Friday, 1 February 2013

மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுளா?

பிளிஸ் இதைக்கொஞ்சம் படிங்க!

மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது எவ்வாறு உண்மையாகும்?
மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்குமா என்பது ஒரு விசித்திரமான கேள்வி என்று முதற்பார்வையில் நமக்கு தோன்றலாம்.மன்னிப்பவருக்கு எப்படி ஆயுள் நீடிக்கும்?மன்னிக்கப்பட்டவருக்கு ஆயுள் நீடிக்கும் என்பதில் அர்த்தமிருக்கின்றது’என்றெல்லாம் கேட்டாலும் கேட்கலாம்.மேலும் மன்னிக்கும் போது நம் கோபமும் ரோசமும் மனதுக்குள் அடக்கிவைப்பதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதல்லவா நிஜ விளைவு என்றும் நாம் எண்ணுவதிலும் விசயமிருக்கு.

நமக்குள்ளிருக்கும் உணர்ச்சிகளை வெளியேற்றி விடுவோமானால் விறைப்பிலிருந்து விடுபட்டு உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி பிறக்கும் என்று அறிந்த ஒன்றே.ஆனால் மன்னிக்கிறவன் உணர்ச்சிகளை மனதுக்குள்ளேயே ஒதுக்கி வைத்திருக்கும் நீடித்த ஆயுளை பெறுவான் என்பதிலும் சாஸ்திர அடிப்படை இருப்பதாக நாம் உணர்வதில்லை.


பாவம் மனிதத் தன்மைக்குரியதும் மன்னிப்பு இறைவனுக்குரியதும் என்பது மத போதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.ஆனாலும் மன்னிப்பும் நீடித்த ஆயுளும் எவ்வாறு சம்பந்தப்படிக்கின்றன என்பதை அமெரிக்காவில் மிசிகன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
ஒருவருக்கு மன்னிப்பளித்ததும் அவரிடம் கருணை காட்டியதாக உணரும் நற்சிந்தனை மன்னிப்பவருக்குள் உருவாகின்றதனால் அவர் மகிழ்வுறுகின்றான்.ஆனால் தண்டனை அளிக்கும் போது குற்ற உணர்ச்சி அவரைத் துரத்தி வருவதும் மன நிம்மதியை அழிப்பதுமே விளைவுகள்.


மகிழ்வுற்ற மனதுடையவனுக்கு நீடித்த ஆயுள் உண்டாகும் என்பதையே டாக்டர் லாரன் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்.

(இன்று வாங்கிய ஒரு புத்தகத்தில் படித்தை பகிர்ந்து கொண்டேன்)

Saturday, 12 January 2013

அனாமேதய அழைப்பு

                                                                                   
        சற்றுமுன்பு போனில் ஓர் அழைப்பு .’ஹலோ வணக்கம் செல்வி ,எப்படி இருக்கிங்க,முன் பின் கேட்டிராத குரல்.நம்பரும் தெரியாத நம்பர்.’நலம்’என்றேன்.நான் (ஒரு வங்கி பெயரைச் சொல்லி) அதில் குழந்தைகள் காப்புறுதி பாலிசி செய்கிறேன் ,நீங்கள் ஓர் ஆசிரியர் என்று நினைக்கிறேன் .அதான் உங்களோடு பேசணும்?இப்போ எனக்கு புரிந்து விட்டது.’என் நம்பர் எப்படி கிடைத்தது?என்றேன்.

         ’இங்கே கோவிலில் உங்கள் பள்ளியின் விளம்பர தாள்களைப்பார்த்தேன் .அதிலிருந்து எடுத்து அழைக்கிறேன்.நீங்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ,அதான் உங்களை வந்து பார்த்து கொஞ்சம் பேசணும் செல்வி’மறுமுனையில்.அடடா !என்ன நல்ல எண்ணம்?நான் நலம் பெற ,நலன் விரும்பிகள் வராங்களே?மேலும் தொடர்ந்தார் ,அரை நாள் பள்ளி முடிந்து வீட்டில் என்ன செய்யறிங்க செல்வி ,ஒரு முயற்சி பண்ணலாமே ,பணமும் கிடைக்கும் ,நிறைய அனுபவங்கள் கிடைக்குமே?என்ன அக்கறை என் மேல்?

            ’சார் எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை சார்.என் வேலை ,டிரான்ஸ்போர்ட் ,டீயுசன் ,என் பசங்க ,அவுங்க பள்ளி பாடங்கள் (மேலும் முகநூல் ,இது ரொம்ப முக்கியம் அல்ல)தேவாரம் வகுப்பு ,சித்தாந்தம் வகுப்புன்னு.சோ ,நீங்கள் நினைப்பதுபோல எனக்கு நேரம் ரொம்ப இல்லை சார் என்று முடிப்பதற்குள் ,’செல்வி நீங்கள் ரொம்ப படபடப்பாக பேசறிங்க,எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிருக்கிங்க ,முதலில் நான் வந்து என்னுடைய ப்ளான என்ன என்று சொன்னால் உங்களுக்கு ஆசை வரும் ,புரியும் பிறகு நீங்களாகவே செய்விங்க?’.இப்படி எத்தனை நலன் விரும்பிகளப் பார்த்திருப்போம்.’சார் அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் சார்.நீங்கள் வேற ஆளைப்பார்க்கலாம்’என்றேன்.’என்ன முடியாது ,அப்படி என்ன பிசி?கொஞ்சம் குரலை உயர்த்தியபடி..இது எப்படி இருக்கு?என் ஸ்கேடியுலைஅவர் படிக்கிறாராம்?ஹ்ம்ம் அப்புறம் என்னத்த சொல்ல?

                  நான் தொடர்ந்தேன்’சார்  ஒருவருக்கு நேரம் ஒதுக்கி அவர் வந்து என்னிடம் பேசிவிட்டு ,பிறகு வேண்டாம் என்று சொல்வதை விட ,என் நிலையை விளக்குவது என் பொறுப்பு சார் ,அப்புறம் நீங்க சகிச்சிக்கிட்டு போககூடாது ,அதான் ஆரம்பத்திலே கட் பண்ணுகிறேன்’என்றேன்.
அவர் அடுத்து சொன்ன சொல் எனக்கு இரத்தம்  சூடேறி மண்டைக்கு டிங் டாங் அடித்தது போல் இருந்தது .’என்னங்க கொஞ்ச நேரம் ,உட்கார்ந்து டிவி பார்க்க நேரம் இருக்கும் ,சீரியல் பார்க்க நேரம் இருக்கு ,இதுக்கெல்லாம் நேரம் ஒதுக்ககூடாதா?அவர் வீட்டில் அவர் மனைவி செய்வதை எல்லா மனைவிகளும் செய்வாங்கன்னு அவர் நினைப்பது பக்கா தவறுதானே?இதுக்கு நான் அமைதியா பதில் சொல்ல முடியுமா?பெட்டை சிங்கள் கர்ஜிக்கும்தானே?


         ‘ஹலோ சார் ,நீங்க பார்த்த பெண்கள் அப்படின்னு என்னையும் அந்த லிஸ்டில் வச்சிடாதிங்க சார்.எனக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு ,மேலும் என் கணவரும் வங்கியில்தான் வேலை செய்கிறார்.இதுவெல்லாம் எனக்கு புதிய விசயம் அல்ல(பாலிசி)என்றேன்.இங்கே அவர் கொஞ்சம் எச்சிலை விழுங்கினார்.பிறகு சுதாகரித்துக்கொண்டு ,அப்படின்னா நீங்கள் இருவருமே சேர்ந்து வந்து என்னை சந்திக்கலாமே;என்றார் ஆர்வமாக !ரெண்டு பேர் பிசினசில் சேர்ந்திடுவாங்களே ,பின்னே ஆர்வம்தானே வரும்?

