ஆம் ‘ஒரு சின்ன இன்வெஸ்ட் டீச்சர்,போடுங்கள்,கொஞ்சம் லாபம் கிடைக்கும்’என்றார்.பிசினெஸ் ,இன்வெஸ்ட் என்றால் எனக்கு அலர்ஜி என்று தெரிந்தும் ரவி அண்ணா முயற்சி எடுத்தார்.அதன் பலனாகத்தான் ,நானும் என் பிள்ளைகளும் தமிழ்நாடு போக ஒரு வாய்ப்பும் கிட்டியது.ஆகவே என்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் எப்போதும் எனக்கு நல்லதையே செய்வது இறைவன் கட்டளையோ என்னவோ?
நெடுநாட்களாகவே என் ஆன்மீக கனவு ,திருவண்ணாமலை தீபம் பார்த்தே ஆகவேண்டும் என்பது.’தனியாக போனாலே பார்க்கமுடியாது,இதுல பிள்ளைகளைக்கூட்டிக்கிட்டு போய் அவஸ்தைப்பட்டு வரப்போறியா?’என்று கூட சிலர் கேலி செய்தார்கள் ஆனால் நினைக்க முக்தி தரும் அண்ணாமலையான் ,நான் நினைத்ததற்கும் மேலாய் இந்த ஆன்மீக பயணத்தை முடித்துக்கொடுத்தான் என்றுதான் சொல்வேன்!
தமிழ்நாட்டுக்கு நான் போவது ,இத்தோடு பதினோறு தடவைக்கு மேல்,இருப்பினும் முதன்முறையாக நான்,என் பிள்ளைகள்,என் அண்ணி ,அவங்க பிள்ளைகள்,என் அம்மா என ஓர் ஆண் துணை இல்லாமல் போக திட்டமிட்டோம். என்னை நம்பி என் குடும்பமும் அனுப்பி வைத்தனர்.’எப்படி பிள்ளைகளைக்கூட்டிக்கிட்டு அதை(என்னைய)நம்பி போற?’என் அண்ணா அண்ணியிடம் கேட்ட கேள்வி. ‘எப்படி நீ யாரும் இல்லாமல் பிள்ளைகளை(என்னையத்தான் ),நம்பி போகப்போற?அதுவும் திருவண்ணாமலைக்கு?.கூட்டம் அதிகம்,பார்த்து ,கவனம் ,எனக்கு என்னம்மோ பயமா இருக்கு,இது என் தாய்மாமன் ,போலிஸ் அதிகாரி என் தாயிடம் துருவி துருவி கேட்ட கேள்வி. அனைத்துக்கும் என் அம்மா சொன்ன பதில் ‘எனக்குத்தானே இன்னொரு பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கானே!அதுதான் எங்க டிரைவர் அண்ணா ஏகாம்பரம்.அவருக்கும் மேல் என் அப்பன் ஏகாம்பரநாதன் இருக்கானே!
டிசம்பர் மாதம் 2 : ஃப்ளைட். எனக்கோ அந்த வாரம்தான் பல்கலைக்கழக ,இடுபணிகள் ,ஓரிரு இறப்பு செய்தி என ஒரே டென்சன்.கிளம்பும் அந்த வாரம் நான் தினமும் விடியற்காலை ஒருமணிக்குதான் தூங்குவேன்.டிசம்பர் 1 அனைத்து அசைண்ட்மெண்ட்களையும் அனுப்பியாக வேண்டும்.என் மகனின் இடைநிலைப்பள்ளியில் பதியவேண்டிய இறுதி நாளும் அன்றுதான்.நல்லவேளையாக என் மகள் ,சில முக்கிய பொருட்களை என்னிடம் கேட்டு கேட்டு லிஸ்ட் போட்டு வைத்து லக்கேஜில் போட்டு வைத்தாள்.
டிசம்பர் 2:
அந்த நாளும் வந்தது.விமான நிலையத்தை அடைந்தேன்.சின்ன அண்ணாவின் பசங்க மூணு பையனும் அவனுங்க அம்மாவோடு வந்தானுங்க.பெரிய அண்ணனின் பொண்ணு மட்டுமே எங்களோடு வந்தாள்.என் இரண்டு பிள்ளைகள் என மொத்தம் ஆறு பிள்ளைகள்.இரண்டு அண்ணாக்களும் எங்களிடம் அன்பாக ஏதும் சொல்லி அனுப்புவாங்க என்று நினைத்தால்,ரெண்டும், சாரி தம்பியும் சேர்ந்துக்கிட்டு மூணு பேரும் ,’தோ ..பாருங்க ,நீங்க ரெண்டு பேரும் ,ஆறு பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு போறிங்க,பிள்ளைகளுக்கு ஏதும் பிரச்சனைன்னா ,அங்கேயே இருந்திடுங்க, இங்கே வந்திடாதிங்க’என்று என்னம்மா ஒரு தைரியம் சொல்லி அனுப்பி வச்சாங்க ஏர்போர்ட்டில்?
