அடியேனின் தமிழ் விரிவுரையாளரும் ,
மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் செயலாளரும்,கல்வியாளரும் மேலும் வழக்கறிஞருமான திரு முனியன் ஐயா இன்று (5/2/2018)இறைவன் அடி சேர்ந்தார்.
2012 இல் ஐயாவைப் பற்றி அடியேன் என் பழைய முகநூலில் பதிவிட்டதை இங்கே மீண்டும் பதிவிடுகிறேன்.
(Aks Sk29 February 2012 ·
சொல்லாமல் கொள்ளாமல் இன்று என் பள்ளியில் mentoring செய்ய வந்த என் உயரதிகாரி திரு.வெ.முனியன்.ஐயாவின் கேள்விகளுக்கெல்லாம் டக்கு டக்குன்னு பதில் சொல்லியதுமில்லாமல்,அனைத்து கோப்புகளையும் முறையாக காட்டி பாராட்டும் பெற்றோம்!ஆனால் இவரிடம் A+ வாங்கவே முடியாது!
ஐயா அவர்கள் ,நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்,என் தமிழ்மொழி விரிவுரையாளரும் கூட!!!!)
mentoring time |
காலைத் தொடங்கி கண்ணீருக்கு பஞ்சமில்லை,இறுதி சடங்கில் கலந்து கொள்ளமுடியாத நிலையில் இருந்து வேதனையும் அடைகிறேன்.ஐயா அவர்களை அடிக்கடி ஐயங்கள் கேட்டு தொந்தரவு செய்த மாணவி நானாகத்தான் இருப்பேன்.ஆனால் எந்த நேரத்தில் அழைத்தாலும் கொஞ்சமும் சளைக்காமல் பதில் சொல்வார்.இனி எங்கே தேடுவேன் இவரைப்போல ஆசான்களை?என்ன கேள்விகள் வைத்தாலும் கட்டாயம் மன நிறைவான பதிலைக் கொடுப்பார்.
ஐயாவோடு பயிற்சியில் இருந்த காலங்களில்,அவரைக் கண்டாலே ,பல ஆசிரியைகளும் பயந்து மிரண்டுபோவார்கள்,ஆனால் எனக்கும் என் தோழிக்கும் அப்படி ஒரு பயம் இருந்ததே இல்லை.காரணம் அவர் கொடுக்கும் பாடங்களை ,உடனடியாக செய்து அனுப்பும் மாணாக்கள் நாங்கள் என்பதில் கொஞ்சம் பெருமை கொள்கிறேன்!
எப்போது தொலைபேசியில் அழைத்தாலும் ,உடனே பதில் அளிப்பவர்;என்னம்மா ,சொல்லும்மா'என்று தனக்கே உரிய பாணியில் பேசுவார்.ஐயா அவர்கள் கொடுக்கும் இடுப்பணிகளை 'நாளை செய்கிறோம் என்று பதில் கூறினால்,வேகமாய் சிரிப்பார்.என்ன சார் சிரிக்கிறீங்கள்?பார்க்கப்போனால் கோபம்தானே வரணும் 'என்று கேட்டதற்கு ஒரு கதையைக் கூறினார்.
ஒரு சந்நியாசி பாத்திரம் ஏந்தி பிச்சைக் கேட்கிறான்,அப்போ அந்த வழியில் செல்லும் ஒரு குடும்பஸ்தன்,'இப்போ என்னிடம் எதுவும் இல்லை ,நாளை வா தருகிறேன் என்றவுடன் , அந்த சந்நியாசி வேகமாய் சிரிக்கிறான்,பிறகு 'நாளை நீ உயிருடன் இருப்பாய் என்று உனக்கு அப்படி ஒரு நம்பிக்கையா?மடையா !அடுத்த நிமிடம் நமக்கு சொந்தம் இல்லையென்று கூறி செல்வான்.இந்த கதை எனக்கும் அடிக்கடி மனதை உறுத்தும்.நம் அடுத்த நொடியை இறைவன் எங்கே வைத்த்திருக்கிறான் ;என்று சாதாரணமாக சொல்வார் ஆனால் அது எனக்கு பயத்தை உண்டு பண்ணும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட என்னை எங்கள் ஊர் மின்னல் பண்பலையில் 'பாலர்பள்ளியின் முக்கியத்துவம்'என்ற தலைப்பில் பேச அழைத்தபோது உடனே ,ஐயைவைத்து தொடர்புகொண்டு சில கருத்துக்கள் கேட்ட்டபோது 'உனக்கு பயிற்சியில் நாங்கள் சொல்லிக்கொடுத்த விஷயத்தை அப்படியே பேசும்மா,ஒன்னும் பயம் வேண்டாம்,தவிர தெரியாத விஷயங்களை நுனிப்புல் மேய்ந்துவிட்டு பேசாதேம்மா.அதுதான் நமக்கு பங்கம் வரும்,காரணம் அந்த அத்துறையில் உள்ள பலரும் பேட்டியைக் கேட்கலாம்,பிறகு பிரச்ச்னையில் மாட்டிக்கொள்வாய் 'என்று அறிவுரை கூறினார்.
