Monday, 12 August 2013

அறியாத வயதில்..அறிந்தும் அறியாமலும்!

          ஒரு குறிப்பிட்ட வயது வரை ,நாம் பண்ணாத குறும்புகளே இல்லையென்று சொல்லும் அளவுக்கு நாம் பண்ணிய குறும்புகள் அநேகம் !அநேகம்!.வீட்டில் இதனால் வாங்காத அடிகள் இல்லை, ஆனாலும் நிறுத்தியபாடில்லை.
                                             
                                                             


               ஒரு காலகட்டத்தில் நாங்கள் கூட்டாக சேர்ந்து செய்த குறும்புகளை (இதுவரையில் ரகசியமாய் வைத்திருந்த)கொஞ்சம் திரும்பிபார்க்கிறேன்.

              பக்கத்துவீட்டுத் தோழியின் அத்தை ,அவர் மூக்குகண்ணாடி ரொம்ப பவர்ஃபுல் பார்வை. சின்ன வயதில்தான் ,யாரும் எதையாவது போட்டிருந்தால் ,உடனே அதைப்போட்டு பார்க்க ஆசை வருமே?புதிய செருப்பு ,கண்ணாடி ,புது சட்டை(சேராவிட்டாலும் இவைகளைப் போட்டுப்பார்க்க ஆசை).
                     
                                                         

             அந்த அத்தை , ஒருநாள் கண்ணாடியை மறந்து என் வீட்டில் வைத்துவிட்டு போய்விட, என் பலநாள் ஆசை அன்று அரங்கேறியது.ஆம் அம்மா ‘போய் கொடுத்துட்டு வா’என்று அனுப்ப ,நானும் தங்கையும் பின்னால் வழியாக கொள்ளைப் பக்கம் போனோம்.அம்மா தலை மறைந்தவுடன்  அதைப்போட்டுப்பார்த்தோம்.

              எல்லாமே கிட்ட கிட்ட பெரிசு பெரிசாய் தெரிந்தது.ஒரே ஆச்சரியம் ,என்னம்மோ ஆச்சரியம். ஐயோ இங்கே பார் ,அங்கே பார் என்று கூவிக்கொண்டே ,ஒரு சிறிய கால்வாய் கொள்ளைக்கு இடையில் ஓடும்,அதைக் கண்ணாடி அணிந்தவாறே நான் தாண்டுவேனா?

          ‘தடால் என கால்வாயில் விழுந்தேன்!ஆமாம் அது கிட்ட பார்வை கண்ணாடி ,தூரமாக இருந்த கால்வாய் ,கிட்டே தெரியுமா, தாண்டிகுதிக்க கால் எங்கேயோ போய் ஊன்றி, கால்வாயில் விழுந்து, அழுகை ஒரு புறம் ,பயம் மறுபுறம்.நல்லவேளை கண்ணாடிக்கு ஒரு பாதிப்பும் இல்லை. 

              என் அப்பா வழி பாட்டி ,தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்.இரவில் பீடி குடிக்கும் பழக்கம் உடையவர். வெற்றிலைப்பாக்கும் மெல்லுவார். அந்த பீடி வாசம் ,என்னமோ போல் இருக்கும்.

             பாட்டிக்கு வெற்றிலை இடித்துக்கொடுக்கும் போதெல்லாம் ,அந்த வாசம் பிடித்துபோகவே(உரலில் இடிப்பதால் ஒரு வித வாசம் )திருட்டுத்தனமாய் இடித்த வெற்றிலையை நாங்கள் போட்டு மெல்லுவோம். (இன்னும்கூட விசேச வீட்டுக்குப்போனால் ,வெற்றிலை சாப்பிடுவோம்!) அதேப்போல பீடி இழுக்க ஆசை வந்தது.

           ஒருநாள் வீட்டில் யாருமே இல்லாத சமயம் ,நானும் அக்காவும் கட்டிலுக்கு அடியில் புகுந்துகொண்டு பீடியைப் பற்ற வைத்து வாயில் வச்சி ஊத’ஐயோ தொண்டையில் விசவாயு தாக்கியது போல ஒரு உணர்வு. புகை தலைக்கேறியது.என்னால் தாங்க முடியவில்லை, கட்டில் அடியிலிருந்து வெளியே ஓடி வந்து ,இரும்பி இரும்பி நெஞ்சே உடைந்துபோவதுபோல கட்டிலில் விழுந்தேன்.அக்காவும் அதே போல !
                                                               
                                                                     

             நல்லவேளை பாட்டியின் பழக்கத்தில் வெற்றிலையை மெல்ல மட்டும்  பழகினோம்,பீடி கொடுத்த பாடம்,அன்றே அதுக்கு சுவாஹ!.

             கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல,பக்கத்து வீட்டு தோழி மற்றும் அவள் அண்ணனோடு  சேர்ந்துகொண்டு (அவுங்க வணங்கும் காளி சாமிக்கு) ,முட்டை அவித்து சாமி கும்பிட ,சீனர் வீட்டில் போய் முட்டைகளைத் திருடி,சீனத்திக்கு தெரிய வரவே, அப்பாவுக்கு தகவல் வந்தது

            வேலை முடிந்து வந்த அப்பா வீட்டில் நுழையும்போதே   என் பெயரையும் அண்ணா பெயரையும் சொல்லி வேகமாய் கத்தி அழைத்து , விசாரித்து முடிவில் அப்பாவிடம் பொய் சொல்லமுடியாமல் உண்மையை உளறி முதலும் கடைசியுமாய் ஓர் அறை அன்று அப்பாவிடம் வாங்கினேன்.அன்று முதல் அந்த தோழியின் நட்பும் முறிந்தது(சில காலங்களுக்கு) திருட்டு பழக்கமும் விடைபெற்றது.
                                                                 
           
             என்னை எப்போதும் வெறுப்பேத்தும் தோழி(முட்டைத் திருடி அடி வாங்கியதால் பழி வாங்க எண்ணி) அவள் பிறந்த நாள் அன்று ,அவளுக்கு அவள் மாமா பரிசு கொடுத்தை ரொம்ப பீத்திக்கொண்டாள்!

            அந்த மகிழ்ச்சியை பாழ்படுத்த எண்ணி , நானும் தங்கையும் ஒரு பெட்டியை எடுத்து ,அதில் கோழிக்கொட்டகை மற்றும் ஆட்டுக்கொட்டகையில் உள்ள காய்ந்துபோன கழிவுகளைப்பொறுக்கி பெட்டியில் வைத்து ,அவள் பெயரை எழுதி ,அவள் வீட்டில் முன்னால் வைத்து தலைமறைவாகினோம். 

                                                                   

          மாலையில் (எங்க கெட்ட நேரம்) அவள் அம்மா அந்த பெட்டியைத் திறந்து பார்த்து ,என் அம்மாவை அழைத்து ‘யார் வேலைன்னு தெரியல ,பாருங்க இப்படியா?’என்று முறையிட்டுச் சென்றார்.

             அந்த பெட்டியை நாங்கள் கையில் வைத்திருந்ததை அம்மா ஏற்கவனே பார்த்துவிட்டதால் ,அது நாங்கள் வைத்த சூன்யம் என்று  தெரிய வரவே , அடி பின்னி எடுத்தது மட்டுமல்லாமல் ,அவளிடம் மன்னிப்பும் கேட்க வைத்தார்.அடி ஒரு பக்கம் ,அவமானம் மற்றொரு பக்கம் புடுங்கி தின்றது.

           சிலபல காரணங்களால் பக்கத்துவீட்டுத் தோழி வீட்டிற்கு போகவோ ,பேசவோ கூடாது என்று வீட்டில் ரூல்ஸ் போட்ட பிறகும் ,பள்ளியில் பேசிக்கொள்வோம். வீடு வரை ஒன்றாக வருவோம் , வீட்டை அடைந்ததும் நல்ல பிள்ளையாய் மாறிவிடுவோம்.

           பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் வழியில் கொய்யாக்காய் பறிப்பது வழக்கம். சீனர் வீட்டு மரத்தில் ஒரு ஆள் , காவல் நிற்க ,இன்னொரு ஆள் மரம் ஏறுவோம்.பிறகு அவர் இறங்கி வந்தது ,காவல் காத்தவர் டெர்ன்.

