Tuesday, 17 July 2018
சளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்!
எங்கள் பள்ளிக்காலங்களில் கற்பழிப்பு,பலாத்காரம் போன்ற செய்திகள் எங்கோ ஓர் இடத்தில் அல்லது எதோ ஒரு நாட்டில் நடந்துகொண்டிருந்தது.ஆனால் சமீப காலங்களாக , 6 வயது சிறுமி பலாத்காரம் ,8 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் என்ற பல செய்திகள் ,அதுவும் கூட்டாக சேர்ந்து பாலியல் தொல்லை என்ற அருவருப்பான செய்திகள் அதிகமாகவே நம்மைச் சோர்வடையச் செய்துள்ளன.சில செய்திகள் சித்தரிக்கப்பட்டவை என்று கேள்விப்பட்டாலும்,இப்படியெல்லாம் நடக்குமா?என்பதே வினாவும் ஆச்சரியமும்!
இன்று மாலை (17/7/2018) ,சென்னையில் நடந்த அந்த கேடுகெட்ட செய்தியைக் கேட்டு மனம் நெகிழ்ந்துபோனது!அலுத்துப்போனது,என்றுதான் சொல்ல வேண்டும்.மாற்றுத்திறனாளியைக் , கூட்டாக சேர்ந்து அலங்கோலப்படுத்தியிருக்கும் நம் மனித இனம்!ஒருநாள் அல்ல 7 மாதங்கள்..!சில மாதங்களுக்கு முன்புதான் 8 வயது சிறுமி கோவிலில் ,கூட்டணியாக அசிங்கப்படுத்திய விஷயம் உலகை உலுக்கிச் சென்றது!அந்த சம்பவமே இன்னும் நெஞ்சை விட்டு நீங்காத நிலையில் மேலும் செய்திகள் !
எதை நோக்கி போகிறோம்? இப்போ யாருக்கு எந்த விழிப்புணர்வு தேவை?எங்கே தவறு?எப்படி தடுப்பது? குழந்தைகளிடம் எப்போதும் 'குட் டச், பேட் டச்' எது என்பதை வலியுறுத்திக்கொண்டே இருத்தல் மிக மிக அவசியம்.குழந்தைகளின் பாலியல் உறுப்புகளை பிறர் தொட அனுமதிக்கக்கூடாது என்று அடிக்கடி நினைவுறுத்திக்கொண்டே இருப்பதுவும் நம் அனைவரின் கடமை!ஒரு குடும்பத்தில் தாயாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த பொறுப்பு கட்டாயம் இருக்கவேண்டும்.ஒவ்வொரு தாயும் அவள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தோழியாக இருப்பதுதான் சில பிரச்சனைகளைக் கண்டறிய முக்கிய அம்சமாக அமைகிறது.இது நம் அனுபவத்தால் கண்டறியப்பட்ட விஷயமும் கூட!
நல்ல தோழியாக இருக்கும் பட்ஷத்தில் ஒரு தாயிடம் அவள் குழந்தைகள் தைரியமாக எதையும் பேசுவார்கள்.தனிமையை விரும்பும் சிறார்களை கவனித்த்துக்கொண்டே இருப்பது பெற்றோர்கள் மற்றும் உடன்பிறப்புகளின் தலையாய கடமை!குழந்தைகளிடம் எப்போதும் நாம் பள்ளியில் அறிவுறுத்தும் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் 'உனக்கு பிடிக்காத செயலை உனக்கு யாராவது செய்தால் ,உடனே அம்மாவிடம் சொல் ,அம்மாவுக்கும் சரி அப்பாவுக்கும் சரி வேண்டிய உறவுகள் என்றால் அவர்கள் உனக்கு செவிசாய்க்க மாட்டார்கள். அங்கே பதில் இல்லையென்றால் உடன்பிறப்புகளிடம் சொல்,யாரும் கேட்கவில்லையென்றால் பள்ளியில் ஆசிரியரிடம் போய் பேசு.நிறைய ஆசிரியர்கள் இருப்பார்கள் ,யாரேனும் ஒருவராவது உனக்கு உதவி செய்வார்கள்.
