Wednesday, 2 April 2025

ஓர் உதவி! கொஞ்சம் பகிரலாமே!

 ஓர் உதவி! கொஞ்சம் பகிரலாமே!

அண்மையில் (மார்ச்)அடியேன்,சமயபுரம் மாரியம்மன் கோவில் சென்ற போது,கார் நிறுத்தும் இடத்தில் இருந்து நடந்து செல்லும் பாதையில் ஒரு பசு மயங்கிக்கிடந்தது!ஆனால் எங்கள் பார்வைக்கு ,அது இறந்து கிடப்பது போல் இருந்தது!நாங்களும் பதறிப்போய் அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது ,அவர்கள் 'இல்லை தாகத்தால் மயங்கிவிட்டது,தண்ணீரை முகத்தில் தெளித்தால்,எழுந்துவிடும்'மேலும் கோடை காலத்தில் இது சகஜம் என்று கூறிக்கொண்டிருந்தவேளை,ஒரு பெண் குடத்தில் நீரைக்கொண்டு தெளித்ததும் ,பசுவும் எழுந்து நடந்தது.
இதைப் பார்த்த என் மனம் ஒரு நிலையில் இல்லை!
கருவறைக்குச் சென்றும் எண்ணம் எல்லாம் பசுவின் மேலே இருந்தது.ஒப்புக்கு அம்பாளைப் பார்த்துவிட்டு வெளியே வரும்பொழுது,மற்றொரு மாடு,வெளியில் இருந்த ,சில சாமி சிலைகளில் எப்போதோ ஊற்றி வழிந்து காய்ந்துபோகும் நிலையில் இருந்த பாலை நாவால் நக்கிக்கொண்டிருந்தது!தாகத்தின் கொடுமை...
ஐயோ! என்ன செய்யலாம்? என யோசித்துக்கொண்டே டிரைவர் அண்ணாவிடம் கேட்டேன்.அவரும் 'mineral bottle வாங்கினால் எத்தனை பாட்டில் வாங்கவேண்டும்? மாடுகள் குடிக்கும்மா? இது சரியா வருமா?நீங்களே சிந்தித்துப்பாருங்கள்'என்று என் ஐடியா சரியா வராதது போல கூறினார்.நாங்கள் அங்கிருந்து அவசரமாக ஓட்டல் போக வேண்டிய கட்டாயம் ,காரணம் அன்று இரவு திருச்சியிலிருந்து எங்கள் தாயகம் திரும்பும் விமான பயண நேரமும் கூட.
ஆகவே செய்வதறியாமல் ,மன வேதனையில் வீடு திரும்பினோம்.
இன்னமும் அந்த வாயில்லா ஜீவராசிகளுக்கு எப்படி உதவலாம் என்று
யோசித்த வண்ணம் ,சமூக ஊடகங்களின் வழி இந்த செய்தியைக் கொண்டு சேர்க்கலாம் என்ற சிந்தனை உதித்தது.
இருந்தாலும் அடியேன் அந்நிய நாட்டில் இருந்து இதைக் கூறுவதால் தப்பாகிவிடுமா ? அல்லது அங்கே ஏதாவது குடிநீர் வசதி இருந்தும் பிராணிகளின் கண்களுக்குத் தெரிவதில்லையோ என்ற பயமும் உறுத்துகிறது!மரத்தை வச்சவன் தண்ணீர் ஊற்றுவான்,படைத்தவனின் கடமை தானே ?என்றும் என்.மனதை ஆறுதல் படுத்திக்கொ(ல்)ள்கிறேன்
என்ன செய்யலாம் ?சகோதர சகோதரிகளே..உங்களிடம் விட்டுவிடுகிறேன்.


Friday, 31 December 2021

'ஏவல்' மலேசிய குறுந்தொடர் .

 A must watch malaysia mini horror series!


'ஏவல்' மலேசிய குறுந்தொடர் விமர்சனம்.
பொதுவாக நான் மலேசிய சினிமா படங்கள், நாடகங்களைப் பார்ப்பதில்லை.அதற்காக முதலில் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.
அதற்கான காரணங்கள் சொல்லத் தெரியவில்லை.ஆர்வமில்லை ,மேலும் தொலைக்காட்சி பார்ப்பதில் எனக்கு ஆர்வம் குறைவு.அதுதான் காரணமாக இருக்கலாம்!
நண்பன் சிவா மற்றும் மணி இவர்கள் இருவருமே பாடல்கள்கேட்பதிலும் சரி ,சினிமா படங்கள் பார்ப்பதிலும் சரி என்னைப்போன்ற ரசனை உள்ளவர்கள்.பொதுவாக இவர்கள் சிபாரிசு செய்யும் படங்களை நான் தைரியமாக பார்ப்பேன்.அந்த வகையில் நண்பன் சிவா ,அழைத்து செல்வி அவசியம் இந்த மலேசிய குறுந்தொடரைப் பாருங்கள்,மிகவும்
அருமையாக
எடுத்துள்ளார் இயக்குனர் என்றான்.
சரி பார்ப்போம் என்று YouTube இல் நுழைந்தேன்.Tririse film தயாரிப்பில் ஆரம்பமே மிக அசத்தல்!
அருமையான
ஒளிப்பதிவு,சூழலுக்கேற்ப இசை,அதற்கு மேலாக அதில் நடித்துள்ள நடிகர்கள். தம்பதிகளாக நடிக்கும் Hamsni Perumal மற்றும் K.Nivagaran நாயகனும் நாயகியும் மிகவும் திறமையான நடிப்பை வெளிகாட்டியுள்ளனர்.ஏதோ பல வருடங்கள் ,நடித்ததுபோன்ற ஓர் அபார நடிப்பு.வில்லியாக வரும் நாயகனின் தாயாரும் அதீத திறமையுடன் தன் நடிப்பைக் காட்டியுள்ளார்.மர்மம்,திகில்,காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என ஆர்வத்துடன் நம்மையும் பாத்திரமாகவே மாற்றியுள்ளார் இயக்குனர் S.Keshvan .வாரம் ஒரு பகுதி என 10 பகுதிகளாக ஒளியேறிய இந்த குறுந்தொடரை அவசியம் அனைவரும் கண்டுகளிக்க வேண்டும்.
மலேசிய சினிமா உலகிற்கு ஒரு முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது இந்த ஏவல் குறுந்தொடர்.
சபாஷ் Tririse film n the team!