Friday, 20 November 2026

எங்கே சென்றாய் பாப்பா !(கலைமதி )

           அண்மையில் நேப்பாள் திடீர் வெள்ளத்தில் காணாமல் போன என அண்ணியைப் பற்றிய பதிவுதான் !அவள் பெயர் கலைமதி , ஆனால் வீட்டில் பாப்பா என்ற செல்லப்பெயர். என் தோழி ,எங்கள் வீட்டு மருமகள் என்பதைத் தாண்டி ,என் அம்மாவின் மற்றோரு மகள் என்பதும் பொருந்தும் .இந்த பதிவு முழுவதும் அவளைப்பற்றியதுதான் !


1970 களில் என் அண்டை வீட்டுத்தோழி அவள் .விவரம் தெரிந்த நாள் முதல் எனக்கு கிடைத்த முதல் தோழி அவள்தான் . ஒன்றாக விளையாடுவது , தூங்குவது , சாப்பிடுவது ,குளிப்பது என அனைத்துமே அவளும் நானும் . எங்கள் குடும்பத்தில் அனைத்து நல்லது கெட்டவைகளில் ,அவள் குடும்பமும் இருக்கும் .ஏதேனும் விசேஷத்துக்கு அவள் குடும்பம் இல்லாவிட்டால் ,எங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்களும் அவள் குடும்பத்தைத் தேடுவார்கள்!எங்களில் ஒருவள் ஆனால் அவள்! அதுக்கு மற்றோரு காரணமும் உண்டு !  


கிராமத்தில் எங்கள் வீடுகள் , 'ஈய லெம்பம்' என்றழைக்கப்படும் ,ஈயம் கிடைக்கும் இடத்துக்கு அருகில்தான் அமைந்திருந்தது!ஈயத்தை அலசி அலசி எடுப்பார்கள்.ஈயக்கப்பல்களும் எங்கே இருந்ததுண்டு .அங்கே குட்டைகள் உண்டு ,  மண் சரிவு  அடிக்கடி நடக்கும் . 1976 இல் ஒரு நாள்  என் இரண்டாவது  அண்ணா , நான் ,என் தோழியும் ,அவள் இரண்டு அக்காள்கள் என அவள்  அண்ணனின் தலைமையில் அருகில் உள்ள குட்டைக்குக் குளிக்கச் சென்றோம். நானும் என் அண்ணாவும் குளிக்கவில்லை, ஏனோ வீட்டுக்கு வந்துவிட்டோம்!என் வீட்டில் மற்ற ஐந்து உடன் பிறப்புகளும் வீட்டில் இருந்தனர்! 

 அன்றுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது .திடீரென அவர்கள் வீட்டில் வளர்த்த நாய்குட்டி குட்டையில் விழவே ,அதைக் காப்பாற்ற சென்ற அவளின் அண்ணாவும் , அவரைத் தொடர்ந்து அவளின் அக்காவும் குட்டையில் விழுந்தனர்!என் தோழியும் அவளின் இரண்டாவது அக்காளும் கதறி ஓடி ஊரைக் கூட்டினர்.இருவரையும் மேலே கொண்டு வந்து பார்க்கும்பொழுது இறந்துவிட்டதாக தகவல்!ஒரே வீட்டில் இரண்டு பிள்ளைகளை ஒரே நாளில் இழந்த அந்த குடும்பத்தின் சோகம்தான் ,எங்கள் கிராமத்தில் நடந்த மிகப்பெரிய சோகம் என இன்றளவும் பலரும் சொல்வதுண்டு!

இன்றும் மறக்கமுடியாத நாள்!அந்த நாள் ,என் வீட்டு பெல்ட் ,என் முதுகிலும்  ,என் அண்ணனின் முதுகிலும் ,அம்மாவின் தயவால் சடுகுடு விளையாடியது . என் அம்மா எங்களை உறித்து எடுத்தார் . இனி போவியா ? போவியா ?என கேட்டு. ஆனாலும் அதெல்லாம் கொஞ்ச நேரம் . பிறகு மீண்டும் ரப்பர்  காடு, மேடு ,வெட்டு மரங்கள் ,கோவில் என எல்லா இடங்களிலும் விளையாடுவோம் . அடியும் வாங்குவோம்!  