அதுக்காகவே நான் ரொம்ப டென்சனாகவே இருந்தேன்.ஏர்போர்ட்டில் நுழைந்து உள்ளே போய் இமிக்ரேசன் தாண்டும் வரை போன் மேல போன் கால்ஸ். ‘போயாச்சா?எதும் பிரச்சனையா? என்ன ஆச்சு?ஒரு வழியா எல்லாத்தையும் கடந்து விமானத்தில் ஏறி உட்கார்ந்தேன். பசங்க முதன்முறையாக விமானம் ஏறுவதால்,அவர்களின் ஆர்ப்பாட்டத்தை ரசித்துக்கொண்டே வந்தேன்,இருந்தாலும் பாதுக்காப்பாய் போய்ச்சேர அமைதியாக பிரார்த்தனை செய்து கொண்டே வந்தேன். பல தடவை ’,மோசமான பருவ நிலை,தயவு செய்து பாதுகாப்பு பெல்ட்டை அணியுங்கள்’என்ற அறிவிப்பும் பயமுறுத்திக்கொண்டே வந்தது.ஆனாலும் மிக சிறப்பாய் விமானிகள் எங்களைத் தரையிறக்கினர்.
(கே.எல்.ஐ.ஏ.விமான நிலையம்)
திருச்சி அனைத்துலக விமான நிலையத்தைப் போய்ச்சேர்ந்தோம்.வழக்கம்போல எனக்கும் மட்டும் ‘நீனோ,நீனோ ‘ஓசை அந்த ஸ்கேன்னிங் நுழைவாயிலில் ஒலித்தது,இது எனக்கு ,ஒவ்வொருமுறையும் விமானம நிலையத்தில் ஏற்படும் சாதாரணம் ,ஆனால் விமான நிலையத்தில் என்னை ஒரு தீவிரவாதிப்போல பரிசோதிப்பதுதான் அசாதரணமாய் இருக்கும்!இன்றுவரை எனக்கு ஏன்னு புரியவில்லை
எல்லாம் முடிந்து வெளியே வந்தோம்.ஏகாம்பரம் அண்ணா காத்துக்கொண்டிருந்தார்.ஓடி வந்து அம்மாவின் கைகளைப்பற்றிக்கொண்டு ’அப்பாடா,ஆச்சிம்மாவை(என்னை அப்படித்தான் அழைப்பார்கள்)நம்பி வந்து சேர்ந்திட்டிங்கம்மா, எனக்கு ஒரே பயமாகவும் பதற்றமாகவும் இருந்துச்சி ’என்றார்.(அவருக்கும் என் மேல் அப்படி ஒரு நம்பிக்கை??)சரி இன்று எங்கும் போக வேண்டாம்,திருச்சியில் ரூம் போட்டிடலாம்’என்று அண்ணா முடிவெடுத்தார்,காரணம் காலை போகவேண்டிய விமானம் மாலை 2மணிக்கு தாமதமாக மாற்றம் செய்யப்பட்டதால்,அன்றைய திட்டம் எல்லாம் கான்செல்.
(தஞ்சை பெரிய கோவிலில் பார்க்க நிறைய இருந்தும் , என் பிள்ளைகளோடு நான் பார்த்த பல்லிகள்)
(மாயவரம் ,வயலில்)
டிசம்பர் 3:
மறுநாள் நல்லா தூங்கி எழுந்து ,பசியாறிவிட்டு ,வண்டி தஞ்சையை நோக்கிப்புறப்பட்டு ,கும்பகோணம்,மாயவரம் திருவையாறு,வைத்தீஸ்வரர்,சீர்காழி,சிதம்பரம் என எல்லாம் முடிந்து பாண்டிச்சேரியில் தங்கினோம்.ரொம்ப இரவில் போய்ச்சேர்ந்ததால்,ஹோட்டலில் சாப்பாடு தீர்ந்துபோய் கொஞ்சம் சிரமத்துடன் தூங்கினோம்.
டிசம்பர் 4:
மறுநாள் காலை,இந்த ஆன்மீகபயணத்தின் மிக முக்கிய அங்கமான ’திருவண்ணாமலை தீபம்’ பார்க்க கிளம்பினோம்.வண்டி தாமதமாக வந்தால்,உள்ளே நுழையவிடமாட்டார்கள்,சோ அவசராவசரமாய் கிளம்பி டீக்கடையில் ஒரு காப்பியோடு முடித்துக்கொண்டு அண்ணாமலையாரை நோக்கி ஓடினோம். சேஷாஸ்திரி ஆசிரமத்தில் நாங்கள் முன்பே கேட்டிருந்தபடி இரண்டு அறைகள் எங்களுக்கு கிடைத்தன.பசங்களுக்கு ஒரே மகிழ்ச்சி! அழகியபூங்கா போல அந்த ஆசிரமம். ஹோட்டலில் அடைப்பட்டுக்கிடந்த பசங்களுக்கு அந்த ஆசிரம் ரொம்ப புடிச்சிப்போயிருந்தது.அதுக்கும் மேலே எனக்குப் புடிச்சிருந்தது,காரணம் ஒருநாள் முழுவதும் இடைவிடாத அன்னதானம்!இறையும் ,இரையும் ஒருங்கே கிடைக்கப்பெற்றால்,கேட்கவா வேணும்?
