Thursday, 13 February 2014

’அன்பர்கள் தின ’ஸ்பெசல் உண்மை சம்பவம்!

              இதை நான் சொல்லியே ஆகணும்.மறைத்து வச்சிருக்கும் அளவுக்கு அப்படி  ஒன்னும் பெரிய சிதம்பர ரகசியம் அல்ல!1998 ,அந்த வருடம் வெலண்டைய்ன் டே! ரொம்ப முக்கியமான வருசம்.ஹ்ம்ம் !அதுதான் முதன்முதலாய் அதிகாரப்பூர்வமாக மாப்பிள்ளை அமைந்து ரொம்ப பிசியாக இருந்த வருசம். திருமண தேதியும் நிச்சயிக்கப்பட்டது.ஆனால் அந்த வருசம்  டேட்டிங் போக  வாய்ப்பு கிடைக்கவில்லை,காரணம் இருவருக்குமே வேலை,சோ எதுவும் இண்டரஸ்டிங் இல்லாததால் அமைதியாக கையில் ரோஜாப்பூவோடு திரிந்த பெண் தோழிகளை ஆபிசில் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தேன்.நமக்குதான் காதல் எல்லாம்  சரிப்பட்டு வரலியே,நேரே திருமணம்தானே?(கொடுத்து வச்சது அவ்வளவுதான்?)
       14/2/1998 ஆபிசில் வேலை செய்து கொண்டிருந்த சமயம். மதியம் 1 மணிப்போல என் மேஜை போன் அலறியது. சாப்பிட்டு விட்டு மானேஜர் முதல் குமாஸ்தா என எல்லோரும் கொஞ்சம்நேரம் கண் அயருவோம். சோ ,மயான அமைதியாய் இருக்கும் அலுவலகம்.மறுமுனையில் ஓர் அழகான கம்பீர குரல் ‘செல்வியா ?
‘ஆம் செல்விதான்!’
‘என்ன நலமா செல்வி?
‘ஹ்ம்ம் நலம்தான்,யாரு இது?’
’அது இருக்கட்டும் ,கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா?’
‘என்ன ....?
‘உங்களுக்கு மாப்பிள்ளை செட் ஆகிவிட்டது!’
‘ஆமாம் ,அது சரி நீங்க?’
‘என்ன செல்வி நாங்களும் கேட்டிருந்தோம்,ஒருபதிலும் சொல்லவே இல்லை,இப்போ திடிர்னு கேள்விப்பட்டேன்,அதான் கன்ஃபெர்ம் பண்ணிக்கதான்’
’ஹலோ ,யார் நீங்க?என்னால் இதுக்கு மேல் அமைதியா பேசமுடியவில்லை.
ஆனால் மறுமுனையில் பேசிய அந்த நபர் ரொம்ப டீசண்ட்டாகவே பேசினார்.
‘பிளிஸ் யாருன்னு சொல்லுங்க’என்று கொஞ்சம் கெஞ்சி பேசினேன்.
‘நல்லா யோசித்துப்பாருங்க செல்வி,என் தோழி மூலம் கேட்டிருந்தேன்,ஒருமுறை போனில் பெயர் சொல்லாமல்  பேசினேன்.நீங்கள் முகத்தில் அறைந்தது போல பேசிட்டிங்க,சோ நானும் மெதுவா பேசலாம்னு இருந்துட்டேன் ‘என்றார்.
......சில நிமிடங்கள் என் எண்ண குதிரையை ஓட்டினேன்...ஐயோ !யாருன்னே தெரியலையே? ’.ஒருவேளை அந்த சமயம் எனக்கு என்று மாப்பிள்ளை நிச்சயம் ஆகாமல் இருந்திருந்தால் ,கொஞ்சம் சிரத்தை எடுத்து யோசித்திருப்பேன் போல?
’ஹலோ பிளிஸ் எனக்கு மணியாகுது ,நீங்க யாருன்னு சொல்லுங்களேன்’என்று கொஞ்சம் குரலை உயர்த்திப்பேசினேன்.
‘என்ன கோபம் செல்வி ,ஆனாலும் என்ன நல்ல நட்பாக இருக்கலாமே?என்றார்.
‘சரி உங்க பெயர்,எங்கிருந்து கூப்பிடுறிங்க?’
‘இதே கோலாலும்பூர்தான் , உங்களை அடிக்கடி பார்ப்பது இல்லை ஆனால் பல ஃபங்சனில் பார்த்ததுண்டு’.
‘சரி எனக்கு மணி ஆகிவிட்டது,பைபை (ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும் சும்மா பொய்யாக) ொன்னேன்.
‘ஹலோ என்னலா நீங்க”இன்னும் அந்த கோபம் போகல செல்வி?’
’சரி ’என்று சிரித்துக்கொண்டே எதையோ சொல்ல நினைக்கும்போது தடால் என ஒரு பெரிய சத்தம் ,’ஆ’என்று அந்த ஆணின் குரல் ,நாற்காலியில் இருந்தே கீழே விழுந்ததுபோல சத்தம்.மறுமுனையில் அலுவலகத்தில் ‘ஏய் வாட் ஹேப்பேண்ட் ..என்று சில குரல்கள் மட்டுமே கேட்டன.
         நானும் ஹலோ ஹலோ என்று கத்தினேன். ஒரு பதிலும் இல்லை.போனைத் தட்டி தட்டிப் பார்த்தேன்.என் பதற்றத்தைக் கேட்டுக்கொண்டிருந்த தோழிகள் ‘என்னாச்சு செல்வி ?யார் ?என்று என்னை அணுகினர். மெதுவாய் கிசு கிசுவென என் தோழிகளிடம் கூறினேன்,உடனே தோழி புஷ்பா’இரு ஹேச்.ஆர் டிபார்மெண்டுக்கு போன் பண்ணி அந்த போன் காலை எங்கிருந்து வந்தது என்று கண்டுபுடிக்கலாம் ‘என்றாள்.ஆனால் ஹே.ஆர் ‘முடியாது ,போலிஸ் கேஸ் ,அல்லது சீரியஸ் பிரச்சனைகளுக்கு மட்டுமே அந்த மாதிரி செய்வோம் ‘என்றார்கள்.
           நாங்களும் இரண்டு மூன்று நாட்களில் போன் வரும் என்று ஏமாந்து போனதுதான் மிச்சம். திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன.நேற்று என் பிள்ளைகளோடு பேசிக்கொண்டு இந்தக்கதையைச் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தேன் .பின்னால் இருந்து ஒரு குரல் ‘நல்ல வேளை அவன் தப்பிச்சான்,இல்லாட்டா என்னைப்போல அவன் மாட்டியிருப்பான் ‘என்று.இதைக்கேட்டதும் என் பிள்ளைகளுக்கு இன்னும் சிரிப்பு அதிகம் ஆனால் எனக்கு கடுப்புதான் வந்தது என்பது உண்மை!.லேசாய் திரும்பி ஒரு பார்வை பார்த்துட்டு அறைக்குள் போனேன்,என் மகன் ஓடி வந்து ‘அப்பா சும்மாதான் சொல்றாரும்மா ‘என்றான்.
        இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன அந்த குரலுக்கு உரியவர் யார் என்று தெரியவில்லை ஆனால் அவர் கீழே விழுந்து(என் யூகம்) என்ன ஆச்சோ ? அவர் யாராக இருப்பார்?என்ற கேள்விகள் என் மனதில் இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கிறது!ஒவ்வொரு வருடம் அன்பர்கள் தினத்தில் இந்த சம்பவம் மனதுக்குள் வந்தால் அந்த முகம் தெரியாத நபரின் குரலும் வந்துபோகும்.காதுக்கு எட்டிய குரல் ,கண்ணில்  படாத முகம்!
                                                           
