Monday, 28 April 2014

பழமை என்றும் இனிமை!

               தமிழ்மொழியில்  எவ்வளவோ  சிறப்புகள் இருந்தாலும்,நான் சில பெரிசுகள் கிட்ட கேட்டு ரசித்த இந்த சொல்லாடைகளை மறக்கத்தான் முடியுமா?என் பாட்டி ஈரோட்டிலிருந்து வந்தவர்.அவரிடமும் என் அண்டைவீட்டு தோழியின் அம்மா மற்றும் என் அம்மாவிடமும் கேட்டவைகளை இங்கே பறிமாறிக்கொ(ல்)கிறேன்!இவைகளை முதன்முதலாய் கேட்கும் போது  நானும் என் மூன்று அக்கா தங்கை எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.பிறகு அதையே வச்சி பாட்டியும்  அம்மாவும் திட்டி திட்டி அது நார்மலா போச்சு. என் தோழிகள் மத்தியில் நான் ரொம்ப ‘விசயம்’தெரிந்தவளாக விளங்க இவைகளும் ஒரு காரணம்.இன்னும் நிறைய இருக்கு,அவைகள் யாவும் தணிக்கைக்கு உடபட்டவை என்பதால் வெளியிடவில்லை!

  1.ஓடற நாயைக் கண்டால் தொரத்துற நாய்க்கு தொக்கா போகும்.

  2.அஞ்சும் அஞ்சும் பத்து,ஆயும் தாயும் பொண்ணு

  3.பூசி மொழுகின வீட்டில் நாய் நுழஞ்ச மாதிரி

  4.நரிக்கு நாட்டாமை கொடுத்தால் ,நாலு வெள்ளாடு கேக்குமாம்

  5.முழுத்தேங்காயை நாய் உருட்டிட்டு போன மாதிரி

  6.கெட்ட நேரம் வந்தால்,ஒட்டகத்தின் மேலே ஏறி நின்னாலும் நாய் கடிக்குமாம்.

  7.ஆத்துல பெருங்காயத்தை கரச்ச கதைப்போல

  8.ஆத்து நிறைய தண்ணி ஓடினாலும் நாய் நக்கிதான் குடிக்கனும்

  9.வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டுன மாதிரி

  10.எடவாதத்தூல ஒரு கொடவாதம் போல

  11.நடக்ககஷ்டப்பட்டவன் சித்தப்பா பொண்ணைக் கட்டிக்கிட்டானாம்

  12.கோழி மேச்சாலும் குமினியில மேய்க்கனுமாம்

  13.ஊர்ல கல்யாணமாம் ,மார்ல சந்தனம் பூசிக்குவான்

   14.ராவுத்தரே புல்லு சாப்பிடுறாராம் ,குதிரைக்கு கோதுமாவு ரொட்டி கேக்குதாம்

   15.யானைக்கு கோவணம் கட்டுறமாதிரி

   16.வேணும்னா வேர்ல கூட காய்க்குமாம்,வேண்டாம்னா கொம்புல கூட காய்க்காதாம்

   17.ஆட்டையும் மேச்ச்சுக்கனும் அண்ணனுக்கு பொண்ணையும் பார்த்துக்கணும்

    18.அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்

     19.ஒப்புக்கு சித்தப்பா உப்பை போட்டு நக்கப்ப்பா

      20.பன்னிக்குட்டி தென்னை மரம் ஏறிச்சாம்.
         இப்படி உங்களுக்கு ஏதும் சரக்கு இருந்தால் எடுத்து விடுங்க,தெரிந்துகொள்வோம்!
                                                          

Thursday, 24 April 2014

ஒரு பீர் போத்தல் !

                 ஒரு ‘பீர் ‘போத்தல் வாங்க நான் பட்ட பாடு இருக்கே?

            என் தோழியின் மகளை  தினமும் அவள் பாட்டி வீட்டில் இறக்கி விட்டு வருவேன்.சிலவேளைகளில் என் மகனுக்கு காத்திருக்கும்வேளையில் அங்கே உட்கார்ந்திருப்பேன்.பள்ளியின் அருகில் அவர் வீடு என்பதால் ,அங்கேயே சிறிது நேரம் இருப்பேன்.அது எஸ்டேட் (கிராம)வீடு.சோ வீட்டைச் சுற்றிலும் மரங்கள், குருவிகளின் ரீங்காரம் , பச்சைப்பசேல் என எனக்கு பிடித்த அமைப்பு.அதுமட்டுமின்றி நான் படிச்ச  தமிழ்ப்பள்ளியும் அங்கேதான் உண்டு.

