Sunday, 26 August 2012

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

மனித மனம் சில விசயங்களுக்கு ஆட்கொண்ட மனம்.அதில் இசை முதன்மை வகிக்குது ,அது என் மனம்.சில நேரங்களில் என்றோ,பல வருடங்களுக்கு முன் கேட்ட பாடல்கள் ,நம் மனதில் மிக பசுமையாக சில நினைவுகளை வருடி செல்லும்.அதில்  இனிமையான நினைவுகளும் உண்டு ,  கசப்பான நினைவுகளும் உண்டு. அந்த வகையில் ,ஒரு சில பாடல்களை நான் கேட்கும்பொதெல்லாம் ,என் கண் முன் நிழலாடும் சில சம்பவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

                                                                                 
அந்த வகையில் முதலாவதாக வரும் பாடல்:

http://www.youtube.com/watch?v=v7D7qcMX3x0
மருத மலை மாமணியே முருகையா’(தெய்வம்).

இந்த பாடலைக் கேட்டால்,எனக்கு என் அம்மா வழி தாத்தா (திரு.குஞ்சாம்பு)அவர்களின் இறப்புதான் நினைவுக்கு வரும்.அந்த சமயம் எனக்கு வயது ஐந்தோ?ஆறோ இருக்கும்.என் அம்மா சத்தம்  போட்டு அழுது நான் பார்த்தது அன்றுதான்.நாங்கள் இறப்பு வீட்டையடைந்த பொழுது ,என் அம்மாவைக் கட்டியணைத்து அழுத என் மாமாக்கள்,சின்னம்மாக்களின் அழுகைக்கு இடையே ,அங்கே ஒலியேறிய பாடல் .அன்றுமுதல் இந்தபாடலைக்கேட்டால் ஏதோ ஓர் இழப்பை நினைவுபடுத்தும்.(இறப்பு வீட்டில் முன்பெல்லாம் பாடல்கள் ஒலியேறுவது வழக்கத்தில் இருந்தது)


http://www.youtube.com/watch?v=h4IHiOAZ918(நீயா)
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா

எங்கள் குடும்பமும்  என் தோழியின் குடும்பமும் ,இந்த படம் பார்க்க தியேட்டருக்கு குடும்பமாக சென்றோம்.வறுமையில் இருந்த காலங்களில் கூட என் தந்தை எங்களை குடும்பமாக அழைத்துச் சென்று நாங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம்.இரு குடும்பங்களாக சென்றோம்,இன்று ,என் அப்பா இல்லை,என் தோழி(அண்ணியின்)அப்பா அம்மா இல்லை,அவளுடைய அண்ணன் அக்காளும் கூட இறந்துவிட்டனர்.இன்றும் இந்த பாடலைக்கேட்டால் ,இறந்து போன அந்த ஆன்மாக்களும் அன்றைய பழைய தியேட்டர்,அன்று திண்ண தின்பண்டம்,குளிர்பானம் இவை யாவும் என் கண் முன்னே!

http://www.youtube.com/watch?v=pECeEaM_2tA&feature=related
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே(சிவகாமியின் செல்வன்)

என் மாமாவின் உறவு வ(லி)ழி ஒருவர் எங்கள் வீட்டுக்கு பெண்ணைக்கூட்டிக்கிட்டு ஓடி வந்து ,ஒரு விபத்தில் மரணமடைந்தார்.(என் பதில் எழுதியுள்ளேன்)அந்த இறப்பு எங்கள் குடும்பத்தை மிகவும் வருத்திய ஒன்று.அவர் உடலை அவர் ஊருக்கு கொண்டு சென்றனர்.வீட்டில் எல்லோரும் சென்றனர்,நானும் என் தங்கையும் செல்ல தடை.வீடே வெறிச்சோடிக்கிடந்த சமயத்தில் ,எங்கள் வீட்டு வானொலியில் எங்களுக்காகவே ..இல்லை அந்த காதலிக்காகவே ஒலியேறியது போல இந்த பாடல்.

http://www.youtube.com/watch?v=kmyzafV8Vko
ஏய் கிளி இருக்கு ,ஏரிக்கரை இருக்கு(முதல் மரியாதை)

இந்த படம் ரிலீசான புதிதில் ,எங்கள் கிராமமே இந்த பாடல்களில் மூழ்கிகிடந்தது. பாடல்கள் பட்டி தொட்டிய்யெல்லாம் ஒலித்தது.வைரமுத்து அழகான வரிகளை வர்ணித்து கூறிய பின்பு கேசட்டில் பாடல்கள் ஒலியேறும்.பசுமையான,ஓரளவு என் கிராமத்தைப்போலவே ,இந்த படம் ஷூட்டிங் செய்த கிராமத்தின் சூழல்.இன்று கேட்டாலும் என் வீட்டு பின்னால் இருந்த குட்டை,கொய்யா மரம் ,கோழிகள் ,ஆடுகள் என்ற கிராமிய வீட்டுக்கு செல்லும் என் நினைவு.


http://www.youtube.com/watch?v=dGhkH958nHo
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை(சிவந்த மண்)

நான் முதன்முதலாக வெளிநாடு (முதன்முறையாக குடும்பத்தை விட்டு மூன்று மாதங்கள்)செல்லும்போது ,என் உடன் பல பாடல்கள் கொண்ட கேசட்களைக் கொண்டு சென்றேன்.விமான நிலையம் சென்று விடைபெற்ற அந்த தருணம்,என் கண்ணில் மாலை மாலையாய் கொட்டிய கண்ணீர்.என் குடும்பமும் அப்படியே.விமானத்தில் ஏறி உட்கார்ந்தும் என் அழுகை நின்றபாடில்லை.என் அருகில் அமர்ந்த என் தோழி ,என்னை மகிழ வைக்க ஒரே வழி இதுதான் என்று என் கையில் இருந்த வாக்மென்(அப்போவெல்லாம் அதுதானே பயணத்தில் கைகொடுக்கும் வனொலி) என் காதுகளில் போட்டு ,ப்ளேய் பட்டனை அழுத்தினாள் ..நான் நடுவானில் ..என் காதில் ஒலித்த இந்த பாடல் ..ஐயோ என் கண்ணீருக்கு மருந்தாக...இன்றும் மனதில் சோகம் என்றால் ,மொபலை அழுத்துவேன்..என்னை நடு வானுக்கு பறக்க விடும் ..பாடல்!

http://www.youtube.com/watch?v=im8ounEVVwM
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்

என் கண்வர் என்னைப் பெண் பார்த்து சென்ற புதிதில் ,சரியாக ஒரு மணிக்கு அவருக்கு மதிய உணவு நேரம்.எங்கள் அலுவலகத்தில் 12.30-க்கு லன்ச்.எல்லோரும் உணவருந்திவிட்டு ,கொஞ்ச நேரம் அவரவர் மேஜையில் ஒரு குட்டி தூக்கம் போடும் நேரமாக பார்த்து ,ஒரு மணிக்கு எனக்கு போன் வரும்..இது நாலைந்து நாளுக்கு தொடரவே ,அந்த ஒருமணிக்கு யாருக்கு போன் வந்தாலும் ,இந்த பாடலைப்பாடிக்கொண்டே போனை எடுப்பார்கள் என் சக தோழிகள்.நாளடைவில் என் சீன மற்றும் மலாய்க்கார நண்பர்களும் இந்த பாடலைப் பாடித்தான் ,போனை என்னிடம் கொடுப்பார்கள்.அது ஒரு கனாக்காலம்.