அனைத்து ஆசிரியர்களும் ஒரு மாணவனையோ அல்லது மாணவியையோ புரிந்து வைத்திருக்க மாட்டார்கள் ஆனால் வகுப்பு ஆசிரியர் ஒரு குழந்தையை நன்கு அடையாளம் கண்டு வைத்திருப்பார்,வைத்திருக்க வேண்டும்!குழந்தைகளைப் பார்த்த மாத்திரத்தில் ,அவர்களின் முகபாவனையை கண்டறிந்து அதற்கேற்றாற்போல் செயல்படும் திராணி ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் உண்டு என்பதில் ஐயம் இல்லை!
யாரைக் குற்றவாளிகள் என அடையாளம் காண்பது?எப்படி வகுப்பு நடத்தி அவர்களைத் திருத்தப் போகிறோம்?திருடனாய் பார்த்து திருந்தாத பட்ஷத்தில்!சமயம் என்பது ஒழுக்க நன்னெறி ,சமயக்கல்வி மூலம் சிலவிஷயங்களைக் கொண்டு புகுத்தலாம் என்றால் சில சமயபோதகர்களின் அட்டகாசமும் அண்மைய காலமாக வெறுப்பைக் கொடுக்கிறது.ஒருவேளை சின்னஞ் சிறுவயசிலிருந்து குழந்தைகளுக்கு சில விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் காலம் நிற்கிறது போல!
குற்றவாளிகளுக்குத் தண்டனை என்று கடுமையாக்கப்படும்?அரசுதான் முடிவெடுக்கவேண்டும்.யுக்திகளைப் பொதுமக்களாகிய நாம் மறைமுகமாக சொல்வோம்,செயல்படுத்துவது அவர்களின் கையில்! எது எப்படியோ ,அண்மைய செய்திகளைக் கேட்டு மனம் உடைந்து போய்க்கிடக்கும் நாம் ,அந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யவேண்டிய பேருதவி , அவர்களின் புகைப்படங்களை எதிலும் பதிவேற்றம் செய்யாமலும் ,தகவல்களை விருப்பப்படி சித்தரித்து வதந்திகளாய் மாற்றாமல் இருந்தாலே போதுமானது!
Wednesday, 21 February 2018
தமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018
மலேசிய நால்வர் மன்றம் ஒரு கண்ணோட்டம் .....
🖥📱 *மலேசிய நால்வர் மன்றம் அகப்பக்கம்*
சைவ சமயம் தொடர்பான குறிப்புக்கள், தகவல்கள், செய்திகள், கட்டுரைகள், காணொளிகள் அறிந்துகொள்ள இந்த அகப்பக்கத்தை நாடலாம். மலேசிய நால்வர் மன்றத்தின் சமய ரீதியிலான செயல் நடவடிக்கைகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். அடியார்களுக்கு எழும் சமய அடிப்படையிலான ஐயங்களை இங்கே பதிவிடலாம். மன்றத்தின் தேசிய தலைவர், ஐயா பாலகிருஷ்ணன் கந்தசுவாமி அவர்களின் ஆலோசனையின் கீழ் எளிய முறையில் விளக்கங்கள் தரப்படும்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் 🙏
அந்த வகையில் மலேசிய நால்வர் மன்றம் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகம் ஆனது.
ம.நா.ம தோற்றுநர் DR.பாலகிருஷ்ணன் ஐயா அவர்களை அதற்கு முன்பே பல சொற்பொழிவுகள் மற்றும் சமய நிகழ்ச்சிகளில் சந்தித்துள்ளேன்.ஆகவே ஐயா எனக்கு புதியவர் அல்ல.ஆனால் அந்த மன்றத்தில் மற்ற அனைவருமே அடியேனுக்கு புதிய அறிமுகம் ஆனால் ஏனோ தெரியவில்லை ,மலேசிய நால்வர் மன்ற உறுப்பினர்களுடன் முதன்முதலில் பழகும்போதே ரொம்ப காலம் அறிமுகமானது போல ஓர் உணர்வு.அங்கே ஓர் ஆரோக்கிய அதிர்வு (GOOD VIBRATION)இருப்பதை எப்போதும் உணரமுடிந்தது.