            சார் என்னையாவது சந்திக்க ஒரு வாய்ப்பு இருக்கு ஆனால் என் கண்வரை அப்படி நினைக்காதிங்க ,உங்க டைம் வேஸ்ட்டாகும் ,அப்புறம் நீங்கள் வருந்த வேண்டி இருக்கும்”என்று எச்சரித்தேன்.நம்ம 14 வருசம் (வனவாசம்) குப்பைக்கொட்டுறோமே தெரியாதா?இப்போ அவர் புத்திசாலித்தனமாக பேசுறாராம்.’என்னங்க செல்வி இது ,உங்க விருப்பத்தைதான் சொல்றிங்க ,அவர் விருப்பம் அவருக்குன்னு ஆசை ,எண்ணம் இருக்கும் ,அதுக்குள்ளே நீங்க  உங்களால முடிஞ்ச ரீசன்களை சொல்லி தடுக்கப்பார்க்கறிங்களே?என்றார்.ஒன்னு பட்டு திருந்தனும் இல்லை ,கெட்டு திருந்தனும்.அவர் இரண்டையும் ஒன்று சேர அனுபவிக்க நினைக்கிறார் போல?
   
          ’சார், என் ஆண் நட்புகளோடு நான் வெளியே போக எனக்கு அனுமதியுண்டு ,அவர்கள் என் வீட்டு வரவும் அனுமதியுண்டு ஆனால் வியாபார ரீதியில் வீட்டுக்கு ஆட்கள் வருவதை அவர் ஒத்துக்கொள்ளமாட்டார்’என்றேன்.பயப்பட வேண்டாம் ,நான் என் மனைவியுடன் வருகிறேன் .ஒரு 10 அல்லது 15 நிமிடம் பேசினால் அவர் மனம் மாறலாம் ‘இப்படி இரு பேராசை அவருக்கு பாவம் ?ஒரு நாள் என் கணவரின் நெடுநாளைய நண்பர் ஒருவர் ,இரவில் போன் செய்து ,உன் வீட்டு முன்னால் நிக்கிறேன் ,கதவைத் திற ‘என்றார்.(இது ஓர் உண்மை சம்பவம்).என் கணவரும் ‘அடடா சொல்லாமல் வந்துட்டியே,இரு வரேன் என்று டிவியை ஆஃப் செய்து வி.ட்டு போனார்.நல்லவேளையாக நண்பர் ,’இல்லை ஒரு பிசினஸ் விசயமாக பேச வந்தேன் ,அதான் ‘என்றார்.வெளியே எழுந்து போன கணவர் ,அப்படியே உடகார்ந்துவிட்டு , டேய் நாங்கள் எல்லாம் உறங்கி விட்டோம் ,வேறுநாளில் வா’என்று அலட்சியம் செய்து அனுப்பிவிட்டார்.

                பிறகு சில வருடங்கள் அதே முயற்சியில் சற்றும் மனம் தளராமல் மீண்டும் போன் பண்ணினார் அந்த இரவு நண்பர் .அதே இரவு பத்து மணிக்கு .நானும் என் மனைவியும் வீட்டு வருகிறோம் .நாங்கள் உடல் ஸ்லிம்மிங் டிரெஸ் விக்கிறோம்.என் மனைவி உன் மனைவியிடம் பேசனுமாம்.இதோ வருகிறேன் ‘என்று ஆர்வமாய் சொல்ல ,என் கணவர் வெளியே போனார்.ஒரு பத்து நிமிடம் கழித்து வீட்டுக்குள் வந்து ;நமக்கு வேலை வெட்டி இருக்கு ,இவர்கள் வந்து லெக்சரிங் செய்யும் நச்சரிப்பை காது கொடுத்து கேட்க எனக்கு நேரமில்லை .இனிமேல் பிசினஸ் விசயமாக என்னைப்பார்க்க வரவேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றார் கோபமாக.ஆனால் என் கோபமோ வேறு ,அதெப்படி ஸ்லிம்மிங் டிரெஸ்  அதுவும் என்னிட்ம்?என்னைப்பார்க்க அவ்வளவு குண்டாகவா இருக்கு?இனி அந்த மனைவியோடு பேசுவதில்லை.நமக்கு இதுவெல்லாம் மானபிரச்சனையாச்சே?நான்சென்ஸ் ஃபெல்லொவ்.ஆனால் இந்த கதையை நான் அவரிடம் போனில் சொல்லவில்லை.

         அப்படிப்பட்ட என் கண்வரிடம் இவர் பிசினஸ் பேசப்போகிறாராம்.அதுக்கு நான் உடன் வரனுமா?சரிங்க செல்வி ,இருங்க உங்களுக்கு பயமா இருந்தால் ,என் மனைவியிடம் பேசுங்களேன் என்று போனைக்கொடுத்தார்.சரிதான் கணவன் மனைவி சேர்ந்தே அறுப்பாங்க போல.என் இன்னர் வாய்ஸ்?அம்மா செல்வி எப்படிம்மா இருக்கறிங்க?என்னைப் பலநாள் தெரிந்தது போல ,பேசினாங்க அந்த மனைவி.நலம் என்றேன்.அங்கிள் சொல்வதுபோல ,ஒரு 10 நிமிசம் டைம் கொடும்மா,நாங்களும் அப்படித்தான் எதிலும் ஆர்வம் இல்லாமல் ,ஆனால் இப்போ நல்லா சம்பாதிக்கிறோம்ம்மா,என்று அளந்தாங்க!

               சரி இனி இதை ஒரு முடிவுக்கு கொண்டு வரனும் என்று ’சரிம்மா ,என்னால் யாராவது முன்னேறினால் எனக்கும் சந்தோசம்தானே ,சோ ஒருநாளைக்கு என் பள்ளி பெற்றோர்கள் ஒன்று கூடும் மீட்டிங்கில் ,உங்களை அழைக்கிறேன்,உங்கள் கண்வரை வந்து பேச சொல்லுங்கள்’என்று முடிப்பதற்குள் ,அந்த மனைவி ,ஐயோ ரொம்ப நன்றி ,என்னங்க இங்கே ஓடியாங்க ,அவுங்க உங்களை அவுங்க ஸ்கூலுக்கு வர சொல்றாங்க ‘என்றதும் ,அந்த அங்கிள் போனில் ,அம்மா ரொம்ப நன்றிம்மா ,உடனே சொல்லும்மா ,எப்போ வரனும் ,சீக்கிரம் முடிவு பண்ணும்மா.உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்பாய்.இப்போதான் எனக்கு புடிச்ச மாதிரி பேசற !எப்படி இருக்கு?

          நானும் ‘சரிங்க ,எனக்கு நேரம் இருக்கும்போது சொல்றேன் ஆனால் என் பெற்றோர்களை நச்சரித்தால் அப்புறம் நானே எல்லோரிடமும் உங்க போனை அவொய்ட் பண்ண சொல்லுவேன் ‘என்றேன்.இல்லைம்மா ,இல்லைம்மா நீ இவ்வளவு தூரம் உதவி செய்வதே மேல் ‘என்று முடித்தார்! அவர் இலக்கு என்ன என்பதை சரியாக புரிந்து கொண்டேன் ,நச்சரிப்பு தொடராமல் இருந்தால் சரி,ஆனாலும் அவர் கடைசி வரையில் ,உங்கள் பள்ளிக்கு என்னால் ஆன ஏதாவது உதவிகளை செய்கிறேன் என்று சொல்லவே இல்லை ,அதான் எனக்கு இன்னும் ஆச்சரியம் போங்க.

