Friday, 23 September 2016

செய்தவினையே.......... செய்வினையாக.....!

              எனக்கு விவரம் தெரிஞ்ச நாள் முதல் நாள், எங்களைச் சுற்றி இருக்கும் சில குடும்பங்கள் மாந்திரிகம்,செய்வினை ,பில்லி சூனியம் என்ற நம்பிக்கையில் உழன்றுகொண்டு  ,மன உளைச்சலுக்கு ஆளாகி பணத்தையும் ,நேரத்தையும் விரயம் செய்ததை கண் கூடாக பார்த்துள்ளேன்.
                                                                                 
                                                                     
            என் வீட்டிலும் சில உறவுகள் அப்படி பேசுவதைப் பார்த்து என் பெற்றோர்களிடம் அதைப்பற்றி ஆராய்ந்து விளக்கம் கேட்டதுண்டு .அப்படி ஒரு கேள்வியை என் பெற்றோர்களிடம் முன் வைக்கும்போதெல்லாம் என் அப்பா சொல்லும் ஒரு விஷயம்'மாந்திரிகம் என்பது உண்மை என்றால் ,ஏம்மா அப்புறம் வீட்டில் சாமி படம் ,சாமி மேடை ?தினமும் விளக்குப்போட்டு பூஜை செய்கிறீர்கள்?அப்பாவிடம் 'பேய்'இருக்கா அப்பா?என்று கேட்டு ,எங்கள் பயத்துக்கு தெளிவு பெற எண்ணி கேட்க்கும்போதெல்லாம் , அப்பா சொல்வார் 'ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள் ,எப்போது  நாம் நம் பலத்தை இழந்து ,பலவீனமானவன் ஆகிறோமோ ,அந்த கணம்  அனைத்து தீய சக்திகளும் நம்மை ஆட் கொள்ளும் !
                                                                       

               அது பேயாகவும் இருக்கலாம்,கடிக்க வரும் நாயாக இருக்கலாம்,எம் எதிரியாக இருக்கலாம்',அதுமட்டுமல்ல  உன் பலத்தை இழக்கும்போது ,உன்னை தாக்கும் தீய சக்தியை  நீ குறைத்துப்பேசுவது  சரியல்ல,காரணம் ,அவைகள் உன்னைத் தாக்க நீதானே வாய்ப்பை உருவாக்கிக்கொடுக்கிறாய்!என்பார்.என் தந்தை அதிகம் படிக்கவில்லை ஆனாலும் அவர் சொல்லும் கருத்துக்களும் ,விளக்கங்களும் ரொம்ப ஏற்புடையதாக இருக்கும்.

          என் அப்பா வழி தாத்தா ,வேட்டையாடுவது,மரம் வெட்டுவது இதை தவிர்த்து அவர் செய்த உப தொழில் , பேய் பிடித்தவர்களுக்கு மந்திரித்து கயிறு கட்டுவது,எதையோ கண்டு பயந்த பிள்ளைகளுக்கு தண்ணீர் மந்திரித்து தெளிய வைப்பது.இதையெல்லாம் நாங்கள் பார்த்திருக்கிறோம்.பேய் பிடித்த பெண்களுக்குத் தாத்தா பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது ,நாங்கள் எல்லாம் அறையில் போய் ஒளிந்துகொண்டு வெடவெடத்துப்போனதுண்டு.எங்கேடா அவங்க உடம்பில் இருந்து வந்த பேய் நம் உடலில் குடியேறிடும் என்ற நம்பிக்கைதான்!குணமடைந்தவர்கள் தாத்தாவுக்கு நன்றி கூறி செல்வதும்,பணம் கொடுப்பதும் வழக்கமான ஒன்று!
                                                                     

           இப்போ விஷயம் என்னெவென்றால், அண்மைய காலமாக  சிலர் தங்களுக்கு ஏற்படும் தொடர் சோகங்களையும் ,தீரா நோய்களையும் தீர்வு காணாமல் சுலபமாய்  சொல்லித் திரிவது 'யாரோ செஞ்சி வச்சிட்டாங்கள்.அதுவும் சாப்பாட்டில் கலந்து கொடுத்துட்டாங்க,செஞ்சி கொண்டுபோய் ஓடும் தண்ணீரில் விட்டுட்டாங்க'.காதல் தோல்வி என்றால்'அவங்க வீட்டில் என்னமோ செஞ்சி அவருக்கு கொடுத்துட்டாங்க,முக மாற்றம் பண்ணிட்டாங்கள் ,அதான் விட்டுட்டுபோயிட்டார் /போய்விட்டாள்'என்றெல்லாம் சொல்வதைக்கேட்டிருக்கிறோம்.'நாங்க போய் பார்த்த இடத்தில் நல்லா சொல்றாங்க,அப்படியே புட்டு புட்டு வைக்கிறாங்கள் ,ஒருமுறை வந்துபோங்கள்'என்று நமக்கும் சிபாரிசு செய்வார்கள்.
                                                               
