Friday, 10 April 2020

மலேசிய நால்வர் மன்றமும்,கொவிட் 19 ஆணை விடுப்பும்!

                                                                                 
                       தற்போதைய கொவிட் 19 விடுப்பில் இருக்கும் நம்மில் பலருக்கு விடுமுறை !ஆனால் உலக மக்களுக்காக,நாட்டு மக்களுக்காக இராப்பகலாய்  போராடிக்கொண்டிருப்பது மருத்துவத்துறை,காவல்துறை இலாகா,தூய்மைபணியாளர்கள் மட்டுமின்றி மிக மிக முக்கிய பங்காற்றி வருவது  சமய இயக்கங்கள் என்பது தான் இன்னுமொரு மிகப்பெரிய உண்மை!ஆம் , இதை நான் அவசியம் இங்கு  பதிவு பண்ணியே ஆகவேண்டும்!
                                                                           
                         அது எங்களைப்போன்ற சிலருக்கு மட்டுமே கிட்டிய வரம் என்றுதான்  கூறுவேன்.ஆமாம் ,தற்போதைய சூழலில் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் ,உலக மக்கள் அனைவரும் எதையோ நினைத்து,ஏங்கிக்கொண்டு  பயந்த நிலையில் இருக்கிறோம். முடிந்து கொண்டிருக்கும் மளிகைப்பொருட்கள்,குறைந்துகொண்டிருக்கும் பணம்,தடை செய்யப்பட்ட கல்வி, வெளி சுகங்களை அனுபவிக்க முடியாத சூழல் என, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இப்படி ஒரு பட்டியலே இடலாம்!
                                                                                   
   
                            இந்த காலக்கட்டத்தில்,நிறைய சோகங்கள் இந்த உலகை உலுக்கிக்கொண்டிருந்தாலும்,அதனைத் திசை திருப்பி,அனைவரையும் ஒருமித்தச்  சிந்தனையில் இட்டுச் செல்ல ,சைவ சமய இயக்கத் தலைவர்களும் அதன் உறுப்பினர்களும் போடும் உழைப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்! !அவர்கள் யாவரும்,பிறர்  காணும் வண்ணம் வேலைச்  செய்யவில்லை என்றாலும் பொதுமக்கள் பயனடைய வேண்டும்,அது மட்டுமின்றி இந்த கொடிய தொற்றுநோயிலிருந்து  நம் உலகம் விடுபட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஒவ்வொருவரும் அயராது செயல்படும் விதம் ,சிரம்தாழ்த்தி வணக்கம் சொல்லியே ஆகவேண்டும்.
                                           
                         அந்த வகையில் ,இவ்வேளையில் அடியேன் பல சைவ சமய இயக்கங்களின்(புலனத்தின்) வழி    பயனடைந்து வருகிறேன் என்றாலும், முழுமையான  சமய ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டு, என்னையும்  பட்டைத் தீட்டி ,சைவ சமயத்துக்குப்  பெரியதாய் ஒன்றும் இல்லையென்றாலும் ,ஏதோ சிறியதாய் சில நல்ல காரியங்களைச் செய்ய ஊன்றுகோலாய் இயங்கும்  மலேசிய நால்வர் மன்றத்தை இங்கு  குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
                               
                            மலேசியாவில் தற்போது  செயல்படும் ,பல சைவ சமய இயக்கங்களில் ஒன்றான  மலேசிய நால்வர் மன்றத்தின் தேசிய தலைவரும்  அவர்தம் பொறுப்பாளர்களும்  தங்களின் தன்னார்வ முயற்சியால் பல பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஆமாம் நண்பர்களே !வீட்டு வேலைகள்,அலுவலக வேலைகள் என உழன்றுகொண்டிருக்கும் எங்களைத் தன்  வயப்படுத்தி ,நம் நாட்டில் ந.க.ஆணை அறிவிப்புச் செய்த நாள் முதல் இன்று வரை ,ஒரு தேடலையும் ,அதனால் ஏற்படும் ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியையும்  இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
                                       
                             புலனத்தின்  வழி ,நாடெங்கிலும்  வாழும் எங்களை இணைத்து,  இறைசிந்தனையில் மூழ்கச்செய்து   மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் , நால்வர் மன்றத்தின் தேசிய தலைவரான டாக்டர்  திரு.பாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் தொண்டு அளப்பரிய ஒன்று.தினமும் சைவ சமயம் சார்ந்த தகவல்கள்,திருமுறைகளை ஆராய்ந்து,அதை அப்படியே பதிவிடாமல் ,ஒரு சொற்பொழிவு போல ஒப்புவிக்கும் தலைவர் திரு.பாலகிருஷ்ணன்  அவர்கள்,  ஓர் இளைஞனுக்கு ஈடாக செயல்படுகிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
                                                                         
                             இடைவிடாத ஐயாவின்   குரல் பதிவு ,மேலும் தினமும்  அனைவரையும் ஒருங்கிணைத்து ,அவரவர் குடும்பத்துடன் கூட்டுப்பிரார்த்தனைகள்  செய்ய ஊக்குவித்து ,அதை அனைவரும் கடைப்பிடித்து வருவதும் அந்த இயக்கத்தின் வெற்றி எனலாம்.
வெறும் கேட்டல் மட்டுமே  என்றில்லாமல்  வாசிப்பு பழக்கத்தையும் ஊக்குவிக்கும் வண்ணம்  சமயபுதிர்களையும் தயாரித்து, உறுப்பினர்களிடையே ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்கி ,புத்தகங்கள்,இணைய தேடல்கள் என எங்களை இந்த இக்கட்டான சூழலிலும் போரடிக்காமல் இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது இந்த இயக்கம்.
                                                                           

              அந்த இயக்கத்தில்  இணைந்து  பயனைடைந்து வரும் 100க்கும்  மேற்பட்ட உறுப்பினர்களில் அடியேனும் ஒருவள் என்பதுதான் எத்துணை மகிழ்ச்சி?குழுவில் உள்ள ஒவ்வொருவருவர்  மனதிலும் பிறர் நலம் காண  வேண்டும் என்ற எண்ணங்களை இடைவிடாமல் விதைத்து   வரும் ஐயாவுக்கு கோடி நன்றிகள்!எங்கள் பொழுதினைச்  செவ்வென கழிக்க ஏதுவாக இயங்கும் இறைவனின்  கருவியாக விளங்கும் மலேசிய நால்வர் மன்றத்துக்கு  இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு  மன்றத்தின் தேசிய தலைவருக்கும் ,செயற்குழு  உறுப்பினர்களுக்கும் மேலும் அந்த இயக்கத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும்  நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
                                                                         
                                       தன்  கடன் அடியேனையும் தாங்குதல் ,
                         என் கடன் பணிசெய்து கிடப்பதே!