(சேஷாஸ்திரி ஆசிரமத்தில்)
காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் ஆசிரமத்தை அடைந்தோம்.சக ஆசிரியைகள் அனைவரும் (3 ஆசிரியைகள்)அங்கே சந்திப்போம் என திட்டமிட்டோம்.ஆனால் எல்லோராலும் வர இயலவில்லை. எப்போதும் என்னுடனே இருக்கும் என் தோழி சிவனேஸ்வரி மட்டுமே அவள் கணவர் ,பிள்ளைகளுடன் ஆசிரமத்தைத் தேடி வந்து சேர்ந்தாள். மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்? பகலெல்லாம் ஒரே கொண்டாட்டாம்.
மாலையில் தனியாக பிரிந்து கிரிவலம் சென்றோம். ‘டீச்சர் ,என் நண்பர் மேஜர் , சென்னையில் அவருடைய போலிஸ் நண்பருக்கு நாம் இங்கு வருவதாக சொல்லியிருக்கிறார், அவர் சொன்னபடி நமக்கு வி.ஐ.பி பாஸ் கிடைத்தால்,அவசியம் இரவில் கிளம்பிவிடலாம்,பரணி தீபம் ஏத்துவாங்க,அதைப்பார்க்க கொடுத்துவைக்கனும் ,சோ எங்கிருந்தாலும் இரவு 11 மணிக்கு போன் பண்ணுங்கள்,போகலாம் ‘என்றார்.’இதெல்லாம் நடக்குமா?இந்த வருசம் தீபம் பார்க்க சுமார் 30 லட்சம் பேர்,அதில் 5 லட்சம் மலேசியர்கள்’என்ற செய்தியைக் கேட்டவுடன் எனக்கு அந்த நம்பிக்கை போய்விட்டது!
சரி வந்தாச்சு கிரிவலம் செய்திடலாம் ‘என்று தொடங்கினோம். தீபத்துக்கு முதல் நாள் என்பதால் ,கூட்டம் குறைவு ,மேலும் மாலை வேளை என்பதால் அவ்வளவு சிரமம் இல்லாமல் ஒருவழியாக சுற்றி வந்தோம்.பிள்ளைகள் ரொம்ப எஞ்சாய் பண்ணிக்கொண்டு கிரிவலம் செய்தார்கள்.மாலை 5 மணி தொடங்கி இரவு 10.30 மணிபோல கோயிலை அடைந்தோம். கால்வலி ஒருபக்கம் ,இருந்தாலும் எந்த தடங்கலும் இல்லாமல் கிரிவலம் செய்ததில் அளவில்லா மகிழ்ச்சி.
எப்போடா ஆசிரமத்தை அடைவோம்,படுக்கையில் விழலாம் என ஓட்டமும் நடையுமாய் ஆசிரமம் வந்து சேர்ந்தால்,தோழியும் அவ கணவன் திரு,குமரக்கண்ணனும் ‘சீக்கிரம் டீச்சர்,சொன்னபடி பாஸ் கிடச்சிருக்காம்,வாங்க போகலாம். வாய்ப்பிருந்தால் உள்ளே போகலாம்,இல்லைன்னா திரும்பிடலாம் ‘என்றார்கள்.’அண்ணாமலையாரே !இது என்ன சோதனை?என்னால் இனி நடக்க முடியுமா?’ என்று மனதை தேத்திக்கொண்டு சென்றேன்.
இரவு மணி 12 இருக்கும். கடமையில் இருந்த போலிஸ் அதிகாரிகள் ரொம்ப ஸ்டிரிக்ட்டா பணியில் இருந்தார்கள். தோழியின் கணவர் ,அவர் போலிஸ் நண்பரின் பெயரைச் சொல்லி உள்ளே போக அனுமதி கேட்டும் விடவில்லை.அந்த உயர் அதிகாரி போனில் பேசியும் அதிகாரிகள் விடவில்லை.’ நாம் இன்னிக்கு நுழைய முடியாது ‘என்று மனதில் நினைத்துக்கொண்டு ஒரு ஓரமாய் நின்றுகொண்டிருந்தபோது’ சீக்கிரம் வாங்க’என்று தோழியின் கணவர் அழைக்க திரும்பிபார்த்தேன்,ஒரு கலையான முகம்.அவரைப்போலிஸ் அதிகாரி என்று கூறவே முடியாது.அப்படி ஓர் ‘ஹம்பல்’ . அவர் அங்கே பணியில் இருந்த அதிகாரிகளிடம் ஏதோ கூற ,எங்களை உள்ளே அனுமதித்தார்கள்.