          ஏதோ தொலைத்த ஒன்றை மீட்பது போல் இருக்கும் அங்கே இருப்பது.நான் போகும்போதெல்லாம் தோழியின் அம்மா எனக்காக முருங்கை கீரை எடுத்து வைத்திருப்பார். மரவள்ளிக்கிழங்கு சமைத்துக்கொடுப்பார்.கிராமிய சமையல்களை  சுவையாக சமைத்துவிட்டு எனக்காக காத்திருப்பார்.அந்த அன்பை நான் அதிகம் ரசிப்பேன். பிள்ளைகள் எல்லோரும் தொலைவில் இருப்பதால் ,தனிமையில் இருப்பவர் அந்த பாட்டி.  என் தோழி மட்டுமே தினமும் அவள் அம்மா  வீட்டுக்குப் போவாள்.பெற்ற தாயைப்போல  என்னிடம் அன்பு காட்டுவார்.

          நானும் பாட்டிக்கு வெத்தலைப்பாக்கு ,மற்றும் சில பூஜைப்பொருட்கள்  வாங்கி கொடுப்பேன். அன்றைக்கு வழக்கம் போல பாட்டி வீட்டுக்கு போய் உட்கார்ந்திருந்தேன். ’சாம்பார் ,கீரை ,அப்பளம் .வெள்ளிக்கிழமை ஸ்பெசல் ,இன்னிக்கு நீ சாப்பிட்டுத்தான் போகனும்’ என்றார் பாட்டி.சாப்பிட்டு முடிச்சி ,கொஞ்சம் பேசிவிட்டு கிளம்பும்போது ‘ஏதும் வேணுமா சொல்லுங்கம்மா நாளைக்கு வாங்கி வரேன்,’என்றேன்.எனக்கு என்னம்மா வேணும்? வெத்தலைப்பாக்கு வாங்கி கொடும்மா போதும்’என்றார்.சரிம்மா என்று விடைபெற்றேன்.காருக்கு ஓடி வந்த பாட்டி ‘அம்மா ஒரு போத்தல் பீர் வாங்கி வாம்மா,நாளைக்கு மதுரை வீரனுக்கு சாமி கும்பிடனும்.கருவாடு இருக்கு,சுருட்டு இருக்கு, பீர் மட்டும் ஒரு டின் வாங்கி வாம்மா’என்றார்.

          ஐயோ !இது என்னடா வம்பா போச்சு? காவல் தெய்வ வழிபாடு எல்லாம் நான் ஆதரிப்பவள் அல்ல’என கூற முடியுமா? நான் எங்கே போயி?சரி என்ன ஆகப்போகுது ?வாங்கிக்கொடுப்போம் ‘என்று முடிவெடுத்து ,மறுநாள் பள்ளி முடிந்து ,என் சக ஆசிரியையோடு காரில் கிளம்பினேன். ‘டீச்சர் , யாரும் பார்க்கறவங்க தப்பா நினைக்கப்போறாங்க,பள்ளிக்கூடம் முடிஞ்சி இந்த பொம்பள ,பீர் வாங்கிட்டு போகுது,குடிச்சிட்டு தூங்கும் போல?’சோ யாரும் தமிழர்கள் இல்லாத கடையா பாருங்க,போகலாம்’ என்றேன்.பொதுவாக பூச்சோங்கில் பலருக்கு நம்மைத் தெரியும் ,ஒன்று ஆசிரியைத் தொழிலில் சுமார் பத்து வருடம் அனுபவம்  என்பதால் சுற்று வட்டாரத்தில் எல்லா பெற்றோர்களும் தெரிந்தவர்கள் ,மற்றொன்று இங்கேயே பிறந்து வளர்ந்ததால் ,எல்லோரும் பழக்கமானவர்களாகவே படும்.எங்க கெட்ட நேர்ம், அன்னிக்குன்னு பார்த்து எல்லா கடைகளிலும் தமிழர்கள் அதிலும் நன்கு அறிமுகமானவர்களே, ஏதாவது ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தனர். தோழியும் நானும் மாத்தி மாத்தி ஒரு ஐந்து கடைகளில் போய் வேற பொருள் தேடுவதுபோல தேடினோம்.கேட்க வெட்கமாகவும் பயமாகவும் இருந்தது.

