Friday, 4 November 2016

அதனை அதுவாக ஏற்றுக்கொள்ள......

           மழலைக்கல்வி ஆசிரியையாக பொறுப்பேற்று சுமார் 12 வருடங்கள் ஆகிவிட்டன.அந்த வகையில் பல பிரச்சனைகளை கண்டும் கேட்டும் தீர்த்தும் வைத்துள்ளேன்.பலருடைய குடும்ப கதைகள்  ,சொந்த கதை ,நொந்தக்கதை, சோககதைகள்  என நிறைய  கேட்டு காது புளிச்சிப்போனதுதான்ன மிச்சம்.'கணவனுக்கு காதலி இருக்காங்க டீச்சர் , மாமியார் கொடுமை டீச்சர் , பணப்பிரச்சனை டீச்சர் ,மனப்பிரச்சனை டீச்சர் ,கணவனுக்கு நோய் ‘, இப்படி பல பிரச்சனைகள்  கேட்டிருக்கிறேன்!
          இரண்டு வருடங்களுக்கு முன், ஒரு மாணவன் பள்ளியில்  சேர்ந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது ,அவனிடம் ஏதோ ஒரு குறை இருப்பது.நான் ஆசிரியை என்பதால் என்னால் அவன் குறையைக்கண்டுபிடிக்க முடிந்தது என்று சொல்வதை விட , அக்கா பிள்ளைகள்,அண்ணா பிள்ளைகள்,சித்தப்பா பிள்ளைகள் ,அதற்கும் மேலாக ஒரு தாயாக என் இரு பிள்ளைகளையும் வளர்த்த அநேக அனுபவங்கள் இருந்தபடியால் ஒரு குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் ,அதன் வெளித்தோற்றத்தில் உள்ள குறைகளை ஓரளவு கண்டு கொள்ளமுடியும்.அந்த வகையில் அந்த பையனின் குறையை கண்டு கொண்டேன்.ஆனால் அவனின் தாய் ,அவனைப்பற்றி எதையும் என்னிடம் கூறாமல் ,'டீச்சர் அவனுடன் நான் இரண்டு மூன்று உடன் இருக்கிறேன்,அவன் முதன் முதலாக வெளியுலகத்திற்கு வந்திருக்கான்,இன்னமும் டாய்லெட் எல்லாம் போகாத தெரியாது'என்று காரணங்கள் கூறினார்.'சரி 'என்று அனுமதி கொடுத்தேன்.
                                                                             
              பையன் ஓர் இடத்தில் உட்க்காரவே மாட்டான் .வகுப்பறையைச் சுற்றி சுற்றி வருவான். ஆனால் அவன் அம்மா அவனை ரொம்ப சிரமப்பட்டு  வகுப்பில் கவனம் செலுத்த வைப்பார்.அவர் கேட்டுக்கொண்ட கால அவகாசம் முடிந்து ,பையனை எங்களிடம் விட்டு விட்டு வேலைக்குச் சென்றார்.அந்த நாளில் இருந்துதான் அவன் சராசரி பிள்ளை இல்லை என்பதை தெரிந்துகொண்டோம். 5 வயது பையன் ,சரியாக பேசவரவில்லை.டாய்லட் போவதென்றால்,அவனாக ஆடைகளை அனைத்தையும் கழற்றி ,அம்மணமாக நிற்பான்.பிறகு டாய்லட் ஓடுவான் .எழுதுவதற்கு பென்சிலைக்கொடுத்தால் ,தலையை ஒரு பக்கமாக சாய்த்துக்கொள்வான்.இதுவெல்லாம் ,ஆசிரியர்களான எங்களுக்கு கற்றல் கற்பித்தலில் ,அசெளகாரியமாக இருந்தது. இவனை கவனிப்பதால் ,வகுப்பில் மற்ற மாணவர்கள் கைவிடப்பட்ட நிலை!
                'சரி அவனிடம் உள்ள குறைகளை ஏன் அவன் அம்மாவிடம் தெரிவித்து ,அவனை அவனுக்கு ஏற்ற பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்து ,அவன் அம்மாவை அழைத்தோம்.அம்மா வந்தார்.அவர் வரும்போதே முகத்தில் அபப்டி ஒரு சோகம் .'சொல்லுங்க டீச்சர் ,என்ன விஷயம்?'என்றார் .'இல்லை உங்கள் பையன் இந்த பள்ளியில் படிக்க இயலாது,அவனுக்கு ஏதோ ஒரு குறை 'என்று என் மனதை கல்லாக்கிக்கொண்டு சொன்னேன்.அந்த அம்மாவின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.'எனக்கு தெரியும் டீச்சர் ,நீங்கள் போன் பண்ணியதும் இதைத்தான் சொல்லப்போறிங்கள்'என்று.
                    அவனிடம் உள்ள குறை எனக்கும் தெரியும் .அவன் ஒரு 'ஆட்டிசம் ' குழந்தை .அவனை ஒரு குறையுள்ள பையனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ,ஆகவேதான் உங்கள் பள்ளியில் சேர்த்தேன். ஆனால் நீங்களும் அவனை வீட்டுக்கு கூட்டிப்போக சொன்னால்,எனக்கு இனி என்ன செய்வதென்று தெரியவில்லை'என அழ ஆரம்பித்தார்.'அப்படி உங்கள் பிள்ளையிடம் குறை இருந்தால் ,ஏன் அட்மிசன் பாரத்தில் நீங்கள் எதையும் எழுதவில்லை?என்று கொஞ்சம் கோபமாகவே கேட்டேன்.என் கோபத்தின் காரணம் எங்கள் நேரம் விரயம் ஆனது,மேலும் மற்ற மாணவர்களுக்கு எங்களால் நேரத்தை ஒதுக்கி கற்பிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம்தான்!
                                                                             
