Sunday, 6 October 2013

ச.கி.உ

                நீங்கள் நினைக்கும் அளவுக்கு இது  ஏதோ கட்சியின் பெயர் அல்ல! நமக்கு, சமயத்தில் கிடைத்த உதவியைத்தான் இப்படி சுருக்கி எழுதியுள்ளேன்.பல இக்கட்டான சூழலில் நாம் உழன்று அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது ,அந்த நேரத்தில் நமக்கு கிடைத்த உதவிகளைத்தான் இங்கே திரும்பி பார்க்கப்போகிறேன்!

                ஒருமுறை நான் ,இடுப்பு வலியால் அவதிப்பட்டபோது ,மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க சொல்லி அனுப்பினர்.எனக்கு புது அனுபவம் .உடன் யாரும் வரவும் இல்லை, நான் எக்ஸ்ரே எடுக்கச் சென்றபோது ,ரிம60 வெள்ளி கட்டணம் செலுத்திய பிறகு ரசீதைக்கொண்டு வந்தால்தான் எக்ஸ்ரே எடுப்போம் என்று அங்கே தெரிவித்தனர்.என் கையில் ஐந்தே வெள்ளிதான் இருந்தது.

         ‘சரி நான் போயிட்டு இன்னொரு நாளைக்கு’வருகிறேன் என்றேன்.’உன் விருப்பம் ஆனால் அப்பாய்ண்மெண்ட் கிடைக்க தாமதம் ஆகும்’என்றனர்.’இல்லை என்னிடம் பணம் இல்லை’என்றேன்.’ஓ !இதுதான் உன் பிரச்சனையா? கீழே ஓர் அறையில் போய் உன் பிரச்சனையைச் சொல் ,பிறகு அவர்கள் என்ன சொல்கிறார்கள்’என்று வந்து சொல்’என்று அனுப்பினர்.

                   நானும் தயங்கி தயங்கிப் போய் நின்றேன்.உள்ளே வரிசையில் நிறைய பேர்.பேசிக்கொண்டிருக்கும் அதிகாரி ஒரு தமிழர்.’ஐயோ !தமிழர் கிட்ட பணம் இல்லை’என எப்படி சொல்வது?’ என்று யோசித்துக்கொண்டிருந்த வேளை என் பெயரை அழைத்தனர்.’என்னம்மா உன் பிரச்சனை?என்றார்.’சார் நான் எக்ஸ்ரே எடுக்க வந்தேன் ,பணம் போதவில்லை,அடுத்தமுறை வருகிறேன்’என்றேன்.

             அவர் ஏற இறங்கப்பார்த்தார்.பிறகு நான் கொண்டுபோன கடிதத்தில் ஏதோ எழுதி கையெழுத்திட்டார்.எனக்கு ஒன்னுமே புரியவில்லை.ஆனால் ஏதோ ஒரு சொல்யூசன் செய்துவிட்டார் என்றே தோணியது. அவசர அவசரமாக (எக்ஸ்ரே அறையை அடைக்கும்முன்)ஓடிப்போய் அங்கே உள்ள ஸ்டாஃப் கையில் கொடுத்தேன்.அங்கே இருந்த இருவருமே என்னிடம் ‘அவர் உன் உறவினரா?’என்று கேட்டனர்.எனக்கு புரியவில்லை,’ஏன் இல்லையே ?என்றேன்.’இல்லை உன் முழுப்பணத்தையும் அவரே செலுத்தி கையொப்பம் இட்டு விட்டார்.இனி நீ பணம் செலுத்த தேவையில்லை!என்றனர். 

         ஆ!எனக்கு ஒன்னுமே புரியவில்லை ஆனாலும் அந்த ஸ்டாஃப் இருவரும் தமிழச்சி என்பதால் கிடைத்த முழு உதவி என்று கிசுகிசுத்தது என் காதில் விழுந்தது. யார் என்றே தெரியாமல் அவர் செய்த அந்த உதவி என்னால் இன்று வரை மறக்கவே முடியாது.அது ஒன்றும் பெரிய தொகை இல்லைதான் ஆனால் என்னைப்போல நாலைந்து பேருக்கு செய்தாலே அவர் சம்பளம் போய்விடுமே!

              ***சரி நட்புகளே ,என்னைப்போலவே உங்களுக்கும் ச.கி.உ அனுபவத்தைத்  தொடரலாமே. உதவ மனமில்லாமல் இருப்பவர்கள் உதவி செய்ய ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும் அல்லது அவர்கள் என்றோ செய்த உதவியை இன்று நீங்கள் பகிர்வதால் அது அவர்கள் கண்ணில் படலாம் அல்லது காதில் போய்ச் சேரட்டுமே!
                     என் பதிவுலகில் உள்ள அனைவருக்கும் ஏதாவது ஓர் வகையில் இப்படி ஏதாவது அனுபவம் இருக்கும்.பகிருங்கள் பதிவுல நட்புக்களே!!!
               

Tuesday, 1 October 2013

என் தோல்விக்குப் பின்னால்...

                  ஒவ்வொரு  ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாளாம்.ஆனால் என் ’தோல்விக்குப்’ பின்னால் சில ஆண்கள் இருந்தார்கள்.ஹ்ம்ம்ம் இப்போது நினைச்சாலும் கொலையே பண்ணலாம் போல தோணும்!
                  முதன்முதலில் பள்ளிப்பருவம் முடிந்தவுடன் எங்கள் ஊர் பத்திரிக்கை ஒன்றில்(பெயர் சொல்ல விரும்பவில்லை) நிருபர் வேலைக்கு  வாய்ப்பு கிடைத்தது!இங்கே தமிழ்மொழியில் சிறப்புத் தேர்ச்சியும் கூடவே சிபாரிசும் (அந்தகாலத்தில்)இருந்தால் போதும்.எனக்கு முதலாவது தகுதி இருந்தது,இரண்டாவது இருப்பதுபோல ஒரு அறிகுறி.