(நானும் தோழி புஷ்பாவும் அலுவலக உடையில்)
.

Sunday, 19 January 2014

அடுத்த கணம்!

         நானும் என் அண்ணாவும் ,எங்கள் குடும்ப  நண்பரான டாக்சி ஓட்டுனர் காரில் ஒரு இடத்துக்குச் சென்றுக்கொண்டிருந்தோம்.வழியில் காரை நிறுத்தினான் ஓர் இளைஞன்.டிரைவர் அண்ணா ‘எப்படிம்மா ஏத்திக்கொள்ளலாமா ?என்று அனுமதி கேட்டார்.’சரி அண்ணா ,உங்களுக்கும் வருமானம் வரும்’என்று என் அண்ணா ஓகே சொன்னது.

         அவனும் வழியில் தமாஷாக பேசிக்கொண்டு வந்தான்.இறுதியாக எங்கள் உரையாடல் ‘பணம்’  சார்ந்து வந்தது.அப்போது நான் எப்போதும் போலவே ஒளிவுமறைவு இல்லாமல் ,என் பர்சைக்காட்டி ‘இதோ பாரு தம்பி அக்காவிடம் பணம் எல்லாம் ரொம்ப இல்லை ,இதுதான் இருக்கிறது’என்று ரிம.50 வெள்ளியை நீட்டினேன்.’எங்கே காட்டுங்கள் ’என்றவன் , சில விநாடிகளில் ‘ஏய் காட்டு’என்று ஒருமையில் வேகமாய் கத்தினான்.பின்னால் அமர்ந்த என் அண்ணனின் சத்தம் அறவே இல்லை.நொடியில் திரும்பி பார்த்தால் என் அண்ணாவின் கழுத்தில் அரிவாளை வைத்தவன் ,’சீக்கிரம் மூன்று பேருடைய பர்ஸ்களையும் எடுத்து  என்னிடம் கொடுங்கள் ‘என்றான்.

          வியர்த்து விறுவிறுக்க வேறு வழி இல்லாமல் மூவரும் பர்சை பணத்தோடு கொடுத்தோம். எனக்கு அவன் என் அண்ணாவை விட்டதே போதும் ‘என்று என் சங்கிலியையும் கொடுத்தேன். ஓரிடத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னான் அந்த கொள்ளைக்காரன் .சனியனை கழற்றி விட்டதுபோல இறக்கிவிட்டு ,மகிழ்ச்சியாக வண்டியைக் கிளப்பினோம்.டிரைவர் அண்ணாவும் ‘அப்பாடா என்ன பணம் ?என்ன பர்ஸ் ? நம்மை நல்லபடி விட்டானே?அது போதும் ‘என்ன பர்சில் இருந்த கார் லைசென்ஸ் ,மற்றும் அடையாள கார்ட் மட்டும் போய் போலிசில் ரிப்போர்ட் செய்துவிட்டு , புதுசா எடுக்கனும்’என்று பெருமூச்சு விட்டார்.