Tuesday, 8 January 2013

என்.ஜி.ஓவிற்கு ஒரு மடல்



    I am Ms.Selvi ,a head teacher  from Tadika Sinar Cahaya Jaya working with CHILD  since 2005.First of all I would like to express my greatest gratitude for having  confidence in joining myself as a CHILD teacher. I was literally learned and improved myself as an early childhood educator once involve myself with this organisation.CHILD  is a non profit organization that carry out many benefits for both teachers and their children.We as teachers ,really enjoying many facilities which are difficult to be matched by other private kindergarten.

      A non profit organization with abundance experience in early child education under  the leader ship of Dr.Ingkaran and his devoted team  managing teaching curriculum and methodology. CHILD  prepared experienced teachers who are constantly being exposed and trained by qualified trainers from HPP. A sound start from Tamil education  embarks every parents to register their children in CHILD kindergartens. .Many tamil preschools has come across various change and lots of improvement as well progress throughout the period since  CHILD adopted  them.It was not an easy task to achive this present status.It cannot be denied also that many bodies have played their role for the current status.

     Our  annual  combine activities among Selangor preschools  like sports ,story telling ,tevaram competition and graduation helping our CHILD children to upgrade themselves in both academic and co-curriculum. Monthly meetings and workshops also an important  activities for CHILD teachers  .Helping others problems and find solution in both teaching and learning is a golden opportunity  when work as a team.

    No doubt  to say that CHILD has mold and put it’s utmost attempt to create and produced skilled teacher to our society.I take this opportunity to thank Dr.IyangkaranKunaletcuhmi  for their kind support and  service towards tamil preschools and their teachers.

Tuesday, 25 December 2012

இறக்கும் வரை நடைபிணமாகவே வாழ்ந்தான்

                                                                                         
  இன்றோடு என் நண்பனும் என் தோழியின் காதலனுமான திரு.போல் அண்டனி இறந்து 12 வருடங்கள்.எனக்கு என் தோழி அறிமுகமானது நாங்கள் இருவரும் வேலை நிமித்தமாக ஜப்பான்  சென்ற போது ,ஒரே அறையில் தங்கினோம்.போல், அவர் காதலி ,நான் மூவரும் இதற்கு முன்பு பார்த்துதுண்டு ,ஒரே கம்பெனியில் வேலை செய்தோம்  ஆனால் பேசியது இல்லை.போல் உயர்பதவியில் இருந்தவர் ,எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன் கொஞ்சம் proud என்றே நினைத்தேன். போல் அடிக்கடி அவளோடு ஜப்பானுக்கு போன் பண்ணி பேசுவார் ஆனால் போன் பண்ணும்வேளைகளில் அவள் இல்லாவிட்டால் என்னோடு பேசுவார்.’செல்வி அவளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்,அவள் என் உயிர்’என்றெல்லாம் உருகுவார்.போலும் அவர் காதலி இருவருமே கிறிஸ்துவர்கள்.மேலும் இருவருமே ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவார்கள் .என் தமிழ் போலுக்கு ரொம்ப பிடிக்கும் என்பார்.

             அவர்கள் காதைலைக்கண்டு பொறாமைப்படாத  ஆட்களே இல்லை.
     ஆனால் எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை  பட் என்னையும் இப்படி யாராவது காதலிப்பார்களா”என்று ஏங்கியதுண்டு.அப்படி ஒரு காதல்.போல் அவளை மனைவி தன் மனைவி  என்றே சொல்லுவார்.போலின் காதலி ,யூரேசன் என்று அழைக்கப்படும் கலப்பு திருமணத்தில் பிறந்தவள். அப்பா தமிழ் ,அம்மா யூரேசன் ,ஆகவே அவளுக்கு வெள்ளைக்காரர்கள் பழக்க வழக்கம் அதிகம்.ஜப்பானிலிருந்து திரும்பிய சில மாதங்களில் அவள் வேலை மாற்றலாகி சென்றாள்.போல் எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை.போலின் பயமே ,அவள் யாரிடமாவது பழகி மனம் மாறிவிடக்கூடும் என்ற காரணமே.இறுதியில் நடந்ததும் அதுதான்.போன இடத்தில் வெள்ளைக்காரனைப்பார்த்ததால் ,கருப்பு போலைக் கை கழுவினாள்.வெளியூருக்கு பறந்தாள்.மீண்டும் வந்தாள் ,மீண்டும் பறப்பாள்.போலும் வசதியானவர்தான் ஆனால் குடும்ப சுமை அவர்மேல் நிறுத்தப்பட்டது.ஆகவே இவளுக்கு சுமை எல்லாம் சுமக்க முடியுமா என்ன?போல் இடிந்து போனார்.என்னிடம் அழுதார்.நண்பர்களிடம் அழுதார்.காலில் விழாத குறையாக கெஞ்சினார்.நடைபிணமானார்.ஒருமுறை ,போலுக்காக அல்ல அவரின் காதலுக்காக அவளோடு பேசினேன்.அவள் சொன்னது ‘அவருக்கு அவர் குடும்ப சுமை ,வேலை அதிகம் ,சோ என்னால் வெயிட் பண்ண முடியாது!’இனி நான் என்ன பேசமுடியும்.

              ‘நீங்களாவது சொல்லுங்க செல்வி அவளிடம் ,அந்த வெள்ளைக்காரனெல்லாம் ,பாசமாக இருக்கமாட்டான்.காமம்தான் பெரிதாக நினைப்பான் ,அவளை அனுபவித்தவுடன் தூக்கி வீசிச்செல்வான் என்று வெட்கத்தை விட்டு என்னிடம் பேசினார்!எனக்கோ செய்வதறியாது வாயடைத்துப்போனேன்.இந்த அளவு ஒரு ஆண் என்னோடு பேசும் ஒரு நட்பாக நான் போலைக்கருதவில்லை ,அப்படி ஒரு நெருக்கமும் இல்லை.போலும் அந்த அளவுக்கு தரம் இறங்கி பேசும் ஆடவரும் இல்லை .அப்படி பேசுகிறார் என்றால் அந்த அளவுக்கு உடைந்து போயிருக்கார் என்று என் மனம் குமுறியது.என்னோடெல்லாம் பேசுவதற்கே யோசிக்கும் போல் ,இப்படி உரிமையோடு பேசுகிறார் என்றால் ,ஜப்பானில் நான் அவளைக் கவனித்துக்கொண்ட விதம்.மூச்சுக்கு மூச்சு என்னை ,உடன் பிறவா அக்கா ,அக்காவென சொல்லிக்கொள்வாள்.போலுக்காக பல மானேஜர்கள் ,உயர்பதவியில் உள்ள சில தமிழர்கள் எல்லாம் அவளிடம் பேசி பார்த்தனர்.வென்றது வெள்ளைத்தோலும் பணமும் மாயையும் மட்டுமே!அந்த காரணத்தால் போல் தன் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