           நான் மரம் ஏறி கொய்யாக்காய் பறித்து விட்டு இறங்கியதும் ,தோழி ஏறினாள். பொதுவாக அவ படிப்பைத் தவிர மற்ற விசயங்களில் என்னை விட கெட்டி. அவள் மரம் ஏறியதை ஒரு பொருட்டாக மதிக்காமல் ,காவல் காப்பதை விட்டுவிட்டு நான் பறித்த கொய்யாக்காய்களை தின்றுக்கொண்டிருக்கும்போது ,மரத்தில் இருந்து அவள் பாய்ந்து விழுந்து ‘ஓடு ஓடு ,சீனன் வந்துட்டான் ‘என்று  அலற ,புத்தகப்பையை எடுத்துக்கொண்டு ,ஓடிய ஓட்டம் இருக்கே?

                                                                     
          ஒலிம்பிக்கில் ஓடி இருந்தால் தங்கப்பதக்கம் நிச்சயம்.அந்த சம்பவத்தைக்கூட நான் வேண்டும் என்றே அவளைச் சீனனிடம் மாட்டிவிட்டதாக  எண்ணிக்கொகொஞ்சகாலம் என்னோடு பேசாமல் இருந்தாள்.

          நான் ,அண்ணா ,என் தோழி(அண்ணாவின் மனவி) அவள் அண்ணா,இரண்டு அக்காள்கள் என எல்லோரும் நாய்க்குட்டியைக் கூட்டிக்கொண்டு ,குட்டைக்கு குளிக்கப்போய் ,நாய் குட்டையில் விழ அதைக்காப்பாற்ற அவள் அண்ணன் போய் விழுந்தார்,அவரைக் காப்பாற்ற அவள் அக்கா போய் விழ,இதைக்கண்ட நாங்கள் அலறி கத்தி ,ஊரையே கூட்டினோம். ஆனால் அந்த அண்ணாவும் அக்காவும் நாய்க்குட்டியும் இறந்து போயினர். 
                                                                     

             அன்று முதல் குறும்புகளைக் குறைத்தோம் .ஆந்த சம்பவத்தில் விழுந்த ஒவ்வொருஅடிதான் இன்றுவரை என் பிள்ளைகளையும் சரி யார் வீட்டுப்பிள்ளையானாலும் நீரில் விளையாடுவது என்றால் நான் அனுமதிக்கவேமாட்டேன்.
                                                       
                                       
          பிறகு காலங்கள் உருண்டோடின ,வளர்ந்தோம் . சிலபழக்கவழக்கங்களை விட்டோம். பிறகு கிராம வாழ்க்கையை மறந்தோம்.தற்பொழுது ந(ர)கர வாழ்க்கையில் ,நம் பிள்ளைகளை எதுவும் செய்யவிடாமல் நம் விருப்பப்படியே செயல்பட வைக்கிறோம்.என்ன பரிதாபம் ? பிள்ளைகள் பக்கத்து வீட்டிற்கு போக விடுவதில்லை, நம் கண் முன்னேதான் விளையாடனும்.படம் பார்த்து விளையாட்டாய் சிகரெட் பிடிப்பதுபோல , சைகையில் செய்தால் கூட அடி கொடுக்கிறோம் ,கெட்ட பழக்கம் வந்து விடும் என்ற பயத்தில்?நாம் அனுபவித்த எதையுமே அவர்கள் ஐம்பது விழுக்காடு கூட அனுபவிக்கவில்லை என்பதுதான் மிக பெரிய உண்மை!






Thursday, 8 August 2013

அத்தனைக்கும் ஆசைப்படு நூலில் சுட்ட சில வரிகள்

என்னைக் கவர்ந்த சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்!

* வெற்றிக்கு உரிமை கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் பிறர் மீது பழி போடுகிறது!

* நன்றாக வாழத் தெரியாதவர்கள்தான்,நன்றாக ஆளத்தெரியாதவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

* அமைதியும் ஆனந்தமும் கடைத்தெருவில் கிடைக்காது,காட்டிலும் கிடைக்காது.அது உங்களுக்குள்ளேயே ஒளிந்திருக்கிறது.

* ஆசையத் துறக்கவேண்டும் என்று விரும்பினால்  அந்த விருப்பமும் ஓர் ஆசைதானே!

* சந்தோஷமில்லாமல் இருப்பது போன்ற மாபெரும் குற்றம் உலகில் வேறில்லை.