http://www.youtube.com/watch?v=4mMVY2zExis
இயற்கை எனும் இளையகன்னி ஏங்குகிறாள்(சாந்தி நிலையம்)

நானும் என் தோழி இளவரசியும்,ஜப்பானிய நிறுவனத்தில் வேலை செய்த சமயம் ,ஒருநாள்  ஏதோ ஒரு தப்பினால் ,என் லைன் லீடர் (line leader)என்னைத் திட்டிவிடவே எனக்கு கோபம்.முதல் நாள் நடந்த இந்த சம்பவம் ,என்னைப்பாதிக்கவே ,மறுநாள் வேலைக்கு விருப்பமின்றி சென்றேன்.என் நிலையை அறிந்த இளவரசி ,’அக்கா எனக்கும் மூட் இல்லை,வாங்க ,கிளினிக் போய் பொய் சொல்லி மருத்துவ விடுப்புக்கு முயற்சிப்போம் ,கிடைத்தால் வெளியே எங்கேயாவது போய் நிம்மதியாக உட்கார்ந்து பேசிவிட்டு ,வீட்டுக்கு போகலாம்;என்றாள்.எனக்கு தேனாய் இனித்தது அந்த ஐடியா.இருவரும் கிளினிக் புத்தகம் எடுத்துக்கொண்டு ,கிளினிக் போனோம்.என்ன ஆச்சரியம் ,காது வலி ,வயிற்றுப்ப்போக்கு என்று மருத்துவரை ஏமாற்றி லீவ் கிடைத்தது.எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..வெற்றி ..வெற்றி...இருவரும் பேருந்தில் ஏறி ,அங்கேயும் என் வாக்மென்,இருவரின் காதிலும் ,ஒன்று என் காதில்,மற்றொன்று அவள் காதில் ,ப்ளேய் பட்டன் அழுத்தியபோது ஒலித்த கானம் ,இயற்கை....!இன்றும் வானொலியில் பாடல் ஒலியேறினால் ,அவள் என்னை அழைத்து’அக்கா ,பொய் சொல்லி வாங்கிய எம்.சிக்கு கிடைத்த பாடல் ,கேளுங்க’என்று நினைவு படுத்துவாள்.


http://www.youtube.com/watch?v=NCtON6_mpzY
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்.(ஜீன்ஸ்)

என் கணவர் முதன்முறையாக என் அண்ணனின் அனுமதியோடு என்னை வெளியே அழைத்துச் சென்றது இந்த படம் பார்க்க.அழகான இருள் ,முதன் முதலாய் எங்களுக்கு கிடைத்த தனிமை.அருமையான் சூழல் ,ஆனால் இருவருமே ஒரு வார்த்தைக்கூட பேசாமல் ,இந்த பாடலில் லயித்துபோனோம் என்பதுதான் பகிரங்கமான உண்மை.அந்த அளவு சங்கர் படத்தை இயக்கிய விதம் .எதையும் ரசிக்க முடியாமல் முதன்முறையாய் சந்திக்கும் காதலர்களையே தன் வசம் இழுத்துக்கொண்ட பாடல்.இன்றும் அந்த பாடல் ஒலித்தால் ,திருமணமாகாத அந்த கணங்களுக்குள்  நான் மூழ்கிவிடுவேன்.


http://www.youtube.com/watch?v=th3LJyFDZzY
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தத(இளைமை ஊஞ்சலாடுகிறது)

எங்கள் ஊர் வானொலியில்’ 80-களின் பாடல்கள்’ என்ற தலைப்பில்,ஒரு நிகழ்ச்சி ஒலியேறும்.நான் முதன்முறையாக எழுதி அனுப்பிய இந்த பாடலுக்கான கடிதம் மிக சிறந்த கடிதமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ,இந்த் பாடலை ,என் பெயரை அறிவிப்பாளர் வாசித்து ‘செல்விக்காகவே இந்த பாடல்’என்று ஒலியேற்றிய  விதம் ,ஐயோ எனக்கு அன்று முழுவதும் போன் அழைப்புகள்,பாராட்டுகள்!நான் தீவிரமாக வானொலிக்கு எழுத தூண்டிய பாடல்.


http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs='SNGOLD0110'&lang=en
உன்னைக்கண்டு நான் ஆட(கல்யாண பரிசு)

தீபாவளி என்றாலே எங்கள் ஊர் வானொலியில் அன்று முதல் இன்று வரை இந்த பாடல்தான் முதல் வரிசையில்.எத்தனை தீபாவளி பாடல்கள் வந்தாலும் இந்த பாடலுக்கு இணையாக பாடலே இல்லை  என்றுதான் சொல்வேன்.அதிலும் அந்த காலத்தில் அப்பா இருக்கும்போது ,அவருடன் கொண்டாடியே தீபாவளியை நினைவுபடுத்தும் பாடல்.
(ஆனால் சந்தோசமாக ஒலிக்கும் பாடல் கிடைக்கவே இல்லை)

                                                                                                                                                           
                             
.
                                     










Thursday, 2 August 2012

கனிமொழியின் தீர்ப்பு சரியா?

அழகிய கிராமம்,அங்கே ஒரு காதல் ஜோடி,இளனும் கயல்விழியும்.இருவரும் அந்த கிராமத்தில் உள்ள கோவிலில் சேவை செய்யப்போய் அங்கே அறிமுகம் ஆனார்கள்(கடந்த 15 வருடங்களுக்கு முன்)!இளன் கோவிலில் செயளாலர்,கயல்விழி தேவாரம் வகுப்பு செல்வாள் .காதல் முளைத்தது.திரும்ணமும் முடிந்தது.இருவரும் தம்பதி சகிதமாய் கோவிலில் சேவை செய்தனர்.அந்த சமயம் அந்த கிராமத்து கோவில் ,ஒரு தகர கோயிலாக இருந்தது.இளன் மற்றும் அவர்தம் கோவில் நிர்வாகத்துடன் சேர்ந்து தகரகோவிலைக் கோபுரம் கொண்ட கோவிலாக கட்ட அரும்பாடுபட்டனர்.மலேசியாவில் கோவில் கட்டுவது என்பது சாதாரண விசயம் அல்ல என்பதுவும் குறிப்பிடத்தக்கது.பல அரசியல்வாதிகளின் காலில் விழுந்து ,நாய்க்கடி, மனிதர்களின் அவசொல் என்று அல்லும்பகலுமாய் உழைப்பைப்போட்டு கோபுரத்தை எழுப்பினர்.
                                                                                 
