Wednesday, 8 March 2017

இதற்குத்தானே இன்றைய தினம்!

ஒரு நாள், ஒரு பொழுதாயின்னும்

            தினமும் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் கணவனிடம்,மனைவி அங்கலாய்த்துக் கொள்கிறாள் ‘ ஐயோ ,எனக்குத்தாங்க முடியல, பிள்ளைகள் ஒரு புறம்,வீட்டு வேலை மறுபுறம் ,எங்கேயாவது போய் விடலாம்னு தோனுது !’ என்று.
              இதைக் கேட்ட கணவன் ஒருநாள் , பொங்கி எழுந்து ‘ஏய் ,நான் மட்டும் என்ன காலை ஆட்டிட்டு வரேன்? நீ ஒரு நாளைக்கு வேலைக்குப் போ,நான் வீட்டு வேலையைச் செய்கிறேன்னு’ சந்திக்கப் போகும் பின்விளைவுகளை யோசிக்காமல் சவால் விடுகிறான்! மனைவியும் சவாலை ஏற்றுக்கொள்ள பொறுப்பு கைமாறுகிறது.இரவு பலமுறை,மனைவி கணவனைக் கேட்கிறாள்,வேண்டுமா இந்த சவால்?இறுமாப்பு கணவன் கேட்டபாடில்லை!
மனைவி வேண்டுமென்றே காலை 6.00மணிக்கெல்லாம் காரை எடுத்துக்கொண்டுப் புறப்படுகிறாள். 


            தொடங்குகிறது யுத்தகாண்டம் !!! காலையில் 6.00 மணிக்கு, கணவன் எழுந்து குழந்தைகளை எழுப்புகிறான்.பலமுறை எழுப்பிய பிறகுதான் ,குழந்தைகள் எழுகின்றனர்.’எத்தனை மணிக்கு பஸ் வரும் என பிள்ளைகளை வினவ,'ஐயோ!  அப்பா,6.30 வரும்,ஐயோ லேட் ஆச்சு ! என பதறிக்கொண்டு பிள்ளைகள் கிளம்ப’,நில்லுங்கள் ,அப்பா தோசை சுடுகிறேன்’என்று தோசைக் கல்லை அடுப்பில் வைப்பதற்குள் ‘பள்ளி பஸ் ஓலமிடுகிறது!’தோசையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்’என்று பிள்ளைகள் கோவித்துக்கொண்டு செல்கின்றனர். 'சரி !சரி இந்தாங்க காசு எதாவது வாங்கிக்கொள்ளுங்கள்' என்று பணம் கொடுத்தனுப்புகிறான் கணவன்.

                 தூங்கிக்கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தை எழுவதற்குள் குளித்துவிடலாம் என எண்ணி குளியலறையில் நுழைகிறான்…'ட்ரிங் ட்ரிங்'  ..வீட்டுப் போன் அலற ,துண்டைக் கட்டிக்கொண்டு ஓடிப் போய் போனை எடுக்கிறான்…’ச்சீ காலையிலே ரோங் நம்பர்! தடாலன போனை வைத்துவிட்டு ,மீண்டும் குளியலறையில் நுழைகிறான், பொத்தென்று அறையில் ஒரு சத்தம் , ஐயோ என்ன ??என்று ஓடுவதற்குள் ‘ஓ வென்று தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் அழுகுரல்! பிள்ளை கீழே விழுந்து ,அழுதுகொண்டே தட்டு தடுமாறி வருவதைக் கண்ட அப்பா,'இதற்கு மேல் எங்கே குளிப்பது? என்று வந்து குழந்தையைத் தூக்குகிறான்.அவளை சமாளித்து பால் கொடுத்து குளிப்பாட்டுவதற்குள் மணி 10.00 ஆகிறது ! 