*அன்பாய் இருங்கள் ,அமைதி கிடைக்கும் ,அமைதியாய் இருங்கள் ஆனந்தம் கிடைக்கும்.

*எந்தச் சமூகத்தில் பெண்கள் மதிக்கப்படவில்லையோ , அந்தச் சமூகம் ஆரோக்கியமாக இருக்க வாய்ப்பே இல்லை.

*தோல்வியே கூடாது என்றால் ,நீங்கள் விளையாட்டில் ஈடுபடவே தகுதியற்றவர்

*வேதனைகளைச் சுமக்கு பேரரசனைவிட ,ஆனந்த்ததை அனுபவிக்கும் பிச்சைக்காரன் மேல்.

*பக்திக்கும் பாசாங்கிற்கும் இடையில் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது.

*உங்கள் மனம் என்பது உங்களைத் தாண்டிப்போனவர்கள் வீசி நிரப்பிவிட்டுப்போன குப்பைத்தொட்டி.

*இன்னொருவரிடம் இல்லாத ஒன்று உங்களிடம் இருந்தால்தான் சந்தோசப்பட முடியும் என்பது ஒரு நோயல்லவா?

*அச்சத்தினாலும் ஆசையினாலும் வேண்டிக்கொள்வதன் பெயர் பிரார்த்தனை அல்ல!

*தோல்வி என்பது நடந்து முடிந்த விதத்தில் இல்லை, அதை நீங்கள் எப்படி ஏற்கிறீர்கள் என்பதில் இருக்கிறது

*எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் அதன் பின் விளைவுகளையும் வேதனையில்லாமல் சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளத் தயாராயிருந்தால்.

*சந்தேகம் என்பது புத்திசாலித்தனமல்ல.புத்திசாலித்தனம் குறையக் குறையத்தான் மனிதனுக்குச் சந்தேகப்படும் குணம் அதிகமாகும்.

*கடவுள் எங்கோ எட்டாத மலை உச்சியில் இல்லை.உங்களுக்குள் இருக்கிறார்.கவனியுங்கள்

*மனிதனுக்கு அடுத்த கிரகத்தைப்பற்றி ஆயிரம் ஆராய்ச்சிகள் செய்யத் தெரியும்.இந்த பூமியில் சந்தோசமாக வாழ்வது எப்படி என்று மட்டும் தெரியாது.

*கோபத்தையும் காழ்ப்புணர்வையும் வெளிப்படுத்துவதில் மனிதன் முழுத் திறமையாளனாக இருக்கிறான், அன்பையும் பரிவையும் வெளிப்படுத்துவதில் மட்டுமே கற்றுக் குட்டியாகவே இருக்கிறான்.

*ஒரு தாய் குழந்தையிடம் காட்டும் பிரியத்தில் தீவிரம் இருக்கும் ,எதிர்பார்ப்பு இருக்காது.

*காயங்கள் இல்லாமல் கனவு  வேண்டுமானால் காணலாம்,வலிகள் இல்லாமல் வெற்றி காண முடியாது.

* உங்களை நிந்திப்பவரைப் பதிலுக்கு நிந்திக்க ,புத்திசால்லித்தனம் தேவையில்லை.அமைதியாக இருக்கத்தான் அதீத புத்திசாலித்தனம் தேவை.

* சந்தோசம் என்பது விரும்பியதைச் சொந்தமாக்கிக் கொள்வதிலா இருக்கிறது?கிடைத்த பின் அதை அனுபவிப்பதில்தான் இருக்கிறது.

*மூட்டைக்குள் பொன் இருந்தால் என்ன ?புழுதி இருந்தால் என்ன?
கையாளத் தெரியாவிட்டால் இரண்டும் பாரம்தான்.

(இன்னும் நிறைய அந்த நூலில் கொட்டிக்கிடந்தாலும் ,என்னைக்கவர்ந்ததும் ,அதைப்படித்து நான் அதுவாக பாவித்து வரும் சில வரிகளை இங்கே எழுதியுள்ளேன்)
                                                               

Sunday, 4 August 2013

கடவுள் கொடுத்த பரிசு நட்பு ,அந்த நட்புகள் கொடுத்த பரிசுகள்!