           ஒரு நாள் இரவு  வேலை முடிந்து  நெடுஞ்சாலையில் தூக்கலக்கம் காரணமாக காரை நிறுத்திவிட்டு ,தூங்கும்வேளையில் எவனோ இடித்து விட்டு போய் விட்டான்.மூன்று நாட்கள் கோமாவில் இருந்து ,அப்படியே இறந்தும் போனார்.போலின் அசைவற்ற உடலைக்கண்டு அழாத ஆண்களே இல்லை .சீனன் ,மலாய்க்காரன் என்று அனைத்து நண்பர்களும் அழுதனர்.நான் போல் வீட்டு வாசலை மிதித்தேன்.என் வாழ்வில் நான் என் அப்பாவின் இறப்பைத் தவிர்த்து ,முதன்முதலாக கதறி அழுத ஒரு மரணம் என்றால் அது போலுடைய மரணம்தான்.என்னைக்கட்டியணைத்து அழுத அவருடைய அம்மா ‘என் பையன் அவன் அப்பா மாதிரிம்மா ,இனி ஒவ்வொரு கிறிஸ்மஸ் நாளும் எனக்கு இருள் சூழ்ந்த நாளே.எப்படி என் பிள்ளை இல்லாத நாட்களை நான் கடக்கப்போகிறேனோ?என்று வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதார்.என்னதான் அவள் எடுத்த முடிவு அவள் சொந்தவிசயமோ அவள் வாழ்க்கையோ ,இறைவனிடம் பதில் சொல்லனுமே?அவர் அவளுக்கு செலவழித்த பணத்தையோ பொருளையோ திரும்ப கொடுக்கலாம ஆனால் அவர் உயிரை? என் வாழ்வில் ஒருவளை நான் மன்னிக்கவேமுடியாது  என்றால் அது அவளாகத்தான் இருக்க முடியும்.
                                                                             



                                                                       
                                                                     
                                                                             

Saturday, 22 December 2012

மழலைக்கல்வி என்பது......?

                                                                                 
            இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி திறக்கப்படும் இந்த சீசனில் பல பெற்றோர்களுக்கு பல கவலைகள்.அதாவது தங்கள் பிள்ளைகளின் கல்வியைப் பற்றிதான்..4 வயது குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர் போன் செய்து,’டீச்சர் என் பிள்ளையை இப்போ பள்ளிக்கு அனுப்பலாமா,அல்லது அடுத்த வருடம் அனுப்பலாமா?என பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன!நாம் அனைவரும் தற்பொழுது too ambitious parents என்றால் அது பொய்யா என்ன?
                                                                                 
           மலேசியாவில் கல்வி அமைச்சின் சட்டதிட்டங்களின்படி ஒரு குழந்தை  தனது ஏழாவது வயதில்தான் தன் ஆரம்பகல்வியை அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றான்.அது ஒன்றாம் ஆண்டு .அதற்கு முன் அவன் பயிலும் மழலைக்கல்வி என்பது பெற்றோர்களின் விருப்பமே ,பள்ளிக்கு அனுப்புவதும் ,அனுப்பாமலிருப்பதுவும்.ஆம் கடந்த சில் வருடங்களாகத்தான் அரசு பாலர்பள்ளிகள்(6வயது மாணவர்களுக்கு) ,தற்பொழுது தமிழ்ப்பள்ளிகளிலும்,இயங்கி வருகிறது.அதற்கு முன் 4 -6 வயதுக்குள் ,தங்கள் பிள்ளைகளை மழலைக்கல்விக்கு அனுப்பவிருபும் பெற்றோர்கள் பணம் செலுத்திதான்  அனுப்ப வேண்டும் .இது 4 மற்றும் 5 வயதுக்கு இன்னும் அப்படியே.
                                                  
                                                                                     
         ஆனால் ஒரு குழந்தை தன் அதிகாரப்பூர்வ கல்வியை தொடங்கும் முன் ,தொடக்ககல்வி அல்லது மழலைக்கல்வி எனக்கூறும் preschool education-ஐ அவசியம் ஒரு வருடமாவது அதாவது தனது ஆறாம் வயதில் கற்க வேண்டும் என்பதே மழலைக்கல்வி ஆசிரியைகளான எங்களுக்கு வலியுறுத்தி போதிக்கப்படுகிறது.அதற்காக 4 வயதிலும் ஐந்து வயதிலும் வசதியும் விருப்பமும் உள்ள பெற்றோர்கள் அனுப்பலாம.அல்லது ஒரு சில பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் ,தங்கள் 3 வயது குழந்தையைக்கூட நர்ஸரி மற்றும் டே கேர் போன்ற பராமறிப்பு இல்லங்களுக்கு அனுப்புகின்றனர்.
                                                                                     
                ஓர் ஆசிரியையாக அல்லாமல் ஒரு தாயாக , 4 வயது மாண்வர்களுக்கு மழலைக்கல்வி கட்டாயம் என்றும், அதுவும் அதனை மழலைக்கல்வி மையங்களில்தான் சென்று பயிலவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றே சொல்லுவேன்.ஒரு தாய் வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கும் கற்றுத்தேர்ந்த தாயாக இருந்தால்,குழந்தைகளின் வயதுக்கு ஏற்றவாறு
எழுத்துப்பயிற்சி புத்தகங்களை வாங்கி வீட்டிலே எழுத வைக்கலாம.earlychildhood education சம்பந்தப்பட்ட குறுந்தட்டுகளை வாங்கி கூட குழந்தகளைப் ப்ர்க்க வைக்கலாம்.பொதுவாக 4 வயது மாணவர்களுக்கு play therapy எனும் விளையாட்டின் வழி கல்விதான் மழலைக்கல்வியில் கற்றுக்கொடுக்கபடுகிறது.
                                                                       
            ஆனால் பெரிய அளவில் பணம் செலுத்தி குழந்தைகள் செல்லும் கிண்டர்கார்டனில் பொதுவாக 4 வயது மாணவர்களை கட்டாயப்படுத்தியும் (சிலவேளைகளில் விரல்களில் அடித்தும்)எழுத படிக்க பயிற்றுவிக்கப்படுகின்றனர்.இதற்கெல்லாம் காரணம் ,பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பும்தான்.புள்ளைங்க கிண்டர்கார்டனிலே எழுதனும் ,பக்கம் பக்கமாய் படிக்கனும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் பேராசை என்றே சொல்லலாம்..இது பல கிண்டர்கார்டன் மற்றும் பிரிஸ்கூலில் பார்த்ததும் உண்டு செவி வழி பல ஆசிரியர்கள் ,சொல்ல கேட்டதும் உண்டு.இது தவறே என்று சொல்லுவேன் .சுமார் 4 வயதில் கல்வியைத் தொடங்கும் ஒரு குழந்தை குறந்த பட்சம் 20 வயது வரை பயில்கிறான்.கற்கும் குழந்தைகள் எப்படியும் கற்றுக்கொள்ளும் .கருத்தரித்த மூன்றாவது மாதத்தில் ஒரு குழந்தை கற்க தொடங்குவது நாம் அறிந்ததுதானே?கர்ப்பிணிக்கு ஏழாம் மாதம் வளைக்காப்பு போட்டு ,கிண்ணத்தில் பாலை  எடுத்து ,தாயின் பின் கழுத்துப்பகுதியில் ஊற்றும் போதுஅவளுக்கு உடல் சிலிர்க்கும் சமயம் அவள் காதில் மந்திரம் சொல்வது நம் சடங்குகளில் ஒன்றுதானே?அங்கேயே அந்த குழந்தைக்கு போதனையை (இறை நாமத்தை)சொல்லுகிறோம்தானே?
                                                                               