            ‘டீச்சர்  இனி எங்கே போவது?, எல்லா கடைகளிலும் ,கடைக்கு வெளியிலும் நமக்கு தெரிஞ்சவங்களாகவே இருக்காங்க,வேண்டாம் டீச்சர் ஒரு பத்து வருசமா நல்ல பெயரை கிரியேட் பண்ணிட்டோம்,இப்ப ஒரு பீர் போத்தல் வாங்க போய் பெயரு கெட்டுப்போக போவுது,உங்க வீட்டுக்காருகிட்ட சொல்லி வாங்கி கொடுக்க முடியாதா ? ‘என்றாள்.’ஐயோ பாட்டி எதிர்பார்ப்பாங்களே, இன்னிக்கு வேணுமாம்.’பாட்டியிடம் பொய் சொல்லவும் மனமில்லை.சரி கொஞ்சம் தூரமா போய் ஒரு சீனன் கடையை கண்டுபிடிச்சி கையில் வெறும் நான்கு வெள்ளி மட்டுமே கொண்டு போனேன்.அடிக்கடி வாங்கிய அனுபவம் இருந்தால் விலை தெரியும். சீனப்பெண்ணிடம் பீர் வேண்டும் என்றேன்.என்ன பீர்?வெள்ளையா கருப்பா?என்றாள்.யாருக்கு கலர் எல்லாம் தெரியும்?.இங்கே மலேசியாவில், சீனர்களும் நம் காவல் தெய்வங்களை வணங்குவதால் ,சாமி கும்பிடற பீர்’என்றேன். எடுத்துக்கொடுத்தாள்.காசை நீட்டினேன்.’ஹலோ இது 6.30 காசு’என்றாள்.’ஐயோ ஓடிப்போய் காரில் காசை எடுத்து வந்து கொடுத்தேன்.யாரும் வருவதற்குள் போய் ஆகனுமே?’சரி சரி கருப்பு பையில் போடு ‘என்றேன்.கருப்பு பையா?ஏற இறங்க பார்த்தாள்.குடிக்கறதுக பீர்,இதுல கெளரவமா?என்னும் ஜாடையில் போய் பையைத் தேடிக்கொண்டு வந்து போட்டுக்கொடுத்தாள்.

             ஓட்டமும் நடையுமாய் ஓடி காருக்குள் நுழைந்தேன்.தோழி என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள். ‘டீச்சர் உங்களைப்பார்த்தால் ரொம்ப ஆவலா தேடித்தேடி கிடைத்தவுடன் ஏதோ காணாததைக் கண்டதுபோல வியர்த்து விறுவிறுத்து ஓடிவர்றிங்க’என்றாள்.ஏண்டி சொல்லமாட்டாய்?
பாட்டி வீட்டை அடைந்ததும் ,பாட்டி ஓடி வந்து ‘வாம்மா சாப்பிட்டு போவ ,ரொம்ப களைப்பா இருக்கப்போல?’என கேட்டாங்க?இல்லைம்மா ,வந்து இந்தாங்க பீர் ‘என்றேன்.ரொம்ப நன்றிம்மா. இன்னிக்கு ஐய்யா சாமிக்கு பூஜை செய்யனும். நான் எங்கம்மா கடைக்கு போறது?என்று முணுமுணுத்துக்கொண்டே ,கையில் போத்தலை வாங்கிக்கொண்டு வீட்டுக்குபோய் வீட்டில் கதவருகே மாட்டியிருந்த மதுரைவீரன் சாமிப்படத்துக்கு அருகில் வைத்தார்.ஏதோ எல்லா கோரிக்கையும் நிறைவேறியது போல பாட்டியின் முகத்தில் சிரிப்பு.நானும் விடைபெற்றேன்.
                                                                   
           ’ஸ்ஸப்பா! நான் நல்லவள்னு காட்டிக்க ஒரு பதிவே எழுத வேண்டிக்கிடக்கு போங்க!’

Sunday, 13 April 2014

சொக்கா ..எனக்கில்லை...எனக்கில்லை!