        அந்த தாயின் அழுகையில் இருந்தே தெரிந்தது ,அவருக்கு அவர் பிள்ளையை மற்ற பிள்ளைகளில் இருந்து வேற்றுமையாய் பார்க்க முடியவில்லை.ஆனால் அதுதானே உண்மை!சில பேச்ச்சு  வார்த்தைகளுக்குப் பிறகு அவனைப் பள்ளியை விட்டு அனுப்பும் முடிவை மாற்றிக்கொண்டு ,அவனை அவன் பாணியில் கற்றுக்கொடுக்க சில பிரத்தியேக பயிற்சிகளை நாங்களும் கற்றுக்கொண்டு களத்தில் இறங்கினோம்.உண்மையில் ரொம்ப சிரமமான காரியம் ஆனால் பல விஷயங்களில் அவனை மாற்றினோம். இறுதியில் எங்களுக்கு கிடைத்த வெற்றி என்னெவென்றால் ,அனைத்து பாலர்பள்ளிகளுக்கு இடையிலான போட்டி விளையாட்டுகளில் அவனையும் பங்கெடுக்க வைத்து விளையாட செய்தோம் .அதை அவன் பெற்றோர்கள் பார்க்க அவர்களை வரவழைத்தோம்.அந்த வெற்றி ,எங்களை நம்பி அவனை எங்களிடம் நம்பி ஒப்படைத்து விட்டுச் சென்ற அவன் தாயாருக்கு  நாங்கள் கொடுத்த பரிசு!
              அதனைத் தொடர்ந்து ,இரண்டு வருடங்கள் கழித்து இன்னொரு பையன். இவன் மேலே சொன்ன பையனை விட ரொம்பவே பாதிக்கப்படட மாணவன். பள்ளியில் வந்த அன்றே, அவன் குறையை கண்டு பிடித்தோம்.கையில் ஒரு பொருளை வைத்துக்கொண்டு அதனை விசிறிபோல சுழற்றிக்கொண்டு இருப்பான்.மின் விசிறியைக்கண்டால் ஓடிப்போய் அதன் அருகில் நின்று அதன் விசிறிகளை சுழல்வது போல அவனும் சுழன்று சிரிப்பான்.அவன் பெயரை அழைத்தால் , ஒரு நாள் கூட எங்கள் முகத்தைப் பார்த்தது கிடையாது.தன பாட்டி அவனுடன் பள்ளியில் இருப்பதால் ,என்ன வேண்டும் என்றாலும் பாட்டியின் சட்டையை இழுப்பான்.பசி என்றால் பாட்டியை இழுத்துப்போய் பால் புட்டியை காட்டுவான்.
                   பாட்டியிடம் அவன் குறைகளைக் கூறியபோது ',பாட்டி சொன்ன விஷயம் அதிர்ச்சியாய் இருந்தது.'அவன் அப்பா (பாட்டியின் மகன்)கிட்ட நான் பலமுறை சொல்லிட்டேன் செல்விம்மா ,ஆனால் அவன் அதைப்பற்றி கவலை படுவது இல்லை.அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை,வீணாக பிள்ளையை குறை சொல்லாதீங்க'என்றும் காரசாரமாய் பேசிவிட்டான் .அவன் அம்மாவிடம் 'உன் பிள்ளையைப் பார் ,பிற பிள்ளைகளைப்போல் அல்லாமல் இவன் வித்தியாசமாக செயல்படுகிறான் 'என்று வலியுறுத்தி சொன்னேன்.அவளும் அவ கணவனிடம் சொன்னபோது, கணவன் அவளை கடிந்துகொண்டதாகவும் பாட்டி கூறினார்.பாட்டியின் முழு கண்காணிப்பில்தான் பிள்ளை வளர்கிறான் என்பதை பல விஷயங்களில் தெரிந்துகொண்டோம்.சோறு சாப்பிடவே மாட்டான்.பால் மட்டுமே குடிப்பான். எப்போதாவது ரொட்டி சாப்பிடும் பழக்கம் உண்டு என பாட்டி கூறினார்.