           சிலர் டே கேர் என்னும் பராமறிப்பு இல்லங்களில் காலையில் கல்வி கற்கவும் பிறகு மதியம் தொடங்கி மாலை வரை டியூசன் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.இதுவே அந்த குழந்தைகளுக்கு ஒருவித வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும்.ஆகவேதான் 4 வயதில் குழந்தைகளை கல்வி கற்க அனுப்புவது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விசயம் என்றே சொல்கிறேன்.என்னதான் காசு கட்டி அனுப்பினாலும் கற்கும் குழந்தைள் மட்டுமே வெகு விரைவில் அனைத்தையும் கிரகித்துக்கொள்ளும்.ஆகவே மழலைக்கல்வி என்பது ஒரு குழந்தையை ஆரம்பக்கல்விக்கு தயார் படுத்துவது,அதாவது பென்சிலைப்பிடிக்க பழக்குவது,பக்கங்களைப்புரட்ட,எழுத்துக்களையும் எண்களையும் அறிந்துகொள்ள ,பள்ளி மற்றும் அந்த சூழலை அவனுக்கு அறிமுகபடுத்துவதுதான்  நோக்கமே தவிர அந்த பிஞ்சுகளிடம் அதிகம் எதிர்பார்ப்பது என்பது கூடவே கூடாது!ஆறு வயது மாணவர்களுக்கு தேர்வு தாளில் ஆங்கிலத்தில் examination  என்று கூட அச்சிடாமல் assesment என்றே அச்சிட வேண்டும்.காரணம் எக்ஸாம் என்றாலே அதுகளுக்கு பயம் வந்துவிடும் என்பதால்.
                                                                               
மலேசியா பொறுத்தவரையில் ஒரு மாணவன் ஆறு வயதில் கற்கும் அதே syllabus தான் ஒன்றாம் ஆண்டிலும் பயில்கிறான்.ஒருக்கால் தனியார் பள்ளி அல்லது இண்டர்நேஷனல் பள்ளியாக இருந்தால் கொஞ்சம் வேறு பட்டிருக்கும் .4 தொடங்கி 6 வ்யது வரை ,ஒரே விசயத்தை ,அரைத்த மாவை கற்றுக்கொள்கிறான்.மீண்டும் ஒன்றாம் ஆண்டிலும் அதே கல்விதான்.அதை தெளிவாக பெற்றோர்கள் புரிந்து கொண்டாலே எதிர்பார்ப்பு குறைய வாய்ப்புகள் பிரகாசமா இருக்கு
                                                                               

Thursday, 6 December 2012

ஈகோ என்ற ஈரெழுத்து

                                           
     அந்த ஈரெழுத்து ,உடல் என்ற மூவெழுத்துக்குள் புகுந்து இந்த ஆன்மாவை  ஆட்டிப்படைக்கும் ஆதிக்கம் இருக்கே?ஆங்கிலத்தில் ஈகோவை edging god out என்று சொல்வதாக ஒரு புத்தகத்தில்  படித்த ஞாபகம்!படிக்காதவனுக்கு  பணம் இருந்தால் ஈகோ.படித்தவனுக்கு தான் வகிக்கும் பட்டம் பதவியில் ஈகோ.பணமும் இருந்து பதவியும் இருந்தால்...கேட்கவா வேண்டும் ஆனால் எல்லோரும் அப்படி அல்ல!மனைவி கணவனை விட கொஞ்சம் அதிகம் படித்திருந்தாலோ அல்லது சம்பாதித்தாலோ,கணவனுக்கு கண்டெய்னர் கணக்கில் ஈகோ வந்துவிடும்.அவள் ரெண்டும் ரெண்டும் நான்கு என்று சொன்னாள் கூட ,சில கணவர்மார்கள் இல்லை ’4’ என்று ஆங்கிலத்தில் சொல்வதும் சில இடங்களில் கண்டதுண்டு.நன்றாக ஆங்கில புலமை நம்மில் சிலருக்கு இருந்தால்,தாய்மொழி பேசும் தமிழனைக்கண்டால் ஈகோ!
                                   
         எத்தனை மனிதர்கள் தாங்கள் செய்தது தப்பு என்று தெரியவரும் வேளையில், மனசார மன்னிப்புக்கேட்கிறோம்?எப்படி கேட்பது,மன்னிப்பு கேட்பது நமெக்கெல்லாம் அம்புட்டு பெரிய கேவலமான செயலாச்சே?மன்னிப்பது வெட்கமல்ல,மன்னிக்காமல் இருப்பதுதான் கேவலமான செயல் என்று எங்கோ படித்த ஞாபகம்.நமக்கு எப்போது கோபம் வருகிறது?நாம் எங்கே தோற்றுப்போகிறோமோ,அங்கேதான் நமக்கு கோபமும்..அதனையடுத்து ஈகோவும் தலைத்தூக்கி நிற்கும்.ஒரு சிலகுருமார்களுக்கு தன் சிஷ்யன் தன்னைவிட கொஞ்சம் முதிர்ச்சியடைந்திருந்தாலும் ஏற்றுக்கொள்ள மனம் இடம் கொடுப்பதில்லை. ஒரு சிலரிடம் ஒரு பழக்கம் உண்டு.அவர்கள் படித்த ஒன்றை நம்மிடம் பகிரும்போது ,’ஓ இதுவா ,நான் ஏற்கனவே படிச்சிட்டேன்’என்று உண்மையைச் சொன்னால் கூட அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது?அதெப்படி நான் இலக்கியவாதி ,படைப்பாளன் என்னை முந்திக்கொண்டு நீ படித்திருக்கமுடியும்?
                                       
      உன் மதம் பெரிசா என் மதம் பெரிசா?என்பதில் ஒரு ஈகோ,அதைவிட,உன் ஜாதி பெரிசா என் ஜாதி பெரிசா என்பதில் ஓர் அகங்காரம்.என் கடவுள்தான் முதலில் வந்தார்,பிறகுதான் உன் கடவுள் என்று கூவும் ஒரு ரகம்.இனங்களுக்குள் ஒரு பிரச்சனை.எந்த இனம்,எவன் பெரியவன்?ஆப்ரிக்க கறுப்பின மக்களுக்கு தங்களை ‘கறுப்பன்’என்று சொன்னால்தான் விரும்புவார்களாம்.ஆனால் எங்கள் ஊரில் சீனன் ,எங்களை கறுப்பன் என்றால் ,அடித்தே கொன்று விடலாம் போல  ஓர் உணர்வு வரும்!ஏன் அவ்வளவு தூரம் போவானேன்,நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூட சாமிகளுக்கிடையே யார் பெரியவன் என்ற ஆணவம் உள்ள  கதைகள் கேட்டதுண்டு.அதெவெல்லாம் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்தவே ஒழிய வேறொன்றுமில்லை.அவருக்கே அப்படி என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?அப்படித்தானே கேட்க தோணுது?