                 1993-இல்  நான் நீதிமன்ற  மொழிபெயர்ப்பாளர் வேலைக்கு தகுதியைக் கொண்டிருந்ததால்  எனக்கு நேர்காணலுக்கு  அழைப்பு வந்தது. முதன்முதலாக அரசு வேலைக்கு நேர்காணல் செல்லவிருந்ததால் ஒரே பரபரப்பு.மேலும் அந்த சமயம்தான் நான் ஜப்பானியர் நிறுவனத்தில் வேலைக்குச்  சேர்ந்து நல்ல நட்புக்களை எல்லாம் சம்பாதித்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த நேரம் என்றும் சொல்லலாம். ஒரு புறம் அந்த வேலை கிடைத்தால் ,இவர்களை எல்லாம் இழந்து விடுவோமோ ?என்ற கவலை.மறுபுறம் அரசு வேலை. அப்பா நினைத்தது போல  வீட்டில் யாராவது ஒருவராவது  செய்யலாமே,என்கிற ஏக்கம்.
                 அரசு வேலைக்கு நேர்காணல் என்பதால் ,போலிசில் பணிபுரியும் என் தாய்மாமன் நிறைய விசயங்களை சொல்லிக்கொடுத்தார்.காபிநெட்ல உள்ள அமைச்சர்கள் பெயர் எல்லாம் நினைவில் வைத்துக்கொள் ,கேட்பானுங்க’என்றெல்லாம் என்னை ஓரளவு தைரியப்படுத்தி அவரே அவர் காரில் வந்து ஏற்றிக்கொண்டு போனார். அங்கே போய் நுழைந்தவுடன் நான் மட்டுமே சின்னப்பொண்ணு . எல்லோரும் ரிட்டையர்ட் ஆசிரியர்கள்,அரசு வேலையில் ரிட்டையர்ட் ஆன பல கிழங்களும் வந்து காத்துகிடந்தனர்.
               எனக்கு ஒரே படபடப்பு.மாமா ரொம்ப தைரியப்படுத்தினார்.’இந்த ரிட்டையர்ட் கிழங்களுக்கு இங்கு என்ன வேலை?’ என மாமாவும் முணக்கிகொண்டே அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருக்க ,என்னை அழைத்தனர்.உள்ளே நுழைந்தால் இரண்டு வயசான தமிழ் அதிகாரிகள்.’உட்காரச் சொன்னார்கள்.பிறகு ஆங்கிலத்தில் பொளந்து கட்டினார்கள் கேள்விகணைகளால். அந்த சமயம் நான் வேலை மற்றும் வெளியுலகத்துக்கு புதியவள்.நான் நல்லா உளறினேன் என்பது எனக்கு தெரியும் ,இருந்தாலும் அவர்கள் கேள்விகளுக்கு பதில் கொடுத்தேன்,எதையோ தமிழில் இருந்து ஆங்கிலத்தில் சுருக்கமாய எழுதச் சொன்னார்கள் ஆனால் ஸ்பாக்கன் இங்கிலிஷ்ல நான் தடுமாறியதை என்னால் உணரமுடிந்தது.
              சரி போய் வா ,என்று முடித்துக்கொண்டனர்.வெளியில் வந்தவுடன் மாமா ‘என்ன ஆச்சு?’என்று ஓடிவந்தார். ஐயோ பதற்றம் மாமா ‘என்றேன். ’அதான் சரியான போட்டிதான் போல,கொஞ்ச நேரம் வெளியில் இருந்து எல்லோரிடமும் பேசினேன்,உனக்கு வாய்ப்பு குறைவுதான் போல,சரி வா,நீ என்ன வேலை இல்லாமலா இருக்கிறாய்?என்று ஆறுதல் கூறி வீட்டில் விட்டுச் சென்றார்.மாதங்கள் ஓடின , ஒரு பதிலும் இல்லை.என் ஆசையும் நிராசை ஆனது.
            அதே வேலைக்கு சில வருடங்கள் கழித்து என் சக ஆசிரியை ஒருத்திக்கு அழைப்பு வந்தது. அவளும் என்னிடம் வந்து ‘எப்படி டீச்சர்?என்ன கேப்பானுங்க?என்னால் செய்ய முடியுமா?உங்களுக்கே  கிடைக்கவில்லையென்றால் நான் எம்மாத்திரம்?’ என்றாள்.அப்படி இல்லை அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வராது’என்றேன். அவள் கல்வி தகுதி என்னைவிட ஒரு படி அதிகம்.அதாவது நான் படிவம் 5 பாஸ் , அவள் படிவம் 6 பட் ஃபெயில்!
          எல்லோரும் வாழ்த்தி அவளை அனுப்பி விட்டோம் .என்னதான் ஆகியிருக்கும் என்று ஆர்வமாய் (நான் தான் அதிகமாக)காத்திருந்தோம்.மறுநாள் வந்தவள் ,என்னைக் கட்டிப்புடிச்சிக்கொண்டு ‘டீச்சர் என்ன டீச்சர் ஒன்னுமே கேட்கல, ஒரே ஒரு பாடல் மட்டும் பாட சொன்னங்க, சிறு வயசு பசங்கதான் இண்டர்வியூ பண்ணினாங்க,எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லை டீச்சர். ஐயோ நம்முடைய ப்ரிப்ரேசன் எல்லாம் வேஸ்ட்தான்,மலாய் மொழியில் பேச சொன்னார்கள்  ‘என்றாள்.
         ஒரே மாதத்தில் ,மீண்டும் கடிதம் வந்தது.அவளுக்கு வேலை கிடைத்து விட்டது என்றும் பதில்!அவளைவிட நான் அதிகம் மகிழ்ச்சி அடைந்தேன்.வேலைக்குச் சேர்ந்தாள்.பல மாதங்கள் கழித்து அவளைச் சந்தித்த போது ‘போங்க டீச்சர் நீங்க செய்ய வேண்டிய வேலையில் நான் ,நான் செய்ய வேண்டிய வேலையில் நீங்கள்,அது எனக்கு சரிப்பட்டு வரல,வேறு வழியில்லாமல் செய்கிறேன் ‘என்றாள்.
             அப்போ எனக்கு கோபம் எல்லாம் என்னை இண்டர்வியூ பண்ணிய அந்த ரெண்டு கிழடுகள் மேல்தான் .ஏன் அவுங்க அப்பா வீட்டுச் சொத்தா குடிமுழுகிப்போகும்,எனக்கு அந்த வேலையைக் கொடுத்திருந்தால்?
 என்ன செய்ய இதைத்தான் சொல்வார்களோ ‘கெட்ட நேரம் வந்தால் ஒட்டகத்தின் மேல் ஏறி நின்னாலும் ,நாய் கடிக்கும் என்று! 