முதன்முதலில் மன்றம் நடத்திய படிநிலை 1 பயிற்சியில் கலந்துகொண்டபோது,அங்கே நமக்கு கிடைத்த மரியாதை ,அங்கீகாரம் ,அனைவரின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை என பல விஷயங்கள் அடியேனை அங்கே கட்டிப்போட்டது.தலைவர் தொண்டர் என்ற பாகுபாடு இன்றி ,பயிற்றுநர்கள் பழகும் விதம்,பண்பான பேச்சு ,நேர்மறை சிந்தனை என்று நிறைய விஷயங்கள் என்னை ஈர்த்தன !ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல்,போதனா முறைகளை எப்படி எளிய முறையில் கையாள்வது என மிக நுண்ணியமாய் ஒவ்வொரு பயிற்றுனர்களும் பயிற்றுவித்தனர்.பொதுவாக நிறைய பயிற்சிகளில் தூக்கம் வரும் ஆனால் இந்த பயிற்றுநர்கள் பயிற்சியைக் கையாளும் விதம் மிகவும் ரசிக்கத்தக்க ஒன்று.
SEDIC என்றழைக்கப்படும் பிரதமர் துறை இலாகா வழங்கிய மானியத்தில் சில படிநிலைகள் இலவசமாக நடந்தேறியது.பிறகு வரும் காலங்களில் கொஞ்சம் கட்டணம் செலுத்தி பயிற்சியில் கலந்து கொண்டேன்.ஒரே ஒரு விஷயத்தை ம.நா.ம பயிற்சிகளில் கற்று உணர்ந்தேன்.அவர்களின் குறிக்கோள் பணம் அல்ல,தகவல் மக்களைப் போய்சேரவேண்டும்.இப்படி அடியேன் சொல்வதற்கும் ஒரு காரணம் உண்டு.ஒருமுறை தமிழ்நாட்டில் இருந்து பேராசிரியர் சிவகுமார் ஐயா அவர்களின் மூன்றுநாள் பயிற்சியில் கலந்துகொண்டேன்.மிகவும் குறைவான கட்டணம் கட்டுப்படியாகுமா? என சிலர் கேட்ட்போது,அவர்கள் சொன்ன விஷயம், 'நம் குறிக்கோள் பணம் அல்ல ,வருகையாளர்கள் திருப்தியுடன் திரும்பவேண்டும்!அந்த மூன்று நாள் பயிற்சியில் அடியேனுக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் திருப்தியை சொல்ல வார்த்தைகள் இல்லை எனலாம்!
அங்கே பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள், எங்களுக்கு கூறும் ஒரு விஷயம், 'இரண்டு மாணர்வர்கள் வகுப்பில் இருந்தாலும் கூட அவர்களுக்கும் பாடம் நடத்துவோம்,காரணம் அந்த இரண்டு பேர்கள் போய் நான்கு பேருக்கு நல்ல தகவல்களை சொல்வார்கள் என்ற நம்பிக்கை' !மற்றுமொரு நன்னெறிப்பண்பு அடியேன் அங்கே கற்றுக்கொண்டது நேரம் தவறாமை!குறித்த நேரத்தில் குறித்த விஷயங்கள் நடைபெறும்!ஓர் ஆசிரியருக்கு இது மிக மிக முக்கியம்.
2014 இல் முதல் மாநாடு நடந்தபோது அடியேன் ஒரு பார்வையாளராக கலந்துகொண்டேன்.தமிழ்நாடு மற்றும் உள்ளூர் சொற்பொழிவாளர்கள் என பல பயனுள்ள அங்கங்கள் இடம்பெற்றன.அந்த மாநாட்டிலே டாக்டர் பாலா ஐயா அவர்கள் ,அடுத்த மாநாட்டில் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதியாக வாக்கும் கொடுத்தார்.ஆனால் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, 2018 இல் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் , 100 பயிற்சிபெற்ற சமய ஆசிரியர்களில் அடியேனும் ஒருவள் மேலும் நால்வர் மன்ற குடும்ப உறுப்பினராக அடியேனும் சேர்த்துக்கொள்ளப்படுவேன் என்றும் .
(அடியேன்,மகள் ,லட் சுமி அம்மையார் மற்றும் தோழி)
(சிவசிவ எல்லாம் அவன் திருவருள் !)