                                  
      தெரிந்த தோழி ஒருவள் அரசு வேலை.நம்மில் சிலபெண்களுக்கு ,அரசுப்பணி என்றால் சொல்லவே தேவையில்லை.திருமணம் ஆகி பல பிரச்சனைகளோடு வாழ்க்கை.எல்லோருக்கும் அப்படித்தானே ஆனால் கண்வன் குடும்பத்தில் பிரச்சனை.கணவ்ர் குடும்ப உறுப்பினர்கள் படிக்காதவர்கள் தான் படித்தவள் என்கிற அகங்காரம் தலைத்தூக்கவே,ஆட்டமாய் ஆடுகிறாள்.விளைவு, விவாகம் ரத்து!தன் கண்வன் ரொம்ப நல்லவர்,’அவருக்கு என்னைத் தள்ளிவைக்க மனம் இருக்காது ,அவர்கள் குடும்பம்தான் இப்படி செய்ய தூண்டியது?ஆமாம் குடும்ப உறுப்பினர்கள் தம்பி மனைவியோடு சேரவே கூடாது என்ற ஈகோ?இந்த வரட்டுக்கெளரவம் ,கணவன் மனதில் ஆசை இருந்தாலும் ,எப்படி நாமாக போவது?குடும்பத்தை எதிர்த்துக்கொண்டு எப்படி செயல்படுவது என்று தன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.

                              
      இன்னொருபுறம் ,கண்வனுக்கும் மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு.மாமியார் மருமகள் பிரச்சனைதான்.ஊதி ஊதி பெரிதாக வெடிக்க,மருமகள் வெளியேற்றம்.அம்மாவுக்கு கணவர் இல்லை,கருணையால் மகனைத் தன் வசம் இழுக்கிறார்.மருமகளிடம் தோற்றுப்போகக்கூடாது என்ற ஈகோ?விளைவு மகனின் வாழ்க்கை பகடைக்காய்!மகனும் அம்மா பிள்ளையாம்,எங்கம்மாவை மதிக்காதவள் என்று பிள்ளையை தாயிடம் இருந்து அபகரித்துக்கொண்டு ,மனைவியை தள்ளி வைக்கிறான்.தாயோடு அந்த கணவன் இருக்கிறான் ஆனால் அவன் பிள்ளை மட்டும் தன் தாயோடு இல்லாமல் பாட்டியோடு?என்ன நியாயம்?இப்படி எத்தனை வாழவேண்டிய தம்பதிகள் அகங்காரம் ஆணவச் செருக்கினால் ,மனதில் ஆசை இருந்தும் ஈகோ தடுக்கிறது.இன்னும் தனிமனிதனாய் ஆனால் ஆசைகளை சுமந்துகொண்டு.எத்தனைக் காதல்கள் ஈகோ என்ற கல்லறைக்குள் உயிருடன் புதைக்கப்பட்டு ,வாழத்துடித்துக்கொண்டிருக்கின்றன?

                                
          ஒரே குடும்பத்தில் ஒரே வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் எத்தனைக் குடும்பத்தில் உறவாடிக்கொண்டிருக்கின்றன?அவன் அதைச் சொன்னான்,இவள் இதைச் செய்தால் ,நான் சாகும்வரை முகத்திலே விழிக்கவேண்டாம்?நாம் யார் பிறரை அப்படி சொல்ல.நம்மில் இருக்கம் ஆன்மாதானே இந்த உடலுக்கு சொந்தல்.இடையில் வாடிக்கையாக  வந்து இவ்வுடலில் புகுந்துகொண்ட நமக்கு என்ன உரிமை இருக்கு?ஆனால் மாற்றான் தாயின் வயிற்றில் பிறந்தாலும் ,நட்பு என்கிற பெயரில் எத்தனை உயிர்கள் உடன்பிற்ப்புகளாகவே வாழ்ந்து வருகிறோம்?என்றாவது ஒருநாள் இதைப்பற்றி யோசித்திருப்போமா?நமக்குத்தான் அதுக்கெல்லாம் நேரம் இல்லையே?உயிருக்குயிராய் இருந்த நட்புகள் ,இன்று கண்ணுக்குத்தெரியாத தூரத்தில் முடங்கிக்கிடப்பதுவும் ஈகோவின் வருகைதானே?ஒருவர் அடிக்கடி இப்படி சொல்வாராம்,’என்னைக் கேட்காமல் என் வீட்டில் மூச்சுக்கூட விடமாட்டார்கள் ,அப்படி ஓர் ஆணவம்,அகங்காரம்!இறுதியில்,அவர் இறக்கவிருந்த சமயங்களில் அவர் மூச்சை அவரே விடமுடியாமல் செயற்கை மூச்சு(கேஸ்) வழி அவருக்கு போய்க்கொண்டிருந்ததாம்.சுகி.சிவம் ஐயாவின் புத்தகத்தில் படித்து நன்றாக சிரித்தேன். 
                                   

       ஒரு கதை.ஒரு காகம் ஒரு மாமிசத்துண்டைக் கவ்விக்கொண்டு பற்க்கிறது.அதனைத் துரத்திக்கொண்டு கழுகும் சில பறவைகளும் பறக்கின்றன.காகமும் உயரப் பறக்கிறது.பறவைகள் விட்டபாடில்லை.இறுதியில் காகம் உயரப் பறந்து சென்று மாமிசத் துண்டை ,கீழே போடுகிறது,மற்ற பறவைகள் ,அதனை நோக்கி கீழே பறக்கின்றன.காகத்துக்கு மற்ற பறவைகளிடமிருந்து விடுதலை கிடைக்கிறது.அப்ப்போதான் காகத்துக்குப் புரிந்ததாம் ‘நான் மாமிசத்துண்டி இழந்தது என்னவோ உண்மைதான் ஆனால் நான் இப்போது பெற்றிருப்பது எத்தனைப் பெரிய சுதந்திரம்’என்று?
நமக்குள் இருக்கும் அகங்காரம் கூட இந்த மாமிசத் துண்டைப்போலத்தான்.இதை நாம் கைவிட்டுவிட்டால் வாழ்க்கை லேசானதாக ஆகிவிடும்.


      விட்டுப்போன உறவுகள்,பந்தங்கள் ,நட்புகள் ,காதல்கள் ,திருமணங்கள் அனைத்தையும்  இனி எப்பொழுது மீட்டுக்கொண்டு வரப்போகிறோம் அல்லது அவைகளாக வரத்தான் போகுதா?நாம் வாடிக்கையாக வந்து குடியிருக்கும் இவ்வுடலுக்கு எப்பொழுது காலாவதி நோட்டிஸ் இறைவன் அனுப்பபோகிறானோ?பிறரை மகிழவைத்துப்பார்,உனக்கு மகிழ்ச்சி கிட்டும் என்பது போல்,நம்மால் முடிந்தவரை ஈகோவை தூரவைத்து இன்பத்தை அருகில் கொண்டு வருவோம்.இந்த உலகில் நாம் ஒரு சுற்றுப்பயணியாக வந்திருக்கிறோம்.மீண்டும் திரும்பிபோக,வண்டியைத் தயார் நிலையில் வைத்திருக்கிறான் இறைவன்.நாம் கடந்து போகும் காலம் வெகுதூரமில்லை.உண்மையாக நேசித்தவர்களைத்தான் நாம் உரிமையோடு கோபித்துக்கொள்வோம்.அதே உரிமையில் மீண்டும் உறவைப் புதுப்பித்துக்கொள்ளுவதில் என்ன தயக்கம்?

