Saturday, 28 September 2013
சில சூழ்நிலைகளில் என்னை மாட்டி விட்ட தமிழ்மொழி!
நமது மொழிதானே ,எங்கே சீனனுக்கும் மலாய்க்காரனுக்கும் தெரியப்போகுது என்று அலட்சியமாய் நினைத்து நல்லாவே ‘பல்பு’வாங்கிய சில சூழ்நிலைகளைத்தான் இங்கே பகிரப்போகிறேன்.இதை அனைவரும் படிப்பினையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.மலேசியாவுக்கு வரும் அந்நிய நாட்டு தமிழர்கள் கவனத்தில் வையுங்கள்!
சூழ்நிலை 1 :
நானும் என் தோழியும் தினமும் பள்ளிக்கு நடந்துபோகும் அதே நேரத்தில் ,ஒத்தையடிப்பாதையில் ,ஒருவ(ள்)ன் சைக்கிளில் செல்வது வழக்கம்.அவர் ஒரு சீனர். பார்க்க ஆணைப்போலவே இருப்பார் ஆனால் பெண்ணைப்போல தலை வாரியிருப்பார், சிலவிசயங்கள் அவரிடம் பெண் தோரணையைக் காட்டும் .
ஒருநாள் நானும்தோழியும் பேசிக்கொண்டு போகும்போது அவர் எங்களைக் கடந்துபோகும்போது , என் தோழி ‘அவர் அவனா அல்லது அவளா என்றே தெரியலையே , நீ பார்த்து சொல்லு ‘என்றாள்(சனி என் நாக்கில் வந்து உட்காருவானா?) நானும் ரொம்ப கெட்டிக்காரிப்போல ‘பார்த்தாலே தெரியலையா அது அவள்தான் ,இதுல கேள்வியா?’என்று சொல்லி முடிப்பதற்குள் ,சைக்கிள் கீழே விழும் சத்தம் கேட்டு திரும்பிபார்த்தால் ,அந்த நபர் எங்களை நோக்கி ஓடோடி வந்து (கையில் பால் மரம் சீவும் உளியோடு) உங்களுக்கு என்ன திமிரு ,இனிமேல் இப்படி பேசினால் ,இந்த உளியாலே நான் குத்திக்கொன்னுபுடுவேன்’என்று மலாய் மொழியில் மிக கோபமாய் கத்தினார்.
ஐயோ!நாங்கள் இருவரும் செய்வதறியாது வியர்த்து விறுவிறுத்துப்போனோம். மனதுக்குள்ளே நான் அவரை ’சாரி அங்கிள் அல்லது ஆண்ட்டி’ என்று சொல்லி மன்னிப்பு கேட்பதா ?என்று கூட தடுமாறினேன். அனைத்து கடவுள்களும் கண் முன்னே வலம் வந்தனர்.வேகமாய் சீறிப்பாய்ந்து வந்த சீனர் ,உளியைக்காட்டி மிரட்டிவிட்டு ,மீண்டும் சைக்கிளில் ஏறி நகர்ந்தார்.அவர் சென்று விட்டாரா என்று 101% உறுதிப்படுத்திக்கொண்டு நாங்கள் இருவரும் சிரித்தே சிரிப்பு இருக்கே?கொஞ்ச நாட்கள் ,பள்ளியிலிருந்து லேட்டாகவே(சீனர் சென்றவுடன்) வெளியேறுவோம்!
சூழ்நிலை 2 :
நானும் என் அக்காவும் ஓர் விருந்துக்கு செல்ல ,வாடகை காரில் ஏறினோம்.அந்த காலத்தில் வாடைகைக்காரில் போவது மிகவும் ஆபத்து ,காரணம் பெண்கள்(அதிலும் எங்களைப்போல அழகான பெண்கள் என்று சொல்ல மாட்டேன்!!!) தனியே வாடகை காரில் சென்றால், அவர்களை கடத்தி செல்ல வாய்ப்புகள் அதிகள் ,காரணம் செல்போன் இல்லை , கார்கள் சாலையில் மிக குறைவாகவே செல்லும் .போய்த்தான் ஆகவேண்டும் என்ற முடிவில் காரில் ஏறினோம்.
முகவரியை ஓட்டுனரிடம் கொடுத்தோம் .அந்த் மலாய்க்காரரும் ‘ஓ இந்த இடமா?சரி போகலாமே ‘என்று தொடர்ந்தார். அப்பா சொன்ன பாதையை விட அவர் போன பாதை தூரமாக போய்க்கொண்டே இருந்தது. எனக்கும் அக்காவுக்கும் உள்ளூர பயம் வர தொடங்கியது. நான் மெதுவாக அக்காவிடம் ‘இவன் எங்கேதான் போறானோ தெரியலையே’என்றேன்.அக்காவும் ‘அதான் எனக்கு பயமா இருக்கிறது ,அங்கேயும் இங்கேயும் சுத்தி சுத்தி இறுதியில் காசு அதிகம் கேட்கபோகிறான் ,நாம செத்தோம்’என்று முணுமுணுத்தார்.
