Thursday, 18 April 2013

அண்டைவீட்டாரைத் தெரிந்துவை

                                                                                     
                விருந்தோம்பல் ,நட்பு என்பதெல்லாம் நம் இந்தியர்களுக்கே உரிய சொத்து என்பது நாம் அறிந்த ஒன்று .ஆனால் தற்பொழுது தகவல் ஊடகங்களின் வழி 'knowing your neighbourhood'  என்று ஒரு தகவலை அறிமுகப்படுத்தி அக்கம்பக்காத்தாருடன் பழகுங்கள் என்ற 'அவலநிலை' தலைவிரித்தாடுகிறது.அதற்கு பலகாரணங்கள் இருக்கலாம்.பரப்பான உலகில் பிறருடன் பேசவோ பழகவோ நேரமின்மை.சிலர் வீணான பிரச்சனைகளைத் தவிர்க்க அப்படி பழகவோ பேசவோ விருப்பப்படுவதில்லை.சிலர் யாருடனும் எளிதில் பழகும் பழக்கம் அல்லாதவர்களாக இருப்பார்கள்.கணவனுக்கோ அல்லது மனைவிக்கு அப்படி பிறரிடம் பழகுவது பிடிக்காமல் இருப்பதுவும் ஒரு காரணம்.

         எது எப்படி இருப்பின், தற்போதைய காலத்துக்கு அக்கம்பக்காத்தாருடன் நட்புடன் இருப்பது மிக மிக அவசியம் ,அவர்களின் உதவியில்லாமல் நாம் எந்த காலத்திலும் நாட்களை நகர்த்திக்கொண்டே போக முடியுமா?ஏதாவது ஒரு சூழலில் அவர்கள் நமக்கு பயன்படுவார்கள் என்பது திண்ணம்.வேலைக்கு போகாத மனைவி வீட்டில் இருக்கிறாள் அல்லது என் வீட்டில் எப்போதும் யாராகிலும் இருப்பார்கள் ஆகவே எனக்கு யாருடைய ஒத்தாசையும் தேவையில்லை என்று பலர் சொல்ல கேட்டதுண்டு.ஒட்டி உறவாடவோ ஒலப்பிக்கொள்ளவோ அவர்கள் நட்பு நமக்கு அவசியமா கருதப்படவில்லை மாறாக ஆபத்து அவசரம் நம்மிடம் சொல்லிக்கொண்டா நம் வீட்டு கதவைத் தட்டுகிறது?மலாய் மொழியில் ஒரு பழமொழி உண்டு 'நமக்கு வரும் தீயவைகள் மணம் பரப்பிக்கொண்டு வருவதில்லை'என!அண்மையில் எங்கள் ஊரில் நடந்த ஒரு சம்பவம் ,ஒரு வீட்டின் முன்னால் லாரியுடன் வந்த இரு நபர்கள் ,அந்த வீட்டின் கேட்டைத் திறந்து(எப்படியோ) உள்ளே நுழைந்து மிகவும் பழக்கப்பட்ட வீடு போல சுமார் மூன்று மணி நேரம் ,உள்ளே இருந்த பொருட்களை ஒன்று விடாமல்  லாரியில் ஏற்றிச் சென்றனராம்.பிறகுதான் தெரிய வந்துள்ளது ,அது ஒரு கொள்ளச் சம்பவம் என்று.அக்கம்பக்கத்தில் கேட்டத்ற்கு 'அவர்கள் இதுவரை யாரிடமும் பேசியதே இல்லை,அவர்கள் வருவதும் தெரியாது ,போவதும் தெரியாது .அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்?

