Saturday, 5 April 2014
படைத்தவனின் குறையா?
பிறந்தது முதல் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த எங்களுக்கு குழந்தைகள் வளர்ப்பு ,பராமரிப்பு எல்லாம் ரொம்ப சின்ன விசயம்.ஆம்,சித்தப்பா பிள்ளைகள்,அத்தை பசங்க என்று ஒரு கூட்டமே நம் வீட்டில் இருப்பார்கள்.பிள்ளைகளை குளிப்பாட்டி விடுவது,உணவு ஊட்டுவது ,படிச்சிக்கொடுப்பது என்று எல்லாம் சின்ன வயதிலே அத்துப்பிடி.ஆகவே ஒரு குழந்தையின் பரிணாம வளர்ச்சி,அசைவுகள் ,வேறுபாடுகள் எல்லாம் பார்த்த மாத்திரத்தில் கண்டு கொள்ளமுடியும் .நானும் ரெண்டு பிள்ளைகளுக்கு தாய்,அதுமட்டுமின்றி மழலைக்கல்வி ஆசிரியையாக கடந்த பத்து வருடங்களாக பணிபுரிந்துவருகிறேன். ஆகவே பிள்ளைகள் விசயத்தில் நமக்கு ஓரளவு அனுபவம் உண்டு.சரி இப்போ விசயத்துக்கு வாரேன்.(என் 4 வயது மாணவனைப் பற்றிய விசயம்தான் இது. அவன் பெயரை ‘கணபதி’என்று மாற்றியுள்ளேன்)
முதன்முதலாய் கணபதியை( 4 வயது) அவன் தாய் ,பள்ளியில் கொண்டு வந்து சேர்த்து விட்டு ‘டீச்சர் ,இன்னும் சரியா பேச வரவில்லை,கொஞ்சம் பிடிவாதம் பண்ணுவான்.அவன் இன்னும் வெளியுலகம் போனதில்லை...என்று அடுக்கடுக்காய் பல விசயங்களைச் சொன்னார். சொல்லவேண்டிய மிக முக்கிய விசயத்தைச் சொல்லவில்லை!அவனைப்பார்த்ததும் மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தையும் கண்டுபிடிக்கலாம்.அவன் தாயும் அவனுடன் பள்ளியில் உட்கார்ந்து கொள்வார். ஓரிரு நாட்கள் கழித்து ,’டீச்சர் இனி நான் இருக்க முடியாது வேலைக்குச் செல்கிறேன்.என் பையனைப் பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று விடைபெற்றார்.அவன் அக்கா கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு எங்களிடம் பயின்றவள்.ரொம்ப அழகாக இருப்பாள்.மற்ற மாணவர்களை விட கொஞ்சம் வேறுப்பட்டிருப்பாள்.சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வாள். மிககுறைவான கவனம் செலுத்துபவள். ஆனால் கணபதி அளவுக்கு மோசம் இல்லை.
அதேப்பிரச்சனைதான் இவனுக்கும்ஆரம்பகாலத்தில் அவனை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.பிற மாணவர்களை அடிப்பது ,கத்துவது ,எங்களை அதட்டுவது .அவ்வளவு ஏன் ?மலம் போவது கூட தெரியாமல்,அப்படியே உட்கார்ந்திருப்பான், இப்படி பல அசெளகரியங்களைக் கொடுத்து வந்தான் கணபதி. கொஞ்சம் அஹிம்சையைத் துறந்து ,பிரம்பு எடுத்து பயம் வர செய்வோம்(பல நேரங்களில் ஆசிரியைகளுக்கு கிடைக்காத மரியாதைகள் ‘மிஸ்டர் பிரம்பு’க்கு கிடைக்கும். சரி கொஞ்ச நாட்கள் கழித்து ஓகே பண்ணிடலாம் என்று நினைத்தது என் பேராசைதான்!கற்றல் நேரத்தில் அவன் எங்களுக்கு ஒத்துழைக்கவே மாட்டான். ஓரிடத்தில் உட்கார்ந்து எழுதவேமாட்டான்.புத்தகங்களில் பயமின்றி கிறுக்கித் தள்ளுவான். ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவனால் அமைதியாக உட்கார முடியாது.கண் நகர் பயிற்சியில் சிறிதும் கவனம் செலுத்தமாட்டான். அவன் பாஷையில் ஏதோ உளறிக்கொண்டிருப்பான். .