          நாங்களும் போக வேண்டிய இடத்தை கென்சல் பண்ணிவிட்டு நேரே டிரைவர் அண்ணா வீட்டிற்குச் சென்றோம்.அங்கே எங்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்து கிடந்தது!ஆம்,சற்று முன் இறங்கிய அந்த கொள்ளைக்காரன் ,டிரைவர் அண்ணா வீட்டை முற்றுகையிட்டு அவன் ஆட்களோடு ,எல்லோரையும் பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான் . ‘ஒழுங்காக வீட்டில் இருக்கும் பணத்தையும் நகைகளையும்  எடுத்து வையுங்கள்,இல்லாவிட்டால் உங்கள் வீட்டைச் சுத்தி பெட்ரோல் நனைத்த  கயிறு இணைக்கப்பட்டிருக்கு.ஏதேனும் பிரச்சைனை என்றால் கொளுத்திவிடுவேன் ‘என்றான்.கையில் நெருப்புபெட்டி ,அரிவாள் எல்லாம் ரெடியாக!

           எல்லோரும் நடுநடுங்கி போனோம். ஆனால் டிரைவர் அண்ணா கோபமாக ‘அவன் என்ன செய்யப்போறான் , யாரும் பயப்படவேண்டாம் ‘என்று கத்தினார். அந்த சமயம் அண்ணாவின் ஒரே மகள் வெளியே வர ‘அந்த கொள்ளைக்காரன் ‘உன் மகள் உனக்கு வேண்டுமா?என்றான் .இதையும் கேட்ட பிறகு ,’அண்ணா என்ன பணம் ,நகை?தூக்கி வீசுங்கள்,சம்பாதித்துக்கொள்ளலாம்’என்று நாங்கள் பெண்கள் கதறினோம். வீட்டில் மறைத்து வைத்திருந்த எல்லா நகைகளும் வெளியே வந்தன. அப்போ கொள்ளைக்காரன் சொன்னான் ,’டேய் முட்டாளுங்களா காரில் நான் உங்கள் பர்சை கேட்டேனே ,பணத்தை மட்டும் கொடுத்திருக்கலாம்தானே? ஏண்டா உங்க அடையாள அட்டையும் சேர்த்துக்கொடுத்து என்னை இன்னும் கெட்டவனாக்கிட்டிங்கள்?அதில் உங்கள் வீட்டு முகவரியைப்பார்த்தேன்,சரி இன்னும் நிறைய சம்பாதிக்கலாம்’என்றுதான் இந்த முயற்சியை மேற்கொண்டேன்.சரி அடுத்த  இரண்டு அடையாளக்கார்டில் இருக்கும் வீட்டிற்கு என் ஆட்கள் போயிட்டாங்கள்’என்று என்னையும் என் அண்ணனையும் பார்த்தானே படுபாவி?

          அடுத்த கணம் ....’ஐயோ !என் வீட்டில் என் பிள்ளைகள் மட்டுமே தனியாக இருப்பாங்களே?என்று அலறி ‘இறைவா காப்பாத்து’என்று கண்ணை மூடி திறந்தேன். வியர்த்து விறுவிறுத்துப்போய் நான் என் படுக்கையறையில்  இருளில் வெடவெடத்துப்போய் கிடப்பதை உணர்ந்தேன்.அடச்சே இது கனவா? நன்கு கண்களைத் திறந்து பார்த்தேன். விடியற்காலை. என்னை நன்கு சுதாகரித்துகொண்டு எட்டிப்பார்த்தேன் ,ஆழ்ந்த உறக்கத்தில் என் மகள்.பக்கத்து அறையில் போய் எட்டிப்பார்த்தேன். என் மகனும் கணவரோடு நிம்மதியாய் உறங்கிகொண்டிருந்தான். என் வீடு மிக சிறியது என்பதால் ,ஒரே சுற்றில் பூஜையறை ,சமையலறை என்று வீட்டில் உள்ள அனைத்தையும் சரி பார்த்துவிட்டு , கைகால்களை கழுவிக்கொண்டு திருநீறு இட்டுக்கொண்டு படுக்கைக்குச் சென்றேன்.