கோபுரம் ஏறியது,கூடவே பிரச்சனையும் தலை விரித்தாட ஆரம்பித்ததது.ஆமாம் கோவில் தலை நிமிர்ந்து நின்றவுடன் ,கோவிலின் முக்கிய புள்ளி ,சொரண்டி தின்ன ஆரம்பித்தார்.நிர்வாகத்துக்கு தெரியாமல் விடியற்காலையெல்லாம் பூஜைகள் ஏற்பாடு செய்து ,அதில் வரும் பணத்தை கணக்கில் போகாமல் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.லேசாக புகைய புகைய ,இளன் மற்றும் சகாக்களுக்கு விசயம் போனது.சும்மா விடுவார்களா?,அந்த முக்கிய தலையை உருட்டினர்.குடைய ஆரம்பித்தனர்.அங்கே பிளவு உண்டானது.கோவில் பணத்தை தின்னும் ’உன்னோடு நாங்கள் இருக்கப்போவதில்லை என இளனிம் டீம் அப்படியே விலகியது.ஆனால் ....ஆனால் ,இளன் விலகும்போது ஒரு பெரிய தப்பை தன்னோடு கொண்டு சென்றார்.கோவில் செயளாலர் என்பதால் ,கோவில் உண்டியலில் நேர்த்திக்காக பக்தர்கள் போடும் நகைகளை இளன் தன் பாதுகாப்பில் வைத்திருந்தார்.இளன் நேர்மையில் எல்லா புராண இதிகாச பாத்திரங்களையும் மிஞ்சியவர் என்றே கூறலாம்.கூடவே இருந்து பார்த்ததால்தான் ஆணித்தரமாக கூறுகிறேன்.
                                                                                 

இந்த பிரச்சனைக்களுக்கிடையில்தான் கயல்விழி கனிமொழிக்கு அறிமுகம் ஆனாள்.கனிமொழியின் தயவால் கயல்விழிக்கு ஆசிரியை வேலை கிடைத்தது.பிறகு சிலகாலம் கழித்து ,கனிமொழியின் பள்ளியிலே கயல்விழி வேலைக்கு சேர்ந்தாள்.கனிமொழி அந்த கோபுர கோயிலுக்கு போய் வருபவள் ஆனால் சேவைகள் செய்வது குறைவு ,அதற்கு காரணம் ஒன்று ,அது அவ பக்கத்துக்கிராமத்துக் கோவில்,மற்றொன்று பற்றின்றி கனிமொழி எந்த தெய்வ செயல்களிலும் ஈடுபாடு காட்டமாட்டாள்.

கயல்விழி வந்த பிறகு ,கனிமொழி தான் அரசல் புரசலாக கேள்விப்பட்ட உட்பூசல்களைப்பற்றி கயல்விழியிடம் கேட்டு தெரிந்துகொண்டாள்(.இவர்கள் இருவரும் ,சிறுவயது முதல் ஒரே பள்ளியில் பயின்றவர்கள் ஆனால் வெவ்வேறு கிராமத்தினர்.)கயல்விழியும் தயங்கி தயங்கி ,சில விசயங்களை கனிமொழியிடம் கூறுவாள்.அவ கணவன் கோவிலில் முக்கிய பொறுப்பில் இருந்ததால் பல களவுகளை கையும் களவுமாக பிடித்தது முதல் இளனுடைய டீம் விலகல் வரை ,அனைத்து விவரங்களை கனிமொழியிடம் கூறினாள்.ஆகவே கனிமொழிக்கு எல்லா விவரங்களும் தெரிய வந்தது.
இளனைக் கனிமொழி தன் உடன்பிறவா சகோதரனாக ஏற்றுப்பழகினாள்.அவர்களின் இனிய நட்பு இனிதே இன்று இந்த நொடி வரை  தொடர்கிறது.
                                                                               

இப்படிப்பட்டவேளையில்தான் கனிமொழிக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது ‘ஹலோ டீச்சர் ,உங்களோடு பணிபுரியும் சக ஆசிரியையின் கணவர் ,கோவில் நிர்வாகத்தை விட்டு விலகும் பொழுது ,அம்பாளின் நகைகளை சுருட்டிக்கொண்டு போய் விட்டாராமே???இப்படி ஒரு பழிச்சொல்லை கனிமோழி மூன்றாவது முறையாக கேட்கிறாள்.வேறு யார் கிளப்பிய புரளியாக இருக்கும்?அந்த முக்கிய புள்ளிதான்.ஏற்கனவே பள்ளியில் பெற்றோர்கள் பேசிக்கொள்ள ,கனிமொழியின் செவிக்கு எட்டியது.பிறகு கனிமொழியின் அண்ணி ,அதே கிராமத்தில் வசிப்பவள் ,ஆகவே அவர் மூலமும் ஒருமுறைக்கேட்டுவிட்டாள்.ஆனால் அப்போதெல்லாம் தக்க பதில் கொடுத்து இளனையும் அவர்தன் டீம் -ஐயும் காப்பாற்றி வந்தாள் கனிமொழி.ஆனால் கயல்விழியிடம் இது பற்றி சொல்லிக்கொண்டதில்லை.

இம்முறை பொருமையை இழந்தாள்.கயல்விழியை உடகாரவைத்து பேசி ஒரு முடிவெடுக்க எண்ணினாள்.’கயல் உன் கணவருக்கு ஏன் இந்த வீணான வேலை?கோவில் வேண்டாம் ,சாமி வேண்டாம் என்று சொல்லும் அவரும் அவரது சகாக்களும் ஏன் அந்த நகைகளை வங்கியில் பாதுகாத்து வருகின்றனர்?(இன்னுமொரு தகவல் :இளன் அந்த கோவிலை தனது தாய் வீடாக எண்ணி ,வேலை செய்து வந்தவர்.அப்படி உரிமைக்கொண்டாடிய மனிதர் கோவிலை விட்டு வந்து என் கண் பார்க்க ,பல கஷ்டங்களை அனுபவித்தார்.அவர் பலவருடங்கள் செய்த வேலைப்போனது ,நோய்வாய்ப்பட்டார்,கடன் தொல்லைகள் என் பல).

                                                                               
கனிமொழியின் கேள்விக்கு கயல் சொன்ன பதில்’இல்லை கனி,அங்கே உள்ளவன் எல்லாத்தையும் விற்று திங்கறான்,இதையும் கொடுத்தால் ,ரொம்ப மகிழ்ச்சியாக தின்னுவான்.அதை எங்களால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது.மேலும் அந்த கோபுரம் எழ நாங்கள் பட்ட சிரமம் இருக்கே?எங்களின் உழைப்பை யார் அறிவார் ?என்று அவளும் இளனும் அந்த கோவிலுக்காக பட்ட துன்பங்களை பற்றி அடுக்கிக்கொண்டே போனாள்.’உனக்கெல்லாம் என்ன தெரியும்?நியாயம் பேச வந்துட்ட?’என்று பதில் கொடுத்தாள் .

அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்த கனிமொழி ஒன்று கேட்டாள் ‘நீங்களோ அந்த கோவிலோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லைன்னு வந்துட்டிங்க,அதன்பிறகு நீயும் உன் கணவரும் அடைந்த துன்பங்கள் நான் அறிவேன்.ஒருவேளை இந்த நகைகளை நீங்கள் வச்சிருப்பதலோ என்னவோ அந்த சோதனைகளை நீ அனுபவிக்கிறாயோ?(கனிமொழி கொஞ்சம்  சமயம் புரிந்தவள் என்றும் சொல்லலாம்).உன்னை சோதிப்பது இறைவனின் தொழில் அல்ல,ஆனாலும் .....தேவையில்லாத ஒன்றை நீயும் உன் கணவரும் ஏன் கட்டிக்கிட்டு அழனும்?மேலும் உங்கள் உழைப்பு உழைப்புன்னு நீ சொல்வதைப்பார்த்தால் ,உழைப்புக்கு ஊதியமாக அந்த நகைகளை பூதம் காப்பதுபோல் காத்து வருகிறாயா?இதெல்லாம் வீணான பழிச்சொல்.உன் பிள்ளைகளை நாளைக்கு யாராவது ‘கோவில் நகையை திருடி வச்சிப்பவன் புள்ளங்கதானேன்னு’சொன்னால் எப்படி இருக்கும்?என்று அவளுக்கு பட்ட நியாயத்தை எடுத்துரைத்தாள்.

கயல்விழியோ தன் கணவன் டீம் தோற்றுப்போக கூடாதுன்னும் ,அந்த பெரும்புள்ளிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் மேலும் அந்த நகைகளையும் கொடுத்தால் ,அவன் பணமாக்கி விடுவான் என்ற அக்கறையில் அப்படி செய்வதாக கூறினாள்.
இறுதிக்கு கொண்டு வர நினைத்த கனிமொழி சொன்னாள் ‘ஒரு பொருள் உன்னுடன் இருக்கும் வரை உனக்கு சொந்தம் ,அதை நீ வேறொருவரிடம் ஒப்படைத்தால் ,அது அவருக்கு சொந்தம் .அதை அவன் திருடுகிறானோ ,அழிக்கிறானோ அது அவன் பாடு.கோவில் சொத்து குலநாசம் .அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம்,இறைவன் பார்த்துக்கொள்வான்’என்று தீர்ர்பு சொல்லி முடித்துக்கொண்டாள்.கனிமொழியின் கோபத்துக்கு காரணம் இளனின் நேர்மையை அவள் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பவள்.
                                                                             
                                             
(இந்த பதிவைப் படிக்கும் வாச்கர்களுடைய கருத்துக்களை வரவேற்கிறேன்,தயவு செய்து கனிமொழியின் தீர்ப்பு சரியா அல்லது கயல்விழியின் பிடிவாதம் நியாயமா என்று எடுத்துரைக்கவும் .உங்களின் இந்த கருத்துக்களைக்கொண்டுதான் இந்த இருவரின் நட்பும் தொடரும் வாய்ப்பு இருக்கிறது)

Wednesday, 1 August 2012

என்னை விட்டு எங்கே போனாய்?

ஏன் என்னை விட்டுப் போனாய்??

வேலையில் கொஞ்சம் தாமதம் ஆனாலும் உடனே சமையலுக்கு விடுமுறை இப்போ!! 

எங்களைச் சுற்றி என்ன நடந்தாலும் , சோற்றுப்பானையில் சோறும் ,குழம்பு பானையில் குழம்பும், தழும்ப தழும்ப தயாராக இருக்கும் அப்போ??

ஏன் என்னை விட்டுப் போனாய்??


காற்று ,மழையைக் கண்டாலே கதவைப் பூட்டி வீட்டிலே இருப்போம் இப்போ...


காற்று ,மழை ,கடுமையான வெயில், அதுதானே  பஸ் ஏறினாலும் சரி,
பள்ளி முடிந்து வீட்டுப் போனாலும் கூடவே வரும் நண்பன் அப்போ....

ஏன் என்னை விட்டுப் போனாய்??

நள்ளிருளில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கார் ஓட்டும் காலம் இப்போ.......
நள்ளிருளில்நடனம் என்ன? விளையாட்டு என்ன ,விருந்து என்ன,வித விதமான கூத்துகள் அப்போ......

ஏன் என்னை விட்டுப் போனாய்??

தீபாவளி வந்திருச்சி ஆனால் கையில் பணம் இல்லை...
ஆகவே அடுத்த வருசம் தீபாவளி கொண்டாடலாம் இப்போ...
.காசு இல்லை அதைப் பற்றி என்ன கவலை ?
பட்சணம்,பலகாரம் ,புத்தாடை ,பட்டாசு ,மத்தாப்பு கோழிக்கறி ,ஆட்டுக்கறி ...
வருசா வருசம் கொண்டாடிய தீபாவளி அப்போ....

ஏன் என்னை விட்டுப் போனாய்??

இரவில் பன்னிரண்டு மணி வரையில் கூட விழிக்கமுடியாமல் சிரமப்படுவது இப்போ...
விடிய விடிய விழித்திருந்தும் விழிக்கு நோகாமால் எழும் காலம் அப்போ..

எல்லாவற்றிற்கும் மேலாக,சமைத்து வைத்த எல்லாத்தையும் ஒரு பிடி பிடித்து நிம்மதியாக தூங்கிய ஒரு காலம் அப்போ......
கையில் பணம் இருந்தும் சமைக்கத் தெரிந்தும் நோய்க்கு பயந்து வாய்க்குக்கு ருசியாக சாப்பிட முடியாமல் வாழும் வாழ்க்கை இப்போ.....

ஏன் என்னை விட்டுப் போனாய்??

விட்டுப்போன உன்னைத் தேடுகிறேன்... காணமுடியவில்லையே....
என் குழந்தைப் பருவமே.....
இனி உன்னை எங்கே பார்ப்பேன்???
என் குழந்தைப் பருவமே...
                                                                              

Thursday, 7 June 2012

நேரில் நின்று பேசிய தெய்வம்

என் மற்றுமொரு தாயின்  பிறந்தநாள் இன்று(7/6/12)
                                                                           

என் அபார்ட்மெண்டில் குடியேறிய புதிதில்,ஒரு அம்மா எனக்கு அறிமுகம் ஆனார்.கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த எனக்கு திருமணம் ஆனவுடன் தனிக்குடித்தனம் ரொம்ப கொடுமையான ஒன்றாகவே இருந்தது.என்னால் அந்த தனிக்குடித்தனம் ,தனிமை இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாமல் சிரமப்பட்டேன்.இருப்பினும் அந்த வெறுப்பேற்றும் சூழலிலிருந்து தப்பிக்க ,என் வேலை எனக்கு கைவசம் இருந்தது.

 என் பையன் பிறந்தபொழுது ,எனக்கு என் வேலையை ராஜினாமா செய்தாகவேண்டிய சூழல்.VSS எடுத்துக்கொண்டு நிற்கலாம் என் அறிவித்தனர்.மகளும் நான்கு வயதை அடந்துவிட்டாள்.மகனைப் பராமறிக்க ஆள் பார்க்கனும் ,வருமானம் குறைந்த வாழ்க்கை ,இருப்பினும் வேலையை ராஜினாமா செய்தேன்.பிறகு முழுநேரம் வீட்டில் இருந்ததால் ,அந்த தனிமை என்னை சாகடிக்க தொடங்கியது.என் கண்வர் விருப்பப்படி நான் வேலையை விட்டுக்கொடுத்ததால் ,அந்த சமயங்களில் இன்னும் அதிகமாக அன்பு காட்டினார்(என் தனிமை என்னைக் கொன்றுகொண்டிருப்பதை .அவர் என் தாய் வீட்டிற்கு வரும்பொழ்தெல்லாம் உணர்வார்).’என்ன செய்ய எனக்கு மட்டும் ஆசையா ,கொஞ்சநாள் எல்லாம் சரியாகிவிடும்,பிள்ளைகள் வளர வளர தனிமையெல்லாம் தெரியாமல் போயிடும் என்று  என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஆறுதல் எல்லாம் சொல்லுவார்(ஆண்களுக்கே உரிய சுயநலம்,அவர் மட்டும் விதிவிலக்கா?)