           

Saturday, 5 April 2014

படைத்தவனின் குறையா?

                                                                                         
             பிறந்தது முதல் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த எங்களுக்கு குழந்தைகள் வளர்ப்பு ,பராமரிப்பு எல்லாம் ரொம்ப சின்ன விசயம்.ஆம்,சித்தப்பா பிள்ளைகள்,அத்தை பசங்க என்று ஒரு கூட்டமே நம் வீட்டில் இருப்பார்கள்.பிள்ளைகளை குளிப்பாட்டி விடுவது,உணவு ஊட்டுவது ,படிச்சிக்கொடுப்பது என்று எல்லாம் சின்ன வயதிலே அத்துப்பிடி.ஆகவே ஒரு குழந்தையின் பரிணாம வளர்ச்சி,அசைவுகள் ,வேறுபாடுகள் எல்லாம் பார்த்த மாத்திரத்தில் கண்டு கொள்ளமுடியும் .நானும் ரெண்டு பிள்ளைகளுக்கு தாய்,அதுமட்டுமின்றி மழலைக்கல்வி ஆசிரியையாக கடந்த பத்து வருடங்களாக பணிபுரிந்துவருகிறேன். ஆகவே பிள்ளைகள் விசயத்தில் நமக்கு ஓரளவு அனுபவம் உண்டு.சரி இப்போ விசயத்துக்கு வாரேன்.(என் 4 வயது மாணவனைப் பற்றிய விசயம்தான் இது. அவன் பெயரை ‘கணபதி’என்று மாற்றியுள்ளேன்)
              முதன்முதலாய் கணபதியை( 4 வயது) அவன் தாய் ,பள்ளியில் கொண்டு வந்து சேர்த்து விட்டு ‘டீச்சர் ,இன்னும் சரியா பேச வரவில்லை,கொஞ்சம் பிடிவாதம் பண்ணுவான்.அவன் இன்னும் வெளியுலகம் போனதில்லை...என்று அடுக்கடுக்காய் பல விசயங்களைச் சொன்னார். சொல்லவேண்டிய மிக முக்கிய விசயத்தைச் சொல்லவில்லை!அவனைப்பார்த்ததும் மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தையும் கண்டுபிடிக்கலாம்.அவன் தாயும்  அவனுடன் பள்ளியில் உட்கார்ந்து கொள்வார். ஓரிரு நாட்கள் கழித்து ,’டீச்சர் இனி நான் இருக்க முடியாது வேலைக்குச் செல்கிறேன்.என் பையனைப் பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று விடைபெற்றார்.அவன்  அக்கா கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு எங்களிடம் பயின்றவள்.ரொம்ப அழகாக இருப்பாள்.மற்ற மாணவர்களை விட கொஞ்சம் வேறுப்பட்டிருப்பாள்.சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வாள். மிககுறைவான கவனம் செலுத்துபவள். ஆனால் கணபதி அளவுக்கு மோசம் இல்லை.
           அதேப்பிரச்சனைதான் இவனுக்கும்ஆரம்பகாலத்தில் அவனை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.பிற மாணவர்களை அடிப்பது ,கத்துவது ,எங்களை அதட்டுவது .அவ்வளவு ஏன் ?மலம் போவது கூட தெரியாமல்,அப்படியே உட்கார்ந்திருப்பான், இப்படி  பல  அசெளகரியங்களைக் கொடுத்து வந்தான் கணபதி. கொஞ்சம் அஹிம்சையைத் துறந்து  ,பிரம்பு எடுத்து பயம் வர செய்வோம்(பல நேரங்களில் ஆசிரியைகளுக்கு கிடைக்காத மரியாதைகள் ‘மிஸ்டர் பிரம்பு’க்கு கிடைக்கும். சரி கொஞ்ச நாட்கள் கழித்து  ஓகே பண்ணிடலாம் என்று நினைத்தது என் பேராசைதான்!