      (இன்று காலையில் நான் கண்ட கனவு .என்னமோ 12 வயசு மாணவன் எழுதும் கட்டுரைப்போல இருக்குதா?ஆனால் உண்மையில் எனக்கு ஏற்பட்ட மோசமான கனவு அனுபவம்.மலேசியாவில் நொடிக்கொரு முறை இப்படிப்பட்ட கொலை கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன!அதில் வேதனை, பாதிக்குபாதிக்கு பேர் நம்ம இளைஞர்கள்தான். மனசாட்சியின்றி சரமாரியாக வெட்டி சாய்ப்பது.சுட்டுத்தள்ளுவது, கொடூரமான கொலை’.உயிரைக் கையில்  பிடிச்சிக்கிட்டு உலா வருகிறோம்) 

         அண்மையில் டிவியில் ஒளியேறிய காரைக்கால் அம்மையார் பாடல் வரிகளை நினைத்தேன் ;இனி பிறவாத வரம் வேண்டும் , என் பிழையாலேமீண்டும் பிறந்தால், உன்னை மறவா வரம் வேண்டும்!சத்தியமாக அப்படி ஆசை இல்லை. இனி மானுட பிறவியே வேண்டாம்!மனிதனே மனிதனைக்கண்டும் பயப்படும் ஒரே இனம் மானுட பிறவி. அந்த ஈனப்பிறவி இனி வேண்டாம். சின்னப்பிள்ளையாக இருந்த காலங்களில் பேய் கனவும் சாமி கனவும்தான் வரும்.ஆனால் இப்போவெல்லாம் இப்படிப்பட்ட கனவுகள்.

            கனவு என்பது நம் எண்ணங்களின் பிரதிப்பலன்.ஆனாலும் நேற்றிரவு நான் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் படுக்கைக்குச் சென்றேன்.பின்னே ஏன் இப்படி ஒரு கனவோ?ஒருவேளை சிலநாட்களுக்கு முன் என் கண் முன்னே ஒருதமிழன் அரிவா சண்டையைப்பார்த்த தாக்கமோ ?
எது எப்படியோ நான் இன்னும் உறைந்துபோய்தான் இருக்கேன்.
அர்ஜூன் ,விஜயகாந்த் நடித்த படங்கள் போலவும் ,ஒரு பயங்கரமான  தெலுங்கு டப்பிங்  படமான ‘பழிக்குப்பழி’படம் போலவே இருந்தது என் கனவு!
           அவனிடமே அனைத்தையும் விட்டு விடுவோமே!போற்றியோ நமசிவாய!

Sunday, 29 December 2013

’தீட்டு’ என்று சொல்லி திட்டு கிடைத்தது!