                     துணி துவைக்கும் இயந்திரத்திலுள்ள துணிகளை உலர வைத்து விட்டு, உள்ளே வருவதற்குள், மீதிப் பாலைக் கீழே ஊற்றி குழந்தை கோலம் போடுகிறாள்.ஐயோ ! என தலையில் அடித்துக்கொண்டு ,தரையைச் சுத்தம் செய்வதற்குள் அவனுக்கு இரத்தம் தலைக்கேறுகிறது!!பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் பிள்ளைகளுக்கு ஏதாவது சமைக்கலாம் என்று எண்ணி காய்கறிகளைச் சுத்தம் செய்து அடுப்பைத் தட்டுகிறான்,அந்தோ பரிதாபம்!, கேஸ் தீர்ந்துப் போய்விட்டது!பக்கத்துவீட்டுக்காரரிடம் கேஸ் பற்றி விசாரித்து ஒரு வழியாக வீடு வந்து சேர்கிறது கேஸ்! பின்னாலே பள்ளி பஸ் ‘பொங் பொங்’ என்று ஓலமிட்டு வீட்டு வாசல் முன் வந்து நிற்கிறது.
'அப்பா,என்ன சமைத்தீர்கள்? என்று உள்ளே வரும் முன்,கேள்விக் கேட்டுக் கொண்டு வந்த பிள்ளைகளை ,பாவத்தோடு பார்க்கிறான் அப்பா!
'ஹாய், இன்னைக்கு உங்களுக்கு கடைச்சாப்பாடு !கொஞ்சம் பொறுங்கள் ,அப்பா போய் வாங்கி வருகிறேன்' என்று சொல்லும் பொழுதுதான், உணர்கிறான் வீட்டில் கார் இல்லை என்று?செய்வதறியாது ,கையைப் பிசைந்துக் கொண்டு,'சரிமா,நான் நடந்து போய் வாங்கி வர்ரேன்னு கிளம்புகிறான்.திரும்பி அரக்க பறக்க வீடு வந்து சேர்கிறான்.


                      வீடே அலங்கோலமாய்க் கிடக்க ,உணைவைப் பிரித்து, உட்கார எத்தனிக்கிறான்’ஏதோ ஒரு வாடை?’அப்பா,பாப்பா ஆயிப்போச்சு’ என்று பிள்ளைகள் கத்துகின்றனர்.அவனுக்கோ ஆத்திரம் தலைக்கேறுகிறது!!மீண்டும் ,துப்புரவு,குளியல் என்று போராடி தூங்க வைக்கிறான்,அப்போ பக்கத்து வீட்டு சீனப்பாட்டி ‘ஓய் தம்பி ,மழை,மழை என்ன தூங்குறாயா ? துணிகளை எடுன்னு அறைகுறை தமிழில் ஓலமிட ,ஓடுகிறான் ,பாதி துணி நனைந்து விடுகின்றன!காலையிலிருந்து பச்சைத்தண்ணிகூட வாயில் வைக்கலையேன்னு காப்பி போட்டு குடிக்க சமையலறையில் நுழைகிறான்,வெளியே மனைவியின் கார் சத்தம் ,’அவளும் புன்னகையோடு வீடு நுழைய ‘ஐயோ !என்னை மன்னித்துவிடு டார்லிங் ,இப்போதான் தெரியுது நீ படும் அவஸ்தை’ என்று அசடு வழிய ஓடுகிறான்.அவளும் 'என்னை மன்னித்து விடுங்கள் ,சும்மா உங்களுக்கு உணர்த்தவே நான் என் அம்மா வீட்டில் மனமின்றி உட்க்கார்ந்து விட்டு வருகிறேன் 'என்று அவனை அன்போடு அணைத்துக்கொள்கிறாள் !

இது உனக்கு தேவையா மாதவா?

-------------------------------------------------------------------------------------------------------------------

இரவு 9.30 குடும்பத்தோடு படம் பார்க்கும் அம்மா,எழுந்து 'சரி நான் படுக்க போறேன்னு' மேல் மாடிக்குப் போய் துணிகளை iron பண்ணுகிறாள்,பிறகு எல்லா படுக்கை அறைகளையும் ஒழுங்கு செய்கிறாள்,சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொதிக்க வைத்து பிள்ளைகளின் பள்ளி bottles - களில் நிரப்புகிறாள்,துணிகளை washing machine-போடுகிறாள். அப்புறம் நாளை breakfast-க்கு தயார் செய்கிறாள்.சாப்பிட்டு வைத்த மங்கு பாத்திரங்களைக் கழுவி வைக்கிறாள்.படமும் முடிகிறது மணி சுமார் 11.00 ஆகிறது.பிள்ளைகள் மேல் மாடிக்குப் போய் .'அம்மா இன்னும் நீங்கள் தூங்கலையா,அப்பவே மேல் மாடிக்கு ஏறீனீங்க என்று கேட்கிறார்கள்?
                                       Image result for working women in home