              ஆம் என் அண்ணியின் தம்பி,அவனுடைய அப்பாதான் அந்த வேலைக்கு நேர்க்காணலை நடத்துபவராக அன்று பொறுப்பேற்றிருந்தார். நான் நேர்க்காணல் போகவேண்டிய தினம் ,என் வீட்டில் என் அண்ணன்மார்கள்,அக்காவின் கணவர் என எல்லோரும் கோரசாக சேர்ந்து ’உனக்கு ஒத்து வராத வேலை அது, ரிப்போட்டர் என்றால் அவர்கள் அழைக்கும் நேரத்தில் நீ ஓடிப்போய் நிற்கனும், ஏதும் விபத்து கொலை என்றால் பயப்படாமல் அங்கே போய் செய்தி சேகரிக்கனும்,உனக்கு அந்த தைரியம் இல்லை ,நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாய் ‘என்று அப்படியே என்னை தடுத்து நிறுத்தினார்கள்!                                                                  
                                              

                 அதன் பிறகு ,விமானப்பணிப்பெண் வேலைக்கான நேர்க்காணல். அந்த வேலைக்கான பாரங்கள் கிடைக்கும் இடம் என் நண்பனின் வீட்டின் அருகே. 
       அவனுக்கு போன் செய்து ‘கொஞ்சம் அந்த பாரங்களை எடுத்து வா’என்றேன்.  அவனும் மற்றொரு நண்பனும் கொண்டு வந்து கொடுத்து விட்டு ‘செல்வி இந்த வேலைக்கு நல்ல உயரமாக இருக்கனும் , அதை விட முக்கியம் ,சிகப்பாக இருக்கனும்?எப்படி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’என்று சிரியோத்தனமாய் சிரித்து என்னையும் சிரிக்க வைத்து விட்டு ,ஆர்வத்தையே சீர்குலைத்துச் சென்றானுங்க படுபாவிகள்!

               சிறுவயது முதல் எனக்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வானொலி அறிவிப்பாளர்  ஆக வேண்டும் என்று ரொம்ப விருப்பம். அதற்காக நான் பல பயிற்சிகள் செய்துவந்தேன். சொந்த முயற்சியில் வீட்டில் சிலவேளைகளில் பேசுவேன். அதை ரெக்கார்டிங் செய்து செய்து கேட்பேன்.

               என் கனவு நிறைவேறும் நாள் வந்தது. ஆம் ,பத்திரிக்கையில் அறிவிப்பு வெளியானது.மலேசிய அரசு தொலைக்காட்சியில் ’தமிழ் பிரிவுக்கு செய்தி வாசிக்க ஆள் தேவை’.ஆ!என் பல நாள் கனவு ,வேகவேகமாய் பாரங்களைப்பூர்த்தி செய்து , படங்களை எல்லாம் வைத்து எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். என் அண்ணா என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு ,அதெல்லாம் அரசு வேலை எளிதில் நமக்கு கிடைக்காது’என்று கூறியது.

                         ‘ஏன் அப்படி சொல்ற?என்னிடம் அவர்கள் கேட்ட 10  தகுதியும்  இருக்கு’என்றேன்.அண்ணா சொன்னது ,நீ நல்லா படித்தாயா ,அவர்கள் கேட்டிருக்கும் தகுதி எல்லாம் உனக்கு இருக்கா? அந்த பத்தாவது தகுதியை சரியா படிச்சியா?அவுங்கதான் அங்கே நல்லா தெளிவா ‘ஆள் பார்க்க அழகா கவர்ச்சியா இருக்கணும்’என்று போட்டிருக்காங்களே?அப்புறமும் ஏன் உனக்கு இந்த ஆசை?’என்று அப்படியே என் ஆசைகளை நிராசையாக்கியது.நானும் பயந்துகொண்டு போகவே இல்லை!

         அதன் பிறகு ஜப்பானிய நிறுவனத்தில் வேலைக்கு போக நானே முடிவெடுத்து நானே அப்பாவிடம் கேட்டு என் முயற்சியில் போய் வேலையும் கிடைத்தது.அதேப்போலத்தான் தற்பொழுது செய்யும் ஆசிரியர் தொழிலும்!                                                                       
                                        

             ஆனாலும் இப்பொழுது நினைத்துப்பார்த்தால் அந்த வேலைக்கெல்லாம் போயிருந்தால் இதுவரையில் நான் கற்றுக்கொண்டது ,எனக்கு கிடைத்த நட்புக்கள் ,பல வாய்ப்புக்கள் அதெல்லாம் அங்கே கிடைக்கப்பெற்றிருக்குமா?அல்லது அங்கே இதைவிட பெட்டராக எதுவும் கிடைத்திருக்குமோ?
நடப்பவை யாவுமே நன்மைக்கே!


Saturday, 28 September 2013

சில சூழ்நிலைகளில் என்னை மாட்டி விட்ட தமிழ்மொழி!

         
               நமது மொழிதானே ,எங்கே சீனனுக்கும் மலாய்க்காரனுக்கும்   தெரியப்போகுது என்று அலட்சியமாய் நினைத்து நல்லாவே ‘பல்பு’வாங்கிய சில சூழ்நிலைகளைத்தான் இங்கே பகிரப்போகிறேன்.இதை அனைவரும் படிப்பினையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.மலேசியாவுக்கு வரும் அந்நிய நாட்டு தமிழர்கள் கவனத்தில் வையுங்கள்!
சூழ்நிலை 1 :
                       நானும் என் தோழியும் தினமும் பள்ளிக்கு நடந்துபோகும் அதே நேரத்தில் ,ஒத்தையடிப்பாதையில் ,ஒருவ(ள்)ன் சைக்கிளில் செல்வது வழக்கம்.அவர் ஒரு சீனர். பார்க்க ஆணைப்போலவே இருப்பார் ஆனால் பெண்ணைப்போல தலை வாரியிருப்பார், சிலவிசயங்கள் அவரிடம் பெண் தோரணையைக் காட்டும் .

ஒருநாள் நானும்தோழியும் பேசிக்கொண்டு போகும்போது அவர் எங்களைக் கடந்துபோகும்போது , என் தோழி ‘அவர் அவனா அல்லது அவளா என்றே தெரியலையே , நீ பார்த்து சொல்லு ‘என்றாள்(சனி என் நாக்கில் வந்து உட்காருவானா?) நானும் ரொம்ப கெட்டிக்காரிப்போல ‘பார்த்தாலே தெரியலையா அது அவள்தான் ,இதுல கேள்வியா?’என்று சொல்லி முடிப்பதற்குள் ,சைக்கிள் கீழே விழும் சத்தம் கேட்டு திரும்பிபார்த்தால் ,அந்த நபர் எங்களை நோக்கி ஓடோடி வந்து (கையில் பால் மரம் சீவும் உளியோடு) உங்களுக்கு என்ன திமிரு ,இனிமேல் இப்படி பேசினால் ,இந்த உளியாலே நான் குத்திக்கொன்னுபுடுவேன்’என்று மலாய் மொழியில் மிக கோபமாய் கத்தினார்.