          பெண்கள் ருதுவாகும் விசயம் மற்றும் இறப்பு வீடு என்றாலே அது ’தீட்டு’ என்றுதான் வழக்கத்தில் கூறப்படுகிறது.அண்மையில் அடியேன் கலந்துகொண்ட ‘வாழ்வியல் அருளியல்’பயிற்சியில் ‘தீட்டு’என்றும் தீண்டதகாத விசயம் என்று எதுவும் இல்லை.வீட்டு விலக்கு என்பது அந்த காலங்களில் வசதியற்ற நிலையில் நாம் சிக்கிக்கொண்டிருந்த சமயங்களில் பெரியோர்கள் அப்படி சொல்லி பெண்களை ஓய்வெடுக்க வைத்தனர்.
       அதுவே நாளடைவில் வீட்டுக்குத் தூரமாக இருக்கவேண்டும் ஆகிற்று.
அதுபோலவேதான் இறப்பு வீட்டில் இருந்து யாரும் கோவிலுக்கு செல்லக்கூடாது என்றும் அந்த வீட்டில் சுவாமிக்கு விளக்கு போடக்கூடாது என்பதுவும் தவறான விசயம் என்று விளக்கம் இல்லாமல் கடைப்பிடிக்கப்பட்டு வந்த விசயம்.இவை யாவும் முன்பே புத்தகங்களில் படித்தும் செவி வழி கேட்ட ஒன்றுதான் ஆனால் அண்மையில் அடியேனுக்கு கிடைத்த விளக்கங்களும் மற்றும் கேள்வி பதில் அங்கத்தில் பேரூர் ஆதினத்தைச் சார்ந்த இளையபட்டம் மருதாசல அடிகளாரும் ,பேராசிரியர் டாக்டர் ஜெயப்ரகாசமும் கொடுத்த விளக்கத்தினால் ,இங்கே சிலவற்றை பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ளேன்.
      உடலில் ஏற்படும் பருவ மாற்றத்தை தீட்டு என்று சொல்வது தவறான சொல்லாகும். பழங்காலங்களில் கோவில்கள் சற்று தூரமாகவும் மேலும் பாறைகளாளும் உயரமான மேட்டுப்பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருக்கும்.பெண்கள் மாதவிடாய் காலங்களில் உளரீதியாகவும் உள்ளரீதியாகவும் சோர்வடைத்து போயிருப்பர்.அப்படிட்ப்பட்ட காலங்களில் நெடுந்தூரம் நடந்தோ ,பயணம் செய்தோ கோவில்களுக்கு செல்ல இயலாததால் ,கோவிலுக்கு போகவேண்டாம் ,வீட்டில் ஓர் ஓரமாக இருந்து ஓய்வெடுக்க பணிக்கப்பட்டனார். மேலும் நீர் வசதியும் தற்போதைய நவீன (உள்ளாடைகள்) வசதிகளும் அந்த காலங்களில் இல்லை ஆகவேதான் விசேசங்களிலும் கூட்ட நெரிசல்களிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
       தற்போதைய நவீன வசதிகள் இருக்கும்போது ஏன் இன்னும் அதேப்போன்ற காரணங்களில் சிக்குண்டு கிடக்க வேண்டும் ? இறைவனுக்கு முன்னால் யாரும் விலக்கிவைக்க வேண்டியவர்கள் அல்லர் . அதேப்போலத்தான் இறப்பு வீடுகளில்  சம்பந்தப்பட்டவர்கள் எவரும் ஒருவருடம் கோவிலுக்கு செல்லக்கூடாது என்றும் வீட்டில் பூஜையறையில் விளக்கு ஏற்றக்கூடாது என்றும் தடை செய்யப்படுவதும் தவறான ஒன்றாகும்.பயிற்சியின் போது கேள்வி பதில் அங்கத்தில் மருதாச அடிகளார் அவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்தோம்.
        அதாவது இறப்பு வீட்டில் இருந்து யாரும் ஒரு வருடத்துக்கு கோவிலுக்கு போகக்கூடாது என்றும் விசேச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளகூடாதாமே? அடிகளார் எங்களிடம் கேட்ட கேள்வி ‘ஒரு வருடம் டிவி பார்க்கவேண்டாம் ,வானொலி கேட்க வேண்டாம் ,உணவில் உப்பு மிளகு சேர்க்க வேண்டாம் ,வேலைக்கு போகவேண்டாம் ,உங்களுக்கு அதிகம் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம்;என்றெல்லாம் தடை செய்தால் ,அதன்படி நடந்துகொள்வீர்களா? கோவிலுக்கு போகவேண்டாம் ,பூஜையறையில் விளக்கு போடவேண்டாம் என்றால் மட்டும் ரொம்ப மகிழ்ச்சியாய் அதனைப் பின்பற்றும் நாம் மேற்கூறிய விசயங்களைப் பின்பற்றுவோமா? ஆகவே அப்படியெல்லாம் எதுவும் இல்லை.
            சவம் எடுத்துச் செல்லப்பட்டவுடன் வீட்டினைச் சுத்தம் செய்து பூஜையறையில் விளக்கு ஏற்றி திருமுறைப்பாடல்களைப் பாடி வழிபாடு செய்ய .அந்த வீட்டில் இருக்கும் சம்பந்தப்பட்டவர்களின் மனம் நிம்மதியடையும். ஒருவேளை இறப்பு நடந்தவுடன் கோவிலுக்குச் சென்றால் ,நமக்கு அறிமுகம் ஆனவர்களை அங்கே  சந்திக்க நேரிடும் ,மீண்டும் இறப்பு பற்றி விசாரிக்க நேரும்.அது நாம் மறந்திருந்த விசயத்தை மேலும் நமக்கு நினைவூட்டும் என்பதால் வெளியே போகவேண்டாம் என்று சொல்லப்பட்டிருக்கலாம்.
           அதேப்போலத்தான் கர்ப்பமாக இருக்கும் மகளோ மருமகளோ அல்லது நெருங்கிய உறவுப் பெண்களோ ஈமக்காரியங்களில் சாங்கியம் செய்யக்கூடாது என்பதுவும் தவறான விசயமே. கர்ப்பமான பெண்ணின் உடல் நிலை கூட்ட நெரிசலில் நெடுநேரம் நின்றுகொண்டிருக்க முடியாததால் அவர்களை  சாங்கியங்கள் செய்யவேண்டாமென்று தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். அந்த பெண்ணின் உடல் நிலையை பொருத்து அவளால் முடியும் என்ற பட்சத்தில் அவள் எல்லா சாங்கியங்களையும் தாரளமாக செய்யலாம்,தன் நெருங்கிய உறவுக்கும் அவள் செலுத்தும் இறுதி மரியாதை அதுவே. அதையும் தடைச் செய்யலாமா?
          இப்படி பல்வேறு விசயங்கள் பழக்கத்தில் இருந்து வழக்கத்திற்கு வந்து ,அவைகளுக்கு விளக்கம் அளிக்கப்படாமல் கிடக்கின்றன.ஆகவே  தடை ,ஆகாது ,கூடாது என்று சொல்லும் ஒவ்வொரு செயல்களுக்கும் தகுந்த விளக்கங்களை கொடுத்தால்  நாமும் நாலு விசயம் தெரிந்துகொள்ளலாம்.பிறருக்கு தெரியப்படுத்தலாம்!விளக்கம் கொடுக்காத கேள்விகள்தான் வீண் சர்ச்சைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நம்மில் பலரை இட்டுச் செல்கிறது!
                                           போற்றியோ நமசிவாய!!!
 

Tuesday, 10 December 2013

பெருத்த அவமானம்!