 அந்த இரண்டு பிள்ளைகளின் மறைவுக்குப் பிறகு ,மறு வருடம் ,அந்த துக்கத்தில் இருந்த அவளின் தந்தை மாரடைப்பால் காலமானார் . அவள் தம்பியை கருவில் சுமந்துகொண்டு  ,அவள்  அப்பாவின் உடல் அருகில் அழுது கொண்டிருந்த அவளின் அம்மாவுக்கு பிரசவ வலி ஏற்படவே ,அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் , அவள் அப்பாவை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றார்கள் . அவளும் அவளின் அக்காவும் ,அவளின் உறவினர் சூழ,அவள் அப்பாவுக்கு ஈமக்காரியங்கள் நடத்தினர்.மறுநாள் அவள் அம்மா பிறந்த தம்பியுடன் வீட்டிற்கு வந்தார்!

உலகம் தெரியாத அவளின் அம்மா தலையில் குடும்ப சுமை விழுந்தது . இளம் விதவை , அழகான பெண்  அவர் அம்மா !நாய் படாத பாடாக இந்த சமுதாயத்தில் பிள்ளைகளுக்காக சிரமப்பட்டார் .அந்த புதிய வரவான தம்பியை நாங்களும் வளர்த்ததில்  பெரிய பங்குண்டு .எங்களால் முடிந்த உதவிகளை செய்வோம் .எங்கே போனாலும் என் அம்மா , அவளைத்தான் அழைத்துச் செல்வார் .அப்படி ஒரு அந்தஸ்து அவளுக்கு.உறவினர்களை விட நாங்கள் அந்த குடும்பத்துக்கு ஆதரவாக இருந்தோம் என தைரியமாக சொல்லலாம் . 

அப்பா ,அண்ணன் மற்றும் அக்காவை இழந்து வாழ்க்கையை ஏற்றுக்கொண்டு ஓர் ஆண்பிள்ளை போல அவளும் அவள் அக்காவும்  அந்த குடும்பத்துக்கு உழைத்து ,தன் தம்பியை ஒரு பட்டதாரியாக உருவாக்கினார்கள் . அந்த நன்றியை இன்னும் அந்த தம்பி கைமாறாக செய்துகொண்டிருக்கிறான் .வீட்டு வேலைக்கு இவள் , வெளி வேலைக்கு அவளின்  அக்கா .தம்பி ஒரு நல்ல பதவியில்  வேலைக்கு போகும் நேரத்தில் அவர்களின் அம்மா இவ்வுலகை விட்டுப்பிரிந்தார் . துயரமே அந்த குடும்பத்தின் பரிசோ  என்னவோ?

பள்ளிக்கு ஒன்றாய் போன காலம் போய் , வேலைக்கும் ஒன்றாக போய் வந்தோம் .நான் பிறப்பால்  ஒரு கோழை என்பதால் ,எனக்கு நிறைய தைரியம் கொடுத்தாள் .அவளிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் . 1997இல் முதல்முறையாக நானும் அவளும் தமிழ்நாடு சுற்றுலா போனோம் . வாழ்க்கையில் மறக்க முடியாத  நாட்கள் அவை . சிறுபிள்ளையிலிருந்து எதைச் செய்தாலும் ,அவள்தான் முதலாவதாக செய்ய நினைப்பாள்! எல்லாவற்றிலும் வெற்றியடைய நினைப்பவள் . கொஞ்சம் பிடிவாதமும் உண்டு.அவள் துவண்டு போய் நாங்கள் பார்த்தது 2022 இல் அவள் நோய்வாய்ப்பட்டபோதுதான் . 


வருடங்கள் ஓடின ! ஒருநாள்  ,என் இரண்டாவது அண்ணன் அவளை விரும்புவதாக,அவள் என்  அம்மாவிடம் கூறினாள் !எனக்கும் அவளுக்கும் ஒரு வயது தான் வித்தியாசம் . அவள் என்னைவிட ஒரு வயது மூத்தவள் . 'உன் திருமணம் தடைபட்டுப்போவதால் , அவன் திருமணமும் இழுவையில் இருக்கு , சீக்கிரம் உன்னை அனுப்பிவைக்கவேண்டும் என அம்மா நச்சரித்தபடியால் நானும் திருமணம் செய்துகொண்டேன்!அவள் திருமணமும் இனிதே நடந்துமுடிந்தது . 1999 இல் என் வீட்டு மருமகளாக ஆகினாள் .