             மலேசியாவில் நம் தமிழர்களிடம் அதிகம் உள்ள சிறுமைத்தனம் இதுதான்!தங்கள் பிள்ளைகளின் குறையறிந்து செயல்படுவது விட்டு அதை மறைக்கவோ மறுக்கவோ செய்வார்கள்.மற்ற இனங்கள் அப்படி இல்லை.பிள்ளைகளின் குறையறிந்து ,அரசு கொடுக்கும் அனைத்து மானியங்கள் மற்றும் இதர உதவிகள் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்வார்கள்!சரி இந்த பையனின் பிரச்சனைக்கு ஒரு புள்ளி வைக்கலாம் என காத்திருந்தேன்.'அவனுக்கு உணவு  விழுங்கும்போது ,தொண்டையில் ஏதோ அடைப்பது போல் இருக்குதும்மா,எங்கேயாவது ENT CLINIC இருக்கா ?கொஞ்சம் எனக்காக பார்த்துச் சொல்லுங்கள்'என்று பாட்டி என்னிடம் ஒரு உதவியை வைத்தார்.
            நான் தான்  காது வலிக்கு  அடிக்கடி அந்த கிளினிக் போய்வருபவள் ஆச்ச்சே?இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ,அவனையும் பாட்டியையும் அழைத்துச் சென்றேன்.அவன் பெயரை அழைத்ததும் ,உள்ளே போய் நாற்காலியில் உட்கார வைத்தோம்.பையன் அலறி அடித்து நாற்காலியை விட்டு இறங்கி ஓடினான்.மருத்துவர்,நான்,பாட்டி ,நர்ஸ் என்று பலரின் கட்டுக்கு அடங்காமல் பையன் ஓடினான்.டாக்டர்  என்னைப் பார்த்தார்.காரணம் அவரிடம் 'இவன் என் மாணவன் ,தொண்டையில் ஏதோ பிரச்சனை ,கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்கள்'என நான் கேட்டுக்கொண்டேன் .பாட்டியை வெளியே போக சொல்லிவிட்டு ,'என்ன டீச்சர் ?என்று சிரித்தார்.'டாக்டர் அவன் ஒரு ஆட்டிசம் பையன்...என்று நான் முடிப்பதற்குள் ,அவராக தொடர்ந்தார்.'அந்த பையன் உள்ளே வரும்போதே நான் கண்டுகொண்டேன்.  கண்டிப்பாக அவன் நமக்கு ஒத்துழைக்க மாடடான் என்பதும் தெரியும்.இருந்தாலும் ஒரு சின்ன ஆக்டிங் 'என்றார்.
                                   பிறகு அவன் அப்பாவின் நிலைப்பாட்டினை டாக்டரிடம் சொன்னேன்.'இப்படித்த்தாங்க நம்ம ஆளுங்க முட்டாள்  தனமாக இருப்பார்கள். பிள்ளைகளிடம் உள்ள குறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்அதுமட்டும் இல்லைங்க, அவன் குறையை சொன்னால் ,சில அப்பாக்கள் நம்மை அடிக்கக்கூட வருவங்கள்.இதெல்லாம் நமக்கு தேவையா ?என ரொம்ப வேதனையாய் சொன்னார்.பிள்ளையின் பிரச்சனையை அறிந்து ,அதனை அதுவாக ஏற்றுக்கொள்ளாமல் எதை சாதிக்கப்போறானுங்களோ ?தெரியாது. பாருங்க நம்ம நாட்டில் சீனர்களும் மலாய்க்காரர்களும் எங்கே, எதுக்கு என்ன இருக்கு என்று ஆராய்ந்து அதனை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