ஐயோ!நாங்கள் இருவரும் செய்வதறியாது வியர்த்து விறுவிறுத்துப்போனோம். மனதுக்குள்ளே நான் அவரை ’சாரி அங்கிள் அல்லது ஆண்ட்டி’ என்று சொல்லி மன்னிப்பு கேட்பதா ?என்று கூட தடுமாறினேன். அனைத்து கடவுள்களும் கண் முன்னே வலம் வந்தனர்.வேகமாய் சீறிப்பாய்ந்து வந்த சீனர் ,உளியைக்காட்டி மிரட்டிவிட்டு ,மீண்டும் சைக்கிளில்  ஏறி நகர்ந்தார்.அவர் சென்று விட்டாரா என்று 101% உறுதிப்படுத்திக்கொண்டு நாங்கள் இருவரும் சிரித்தே சிரிப்பு இருக்கே?கொஞ்ச நாட்கள் ,பள்ளியிலிருந்து லேட்டாகவே(சீனர் சென்றவுடன்) வெளியேறுவோம்!

சூழ்நிலை 2 :
                       நானும் என் அக்காவும் ஓர் விருந்துக்கு செல்ல ,வாடகை காரில் ஏறினோம்.அந்த காலத்தில் வாடைகைக்காரில் போவது மிகவும் ஆபத்து ,காரணம் பெண்கள்(அதிலும் எங்களைப்போல அழகான பெண்கள் என்று சொல்ல மாட்டேன்!!!) தனியே வாடகை காரில் சென்றால், அவர்களை கடத்தி செல்ல வாய்ப்புகள் அதிகள் ,காரணம் செல்போன் இல்லை , கார்கள்  சாலையில்  மிக குறைவாகவே செல்லும் .போய்த்தான் ஆகவேண்டும் என்ற முடிவில் காரில்  ஏறினோம்.

முகவரியை ஓட்டுனரிடம் கொடுத்தோம் .அந்த் மலாய்க்காரரும் ‘ஓ இந்த இடமா?சரி போகலாமே ‘என்று தொடர்ந்தார். அப்பா சொன்ன பாதையை விட அவர் போன பாதை தூரமாக போய்க்கொண்டே இருந்தது. எனக்கும் அக்காவுக்கும் உள்ளூர பயம் வர தொடங்கியது. நான் மெதுவாக அக்காவிடம் ‘இவன் எங்கேதான் போறானோ தெரியலையே’என்றேன்.அக்காவும் ‘அதான் எனக்கு பயமா இருக்கிறது ,அங்கேயும் இங்கேயும் சுத்தி சுத்தி இறுதியில் காசு அதிகம் கேட்கபோகிறான் ,நாம செத்தோம்’என்று முணுமுணுத்தார்.

ஓட்டுனரோ எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் காரை செலுத்தினார். போய்க்கொண்டே இருந்தோம் , பொறுமையை இழந்து அவரிடம் ‘அங்கிள் இன்னும் எவ்வளவு தூரம் போகனும்?என்றோம். அவரும் ‘இன்னும் ஐந்து ,பத்து நிமிடங்கள் ‘என்றார்.
உயிரைக் கையில் புடித்துக்கொண்டு வேண்டாத தெய்வமே இல்லை. இடமும் வந்தது.ஓட்டுனர் காரை நிறுத்தினார் ,நாங்கள் பணம் கொடுத்தோம் ,ஓட்டுனர் எங்களிடம் ‘உங்களைப்பார்க்க என் பெண்பிள்ளைகள் போலவே இருக்கு, எனக்கு பணம் வாங்க மனமில்லை ,ஆனாலும் என்னைத் தவறாக நினைத்துப்பேசிட்டிங்களே?அதான் எனக்கு மனம் சரியில்லை , நான் நல்லவந்தான் , விருந்து முடிந்து வரும்வரை நான் வெயிட் பண்ணி ,கொண்டு போய் நீங்கள் ஏறிய இடத்திலே விடட்டுமா?என்றாரே.

கன்னத்தில் அறைந்தது போல ஒரு சொல். ’பாக் சேக்(மலாய் மொழியில் மாமா) மன்னிச்சிருங்கள் , உங்களுக்கு தமிழ் தெரியுமா?என்று நாக்கு தடுமாற கேட்டோம்!சிரித்துகொண்டே ‘நல்லாவே தெரியும் ‘என்றார் .நாங்கள் பெண்கள் ,அதான் பயந்துவிட்டோம்’என்று சமாளித்தோம். சிரித்துக்கொண்டே ‘சரி சரி நியாயமான பயம்தான் , போகும்போது உதவி வேண்டுமானால் நான் அந்த கடையில்தான் உட்கார்ந்திருப்பேன் , வந்து தாரளமாக அழையுங்கள்’என்றார். ’அதுக்கு அவசியம் இல்லை ,நண்பர்கள் கொண்டு போய் விடுவார்கள்’என்று கூறி விடைபெற்றோம்!

சூழ்நிலை 3:
                       நான் வேலை செய்து விட்டு தோழிகளோடு ஒரு பொது பேருந்தில் வீட்டுக்குப்போவது வழக்கம் .ஒரே ஒரு குறிப்பிட்ட பேருந்துதான் பூச்சோங் செல்லும் ,ஆகவே அந்த பேருந்தின் ஓட்டுனர் மட்டும் காண்டக்டர் எல்லோரையும் நன்கு அறிந்திருந்தோம். ரொம்ப நல்ல நட்பாகவும் பேசுவார்கள்,அடிக்கடி பார்க்கும்  முகம்தானே !

அந்த வகையில் ஒரு மலாய்க்கார இளைஞர் காண்டக்டராக வருவார். எப்போதும் எங்களை கிண்டல் செய்து பேசுவார். அதிலும் என்னிடம் கொஞ்சம் அதிகமாக பேச முனைவார். ஆனால் நாங்கள் அப்போது ரொம்ப பயந்தாங்கொள்ளிகள், யாரிடமும் சரியாக பேசபயப்படுவோம் அதிலும் அந்நிய இனம் என்றால் சொல்லவே வேண்டாம்.

இப்படியே அந்த கண்டக்டர்  அடிக்கடி எங்களிடம் கொஞ்சி கொஞ்சி பேசுவார் . என் தோழிகளிடம் என் பெயரைக் கேட்பார். எனக்கு பிடிக்காத விசயம் அது. அவர் எங்களை கடந்துபோகும்போது நான் தமிழில் பலமுறை திட்டி இருக்கேன்.எல்லோருக்கும் பணம் கொடுத்து விட்டு என் பாக்கி பணத்தை மட்டும் நான் இறங்கும் வரை காத்திருந்து ,பிறகு கொடுத்துவிட்டு சிரிப்பார்.எனக்கு அதை ரசிக்கவே முடியாது.

