இன்றோடு என் நண்பனும் என் தோழியின் காதலனுமான திரு.போல் அண்டனி இறந்து 12 வருடங்கள்.எனக்கு என் தோழி அறிமுகமானது நாங்கள் இருவரும் வேலை நிமித்தமாக ஜப்பான் சென்ற போது ,ஒரே அறையில் தங்கினோம்.போல், அவர் காதலி ,நான் மூவரும் இதற்கு முன்பு பார்த்துதுண்டு ,ஒரே கம்பெனியில் வேலை செய்தோம் ஆனால் பேசியது இல்லை.போல் உயர்பதவியில் இருந்தவர் ,எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன் கொஞ்சம் proud என்றே நினைத்தேன். போல் அடிக்கடி அவளோடு ஜப்பானுக்கு போன் பண்ணி பேசுவார் ஆனால் போன் பண்ணும்வேளைகளில் அவள் இல்லாவிட்டால் என்னோடு பேசுவார்.’செல்வி அவளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்,அவள் என் உயிர்’என்றெல்லாம் உருகுவார்.போலும் அவர் காதலி இருவருமே கிறிஸ்துவர்கள்.மேலும் இருவருமே ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவார்கள் .என் தமிழ் போலுக்கு ரொம்ப பிடிக்கும் என்பார்.
அவர்கள் காதைலைக்கண்டு பொறாமைப்படாத ஆட்களே இல்லை.
ஆனால் எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை பட் என்னையும் இப்படி யாராவது காதலிப்பார்களா”என்று ஏங்கியதுண்டு.அப்படி ஒரு காதல்.போல் அவளை மனைவி தன் மனைவி என்றே சொல்லுவார்.போலின் காதலி ,யூரேசன் என்று அழைக்கப்படும் கலப்பு திருமணத்தில் பிறந்தவள். அப்பா தமிழ் ,அம்மா யூரேசன் ,ஆகவே அவளுக்கு வெள்ளைக்காரர்கள் பழக்க வழக்கம் அதிகம்.ஜப்பானிலிருந்து திரும்பிய சில மாதங்களில் அவள் வேலை மாற்றலாகி சென்றாள்.போல் எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை.போலின் பயமே ,அவள் யாரிடமாவது பழகி மனம் மாறிவிடக்கூடும் என்ற காரணமே.இறுதியில் நடந்ததும் அதுதான்.போன இடத்தில் வெள்ளைக்காரனைப்பார்த்ததால் ,கருப்பு போலைக் கை கழுவினாள்.வெளியூருக்கு பறந்தாள்.மீண்டும் வந்தாள் ,மீண்டும் பறப்பாள்.போலும் வசதியானவர்தான் ஆனால் குடும்ப சுமை அவர்மேல் நிறுத்தப்பட்டது.ஆகவே இவளுக்கு சுமை எல்லாம் சுமக்க முடியுமா என்ன?போல் இடிந்து போனார்.என்னிடம் அழுதார்.நண்பர்களிடம் அழுதார்.காலில் விழாத குறையாக கெஞ்சினார்.நடைபிணமானார்.ஒருமுறை ,போலுக்காக அல்ல அவரின் காதலுக்காக அவளோடு பேசினேன்.அவள் சொன்னது ‘அவருக்கு அவர் குடும்ப சுமை ,வேலை அதிகம் ,சோ என்னால் வெயிட் பண்ண முடியாது!’இனி நான் என்ன பேசமுடியும்.
‘நீங்களாவது சொல்லுங்க செல்வி அவளிடம் ,அந்த வெள்ளைக்காரனெல்லாம் ,பாசமாக இருக்கமாட்டான்.காமம்தான் பெரிதாக நினைப்பான் ,அவளை அனுபவித்தவுடன் தூக்கி வீசிச்செல்வான் என்று வெட்கத்தை விட்டு என்னிடம் பேசினார்!எனக்கோ செய்வதறியாது வாயடைத்துப்போனேன்.இந்த அளவு ஒரு ஆண் என்னோடு பேசும் ஒரு நட்பாக நான் போலைக்கருதவில்லை ,அப்படி ஒரு நெருக்கமும் இல்லை.போலும் அந்த அளவுக்கு தரம் இறங்கி பேசும் ஆடவரும் இல்லை .அப்படி பேசுகிறார் என்றால் அந்த அளவுக்கு உடைந்து போயிருக்கார் என்று என் மனம் குமுறியது.என்னோடெல்லாம் பேசுவதற்கே யோசிக்கும் போல் ,இப்படி உரிமையோடு பேசுகிறார் என்றால் ,ஜப்பானில் நான் அவளைக் கவனித்துக்கொண்ட விதம்.மூச்சுக்கு மூச்சு என்னை ,உடன் பிறவா அக்கா ,அக்காவென சொல்லிக்கொள்வாள்.போலுக்காக பல மானேஜர்கள் ,உயர்பதவியில் உள்ள சில தமிழர்கள் எல்லாம் அவளிடம் பேசி பார்த்தனர்.வென்றது வெள்ளைத்தோலும் பணமும் மாயையும் மட்டுமே!அந்த காரணத்தால் போல் தன் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.
ஒரு நாள் இரவு வேலை முடிந்து நெடுஞ்சாலையில் தூக்கலக்கம் காரணமாக காரை நிறுத்திவிட்டு ,தூங்கும்வேளையில் எவனோ இடித்து விட்டு போய் விட்டான்.மூன்று நாட்கள் கோமாவில் இருந்து ,அப்படியே இறந்தும் போனார்.போலின் அசைவற்ற உடலைக்கண்டு அழாத ஆண்களே இல்லை .சீனன் ,மலாய்க்காரன் என்று அனைத்து நண்பர்களும் அழுதனர்.நான் போல் வீட்டு வாசலை மிதித்தேன்.என் வாழ்வில் நான் என் அப்பாவின் இறப்பைத் தவிர்த்து ,முதன்முதலாக கதறி அழுத ஒரு மரணம் என்றால் அது போலுடைய மரணம்தான்.என்னைக்கட்டியணைத்து அழுத அவருடைய அம்மா ‘என் பையன் அவன் அப்பா மாதிரிம்மா ,இனி ஒவ்வொரு கிறிஸ்மஸ் நாளும் எனக்கு இருள் சூழ்ந்த நாளே.எப்படி என் பிள்ளை இல்லாத நாட்களை நான் கடக்கப்போகிறேனோ?என்று வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதார்.என்னதான் அவள் எடுத்த முடிவு அவள் சொந்தவிசயமோ அவள் வாழ்க்கையோ ,இறைவனிடம் பதில் சொல்லனுமே?அவர் அவளுக்கு செலவழித்த பணத்தையோ பொருளையோ திரும்ப கொடுக்கலாம ஆனால் அவர் உயிரை? என் வாழ்வில் ஒருவளை நான் மன்னிக்கவேமுடியாது என்றால் அது அவளாகத்தான் இருக்க முடியும்.