நான் 1999 இல் அக்டொபரில் பிரசவித்தேன் , அவள் 2000 ஜனவரி மாதம் என மூன்று  மாதங்கள் இடைவெளி விட்டு பிரசவித்தாள் . அனைத்திலுமே இருவரும் ஒருவரையொருவர் பின் தொடந்து கடந்து வந்தோம்!என் பிள்ளைகளைத் தைரியமாய் அவளிடம் விட்டு விட்டு நான் வெளியே போவேன்.ஒரு வகையில் என் பிள்ளைகளை அவள் பார்த்துக்கொண்டதாலோ என்னவோ ,நான் நிறைய வெளியுலகம் போக தொடங்கினேன் . 

 அதனாலோ என்னவோ என் பிள்ளைகள் ,அதிலும் என் மகன் அவளுக்கு இன்னொரு பிள்ளையாக வளர்ந்து வந்தான் ! என் பிள்ளைகளுக்கு மாற்றாந்தாய் என்றும் கூறுவேன் (அனைத்திலுமே இருவரும் ஒருவரையொருவர் பின் தொடந்து கடந்து வந்தோம்!இந்த  தொடர்ச்சி அவள் இந்த ஆகஸ்ட் மாதம் பயணித்த , கயிலை பயணத்தில் மட்டுமே என்னைத் தட்டிக்கழித்தது !அது எதற்காக என இன்னமும் விடை தேடுகிறேன் ! 

மிகவும் திறமைசாலி , அனைத்து வேலைகளும் செய்வாள் . வீட்டு வேலையும் சரி ,வெளி வேலையும் சரி எல்லாம் அவளுக்கு அத்துப்பிடி . என் அண்ணனின் தேருக்கு சாரதி அவள்!தையல் கலை அவளுக்கு கைவந்த கலை .நிறையை கலைகளை கற்று தேர்ந்தவள் !பெயருக்குத் தகுந்ததுபோல கலைமதி !  துணி தைப்பது ,வண்டி ஓட்டுவது என பல வழிகளில் என்  அண்ணாவுடன் சேர்ந்து வருமானம் தீட்டி ,இருவரும் எங்கள் குடும்பத்தில் ,பொருளாதார ரீதியில் சிறப்பாக முன்னேறி வந்தனர் . 


அண்ணாவுக்கு அவளை விட படிப்பு குறைவு , ஆனாலும்  வாழ்க்கையில் ஒரு முக்கிய மனிதராக அண்ணனைக்  கொண்டு வந்தாள். மூன்று பையன்கள்! பிள்ளைகளையும் அவள் எப்படி வளர்ந்தாலோ, அவளைப்போலவே சுயமாக அனைத்து வேலைகளையும்  செய்யக் கற்றுக்கொடுத்தாள்.ஆனால் நாங்கள் பெண்பிள்ளைகள் எங்களுடைய ஆண்பிள்ளையை அப்படி வளர்க்கவில்லை , அனைத்தையும் நாங்களே செய்து கொடுத்து பழக்கப்படுத்திவிட்டோம்! 


ஒருகால கட்டத்தில் உழைப்புக்கு  கொடுத்த முக்கியத்துவத்தை அவள் உடல் நலத்துக்கு கொடுக்காதபடியால் , நோய் அவளை அனைத்துக்கொண்டது .பல போராட்டங்கள் ,அவளின் மனவலிமையால் அனைத்தையும் தாண்டி வந்தாள் !அதற்குப் பிறகு அவள் ரொம்ப மாறினாள் .உடல்நிலையில் சற்று பின் தங்கிப்போனாள் .அப்போதே அவளுக்கு மரணபயம் தொற்றிக்கொண்டுவிட்டது !'யாரையும் விலக்கிவைக்காதீர்கள் ,குடும்பத்தில் எல்லோரும் ஒற்றுமையாய் இருப்போம்  என வலியுறுத்தி வந்தாள் .