ஆனால் அவர் ஏதோ என்னை வென்று விட்டதாய் நினைத்து சிரிப்பார்.எனக்கு கோபம் மட்டுமே வரும் . தீபாவளி சமயங்களில் பேருந்தில் போகும்போது இறங்கும் வேளை ,படியில் வந்து நின்று வாழ்த்து சொல்லுவார்.ஆனால் நான் அவன் என்னைக்கடந்து செல்லும் போதெல்லாம் என் தோழிகளிடம் , அவனும் அவன் பார்வையும் ,பெரிய கமல்னு நெனைப்பு , எப்படி பார்க்கிறான் பாரு , ஒருநாளைக்காவது பஸ்ஸிலிருந்து கீழே விழப்போறான்’என்றெல்லாம் திட்டியிருக்கேன்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்தது. ஒருநாள் நாங்கள் பேருந்தில் ஏறியபோது , வழக்கத்துக்கு மாறாக அந்த மலாய்க்காரர் அமைதியாக  காணப்பட்டார் ,ஆனாலும் நாங்கள் பேருந்தில் ஏறியதைக்கண்டவுடன் ஒரு குட்டி சந்தோசம் அவர் முகத்தில். நானும் போய் உட்கார்ந்தேன் , தோழி அவள் இடம் வந்ததும் இறங்கினாள்.நான் இறுதியாக இறங்குவேன் .

நான் பொதுவாக இறங்கும் வேளை,பேருந்தில் ஆள் குறைவாகவே இருப்பார்கள். காரணம் நான் இறங்கும் இடம் கடைசி ஸ்டாண்ட் ,அதன் பிறகு பேருந்து வேறு ரூட் போய்விடும். என்னிடம் பணம் வாங்கிகொண்டு ‘டிக்கெட்டையும் கொடுத்து விட்டு , முன்னும் பின்னும் நடந்தவர் ,என் சீட்டின் முன்னால் உள்ள இருக்கையில் வந்து அமர்ந்தார். நான் வெளியே எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தேன் .’செல்வி ‘என்று மெதுவாக அழைத்தார்,எனக்கு தூக்கி வாரிப்போட்டது.திரும்பிபார்த்தேன் .மெதுவாக சிரித்துக்கொண்டே ‘செல்வி இன்றோடு என் வேலை முடிகிறது ,நான் என் கம்போங்(கிராமம்)போகிறேன்.அங்கே வேறு வேலை கிடத்து விட்டது, எனக்கு உன்னை கிண்டல் செய்ய ரொம்ப பிடிக்கும் ,என் பழைய காதலி உன்னைப்போலவே  நீளமான கூந்தல் , குள்ளமாக இருப்பாள் , உன்னைப்போலவே சிடுசிடுவென பேசுவாள் ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்துகொண்டு போய்விட்டாள், சோ நான் பாவம்’என்று அழகான தமிழில் சொல்லி முடித்தார் , எனக்கு பேச முடியவில்லை ‘ஒரே அதிர்ச்சி + சோகம் + மகிழ்ச்சி(நம்மைப்போல ஒருவள் ?).என் ஒரே கேள்வி ‘உனக்கு எப்படி தமிழ் தெரியும்? ’நான் எஸ்டேட்டில் வளர்ந்தவன் , உன்னைவிட அழகாக தமிழ் பேசுவேன்.நீ என்னை எப்படியெல்லாம் திட்டியிருக்கிறாய்?’என்று சொல்லி சிரித்தார்!

என் அதிர்ச்சி அதிகமானது. ஆனால் அவர் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்று மட்டும் தெரிந்தது.நான் இறங்கும் இடம் வந்தது. ‘போயிட்டு வா செல்வி, ‘இன்ஷல்லாஹ்’ வாய்ப்பிருந்தால் பார்க்கலாம் ‘என்று பை பை காட்டினார்.ஐயோ எப்படியெல்லாம் ஏசியிருக்கோம்,ச்சே தப்பு பண்ணிட்டோமே ,மன்னிப்பு கேட்க கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டதே?ஏதோ ஓரு சோகம்என்னுள் புகுந்து கொண்டது. ஆனால் இன்றுவரை அவரை நான் பார்க்கவே இல்லை .

                             இன்னும் பல சூழ்நிலைகள் இருந்தாலும் என்னால் மறக்க முடியாத சில சிட்டுவேசன்களையே இங்கே பகிர்ந்துகொண்டேன்.இங்கே வரும் நண்பர்களே கவனம் ,கவனம் ,கவனம்!சீனருக்கு தமிழ் தெரிவது , தமிழனுக்கு சீன மொழி தெரிவது மலேசியாவில் சர்வசாதாரணம்!
                       

Thursday, 5 September 2013

முதன் முதல்...

             அண்மைய காலமாக ரொம்ப கனமான பாத்திரமாக மாறி, பதிவுகள் எழுதி தள்ளியாச்சு. சரி இப்போ கொஞ்சம் எல்.கே.ஜி லெவெலுக்கு இறங்கி நான் முதன் முதலாக என்ற தலைப்பில்  எழுதப்போறேன்.


  •            நான் ஸ்டூடியோவில் சென்று முதன்முதலாக பிடிச்ச படம் என் எட்டு வயது பிறந்தநாள் அன்று(என் அண்ணாவின் சட்டை அணிந்து)
  •                                                       

  •                நான் முதன்முதலாக படித்த பள்ளிக்கூடம் புக்கிட் ஜாலில்                                  தோட்டத்தமிழ்ப்பள்ளி.

  •                நாம் தியேட்டரில் அப்பாவோடு குடும்பமாக போய் பார்த்த முதல்                     திரைப்படம் ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ 

  •                நான் பார்த்த முதல் இறப்பு ,என் அம்மாவின் தந்தை திரு.குஞ்சம்பு                     அவர்கள்.

  •               நான் முதன்முதலாக (இறப்பினால்)பிரிந்த நட்புகள் என் தோழியின்               அண்ணா தம்பிராஜா அவர் தங்கை விமலா.(குளத்தில் விழுந்து                       இறந்து போனார்கள்)

  •              நான் முதன்முதலாக பெற்ற பரிசு ஆசிரியரிடம் ஒருவெள்ளி.

  •               நான் முதன்முதலாக சென்ற இடைநிலைப்பள்ளி விவேகானந்தா                     பள்ளி(மலேசிய பணக்காரர்களில் ஒருவரான ஆனந்தகிருஷ்ணன்                    அவர்கள் படித்த பள்ளி)ஆனால் நான் ஒருநாள்தான் அங்கே                                 படித்தேன்!

