மலேசிய நால்வர் மன்றம் ஒரு கண்ணோட்டம் .....
🖥📱 *மலேசிய நால்வர் மன்றம் அகப்பக்கம்*
சைவ சமயம் தொடர்பான குறிப்புக்கள், தகவல்கள், செய்திகள், கட்டுரைகள், காணொளிகள் அறிந்துகொள்ள இந்த அகப்பக்கத்தை நாடலாம். மலேசிய நால்வர் மன்றத்தின் சமய ரீதியிலான செயல் நடவடிக்கைகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். அடியார்களுக்கு எழும் சமய அடிப்படையிலான ஐயங்களை இங்கே பதிவிடலாம். மன்றத்தின் தேசிய தலைவர், ஐயா பாலகிருஷ்ணன் கந்தசுவாமி அவர்களின் ஆலோசனையின் கீழ் எளிய முறையில் விளக்கங்கள் தரப்படும்.
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் 🙏
அந்த வகையில் மலேசிய நால்வர் மன்றம் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகம் ஆனது.
ம.நா.ம தோற்றுநர் DR.பாலகிருஷ்ணன் ஐயா அவர்களை அதற்கு முன்பே பல சொற்பொழிவுகள் மற்றும் சமய நிகழ்ச்சிகளில் சந்தித்துள்ளேன்.ஆகவே ஐயா எனக்கு புதியவர் அல்ல.ஆனால் அந்த மன்றத்தில் மற்ற அனைவருமே அடியேனுக்கு புதிய அறிமுகம் ஆனால் ஏனோ தெரியவில்லை ,மலேசிய நால்வர் மன்ற உறுப்பினர்களுடன் முதன்முதலில் பழகும்போதே ரொம்ப காலம் அறிமுகமானது போல ஓர் உணர்வு.அங்கே ஓர் ஆரோக்கிய அதிர்வு (GOOD VIBRATION)இருப்பதை எப்போதும் உணரமுடிந்தது.
முதன்முதலில் மன்றம் நடத்திய படிநிலை 1 பயிற்சியில் கலந்துகொண்டபோது,அங்கே நமக்கு கிடைத்த மரியாதை ,அங்கீகாரம் ,அனைவரின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை என பல விஷயங்கள் அடியேனை அங்கே கட்டிப்போட்டது.தலைவர் தொண்டர் என்ற பாகுபாடு இன்றி ,பயிற்றுநர்கள் பழகும் விதம்,பண்பான பேச்சு ,நேர்மறை சிந்தனை என்று நிறைய விஷயங்கள் என்னை ஈர்த்தன !ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல்,போதனா முறைகளை எப்படி எளிய முறையில் கையாள்வது என மிக நுண்ணியமாய் ஒவ்வொரு பயிற்றுனர்களும் பயிற்றுவித்தனர்.பொதுவாக நிறைய பயிற்சிகளில் தூக்கம் வரும் ஆனால் இந்த பயிற்றுநர்கள் பயிற்சியைக் கையாளும் விதம் மிகவும் ரசிக்கத்தக்க ஒன்று.
SEDIC என்றழைக்கப்படும் பிரதமர் துறை இலாகா வழங்கிய மானியத்தில் சில படிநிலைகள் இலவசமாக நடந்தேறியது.பிறகு வரும் காலங்களில் கொஞ்சம் கட்டணம் செலுத்தி பயிற்சியில் கலந்து கொண்டேன்.ஒரே ஒரு விஷயத்தை ம.நா.ம பயிற்சிகளில் கற்று உணர்ந்தேன்.அவர்களின் குறிக்கோள் பணம் அல்ல,தகவல் மக்களைப் போய்சேரவேண்டும்.இப்படி அடியேன் சொல்வதற்கும் ஒரு காரணம் உண்டு.ஒருமுறை தமிழ்நாட்டில் இருந்து பேராசிரியர் சிவகுமார் ஐயா அவர்களின் மூன்றுநாள் பயிற்சியில் கலந்துகொண்டேன்.மிகவும் குறைவான கட்டணம் கட்டுப்படியாகுமா? என சிலர் கேட்ட்போது,அவர்கள் சொன்ன விஷயம், 'நம் குறிக்கோள் பணம் அல்ல ,வருகையாளர்கள் திருப்தியுடன் திரும்பவேண்டும்!அந்த மூன்று நாள் பயிற்சியில் அடியேனுக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் திருப்தியை சொல்ல வார்த்தைகள் இல்லை எனலாம்!
அங்கே பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள், எங்களுக்கு கூறும் ஒரு விஷயம், 'இரண்டு மாணர்வர்கள் வகுப்பில் இருந்தாலும் கூட அவர்களுக்கும் பாடம் நடத்துவோம்,காரணம் அந்த இரண்டு பேர்கள் போய் நான்கு பேருக்கு நல்ல தகவல்களை சொல்வார்கள் என்ற நம்பிக்கை' !மற்றுமொரு நன்னெறிப்பண்பு அடியேன் அங்கே கற்றுக்கொண்டது நேரம் தவறாமை!குறித்த நேரத்தில் குறித்த விஷயங்கள் நடைபெறும்!ஓர் ஆசிரியருக்கு இது மிக மிக முக்கியம்.