நாங்கள் ஆர்வமாய் காத்திருந்த நாள் அன்று 17/2/2018!தமிழ் மறையாம் திருமுறை (இரண்டாம் )மாநாடு 2018.நிகழ்ச்சிகள் யாவும் குறித்த நேரத்தில் எந்த இடையூறுகளும் இல்லாமல் சீராக நடந்துகொண்டிருந்தன .வயிற்றுக்கு உணவு,செவிக்கு சொற்பொழிவு மற்றும் திருமுறை கச்ச்சேரி ,கண்களுக்கு பரதம் என ஒவ்வொரு அங்கமும் சிறப்பாய் இடம்பெற்றன!மலேசிய திருநாட்டில் திருவாக்கு திருபீடம் சுவாமி பாலயோகி ஐயா , தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர் திரு.கி.சிவகுமார் ஐயா ,திருவாவடுதுறை ஆதினம் திருசிற்றம்பலத் தம்பிரான் சுவாமிகள் வருகையும் உரையும் மாநாட்டில் முத்தாய்ப்பாய் அமைந்தன.
மதியம் ,மலேசிய நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சின் துணைஅமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக மாநாட்டைத் திறந்து வைத்தார்.
"இறை தூதர்களை விடுத்து, இறைவனையே வணங்கும் சமயம் இந்து சமயம்".
"கோளறு பதிகம் என்பது சிவபெருமானை நினைத்து திருஞான சம்பந்தர் அடிகளாரால் பாடப்பட்ட பதிகம்."
"வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு
திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்....."
"இறைவன், அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என்று சொல்லி கோளறு பதிகம் பாடியருளினார் திருஞான சம்பந்தர்".
"சவால் மிக்க மனிதப் பிறவியில் பிறந்து தங்களை நெறிப்படுத்திக் கொண்டு துன்பங்களையும் துயரங்களையும் தாண்டி ஒர் உயர்ந்த நெறியில் வாழ்ந்த அடியார்களின் வரலாற்றைச் சொல்லுகிறது நமது பெரிய புராணம்".
"நமது சமயம், வாழ்வியல் நெறிகளை சொல்லுவதோடு முக்திக்கு வழிகாட்டியாக விளங்குவதால் காலம் கடந்து நிலைபெற்று வாழ்கிறது."
"இறைவனே அருளிய சைவ சமயம் அறிவியல்பூர்வமானது சடங்குகளில் மூழ்காது ஆன்மீகம் வளர்ப்போம். சைவம் வளர்த்து சிவனடி சேர்வோம்".
- டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் உரையில் சில வரிகள்!
மேடையில் வீற்றிருந்த தில்லைக்கூத்தன் அலங்காரம் அனைவரின் பார்வையையும் வெகுவாய் கவர்ந்தது.முக்கியமாக மாநாட்டில் கலந்துகொண்ட மங்கையர் மாம்பழ நிற புடவையில் மங்களகரமாக மேடையில் வலம் வந்தனர்.நால்வர் மன்றத்தின் தொண்டர் குழுவினருக்கு வெறும் வார்த்தைகளால் நன்றி சொல்லிடவே முடியாது!அயராத உழைப்பு,முகம் சுளிக்காமல் பதில் கூறுவது,எதிர்பார்ப்பின்றி ஓடி ஓடி தொண்டு செய்வது ,இதுவே பாலா ஐயாவின் தலைமைத்துவத்தின் வெற்றி என கூறலாம்!
மாலையில் நிகழ்ச்சி முடிவடையும் முன்பு ,இரு சுவாமிளும் வருகையாளர்களுக்கு உருத்திராக்கமும் திருநீறும் கொடுத்து ஆசி வழங்கினார்.மீண்டும் அடுத்த மாநாடு எப்போ என்று?நாங்கள் ஏங்கும் முன் ,இதுவரை கூவி கூவி ,மணிக்கணக்கில் தொலைபேசியில் விளக்கம் அளித்தும் , பயிற்சியில் கலந்துகொள்ள அழைத்தும் ,அலட்சியம் செய்த சில நட்புகள் ஏங்குவதுதான் ஓர் ஆசிரியையாக எங்களுக்குகே கிடைத்த அங்கீகாரம் !
உலக தாய்மொழி தினத்தன்று (21/2/2018)தமிழ்மறையாம் திருமுறை மாநாடு கட்டுரையை என் வலைப்பதிவில் வெளியிடுவதில் எல்லையில்லா மகிழ்ச்சியே!
Monday, 5 February 2018
இனி எங்கே தேடுவேன் ?
அடியேனின் தமிழ் விரிவுரையாளரும் ,
மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் செயலாளரும்,கல்வியாளரும் மேலும் வழக்கறிஞருமான திரு முனியன் ஐயா இன்று (5/2/2018)இறைவன் அடி சேர்ந்தார்.