  •              என் ஆரம்பப்பள்ள்யில் முதன்முதலாக இறந்துபோன என் தோழன்                 குமார்(தமிழ்நாட்டில் இருதய சிகிட்சைக்காக சென்று அங்கேயே                         இறந்துபோனான்).

  •              என் முதன்முதல் வலிமிகுந்த அறுவை சிகிச்சை ,என் காலில் .                            டாக்டர் என்னை ’லஃப்ஃபா’  வலிக்க வலிக்க என் காலை கத்தியால்                கிழித்து  உள்ளே இருந்த எதையோ அகற்றினார்.நான் அலறிய                          அலறல் ,என் அப்பாவே அழுதுவிட்டார்.

  •             நான் முதன்முதலாக பள்ளியில் நடித்த நாடகத்தில் இளவரசனின்                  தங்கையாக நடித்தேன்.என் பெயர் ஐயை!

  •            முதன்முதலாக பேசிய நாடக வசனம் ‘புலவரே இந்த செய்யுளின்                     பொருள் என்ன?’

  •              நான் முதலும் கடைசியுமாக அப்பாவிடம் வாங்கிய அடி                                        ,தோழியோடு சேர்ந்து சீனர் வீட்டில் முட்டைத் திருடியபோது.

  •             நான் முதன்முதலாக சென்ற வெளிநாடு ஜப்பான்.

  •                நான் முதன்முதலாக ஓட்டிய கார் (இன்னும் ஓட்டும் அதே                                   )மலேசிய புரோட்டோன் சாகா


  •              நான் எழுதிய முதல் எழுத்து  பத்திரிக்கையில் ’சாலை விபத்து’                       என்ற கட்டுரை.


  •             நான் முதன்முதலாக முழுவதுமாக படித்த முதல் கதை ‘தெருகூத்து             ‘(ராணிமுத்து)

  •              என்னை முதன்முதலாக உறங்க விடாமல் செய்த இறப்பு செய்தி என்            பள்ளி நண்பனின் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான                                       கோர விபத்து செய்தி.


  •            இலக்கியப்பரிட்சைக்காக நான் படித்த முதல் நாவல் நெஞ்சினலைகள்


  •                முதன்முதலாக  நான் ஃபெயில் (சிகப்பு புள்ளி) பண்ணிய பரிட்சை                     குடியியல் .


  •                என் முதன்முதல் ஆண் ஆசிரியரின் பெயர் திரு.விஸ்வநாதன் .


  •               என் முதல் அண்டைவீட்டுத்தோழி சாந்தகுமாரி


  •                என் முதல் பஸ்பயணம் அப்பா வழி பாட்டி வீடு(ஜோகூர் மாநிலம்).


  •                நான் சந்தித்து பேசி படம் பிடித்துக்கொண்ட முதல் நடிகர்                                     சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.


  •                நான் முதன்முதலாக பதிவில் எழுதியது என் நட்புகளைப்பற்றி.

  •                
  •                 எங்கள் ஊர் வானொலியில் முதன் முதலாக என் பெயரை                                   அறிவித்து எனக்காக ஒலியேற்றிய பாடல் ‘ஒரு தங்கரதத்தில்                            பொன் மஞ்சள் நிலவு’


  •               நான் முதன்முதாலக வேலை செய்து பெற்ற சம்பள தொகை ரிம450


  •               என் முதல் வேலை அனுபவம் matsushita air cond company


  •                 எனக்கு முதன்முதலாக  அறுவை சிகிட்சை செய்து என் மகளை                        இவ்வுலகுக்கு கொண்டு வந்த மருத்துவர் மகப்பேறு நிபுணர்                              டாக்டர்.சிவகுமார்.


  •               என் முதல் பள்ளி தோழி சிவனேஸ்வரி (sumathi siva)

*************நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் ,இதை தொடர என் பதிவுலக நட்புகளை அழைக்கிறேன்!


Monday, 12 August 2013

அறியாத வயதில்..அறிந்தும் அறியாமலும்!

          ஒரு குறிப்பிட்ட வயது வரை ,நாம் பண்ணாத குறும்புகளே இல்லையென்று சொல்லும் அளவுக்கு நாம் பண்ணிய குறும்புகள் அநேகம் !அநேகம்!.வீட்டில் இதனால் வாங்காத அடிகள் இல்லை, ஆனாலும் நிறுத்தியபாடில்லை.
                                             
                                                             


               ஒரு காலகட்டத்தில் நாங்கள் கூட்டாக சேர்ந்து செய்த குறும்புகளை (இதுவரையில் ரகசியமாய் வைத்திருந்த)கொஞ்சம் திரும்பிபார்க்கிறேன்.

              பக்கத்துவீட்டுத் தோழியின் அத்தை ,அவர் மூக்குகண்ணாடி ரொம்ப பவர்ஃபுல் பார்வை. சின்ன வயதில்தான் ,யாரும் எதையாவது போட்டிருந்தால் ,உடனே அதைப்போட்டு பார்க்க ஆசை வருமே?புதிய செருப்பு ,கண்ணாடி ,புது சட்டை(சேராவிட்டாலும் இவைகளைப் போட்டுப்பார்க்க ஆசை).
                     
                                                         

             அந்த அத்தை , ஒருநாள் கண்ணாடியை மறந்து என் வீட்டில் வைத்துவிட்டு போய்விட, என் பலநாள் ஆசை அன்று அரங்கேறியது.ஆம் அம்மா ‘போய் கொடுத்துட்டு வா’என்று அனுப்ப ,நானும் தங்கையும் பின்னால் வழியாக கொள்ளைப் பக்கம் போனோம்.அம்மா தலை மறைந்தவுடன்  அதைப்போட்டுப்பார்த்தோம்.

              எல்லாமே கிட்ட கிட்ட பெரிசு பெரிசாய் தெரிந்தது.ஒரே ஆச்சரியம் ,என்னம்மோ ஆச்சரியம். ஐயோ இங்கே பார் ,அங்கே பார் என்று கூவிக்கொண்டே ,ஒரு சிறிய கால்வாய் கொள்ளைக்கு இடையில் ஓடும்,அதைக் கண்ணாடி அணிந்தவாறே நான் தாண்டுவேனா?

          ‘தடால் என கால்வாயில் விழுந்தேன்!ஆமாம் அது கிட்ட பார்வை கண்ணாடி ,தூரமாக இருந்த கால்வாய் ,கிட்டே தெரியுமா, தாண்டிகுதிக்க கால் எங்கேயோ போய் ஊன்றி, கால்வாயில் விழுந்து, அழுகை ஒரு புறம் ,பயம் மறுபுறம்.நல்லவேளை கண்ணாடிக்கு ஒரு பாதிப்பும் இல்லை. 