‘என்ன டீச்சர் முடிவு எடுக்கப்போறிங்க? முடியாது டீச்சர்.அவன் அம்மாவைக் கூப்பிடுங்க பேசலாம்’என்று சக ஆசிரியைகள் அவசரப்படுத்தினர்.’பார்க்கலாம்,பிறகு முடிவெடுக்கலாம் ‘என்று ஆசிரியைகளோடு பேசி அமைதிப்படுத்தினேன்.ஒருமுறை மெண்டரிங் செய்ய வந்த என் விரிவுரையாளர்’இவனுக்கு உங்களால் கற்றுக்கொடுக்க முடியுமா? அதற்கு நிறைய ரிஸ்க் எடுக்கணும், முடிந்தால் செயலில் இறங்குங்கள் ,இல்லையேல் பெற்றோரை அழைத்து பேசி அனுப்பிவிடுங்கள்’என்றார்.கணபதியின் மருத்துவ சான்றிதழை எடுத்து பார்த்தேன் .அதில் எதுவும் குறிப்பிட்டு எழுதவில்லை(ஆனால் அவர்கள் எழுதியிருக்க வேண்டும் ,அதுதான் விதிமுறை).கணபதியின் அம்மாவுக்கு போன் பண்ணினேன்.குரலில் ஒரு பதற்றம்,அவசரம் ‘என்ன டீச்சர் என்ன ஆச்சு?’இல்லை கணபதியைப் பற்றி கொஞ்சம் பேசணும் ,உடனே வந்தால் நல்லது ‘என்றேன்.
மறுநாள் தாயார் வந்தார். என் முகத்தைப் பார்க்கவே இல்லை.அலட்சிய பார்வையில் ஒரு குற்ற உணர்வும் ஒளிந்து கொண்டிருந்தது. ஒரு மரியாதைக்கூட வணக்கம் சொல்லவில்லை.ஏதோ சண்டைக்கு வந்ததுபோல வந்து உட்கார்ந்தார்.இது போல நிறைய பெற்றோர்களைப் பார்த்துவிட்டேன்.சண்டையும் போட்டுள்ளேன்.சோ இதெல்லாம் எனக்கு ஜூஜுபி மேட்டர்.‘உட்காருங்க கொஞ்சம் பேசணும்’என்றேன். நீங்க என்ன பேசப்போறிங்க என்பது எனக்கு தெரியும் டீச்சர் ’என்று கொஞ்சம் கோபத்துடன் அவன் பொருட்களை பேக் பண்ணினார். ‘கணபதிக்கு......என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அவராகவே ‘அவன் ஒரு ஆட்டிஸம் பேபி,அதானே டீச்சர் சொல்ல வர்றிங்க”’என்றார் குரலை உயர்த்தியபடி.’ஆமாம் ஆனால் ஏன் நீங்க அதை அவன் மருத்துவ சான்றிதழில் குறிப்பிடவில்லை?என்று நானும் என் பாணியில் குரலை உயர்த்தினேன்’இல்லை டீச்சர் ..வந்து .....அது ...’என்று மென்று விழுங்கினார். (எந்த தாயுமே தன் பிள்ளையின் குறையை எடுத்துரைக்க மாட்டார்களே,இது உலக நியதிதானே?)‘தப்பு சிஸ்டர் ,இது மிகப்பெரிய தப்பு,நாளைக்கு அவனுக்கு ஏதும் பிரச்சனை என்றால் பதில் சொல்வது எங்கள் கடமை.எங்களை கம்பி எண்ண வைச்சிருவிங்க போல? என்றேன் நானும் கோபமாக.