அந்த நேரம்தான், அந்த தத்துதாய் என்னோடு மிகவும் நெருங்க தொடங்கினார்.நான் கீழே(தரை வீடு,அவர் இருந்ததோ 5-ம் மாடியில்).குப்பைகள் வீச போகும்போது ,படி ஏறி இறங்குவதால் ,ரொம்ப களைப்பாக இருக்கும்மா,உன் வீட்டில் கொஞ்சம் உட்கார்ந்து போகிறேன் என்று அடிக்கடி வரப்போக ஆரம்பித்தார்.அறுவை சிகிச்சையில் பிரசவித்து ,சுமார் இருபது நாட்கள் கழித்து,என் அம்மா வீட்டிலிருந்து என் வீட்டுக்கு வந்ததால் ,அந்த அம்மா என்னை ரொம்ப அக்கறையுடன் கவனித்துக்கொள்வார்.தண்ணீரில் ரொம்ப நேரம் நின்று வேலை செய்யாதேம்மா,ஜன்னி வரும்னு அறிவுறுத்துவார்.சில நேரங்களில் ,அவராகவே எனக்கு நிறைய உதவி செய்வார்.கணவர் வேலைக்கு போய் விடுவார்,பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் ,என்னால் மார்க்கெட் போக முடியாது,ஆகவே தினமும் போனில் ;மார்க்கெட் போனால் எனக்கும் ஏதாவது வாங்கி வாருங்கள்’ என்று சொல்வேன்..

எங்களுக்குள் தாய் மகள் எனும் உறவு பூத்துக்குலுங்க ஆரம்பித்தது.கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மிஸ் பண்ணி தனிக்குடித்தனம் எனும் துயரத்தில் சிக்குண்ட நிமிடங்கள் , என் வேலையையும் ராஜினாமா செய்து ,தவித்துக்கொண்டிருந்த தருணம் அது,அந்த கசப்பான தருணங்கள் ரணமாகிய வேளையில்தான்,அந்த ரணத்துக்கு மருந்தாக அமைந்தது அந்த தாயின் நெருக்கம்.என் கண்வர் திரு.ஞானசேகரன் ,அந்த அம்மாவோ திருமதி.ஞானாம்பாள்.என் பிள்ளைகளுக்கு அப்பா வழி பாட்டி இல்லாததாலும் ,இந்த அம்மா ,நான்கு பேர் கொண்ட என் குடும்பத்தில் ஒருவராக ஆனதால் என் பிள்ளைகளுக்கு அப்பா பாட்டியானார்.ஒருமுறை வீட்டில் கேஸ் தீர்ந்து போய்விட்டது,வேலையை விட்டு வீட்டில் இருந்தபொழுது (இது முதல் அனுபவம்)செய்வதறியாது ,உடனே அவருக்கு போன் பண்ணி ‘அம்மா கேஸ் விநியோகம் செய்பவன் நம்பர் கொடுங்கம்மா,(அதெல்லாம் அப் டு டேட்டாக வச்சிருப்பாங்க)இன்னும் சமைக்கவில்லை ,கேஸ் தீர்ந்துபோச்சு என்று சொன்னேன்.’என்னாடி பொண்ணு நீ,பிள்ளைபெத்த உடம்பு ,இன்னுமா சாப்பிடவில்லை’ என்று திட்டிவிட்டு நம்பரும் கொடுத்தார்.

பிறகு அரைமணி நேரத்தில் ,என் வீட்டு முன்னால் ,டிபன் கேரியருடன் வந்து நின்றார்.இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.கேஸ்காரன் காலையிலே வந்து போயிட்டான்.இனி மாலையில்தான் வருவான்.இந்தா சாப்பிடு என்று என்னை உட்காரசொல்லி ,எனக்கும் என் மகளுக்கும் உணவு பறிமாறினார்.அந்த கணம் எனக்கு சொல்லவார்த்தையே இல்லை,அன்பு ..நேரில் நின்று பேசும் தெய்வம் இதுதானா??நான் காப்பி விரும்பி என்பதால்,மாலை வேளைகளில் நான் கேட்காமலேயே பலமுறை எனக்கு காப்பி சுடசுட கலந்து கொண்டு வருவார்.

என்னைப்பெற்ற தாயிடம் கூட காணாத அன்பு அது.என் அம்மா என் மேல் பாசம் பொழிவது ஆச்சர்யம் அல்ல ,காரணம் நான் அவர் மகள் இருந்தாலும் என் அம்மா ரொம்ப கண்டீசன் தாய்,தனிப்பட்ட முறையில் அன்பெல்லாம் இல்லை.ஆண்பிள்ளைகளை ரொம்ப கவனிப்பாங்க,பெண் பிள்ளைகள் என்றால் அன்பை காட்டி காட்டி (once in blue moon)எடுப்பார்.அப்படிப்பட்ட எனக்கு இந்த தாயின் அன்பு ,ஐயோ சொல்ல வார்த்தையில்லாமல் போனது.எனக்கு கார் ஓட்ட லைசென்ஸ் இருந்தது.ஆனால் கார் ஓட்ட பயம் .என் பயத்தை தெளிய வைத்த வழிகாட்டி.’எடுடி காரை.பிள்ளைகளை நான் பிடித்துக்கொள்கிறேன்,நீ காரை ஓட்டு என்று தைரியம் ஊட்டியவர்.இளவயதிலே கணவனை இழந்து ,மூன்று பிள்ளைகளை தனிமரமாக நின்று வளர்த்துவிட்ட தாய்.அவர் பிள்ளைகள் யாருமே இன்னும் திருமணம் ஆகவில்லை,ஆகவே என் பிள்ளைகள் அவருக்கு பேரப்பிள்ளைகளானார்கள்.தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ,அவசர அவசரமாக வந்து ,என் பிள்ளைகளைப்பார்த்துக்கொள்வார்.நான் நிம்மதியாக என் வேலைகளை முடிப்பேன்.