              என் அப்பா வழி பாட்டி ,தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்.இரவில் பீடி குடிக்கும் பழக்கம் உடையவர். வெற்றிலைப்பாக்கும் மெல்லுவார். அந்த பீடி வாசம் ,என்னமோ போல் இருக்கும்.

             பாட்டிக்கு வெற்றிலை இடித்துக்கொடுக்கும் போதெல்லாம் ,அந்த வாசம் பிடித்துபோகவே(உரலில் இடிப்பதால் ஒரு வித வாசம் )திருட்டுத்தனமாய் இடித்த வெற்றிலையை நாங்கள் போட்டு மெல்லுவோம். (இன்னும்கூட விசேச வீட்டுக்குப்போனால் ,வெற்றிலை சாப்பிடுவோம்!) அதேப்போல பீடி இழுக்க ஆசை வந்தது.

           ஒருநாள் வீட்டில் யாருமே இல்லாத சமயம் ,நானும் அக்காவும் கட்டிலுக்கு அடியில் புகுந்துகொண்டு பீடியைப் பற்ற வைத்து வாயில் வச்சி ஊத’ஐயோ தொண்டையில் விசவாயு தாக்கியது போல ஒரு உணர்வு. புகை தலைக்கேறியது.என்னால் தாங்க முடியவில்லை, கட்டில் அடியிலிருந்து வெளியே ஓடி வந்து ,இரும்பி இரும்பி நெஞ்சே உடைந்துபோவதுபோல கட்டிலில் விழுந்தேன்.அக்காவும் அதே போல !
                                                               
                                                                     

             நல்லவேளை பாட்டியின் பழக்கத்தில் வெற்றிலையை மெல்ல மட்டும்  பழகினோம்,பீடி கொடுத்த பாடம்,அன்றே அதுக்கு சுவாஹ!.

             கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல,பக்கத்து வீட்டு தோழி மற்றும் அவள் அண்ணனோடு  சேர்ந்துகொண்டு (அவுங்க வணங்கும் காளி சாமிக்கு) ,முட்டை அவித்து சாமி கும்பிட ,சீனர் வீட்டில் போய் முட்டைகளைத் திருடி,சீனத்திக்கு தெரிய வரவே, அப்பாவுக்கு தகவல் வந்தது

            வேலை முடிந்து வந்த அப்பா வீட்டில் நுழையும்போதே   என் பெயரையும் அண்ணா பெயரையும் சொல்லி வேகமாய் கத்தி அழைத்து , விசாரித்து முடிவில் அப்பாவிடம் பொய் சொல்லமுடியாமல் உண்மையை உளறி முதலும் கடைசியுமாய் ஓர் அறை அன்று அப்பாவிடம் வாங்கினேன்.அன்று முதல் அந்த தோழியின் நட்பும் முறிந்தது(சில காலங்களுக்கு) திருட்டு பழக்கமும் விடைபெற்றது.
                                                                 
           
             என்னை எப்போதும் வெறுப்பேத்தும் தோழி(முட்டைத் திருடி அடி வாங்கியதால் பழி வாங்க எண்ணி) அவள் பிறந்த நாள் அன்று ,அவளுக்கு அவள் மாமா பரிசு கொடுத்தை ரொம்ப பீத்திக்கொண்டாள்!

            அந்த மகிழ்ச்சியை பாழ்படுத்த எண்ணி , நானும் தங்கையும் ஒரு பெட்டியை எடுத்து ,அதில் கோழிக்கொட்டகை மற்றும் ஆட்டுக்கொட்டகையில் உள்ள காய்ந்துபோன கழிவுகளைப்பொறுக்கி பெட்டியில் வைத்து ,அவள் பெயரை எழுதி ,அவள் வீட்டில் முன்னால் வைத்து தலைமறைவாகினோம். 

                                                                   

          மாலையில் (எங்க கெட்ட நேரம்) அவள் அம்மா அந்த பெட்டியைத் திறந்து பார்த்து ,என் அம்மாவை அழைத்து ‘யார் வேலைன்னு தெரியல ,பாருங்க இப்படியா?’என்று முறையிட்டுச் சென்றார்.

             அந்த பெட்டியை நாங்கள் கையில் வைத்திருந்ததை அம்மா ஏற்கவனே பார்த்துவிட்டதால் ,அது நாங்கள் வைத்த சூன்யம் என்று  தெரிய வரவே , அடி பின்னி எடுத்தது மட்டுமல்லாமல் ,அவளிடம் மன்னிப்பும் கேட்க வைத்தார்.அடி ஒரு பக்கம் ,அவமானம் மற்றொரு பக்கம் புடுங்கி தின்றது.

           சிலபல காரணங்களால் பக்கத்துவீட்டுத் தோழி வீட்டிற்கு போகவோ ,பேசவோ கூடாது என்று வீட்டில் ரூல்ஸ் போட்ட பிறகும் ,பள்ளியில் பேசிக்கொள்வோம். வீடு வரை ஒன்றாக வருவோம் , வீட்டை அடைந்ததும் நல்ல பிள்ளையாய் மாறிவிடுவோம்.

           பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் கொய்யாக்காய் பறிப்பது வழக்கம். சீனர் வீட்டு மரத்தில் ஒரு ஆள் , காவல் நிற்க ,இன்னொரு ஆள் மரம் ஏறுவோம்.பிறகு அவர் இறங்கி வந்தது ,காவல் காத்தவர் டெர்ன்.

           நான் மரம் ஏறி கொய்யாக்காய் பறித்து விட்டு இறங்கியதும் ,தோழி ஏறினாள். பொதுவாக அவ படிப்பைத் தவிர மற்ற விசயங்களில் என்னை விட கெட்டி. அவள் மரம் ஏறியதை ஒரு பொருட்டாக மதிக்காமல் ,காவல் காப்பதை விட்டுவிட்டு நான் பறித்த கொய்யாக்காய்களை தின்றுக்கொண்டிருக்கும்போது ,மரத்தில் இருந்து அவள் பாய்ந்து விழுந்து ‘ஓடு ஓடு ,சீனன் வந்துட்டான் ‘என்று  அலற ,புத்தகப்பையை எடுத்துக்கொண்டு ,ஓடிய ஓட்டம் இருக்கே?

                                                                     
          ஒலிம்பிக்கில் ஓடி இருந்தால் தங்கப்பதக்கம் நிச்சயம்.அந்த சம்பவத்தைக்கூட நான் வேண்டும் என்றே அவளைச் சீனனிடம் மாட்டிவிட்டதாக  எண்ணிக்கொகொஞ்சகாலம் என்னோடு பேசாமல் இருந்தாள்.