ரொம்ப நல்லவளாக இருக்கவேண்டும் என எப்போதும் எல்லோருக்கும் நல்லது செய்யத் தொடங்கினாள்.'இல்லை , முடியாது' என்று சொல்லவே மாட்டாள் .ஒரு விஷயம் சரியில்லை என்றாலும் ,பிறர் மனம் நோகாமல் இருக்க ,அதனை சரி செய்ய பார்ப்பாள் .எதிரியாக யாரையும் நினைக்கக்கூடாது என நினைக்காத தொடங்கினாள் . அனைத்து உறவினர்கள் மனதிலும் இடம் பிடித்தாள்!நாங்கள் எங்கே போனாலும் ,எங்களுடன் ஒட்டிக்கொள்வாள் .என் அம்மாவுக்கு வலது கைபோல இயங்கினாள் .மாமியார் மெச்சிய மருமகள் அவள்.'அம்மாவின் இறுதி  காலங்களில் நீதான் அவங்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என அடிக்கடி நான் சொல்வேன். 'அம்மாவை தாஜா பண்ணி வைத்திருக்கும் மருமகள் 'என கிண்டல் செய்வோம் ! ஆனால் அனைத்தும் தலைகீழாக மாறிப்போச்சு! 


படித்து முடித்து பிள்ளைகள் வேலைக்குப்  போக தொடங்கியவுடன் நிறைய பயணம் செய்யத்தொடங்கினாள்.அவள் தம்பி , அக்கா என அவர்களுடன் அடிக்கடி வெளியே போய்வந்தாள் .கடந்த ஜூன் மாதம் 2026இல் ,அண்ணனின் கடைசி பையனுக்கு லங்காவி தீவில் காலேஜ் கிடைத்தபோது அவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கும் அண்ணனுக்கும் !அவன் மட்டுமே இன்னும் மேல் படிப்புக்குப் போகவில்லை என புலம்பிக்கொண்டிருந்தார்கள் கணவனும் மனைவியும் . அதுவும் நல்லபடியாக அமைந்தது . பையனின் வயது 19.

கடந்த 2026 ஜனவரி மாதம் தொடங்கி ,நானும் அவளும் கைலாய மலைக்குப்போக எண்ணினோம் . 'சரி வா போகலாம்' என இருவரும் , ஒரு ஏஜெண்ட்  புலன குழுவில்  இணைந்து பயிற்சிகளை மேற்கொண்டோம்.மார்ச் மாதம் கொஞ்சம் பணம் கட்டிடவேண்டும் காரணம்  ஜூலை மாதம் கையிலைக்குப்  போகவேண்டிய நாளும் உறுதியாகியது !அந்த சமயம் வெளிநாடுகளில் போர் வெடிக்கத் தொடங்கியது. 'போகலாமா வேண்டாமா' என யோசித்து யோசித்து போகலாம் என தீர்மானித்தோம் .அப்போது கூட அவள் என்னை அழைத்து ,'போர் நடப்பதால் ,பயணத்தை ரத்து செய்யலாம் என அரை மனதுடன் கூறினாள் .'அதனால் என்ன போகலாம் என நான் சொல்ல,'உன் கூட போனால்தான் எனக்கும் அனுமதி உண்டு  , இல்லையென்றால் நான்  போக முடியாது .சரி இருவரும் போகவேண்டாம், நீயும் போகாதே' என உறுதியாக அவள் கூறியபடியால் , நானும் புலனக்குழுவில் இருந்து விலகிக்கொண்டேன்.விடைபெற்றுக்கொண்டேன் . 


 ஒரு  கட்டத்தில் என் மனம் லேசாய் மாறியது ,எப்படியாவது போகலாமா என அவளிடம் கேட்டபோது,உன் அண்ணனின் வேலையில் பிரச்சனை நான் எங்கே போவது ?என்று கவலையாக கூறினாள் .விதி எனக்கு பண உருவில் வந்தது! முற்றிலும் கயிலைப் பயணத்தைத் தவிர்க்க ஒரு காரணம் கிடைத்தது . என் மகன் பயன்படுத்தும் கணவரின் 20 வருடங்கள் ஆன கார் ,பல பிரச்சனைகள் என அடிக்கடி சொல்லுவான் .எங்கோ இருக்கும் கயிலைக்குப் போவதை விட ,அருகில் இருக்கும் மகனுக்கு உதவ வேண்டும் என  பயணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை அவன் புதிய காருக்கு பயன்படுத்திகொண்டேன்.'இந்த வருடம் என்னால் போக இயலாது , பணம் பற்றாக்குறை 'என அனைவரிடமும் சொல்லிவிட்டேன்.