           இப்படிப்பட்ட சம்பவங்களைக் கேட்கும்போது  எங்கள் கிராமத்தில் எங்களுக்கு கிடைத்த அண்டை அயலாரைக் கொஞ்சம் பின்னோக்க்கிப்பார்க்கிறேன். அப்பா அம்மா எங்களை வீட்டில் தனியே விட்டுவிட்டு (கார் இல்லாத சமயம்) ஏதாவது இறப்பு அல்லது திருமணவைபவங்களுக்கு சென்றுவிட்டால்,பக்கத்து வீட்டில் இருக்கும் பாட்டி ,அவர்கள் கண்களை எங்கள் வீட்டில்தான் வைத்திருப்பார்.அது மட்டுமா,பெற்றோர்கள் திரும்ப இரவாகிவிட்டால் ,பாட்டி எங்கள் வீட்டில் வந்து உறங்குவார்.காலையில் வீட்டில் துணிகளை உலரவைத்துவிட்டு நாங்கள் வெளியே போய்விட்டால்,துணிகளை நாங்கள் வருவதற்குள் எடுத்து ஒரு கூடைக்குள் போட்டு ,மடித்தும் வைத்து கொடுத்தனுப்பும் ஒரு அம்மாவும் இருந்தார்.வீட்டில் ஆள் இல்லாத நேரம் யாராவது அறிமுகம் அல்லாதவர் எங்கள் வீட்டுக்கதவைத் தட்டினால் ,அவரை யார்? எவர் ?என்று விசாரித்து ,அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டால் ,அந்த நபரைத் தங்கள் வீட்டு விருந்தாளிபோல அழைத்து அவர்கள் வீட்டில் உட்காரவைத்து ,டீ காப்பி கொடுத்து அனுப்புவர்.அப்படிப்ப்பட்ட அண்டைஅயலாரோடு நாங்கள் இருந்தோம் என்று நினைத்தால்,பெருமையோடு கொஞ்சம் கர்வமும் ஒட்டிக்கொண்டது என்றே சொல்லலாம்.எங்கள் கிராம வீட்டு கதவுகளில் பெரும்பாலான வீடுகளில் பூட்டு இருக்காது,இதற்கு காரணம் நாங்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஏதும் அவசர தேவைக்கு ஏதேனும் பொருட்களை எடுத்துக்கொள்ள, கதவு வெறுமென சாத்தியிருக்கும் பூட்டுபோடாமல் என்பது குறிப்பிடத்தக்கது.

            கிராமத்தில் யார் வீட்டிலாவது இறப்பு என்றால்,கிராமமே சோகத்தைக்காட்டும் பொருட்டு ,எல்லோர் வீட்டிலும் வானொலியும் தொலைக்காட்சியும் அமைதிக்காக்கும்.ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒருவகையில் உதவி செய்துகொடுப்பர்.ஆனால் தற்பொழுது நம் அண்டைவீட்டாரில் இறப்பு நடந்து ,சவம் அடக்கம் செய்யப்பட்ட பின்னர்தான் ,நமக்கு அவர்கள் வீட்டில் இறப்பு நடந்த விசயமே தெரியவருகிறது.அந்த காலங்களில் நமக்கு திருட்டு ,கற்பழிப்பு ,கொள்ளை என்ற அச்சமே வந்ததில்லை.அப்படி ஒரு சந்தர்ப்பம் இருந்ததாக கூட நினைவில்லை!ஆனால் இன்றை காலம், பளிங்கு மாளிகையில் ஒவ்வொரு நொடியும் வயிற்றில் நெருப்புக் கட்டிக்கிட்ட ஒரு அச்சுறுத்தல்!அதேவேளையில் நம் அக்கம்பக்கத்தில் இருக்கும் அனைவரும் ரொம்ப நல்லவர்கள் என்று கூறிவிட முடியாது என்பதையும் மறுப்பதற்கில்லைதான்!மற்றொரு சுவாரஷ்யமான விசயத்தையும் இங்கே நான் பகிர்ந்துகொள்ளவிரும்புகிறேன் ,எங்களிடம் மிகவும் அந்யோன்யமாக பழகிய எங்கள் அண்டைவீட்டுத் தோழியே இன்று என் அண்ணியாக(என் அண்ணாவின் மனைவி)எங்கள் வீட்டில் இருக்கிறாள்!கிராம மக்கள் மட்டுமின்றி அவர்கள் வீட்டு நாய்கள் கூட அக்கம்பக்கத்தாரை அறிந்து வாலாட்டும் என்ற பெருமை நம்மிடம் இருந்து வந்தது.