          நான் ,அண்ணா ,என் தோழி(அண்ணாவின் மனவி) அவள் அண்ணா,இரண்டு அக்காள்கள் என எல்லோரும் நாய்க்குட்டியைக் கூட்டிக்கொண்டு ,குட்டைக்கு குளிக்கப்போய் ,நாய் குட்டையில் விழ அதைக்காப்பாற்ற அவள் அண்ணன் போய் விழுந்தார்,அவரைக் காப்பாற்ற அவள் அக்கா போய் விழ,இதைக்கண்ட நாங்கள் அலறி கத்தி ,ஊரையே கூட்டினோம். ஆனால் அந்த அண்ணாவும் அக்காவும் நாய்க்குட்டியும் இறந்து போயினர். 
                                                                     

             அன்று முதல் குறும்புகளைக் குறைத்தோம் .ஆந்த சம்பவத்தில் விழுந்த ஒவ்வொருஅடிதான் இன்றுவரை என் பிள்ளைகளையும் சரி யார் வீட்டுப்பிள்ளையானாலும் நீரில் விளையாடுவது என்றால் நான் அனுமதிக்கவேமாட்டேன்.
                                                       
                                       
          பிறகு காலங்கள் உருண்டோடின ,வளர்ந்தோம் . சிலபழக்கவழக்கங்களை விட்டோம். பிறகு கிராம வாழ்க்கையை மறந்தோம்.தற்பொழுது ந(ர)கர வாழ்க்கையில் ,நம் பிள்ளைகளை எதுவும் செய்யவிடாமல் நம் விருப்பப்படியே செயல்பட வைக்கிறோம்.என்ன பரிதாபம் ? பிள்ளைகள் பக்கத்து வீட்டிற்கு போக விடுவதில்லை, நம் கண் முன்னேதான் விளையாடனும்.படம் பார்த்து விளையாட்டாய் சிகரெட் பிடிப்பதுபோல , சைகையில் செய்தால் கூட அடி கொடுக்கிறோம் ,கெட்ட பழக்கம் வந்து விடும் என்ற பயத்தில்?நாம் அனுபவித்த எதையுமே அவர்கள் ஐம்பது விழுக்காடு கூட அனுபவிக்கவில்லை என்பதுதான் மிக பெரிய உண்மை!






Thursday, 8 August 2013

அத்தனைக்கும் ஆசைப்படு நூலில் சுட்ட சில வரிகள்

என்னைக் கவர்ந்த சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்!

* வெற்றிக்கு உரிமை கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் பிறர் மீது பழி போடுகிறது!

* நன்றாக வாழத் தெரியாதவர்கள்தான்,நன்றாக ஆளத்தெரியாதவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

* அமைதியும் ஆனந்தமும் கடைத்தெருவில் கிடைக்காது,காட்டிலும் கிடைக்காது.அது உங்களுக்குள்ளேயே ஒளிந்திருக்கிறது.

* ஆசையத் துறக்கவேண்டும் என்று விரும்பினால்  அந்த விருப்பமும் ஓர் ஆசைதானே!

* சந்தோஷமில்லாமல் இருப்பது போன்ற மாபெரும் குற்றம் உலகில் வேறில்லை.

*அன்பாய் இருங்கள் ,அமைதி கிடைக்கும் ,அமைதியாய் இருங்கள் ஆனந்தம் கிடைக்கும்.

*எந்தச் சமூகத்தில் பெண்கள் மதிக்கப்படவில்லையோ , அந்தச் சமூகம் ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பே இல்லை.

*தோல்வியே கூடாது என்றால் ,நீங்கள் விளையாட்டில் ஈடுபடவே தகுதியற்றவர்

*வேதனைகளைச் சுமக்கு பேரரசனைவிட ,ஆனந்த்ததை அனுபவிக்கும் பிச்சைக்காரன் மேல்.

*பக்திக்கும் பாசாங்கிற்கும் இடையில் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது.

*உங்கள் மனம் என்பது உங்களைத் தாண்டிப்போனவர்கள் வீசி நிரப்பிவிட்டுப்போன குப்பைத்தொட்டி.

*இன்னொருவரிடம் இல்லாத ஒன்று உங்களிடம் இருந்தால்தான் சந்தோசப்பட முடியும் என்பது ஒரு நோயல்லவா?

*அச்சத்தினாலும் ஆசையினாலும் வேண்டிக்கொள்வதன் பெயர் பிரார்த்தனை அல்ல!

*தோல்வி என்பது நடந்து முடிந்த விதத்தில் இல்லை, அதை நீங்கள் எப்படி ஏற்கிறீர்கள் என்பதில் இருக்கிறது

*எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் அதன் பின் விளைவுகளையும் வேதனையில்லாமல் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளத் தயாராயிருந்தால்.

*சந்தேகம் என்பது புத்திசாலித்தனமல்ல.புத்திசாலித்தனம் குறையக் குறையத்தான் மனிதனுக்குச் சந்தேகப்படும் குணம் அதிகமாகும்.

*கடவுள் எங்கோ எட்டாத மலை உச்சியில் இல்லை.உங்களுக்குள் இருக்கிறார்.கவனியுங்கள்

*மனிதனுக்கு அடுத்த கிரகத்தைப்பற்றி ஆயிரம் ஆராய்ச்சிகள் செய்யத் தெரியும்.இந்த பூமியில் சந்தோசமாக வாழ்வது எப்படி என்று மட்டும் தெரியாது.

*கோபத்தையும் காழ்ப்புணர்வையும் வெளிப்படுத்துவதில் மனிதன் முழுத் திறமையாளனாக இருக்கிறான், அன்பையும் பரிவையும் வெளிப்படுத்துவதில் மட்டுமே கற்றுக் குட்டியாகவே இருக்கிறான்.

*ஒரு தாய் குழந்தையிடம் காட்டும் பிரியத்தில் தீவிரம் இருக்கும் ,எதிர்பார்ப்பு இருக்காது.

*காயங்கள் இல்லாமல் கனவு  வேண்டுமானால் காணலாம்,வலிகள் இல்லாமல் வெற்றி காண முடியாது.

* உங்களை நிந்திப்பவரைப் பதிலுக்கு நிந்திக்க ,புத்திசால்லித்தனம் தேவையில்லை.அமைதியாக இருக்கத்தான் அதீத புத்திசாலித்தனம் தேவை.

* சந்தோசம் என்பது விரும்பியதைச் சொந்தமாக்கிக் கொள்வதிலா இருக்கிறது?கிடைத்த பின் அதை அனுபவிப்பதில்தான் இருக்கிறது.