கற்றல் நேரத்தில் அவன் எங்களுக்கு ஒத்துழைக்கவே மாட்டான். ஓரிடத்தில் உட்கார்ந்து எழுதவேமாட்டான்.புத்தகங்களில் பயமின்றி கிறுக்கித் தள்ளுவான். ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவனால் அமைதியாக உட்கார முடியாது.கண் நகர் பயிற்சியில் சிறிதும் கவனம் செலுத்தமாட்டான். அவன் பாஷையில் ஏதோ உளறிக்கொண்டிருப்பான். .
                    ‘என்ன டீச்சர் முடிவு எடுக்கப்போறிங்க? முடியாது டீச்சர்.அவன் அம்மாவைக் கூப்பிடுங்க பேசலாம்’என்று சக ஆசிரியைகள் அவசரப்படுத்தினர்.’பார்க்கலாம்,பிறகு முடிவெடுக்கலாம் ‘என்று ஆசிரியைகளோடு பேசி அமைதிப்படுத்தினேன்.ஒருமுறை மெண்டரிங் செய்ய வந்த என் விரிவுரையாளர்’இவனுக்கு உங்களால் கற்றுக்கொடுக்க முடியுமா? அதற்கு நிறைய ரிஸ்க் எடுக்கணும், முடிந்தால் செயலில் இறங்குங்கள் ,இல்லையேல் பெற்றோரை அழைத்து பேசி அனுப்பிவிடுங்கள்’என்றார்.கணபதியின் மருத்துவ சான்றிதழை எடுத்து பார்த்தேன் .அதில் எதுவும் குறிப்பிட்டு எழுதவில்லை(ஆனால் அவர்கள் எழுதியிருக்க வேண்டும் ,அதுதான் விதிமுறை).கணபதியின் அம்மாவுக்கு போன் பண்ணினேன்.குரலில் ஒரு பதற்றம்,அவசரம் ‘என்ன டீச்சர் என்ன ஆச்சு?’இல்லை கணபதியைப் பற்றி கொஞ்சம் பேசணும் ,உடனே வந்தால் நல்லது ‘என்றேன்.
                 மறுநாள் தாயார் வந்தார். என் முகத்தைப் பார்க்கவே இல்லை.அலட்சிய பார்வையில்  ஒரு குற்ற உணர்வும் ஒளிந்து கொண்டிருந்தது. ஒரு மரியாதைக்கூட வணக்கம் சொல்லவில்லை.ஏதோ சண்டைக்கு வந்ததுபோல வந்து உட்கார்ந்தார்.இது போல நிறைய  பெற்றோர்களைப் பார்த்துவிட்டேன்.சண்டையும் போட்டுள்ளேன்.சோ இதெல்லாம் எனக்கு ஜூஜுபி மேட்டர்.‘உட்காருங்க கொஞ்சம் பேசணும்’என்றேன். நீங்க என்ன பேசப்போறிங்க என்பது எனக்கு தெரியும் டீச்சர் ’என்று கொஞ்சம் கோபத்துடன் அவன் பொருட்களை பேக் பண்ணினார். ‘கணபதிக்கு......என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அவராகவே ‘அவன் ஒரு ஆட்டிஸம் பேபி,அதானே  டீச்சர் சொல்ல வர்றிங்க”’என்றார் குரலை உயர்த்தியபடி.’ஆமாம் ஆனால் ஏன் நீங்க அதை அவன் மருத்துவ சான்றிதழில் குறிப்பிடவில்லை?என்று நானும் என் பாணியில் குரலை உயர்த்தினேன்’இல்லை டீச்சர் ..வந்து .....அது ...’என்று மென்று விழுங்கினார். (எந்த தாயுமே தன் பிள்ளையின் குறையை எடுத்துரைக்க மாட்டார்களே,இது உலக நியதிதானே?)‘தப்பு சிஸ்டர் ,இது மிகப்பெரிய தப்பு,நாளைக்கு அவனுக்கு ஏதும் பிரச்சனை என்றால் பதில் சொல்வது எங்கள் கடமை.எங்களை கம்பி எண்ண வைச்சிருவிங்க போல? என்றேன் நானும் கோபமாக.