          அண்மையில் எங்கள் ஊர் வானொலியில் 'உங்கள் அண்டை அயலாரைப்பற்றி எவ்வளவு தூரம் அறிந்துள்ளீர்கள்' என்ற  கேள்விகளுக்கு அடியேனின் பதில்களில் அறிவிப்பாளர் அசந்துபோய்விட்டார்.பக்கத்து வீட்டு நண்பர் பெயர்,அவள் கணவனின் பெயர் ,குழந்தைகள் பெயர்,அவர்கள் படிக்கும் பள்ளியின் பெயர் ,அவள் மாமனார் பெயர் என்று எல்லா விவரங்களையும் என்னால் கூற முடிந்தது(இதைவிட வேற வேலை என்ன நமக்கு?)
அடுத்த நிமிடம் நமக்கு என்னவாகும் ?,நம் துணைக்கு என்னவாகும்?நம் பிள்ளைகளுக்கு யார் பாதுகாப்பு?வீட்டை விட்டு வெளியேறும் நாம் மறுபடியும் வீடு திரும்புவோமா?அல்லது வீடு திரும்பும்வரை நம் வீட்டில் உள்ளவர்களுக்கு எந்த அசம்பாவிதமும் கிட்டாது என்று திட்டவட்டமாக சொல்லத்தான்முடியுமா?

            புராண ,இதிகாசங்கள் உண்மையோ பொய்யோ ,அதை ஆராய்வதைவிட ,அவைகளிலும் நட்பு பற்றி பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது காரணம் அது போய் அனைவரையும் சேரவேண்டும் ,பயனைக்கொடுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கமே!
''இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று புனையிலும் புல் என்னும் நட்பு'' என்பதை மனதிற்கொண்டு செயல்படுவோம்!
                                                                     

4 comments:

  1. பணமும் சுயநலமே இதற்கு ஆணி வேர்கள்... தற்சமயம் கிராமங்கள் கூட நகரங்கள்... நரகங்கள் ஆக மாறிக்கொண்டு வருவது வேதனை...

    இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
    புனையினும் புல்லென்னும் நட்பு

    - என்று நல்லதொரு குறளுடன் முடித்தது சிறப்பு...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இன்றைய சூழலில் நிச்சயம் அனைவரும்
    அவசியம் மனதில் ஏற்றிக் கொள்ளவேண்டிய
    அருமையான கருத்து
    விரிவான அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கிராமத்தில் யார் வீட்டிலாவது இறப்பு என்றால்,கிராமமே சோகத்தைக்காட்டும் பொருட்டு ,எல்லோர் வீட்டிலும் வானொலியும் தொலைக்காட்சியும் அமைதிக்காக்கும்.//

    எங்க ஊர்ல [[கிராமத்துல]] ஒரு பாவப்பட்ட மனுஷன் இறந்து போனான், அருகில் ஒரு புது வீடு புகுமனை விழா, யோவ் கொஞ்சம் ஸ்பீக்கர் சத்தத்தை குறைச்சு வையுங்கய்யான்னு சொன்னதுக்கு முடியாதுன்னுட்டான்....கிராமம் தன முகத்தை மூடிவிட்டது டீச்சர்....!

    ReplyDelete
  4. அன்பு பாசம் நேசம் எல்லாவற்றிர்க்கும் மேலாக கிராமத்திலும் மனிதம் மரித்து வருகிறது என்பதே உண்மை.

    ReplyDelete