                                                       
      நமது வேதத்தில் அர்த்த சாஸ்த்திரம் ,தர்ம சாஸ்த்திரம்,காம சாஸ்த்திரம் ,மோஷ சாஸ்த்திரம் என்று நான்கு வகைகள்.இதில் கடைசியாக சொல்லும் மோஷ சாஸ்த்திரத்தில் ‘அகங்காரத்தை விட்டொழித்தால்தான் நமக்குள் இருக்கும் ஆனந்த சொரூபத்தை நம்மால் தரிசிக்க முடியும்’என்று கூறப்படுகிறது.(மனசே ரிலாக்ஸ் பிளிஸ்).இறைவன் என்கிற கடலில் நாம் ஒரு அலை என்பதை உணராத அகங்கார ஆட்டங்கள் அவஸ்தை..அசிங்கம்..அலங்கோலம்.நமது ஒவ்வொரு இயக்கமும் கடவுளின் இயக்கமே என்பதை உணரும் பூரண சரணாகதியே ஞானத்தின் பிறப்பு,நிம்மதி  நிலை!                     


                  

                                                               

Thursday, 29 November 2012

கருணை இல்லம் நோக்கி என் பயணம்

             வருடா வருடம் ஏதாவது ஒரு நடவடிக்கைச் செய்வதில் தீவிரமாக செயல்படும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த சைல்டு(CHILD NGO) ஆசிரியைகள் ,இந்த வருடம் ஏதாவது  ஒரு பயனுள்ள காரியம் செய்வோம் என்று யோசித்தபோது தோன்றியதுதான் இந்த ‘ரவாங் சாரதா இல்லத்துக்குப் பயணம்.Selangor Teachers Club ,president அடியேன் என்ற முறையில் ,ஆசிரியர்களோடு இது பற்றி கலந்தாலோசிக்க எனக்கு உத்தரவு வழங்கப்பட்டது.சுமார் 35 ஆசிரியைகளைக்(சிலாங்கூரில் மட்டுமே) கொண்ட இயக்கம் அது.மலேசியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலர்பள்ளிகள் சைல்ட் (அரசு சார்பற்ற  இயக்கம்)வழி இயங்கி வருகின்றன.
                                                                                               
       இந்த அரிய திட்டத்திற்கு எல்லா ஆசிரியைகளும் பச்சைக்கொடி காட்டவே ,தேதியும் நிர்ணயிக்கப்பட்டது.கேட்டதும் கொடுக்கும் மனப்பக்குவம் கொண்ட எனதருமை பெற்றோர்களிடமும் ,என் பள்ளி செயற்குழு உறுப்பினர்களிடமும் விசயம் தெரிவிக்கப்பட்டவுடன்,’டீச்சர் எப்போ பணம் வேணும்னு சொல்லுங்க ,வங்கி அக்கெளண்ட் எண்களை கொடுங்க ,பணம் அதில் போட்டு விடுகிறோம் ‘என்று உரிமையோடு சொன்ன அந்த நல்ல உள்ளங்களின் சப்போர்ட்டுடன் களத்தில் இறங்கினோம்.
                                                                                     
            24 நவம்பர் காலையில் கோலாலும்பூரில் இருந்து மின்ரயில்(commuter)ஏறினோம்.கொஞ்சம் தாமதமாக ரயில் ஏறினோம்(எப்போதுமே தமிழன் சொன்ன நேரத்துக்கு போகமாட்டோமே?)
என் சக ஆசிரியை கொஞ்சம் தாமதமாகமாக்கிவிட்டாள்.கோலாலும்பூரில் இறங்கி,அங்கே பசியாறையை வாங்கிக்கொண்டு ,ரயில் வ்ரும் நேரம் வரை ,உணவை அருந்தினோம்.அப்படித்தானே நேரத்தை மிச்சம் பண்ண முடியும்.
குறித்த நேரத்தில் ரயில் வந்தது.பயணம் தொடர்ந்தது.நல்ல வேளை அன்று சனிக்கிழமை காலை என்பதால் ,அவ்வளவாக கூட்டம் இல்லை என்றே சொல்லலாம்.தாரளமாக உட்கார்ந்து செல்ல சீட் கிடைத்தது.இம்முறை மாற்றுத்திறனாளிகள் சீட்களில் நான் உட்காரவில்லை-முக்கிய குறிப்பு!
                                                                                     
                 ரவாங் நகரத்தை அடைய சுமார் அரைமணி நேரம் ஆனது.எந்த தடங்கலும் இல்லாம்ல் போய்ச் சேர்ந்தது மனதுக்கு நிம்மதியாய் இருந்தது.ஏதும் நல்ல காரியம் செய்வதென்றால் நமக்கு பல தடைகள் வருமே?அங்கே எங்களுக்காக தயார் நிலையில் இருந்த காரில் இல்லைத்தை அடைந்தோம்.ஒரே பச்சைபபசேல் என்ற சூழல்.பூச்சோங்கில் வீடுகளைச் சுற்றிலும் கட்டடங்கள்தான் இருக்கும்.மரங்கள் இருப்பது அரிது.சோ ,எனக்கு ரொம்ப பிடித்த வீடாக அமைந்தது.உள்ளே நுழைந்ததும் ,நான் தடையின்றி அங்கே சென்றதன் காரணமும் புரிந்தது.ஆம், மிகவும் புனிதமாக அமைதியாக என்னை வரவேற்கவே காத்திருந்ததுபோன்ற அந்த பூஜையறையும் அங்கே உள்ள படங்களும்.பொதுவாகவே சமய சொற்பொழிவுகளிலோ, சமயம் சார்ந்த நிகழ்வுகளிலோ நாம் கலந்து கொள்ள வாய்ப்புக்கிடைத்தால் ,என் குரு சொல்வது ஒன்றுதான்’உங்களை ,இன்று இங்கே கலந்து கொள்ள வைத்தது நாங்களோ ,நீங்கள் எடுத்த முடிவோ இல்லை ,இறைவன் உங்களை அனுப்பிவைத்திருக்கிறான்,மேலும் நீங்கள் செய்த புண்ணியம்!எனக்கு பதில் கிடைக்க ,இறைக்கு நன்றி சொல்லி உள்ளே நுழைந்தேன்.
                                                                                                     
                   நேரத்தை வீணடிக்காமல் உடைகளை மாற்றிய பின்பு சமையலில் இறங்கினோம்.ஆளுக்கொரு வேலையாக செய்தோம்.கொஞ்சம் அசுத்தமாக கிடந்த பொருட்களை (சிரித்துக்கொண்டே..அதான் நமக்கு நல்லா வருமே)சுத்தம் செய்ய சொல்லி அங்கேயுள்ள பெண்பிள்ளகளைப் பணித்தேன்.’அதுக்கு செல்வி டீச்சர்தான் லாயக்கு சிரித்துக்கொண்டே திட்டுவாங்கன்னு ,என் சக டீச்சர்கள் நல்ல பெயரை எடுத்துக்கிட்டாங்க.
சொல்லிய வேலைகளை சிரமம் பாராமல் செய்துகொடுத்த
பெண்பிள்ளைகளுக்கு,நன்றிடா செல்லங்களே!(கொஞ்சம் பயம்தான் ,என்னடா அறிமுகமே இல்லை,திட்டி திட்டி வேலை வாங்குறாங்களேன்னு?)

        ”too many cooks will spoil the soup”என்ற கூற்றினைப் பொய்யாக்கினோம்.ஆமாம் ,ஒவ்வொரு சமையலையும் எல்லோருடைய ஆலோசனைப்படிக் கேட்டு மகிழ்ச்சியுடன்  சமைத்துமுடித்தோம்.சமைத்த உடன் அங்கே இருந்த பாத்திரங்களையெல்லாம் சொல்லாமலேயே வந்து ‘விடுங்க டீச்சர் ,இன்று எங்கள் ரூட்டின் சமையலறை சுத்தம் செய்வது’என்று சில பெண்பிள்ளைகள் சுத்தம் செய்ய ஒரு கூட்டம் ,சமைத்தை  கொண்டு போய் அடுக்கி வைக்க ஒரு கூட்டம் என சுலபமாய் எங்கள் வேலைகளை ,குட்டிகள் முடித்துக்கொடுத்தனர்.