ஒரு தாயாக அவர் கண்களில் நீர் . ’மன்னிச்சிருங்க டீச்சர் ,நான் நடந்து கொண்ட விதம் ,பதில் சொல்லியது எல்லாத்துக்கும் மன்னிச்சிருங்க டீச்சர் என்று என் கைகளைப் பற்றிக்கொண்டார். அந்த கணம் என்னாலும் அழுகையை மறைக்கமுடியவில்லை.நம்மால் சிரிப்பு அழுகை இரண்டையுமே அடக்க இயலாது ,அதிலும் இது சொல்ல முடியாத சோகம் ஆயிற்றே?சொல்லவா வேண்டும்.இருப்பினும் கொஞ்சம் முயற்சி செய்து ப்ரோஃபெசன்னலாக பேசி ஆகனுமே? சோ ,பேச்சைத் தொடர்ந்தேன். ’இல்லை சிஸ்டர் அவனுக்கு எங்களால் உதவ முடியுமா என்று தெரியவில்லை,எங்கள் பணியில் எங்களுக்கு சவாலானா ஒரு மாணவன் அவன்’என்றேன்.
என் கைகளைப் பற்றிய தாய் ‘இல்லை டீச்சர் ,உங்கள் அனைவரையும் எனக்கு முன்பே தெரியும் .உங்கள் மேல் உள்ள நம்பிக்கையால்தான் நான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். என் பிள்ளையின் நிலை எனக்கு தெரியும்.அவனுக்கு நீங்கள் மற்ற மாணவர்களைப்போல எழுதப்படிக்க சொல்லிக் கொடுக்க வேண்டாம் , பிற மாணவர்களோடு சேர்ந்து விளையாடட்டும். கெட் டூ கெதெர் , சேரிங் அண்ட் கேரிங் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளட்டும் டீச்சர், என் சைடில் இருந்த எந்த கேள்வியும் உங்களை நோக்கி வராது.என்னால் நிறைய பணம் எல்லாம் செலுத்தி அவனை ஸ்பெசல் பள்ளிக்கூடம் அனுப்ப இயலாது.என்னை நம்புங்கள் டீச்சர்.என் பணியிடத்திலேயே பாலர்பள்ளி உண்டு ஆனாலும் நான் ஏன் இங்கே கொண்டு வந்து சேர்க்கணும் ? உங்கள் மேலும் இந்த பள்ளியின் மேலும் உள்ள நம்பிக்கைதான் டீச்சர்’என்றார்.என் இரண்டாவது பெண்ணையும் உங்களிடம்தானே போட்டேன். ஆனால் அவள் இவன் அளவு இல்லை , இவன் உங்களுக்கு சவால்தான்’என்று தொடர்ந்தார்.
’டீச்சர் நான் இங்கே கிளம்பி வரும்போது என் மூத்த பெண் ‘எங்கேம்மா போறிங்கன்னு கேட்டாள் ?’உன் தம்பியைப்பற்றி டீச்சர் பேசனுமாம்,வேறென்ன அவனை வீட்டுக்கு கூட்டிப்போக சொல்வார்கள் ’என்றேன்.அதற்கு அவள் ’ஏம்மா எனக்கு மட்டும் இப்படி தங்கை தம்பி‘என்று அழுகிறாள்.நான் என்னத்த சொல்லி சமாளிப்பது?” என்றார். நான் இந்த சமயம் வேதனையின் உச்சக்கட்டத்தில் இருந்தேன். ‘ ஒரு கணம் கண்களை மூடினேன். சரி வருவது எதுவாகிலும் சமாளிப்போம் ‘என்று உறுதி கொண்டேன் ஆனாலும் என் சக ஆசிரியைகளின் முடிவும் முக்கியமானதாயிற்றே?அவர்களை நோக்கினேன். என்னைப்போலவே பல சமயங்களில் முடிவெடுப்பவர்கள் அவள்கள் இருவருமே. அப்படி ஒரு டிரெய்னிங்தான்! நான் பேசுவதற்குள் எழுந்த அந்த தாயார், ‘டீச்சர் என் பிள்ளையை இப்போ வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்திட்டிங்களா? அவனுக்கு உதவ மாட்டிங்களா? அவன் இந்த சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டுவிடுவானா” என்று கேள்விகளை என் மேல் வீசினார்.