*மூட்டைக்குள் பொன் இருந்தால் என்ன ?புழுதி இருந்தால் என்ன?
கையாளத் தெரியாவிட்டால் இரண்டும் பாரம்தான்.

(இன்னும் நிறைய அந்த நூலில் கொட்டிக்கிடந்தாலும் ,என்னைக்கவர்ந்ததும் ,அதைப்படித்து நான் அதுவாக பாவித்து வரும் சில வரிகளை இங்கே எழுதியுள்ளேன்)
                                                               

Sunday, 4 August 2013

கடவுள் கொடுத்த பரிசு நட்பு ,அந்த நட்புகள் கொடுத்த பரிசுகள்!

                   எனக்கு அவனை/அவளை ரொம்ப பிடிக்கும் ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை’என்று கூறினால் அது ஆழமான நட்புக்கு வழிவிட்டுச்செல்லுமா ?என்றால் கேள்விக்குறிதான்!ஆனால் ஒருவரை பல காரணங்களுக்காக பிடித்துப்போய் விட்டால் அவர்களைத்தான் நா(ன்)ம் நட்பாக ஏற்றுக்கு கொள்வோம்!
                                                                      

                 அந்த வகையில் நான் நட்பாக ஏற்றுக்கொண்ட என் நட்புகள் எனக்கு கொடுத்த பரிசுகளை இன்றைய நட்பு தினத்தில் நினைவு கூர்கிறேன். பல்வேறு பரிசுகள் பலரிடம் இருந்து பெற்றிருந்தாலும் ,இன்னும் நான் பொக்கிசமாக பாதுகாத்துவரும் பரிசுகள் அவை.பள்ளிக்காலத்தில் என் தோழி அடிக்கடி பஜனை வகுப்புக்கு போவாள் .அவள்  பெயர் சிவனேஸ்வரி

                அவள் ஒரு முறை பஜன் வகுப்புக்குச்சென்று எனக்கு ஒரு சின்ன படம் (பர்ஸில் வைக்கும் அளவுக்கு) ஒரு சாய் பாபா படம் கொடுத்தாள் .நான் குரு வழிபாட்டில் தீவிரம் காட்டாதவள் இருப்பினும் என் 13 வயதில்  அவள் கொடுத்த அந்தப்படம் இன்னும் என் பர்ஸில் இருக்கிறது!

                    என் 21 வயது பிறந்தநாளுக்கு என் அருமை நண்பர்கள் ,சிவா,மணி ,இளன் அப்போ அவனுங்க எல்லோரும் படித்துக்கொண்டிந்த நேரம் ,ஆகவே ஒரு புடவை வாங்குவது அந்த காலகட்டத்தில் சிரமம்தான். இருப்பினும் என் பிறந்தநாளுக்கு அவர்கள் வாங்கிகொடுத்த புடவை இன்னும் என் வீட்டு அலமாரியில் பத்திரமாக இருக்கிறது.


                        திருமணமாகி,2000 பொங்கல் அன்று புதிய வீடு குடி புகுந்தேன்.அன்று எனக்கு என்ன இல்லை என்று கேட்டு ,ஒரு மின் கேத்தல் ஒன்றை என் தோழி புஷ்பா பரிசாக கொடுத்தாள்.இன்று வரை அந்த கேத்தலில் நான் வெந்நீர் கொதிக்கவைப்பேன்.

               அண்மையில் கனடாவில் இருந்து அவள் என் வீட்டிற்கு வந்த சமயம்,இதோ உன் கேத்தல் என்று சொல்லி அதில் நீர் கொதிக்க வைத்துக்காப்பி கலந்து கொடுத்தேன்.செல்வி u are great ,still u keep this ?என்று ஆச்சரியப்பட்டு போனாள்.

              அது மட்டுமல்ல புஷ்பாவுக்கு பரிசு கொடுப்பதென்றால் ரொம்பவே பிடிக்கும் .அதிலும் எனக்கு என்றால் எக்ஸ்ட்ராவா செய்வாள். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் ,இங்கே வந்தவளைக் காணச் சென்றேன். உடனே என்னை அறைக்குள் அழைத்து கையில் ஒரு சிறிய நகைப்பெட்டியைக் கொடுத்தாள் .என்ன்வென்று பார்த்தேன்.

              அவளுடைய தங்க மூக்குத்திகள் 4 மற்றும் ஒரு  s போட்ட தங்க லாக்கேட்.ஐயோ !எனக்கு வேண்டாம் புஷ்பா நான் என்ன மூக்குத்தியா அணிகிறேன் ,வேண்டாம்’என்றேன்.’நீ போடவேண்டாம் ,உன் மகள் இன்னும் கொஞ்ச காலத்தில் அணியும் வயது வரும் ,இதை எனக்கு பிறருக்கு கொடுக்க மனம் இல்லை’என்றாள்.
                                                                 
                அந்த தங்க லாக்கெட்டை எப்போதாவது ஆசை வந்தாள் சங்கிலியில் அணிந்துகொள்வேன்.அதைப்பார்க்கும்போதெல்லாம் ,பாசம் மட்டுமே என் கண்களுக்கு தென்படும்.மற்றுமொரு தோழி இளவரசி ,என் நெருங்கிய தோழி ,எனக்கு பல பரிசுகள் கொடுத்தாலும் , கவிஞர் வைரமுத்துவின் கவிதை தொகுப்பு புத்தகம் ஒன்றை கொடுத்தாள்.

              முதன்முறையாக  நான் படித்த வைரமுத்துவின் கவிதை என்றும் சொல்லலாம்.பலர் அதை இரவல் வாங்கிச் சென்றாலும் ,எப்படியோ திரும்பகேட்டு இன்னும் அலமாரியில் என்னைப்பார்த்துச் சிரிக்குது.
                 
                   கடந்த மூன்று வருட பழக்கத்தில் என் நட்பு எனக்கு சில பரிசுகளை கொரியரில் அனுப்பி வைத்திருந்தார்.அவர் அனுப்பிய உடைகள் ,அணிகலன்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ,நானாக கேட்டு, அவர் அனுப்பிய ’அத்தனைக்கும் ஆசைப்படு’ மற்றும் ’சாகாவரம்’ புத்தகங்கள் இரண்டையும் பத்திரமாய் பாதுகாத்துவருகிறேன்.சில நண்பர்கள்  வந்தால் இரவல் கேட்பதுவும் ஒன்று,ஒரே வார்த்தையில் ‘நோ’சொல்லிடுவேன்.காரணம் அது கடல் கடந்து வந்த பரிசு!