ஐயாவை ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் ,நூல்நிலையம் என்றுதான் அடிக்கடி கூறுவேன்.பிழையாக ஒரு விஷயத்தைக் கூறினால் கூட 'அது இப்படி சொல்லும்மா,அப்படி சொல்வது சரி வராது என உதாரணம் கொடுத்து பிழையை அழகாக சுட்டிக்காட்டுவார்.மரணம் பிறருக்கு வரும்போது ,சிந்தாந்த கருத்துக்களைக் கூறு ஆறுதல் சொல்வேன் ஆனால் நம் சம்பந்தபட்டவர்களுக்கு ஏற்பட்டால் ,அழ மட்டுமே செய்கிறேன்.ஒருமுறை ஐயா எங்கள் பள்ளிக்கு மேற்பார்வை செய்ய வந்தபோது ,வகுப்பில் என் சக ஆசிரியை மாணவர்களுக்கு கதைச் சொல்லிக்கொண்டிருந்தாள்.அந்த கதையின் முடிவை அப்படியே அழகாக மாற்றி 'இதுதான் நம் தமிழர் பண்பாடு என்று திருத்திக் சொன்னார்.அதை முன்பு நான் என் வலைப்பதிவில் ' நன்னெறி கதைகளில் திருத்தம் செய்யலாமா?'என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.
இங்கே அதை மீண்டும் பதிவிடுகிறேன்:
கொக்கும் நரியும்
(அதேப்போல என் தமிழ் விரிவுரையாளர் ஒருமுறை, என் ஆசிரியை கதை கூறும்பொழுது , அதை திருத்தி கூறி,'வீட்டிற்கு எதிரியே வந்தாலும் விருந்து கொடுப்பதுதான் நம் தமிழர் பயன்பாடு' என்றார்! )
அதாவது கொக்கு ஒன்று நரியைத் தன் வீட்டிற்கு அழைத்து, ஒரு சிலிண்டர் போன்ற குவளையில் உணவு கொடுக்கும்.நரியின் வாய் அமைப்பு அந்த உணவை அருந்த முடியாமல் சிரமப்படும்.ஆகவே கொக்கைப் பழி வாங்குவதற்காக நரி கொக்கைத் தன் வீட்டிற்கு வரசொல்லி , அகன்ற பாத்திரத்தில் உணவு கொடுக்கும்,இதுதான் கதை!
ஆனால் ஐயா அவர்கள் ‘அது தவறும்மா,அப்படி சொல்லிக்கொடுக்கக் கூடாது .அது பழிவாங்கும் உணர்ச்சியைத் தூண்டும்,மேலும் நம் தமிழர் பண்பாடு அதுவல்ல!எதிரியே வீட்டிற்கு வந்தாலும் வயிறார விருந்து கொடுப்பதுதான் நம் கலாச்சாரம் ,பண்பாடும் என்றார்!நம் பண்பாட்டுக்கு முரணான விசயங்களை முடிந்தவரையில் தவிர்ப்போமே என்றும் ஐயா கூறி,
கதையை இப்படி திருத்தினார்!
நரி கொக்கைத் தன் வீட்டிற்கு அழைத்து வயிறாற விருந்து கொடுத்தது.விருந்துண்ட கொக்கு ,தன் தவற்றை இப்படி நாகரீகமாக சுட்டிக்காட்டிய நரியிடம் , வெட்கி தலைகுனிந்து மன்னிப்பு கேட்டது.வீட்டிற்கு எதிரியே வந்தாலும் விருந்து கொடுப்பதுதான் நம் தமிழர் பயன்பாடு' .
இழந்தது இழந்ததுதான் .... எப்படி மனம் ஆறுதல் அடையுமோ தெரியவில்லை,அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ளும் மனவலிமையை கொடு இறைவா'என கேட்டுக்கொள்கிறேன்!
இந்த பதிவு ஐயா அவர்களுக்கு சமர்ப்பணம்!
அத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.
ReplyDeleteஅன்னாரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்.
ReplyDeleteஅவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ReplyDelete