ஓட்டுனரோ எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் காரை செலுத்தினார். போய்க்கொண்டே இருந்தோம் , பொறுமையை இழந்து அவரிடம் ‘அங்கிள் இன்னும் எவ்வளவு தூரம் போகனும்?என்றோம். அவரும் ‘இன்னும் ஐந்து ,பத்து நிமிடங்கள் ‘என்றார்.
உயிரைக் கையில் புடித்துக்கொண்டு வேண்டாத தெய்வமே இல்லை. இடமும் வந்தது.ஓட்டுனர் காரை நிறுத்தினார் ,நாங்கள் பணம் கொடுத்தோம் ,ஓட்டுனர் எங்களிடம் ‘உங்களைப்பார்க்க என் பெண்பிள்ளைகள் போலவே இருக்கு, எனக்கு பணம் வாங்க மனமில்லை ,ஆனாலும் என்னைத் தவறாக நினைத்துப்பேசிட்டிங்களே?அதான் எனக்கு மனம் சரியில்லை , நான் நல்லவந்தான் , விருந்து முடிந்து வரும்வரை நான் வெயிட் பண்ணி ,கொண்டு போய் நீங்கள் ஏறிய இடத்திலே விடட்டுமா?என்றாரே.
கன்னத்தில் அறைந்தது போல ஒரு சொல். ’பாக் சேக்(மலாய் மொழியில் மாமா) மன்னிச்சிருங்கள் , உங்களுக்கு தமிழ் தெரியுமா?என்று நாக்கு தடுமாற கேட்டோம்!சிரித்துகொண்டே ‘நல்லாவே தெரியும் ‘என்றார் .நாங்கள் பெண்கள் ,அதான் பயந்துவிட்டோம்’என்று சமாளித்தோம். சிரித்துக்கொண்டே ‘சரி சரி நியாயமான பயம்தான் , போகும்போது உதவி வேண்டுமானால் நான் அந்த கடையில்தான் உட்கார்ந்திருப்பேன் , வந்து தாரளமாக அழையுங்கள்’என்றார். ’அதுக்கு அவசியம் இல்லை ,நண்பர்கள் கொண்டு போய் விடுவார்கள்’என்று கூறி விடைபெற்றோம்!
சூழ்நிலை 3:
நான் வேலை செய்து விட்டு தோழிகளோடு ஒரு பொது பேருந்தில் வீட்டுக்குப்போவது வழக்கம் .ஒரே ஒரு குறிப்பிட்ட பேருந்துதான் பூச்சோங் செல்லும் ,ஆகவே அந்த பேருந்தின் ஓட்டுனர் மட்டும் காண்டக்டர் எல்லோரையும் நன்கு அறிந்திருந்தோம். ரொம்ப நல்ல நட்பாகவும் பேசுவார்கள்,அடிக்கடி பார்க்கும் முகம்தானே !
அந்த வகையில் ஒரு மலாய்க்கார இளைஞர் காண்டக்டராக வருவார். எப்போதும் எங்களை கிண்டல் செய்து பேசுவார். அதிலும் என்னிடம் கொஞ்சம் அதிகமாக பேச முனைவார். ஆனால் நாங்கள் அப்போது ரொம்ப பயந்தாங்கொள்ளிகள், யாரிடமும் சரியாக பேசபயப்படுவோம் அதிலும் அந்நிய இனம் என்றால் சொல்லவே வேண்டாம்.
இப்படியே அந்த கண்டக்டர் அடிக்கடி எங்களிடம் கொஞ்சி கொஞ்சி பேசுவார் . என் தோழிகளிடம் என் பெயரைக் கேட்பார். எனக்கு பிடிக்காத விசயம் அது. அவர் எங்களை கடந்துபோகும்போது நான் தமிழில் பலமுறை திட்டி இருக்கேன்.எல்லோருக்கும் பணம் கொடுத்து விட்டு என் பாக்கி பணத்தை மட்டும் நான் இறங்கும் வரை காத்திருந்து ,பிறகு கொடுத்துவிட்டு சிரிப்பார்.எனக்கு அதை ரசிக்கவே முடியாது.