         சமையலை முடித்தபின்பு ,உணவுக்கு தயாரானோம்.எல்லோரும் அங்கே உணவைச் சுவைத்துக்கொண்டிருக்கும் நான் கொஞ்சம் தாமதமாக சென்றேன்.அங்கே  எல்லோரும் முறையாக அமர்ந்து ,அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்ததைப்பார்த்தபோது ,எங்களுக்கு 70 மார்க்குகள் கிடைத்திருக்கும் போல?ஆமாம் ,தினமும் ஒரே சமையல்காரரின் கையில் சமைத்து உண்பது நமக்கே ( தினமும் நம் வீட்டின் புலம்பல்கள் அதானே)பிடிக்காது.4 முதல் 19 வயது பெண்பிள்ளைகள் ,அதுகளுக்கு மட்டும் எப்படி பிடிக்கும்?’சமையல் சூப்பர் டீச்சர்,ரொம்ப நல்லா இருக்கு (இருங்கடி அவுங்க போகட்டும் ,உங்களுக்கு இருக்கு என்ற சமையல்காரம்மாவின் இன்னர் வாய்ஸ்??).நான் சமைத்த இறால் சம்பல் ,கொஞ்சம் காரம் இருப்பினும் ,பசங்க சுவைத்து சாப்பிடும்போது அதன் சுவையும் எனது மகிழ்ச்சியும் இரட்டிப்பானது போல இருந்தது.
சாப்பிட்ட பின்பு .......உறக்கம்தான்(நம் பிரச்சனை நமக்கு)ஆனால் எல்லோருக்கும் கேம்ஸ் தயாரித்து வைத்திருந்தோம்.அதுக்கான சாக்லெட்கள் ,பரிசுப்பொட்டலங்கள் எல்லாம் கொண்டு சென்றிருந்தோம்.ஒவ்வொரு விளையாட்டிலும் சளைக்காமல் விளையாடிய குழந்தைகள் என்றால் அது 4 வயது குழந்தைகள்தான்.’டீச்சர் ,மிட்டாய் கொடுங்க டீச்சர் ,நான் ஜெயிச்சிட்டேன் ‘என்று கேட்டு கேட்டு விளையாட்டில் ஆர்வமாய் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து வயது பிள்ளைகளையும் பார்க்கும்போது என்னையறியாமல் என் கண்கள் கலங்கின .நமக்கு ஏதும் ஆகிவிட்டால் ?நம் பிள்ளைகளின் நிலை?இந்த பயம் எனக்கு அடிக்கடி வந்து போகும்!

ஒரு குரூப் விளையாட்டுகளைக் கவனிக்க ,நாங்கள் தேநீர் தயாரிக்க ஆயத்தமானோம்.சத்தியமாக நான் தேநீர் கலக்கவில்லை,அந்த பிள்ளைகளுக்கு என்னால் அந்த கொடுமை நேரக்கூடாது என்பதில் ரொம்ப கவனமாய் இருந்தேன்.’தேநீர் ரெடியாவிட்டது,வாங்க சீக்கிரம் ,நாம் கிளம்பும் நேரம் வந்துவிட்டது’என்று அறிவித்தவுடன் ,அந்த பிஞ்சுகளின் கண்களில் ஒரு சோகம்?அதைப்பார்க்க எங்களுக்கு நிஜமாக மனமில்லை.ஆனால் எல்லோரும் அதைக்காட்டிக்கொள்ளாமல் ,தேநீர் பறிமாறப்பட்டது.சென்வீச் தயார் பண்ணிக்கொடுத்தோம்.ஏதோ முழுமையடைந்தது போல உணர்ந்தேன்.

மணி மாலை 4 ஆகவே ,கிளம்ப தயாரானோம்.அதுக்கு முன்பு எங்களுக்கு ஸ்பான்சர் மூலம் கிடைத்த பணத்தைப்,பண உறைகளில் போட்டு ,அங்கே இருந்த அனைவருக்கும் (சமையல்காரம்மா ,வார்டன் உட்பட)எல்லோருக்கும் கொடுத்தோம்.எதிர்பார்த்தைதைவிட பணம் அதிகமாகவே கிடைத்தது.அதிலும் என் பள்ளியில் நான் அங்கே போன பிறகும் ,போனில் அழைத்து ,பணம் போட்டிருக்கேன் ,எடுத்துக்கொள்ளுங்கள் செல்வி என்ற நல்ல உள்ளங்கள் இருப்பதுவும் ஆச்சரியம்தானே?கொடுக்கப்பட்ட பிறரின் பணம் சரியான முறையில் போய்சேர்க்கவேண்டியது நம் கடமையாச்சே?அதில் நான் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டேன்.அனைத்து ஆசிரியைகள் கையிலும் சுமார் ஐந்து உறைகளைக்கொடுத்து ,பிள்ளைகளிடம்  கொடுக்க சொன்னேன்.அந்த கணம் அந்த பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.மீதப்பணத்தை அங்கே இருந்த உண்டியலில் போட்டேன்.

நாங்கள் விடைபெறும் நேரம் .அணைத்து முத்தமிட்டு ,இனி அப்படியொரு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் வெளியேறினோம்.இந்த புனித காரியம் செவ்வென நடந்தேற எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.வேலை நடக்க வேண்டும் என்றால் ,’திட்டவும் செய்வேன் ,சிரிக்கவும் செய்வேன்’ என்ற என் செயலுக்கு எதிர்ப்பு சொல்லாமல் எனக்கு அனைத்து வகைகளிலும் ஒத்துழைத்த என் உடன்பிறவா சகோதரிகளுக்கு நான் நன்றி சொல்லியே ஆகனும்.சில குறைகள் இருந்தாலும் ,99% திருப்தியுடன் திரும்பினேன்.

.இதுவரையில் இதுபோன்ற இல்லங்களுக்கு நிதியுதவியும் பொருளுதவியும் செய்தால் மட்டும் போதும் என்று தவறாக நினைத்துக்கொண்டிருந்த எனக்கு ,முடிந்த வரையில் நாமாக சென்று ,அங்கே உள்ளவர்களுக்கு விருப்பமானவற்றை தெரிந்துகொண்டு ,அதனை செயல்படுத்தினால் அவர்கள் அடையும் எல்லையில்லா மகிழ்ச்சியை   உணரமுடிந்தது.மேலும் நன்கொடையாக கொடுக்கப்படும் பொருட்கள் அங்கே மிதம்மிஞ்சி கிடைப்பதைக்கண்டோம்(தெர்ந்துகொண்டோம்)இனி வரும் காலங்களில் இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக்கொள்ள எண்ணம் கொண்டுள்ளேன்.இன்று இந்த பொன்னான வாய்ப்பை அளித்த இறைக்கு நன்றி  கூறியே ஆகவேண்டும்.என் கடன் பணி செய்து கிடப்பதே!

(’அர்த்தமுள்ள தீபாவளி விருந்து’என்ற ஆல்பம் என் முகநூலில் ,ஏனைய படங்களுடன் )