2012 இல் ஐயாவைப் பற்றி அடியேன் என் பழைய முகநூலில் பதிவிட்டதை இங்கே மீண்டும் பதிவிடுகிறேன்.
(Aks Sk29 February 2012 ·
சொல்லாமல் கொள்ளாமல் இன்று என் பள்ளியில் mentoring செய்ய வந்த என் உயரதிகாரி திரு.வெ.முனியன்.ஐயாவின் கேள்விகளுக்கெல்லாம் டக்கு டக்குன்னு பதில் சொல்லியதுமில்லாமல்,அனைத்து கோப்புகளையும் முறையாக காட்டி பாராட்டும் பெற்றோம்!ஆனால் இவரிடம் A+ வாங்கவே முடியாது!
ஐயா அவர்கள் ,நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்,என் தமிழ்மொழி விரிவுரையாளரும் கூட!!!!)
mentoring time |
காலைத் தொடங்கி கண்ணீருக்கு பஞ்சமில்லை,இறுதி சடங்கில் கலந்து கொள்ளமுடியாத நிலையில் இருந்து வேதனையும் அடைகிறேன்.ஐயா அவர்களை அடிக்கடி ஐயங்கள் கேட்டு தொந்தரவு செய்த மாணவி நானாகத்தான் இருப்பேன்.ஆனால் எந்த நேரத்தில் அழைத்தாலும் கொஞ்சமும் சளைக்காமல் பதில் சொல்வார்.இனி எங்கே தேடுவேன் இவரைப்போல ஆசான்களை?என்ன கேள்விகள் வைத்தாலும் கட்டாயம் மன நிறைவான பதிலைக் கொடுப்பார்.
ஐயாவோடு பயிற்சியில் இருந்த காலங்களில்,அவரைக் கண்டாலே ,பல ஆசிரியைகளும் பயந்து மிரண்டுபோவார்கள்,ஆனால் எனக்கும் என் தோழிக்கும் அப்படி ஒரு பயம் இருந்ததே இல்லை.காரணம் அவர் கொடுக்கும் பாடங்களை ,உடனடியாக செய்து அனுப்பும் மாணாக்கள் நாங்கள் என்பதில் கொஞ்சம் பெருமை கொள்கிறேன்!
எப்போது தொலைபேசியில் அழைத்தாலும் ,உடனே பதில் அளிப்பவர்;என்னம்மா ,சொல்லும்மா'என்று தனக்கே உரிய பாணியில் பேசுவார்.ஐயா அவர்கள் கொடுக்கும் இடுப்பணிகளை 'நாளை செய்கிறோம் என்று பதில் கூறினால்,வேகமாய் சிரிப்பார்.என்ன சார் சிரிக்கிறீங்கள்?பார்க்கப்போனால் கோபம்தானே வரணும் 'என்று கேட்டதற்கு ஒரு கதையைக் கூறினார்.
ஒரு சந்நியாசி பாத்திரம் ஏந்தி பிச்சைக் கேட்கிறான்,அப்போ அந்த வழியில் செல்லும் ஒரு குடும்பஸ்தன்,'இப்போ என்னிடம் எதுவும் இல்லை ,நாளை வா தருகிறேன் என்றவுடன் , அந்த சந்நியாசி வேகமாய் சிரிக்கிறான்,பிறகு 'நாளை நீ உயிருடன் இருப்பாய் என்று உனக்கு அப்படி ஒரு நம்பிக்கையா?மடையா !அடுத்த நிமிடம் நமக்கு சொந்தம் இல்லையென்று கூறி செல்வான்.இந்த கதை எனக்கும் அடிக்கடி மனதை உறுத்தும்.நம் அடுத்த நொடியை இறைவன் எங்கே வைத்த்திருக்கிறான் ;என்று சாதாரணமாக சொல்வார் ஆனால் அது எனக்கு பயத்தை உண்டு பண்ணும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட என்னை எங்கள் ஊர் மின்னல் பண்பலையில் 'பாலர்பள்ளியின் முக்கியத்துவம்'என்ற தலைப்பில் பேச அழைத்தபோது உடனே ,ஐயைவைத்து தொடர்புகொண்டு சில கருத்துக்கள் கேட்ட்டபோது 'உனக்கு பயிற்சியில் நாங்கள் சொல்லிக்கொடுத்த விஷயத்தை அப்படியே பேசும்மா,ஒன்னும் பயம் வேண்டாம்,தவிர தெரியாத விஷயங்களை நுனிப்புல் மேய்ந்துவிட்டு பேசாதேம்மா.அதுதான் நமக்கு பங்கம் வரும்,காரணம் அந்த அத்துறையில் உள்ள பலரும் பேட்டியைக் கேட்கலாம்,பிறகு பிரச்ச்னையில் மாட்டிக்கொள்வாய் 'என்று அறிவுரை கூறினார்.
