to hold sharp tools

நாரையும் நரியும்(புத்தாக்கம் செய்யப்பட்ட கதை)

காகமும் நரியும்(புத்தாக்கம் செய்யப்பட்ட கதை.

காகிதகப்பல் செய்யும் வழிமுறைகள்.

Covid 19,கோவிட் 19/2020

பள்ளி புலனக் குழுவினால் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் நன்மை தீமைகள்.

my happiness !

Just stay home but busy!

World Environment Day

shortest horror story tamil version

Friday 10 April 2020

மலேசிய நால்வர் மன்றமும்,கொவிட் 19 ஆணை விடுப்பும்!

                                                                                 
                       தற்போதைய கொவிட் 19 விடுப்பில் இருக்கும் நம்மில் பலருக்கு விடுமுறை !ஆனால் உலக மக்களுக்காக,நாட்டு மக்களுக்காக இராப்பகலாய்  போராடிக்கொண்டிருப்பது மருத்துவத்துறை,காவல்துறை இலாகா,தூய்மைபணியாளர்கள் மட்டுமின்றி மிக மிக முக்கிய பங்காற்றி வருவது  சமய இயக்கங்கள் என்பது தான் இன்னுமொரு மிகப்பெரிய உண்மை!ஆம் , இதை நான் அவசியம் இங்கு  பதிவு பண்ணியே ஆகவேண்டும்!
                                                                           
                         அது எங்களைப்போன்ற சிலருக்கு மட்டுமே கிட்டிய வரம் என்றுதான்  கூறுவேன்.ஆமாம் ,தற்போதைய சூழலில் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் ,உலக மக்கள் அனைவரும் எதையோ நினைத்து,ஏங்கிக்கொண்டு  பயந்த நிலையில் இருக்கிறோம். முடிந்து கொண்டிருக்கும் மளிகைப்பொருட்கள்,குறைந்துகொண்டிருக்கும் பணம்,தடை செய்யப்பட்ட கல்வி, வெளி சுகங்களை அனுபவிக்க முடியாத சூழல் என, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இப்படி ஒரு பட்டியலே இடலாம்!
                                                                                   
   
                            இந்த காலக்கட்டத்தில்,நிறைய சோகங்கள் இந்த உலகை உலுக்கிக்கொண்டிருந்தாலும்,அதனைத் திசை திருப்பி,அனைவரையும் ஒருமித்தச்  சிந்தனையில் இட்டுச் செல்ல ,சைவ சமய இயக்கத் தலைவர்களும் அதன் உறுப்பினர்களும் போடும் உழைப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்! !அவர்கள் யாவரும்,பிறர்  காணும் வண்ணம் வேலைச்  செய்யவில்லை என்றாலும் பொதுமக்கள் பயனடைய வேண்டும்,அது மட்டுமின்றி இந்த கொடிய தொற்றுநோயிலிருந்து  நம் உலகம் விடுபட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஒவ்வொருவரும் அயராது செயல்படும் விதம் ,சிரம்தாழ்த்தி வணக்கம் சொல்லியே ஆகவேண்டும்.
                                           
                         அந்த வகையில் ,இவ்வேளையில் அடியேன் பல சைவ சமய இயக்கங்களின்(புலனத்தின்) வழி    பயனடைந்து வருகிறேன் என்றாலும், முழுமையான  சமய ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டு, என்னையும்  பட்டைத் தீட்டி ,சைவ சமயத்துக்குப்  பெரியதாய் ஒன்றும் இல்லையென்றாலும் ,ஏதோ சிறியதாய் சில நல்ல காரியங்களைச் செய்ய ஊன்றுகோலாய் இயங்கும்  மலேசிய நால்வர் மன்றத்தை இங்கு  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
                               
                            மலேசியாவில் தற்போது  செயல்படும் ,பல சைவ சமய இயக்கங்களில் ஒன்றான  மலேசிய நால்வர் மன்றத்தின் தேசிய தலைவரும்  அவர்தம் பொறுப்பாளர்களும்  தங்களின் தன்னார்வ முயற்சியால் பல பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆமாம் நண்பர்களே !வீட்டு வேலைகள்,அலுவலக வேலைகள் என உழன்றுகொண்டிருக்கும் எங்களைத் தன்  வயப்படுத்தி ,நம் நாட்டில் ந.க.ஆணை அறிவிப்புச் செய்த நாள் முதல் இன்று வரை ,ஒரு தேடலையும் ,அதனால் ஏற்படும் ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியையும்  இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
                                       
