Friday, 28 February 2014

உயிர் போனாலும் உடல் வாழ்கிறதே!

                                                                           
          குமார் ,என் கிராமத்து வீட்டின் அண்டை வீட்டுக்கார தோழன். ரொம்ப ரொம்ப நெருங்கிய நட்பு எங்களுக்கும் தேவி அம்மாவுக்கும்(குமாரின் அக்கா தேவி,சோ குமாரின் அம்மாவை ’தேவி அம்மா’ என்றுதான் அழைப்போம். அதேப்போல என் அக்காவின் பெயர் ராதா,எங்கள் அம்மாவையும் எல்லோரும் ராதாம்மா என்றுதான் அழைப்பர்.சுமார் 30 வருடம் எங்கள் பக்கத்து வீட்டில் தேவியம்மா குடும்பம் இருந்தார்கள்.இரவில் நம் வீட்டில் ஏதும் சத்தம் கேட்டால் கூட ,தேவியம்மாவும் பிள்ளைகளும்,’ராதா அம்மா ,என்ன சத்தம்,கதைவைத் திறங்க,ஏதும் பிரச்சனையா ?என்று பதற்றப்படுவார்கள்.அதுதான் கிராம வாழ்க்கையின் நட்பு .அவர்களின் ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது பையன் தான் குமார்.
           நாங்கள் கிராம வீட்டை விட்டு வந்தபோது தேவியம்மா அப்படிதான் அழுதார். எங்களை எங்கே பார்த்தாலும் ‘நலமா ,வீட்டுக்கு வாங்க, ஏன் போன் பண்றதே, அம்மா எங்கேடி ?அதேப்போல அவர்கள் பிள்ளைகள் அனைவரும் ரொம்ப அன்பு கொண்டாடுவார்கள் காரணம் பொதுவாக கிராம வீடு என்றால் பைப்படி சண்டையெல்லாம் வரும்,ஆனால் என் அம்மாவும் சரி ,தேவியம்மாவும் சரி யாருடனும் சண்டை செய்ய மாட்டார்கள்.
                  அந்த குமார், கடந்த வாரம் சனிக்கிழமை.வீட்டின் அருகே  மோட்டார் விபத்தில் காயமுற்று கோமா ஸ்டேஜில் கிடந்தார்.கேட்டவுடன் ஏதோ எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ஏதோ ஆகிவிட்டதுபோல மனம் கனத்தது.சரி அம்மாவை அழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை(இன்று ) மருத்துவமனை போகலாம் என்றிருந்தேன்.
           ஆனால் குமார் முந்திக்கொண்டார்). ஆமாம் நேற்றிரவு குமார் இறந்தார். நெஞ்சைக் கிழித்த அந்த சோக செய்தி,என் அம்மா ஒரு கணம் செஞ்சைப்பிட்த்துக்கொண்டு அப்படியே நாற்காலியில் உட்கார்ந்தார்.’புள்ள கண்ணைத் தொறந்துட்டதா சொன்னானுங்களே? என்ன ஆச்சு?ஐயோ என்னால போய் பார்க்க முடியலையே,புள்ள போயிட்டானா? செய்தியைச் சொன்ன என்னால் ,அதைப்பார்க்க இயலாமல் உள்ளே சென்றேன்,என் தம்பி வந்து ஆறுதலாய் அம்மாவிடம் ஏதோ சொன்னான்.
            பிறகு ஒரு போன் அழைப்பு.என் அக்கா போனில் அழைத்து ‘அம்மாவிடம் சொல் ,நாளை மறுநாள்தான் ,எடுக்கிறார்களாம்.அவன் தன் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளதால்,அனைத்தையும் வெட்டி அறுவைச் சிகிட்சை செய்த பின்புதான் சவம் கிடைக்குமாம், அவசரப்பட்டு போக வேண்டாம்’என்றார். இதுவரை குமாரைப் பிரிந்த சோகத்தில் அழுத என் கண்கள் ,இப்பொழுது அதே கண்கள் கொஞ்சம் ஆனந்த்க் கண்ணீரையும்  சேர்த்தே வடிக்கிறதே?ஆமாம் உயிர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் , அவன் உடல் உறுப்புகள் பலருக்கு வாழ்க்கை கொடுக்கபோகுதே? குமார் இறக்கவில்லை, அவன் இறந்தும் வாழ்கிறான்!அம்மாவிடம் கூறினேன்!
                                                             
வலப்பக்கம் என் அம்மா,இடப்பக்கம் தேவி அம்மா!

1 comment:

  1. குமாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...

    ReplyDelete