மே மாதம்  ,திடீரென ஒரு நாள் அவள் என்னை அழைத்து 'நாங்கள் சேமிக்கும் பணத்தை ,அவரவர் முறை வந்ததும் அவர்களுக்கு கொடுப்போம் , அந்த பணத்தை  கொஞ்சம் விரைவாக எனக்கு ஏற்பாடு செய்து  கொடுக்கமுடியுமா ?என்றாள் .'என்ன விசேஷம் என கேட்டேன் .நான் வேறொரு குழுவினரோடு கயிலைக்கு போகிறேன் 'என்றாள்.ஏன் இந்த முடிவு ? இருவரும் ஒன்றாக போகலாம் என முடிவெடுத்தோம் ,உனக்கு என்ன அவசரம் என்றேன் . 'இல்லை அடுத்த வருஷம் உடல் நிலை எப்படி இருக்குமோ அதான் என மென்று விழுங்கினாள் . சரி என்று கூறினாலும் , எனக்கு திருப்தி இல்லை . 


ஆனாலும் பணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்தேன்.கோவிலுக்குப் போக என்னால் முடிந்த உதவி அது  !21/8 /26 அவள் பிறந்த நாள் ,ஆகவே 20/8/26 முன்கூட்டியே நானும் என் தங்கையும் என் அம்மாவோடு அவளை அழைத்துக்கொண்டு சாப்பிட போனோம் . அவள் முகம் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை .அவளின் கயிலை பயணம் 23/8/26.

மறுநாள் 21/8/26 பிறந்த நாள் அன்று,மீண்டும் மலேசியாவின் புகழ்பெற்ற  ஏபிசி எனப்படும் (ஜிகர்தண்டா போல )ஐஸ்  பானம் குடிக்கச் சென்றோம் . அங்கும் அவளுக்கு எதோ ஒரு சோகம் இருப்பதை உணர முடிந்தது . பிறகு 23/8/26 காலை,என் மூத்த  அண்ணனின் மகள் ,அழைத்தது 'அத்தை ,பாப்பா அம்மாவை (என் அண்ணியை ) சாப்பிட அழைத்துப்போகிறேன் .இன்று அவங்க நேபாள் போகிறார்கள் , அதான்  அத்தை . நீங்களும் வாங்க' என்றாள் .மகளும் சரி வாங்க போகலாம் என்று ,என் அம்மா ,என் மூத்த அண்ணி என ஆறு பேர் சென்றோம் . அங்கேயும் அவள் என்னம்மோ சிந்தனையில் இருந்தாள்.சாப்பிட்டுவிட்டு ,எனக்கு மற்றொரு வேலை ,அதனால் விரைவாக  கிளம்பினோம் . 


மூன்று நாட்கள் நல்லபடி கழிந்தது!27/8/26 காலையில் என் மூத்த அண்ணன் ,சமய வகுப்பில் இருந்த என்னை அழைத்து ,'பாப்பா நேபாள் போனது பற்றி உனக்கு ஏதும் தெரியுமா என்றார்? ஒண்ணும் தெரியாதே ,ஏன் 'என கேட்டபோதுதான் ,அண்ணன் அந்த துக்கத்தைக் கூறினார் . நேற்று நேபாளில் ஏற்பட்ட வெள்ளத்தில் ,இமிகிரசன் கட்டிடத்துக்கு அருகில் இருந்த அனைவரும் மாயம் ! போய் செய்தியை பார் என்றார்.பாப்பாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார்.அதிர்த்துபோனேன்! வியர்த்துக்கொட்டியது , இருந்தாலும் அப்படி இருக்காது என என் சகோதரிகளோடு ஆறுதல் பேசிக்கொண்டோம் .



 மலேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ,காணாமல் போன பட்டியலில் அண்ணியின் பெயரும் இருந்தது ,படமும் இருந்தது . அப்போதான் அந்த செய்தி உண்மை என நம்ப தொடங்கினோம் !எங்கள் வீடு அலங்கோலமாய் ஆனது! அப்போ தொடங்கிய எங்கள் குடும்பத்தின் அழுகை இன்னும் ஓயவில்லை .எளிதில் எதற்கும் அழாத என் அம்மா, நிலைகுழைந்து போனார் ! என் வீடு இருளில் மூழ்கியது . அன்று என் குடும்ப புலனக்குழுவில், புலம்ப தொடங்கிய என் அண்ணா இன்னும் நிறுத்தவில்லை .'என்னோடு சிரமப்பட்டவள் .இன்று என்னிடம் சொல்லாமல் போயிருச்சி என மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறார் . 'என் தலை மேல் பாரத்தை வச்சிட்டுப்போயிட்டியே , நானும் உன்னோடு வருவேன்' என அம்மாவின் அழுகை !உண்மையில் இது எங்களுக்கு மிகப்பெரிய தண்டனை ஆனால் என் அண்ணியின் ஆன்மாவுக்கு அதுதானே வேண்டும் ! 