            வீட்டில் ஏதும் பிரச்சனைகள்என்றால், ஒருமுறை  அம்மாவிடம் கேட்டதுண்டு .'ஏம்மா ஒருவேளை நம் வீட்டுக்கும் கண்ணாறு பட்டுப்போச்ச்சுபோல ,அதான் இப்படி இருக்குதோ?என்று கிண்டலாய் ஆனால் ஏதும் பதில் வருமா?என கேட்டேன் .என் அம்மா சொன்ன பதில்'உலகத்தில் யாருக்கும் வேலை வெட்டி இல்லை,உங்கள் வீட்டைக் கவனிச்சிக்கிட்டு இருக்கிறதுதான் வேலையா?வெட்டியத்தனமா யோசிக்காமல் விட்டுக்கொடுத்து வாழ பழகினால் ஒரு &&$$$###^^^^**### பிரச்சனையும் வராது என்று திட்டினார்.அப்படி எங்களைத் திட்டி திட்டி சில விஷயங்களை சொன்னதாலோ என்னவோ இன்னமும் எங்களுக்கு நோய் என்றால் மருத்துவரைப்பார்ப்பதுவும்,பிரச்சனை என்றால் ,எங்கே அதன் தொடக்கம் எனும் தேடலும் எப்போதும் உண்டு.

             என்  அனுபவத்தில் நடந்த ஒரு விஷயம்.என் மாணவனின் தாயார் நல்ல உழைப்பாளி.கடவுள் வழிபாடும் இடைவிடாமல் செய்பவர்.ஒருமுறை கால் விரலில் எதோ ஒரு புண் வந்து அவதிப்பட்டாள் .பலமுறை சொல்லியும் மருத்துவமனை போகவில்லை,ஆனால் பிள்ளையை என்னிடம் விட்டுவிட்டு இரவுவேளையில் கணவருடன் எங்கோ சாமி பார்க்கச் செல்வாள்.பிறகு மாணவனை வேறு பள்ளியில் சேர்த்துவிட்டு தீவிரமாக வியாபாரம் செய்து வந்தார்.ஆனால் கொஞ்ச காலம் கழித்து செய்தி கேட்டேன்.அவள் காலை முட்டியோடு அறுவை சிகிசிச்சை செய்து எடுத்துவிட்டார்கள் !சர்க்கரை நோயின் ஆரம்பம்தான் அந்த சிறிய புண்.இறுதியில் என்னவாயிற்று.பணம்,குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு தற்போது அநாதை இல்லத்தில் காலத்தைக் கழிப்பதாக தகவல் கிடைத்தது.தீராநோய் இருந்தால் முதலில் மருத்துவரைப் பார்ப்பதுதான் அடிப்படை.
                                                                     
           வீட்டில் சதா பிரச்சனைகள் என்றால் கண்ணாறு பட்டுப்போச்ச்சு ,செய்வினைப்போல என்று சொல்லக்கேட்டதுண்டு.இன்பமும் துன்பமும் இரண்டர கலந்திருப்பதுதான் வாழ்வு.பகல் இருந்தால் இரவு இருப்பதுவும்,நன்மை இருந்தால் ,தீமை இருப்பதுவும் தானே நியதி.லாபம் மட்டுமே பார்க்கமுடியுமா?நஷ்டமும் வரும்தானே?

         அவனன்றி  ஓர் அணுவும் அசையாது ,அதுவும் சரிதான்.இறைநம்பிக்கையும் அவசியம் இருத்தல் வேண்டும்,அவங்க நாத்திகனாக இல்லாத பட்ஷத்தில்!நாம் செய்த  வினைகள்தானே ,இந்த பிறவியில் நமக்கு வினையாய் வந்து நாம் பிறவி எடுக்க காரணமாய் இருக்கிறது.இதில் மதம் சார்ந்த விஷயங்களைப் பார்க்காமல் ,கொஞ்சம் ஏரனமாய் சிந்தித்தால் ?இது என் கருத்து!அதைப்பிறருக்கு திணிப்பது ,நமக்கு பழக்கமான செயலும் அல்ல.பிறர் நம்பிக்கையில் மூக்கை நுழைப்பதும் ,அடுத்தவன் வீட்டு அறையை சாவி துவாரத்தில்  வழி எட்டிப்பார்ப்பது போல அநாகரிமான செயல் என்பதால்..இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்!