ஐயாவை ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் ,நூல்நிலையம் என்றுதான் அடிக்கடி கூறுவேன்.பிழையாக ஒரு விஷயத்தைக் கூறினால் கூட 'அது இப்படி சொல்லும்மா,அப்படி சொல்வது சரி வராது என உதாரணம் கொடுத்து பிழையை அழகாக சுட்டிக்காட்டுவார்.மரணம் பிறருக்கு வரும்போது ,சிந்தாந்த கருத்துக்களைக் கூறு ஆறுதல் சொல்வேன் ஆனால் நம் சம்பந்தபட்டவர்களுக்கு ஏற்பட்டால் ,அழ மட்டுமே செய்கிறேன்.ஒருமுறை ஐயா எங்கள் பள்ளிக்கு மேற்பார்வை செய்ய வந்தபோது ,வகுப்பில் என் சக ஆசிரியை மாணவர்களுக்கு கதைச் சொல்லிக்கொண்டிருந்தாள்.அந்த கதையின் முடிவை அப்படியே அழகாக மாற்றி 'இதுதான் நம் தமிழர் பண்பாடு என்று திருத்திக் சொன்னார்.அதை முன்பு நான் என் வலைப்பதிவில் ' நன்னெறி கதைகளில் திருத்தம் செய்யலாமா?'என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.
இங்கே அதை மீண்டும் பதிவிடுகிறேன்:
கொக்கும் நரியும்
(அதேப்போல என் தமிழ் விரிவுரையாளர் ஒருமுறை, என் ஆசிரியை கதை கூறும்பொழுது , அதை திருத்தி கூறி,'வீட்டிற்கு எதிரியே வந்தாலும் விருந்து கொடுப்பதுதான் நம் தமிழர் பயன்பாடு' என்றார்! )
அதாவது கொக்கு ஒன்று நரியைத் தன் வீட்டிற்கு அழைத்து, ஒரு சிலிண்டர் போன்ற குவளையில் உணவு கொடுக்கும்.நரியின் வாய் அமைப்பு அந்த உணவை அருந்த முடியாமல் சிரமப்படும்.ஆகவே கொக்கைப் பழி வாங்குவதற்காக நரி கொக்கைத் தன் வீட்டிற்கு வரசொல்லி , அகன்ற பாத்திரத்தில் உணவு கொடுக்கும்,இதுதான் கதை!
ஆனால் ஐயா அவர்கள் ‘அது தவறும்மா,அப்படி சொல்லிக்கொடுக்கக் கூடாது .அது பழிவாங்கும் உணர்ச்சியைத் தூண்டும்,மேலும் நம் தமிழர் பண்பாடு அதுவல்ல!எதிரியே வீட்டிற்கு வந்தாலும் வயிறார விருந்து கொடுப்பதுதான் நம் கலாச்சாரம் ,பண்பாடும் என்றார்!நம் பண்பாட்டுக்கு முரணான விசயங்களை முடிந்தவரையில் தவிர்ப்போமே என்றும் ஐயா கூறி,
கதையை இப்படி திருத்தினார்!
நரி கொக்கைத் தன் வீட்டிற்கு அழைத்து வயிறாற விருந்து கொடுத்தது.விருந்துண்ட கொக்கு ,தன் தவற்றை இப்படி நாகரீகமாக சுட்டிக்காட்டிய நரியிடம் , வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்டது.வீட்டிற்கு எதிரியே வந்தாலும் விருந்து கொடுப்பதுதான் நம் தமிழர் பயன்பாடு' .
இழந்தது இழந்ததுதான் .... எப்படி மனம் ஆறுதல் அடையுமோ தெரியவில்லை,அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ளும் மனவலிமையை கொடு இறைவா'என கேட்டுக்கொள்கிறேன்!
இந்த பதிவு ஐயா அவர்களுக்கு சமர்ப்பணம்!
Subscribe to:
Posts (Atom)