 பையன்கள் ஓரளவு எங்கள் முன்னால் எதையும் காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும் ,அறையில் என்ன செய்தார்களோ ? அதைப் பார்க்கவோ , கேட்கவோ கூட எங்களுக்குத் தெம்பு இல்லை . 'சிவன் சிவன் என போன உங்க வீட்டு மருமகளுக்கு இந்த கதியா ?என சிலர் அறியாமையில் கேட்பதும் மிகுந்த வலியைக் கொடுக்கிறது . நம் விருப்பத்துக்கு இறைவன் கொடுக்கமாட்டான்,எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனாயிற்றே!

 இருபது வயதை தொட்டு விட்டு ஓரளவு உலகம் புரிந்த பிள்ளைகளுக்கு நீ வேண்டும் ,  எங்களுக்கு நீ வேண்டும் ,என் அண்ணனுக்கு நீ வேண்டும் , என் அம்மாவுக்கு நீ வேண்டும் என தினம் தினம் அழுதுகொண்டிருக்கும் எங்களுக்காகவே என்னவோ?அன்றைக்கு உன்னுடன் பயணித்து மாயமாய் போன ஒரு மகளின் தாய் பற்றிய  வேதனையை ஒருவர் சொல்லக் கேட்டேன் ! என் மகள் ,அவ பதினோரு வயது மகளை என்னிடம் விட்டு விட்டு ,போயிட்டு வருகிறேன் , பிள்ளையைப் பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா என கிளம்பினாள் என் இன்னொரு மாற்றுதிறனாளி மகளையும் ,என்னுடன் விட்டுப்போய்விடடாள் !அம்மா எப்போ வருவாள் என கேட்கும் என் பேத்திக்கு என்ன ஆறுதல் சொல்வேன் என அந்த வயதான தாய் சொன்னது , ஏனோ நமக்கும் கீழே உள்ளவர் கோடி என கண்ணதாசன் பாடல் வரிகள் என் நினைவுக்கு வந்தது ! 



பாப்பா நீ எங்கே போனாய் என்பது மட்டுமே எங்களுக்குத் தெரியும் ! ஆனால் நீ இப்போ இருக்கிறாயா ? இல்லையா என்பது உனக்கும் அவனுக்கும் மட்டுமே தெரியும் ! உன் விருப்பம்போல உனக்கு முக்தியா ?அல்லது வினையா ?அல்லது எங்களின் வினைக்கழிவா ?என்னவென்று இந்த இழப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வது ? நீ மீண்டும் (உயிருடன் ) வரவேண்டும் என்பது பேராசை ! நீ மட்டுமே உயிரோடு வரவேண்டும் என்பது எங்களின் சுயநலம் !காணாமல் போன ஐயாயிரம் மக்களுமே திரும்பி வரவேண்டும் என்பது அனைத்துக் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுதல் , பேராசை ,நைப்பாசை ! 

எது எப்படியோ ,நீ மீண்டும் எங்கள் குடும்பத்தில் வந்து பிறப்பாயா ? யார் அறிவார் !ஏதோ ஒரு பிறப்பில் நாம் செய்த வினை, இந்த பிறவியில் சந்தித்துக்கொண்டோம் ! .என்றாவது ஒரு நாள் நீ என்னைத் தொடர்பு கொள்வாய் என்ற நம்பிக்கையில் உன் தொலைபேசி எண்களை அழிக்காமல் வைத்திருக்கிறேன் ஒரு பைத்தியம் போல !  உன் இடத்துக்கு ,நாங்கள் அனைவரும் எந்த நேரத்திலும் வருவோம் என்பது திண்ணம் அதனால் தானே ஆடவல்லான் சுடுகாட்டில் அனைவரையும் வரவேற்க காத்துக்கொண்டிருக்கிறான் ! 

இந்த பதிவு நீ எங்களை விட்டுப்போய் ,மூன்று மாதங்கள் நிறைவடைய போகும் 26/11/26 தினத்துக்கு சமர்ப்பணம் ! 


                                கயிலை மலையானே போற்றி !போற்றி !