                   எனக்கு அவனை/அவளை ரொம்ப பிடிக்கும் ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை’என்று கூறினால் அது ஆழமான நட்புக்கு வழிவிட்டுச்செல்லுமா ?என்றால் கேள்விக்குறிதான்!ஆனால் ஒருவரை பல காரணங்களுக்காக பிடித்துப்போய் விட்டால் அவர்களைத்தான் நா(ன்)ம் நட்பாக ஏற்றுக்கு கொள்வோம்!
                                                                      

                 அந்த வகையில் நான் நட்பாக ஏற்றுக்கொண்ட என் நட்புகள் எனக்கு கொடுத்த பரிசுகளை இன்றைய நட்பு தினத்தில் நினைவு கூர்கிறேன். பல்வேறு பரிசுகள் பலரிடம் இருந்து பெற்றிருந்தாலும் ,இன்னும் நான் பொக்கிசமாக பாதுகாத்துவரும் பரிசுகள் அவை.பள்ளிக்காலத்தில் என் தோழி அடிக்கடி பஜனை வகுப்புக்கு போவாள் .அவள்  பெயர் சிவனேஸ்வரி

                அவள் ஒரு முறை பஜன் வகுப்புக்குச்சென்று எனக்கு ஒரு சின்ன படம் (பர்ஸில் வைக்கும் அளவுக்கு) ஒரு சாய் பாபா படம் கொடுத்தாள் .நான் குரு வழிபாட்டில் தீவிரம் காட்டாதவள் இருப்பினும் என் 13 வயதில்  அவள் கொடுத்த அந்தப்படம் இன்னும் என் பர்ஸில் இருக்கிறது!

                    என் 21 வயது பிறந்தநாளுக்கு என் அருமை நண்பர்கள் ,சிவா,மணி ,இளன் அப்போ அவனுங்க எல்லோரும் படித்துக்கொண்டிந்த நேரம் ,ஆகவே ஒரு புடவை வாங்குவது அந்த காலகட்டத்தில் சிரமம்தான். இருப்பினும் என் பிறந்தநாளுக்கு அவர்கள் வாங்கிகொடுத்த புடவை இன்னும் என் வீட்டு அலமாரியில் பத்திரமாக இருக்கிறது.


                        திருமணமாகி,2000 பொங்கல் அன்று புதிய வீடு குடி புகுந்தேன்.அன்று எனக்கு என்ன இல்லை என்று கேட்டு ,ஒரு மின் கேத்தல் ஒன்றை என் தோழி புஷ்பா பரிசாக கொடுத்தாள்.இன்று வரை அந்த கேத்தலில் நான் வெந்நீர் கொதிக்கவைப்பேன்.

               அண்மையில் கனடாவில் இருந்து அவள் என் வீட்டிற்கு வந்த சமயம்,இதோ உன் கேத்தல் என்று சொல்லி அதில் நீர் கொதிக்க வைத்துக்காப்பி கலந்து கொடுத்தேன்.செல்வி u are great ,still u keep this ?என்று ஆச்சரியப்பட்டு போனாள்.

              அது மட்டுமல்ல புஷ்பாவுக்கு பரிசு கொடுப்பதென்றால் ரொம்பவே பிடிக்கும் .அதிலும் எனக்கு என்றால் எக்ஸ்ட்ராவா செய்வாள். சுமார் மூன்று வருடங்களுக்கு முன் ,இங்கே வந்தவளைக் காணச் சென்றேன். உடனே என்னை அறைக்குள் அழைத்து கையில் ஒரு சிறிய நகைப்பெட்டியைக் கொடுத்தாள் .என்ன்வென்று பார்த்தேன்.

              அவளுடைய தங்க மூக்குத்திகள் 4 மற்றும் ஒரு  s போட்ட தங்க லாக்கேட்.ஐயோ !எனக்கு வேண்டாம் புஷ்பா நான் என்ன மூக்குத்தியா அணிகிறேன் ,வேண்டாம்’என்றேன்.’நீ போடவேண்டாம் ,உன் மகள் இன்னும் கொஞ்ச காலத்தில் அணியும் வயது வரும் ,இதை எனக்கு பிறருக்கு கொடுக்க மனம் இல்லை’என்றாள்.
                                                                 
                அந்த தங்க லாக்கெட்டை எப்போதாவது ஆசை வந்தாள் சங்கிலியில் அணிந்துகொள்வேன்.அதைப்பார்க்கும்போதெல்லாம் ,பாசம் மட்டுமே என் கண்களுக்கு தென்படும்.மற்றுமொரு தோழி இளவரசி ,என் நெருங்கிய தோழி ,எனக்கு பல பரிசுகள் கொடுத்தாலும் , கவிஞர் வைரமுத்துவின் கவிதை தொகுப்பு புத்தகம் ஒன்றை கொடுத்தாள்.