ஆனால் அவர் ஏதோ என்னை வென்று விட்டதாய் நினைத்து சிரிப்பார்.எனக்கு கோபம் மட்டுமே வரும் . தீபாவளி சமயங்களில் பேருந்தில் போகும்போது இறங்கும் வேளை ,படியில் வந்து நின்று வாழ்த்து சொல்லுவார்.ஆனால் நான் அவன் என்னைக்கடந்து செல்லும் போதெல்லாம் என் தோழிகளிடம் , அவனும் அவன் பார்வையும் ,பெரிய கமல்னு நெனைப்பு , எப்படி பார்க்கிறான் பாரு , ஒருநாளைக்காவது பஸ்ஸிலிருந்து கீழே விழப்போறான்’என்றெல்லாம் திட்டியிருக்கேன்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்தது. ஒருநாள் நாங்கள் பேருந்தில் ஏறியபோது , வழக்கத்துக்கு மாறாக அந்த மலாய்க்காரர் அமைதியாக காணப்பட்டார் ,ஆனாலும் நாங்கள் பேருந்தில் ஏறியதைக்கண்டவுடன் ஒரு குட்டி சந்தோசம் அவர் முகத்தில். நானும் போய் உட்கார்ந்தேன் , தோழி அவள் இடம் வந்ததும் இறங்கினாள்.நான் இறுதியாக இறங்குவேன் .
நான் பொதுவாக இறங்கும் வேளை,பேருந்தில் ஆள் குறைவாகவே இருப்பார்கள். காரணம் நான் இறங்கும் இடம் கடைசி ஸ்டாண்ட் ,அதன் பிறகு பேருந்து வேறு ரூட் போய்விடும். என்னிடம் பணம் வாங்கிகொண்டு ‘டிக்கெட்டையும் கொடுத்து விட்டு , முன்னும் பின்னும் நடந்தவர் ,என் சீட்டின் முன்னால் உள்ள இருக்கையில் வந்து அமர்ந்தார். நான் வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன் .’செல்வி ‘என்று மெதுவாக அழைத்தார்,எனக்கு தூக்கி வாரிப்போட்டது.திரும்பிபார்த்தேன் .மெதுவாக சிரித்துக்கொண்டே ‘செல்வி இன்றோடு என் வேலை முடிகிறது ,நான் என் கம்போங்(கிராமம்)போகிறேன்.அங்கே வேறு வேலை கிடத்து விட்டது, எனக்கு உன்னை கிண்டல் செய்ய ரொம்ப பிடிக்கும் ,என் பழைய காதலி உன்னைப்போலவே நீளமான கூந்தல் , குள்ளமாக இருப்பாள் , உன்னைப்போலவே சிடுசிடுவென பேசுவாள் ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்துகொண்டு போய்விட்டாள், சோ நான் பாவம்’என்று அழகான தமிழில் சொல்லி முடித்தார் , எனக்கு பேச முடியவில்லை ‘ஒரே அதிர்ச்சி + சோகம் + மகிழ்ச்சி(நம்மைப்போல ஒருவள் ?).என் ஒரே கேள்வி ‘உனக்கு எப்படி தமிழ் தெரியும்? ’நான் எஸ்டேட்டில் வளர்ந்தவன் , உன்னைவிட அழகாக தமிழ் பேசுவேன்.நீ என்னை எப்படியெல்லாம் திட்டியிருக்கிறாய்?’என்று சொல்லி சிரித்தார்!
என் அதிர்ச்சி அதிகமானது. ஆனால் அவர் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்று மட்டும் தெரிந்தது.நான் இறங்கும் இடம் வந்தது. ‘போயிட்டு வா செல்வி, ‘இன்ஷல்லாஹ்’ வாய்ப்பிருந்தால் பார்க்கலாம் ‘என்று பை பை காட்டினார்.ஐயோ எப்படியெல்லாம் ஏசியிருக்கோம்,ச்சே தப்பு பண்ணிட்டோமே ,மன்னிப்பு கேட்க கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டதே?ஏதோ ஓரு சோகம்என்னுள் புகுந்து கொண்டது. ஆனால் இன்றுவரை அவரை நான் பார்க்கவே இல்லை .
இன்னும் பல சூழ்நிலைகள் இருந்தாலும் என்னால் மறக்க முடியாத சில சிட்டுவேசன்களையே இங்கே பகிர்ந்துகொண்டேன்.இங்கே வரும் நண்பர்களே கவனம் ,கவனம் ,கவனம்!சீனருக்கு தமிழ் தெரிவது , தமிழனுக்கு சீன மொழி தெரிவது மலேசியாவில் சர்வசாதாரணம்!
Thursday, 5 September 2013
முதன் முதல்...
அண்மைய காலமாக ரொம்ப கனமான பாத்திரமாக மாறி, பதிவுகள் எழுதி தள்ளியாச்சு. சரி இப்போ கொஞ்சம் எல்.கே.ஜி லெவெலுக்கு இறங்கி நான் முதன் முதலாக என்ற தலைப்பில் எழுதப்போறேன்.
- நான் ஸ்டூடியோவில் சென்று முதன்முதலாக பிடிச்ச படம் என் எட்டு வயது பிறந்தநாள் அன்று(என் அண்ணாவின் சட்டை அணிந்து)
- நான் முதன்முதலாக படித்த பள்ளிக்கூடம் புக்கிட் ஜாலில் தோட்டத்தமிழ்ப்பள்ளி.