அங்கே போன போது ,xxxxxxx டிவியைச் சேர்ந்த திரு.மாரியப்பன் ,அவருடன் சில போலிஸ் நண்பர்கள் ,பிசினெஸ்மேன் என்று தோழியின் கணவரை வரவேற்க ஒரு ஐந்துபேர் கொண்ட குழு. என்னை அவர்களிடன் தோழியின் கணவர் ‘இதுதான் என் சிஸ்டர் செல்வி’என்றார். ராஜமரியாதை அங்கிருந்து ஆரம்பம்.’கூட்டம் ஜாஸ்திதான் சிஸ்டர் ,பார்த்து எப்படியும் முட்டி மோதி பின்னாலே வந்திடுங்க ‘என்று அந்த குழு எங்களை மிக கவனமாக உள்ளே கொண்டு சேர்த்தனர்.
ஆனாலும் சாமி தரிசனம் ,பரணி தீபம் பார்க்கமுடியாது போல’என்று நானும் தோழியும் முடிவெடுத்தோம் ,அப்படி ஒரு நெரிசல்.”கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் விட்டனர்”என்று பத்திரிக்கையில் படித்ததுண்டு,அது எங்களுக்கு நேர்ந்து விடுமோ?என்று நான் உண்மையில் பயத்திலேயே இருந்தேன்.ஆனாலும் எங்களை அந்த குழு விடவில்லை. குமரக்கண்ணாவின் போலிஸ் நண்பர்,’அம்மா இவ்வளவு தூரம் வந்தாச்சு, எப்படியும் சாமி தரிசனம் பார்க்கலாம் என்று ரிஸ்க் எடுத்து கடமையில் ஈடுப்பட்டிருந்த ஓவ்வொரு ’கேட்’களிடிலும் உள்ள அதிகாரிகளின் காதில் ஏதோ சொல்ல அவர்களும்,தடையின்றி உள்ளே விட ,இறைவா இறுதியில் நான் ‘அண்ணாமலையாரின் கருவறை முன்!!சிவ..சிவா!இது கனவா?இத்தனை லட்ச மக்களில் நான் உன் சந்நிதானம் வந்துவிட்டேனா?ஒரு முறை என்னைக் கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்.
சாமி தரிசனம் பார்த்து ,கீழே இறங்கிய எங்களை மீண்டும் அந்த நண்பர்’இருங்கம்மா ,பரணி தீபம் பாருங்க’என்று சொல்லி ,அங்கே உள்ள கூட்ட நெரிசலில் ‘மலேசியாவில் இருந்து வந்திருக்காங்கப்பா,கொஞ்சம் இடம் விடுங்கள்’என்றார்.இறைவா! ,கூட்டத்தில் சில நல்ல உள்ளங்கள், எங்களை முன்னே போகச்சொல்லி வழி விட ‘ஐம்பூதங்களின் வடிவாக பரணி தீபங்களையும் கண்டோம்.என்ஆன்மீக கனவு நனவான மகிழ்ச்சியில் திளைத்துப்போனேன்.என் ஜென்ம பலன் அடைந்த மகிழ்ச்சி.ஓர் இரவு போய் பொழுதும் விடிந்தது.
டிசம்பர் 5:
காலை கோவிலை விட்டு வெளியே வந்தோம்.அந்த நண்பர்கள் குழு ,எங்களை டீ சாப்பிட அழைத்தார்கள்.உண்மையில் எனக்கு பசியே இல்லை ஆனாலும் மரியாதை நிமித்தம் தோழியும் நானும் அவ கணவரோடு சென்றோம். ’சரி இது முடிந்து கிரிவலம் ,கிளம்புங்க சிஸ்டர் ‘என்றார் நண்பர் மாரியப்பன். ‘ஐயோ அண்ணா!நான் மயக்கம்போட்டு விழுந்திடுவேன்,என்னை விட்ருங்க’இதுவரை போய் வந்ததே போதும் போதும் ‘என்றேன்.
சிரித்துக்கொண்டே ’சரிம்மா, அப்படின்னா மாலையில் குடும்பமா வாங்கம்மா,மகர தீபம் பார்க்கலாம்’என்றார்கள். கொஞ்சமும் களைப்பு இல்லாததைப்போல ஓர் உணர்வு.எங்களை ஆட்டோவில் ஏற்றிவிட்டு ,ஆசிரம முகவரியையும் சொல்லி ‘ஒழுங்கா கொண்டு போய் சேர்த்திருப்பா ‘என்று அந்த நண்பர்கள் குழு அனுப்பிவைத்துவிட்டு அவர்கள் கிரிவலம் சென்றனர். மாலையிலும் வி.ஐ.பி பாஸ் வைத்து ரொம்பவே சிரமப்பட்டு எங்களை உள்ளே அனுமதித்தார்கள்.வி.ஐ.பி கூடியிருந்த இடத்தில் எங்களை உட்கார வைத்தார்கள்.