2014 இல் முதல் மாநாடு நடந்தபோது அடியேன் ஒரு பார்வையாளராக கலந்துகொண்டேன்.தமிழ்நாடு மற்றும் உள்ளூர் சொற்பொழிவாளர்கள் என பல பயனுள்ள அங்கங்கள் இடம்பெற்றன.அந்த மாநாட்டிலே டாக்டர் பாலா ஐயா அவர்கள் ,அடுத்த மாநாட்டில் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என்று உறுதியாக வாக்கும் கொடுத்தார்.ஆனால் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, 2018 இல் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் , 100 பயிற்சிபெற்ற சமய ஆசிரியர்களில் அடியேனும் ஒருவள் மேலும் நால்வர் மன்ற குடும்ப உறுப்பினராக அடியேனும் சேர்த்துக்கொள்ளப்படுவேன் என்றும் .
(அடியேன்,மகள் ,லட் சுமி அம்மையார் மற்றும் தோழி)
(சிவசிவ எல்லாம் அவன் திருவருள் !)
நாங்கள் ஆர்வமாய் காத்திருந்த நாள் அன்று 17/2/2018!தமிழ் மறையாம் திருமுறை (இரண்டாம் )மாநாடு 2018.நிகழ்ச்சிகள் யாவும் குறித்த நேரத்தில் எந்த இடையூறுகளும் இல்லாமல் சீராக நடந்துகொண்டிருந்தன .வயிற்றுக்கு உணவு,செவிக்கு சொற்பொழிவு மற்றும் திருமுறை கச்ச்சேரி ,கண்களுக்கு பரதம் என ஒவ்வொரு அங்கமும் சிறப்பாய் இடம்பெற்றன!மலேசிய திருநாட்டில் திருவாக்கு திருபீடம் சுவாமி பாலயோகி ஐயா , தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர் திரு.கி.சிவகுமார் ஐயா ,திருவாவடுதுறை ஆதினம் திருசிற்றம்பலத் தம்பிரான் சுவாமிகள் வருகையும் உரையும் மாநாட்டில் முத்தாய்ப்பாய் அமைந்தன.
மதியம் ,மலேசிய நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சின் துணைஅமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக மாநாட்டைத் திறந்து வைத்தார்.
"இறை தூதர்களை விடுத்து, இறைவனையே வணங்கும் சமயம் இந்து சமயம்".
"கோளறு பதிகம் என்பது சிவபெருமானை நினைத்து திருஞான சம்பந்தர் அடிகளாரால் பாடப்பட்ட பதிகம்."
"வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு
திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்....."
"இறைவன், அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள் தான் என்று சொல்லி கோளறு பதிகம் பாடியருளினார் திருஞான சம்பந்தர்".
"சவால் மிக்க மனிதப் பிறவியில் பிறந்து தங்களை நெறிப்படுத்திக் கொண்டு துன்பங்களையும் துயரங்களையும் தாண்டி ஒர் உயர்ந்த நெறியில் வாழ்ந்த அடியார்களின் வரலாற்றைச் சொல்லுகிறது நமது பெரிய புராணம்".
"நமது சமயம், வாழ்வியல் நெறிகளை சொல்லுவதோடு முக்திக்கு வழிகாட்டியாக விளங்குவதால் காலம் கடந்து நிலைபெற்று வாழ்கிறது."
"இறைவனே அருளிய சைவ சமயம் அறிவியல்பூர்வமானது சடங்குகளில் மூழ்காது ஆன்மீகம் வளர்ப்போம். சைவம் வளர்த்து சிவனடி சேர்வோம்".
- டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் உரையில் சில வரிகள்!
மேடையில் வீற்றிருந்த தில்லைக்கூத்தன் அலங்காரம் அனைவரின் பார்வையையும் வெகுவாய் கவர்ந்தது.முக்கியமாக மாநாட்டில் கலந்துகொண்ட மங்கையர் மாம்பழ நிற புடவையில் மங்களகரமாக மேடையில் வலம் வந்தனர்.நால்வர் மன்றத்தின் தொண்டர் குழுவினருக்கு வெறும் வார்த்தைகளால் நன்றி சொல்லிடவே முடியாது!அயராத உழைப்பு,முகம் சுளிக்காமல் பதில் கூறுவது,எதிர்பார்ப்பின்றி ஓடி ஓடி தொண்டு செய்வது ,இதுவே பாலா ஐயாவின் தலைமைத்துவத்தின் வெற்றி என கூறலாம்!
மாலையில் நிகழ்ச்சி முடிவடையும் முன்பு ,இரு சுவாமிளும் வருகையாளர்களுக்கு உருத்திராக்கமும் திருநீறும் கொடுத்து ஆசி வழங்கினார்.மீண்டும் அடுத்த மாநாடு எப்போ என்று?நாங்கள் ஏங்கும் முன் ,இதுவரை கூவி கூவி ,மணிக்கணக்கில் தொலைபேசியில் விளக்கம் அளித்தும் , பயிற்சியில் கலந்துகொள்ள அழைத்தும் ,அலட்சியம் செய்த சில நட்புகள் ஏங்குவதுதான் ஓர் ஆசிரியையாக எங்களுக்குகே கிடைத்த அங்கீகாரம் !
உலக தாய்மொழி தினத்தன்று (21/2/2018)தமிழ்மறையாம் திருமுறை மாநாடு கட்டுரையை என் வலைப்பதிவில் வெளியிடுவதில் எல்லையில்லா மகிழ்ச்சியே!