         மலேசியாவில் இந்தியர்கள்தான் அதிக விழுக்காடு  மருத்துவர்களாக பணிபுரிகின்றனர் ஆனால் நம் ஆளுங்க பண்ற கூத்தையும் கொடுமையையும் என்ன சொல்ல 'என அப்படியே உட்கார்ந்தார்,'சரி டாக்டர் ,எனக்கு ஒரே ஒரு உதவி செய்யுங்கள்,உங்கள் கைப்பட அவன் ஒரு ஆட்டிசம் பிள்ளை 'என எழுதி கொடுக்கச் சொன்னேன்.எழுதிக்கொடுத்தது மட்டுமல்லாமல் ,அவருடைய டாக்டர் நண்பர் நடத்தும் ஆட்டிசம் செண்டரின் தொடர்பு எண்களையும் கொடுத்தார்.பிறகு என்ன?வீட்டில் வெடி வெடித்தது.மனைவி கணவனிடம் சண்டை.கணவனோ ஆண்களுக்கே உரிய பாணியில் 'உனக்குத்தான் பிள்ளையை வளர்க்க திறமை இல்லை 'என்றெல்லாம் குறை சொல்ல...!வழக்கம்போல் பாட்டியின் தலையீடு ,பிரச்சனைக்கு தீர்வைகொடுத்தது. தற்போது பையன் ஆட்டிசம் செண்டரில் பயிற்சியை மேற்கொள்கிறான்.
             ஒவ்வொரு மனிதனும் தங்களைச் சார்ந்த எந்த உறவும் குறையுள்ள உயிர் என ஏற்றுக்கொள்ள மறுப்பது என்னவோ உண்மைதான் !ஆனால் ,ஒரு குறைநீக்கல் போதனை , கலந்துரையாடல் இவையனைத்துக்கும் அந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதை ஏனோ நாம்  நினைத்துப்பார்ப்பது இல்லை.ஐந்தில் வளைக்க முடியாததை ஐம்பதில் வளைக்க முடியுமா என்ன?இன்னமும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் சிலர் பிரச்சனைகளைக் கண்டும் காணாமல் இருக்க முயற்சி செய்வதை கண் கூடாக பார்க்கிறோம்.அவர்களுக்கு எப்படி உதவ முடியும்? எதுக்கெல்லாம் நாம் வெட்கப்படவேண்டும் என்பதுதான் கேள்விக்குறியே!
              ஒருமுறை என் சீன தோழி நம் இனத்தைப் பற்றி கொஞ்சம் கிண்டலாய் பேசியது இன்னமும் எனக்கு நினைவில் இருக்கு.அதாவது, ' செல்வி உங்க தமிழ் பெண்கள் கடையில் போய் ,அவர்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளையும் ,நாப்கின்களையும் வாங்க வெட்கப்படுகிறீர்கள் ,ஆனால் பெண்கள் வயசுக்கு வந்து விட்டால் ,ஊரைக்கூட்டி வைத்து விருந்து கொடுத்து ,பெண்ணின் உடல் பருவ மாற்றத்தை  ஊருக்கு சொல்கிறீர்கள் ,வெட்கப்பட வேண்டிய விசயத்துக்கு வெட்கப்படாமல் ,தேவை உள்ள விசயத்துக்கு பின் தங்கி போகிறீர்கள் 'என்றாள் .அவள் அப்படி சொல்லும்போது எனக்கு கோபம் வந்தாலும் ,அதில் உள்ள உண்மையை இப்போ நினைத்துப்பார்க்கிறேன்.உதவி செய்ய பலரும் முன் வந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் வராத பட்ஷத்தில் ,அந்த கடவுளே வந்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை!
                                                                     