              முதன்முறையாக  நான் படித்த வைரமுத்துவின் கவிதை என்றும் சொல்லலாம்.பலர் அதை இரவல் வாங்கிச் சென்றாலும் ,எப்படியோ திரும்பகேட்டு இன்னும் அலமாரியில் என்னைப்பார்த்துச் சிரிக்குது.
                 
                   கடந்த மூன்று வருட பழக்கத்தில் என் நட்பு எனக்கு சில பரிசுகளை கொரியரில் அனுப்பி வைத்திருந்தார்.அவர் அனுப்பிய உடைகள் ,அணிகலன்கள் ஒரு பக்கம் இருந்தாலும் ,நானாக கேட்டு, அவர் அனுப்பிய ’அத்தனைக்கும் ஆசைப்படு’ மற்றும் ’சாகாவரம்’ புத்தகங்கள் இரண்டையும் பத்திரமாய் பாதுகாத்துவருகிறேன்.சில நண்பர்கள்  வந்தால் இரவல் கேட்பதுவும் ஒன்று,ஒரே வார்த்தையில் ‘நோ’சொல்லிடுவேன்.காரணம் அது கடல் கடந்து வந்த பரிசு!
                                                                          

                   
                       

Tuesday, 23 July 2013

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு....!

                முதல் கணினி அனுபவம் பற்றி எழுத ,என்னை இங்கே பணித்த அன்பு நண்பரும் ,பதிவுலகில் என்னை அறிமுகப்படுத்தி, ‘என் மன வானில்’என்ற ஐடியாவும் கொடுத்து  உருப்படியாக எதையாவது எழுதுங்கள் செல்வி’என்று பதிவர் அங்கீகாரத்தை எங்கள் நட்பின் அடையாளமாக கொடுத்த எனதருமை முகநூல் நண்பர் திரு. கே.ஆர்.விஜயன் அவர்களுக்கு என் நன்றிகள் சமர்ப்பணம்!
                                                                 
                                                          (கொஞ்சம் சிரிங்க விஜி)

                        நண்பர் திரு நாஞ்சில் மனோ அவர்களின் முகநூலில் இந்த தலைப்பில் ஒரு பதிவைப்பார்த்தேன்(படிக்கவில்லை),என்னம்மோ பெரிய இடத்து சமாச்சாரம் என்று லைக் போட்டுவிட்டு நகர்ந்தேன்.நண்பர் விஜயன் தகவல் சொல்லி தொடரச் சொன்னார்.நம்மையும் மதித்து  சொல்றாங்களே(பாவம் பதிவுலகம்?,அதுக்கு வந்த கஷ்டகாலம்),உடனே ‘யெஸ்’ சொல்லி எழுதுகிறேன்.
                           
                           எனது முதல் கணினி அனுபவம் நான்  கடந்த 12 வருடங்கள் வேலை செய்து வந்த matsushita air-cond (macc) ஜப்பானிய நிறுவனத்தில் கிடைக்கப்பெற்றது.ஆம் முதன்முதலில் ஒரு சாதாரண மெசின் ஆப்ரேட்டராக பணிக்குச் சென்றேன்.பிறகு வெளியூர் வேலைக்கெல்லாம் அனுப்பி பதவி உயர்வு கிடைத்து ,அலுவலகத்தில் வேலைக்குச் சென்றேன்.முதன் முதலாக கணினிப் பெட்டியை இயக்க தோழி புஷ்பா(கனடா)கற்றுக்கொடுத்தாள்.
                                                             
     
                    பலவாறு டிரெய்னிங் கொடுத்தாள்.ஒருமுறை எனக்கு ஒரு வேலையைக் கொடுத்து ,என் பின்னால் சக அலுவலக நண்பர்களுடன் உட்கார்ந்துகொண்டு ‘நீ செய் ‘நான் சரிப்பார்க்கிறேன் ‘என்றார்.’ஐயோ !என்னை நிர்வாணமாக்கி நடுரோட்டில் நடக்க விட்டது போல ‘இருந்தது அந்த தருணம்?