அருமையான கச்சேரி ஒருபுறம், மேளமுழக்கம் மறுபுறம், மாலை நேரம் ஆக ஆக,திருவண்ணாமலை கோயில் ஏதோ சொர்க்கவாசல் போல் காட்சியளித்தது. கெட்டிமேளம்,இசைமுழக்கம் ......கோவில் வாசலில் தயாராய் இருந்த மகரதீபம் ஏற்றப்பட்டது. அதே நொடியில் மலையில் தீபம் இருளைக்கிழித்துக்கொண்டு எரிந்தது. ‘அண்ணாமலையாரே ...சொல்ல வார்த்தைகள் இல்லை,ஒரே பக்தி முழக்கம் . திருவண்ணாமலைக்கு தீபம் அன்றுதான் தீபாவளியாம்!வானவெடி,பட்டாசு என சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாத ஒலியில் ஒளியும் !கண்கள் பனித்தன. எதைப்பார்க்க வந்தேனோ,அதைக்காட்டினான் .தன்னையும் காட்டினான்.
அண்ணாமலையான்! இறைவா....!இது போதும்..!சொல்ல வார்த்தைகள் இல்லை.இதுவன்றோ பேரானந்ந்தம். சுமார் இரண்டு நாட்களாக எங்களுக்காகவே சிரமப்பட்ட அந்த காவல்துறை அதிகாரி மற்றும் அவர் தம் குழுவினருக்கும் என்ன கைமாறு செய்யப்போகிறோமோ?இங்கேயும் இறைவன் எஙகளுக்கு நல்லவர்களையே அறிமுகப்படுத்திவைத்தான் என்று ஆயிரம் முறைகூட சொல்வேன்.
இறுதியில் சேஷாஸ்திரி ஆசிரமத்தின் செக்டரியைக் கண்டு இரண்டு நாள் வாடகையைச் செலுத்தப் போனேன்.’ஐயா நான் இன்னும் எவ்வளவு பணம் கொடுக்கனும் ?என்றேன்.தோழியின் கணவரும் வந்தார். ‘அம்மா நீங்க பத்து ரூபாய் கொடுத்தால் கூட ,எடுத்துக்கொள்வோம்.கொடுக்கும் பக்குவம் உங்களுக்கும் ,அதை சரியான முறையில் செயல்படுத்தும் பக்குவம் எங்களுக்கும் இருந்தால் போதுமே,இறைவன் நம்முடனே இருப்பான்,(????????? )உருப்படும்’என்று ரொம்ப நேர்மையாக பேசினார். பக்தியை வியாபாரமாய் நடத்தும் ஒரு சில சாரார் மேல் அவருக்கு ரொம்ப கோபம் என்பது தெளிவாய் புரிந்தது.
என் நெற்றிப்பட்டையும் ,கழுத்தில் உருத்திராகமும் ,அவருக்கு ரொம்ப பிடித்ததோ என்னவோ? ‘உங்களளைப் பார்த்தால் பக்திமயமாக இருக்கும்மா,இந்த சின்ன வயசில்????(என்னையத்தான்),எங்க ஊரில் இப்படி நெற்றிப்பட்டை,கழுத்தில் உருத்திராகம் அணிய மாட்டார்கள் ‘என்றார்.என்னைப்பார்த்து’இந்த சின்னவயசில்’என்று சொல்லும்போது,(அவர் கண்ணாடி அணிந்திருந்தார்) . இங்கே இப்படியெல்லாம் பெண்கள் இருப்பது ரொம்ப குறைவும்மா’என்றார்.
’இங்கே வருடா வருடம் அன்னதானம் கொடுப்போம்.அதற்கு பொருட்கள் கொடுத்தாலும் போதும்,பணம்தான் கொடுக்கவேண்டும் என்றில்லை ‘என்றார். அதைக்கேட்டவுடன் ,நான் கொடுக்க நினைத்த தொகையை விட அதிகம் கொடுத்துவிட்டு கிளம்பினேன்.இங்கேயும் ஒரு நல்லவர்!தமிழ்நாட்டில் ,கோவில்களில் தற்போது பக்தி எல்லாம் வியாபரமாய் போய்விட்ட நிலையில் திருவண்ணாமலையில் ஒரு அஞ்சி பைசா கூட வாங்காமல் ,வி.ஐ.பி பாஸ் வைத்து சாமி தரிசனம் போய் வந்ததை யாரிடம் சொன்னாலும்,நம்ப மறுக்கின்றனர்.ஒரு சிலர் மட்டுமே ‘அதற்கு புண்ணியம் செய்திருக்கனும் டீச்சர்!அது எல்லோருக்கும் கிடைக்காது’என்றும் கூறினர்.