                             புலனத்தின்  வழி ,நாடெங்கிலும்  வாழும் எங்களை இணைத்து,  இறைசிந்தனையில் மூழ்கச்செய்து   மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் , நால்வர் மன்றத்தின் தேசிய தலைவரான டாக்டர்  திரு.பாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் தொண்டு அளப்பரிய ஒன்று.தினமும் சைவ சமயம் சார்ந்த தகவல்கள்,திருமுறைகளை ஆராய்ந்து,அதை அப்படியே பதிவிடாமல் ,ஒரு சொற்பொழிவு போல ஒப்புவிக்கும் தலைவர் திரு.பாலகிருஷ்ணன்  அவர்கள்,  ஓர் இளைஞனுக்கு ஈடாக செயல்படுகிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
                                                                         
                             இடைவிடாத ஐயாவின்   குரல் பதிவு ,மேலும் தினமும்  அனைவரையும் ஒருங்கிணைத்து ,அவரவர் குடும்பத்துடன் கூட்டுப்பிரார்த்தனைகள்  செய்ய ஊக்குவித்து ,அதை அனைவரும் கடைப்பிடித்து வருவதும் அந்த இயக்கத்தின் வெற்றி எனலாம்.
வெறும் கேட்டல் மட்டுமே  என்றில்லாமல்  வாசிப்பு பழக்கத்தையும் ஊக்குவிக்கும் வண்ணம்  சமயபுதிர்களையும் தயாரித்து, உறுப்பினர்களிடையே ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்கி ,புத்தகங்கள்,இணைய தேடல்கள் என எங்களை இந்த இக்கட்டான சூழலிலும் போரடிக்காமல் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது இந்த இயக்கம்.
                                                                           

              அந்த இயக்கத்தில்  இணைந்து  பயனைடைந்து வரும் 100க்கும்  மேற்பட்ட உறுப்பினர்களில் அடியேனும் ஒருவள் என்பதுதான் எத்துணை மகிழ்ச்சி?குழுவில் உள்ள ஒவ்வொருவருவர்  மனதிலும் பிறர் நலம் காண  வேண்டும் என்ற எண்ணங்களை இடைவிடாமல் விதைத்து   வரும் ஐயாவுக்கு கோடி நன்றிகள்!எங்கள் பொழுதினைச்  செவ்வென கழிக்க ஏதுவாக இயங்கும் இறைவனின்  கருவியாக விளங்கும் மலேசிய நால்வர் மன்றத்துக்கு  இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு  மன்றத்தின் தேசிய தலைவருக்கும் ,செயற்குழு  உறுப்பினர்களுக்கும் மேலும் அந்த இயக்கத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும்  நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
                                                                         
                                       தன்  கடன் அடியேனையும் தாங்குதல் ,
                         என் கடன் பணிசெய்து கிடப்பதே!
                                                                             
                 

Sunday 22 March 2020

தனிமையை இனிமையாக்குவோம்!

               நாள் என்ன செய்யும்?கோள் என்ன செய்யும்?கொடுங்கூற்று என்ன செய்யும்?என்று ரொம்ப தைரியமாய் ஊர்குருவி போல சுந்ததிரமாய்  வலம்  வந்த, அனைத்து உலக மக்களையும் இப்போ COVID  19 என்றழைக்கப்படும் தொற்றுநோய் புயல்போல துரத்தி  வருகிறது. சைனாவில், வூஹான் என்ற இடத்தில் உருவாகிய இந்த நோய்,கொரோனா என்றழைக்கப்படும் கொடிய வைரஸ் தாக்கத்தினால் ,பல உயிர்களை பறித்துக்கொண்டது.உலகத்துக்கே மருட்டலாக இருந்து வரும் அந்த தொற்று நோய் ,நம்மைத் தொற்றிக்கொள்ளாமல் இருக்க உலக நாடுகள் பல, ஊரடங்கு மற்றும் நடமாட்டக்  கட்டுப்பாட்டு  ஆணை என  பொது மக்களை, அவர்கள் நலம் காக்கும்  எண்ணத்தில் தத்தம்  வீடுகளில் தனிமைப்படுத்தியுள்ளது .
                                                               