                                                                   

            பிட்சா சாப்பிட ஆசை என பசங்க சொல்ல அழைத்துச் சென்றேன்.பர்சில் நிறைய பணம் வைத்திருந்தேன்(இந்த சம்பவத்துக்கு இந்த விசயம் ரொம்ப முக்கியம்)பொதுவாக kfc சென்றால் பணம் கட்டியவுடன் சாப்பிடுவோம் ஆனால் pizza hut -இல் அப்படி இல்லை.சாப்பிட்டவுடந்தான் பணம் கட்டுவோம். பில்லை மேஜையில் வைத்துவிடுவர் ,பிறகு கட்டவேண்டும்.
          இடையில் ஏதாவது ஆர்டர் செய்தால் பில் கொஞ்சம் தாமதமாக வரும்.வழக்கம்போல சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் பசங்க எக்ஸ்ட்ரா ஆர்டர் செய்ததால் பில் வர தாமதமாகி விட்டது.பசங்களோ நான் சாப்பிடுவதற்குள் அவர்கள் ஐயிட்டத்தை காலி பண்ணிட்டு எதிரே உள்ள கைத்தொலைப்பேசி கடைக்கு ஓடினர்.
         நானும் சாப்பிட்டுவிட்டு வெளியேறினேன்!(பில்லைக் கட்டாமல்????).நான் நடந்து போய் பிள்ளைகளிடம் ,அம்மா போஸ்ட் ஆபிஸ் போகிறேன்’அங்கே வாங்க ‘என்று சொல்லி நகர்ந்தேன்.சில நிமிடங்களில் என் மகள் தலைத்தெறிக்க என் பின்னால் ஓடி வந்து ,’அம்மா பிட்சா பில்லை இன்னும் கட்டவில்லையா?அவள் என்னைத் தேடி வந்து கேட்கிறாள்?என்று பதற்றமாய் மூச்சு வாங்க ஓடி வந்து கேட்க,(மகள் ஏற்கனவே கொஞ்சம் ரிசர்வ் டைப்,இதுபோன்ற விசயங்கள்,அவளுக்கு ரொம்ப கோபத்தை உண்டாக்கும்) ஒரு கணம் சிலையானேன்.
       ’ஐயோ என் வாழ்க்கையில் அப்படி இதுவரையில் நடந்ததே இல்லையே?ஓடினேன்,ஓடினேன் , தலைத்தெறிக்க ஓடினேன்.என்னைப்பார்த்தது அந்த பெண்’ஏன் என்ன அவசரம்? நீ மறந்திருப்பாய் என்பது எனக்கு தெரியும், காரணம் உன் பிள்ளைகளை தைர்யமாக இங்கே விட்டுச் சென்றிருக்கிறாயே,அதனால் நாங்கள் பெரிசு பண்ணிக்கொள்ளவில்லை’என்று சிரித்தவாறு சொன்னாள்.
        ‘ஐயோ பிளிஸ் ,இதோ என் பர்ஸ் ,என்னிடம் பணம் போதுமான அளவு இருக்கிறது’என்று கைகால்கள் உதற பர்சைத் திறந்து காட்டினேன்.உள்ளே இருந்த மானேஜர் சிரித்துக்கொண்டே ’அக்கா ஒன்னும் பயப்படாதே , தப்பு செய்பவர்கள் முகம் எங்களுக்கு நல்லாவே தெரியும்.
        உன் முகம் அப்படி இல்லை,சோ டோண்ட் வெரி ‘என்று கைகுலுக்கினார்.(இப்படி ஒரு தேஜஸ் பொருந்திய முகம் !!!கொடுத்த என் பெற்றோர்களுக்கு பெரிய நன்றி)ஆயிரம் சாரிகளுக்கு பிறகு ,பில்லைக் கட்டினேன்.என் நல்ல நேரம் யாரும் தமிழர்கள் இல்லை,அதிலும் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது.

#மானம் கண்டெய்னர் கணக்கில் கப்பல் ஏறும் கதைதான்,இருந்தாலும் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் ,இப்படி ஒரு அவசிங்கமான அனுபவம் யாருக்கும் வரவே கூடாது!!!செல்வி நீ ரொம்ப நல்லவ.

Sunday, 24 November 2013

பிறப்பு ,இருப்பு ,இறப்பு!

படித்தேன்...வியந்தேன்..... பகிர்கிறேன்!

பிறப்பு ,இருப்பு, இறப்புகளுக்கு உரிய ,பிறப்பில் ஓர் எள் அளவு கூட இன்பம் இல்லை!
பிறப்பில் வரும் 5 துன்பங்கள்:
1)குழந்தை கருவில் இருக்கும்போது,இரண்டு மலை நெருக்குவது போலநெருக்குண்டல்.
2)கடலில் மிதப்பது போல கருப்பப்பை நீரில் மிதத்தல்,
3)இரும்புக்குடத்தில் சூடேற்றுவது போல இரத்தச் சூட்டால் வேதல்,
4)மலையின் மீதிலிருந்து கீழே தள்ளுவது போல பிரசூத வாயுவால் தள்ளப்படுதல்,
5)ஆலையில் இட்ட கரும்பு போல யோனித் துவாரத்தில் நெருக்குண்டு வெளியே வருதல்.

இறப்பில் வரும் துன்பம்;
இறப்பில் வரும் துன்பத்தை இறைவன் மட்டுமே அறிவான்.எனவே அது பிறப்பால் வரும் துன்பம் போல எட்டு மடங்கு என ஓர் அளவையால் சொல்லப்பட்டது.