(மலையில் தீபத்த்தைக்கண்ட மகிழ்ச்சியில்)
டிசம்பர் 6:
மறுநாள் ,அங்கிருந்து கிளம்பி கொடைக்கானல் சென்றோம்.அம்புட்டு குளிர்.பசங்க ,அந்த இரவே அங்கிருந்து போகலாம் என்று குளிரை வெறுத்தனர்.ஓரிரவு தங்கி,காலையில் எழுந்து படகு,குதிரை சவாரி என்று முடித்துக்கொண்டு பழனியை வந்தடைந்தோம்.பழனியில் என் மகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்தேன். அதை உடன் இருந்து செய்து கொடுப்பதாக கோவை பேரூர் மடத்தைச் சேர்ந்த முனைவர் ஜெயப்பிரகாசம் ஐயா அவர்கள் மலேசியாவுக்கு வந்தபோதே கூறிச்சென்றார். ஐயா அவர்கள் சொன்னது போல எங்களுக்கும் முன்பே கோவையில் இருந்து ,இரண்டு மணி நேரத்துக்கு முன்பே பழனியில் காத்திருந்தார்.
(படகு சவாரியில்)
டிசம்பர் 7:
பழனியைச் சேர்ந்தவுடன் , ஐயா ஓடோடி வந்து நலம் விசாரித்து,என் மகனை அழைத்துக்கொண்டு ,முடியிறக்கச் சென்றார். பின்னர் ,சரவண பொய்கை தீர்த்தத்தில் நீராட வைத்து ,அவனுக்கு காது குத்த அழைத்துச் சென்றார்.எல்லாம் சிறப்பாக நடந்தேறியது. மலைக்குச் சென்றோம்.சாமி தரிசனம் முடிந்து ,தங்கத்தேர் புறப்பாடு எல்லாம் முடிந்து , முனைவர் ஐயா எங்களை அவர் ஊரில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
(பழனியில் என் மகன்)
(பழனி சாமி தரிசனம் பார்க்க வரிசையில்)
அன்புக்கு பஞ்சமில்லாத அவர் பெற்றோர்கள்,உறவினர்கள் என பலரும் எங்களை வரவேற்று உணவளித்தனர். அருமையான கிராமிய வீடு. மயில்கள் அகவும் ஓசை,பறவைகளின் ஓசை. பலவருடங்களுக்குப் பிறகு அப்படி ஒரு சூழலை அனுபவித்தேன்!எங்கள் பிள்ளைகளுக்கு அது மிக மிக புதிய அனுபவம். அன்றிரவு ரொம்ப நிம்மதியாய் தூங்கி எழுந்தேன். அன்று காலை அடியேனும் சேர்ந்து காலை உணவைச் சிறப்பாக தயார் செய்தோம்.’மலேசியா திரும்பும்வரை அங்கேயே தங்கிவிடலாம்’ என பிள்ளைகள் நச்சரித்தனர். ஐயா அவர்கள் சில முக்கிய வேலையாக பாண்டிச்சேரி செல்வதால் ,நாங்களும் அங்கிருந்து புறப்பட்டோம். ‘நான் இல்லாவிட்டால் என்னம்மா?அதான் பெற்றோர்கள் ,பசங்க எல்லாம் இருக்காங்களே?,ரெண்டு மூணுநாள் தங்கிட்டு போங்கம்மா ‘என்றார். இன்னும் நிறைய இடம் போகவேண்டியதால் ,கிளம்ப மனமின்றி புறப்பட்டோம்.
(ஜெ.பி.ஐயாவின் கிராமத்து வீட்டில்)
டிசம்பர் 8
ஐயா அவர்கள் எங்களைப் பேரூர் மடம் வரை வந்து,இளையபட்டம் ,அடிகளாரைச் சந்திக்க செய்து பிறகு ,பேரூர் மடத்தின் திருத்தொண்டர் சீனிவாசன் அண்ணாவிடம் எங்களை ஒப்படைத்துவிட்டு விடைபெற்றார். சீனிவாசன் அண்ணா , ஜெயப்பிரகாசம் ஐயாவுடன் அடிக்கடி மலேசிய ஆசிரமத்துக்கு வந்துபோவதால்,அவரும் நன்கு பழக்கமானவர்.’எப்போம்மா ,அடுத்து கோயம்புத்தூர் வருவீங்க,உங்களுக்காக நாங்க சேவை செய்ய காத்திருக்கிறோம்’என அடிக்கடி சீனி அண்ணா இங்கே வரும்போதெல்லாம் கேட்பார்.