                தனிமைப்படுத்தப்பட்ட சில நாட்களிலே ,நமக்குள் ஒரு விரக்தி,கோபம்,திருப்தியின்மை .  தொற்றுநோய் பரவும் பயத்தில் இருக்கும் நமக்கு ,இன்னுமொரு கொடிய  நோய் தொற்றிக்கொண்டது என்றால் , இந்த தனிமைப்படுத்தப்பட்ட சூழல்தான்! பலருக்கும் பலவித மன உளைச்சல்கள்,ஏக்கங்கள். நினைத்த இடத்துக்குப் போக முடியவில்லை, ஆசைப்பட்டு எதையும் போய் சாப்பிடமுடியவில்லை,வேண்டியவர்கள் வீட்டுக்குப் போக முடியவில்லை,பள்ளிக்கூடம் போக முடியவில்லை,காலேஜ் போகமுடியவில்லை,பல்கலைக்கழகம் போகமுடியவில்லை,வேலைக்குச் செல்ல முடியவில்லை என ஒரே புலம்பல். நம் நிலைமையே இதுவென்றால்?நம் பிள்ளைகளின் நிலை என்னவாக இருக்கும்?இந்த நிலை தொடர்ந்தால் ,நம்மில் பலரும் மனநோய்க்கு ஆளாகிவிடுவோம் என்ற அச்சம் உறுத்துகிறது!
                                                                         

             உல்லாசமாய் வார இறுதி நாட்களில் ஊர் சுத்தி பழகிய பிள்ளைகள்,வாரத்தில் ஒரு நாள்  வெளியில் சாப்பிடும் குடும்பங்கள் என பழகிபோன நாம்,தற்போது கையில் விலங்கிட்டது போல் முடங்கிக்கிடக்கிறோம். நாளுக்கு நாள் செய்வதறியாது ,உணவு உறக்கம் என்று சோம்பேறிதனத்தை விலை கொடுத்து வாங்குவது  போல ஆகிவிட்டது.அந்த சூழலை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்களாகிய நாம் உள்ளோம்! இக்கட்டான சூழலை ,இனிமையான சூழலாக உருவாக்குவது ஒரு சவால்தான்.ஆனால் அந்தச் சவாலை நாம்  ஒரு கலையாக உருவாக்கலாம்.
                                                                                       
                                                 
                 அந்த வகையில் நாம் என்னெவெல்லாம் நம் பிள்ளைகளுக்குச் செய்து கொடுக்கலாம்?நல்ல வழியில் எப்படி பொழுதை  போக்குவது  என்பதைக் கற்றுக்கொடுக்கலாம்.முதன்முதலில் ஒன்றை நம் பிள்ளைகளுக்கு வலியுறுத்துங்கள்.பொதுவாகவே வீட்டில் இருந்தால் ,நம் மகிழி கருவியாக செயல்படுவது  தொலைபேசி,தொலைக்காட்சி  அல்லது கணினி!இதுதான் நம் பிள்ளைகளுக்கு பெரிய விளைவுகளைக் கொடுக்கின்றன .இது ஆய்வில் கூறப்பட்ட உண்மைகள். அந்த கர்மங்களை ஒரு பக்கம் வைத்துவிட்டு,சில யுக்திகளைக்  கையாள்வோம்.
                                                                           
               நம் பாரம்பரிய விளையாட்டுகள் பலவும்  நிறைய திறன்களைக் கொண்டவை,பயனுள்ளவையம் கூட.அதில் ,கண்ணாமூச்சி ரே,ரே ,எலியும் பூனையும்,ஒரு குடம் தண்ணி ஊத்தி தட்டாமாலை,தட்டாங்கல் கிச்சு கிச்சு தாம்பாளம் ,குலை குலையாய் முந்திரிக்காய்,பரமபதம்  என சொல்லிக்கொண்டே போகலாம்.இவற்றில் ஏதாவது ஒன்றினை ஒரு நாளைக்கு அறிமுகப்படுத்தலாம்.அவர்களுக்கு அவைகள் பிடிக்குமா என்ற சந்தேகம் வருவது நியாயம்தான்.ஆனால் அனைத்துச் செயல்களுக்கும் ,ஒன்று பயிற்சி ,அடுத்து  முயற்சி!பெற்றோர்களே! இப்படி ஒரு விடுமுறை இனி அமையுமா? என்பது கேள்விக்குறிதான்!உள்ளங்கையில் உலகத்தை வைத்துக்கொண்டு,மேலை நாடுகளின் மோகத்தை நாமும் பின்பற்றுகிறோம்.தொலைத்தது போதும் ,அதை மீட்டு எடுக்கவே இந்த ஊரடங்கு ,ஆணை(விடுமுறை) என எடுத்துக்கொள்வோமாக.
                                                                                           
