Thursday, 4 September 2025

"கற்பித்தலின் சாராம்சம் "

படித்ததில் பிடித்தது !
"கற்பித்தலின் சாராம்சம் "
முதியவர் ஒருவர் ஓர் உணவகத்தில் , இளைஞன் ஒருவனைச் சந்திக்கிறார், அவன் ஓடி வந்து அந்த முதியவரிடம் ,
“ ஐயா என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்கிறான்.
அந்த முதியவர் ‘இல்லையே’ என்று கூறுகிறார். பின்னர் அந்த இளைஞன் அவன் அந்த முதியவரின் மாணவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறான்.
முதியவரும், ஆசிரியர்களுக்கே உரிய பாணியில் மிகுந்த அக்கறையுடன்,
ஓ !அப்படியா? நீ தற்போது என்ன செய்கிறாய்?’ என ஆர்வமாய் கேட்கிறார்.
‘ஐயா நானும் உங்களைப்போலவே ஒரு மிகச் சிறந்த ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணத்தில்,ஆசிரியராக பணி புரிகிறேன்’என்கிறான்.
‘ஆ!, என்னைப் போலவே மிகச் சிறந்த ஆசிரியராக?புரியவில்லையே,என்ன சொல்கிறாய் ?” என்று முதியவர் கேட்கிறார்.
‘ஆம் ,உண்மை ஐயா , நான் ஆசிரியராக ஆக வேண்டும் என்ற ஆர்வம் வர நீங்கள் தான் எனக்கு ஊன்றுகோலாக இருந்தீர்கள்,அதற்கு பின்னால் ஒரு சம்பவமும் உண்டு “என்கிறான்.
அந்த முதியவர், ஆர்வத்துடன், அந்த இளைஞனிடம்,’என்ன சொல்கிறாய் நான் ஒரு முக்கிய காரணமா?என்ன சம்பவம் அது?’என அவனை உற்று நோக்குகிறார்.
அந்த இளைஞன் அவரிடம் பின்வரும் சம்பவத்தைச் சொல்கிறான்:
‘ஒரு நாள், என்னுடைய நண்பன் ஒருவன் , ஒரு நல்ல புதிய கடிகாரத்துடன் வகுப்புக்கு வந்தான்.எனக்கு அந்த கடிகாரத்தின் மீது ஆசை வரவே ,நான் அதைத் திருடினேன்!
சிறிது நேரத்திற்குப் பிறகு, என் நண்பன் தன் கடிகாரம் காணாமல் போனதை அறிந்து , உடனடியாக வகுப்பு ஆசிரியரான உங்களிடம் புகார் செய்தான்.
நீங்களும் வகுப்பில், 'இந்த மாணவனின் கடிகாரம் இன்று வகுப்பில் திருடப்பட்டது. யார் அதைத் திருடினீர்களோ , தயவுசெய்து அதைத் திருப்பித் தரவும்' என்று கூறினீர்கள்!
எனக்கு அந்த கடிகாரம் ரொம்பவும் பிடித்துப்போய் விட்டதால் நான் அதைத் திருப்பித் தராமல் அமைதியாக இருந்தேன்.யாரும் எதுவும் சொல்லாததால்,
நீங்கள் உடனே வகுப்பு கதவை மூடிவிட்டு,எங்களை எல்லாம் எழுந்து ஒரு வட்டவடிவத்தில் நிற்குமாறு கட்டளையிட்டீர்கள்!அதுமட்டுமல்லாது அனைவரும் கண்களை மூடிக்கொள்ளவேண்டும்,காரணம் யார் கடிகாரத்தை எடுத்தது என்று என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது’என்றும் அன்புடன் கேட்டுக்கொண்டீர்கள்!
நாங்களும் அவ்வாறே செய்தோம்! பிறகு நீங்கள் ஒவ்வொரு மாணவனின் சட்டை பாக்கெட்டிலும் கையைவிட்டுத் தேடித்தேடி ,என்னிடம் நெருங்கி, பாக்கெட்டில் கையை விட்டு கடிக்கரைத்தைக் கண்டு பிடித்து,அதை மிக துல்லியமாக உங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு,மற்ற மாணவர்களின் பாக்கெட்டில் தேடுவதுபோல் பாவனை செய்தீர்கள்!
கடிகாரம் கிடைத்தும் ,என் தவற்றைக் காட்டிக்கொள்ளாமல் ,என்னையும் காட்டிக்கொடுக்காமல் ,’இப்போது எல்லோரும் கண்களைத் திறக்கலாம், கடிகாரம் கிடைத்து விட்டது ' என்று சொன்னீர்கள்!
மேலும் நீங்கள் அதை யாரிடமும் சொல்லவில்லை, அந்த சம்பவத்தைப் பற்றி எங்கேயும் குறிப்பிடவில்லை! என்னைத் திட்டவோ, ஒதுக்கி வைத்தோ,அவ்வளவு ஏன்? எனக்கு எந்த அறிவுரையும் கூட சொல்லாமல் சென்றுவிட்டீர்கள்.மேலும் என்னை மற்ற மாணவர்கள் போல் நடத்தினீர்கள் ஐயா!.உங்கள் நல்ல எண்ணத்தை நான் தெளிவாகப் புரிந்துகொண்டேன்.
உங்களுக்கு நன்றி ஐயா , ஓர் உண்மையான கல்வியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டேன்.
அன்று நீங்கள் என் மானத்தைக் காப்பாற்றினீர்கள் ஐயா !அந்த நாள் , என் வாழ்க்கையில் நான் வெட்கத்தால் தலைகுனிந்து அவமானப்பட்ட நாள் !
அந்த கணம், நான் வாழ்க்கையில் ஒரு திருடனாகவோ, கெட்டவனாகவோ மாறக்கூடாது.அதுமட்டுமின்றி உங்களைப்போல் ஒரு நல்ல கல்வியாளராக வேண்டும் என்றும் முடிவு செய்தேன்!
இந்த சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?என அவன் கேட்க,
வயதான பேராசிரியர் சிரித்துக்கொண்டே பதிலளித்தார், ‘ஆம், நான் எல்லோருடைய பாக்கெட்டிலும் திருடப்பட்ட கடிகாரத்தைத் தேடிய நினைவு இருக்கிறது,ஆனால் யாரிடமிருந்து அந்த கடிகாரத்தை எடுத்தேன் என்பது எனக்கும் தெரியாது,ஏனென்றால் ,நானும் அந்த மாணவனைப் பார்க்கக்கூடாது என்பதற்காக என் கண்களையும் மூடிக்கொண்டேன்.
“கற்பித்தலின் சாராம்சம் என்பது “ஒருவனைத் திருந்தவேண்டும் என்றால் அவனை அவமானப்படுத்துவது அல்ல அப்படி செய்தால் அது முறையான கற்பித்தல் இல்லை”
கதையின் உரிமையாளருக்கு ‘நன்றி’ உரித்தாகட்டும்.

*ஆங்கிலத்தில் இருந்து சுட்டு ,மொழிபெயர்ப்பு செய்து கொண்டேன் செல்விகாளிமுத்து !