                 ஒரு தாயாக அவர் கண்களில் நீர் . ’மன்னிச்சிருங்க டீச்சர் ,நான் நடந்து கொண்ட விதம் ,பதில் சொல்லியது எல்லாத்துக்கும் மன்னிச்சிருங்க டீச்சர் என்று என் கைகளைப் பற்றிக்கொண்டார். அந்த கணம் என்னாலும் அழுகையை மறைக்கமுடியவில்லை.நம்மால் சிரிப்பு அழுகை இரண்டையுமே அடக்க இயலாது ,அதிலும் இது சொல்ல முடியாத சோகம் ஆயிற்றே?சொல்லவா வேண்டும்.இருப்பினும் கொஞ்சம் முயற்சி செய்து ப்ரோஃபெசன்னலாக பேசி ஆகனுமே? சோ ,பேச்சைத் தொடர்ந்தேன். ’இல்லை சிஸ்டர் அவனுக்கு எங்களால் உதவ முடியுமா என்று தெரியவில்லை,எங்கள் பணியில் எங்களுக்கு சவாலானா ஒரு மாணவன் அவன்’என்றேன்.
                 என் கைகளைப் பற்றிய தாய் ‘இல்லை டீச்சர் ,உங்கள் அனைவரையும் எனக்கு முன்பே தெரியும் .உங்கள் மேல் உள்ள நம்பிக்கையால்தான் நான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். என் பிள்ளையின் நிலை எனக்கு தெரியும்.அவனுக்கு நீங்கள் மற்ற மாணவர்களைப்போல எழுதப்படிக்க சொல்லிக் கொடுக்க வேண்டாம் , பிற மாணவர்களோடு சேர்ந்து விளையாடட்டும். கெட் டூ கெதெர் , சேரிங் அண்ட் கேரிங் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளட்டும் டீச்சர், என் சைடில் இருந்த எந்த கேள்வியும் உங்களை நோக்கி வராது.என்னால் நிறைய பணம் எல்லாம் செலுத்தி அவனை ஸ்பெசல் பள்ளிக்கூடம் அனுப்ப இயலாது.என்னை நம்புங்கள் டீச்சர்.என் பணியிடத்திலேயே பாலர்பள்ளி உண்டு ஆனாலும் நான் ஏன் இங்கே கொண்டு வந்து சேர்க்கணும் ? உங்கள் மேலும் இந்த பள்ளியின் மேலும் உள்ள நம்பிக்கைதான் டீச்சர்’என்றார்.என் இரண்டாவது பெண்ணையும் உங்களிடம்தானே போட்டேன். ஆனால் அவள் இவன் அளவு இல்லை , இவன் உங்களுக்கு சவால்தான்’என்று தொடர்ந்தார்.
                   ’டீச்சர் நான் இங்கே கிளம்பி வரும்போது  என் மூத்த பெண் ‘எங்கேம்மா போறிங்கன்னு கேட்டாள் ?’உன் தம்பியைப்பற்றி டீச்சர் பேசனுமாம்,வேறென்ன அவனை வீட்டுக்கு கூட்டிப்போக சொல்வார்கள் ’என்றேன்.அதற்கு அவள் ’ஏம்மா எனக்கு மட்டும் இப்படி தங்கை தம்பி‘என்று அழுகிறாள்.நான் என்னத்த சொல்லி சமாளிப்பது?” என்றார். நான் இந்த சமயம் வேதனையின் உச்சக்கட்டத்தில் இருந்தேன். ‘ ஒரு கணம் கண்களை மூடினேன். சரி வருவது எதுவாகிலும் சமாளிப்போம் ‘என்று உறுதி கொண்டேன் ஆனாலும் என் சக ஆசிரியைகளின் முடிவும் முக்கியமானதாயிற்றே?அவர்களை நோக்கினேன். என்னைப்போலவே பல சமயங்களில் முடிவெடுப்பவர்கள்  அவள்கள் இருவருமே. அப்படி ஒரு டிரெய்னிங்தான்! நான் பேசுவதற்குள் எழுந்த அந்த தாயார், ‘டீச்சர் என் பிள்ளையை இப்போ வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்திட்டிங்களா? அவனுக்கு உதவ மாட்டிங்களா? அவன் இந்த சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டுவிடுவானா” என்று கேள்விகளை என் மேல் வீசினார்.