                  பிள்ளைகளுக்குக்  கதை சொல்லுங்கள்,கதை கேட்டு வளரும் ஒரு குழந்தை ஒரு நல்ல படைப்பாளியாக உருவாகிறது.தயவு செய்து,சீரழிக்கும்  டிவி சீரியல் வேண்டாமே! பாடல் போட்டி ,புதிர் போட்டி நடத்துங்கள்.பொது அறிவு கேள்விகளை முன் வையுங்கள்.ஓவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும்.நடனம் ஆட வைத்துப்பாருங்கள்.விடுமுறை கழிந்து, பள்ளி போகும் அவன்/அவள் ,ஏதாவது மாற்றத்தைக் கொண்டு செல்லட்டும்.
                                                                           
                            ஆங்கிலத்தில் 'கோல்டன் டைம்' என்றழைக்கப்படும் . குடும்பத்தினரோடு அமர்ந்து உணவு உண்ணும் பண்பாட்டினை , உருவாக்கிக் கொடுங்கள்.இந்த சமயத்தில்,நம்மிடையே குறைந்து வரும்  வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்வதுதான் இன்னுமொரு சிறப்பு அம்சம். அவர்கள் விரும்பும் விளையாட்டுகளை  விளையாட வசதிகளை ஏற்பாடுச்  செய்து கொடுங்கள்.அவ்வப்போது உலக நடப்புகளை எடுத்துச்சொல்லுங்கள்.குடும்பமாக அமர்ந்து செய்திகளைப்  பார்க்கலாம்.மரண செய்திகளைக்  கேட்கும்போது
ஒவ்வொரு உயிரின் மதிப்பை உணர்த்துங்கள்.
                                                                                       
                                         இறுதியாக நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு பொருள் யாது என்பதை, இந்த கொரோனா வைரஸை மிகச்சிறந்த உதாரணமாக கூறுவோம்.தனிமனிதனுக்கு ஒரு நோய் என்றால் அவன் வசதிக்கேற்ப அதை குணப்படுத்தலாம்.உள்ளூரிலோ அல்லது வெளியூரிலோ சிகிச்சைப்  பெற்றுக்கொள்ளலாம்.ஆனால் தற்போது நாம் எதிர்நோக்கியுள்ள கொவிட் 19 நோய் உலகத்தையே புரட்டிப்போடுது.மனதளவில் எப்படி நம்மை நாம் ஆறுதல் படுத்திக்கொள்வது,இறைவழிபாடு ,பிரார்த்தனைகள் இதில் எந்த அளவு நம்மை பக்குவப்படுத்துகின்றன என்பதை அவசியம் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.பெற்றோர்களாகிய நாமும் குறைந்த பட்சம் ஒருவேளையாவது  நம்மை இறைவழிபாட்டில் ஈடுபடுத்திக்கொள்ள இந்த 'ஓய்வு நேரம் ' கிடைத்துள்ளது என்று நினைத்துக்கொள்ளவோம்.
                                                                           
                மொத்தத்தில்  ஊருடன் கூடி வாழ் என்ற வரிகளுக்கு ஏற்ப நாம் அனுபவிக்கும் தற்போதைய  நடைமுறை வாழ்க்கை ,பிணி,மூப்பு ,சாவு எப்படி அனைவருக்கும் சமமோ ?அதுபோல,உலக குடி மக்கள் அனைவரும் இன்றைய நாளில் ஏதோ ஒரு வழியில் ஒரேமாதிரியான வாழ்க்கையைத்தான் அனுபவிக்கிறோம் என்ற சமத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!அரசு ஆணையை மனதிற்கொண்டு செயல்படுங்கள்.உலகம் உனக்கு என்ன செய்தது என்று யோசிக்காமல் ,உன்னால் இந்த உலகுக்கு என்ன செய்ய முடிந்தது என்று மாத்தி யோசி!