அப்பேர்பட்ட அன்பு தாயிக்கு இன்று பிறந்தநாள்.இந்த பதிவு அவருக்கு ஒரு சமர்ப்பணம்.ஆம்,அந்த தாய் இன்று இவ்வுலகில் இல்லை.கருப்பை புற்று நோயினால் அவதியுற்று ,அவர் இறந்து மூன்று வருடம் ஆகிவிட்டன.இறக்க மூன்று நாட்களுக்கு முன் ,தன் மகளை அழைத்து செல்வியை மேலே வர சொல்,எனக்கு பார்க்கணும்போல இருக்குன்னு சொல்லியும் ,அந்த அக்கா ஏதோ டென்சனில் என்னிடம் சொல்லவே இல்லை.அம்மா இறந்தவுடந்தான் இந்த செய்தி என் காதுக்கு வந்தது.அவர் மகளை எப்படி திட்டுவது??இருந்தாலும் எனக்கு கொடுத்துவைத்தது அவ்வளவுதான் போல என்று மட்டுமே நினைக்க முடிந்தது.இன்று காலையில் எழுந்தவுடன் , யாருக்கோ இந்த தேதியில் பிறந்தநாள் என்று மண்டையைப்போட்டு உருட்டிக்கொண்டிருந்த வேளையில்..அந்த தாய் என்னைப்பார்த்து சிரிப்பதுபோல உணர்ந்தேன்.நினைவுக்கு வரவே இந்த பதிவும் ரெடியானது.அவர் படம் கைவசம் இல்லை.ஆனால் என் மனதிலும் என் பிள்ளைகள் மனதிலும் நிரம்பி இருக்கும் அன்பு தாயுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்!

Wednesday, 6 June 2012

இன்பமும் துன்பமும் கைகோர்த்து ?


இதான் இன்பத்திற்கு பிறகு துன்பம் வரும்னு சொல்வாங்களோ?

கடைத்தெருவுக்கு சென்றேன்.திடிரென ஓர் அம்மா,ஓடி வந்து அணைத்துக்கொண்டார்!என் மாணவியின் அம்மா.டீச்சர் ரொம்ப நன்றி டீச்சர்,என் மகள் சரியா பேசக்கூட தெரியாதவள் ,இன்று நல்லா பேசுகிறாள்,ஆத்திச்சூடி சொல்கிறாள்,ஆங்கில ரைம்ஸ் எல்லாம் நுனி நாக்கில்.பழமொழிகளும் திருக்குறளும் கூட சொல்கிறால்.அவுங்க அண்ணன் அக்காவையே மிஞ்சிட்டாள்.!இன்னும் நான்கு வயது கூட பூர்த்தியாகலஆனால் ஆறு வயது போல முன்னேற்றம்.உங்களிடம் அனுப்பியதில் ரொம்ப திருப்தியடைகிறேன் என்று ஒரே புகழாராம்!

செய்வதறியாது ஒரே  மிதப்பு எனக்கு!பிறகு கொஞ்சம் அட்ட் பண்ணினாரே?...... ‘டீச்சர் அவ உங்கள மாதிரியே கத்தி கத்தி பேச ஆரம்பிச்சிட்டா,நீங்கள் எப்படி மைக் இல்லாமல் ,மைக் வச்சி பேசுவதுபோல பேசுவிங்களோ அதேப்போல பேசுகிறாள். எந்த நேரமும் வெள்ளைக்காரிமாதிரி ஆங்கில பாடல்தான் முணுமுணுக்கிறாள்,வீட்டில் எந்த நேரமும் கையில் பிரம்போடுதான் அலைகிறாள்.அவ அப்பா சின்ன தப்பு செய்துவிட்டாலும் உடனே ;எடு அந்த long ruler-ஐ அடிக்கனும்னு’கோபமாக சொல்வாள்.என் முன்னே வந்து தோப்பு கரணம் போடுங்க அப்பான்னு ஆணை இடுகிறாள்? எங்களுக்கு ஒரே சிரிப்பு டீச்சர்.அவளைப்பார்க்கும்போதெல்லாம் உங்களை பார்ப்பதுபோல  ஓர் உணர்வு’என்றும் கூறி சென்றார்.இது புகழில் எந்த ரகம்????

இங்கே அவளும் இருக்கிறாள்!



Tuesday, 5 June 2012

ஏங்குதே மனம்...!

நினைக்கும்போதெல்லாம் !!!!
ஒரு சில விசயங்களை நினைத்தாலே நம்மை அறியாமல் விழிகள் பனிக்கும்.இதயம் கனக்கும்.கோடிக்கோடியாய் பணம் கொடுத்தாலும்,இப்போ பெறமுடியாது!திரும்பி வராது எதுக்கும்  ஈடு கட்டமுடியாத மகிழ்ச்சி ,அப்படிப்பட்ட சில விசயங்களை கொஞ்சம் திரும்பிபார்க்கிறேன்..

என் அப்பா
அன்புக்கு,கருணைக்கு,கொடுப்பதில் கர்ணன்,எதிரியைக்கூட வாழ்த்தும் நல்லெண்ணம் கொண்டவர்!ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்.இனி எந்த பிறவியில் அவரைப்பார்ப்பேனோ?அவரை நினைக்கும்போதெல்லாம்.....ஏங்குதே மனம்!
                                                                             

என் பாட்டி வீடு,
வருசம் 16 திரைப்படத்தில் வரும் ,தாத்தா வீடுபோலவே எனக்கும் அம்மா வழி பாட்டி வீடு இருந்தது.எங்களுக்கு விபரம் தெரிந்து நாங்கள் போய் அதிகம் தங்கிய பாட்டி வீடு அதுதான்.வெளியூரில் வேலை செய்யும் மாமாமார்கள்,தொலைத்தூரத்தில் கல்யாணம் கட்டிபோன சின்னம்மாமார்கள்,எங்கள் வயது ஒத்த சின்னம்மா பசங்க என எல்லோரும் திருவிழாவிற்கும்,தீபாவளிக்கும் ,ஓணம் பண்டிகைக்கும் நீண்ட பள்ளிவிடுமுறைக்கும் ஒன்று கூடுவது அங்கேதான்.நாங்கள் எங்களிடம் இருந்த ,மறந்திருந்த திறமைகளை (யாராவது பாராட்டுவாங்களேன்னு?)இரட்டிப்பாக காட்டுவதற்காகவே அங்கே போவோம்.பாட்டி உடல் நலம் இல்லாமல் போய்விட்டதால் ,மேலும் பராமறிக்க ஆள் இல்லாததால் ,அந்த வீட்டை தாய்மாமன்கள் விற்க முடிவு செய்தனர்.வீடு விற்கப்பட்டது!எல்லோரும் கவலையாக இருக்கு என்று சொல்லிவிட்டு சென்றனர்..ஆனால் நான் மட்டும் மனதில் அழுதேன்!இனி அதுபோல ஒரு வீடு என்று ........நினைக்கும்போதெல்லாம்.....ஏங்குதே மனம்!