                  அவனை கைகழுவி விட நினைத்த எங்கள் எண்ணங்கள் சுக்கு நூறாய் உடைந்தது. நெஞ்சில் அம்பு கிழித்தது போல இருந்தது.என்னிடம் ஒரு  குணம் எப்போதும் உண்டு.பிறர் பிரச்சனையில் உன்னை வைத்துப்பார் ,அதன் வலி புரியும் ‘என்பது.அதற்கேற்பத்த்தான் நான்  எப்போதும் செயல் படுவேன்.ஆகவேதான் பல நல்ல மனிதங்களை சம்பாதித்து உள்ளேன்.அதேவேளையில்.... , இதனால்தான் ,பணம் சம்பாதிக்க முடியாமல் போனதுவும்!’இல்லை அவன் இருக்கட்டும் ,எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம். அதற்கும் மேல் அவன் இருக்கிறான் ,அவன் பார்த்துக்கொள்வான் ‘என்றேன்.  என் ஆசிரியைகளைப் பார்த்தேன்’போங்க டீச்சர் எவ்வளவோ பார்த்துட்டோம் ,இது என்ன ?கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும்.இருக்க பழகுவோம்’என்றார்கள். அதுதான் நான் அவளுங்களை பல சமயங்களில் ,என் இடது மற்றும் வலது கை என்று சொல்வதன் ரகசியம்!
                         கனத்த இதயத்துடன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கணபதியின் கைகளை எடுத்து என் கைகளில் திணித்து விட்டு விடைபெற்றார் அந்த தாய். ஆனால் என் கண்கள் இன்னும் காயவில்லை. என்.ஜீ.ஓ வின் இயக்குனரும் ஒரு மருத்துவ நிபுணர்தான் ,அவரோடு சேர்த்து இன்னும் எனக்கு தெரிந்த சில மருத்துவர்களுக்கு போன் பண்ணி அட்வைஸ் கேட்டேன்.  இண்டர்நெட்டில் போய் சில தகவல்கள் சேகரித்தேன். வீட்டுக்கு வந்ததும் முகநூலில் ஒரு ஸ்டேடஸ் போட்டேன்.அங்கே என் அருமை நட்புகள் கொடுத்த இணைப்புகள் எனக்கு மேலும் உதவிக்கொண்டிருக்கிறது.
                      ஒரு மாணவனுக்காக நான் மாணவியாகிறேன். தினமும் கணபதியிடம் ஏதோ ஒன்றை நான் கற்றுக்கொள்கிறேன்.  அவனுக்காக சில விசயங்களில் மாற்றம் கொண்டு வந்துள்ளேன். பிரம்பு எடுக்காமல் ,கோபப்படாமல் , சகிப்புத்தன்மையை அதிகப்படுத்திக்கொண்டு என்னை மாற்றிக்கொண்டு வருகிறேன்.அது முடியுமா ? அந்த பொறுமை எனக்கு வருமா?இறைவா வரனும், மாறனும் . சமுதாயத்துக்கு அவனை ஒரு சராசரி மனிதனாக கொடுக்க நினைக்கும் என் எண்ணம் ஈடேறுமா?  அவன் தாயார்  கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் ஆனால் என் கண்கள் இன்னும் ஈரமாகவே உள்ளன. ‘கவிப்பேரரசு ‘சங்கீத ஜாதி முல்லை’என்ற பாடல் வரிகளை எழுதும்போது அவர் கண்களில் வழிந்த நீர் காகிதத்தில் வழிந்து அந்த வரிகளை ஈரமாக்கியதாம் ,அதைப்போல இங்கே இதை எழுதும்போது என் கண்ணீரும் கீ போர்ட்டில் விழுந்தன!
                               "teaching is a life long learning' ...for a sake of ganapathy!