Friday, 23 September 2016

செய்தவினையே.......... செய்வினையாக.....!

              எனக்கு விவரம் தெரிஞ்ச நாள் முதல் நாள், எங்களைச் சுற்றி இருக்கும் சில குடும்பங்கள் மாந்திரிகம்,செய்வினை ,பில்லி சூனியம் என்ற நம்பிக்கையில் உழன்றுகொண்டு  ,மன உளைச்சலுக்கு ஆளாகி பணத்தையும் ,நேரத்தையும் விரயம் செய்ததை கண் கூடாக பார்த்துள்ளேன்.
                                                                                 
                                                                     
            என் வீட்டிலும் சில உறவுகள் அப்படி பேசுவதைப் பார்த்து என் பெற்றோர்களிடம் அதைப்பற்றி ஆராய்ந்து விளக்கம் கேட்டதுண்டு .அப்படி ஒரு கேள்வியை என் பெற்றோர்களிடம் முன் வைக்கும்போதெல்லாம் என் அப்பா சொல்லும் ஒரு விஷயம்'மாந்திரிகம் என்பது உண்மை என்றால் ,ஏம்மா அப்புறம் வீட்டில் சாமி படம் ,சாமி மேடை ?தினமும் விளக்குப்போட்டு பூஜை செய்கிறீர்கள்?அப்பாவிடம் 'பேய்'இருக்கா அப்பா?என்று கேட்டு ,எங்கள் பயத்துக்கு தெளிவு பெற எண்ணி கேட்க்கும்போதெல்லாம் , அப்பா சொல்வார் 'ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள் ,எப்போது  நாம் நம் பலத்தை இழந்து ,பலவீனமானவன் ஆகிறோமோ ,அந்த கணம்  அனைத்து தீய சக்திகளும் நம்மை ஆட் கொள்ளும் !
                                                                       

               அது பேயாகவும் இருக்கலாம்,கடிக்க வரும் நாயாக இருக்கலாம்,எம் எதிரியாக இருக்கலாம்',அதுமட்டுமல்ல  உன் பலத்தை இழக்கும்போது ,உன்னை தாக்கும் தீய சக்தியை  நீ குறைத்துப்பேசுவது  சரியல்ல,காரணம் ,அவைகள் உன்னைத் தாக்க நீதானே வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கிறாய்!என்பார்.என் தந்தை அதிகம் படிக்கவில்லை ஆனாலும் அவர் சொல்லும் கருத்துக்களும் ,விளக்கங்களும் ரொம்ப ஏற்புடையதாக இருக்கும்.

          என் அப்பா வழி தாத்தா ,வேட்டையாடுவது,மரம் வெட்டுவது இதை தவிர்த்து அவர் செய்த உப தொழில் , பேய் பிடித்தவர்களுக்கு மந்திரித்து கயிறு கட்டுவது,எதையோ கண்டு பயந்த பிள்ளைகளுக்கு தண்ணீர் மந்திரித்து தெளிய வைப்பது.இதையெல்லாம் நாங்கள் பார்த்திருக்கிறோம்.பேய் பிடித்த பெண்களுக்குத் தாத்தா பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது ,நாங்கள் எல்லாம் அறையில் போய் ஒளிந்துகொண்டு வெடவெடத்துப்போனதுண்டு.எங்கேடா அவங்க உடம்பில் இருந்து வந்த பேய் நம் உடலில் குடியேறிடும் என்ற நம்பிக்கைதான்!குணமடைந்தவர்கள் தாத்தாவுக்கு நன்றி கூறி செல்வதும்,பணம் கொடுப்பதும் வழக்கமான ஒன்று!
                                                                     

           இப்போ விஷயம் என்னெவென்றால், அண்மைய காலமாக  சிலர் தங்களுக்கு ஏற்படும் தொடர் சோகங்களையும் ,தீரா நோய்களையும் தீர்வு காணாமல் சுலபமாய்  சொல்லித் திரிவது 'யாரோ செஞ்சி வச்சிட்டாங்கள்.அதுவும் சாப்பாட்டில் கலந்து கொடுத்துட்டாங்க,செஞ்சி கொண்டுபோய் ஓடும் தண்ணீரில் விட்டுட்டாங்க'.காதல் தோல்வி என்றால்'அவங்க வீட்டில் என்னமோ செஞ்சி அவருக்கு கொடுத்துட்டாங்க,முக மாற்றம் பண்ணிட்டாங்கள் ,அதான் விட்டுட்டுபோயிட்டார் /போய்விட்டாள்'என்றெல்லாம் சொல்வதைக்கேட்டிருக்கிறோம்.'நாங்க போய் பார்த்த இடத்தில் நல்லா சொல்றாங்க,அப்படியே புட்டு புட்டு வைக்கிறாங்கள் ,ஒருமுறை வந்துபோங்கள்'என்று நமக்கும் சிபாரிசு செய்வார்கள்.
                                                               