அவனை கைகழுவி விட நினைத்த எங்கள் எண்ணங்கள் சுக்கு நூறாய் உடைந்தது. நெஞ்சில் அம்பு கிழித்தது போல இருந்தது.என்னிடம் ஒரு குணம் எப்போதும் உண்டு.பிறர் பிரச்சனையில் உன்னை வைத்துப்பார் ,அதன் வலி புரியும் ‘என்பது.அதற்கேற்பத்த்தான் நான் எப்போதும் செயல் படுவேன்.ஆகவேதான் பல நல்ல மனிதங்களை சம்பாதித்து உள்ளேன்.அதேவேளையில்.... , இதனால்தான் ,பணம் சம்பாதிக்க முடியாமல் போனதுவும்!’இல்லை அவன் இருக்கட்டும் ,எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம். அதற்கும் மேல் அவன் இருக்கிறான் ,அவன் பார்த்துக்கொள்வான் ‘என்றேன். என் ஆசிரியைகளைப் பார்த்தேன்’போங்க டீச்சர் எவ்வளவோ பார்த்துட்டோம் ,இது என்ன ?கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும்.இருக்க பழகுவோம்’என்றார்கள். அதுதான் நான் அவளுங்களை பல சமயங்களில் ,என் இடது மற்றும் வலது கை என்று சொல்வதன் ரகசியம்!
கனத்த இதயத்துடன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கணபதியின் கைகளை எடுத்து என் கைகளில் திணித்து விட்டு விடைபெற்றார் அந்த தாய். ஆனால் என் கண்கள் இன்னும் காயவில்லை. என்.ஜீ.ஓ வின் இயக்குனரும் ஒரு மருத்துவ நிபுணர்தான் ,அவரோடு சேர்த்து இன்னும் எனக்கு தெரிந்த சில மருத்துவர்களுக்கு போன் பண்ணி அட்வைஸ் கேட்டேன். இண்டர்நெட்டில் போய் சில தகவல்கள் சேகரித்தேன். வீட்டுக்கு வந்ததும் முகநூலில் ஒரு ஸ்டேடஸ் போட்டேன்.அங்கே என் அருமை நட்புகள் கொடுத்த இணைப்புகள் எனக்கு மேலும் உதவிக்கொண்டிருக்கிறது.
ஒரு மாணவனுக்காக நான் மாணவியாகிறேன். தினமும் கணபதியிடம் ஏதோ ஒன்றை நான் கற்றுக்கொள்கிறேன். அவனுக்காக சில விசயங்களில் மாற்றம் கொண்டு வந்துள்ளேன். பிரம்பு எடுக்காமல் ,கோபப்படாமல் , சகிப்புத்தன்மையை அதிகப்படுத்திக்கொண்டு என்னை மாற்றிக்கொண்டு வருகிறேன்.அது முடியுமா ? அந்த பொறுமை எனக்கு வருமா?இறைவா வரனும், மாறனும் . சமுதாயத்துக்கு அவனை ஒரு சராசரி மனிதனாக கொடுக்க நினைக்கும் என் எண்ணம் ஈடேறுமா? அவன் தாயார் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் ஆனால் என் கண்கள் இன்னும் ஈரமாகவே உள்ளன. ‘கவிப்பேரரசு ‘சங்கீத ஜாதி முல்லை’என்ற பாடல் வரிகளை எழுதும்போது அவர் கண்களில் வழிந்த நீர் காகிதத்தில் வழிந்து அந்த வரிகளை ஈரமாக்கியதாம் ,அதைப்போல இங்கே இதை எழுதும்போது என் கண்ணீரும் கீ போர்ட்டில் விழுந்தன!
"teaching is a life long learning' ...for a sake of ganapathy!
Subscribe to:
Post Comments (Atom)
"teaching is a life long learning' ...for a sake of ganapathy!
ReplyDeleteபடிக்கும் போதே அந்த தாயின் உள்ளமும் உங்களின் நல்லெண்ணமும் மனசுக்குள் அமர்ந்து விட்டது... உங்கள் செயலுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.
இதற்கும் ஒரு சேவை மனப் பாங்கு வேண்டும்
ReplyDeleteநல்ல எண்ணம் நல்ல முயற்சி.கடவுள் ஆசீர்வாதம் செய்வார்.
ReplyDelete