இருப்பில் வரும் துன்பங்கள் :
குழந்தைப்பருவம்,குமரப்பருவம்,வயோதிகப்பருவம் என மூன்று பருவங்களிலும் அறியாமை ,வியாதிகள்,,பசிநோய்,காமநோய்,செல்வத்தை தேடுதல்,நரை, திரை,மூப்பு என எப்பொழுதும் துன்பமே தவிர இன்பம் இல்லை

பசிநோயும் காமநோயும் குன்மம் எனப்படும் ஒருவகை வயிற்றுவலி போன்றது.அவ்வலிக்கு உவர்மண் நீர் குடித்தால் அப்போதைக்கு அடங்கிப்பின்னர் தோன்றும்.அதுபோல பசியும் காமமும் அருந்துதல் பொருந்துதலால் அப்போதைக்கு அடங்கிப்பின்னர் தோன்றும்.எனவே இவ்விரண்டும் விட்டு ஒழிக்க அரியது என்று அறிக!!



Wednesday, 13 November 2013

கவையாகி கொம்பாகி....

            ‘கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நல்மரம்’.   இப்படி 18 வயதில் எங்கள் ஊரில் சபைநடுவே(வகுப்பறையில்)முழுமையாக ஒரு வாக்கியத்தை மும்மொழிகளான தமிழ்மொழி ,மலாய்மொழி மற்றும் ஆங்கிலமொழிகளில் வாசிக்க முடியாமல் முழிப்பதாக திடுக்கிடும்  செய்தி வருடாவருடம் கண்டறியப்படுகிறது. இதில் நம் இன மாணர்வகளும் அடங்குவர் என்ற செய்திதான் நெஞ்சை பிழியவைக்கிறது.
        இடைநிலைப்பள்ளிக்கல்வியை பெரும்பாலும் ஐந்து வருடங்கள் முறையே  பயில்கிறோம். ஐந்தாம் படிவம்(form 5) என்று கூறப்படும்  18 வயதில்  பயிலும் மாணவனுக்கு சரியாக ஒரு வாக்கியத்தை முழுமையாக மும்மொழிகளிலும் நிறுத்தாமல்  வாசிக்க தெரிவதில்லை என்கிற விசயம் மிகுந்த வேதனைக்குரிய விசயம். இதைவிட வருத்தத்துக்குரிய விசயம் அவன் பெற்றோர்களுக்கு வேற எதுவாகவும் இருக்கவே முடியாது!அத்துடன் அவன் பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.இனி முதியோர் கல்வியில்தான் அவன் எழுத  வாசிக்க பழகவேண்டும் என்று சொன்னாலும் அது பொய்யாகி விடாது.
               அதேப்போல சாதாரண கூட்டல், பெருக்கல் கணிதம் கூட செய்யத்தெரிவதில்லை.இந்த தேர்வுதான் மலேசியாவில் ஒவ்வொருவருடைய தலையெழுத்தையும் மாற்றியமைக்கும்.நேர்க்காணலுக்கு சென்றால் குறைந்த பட்சம் இந்த தேர்வில் என்ன கிரேட் ?எடுத்துள்ளோம் என்பதைத்தான் கேட்பார்கள்.அதேப்போல மேற்படிப்புக்குச் செல்ல  இந்த கல்வித்தகுதி மிக மிக அவசியம்.இங்கே எழுதப்படிக்கத் தெரியாவதவனுக்கு, இனி வாழ்க்கை எங்கே தொடங்கும்?

            சரி இந்த பிரச்சனையின் முதல் காரணம் என்னவென்று ,நான்காம் படிவ ஆசிரியரைச் சென்றுக்கேட்டால் ,’நாங்கள் என்ன செய்ய ,மூன்றாம் படிவத்தில் அவனைக் கண்டுகொள்ளாமல் அப்படியே எங்களிடம் அனுப்பினர் என்று பதில் வரும்.சரி மூன்றாம் படிவம் வரை அவன் என்ன செய்தான் என்று கேட்டால் , முதல் படிவத்தில் அவன் சேரும்போதே இப்படித்தானே வந்தான்? பிறகு எப்படி நாங்கள் தட்டி நிமிர்த்துவது?

        அப்படியென்றால் அவன் ஆரம்பள்ளியில் என்னத்த படிச்சித் தொலைச்சான் என்று கோபப்பட மட்டுமே தோணும்.அங்கே போய் கேட்டால், ஒன்றாம் வகுப்பில் சேரும்போது அவனுக்கு ஓர் எழுத்து எண்கள் கூட தெரியாமல்தான் வந்தான்’.அப்படியென்றால் , மழலைக்கல்வி ஆசிரியரிடம் இறங்கி போய் கேட்டால், ’நீங்கள் வேற அவனை எங்களிடம் பேபி சிட்டருக்கு ஆள் இல்லையேன்னுதான் அனுப்பி விட்டாங்க, அவன் எங்களிடம் வரும்போது பென்சில் பிடிக்க தெரியாது, ஏடுகளைத் திருப்பக்கூட அவன் பெற்றோர்கள் பழக்கி கொடுக்கவில்லை?இப்போ புரியுதா ஆப்பு யாருக்கு ரெடியாகிறது?என்று.இறுதியில் பழி பெற்றோர்களின் தலையில் போய் விழுகிறது அல்லது உட்புகுத்தப்படுகிறது!