            வீட்டில் ஏதும் பிரச்சனைகள்என்றால், ஒருமுறை  அம்மாவிடம் கேட்டதுண்டு .'ஏம்மா ஒருவேளை நம் வீட்டுக்கும் கண்ணாறு பட்டுப்போச்ச்சுபோல ,அதான் இப்படி இருக்குதோ?என்று கிண்டலாய் ஆனால் ஏதும் பதில் வருமா?என கேட்டேன் .என் அம்மா சொன்ன பதில்'உலகத்தில் யாருக்கும் வேலை வெட்டி இல்லை,உங்கள் வீட்டைக் கவனிச்சிக்கிட்டு இருக்கிறதுதான் வேலையா?வெட்டியத்தனமா யோசிக்காமல் விட்டுக்கொடுத்து வாழ பழகினால் ஒரு &&$$$###^^^^**### பிரச்சனையும் வராது என்று திட்டினார்.அப்படி எங்களைத் திட்டி திட்டி சில விஷயங்களை சொன்னதாலோ என்னவோ இன்னமும் எங்களுக்கு நோய் என்றால் மருத்துவரைப்பார்ப்பதுவும்,பிரச்சனை என்றால் ,எங்கே அதன் தொடக்கம் எனும் தேடலும் எப்போதும் உண்டு.

             என்  அனுபவத்தில் நடந்த ஒரு விஷயம்.என் மாணவனின் தாயார் நல்ல உழைப்பாளி.கடவுள் வழிபாடும் இடைவிடாமல் செய்பவர்.ஒருமுறை கால் விரலில் எதோ ஒரு புண் வந்து அவதிப்பட்டாள் .பலமுறை சொல்லியும் மருத்துவமனை போகவில்லை,ஆனால் பிள்ளையை என்னிடம் விட்டுவிட்டு இரவுவேளையில் கணவருடன் எங்கோ சாமி பார்க்கச் செல்வாள்.பிறகு மாணவனை வேறு பள்ளியில் சேர்த்துவிட்டு தீவிரமாக வியாபாரம் செய்து வந்தார்.ஆனால் கொஞ்ச காலம் கழித்து செய்தி கேட்டேன்.அவள் காலை முட்டியோடு அறுவை சிகிசிச்சை செய்து எடுத்துவிட்டார்கள் !சர்க்கரை நோயின் ஆரம்பம்தான் அந்த சிறிய புண்.இறுதியில் என்னவாயிற்று.பணம்,குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு தற்போது அநாதை இல்லத்தில் காலத்தைக் கழிப்பதாக தகவல் கிடைத்தது.தீராநோய் இருந்தால் முதலில் மருத்துவரைப் பார்ப்பதுதான் அடிப்படை.
                                                                     
           வீட்டில் சதா பிரச்சனைகள் என்றால் கண்ணாறு பட்டுப்போச்ச்சு ,செய்வினைப்போல என்று சொல்லக்கேட்டதுண்டு.இன்பமும் துன்பமும் இரண்டர கலந்திருப்பதுதான் வாழ்வு.பகல் இருந்தால் இரவு இருப்பதுவும்,நன்மை இருந்தால் ,தீமை இருப்பதுவும் தானே நியதி.லாபம் மட்டுமே பார்க்கமுடியுமா?நஷ்டமும் வரும்தானே?

         அவனன்றி  ஓர் அணுவும் அசையாது ,அதுவும் சரிதான்.இறைநம்பிக்கையும் அவசியம் இருத்தல் வேண்டும்,அவங்க நாத்திகனாக இல்லாத பட்ஷத்தில்!நாம் செய்த  வினைகள்தானே ,இந்த பிறவியில் நமக்கு வினையாய் வந்து நாம் பிறவி எடுக்க காரணமாய் இருக்கிறது.இதில் மதம் சார்ந்த விஷயங்களைப் பார்க்காமல் ,கொஞ்சம் ஏரனமாய் சிந்தித்தால் ?இது என் கருத்து!அதைப்பிறருக்கு திணிப்பது ,நமக்கு பழக்கமான செயலும் அல்ல.பிறர் நம்பிக்கையில் மூக்கை நுழைப்பதும் ,அடுத்தவன் வீட்டு அறையை சாவி துவாரத்தில்  வழி எட்டிப்பார்ப்பது போல அநாகரிமான செயல் என்பதால்..இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்!