அவர் காத்திருந்த நாளும் வரவே, பெரிய பெரிய ப்ளான் எல்லாம் போட்டு எங்களைத் திக்குமுக்காட வைத்தார்.பகலில் பேரூர் ஆதினத்தின் பெரிய அடிகளாரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்.அடிகளார் அவர்களுக்கு அண்மையில்தான் 90-ம் அகவை விழா செய்தார்கள்.அந்த விழாவில் அடியேனால் கலந்து கொள்ளமுடியவில்லையே என்று ரொம்பவும் வருந்தினேன்.தமிழ்நாடு வந்தால் ,அவசியம் ஐயாவிடம் ஆசிர்வாதம் வாங்கவேண்டும் என ஏங்கினேன்.இவ்வளவு சீக்கிரம் அதுவும் நிறைவேறும் என்று நினைக்கவே இல்லை!அந்த ஆசையும் நிறைவேறியது.பல வருடங்களுக்கு முன் மலேசியாவில் நடந்த நிறைய விசயங்களைப்பற்றி அடிகளார் எங்களிடம் கேள்விகள் கேட்டார். 90 வயதிலும் அடிகளாரின் ஞாபக சக்தியைக் கண்டு வியந்து போனேன்.
(பெரிய சாமியின் இல்லத்தில்)
டிசம்பர் 9 :
சீனிவாசன் அண்ணா,எங்களுக்காக புக் செய்திருந்த ஹோட்டலில் தங்கி நன்கு ஓய்வெடுத்தோம்.அண்ணா எங்களை கவனித்துக்கொண்ட விதம் ,ஒட்டுமொத்த கோயம்புத்தூர் மக்களும் அன்பானவர்கள் என்று கூறாமல் இருக்கமுடியாது.அப்படி ஓர் அன்பைக்கண்டேன்.மடத்தில் உள்ள தொண்டர்கள்,காலேஜ் பசங்க என என்னைச் சுற்றிலும் அன்பே உருவான சிவனடியார்கள்.அன்பே சிவம்!வேறென்ன சொல்ல?
மறுநாள் காலையில் கோவைக்குற்றாலம் அழைத்துச் சென்றார்.பசங்க ரொம்ப எஞ்சாய் பண்ணின இடம் அங்கேதான்.அருமையான நீர்வீழ்ச்சி.மூலிகை மணம்.இயற்கைத்தாயின் கஞ்சத்தனமில்லாத கொடுப்பனை அந்த இடம்.!
(கோவை குற்றாலம்)
(மருதமலை)
கோயம்புத்தூரை நன்கு சுற்றிக்காட்டினார் சீனி அண்ணா. மதியம் இளையபட்டம் மருதாசல அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க, ஐயோவோடு உணவு அருந்தினோம்.அடிகளார் ஆசிரமம் வந்தால் ,அடியேனுக்கு உணவு பறிமாறும் வாய்ப்பு கிடைக்கும்.பேரூர் மடத்திலும் அந்த வாய்ப்பை எடுத்துக்கொண்டேன்.மாலையில் மருதமலைச் சென்றோம்.முனைவர் ஐயாவின் நண்பர் ஓதுவார் ,எங்களை கியுவில் நிற்கவிடாமல் ,சிலநொடிகளில் சாமி தரிசனம் காண அழைத்துச் சென்றார்.அழகுக்கு முருகன்,மருதமலை முருகனின் கோலம்.....கோத்துச் சொல்ல வார்த்தைகள் இல்லை!
இறுதியாக கோவையை விட்டும்,பேரூர் மடத்தை விட்டும் வெளியேற மனமில்லாமல் விடைபெற்றோம் ,மதுரைக்கு வண்டி பாய்ந்தது.கோயம்புத்துர் மக்களின் அன்பு ,அது சொல்லால் சொல்லமுடியாதவை. எனக்கு ரொம்ப புடிச்சிப்போனது அவர்களின் பாஷை!’என்ன கண்ணு, எண்ற வீடுங்க அது!இரவோடு இரவாக மதுரை நகரை அடைந்தோம். ஹோட்டல் போய்ச் சேர்ந்தும் தூக்கம்தான்.
டிசம்பர் 10:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம். பசங்களுக்கு சொக்கநாதரின் திருவிளையாடல்களை விளைக்கி கூறிக்கொண்டே வந்தே.இடை இடையே நிறைய கேள்விகள் கேட்டானுங்க.பிளிஸ் கேள்வி கேட்பது சுலபம் ,சரியா பதில் சொல்வது எம்புட்டு சிரமம் தெரியும்ல?பழ ஜூஸ் அருந்திவிட்டு , அருமையான ஹோட்டல் ஒன்றில் மதிய உணவு.மதுரை டவுனை சுற்றிவிட்டு ,ஹோட்டல் வந்து ,திருச்சிக்குப் புறப்பட்டோம்.
