Tuesday, 17 July 2018

சளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்!

                                                                           
                 எங்கள் பள்ளிக்காலங்களில் கற்பழிப்பு,பலாத்காரம் போன்ற செய்திகள் எங்கோ ஓர் இடத்தில் அல்லது எதோ ஒரு நாட்டில் நடந்துகொண்டிருந்தது.ஆனால் சமீப காலங்களாக  , 6 வயது சிறுமி பலாத்காரம் ,8 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் என்ற பல செய்திகள்  ,அதுவும் கூட்டாக சேர்ந்து பாலியல்  தொல்லை என்ற அருவருப்பான செய்திகள் அதிகமாகவே நம்மைச் சோர்வடையச் செய்துள்ளன.சில செய்திகள் சித்தரிக்கப்பட்டவை என்று கேள்விப்பட்டாலும்,இப்படியெல்லாம் நடக்குமா?என்பதே வினாவும் ஆச்சரியமும்!

             இன்று மாலை (17/7/2018) ,சென்னையில் நடந்த அந்த கேடுகெட்ட செய்தியைக் கேட்டு மனம் நெகிழ்ந்துபோனது!அலுத்துப்போனது,என்றுதான்  சொல்ல வேண்டும்.மாற்றுத்திறனாளியைக் , கூட்டாக சேர்ந்து அலங்கோலப்படுத்தியிருக்கும் நம் மனித  இனம்!ஒருநாள் அல்ல 7 மாதங்கள்..!சில மாதங்களுக்கு முன்புதான் 8 வயது சிறுமி கோவிலில் ,கூட்டணியாக அசிங்கப்படுத்திய விஷயம் உலகை உலுக்கிச் சென்றது!அந்த சம்பவமே இன்னும் நெஞ்சை விட்டு நீங்காத நிலையில் மேலும் செய்திகள் !

              எதை நோக்கி போகிறோம்? இப்போ யாருக்கு எந்த விழிப்புணர்வு தேவை?எங்கே தவறு?எப்படி  தடுப்பது? குழந்தைகளிடம் எப்போதும் 'குட் டச், பேட் டச்' எது என்பதை வலியுறுத்திக்கொண்டே இருத்தல்  மிக மிக அவசியம்.குழந்தைகளின் பாலியல் உறுப்புகளை பிறர் தொட அனுமதிக்கக்கூடாது என்று அடிக்கடி நினைவுறுத்திக்கொண்டே     இருப்பதுவும் நம் அனைவரின் கடமை!ஒரு குடும்பத்தில் தாயாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த பொறுப்பு கட்டாயம் இருக்கவேண்டும்.ஒவ்வொரு தாயும் அவள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தோழியாக இருப்பதுதான் சில பிரச்சனைகளைக் கண்டறிய முக்கிய அம்சமாக அமைகிறது.இது நம் அனுபவத்தால் கண்டறியப்பட்ட விஷயமும் கூட!
             
             நல்ல தோழியாக இருக்கும் பட்ஷத்தில் ஒரு தாயிடம் அவள் குழந்தைகள் தைரியமாக எதையும் பேசுவார்கள்.தனிமையை விரும்பும் சிறார்களை கவனித்த்துக்கொண்டே இருப்பது பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புகளின் தலையாய கடமை!குழந்தைகளிடம் எப்போதும் நாம் பள்ளியில் அறிவுறுத்தும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் 'உனக்கு பிடிக்காத செயலை உனக்கு யாராவது செய்தால் ,உடனே அம்மாவிடம் சொல் ,அம்மாவுக்கும்  சரி அப்பாவுக்கும் சரி  வேண்டிய உறவுகள் என்றால் அவர்கள்  உனக்கு செவிசாய்க்க மாட்டார்கள். அங்கே பதில் இல்லையென்றால் உடன்பிறப்புகளிடம் சொல்,யாரும் கேட்கவில்லையென்றால் பள்ளியில் ஆசிரியரிடம் போய் பேசு.நிறைய ஆசிரியர்கள் இருப்பார்கள் ,யாரேனும் ஒருவராவது உனக்கு உதவி செய்வார்கள்.

                 அனைத்து ஆசிரியர்களும் ஒரு மாணவனையோ அல்லது மாணவியையோ புரிந்து வைத்திருக்க மாட்டார்கள் ஆனால்  வகுப்பு ஆசிரியர் ஒரு குழந்தையை  நன்கு அடையாளம் கண்டு வைத்திருப்பார்,வைத்திருக்க வேண்டும்!குழந்தைகளைப்  பார்த்த மாத்திரத்தில் ,அவர்களின் முகபாவனையை கண்டறிந்து அதற்கேற்றாற்போல் செயல்படும் திராணி ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் உண்டு என்பதில் ஐயம் இல்லை!

                  யாரைக் குற்றவாளிகள் என அடையாளம் காண்பது?எப்படி வகுப்பு நடத்தி அவர்களைத் திருத்தப் போகிறோம்?திருடனாய் பார்த்து திருந்தாத பட்ஷத்தில்!சமயம் என்பது ஒழுக்க நன்னெறி ,சமயக்கல்வி மூலம் சிலவிஷயங்களைக் கொண்டு புகுத்தலாம் என்றால்  சில சமயபோதகர்களின் அட்டகாசமும் அண்மைய காலமாக வெறுப்பைக் கொடுக்கிறது.ஒருவேளை சின்னஞ் சிறுவயசிலிருந்து குழந்தைகளுக்கு சில விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் காலம் நிற்கிறது போல!

                 குற்றவாளிகளுக்குத் தண்டனை என்று கடுமையாக்கப்படும்?அரசுதான் முடிவெடுக்கவேண்டும்.யுக்திகளைப் பொதுமக்களாகிய நாம் மறைமுகமாக சொல்வோம்,செயல்படுத்துவது அவர்களின் கையில்!  எது எப்படியோ ,அண்மைய செய்திகளைக் கேட்டு மனம் உடைந்து போய்க்கிடக்கும் நாம் ,அந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யவேண்டிய பேருதவி ,  அவர்களின் புகைப்படங்களை எதிலும் பதிவேற்றம் செய்யாமலும் ,தகவல்களை விருப்பப்படி சித்தரித்து வதந்திகளாய் மாற்றாமல் இருந்தாலே போதுமானது!