என் கிராமத்து வீடு(2)
 வீடு (2)என்று குறிப்பிட காரணம் ,9 வயதுவரை ஒரு வீட்டில் இருந்தோம்.ரொம்ப மோசமான வீடு.மின்சாரம் இல்லை,கழிவறை வசதி இல்லை,ஈய வயலுக்கு அருகில்!ஆகவே அந்த வீட்டில் நிறைய சொல்வதற்கு இல்லை.9 வயதில் ஈயவயல் அருகே இருந்த வீட்டின் மணலிடிந்து ,எங்கள் வீடெல்லாம் பாதிக்கப்ப்பட்டதால் ,வேறு ஒரு தொடர் பலகை வீடுகள் கொண்ட கிராமத்துக்கு மாற்றலாகி சென்றோம்.அங்கேதான் நாங்கள் டீன் ஏஜ் தாண்டி ,வேலை ,வெளியுலகம் ,திருமணம் என படிப்படிப்பாய் வளர்ந்தோம்,படித்தோம் ,முன்னேறினோம்.கோழிகூவி பொழுது விடியும் கிராமம்.அக்கம்பக்கத்தில் சண்டை போட்டாலும் ,உள்ளூர ஏதோ சகோதரத்துவம் கொண்ட நண்பர்கள்!அப்பா வாழ்ந்து இறந்த வீடு ,எங்களுக்கு நிறைய சோகங்களையும் ,சந்தோசங்களையும் கொடுத்த அந்த வீட்டை நினைக்கும் போதெல்லாம்....ஏங்குதே மனம்!

கலர் டிவி
எங்கL கிராமத்தில் முதன்முதலாக எங்கள் வீட்டில்தான் கலர் டிவி வாங்கினோம் என்பதில் எங்களுக்கு பெருமை.ஆம்,நாங்க அந்த சமயம், வறுமைக்கும் வசதிக்கும் இடையில் வாழ்ந்த காலம்!என் அம்மா ரொம்ப திறமைசாலி பெண் ,மேலும் அதிர்ஷ்டக்கார மனைவியும் கூட, தொட்டதெல்லாம் பொன்னாகும் அவர் செய்யும் காரியம்.குருவி சேர்ப்பதுபோல,கொஞ்சம் கொஞ்சமாய் பணம் சேர்த்து நிறைய பொருட்கள் வாங்கி சேர்த்தார்.அந்த வரிசையில் வந்ததுதான் கலர் டிவி.எனக்கு இன்னும் நினைவிருக்கு,அந்த டிவி எங்கள் வீட்டை வந்தடைந்த அன்றிரவு  நாங்கள் பார்த்த முதல் படம் ,ஆங்கில படம் 'தி ஹை சாப்ரல்’(ரெட் இண்டியன்)(தமிழ்ப்படம் அன்று ஒளியேறவில்லை என்பதுதான் காரணம் அன்றி வேறொன்றுமில்லை).அன்றிரவு குதூகலத்தால்,நாங்கள் யாருமே எங்களுடைய  அறையில் உறங்காமல் ,வரவேற்பறையிலேயே உறங்கினோம் என்பது குறிப்பிடத்தக்கது.எங்களுக்கு வறுமையிலும்,வர்ணத்தில் உலகை காட்டிய அந்த கலர்(பலர் கைமாறி இறுதியாக பேரிச்சம் பழக்கடைக்கு சென்ற) டிவியை நினைக்கும்போதெல்லாம் ....ஏங்குதே மனம்!

கிராமத்து விளையாட்டுக்கள்
என் நண்பர்களோடு சேர்ந்து (ஒலிம்பிக்)விளையாட்டுக்களையே மிஞ்சும் அளவுக்கு ,நாங்கள் களைப்பே இல்லாமல் விளையாடிய கல்லாங்காய்,கிளிபறி,ஹை ஜம்ப்,நொண்டி விளையாட்டு,போலிஸ் திருடன்,எங்கிட்டே இருக்கு.பிடிக்கிற விளையாட்டு,ரவுண்ட்ரெஸ்(கிரிக்கெட்) .இன்னும் பல.வெள்ளிக்கிழமை எப்படா பள்ளி முடியும் ,மறுநாள் விடுமுறையாச்சே?.காத்துக்கிடந்து ,வீடு வந்து சேர்ந்ததும் ,சாப்பிட்டு மட்டும்(அதைத்தான் இன்னும் கூட ஒழுங்காய் செய்கிறோம்)சீருடைக்கூட மாற்றாமல் ,மாலை ஏழு மணி வரை விளையாடுவோம்.சட்டைக்கூட மாற்றாமல் ,ஏழு மணி வரைக் குளிக்காமல் ஆட்டம் போட்டதற்காக  அடி வாங்கியது இன்னுமொரு ரகசியம்.அந்த விளையாட்டெல்லாம் தற்பொழுது அடியோடு இல்லை என்று நினைக்கும்போதெல்லாம் ......ஏங்குதே மனம்!

55 எண் பேருந்து(12 பி )
பூச்சோங்கில் இருந்து பிரத்தியேகமாக கோலாலும்பூர் செல்லும் ஒரே பேருந்து இந்த 12 பி (55 பஸ்).கூட்ட நெரிசலில் சென்றாலும் ,அந்த சமயத்துல வெறும் 20 காசு மட்டுமே(தற்போதைய விலை 1.50 காசு) கொடுத்து ,பள்ளிக்குச் செல்வோம்.பஸ் வருவது கண்களுக்கு தென்பட்டால் ,ஏதோ பிரசவம் ஆனதுபோல மகிழ்ச்சி!அந்த சமயம் ,அந்த பேருந்தில் ,வேலை செய்த ஊழியர்கள் 90 சதவிகிதம் நம்ம ஆட்கள்.எனவே அவர்களின் முயற்சியால்  நாளடைவில் பேருந்தில் தமிழ்ப்பாடல்கள் ஒலியேற ஏற்பாடு செய்தனர்.ஐயோ அந்த நிமிடங்களை நினைத்தால் ,மனதில் பட்டாம்பூச்சி பறப்பதுபோல ஓர் உணர்வு.நமக்கு பிடித்த பாடல் ஒலியேறிக்கொண்டிருக்கையில் நாம் இறங்கும் இடம் வந்துவிட்டால் ,ஒளிந்து கொண்டு(டிக்கெட் இன்னும் விலை அதிகம் கேட்பாங்கன்னு)அடுத்த இடத்தில் போய் இறங்கிய காலங்களை நினைக்கும்போதெல்லாம்....ஏங்குதே மனம்!

புதன்கிழமை சந்தை
எங்கள் ஊரின் (பாண்டி பஜார்)என்றே கூறலாம். கோலாலும்பூர் நகரம் நகர்ந்து வந்து அங்கே ஒருநாள் கொட்டகையிடும் என்றும்  வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் அங்கே கூடுவர்.நாங்கள் டவுனுக்கு போய் ஷாப்பிங் செய்ததைவிட ,அந்த சந்தையில்தான் ஷாப்பிங் செய்தது அதிகம்.ஒன்று விலை குறைவு ,மற்றொன்று வீட்டிலிருந்து நடந்தே போகலாம்(யார் உதவியும் இல்லாமல்).அப்படி ஒரு கூட்டம்,விலைக்குறைவு!இன்னுமொரு விசேசம் ,அன்றைய தினம் சமையல் அப்பாவுக்கு மட்டுமே.நாங்கள் கண்டிப்பாக சந்தையில் திண்பண்டம் வாங்கியே சாப்பிட்டாகனும்(இல்லாவிட்டால் சீனன் கோபித்துக்கொள்வான் ??)அந்த மாதிரி சந்தைகள்,தற்பொழுது  நாங்கள் வசிக்கும் அபார்ட்மெண்ட் அருகே இல்லை என்று நினைக்கும்போதெல்லாம் ......ஏங்குதே மனம்

அம்மா வீட்டு தீபாவளி
இதுப்பற்றி நான் அடிக்கடி கூறியதுண்டு.எங்கள் கிராமத்தில் நூறு சதவிகிதம் தமிழர்களே.மேலும் தரவாட்டுக்குடும்பமாக வாழ்ந்த எங்கள்  வீட்டில் நாங்கள் கொண்டாடிய அந்த தீபாவளிப்போல நான் திருமணமாகி இன்னும் கொண்டாடியதே இல்லை என்பது மிகப்பெரிய உண்மை!விடிய விடிய பலகாரம் செய்வது,வீட்டை அலங்கரிப்பது ,சமையல் செய்வது ,ஆளுக்கொரு வேலையாக பகிர்ந்து ஆடிப்பாடி களைப்பின்றி கொண்டாடிய தீபாவளியை இன்றும்  நினைக்கும்போதெல்லாம் ......ஏங்குதே மனம்!