(மதுரை கோபுர தரிசனம்)
டிசம்பர் 11:
திருச்சியில் சில கோவில்களைச் சுற்றிப்பார்த்தோம்.இம்முறை நான் உச்சிப்பிள்ளையார் மலைக்குச் செல்லவில்லை. படி ஏற கஷ்டப்பட்டுக்கொண்டு கீழிருந்து பிள்ளையாரை வணங்கிகொண்டேன்.டிரைவர் அண்ணா பசங்களை அழைத்துக்கொண்டு போய் வந்தார்.போனமுறைச் சென்றபோது சில விசயங்கள் திருவெறும்பூர் கோவிலில் ரொம்ப பிடித்திருக்கவே மீண்டும் அந்த கோவிலுக்குச் சென்றோம்.கொஞ்சம் ஷாப்பிங் எல்லாம் முடிந்து இரவில் ஹோட்டல் திரும்பினோம்.அன்று இரவு ஜெ.பி ஐயா அவர்கள் எங்களுக்கு ம்ன்பே (ஆசிரம் ஆண்டு விழாவுக்காக)மலேசியா புறப்படவிருந்தார்.அவரை திருச்சி ரயில் நிலையத்தில் அழைத்துக்கொண்டு ஏர்போர்ட்டில் அனுப்பிவைத்து நள்ளிரவில் ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.
டிசம்பர் 12 :
காலையில் எழுந்து கொஞ்சம் பாக்கி இருந்த ஷாப்பிங் செய்தோம்.பணம் இருந்தால் நேரம் இருக்காது.நேரம் இருந்தால் பணம் இருக்காது.எனக்கு இம்முறை பணம் இருந்தும் ஷாப்பிங் செய்ய நேரம் இல்லை.மதிய உணவை முடித்துக்கொண்டு வழக்கம் போல் கண்ணீருடன் டிரைவர் அண்ணாவிடம் விடபெற்று மலேசியா வந்து சேர்ந்தோம்.விமான நிலையத்தில் அண்ணாக்களிடம் அவுங்க பிள்ளைகளை சேஃப்டியாக ஒப்படைக்கும் வரை எனக்கு உயிரே இல்லை என்று சொல்லலாம்.
(பை..பை)
அண்ணா அனைவரையும் அழைத்துக்கொண்டு ,ரெஸ்ட்டாரன்ண்டில் உணவு வாங்கி கொடுத்துச்சி.எல்லாம் நல்லபடி நடத்திக்கொடுத்த இறைவனுக்கு நன்றிகள் கூறி ,என் வீடு திரும்பினேன்.இதில் பெரிய சோகம் என்னவென்றால்,மறுநாள் நான் காலையில் எழுந்து அவசியம் பல்கலைக்கழகம் சென்றாக வேண்டும்.
கொஞ்சம் நில்லுங்கள்......விடைபெறும் முன்,இங்கே நான் சிலரிடம் பகிரங்க மன்னிப்புக்கேட்கவுள்ளேன்.’தமிழ்நாடு வருகிறேன்’ என்று வாலில் எழுதியவுடன் ,பல நட்புகள் என் இன்பாக்சில் வந்து போன் நம்பர் கொடுத்து என்ன உதவிகள் வேண்டுமானாலும் அழைக்கச் சொல்லி சொன்னார்கள்.சிலர் என்னைச் சந்திக்க வருவிங்களா?போன் பண்ணுங்க பேசலாம் ‘என்றெல்லாம் கேட்டிருந்தார்கள்.
முகநூல் நட்புக்களை சந்திக்க நம் வீட்டில் எப்போதுமே அனுமதி கிடைத்ததில்லை. பிறகு டிரைவர் அண்ணா மற்றும் நிறைய நல்ல நண்பர்கள் உடன் இருந்தமையால்,எந்த உதவிக்கும் பிறரை அழைக்க வாய்ப்பில்லாமல் போனது.ஆகவே நான் ஒருவரைச் சந்தித்து ,ஒருவரைச் சந்திக்காமல் இல்லை.யாரையும் போனில் தொடர்பு கொள்ளவில்லை,சந்திக்கவும் இல்லை என்ற உண்மையைக் கூறிக்கொள்கிறேன்.பலர் என் மேல் கோபமாக இருந்தது,என்னை நட்பில் இருந்து எடுத்தது, இன்னும் என் மேல் கோபமாக இருப்பதுவும் ,எனக்கு புரிகிறது.என்ன செய்ய?என் சூழ்நிலை இதுதான்!அடுத்த முறை அனுமதியும் தேவையும் கூடவே வாய்ப்பும் ஏற்பட்டால் அவசியம் கூப்பிடுவேன்.
நன்றி வணக்கம்!
எங்கள் டிரைவர் அண்ணாவுடன் அடிகளார்