        ஆமாம் பெற்றோர்களே ,அதிலும் வீட்டில் இருக்கும் தாய்மார்களே, 4 வயது ஆகும் குழந்தைகளை பென்சில் பிடிக்க,எழுத்துக்களை அறிமுகம் செய்ய ஆவன படுத்துங்கள்.”அதான் பணம் கட்டி பள்ளிக்கூடம் அனுப்புகிறோமே ,அங்கே ஆசிரியர்கள் பாடு அவன் பாடு ‘என்று அலட்சியம் செய்யாமல் முடிந்த வரை உங்கள் பங்கினைக் கொஞ்சமாவது அப்ளைப் பண்ணுங்கள்.கருத்தரித்த மூன்றாவது மாதத்தில்(நான் கேட்டவரையில்) குழந்தை கற்க தொடங்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

        ஒரு சாதாரண பாரம் பூர்த்தி செய்யக்கூட  தெரியாமல் நாம் பெற்ற பிள்ளையின் நிலைமை உருவாக நாமும் ஒரு காரணகர்த்தாவாக இருந்திட கூடாது.பல்கலைக்கழகம் வரை பயின்றுதான் முன்னேற வேண்டும் என்று இல்லை,அடிப்படைக்கல்வி அறிந்த ஒரு மனிதனாக சமுதாயத்தில் அவனும் நடமாட நாமும் துணை நிற்போமே!

Thursday, 7 November 2013

இல்லை இருபது!



உடையது விளம்பேல்!

(எல்லோரும் தங்களிடம் இருப்பது பற்றி பெருமையாய் பேசுவாங்க!,நாம ஒரு மாறுதலுக்கு இல்லாததைப்பற்றி பேசுவோமே!)


1.முத்து பதித்த நகை எதுவுமே என்னிடம் இல்லை.(அதுக்காக வைரம் பதித்தது இருக்கான்னு கேட்கப்படாது)

2.எனக்கு அறிமுகம் இல்லாதவர்களின்(பெண்களின்)கிசு கிசு கேட்க ஆசையே இல்லை.

3.பிறர் வைத்திருக்கும் பொருள்மேல் மோகம் எப்போதுமே இல்லை.(வாங்க வக்கில்லை)

4.காலேஜ் வாழ்க்கை ரொம்ப ஆசை ஆனால் போனதே இல்லை?(ஒழுங்கா படிச்சிருக்கனும் ?)

5.ஒருபக்கம் விடாமல் ஆங்கில புத்தகம் எதையும் படித்ததே இல்லை( புரிந்தால்தானே படிக்க?)

6.கணவருக்கு தெரியாமல் அவர் பணத்தை செலவு செய்ய மனம் வந்ததே இல்லை(வாய்ப்பு கிடைத்தும்)

7.நட்புக்காக , போன் பில் கணக்கு பார்க்கும் பழக்கம் இல்லவே இல்லை(உள்ளூர் நட்புகளுக்கு மட்டும்)

8.என்னதான் ருசியாகவும் மணமாக இருந்தாலும் பிடிக்காத உணவை டேஸ்ட் பண்ணும் ஆசை வந்ததே இல்லை.

9.காதல் பண்ணிய அனுபவம் இல்லை,நேராக திருமணம்தான்(ராசி இல்லையோ)

10.நகைசுவை உணர்வு இல்லாத நட்புகளோடு கொஞ்ச நேரம் கூட பேசுவது இல்லை.(நான் ரொம்ப ஸ்டிரிக்டு)

11.ஆடம்பர வாழ்க்கைக்கு மனம் ஆசைப்பட்டதே இல்லை(சட்டியில் இருந்தால்தானே?)

12.ஒருநாளைக்கு கூட போனில் பேசாத நாட்களே இல்லை(1990 வீட்டில் போன் வந்தநாள் முதல் இன்று வரை)

13.நான் இல்லாத பட ஆல்பங்களைப்பார்க்கும் பழக்கம் அறவே இல்லை(கட்டாயப்படுத்தினால் மட்டுமே உண்டு)

14.பல வர்ணங்களில் உதட்டுச்சாயம் என்னிடம் இல்லை(ஒரே வர்ணம்தான்)

15.புத்தகம் படிக்க மட்டுமே எப்போதுமே நேரம்‘இல்லை’(முகநூலில் மொக்கைபோட நேரம் சரியா இருக்கு)

16.அன்பு சம்பந்தப்பட்ட விசயங்களில் மட்டும் பொறாமை இல்லாமல் இல்லை.

17.சாப்பிடாமல் உறங்கிய நாட்கள் உண்டு,ஆனால் பேசாமல்(மெளனவிரதம்)இருந்த நாட்களே இல்லை.(இந்தியன் செத்துப்போயிடுவானே?)

18.இதுவரையில் சொத்தைப்பல் இல்லை,பல்வலியும் ஏற்பட்டது இல்லை.(32 பற்களும் வரிசையாக )

19.ஒருக்காலக்கட்டம் வந்தவுடன் அண்ணந்தம்பிகளோடு பேசுவது இல்லை(எல்லோரிடமும் சண்டைன்னா?)

20.பாடல்கள் கேட்காமல் ஒருநாள் கூட கழிந்ததே இல்லை