- நாம் தியேட்டரில் அப்பாவோடு குடும்பமாக போய் பார்த்த முதல் திரைப்படம் ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’
- நான் பார்த்த முதல் இறப்பு ,என் அம்மாவின் தந்தை திரு.குஞ்சம்பு அவர்கள்.
- நான் முதன்முதலாக (இறப்பினால்)பிரிந்த நட்புகள் என் தோழியின் அண்ணா தம்பிராஜா அவர் தங்கை விமலா.(குளத்தில் விழுந்து இறந்து போனார்கள்)
- நான் முதன்முதலாக பெற்ற பரிசு ஆசிரியரிடம் ஒருவெள்ளி.
- நான் முதன்முதலாக சென்ற இடைநிலைப்பள்ளி விவேகானந்தா பள்ளி(மலேசிய பணக்காரர்களில் ஒருவரான ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் படித்த பள்ளி)ஆனால் நான் ஒருநாள்தான் அங்கே படித்தேன்!
- என் ஆரம்பப்பள்ள்யில் முதன்முதலாக இறந்துபோன என் தோழன் குமார்(தமிழ்நாட்டில் இருதய சிகிட்சைக்காக சென்று அங்கேயே இறந்துபோனான்).
- என் முதன்முதல் வலிமிகுந்த அறுவை சிகிச்சை ,என் காலில் . டாக்டர் என்னை ’லஃப்ஃபா’ வலிக்க வலிக்க என் காலை கத்தியால் கிழித்து உள்ளே இருந்த எதையோ அகற்றினார்.நான் அலறிய அலறல் ,என் அப்பாவே அழுதுவிட்டார்.
- நான் முதன்முதலாக பள்ளியில் நடித்த நாடகத்தில் இளவரசனின் தங்கையாக நடித்தேன்.என் பெயர் ஐயை!
- முதன்முதலாக பேசிய நாடக வசனம் ‘புலவரே இந்த செய்யுளின் பொருள் என்ன?’
- நான் முதலும் கடைசியுமாக அப்பாவிடம் வாங்கிய அடி ,தோழியோடு சேர்ந்து சீனர் வீட்டில் முட்டைத் திருடியபோது.
- நான் முதன்முதலாக சென்ற வெளிநாடு ஜப்பான்.
- நான் முதன்முதலாக ஓட்டிய கார் (இன்னும் ஓட்டும் அதே )மலேசிய புரோட்டோன் சாகா
- நான் எழுதிய முதல் எழுத்து பத்திரிக்கையில் ’சாலை விபத்து’ என்ற கட்டுரை.
- நான் முதன்முதலாக முழுவதுமாக படித்த முதல் கதை ‘தெருகூத்து ‘(ராணிமுத்து)
- என்னை முதன்முதலாக உறங்க விடாமல் செய்த இறப்பு செய்தி என் பள்ளி நண்பனின் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான கோர விபத்து செய்தி.
- இலக்கியப்பரிட்சைக்காக நான் படித்த முதல் நாவல் நெஞ்சினலைகள்
- முதன்முதலாக நான் ஃபெயில் (சிகப்பு புள்ளி) பண்ணிய பரிட்சை குடியியல் .
- என் முதன்முதல் ஆண் ஆசிரியரின் பெயர் திரு.விஸ்வநாதன் .
- என் முதல் அண்டைவீட்டுத்தோழி சாந்தகுமாரி
- என் முதல் பஸ்பயணம் அப்பா வழி பாட்டி வீடு(ஜோகூர் மாநிலம்).
- நான் சந்தித்து பேசி படம் பிடித்துக்கொண்ட முதல் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
- நான் முதன்முதலாக பதிவில் எழுதியது என் நட்புகளைப்பற்றி.
- எங்கள் ஊர் வானொலியில் முதன் முதலாக என் பெயரை அறிவித்து எனக்காக ஒலியேற்றிய பாடல் ‘ஒரு தங்கரதத்தில் பொன் மஞ்சள் நிலவு’
- நான் முதன்முதாலக வேலை செய்து பெற்ற சம்பள தொகை ரிம450
- என் முதல் வேலை அனுபவம் matsushita air cond company
- எனக்கு முதன்முதலாக அறுவை சிகிட்சை செய்து என் மகளை இவ்வுலகுக்கு கொண்டு வந்த மருத்துவர் மகப்பேறு நிபுணர் டாக்டர்.சிவகுமார்.
- என் முதல் பள்ளி தோழி சிவனேஸ்வரி (sumathi siva)
*************நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் ,இதை தொடர என் பதிவுலக நட்புகளை அழைக்கிறேன்!
Subscribe to:
Posts (Atom)