இரவு ஆப்பம்
அம்மாவின் கைவண்ணத்தில் வெகுவிரைவாக செய்யப்படும் ஒரு பலகாரம்!தோசை ,இட்லி என்றால், மாவு புளித்தே ஆகனும்.ஆனால் இந்த ஆப்பம்(அரிசி மற்றும் உளுந்து அதனுடன் தேங்காய்ப்பூ ,கருப்பு சீனி) கலந்து மாவு அரைத்தவுடனேயே சுட்டு சாப்பிடலாம்.இந்த பலகாரம் என்றால் (கருப்பு காப்பி)கலக்கி சாப்பிட்டால்தான் காம்பிநெசன் சிறக்கும் என்பது நான் கண்ட அனுபவம்.திருமணம் முடிந்து  ,பலமுறை முயற்சி செய்து ஆப்பம் குப்பைக்கு போனது மற்றொரு ரகசியம்.அம்மாவிடம் கேட்டால் ‘தின்ன மட்டும் செய்யுங்க,செஞ்சி பழகாதிங்கன்னு கணவர் பிள்ளைகள் முன் திட்டு கிடைக்கும் என்பதை மனதில் வைத்து ஆப்பத்தை நினைக்கும்போதெல்லாம்...ஏங்குதே மனம்.

ஏங்குதே மனம் .....ஏங்குதே மனம்.........படிக்கும் அனைவருக்கும் !!!!!



Monday, 28 May 2012

மூக்கறுப்பட்டு வந்தேன்


ஐயோ !இன்று சூர்ப்பணகைப்போல மூக்கறுப்பட்டு வந்தேன்?(28/5/2012)

பிள்ளைகளை நீச்சல்குளத்துக்கு கூட்டிச்சென்று ,குளித்து முடிந்து அதுகளுக்கு பசி எடுக்கவே,அவசர அவசரமாக வங்கி போக வேண்டிய வேலை.காரில் பிள்ளைகளை உட்காரவைத்துவிட்டு ,வங்கி சென்றேன்.நான் போகவேண்டியது cimb bank ஆனால் அந்த வங்கி அருகிலேயே am bank, மற்ற எல்லா வங்கிகளும் இருக்கும்.வேக வேகமாய் ஓடினேன் ,ஒரு சீனர் நுழையும் முன் ,அவரை முந்திக்கொண்டு நான் நுழைந்தேன்.

                                                                                   
நானும் வங்கியில் நுழைந்து ,(இந்த வங்கியில் எனக்கு டீலிங் இல்லை),வேறு ஒருவருக்கு பணம் பட்டுவாடா செய்ய போனேன்,ஆகவே இயந்திரத்தில் டக் டக் என்று தட்டினேன்,எண்களை தட்டினேன்,அங்கே 13 டிஜிட் மட்டுமே ,ஆனால் என்னிடம்உள்ள அக்கெளண்டில் இரண்டு எண்கள் அதிகப்படியாக இருந்தன.பலமுறைத் தட்டினேன் ,பிழை ,பிழை என் காட்டியது!
                                                                       
பின்னால் சீனர் நின்றுகொண்டிருந்தார்,அவருக்கு  சங்கடம் ஆகக்கூடாதென ,அவரிடமே (கெட்டக்கேடுக்கு ஆங்கிலத்தில்)கேட்டேன்.’நான் இதற்கு முன்பு இங்கே வந்ததில்லை,எப்படி என்றேன்.அவரும் (நல்ல படிச்சவன் மாதிரி இருந்தார்),எனக்காக தட்டிப்பார்த்தார்,மீண்டும் பிழை..பிழை..!ஏன் ..என்னவாக இருக்கும் என்று என் மொபைலை  வாங்கி ,அக்கெளண்ட் எண்களை அவரே சரிப்பார்த்து ,மீண்டும் தட்ட முயன்றபோதுதான் ,அந்த கன்றாவியைக்கண்டுபுடிச்சி சிரித்தார்.
                                                                       
ஐயோ என் கையில் இருந்தது cimb bank,ஆனால் நான் நின்றுகொண்டிருந்தது  am bank?என்னை மேலும் கீழுமாக பார்த்துவிட்டு ,நீ தவறாக நுழைந்துவிட்டாய் ,இது என்ன பேங்க்னு   பார் என்றார்?நல்லவேளைப்படிக்கத் தெரியுமான்னு கேக்கலையே?ஐயோ ,வெட்கம் புடுங்கி தின்ன ,வந்து ,இது ..அது..ஹ்ம்ம்ம் ,சாரி,நன்றி எல்லாமே கலந்து பேசிவிட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு வெளியேறினேன்.எல்லோரும் அவுங்க அவுங்க வேலைகளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்,ஆனால் எனக்கென்னவோ என்னையே????
நல்லவேளை தெரிந்தவர்கள் யாரும் என்னைப்பார்க்கவே இல்லை,அப்படிப் பார்த்திருந்தாலும் ,நான் அவர்களைப் பார்க்கவே இல்லைன்னுதான் ......வேற வழி தப்பிக்க?ஒருவேளை இரண்டு வங்கிகளின் லோகோவும் ஒரே மாதிரியா இருப்பது போல இருந்ததுதான் இந்த குழப்பத்துக்கு காரணம் போல?(என்னை நானே ஆறுதல் படுத்திக்கொண்டேன்)பிள்ளைகள் காரில் ,ஏம்மா சிரிச்சிக்கிட்டே வர்றிங்கன்னு கேட்க,கதையைச் சொன்னேன்,உடனே கோரசாக ,இருங்க எல்லார்கிட்டேயும் சொல்றேன்னு சொல்லுதுங்க!
                                                                         

ஏற்னவே ஒரு முறையில் வங்கியில்தான்,கதவில் pull என்பதை     push  பண்ணிய அனுபவமும்??
இதுமட்டுமல்ல ,சிலவேளைகளில் அவசர அவசரமாக காருக்கு போய்,பக்கத்தில் நம் காரைப்போலவே கார் நிற்கும்.என் கார் என்று கார் கதவை சாவியை விட்டு நெம்பு நெம்புன்னு நெம்பிய அனுபவமும் பல!!இதெல்லாம் எனக்கு மட்டும்தானா?