               ஆம் நான் டைப் செய்யும் ஒவ்வொன்றும் தவறாக போனது,நான் பதற்றத்தில் தவறு தவறாக பட்டன்களை அழுத்தினேன்(அறவே அனுபவம் இல்லாத அறிவு அது).மிகவும் அன்பாக தைரியம் சொல்லி ,’ஒன்னும் பயப்படாதே செல்வி’யாரும் உன்னைத் திட்ட மாட்டார்கள் என்னை மீறி’என்று என்னை ஊக்குவித்து இன்று நான் நுனிவிரலில் சில கணினி வேலைகள் செய்கிறேன் என்றால்,அதற்கு தோழி புஷ்பாதான் காரணம்.

                பிறகு நன்கு கற்றுத்தேர்ந்தேன்.அந்த அலுவலகத்தில் மிகவும் முக்கிய பொறுப்பும் எனக்கு கொடுக்கப்பட்டது (எல்லாமே உபயம் தோழி புஷ்பா!).அது shipping dept ,ஆகவே அனைத்து வேலைகளும் கணினியில்தான்.சுமார் 8 வருடங்கள் அனுபவம் பெற்றேன்.

             உலகில் உள்ள 5 கண்டங்களுக்கும் குளிர்சாதப்பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் வேலை அது.கூடவே அட்மின் வேலைகள் அனைத்தையும் கற்றுக்கொண்டேன்.microsoft excel செய்வதில் எனக்கென  ஒரு தனித்திறமையை உருவாக்கிக்கொண்டேன்.

               இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு  வேலையை ராஜினாமா செய்தேன்.வீட்டில் உட்கார்ந்தேன்.மூன்று வருடங்கள் ஓடின.வாசனுக்கு மூன்று வயது. அட்மின் வேலை அனுபவத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம் என்று நினைத்து வேலைத் தேடினேன்,அதுவும் அரைநாள் வேலை சிறப்பு என்று கிடைத்தது ஆசிரியை தொழில்!

                 பள்ளியில் சேர்ந்தவுடன் எல்லாமே எழுத்து வடிவில் இருந்தன.கணினியில் அங்கே (பாலர்பள்ளியில்)யாருக்கும் அனுபவமே இல்லை என்று சொல்லலாம்.என் அட்மின் + கணினி  அனுபவம் அங்கே குன்றின் மேல் இட்ட விளக்காய் பரவியது.

                தலைமையாசிரியர் என்னைத் தனிப்பட்ட முறையில் அழைத்து பள்ளி வேலைகள் மட்டுமின்றி அவர் சொந்த வேலைகளையும் செய்ய சொல்வார்.ஆனாலும் எனக்கு என்று கணினி வீட்டில் இல்லை.பிறகு பள்ளி வேலைகள் ஒருபுறம் ,நெட் உலகம் தலைத்தூக்கிய காலம்.எப்படியோ ஒரு கணினி ஓசியில் கிடைத்தது .

                அதை வைத்துதான் முதன்முதலாக முகநூலுக்கு வந்தேன்.ஆனால் பழைய கணினி என்பதால் ஆமைக்கு அண்ணன் போல ரொம்ப மெதுவாக செயல்படும் . நட்பு ஒரு மேசேஜ் போட்டு ரொம்ப நேரம் ஆன பிறகுதான் என் பதில் போகும்.நெட்டும் எனக்கு எதிராய் வேலை செய்யும் ?
                                                                         
                         
                    பிறகு ,என் அருமை பாஸ் என்ற திரு,பாலகிருஸ்ணன் ‘செல்வி என்னிடம் ஒரு லாப்டாப் உண்டு ஆனால் பாட்டரி பிரச்சனை ,எப்போதும் பவர் பூட்டியிருக்கனும்’ என்றார்.கரும்பு தின்னக்கூலியா?

                   உடனே ஓகே சொன்னேன்.அருமையான ‘dell' மடிகணினி.முகநூலில் கூடி சேர்ந்து கும்மி அடிச்சி கைக்குலுக்கி சண்டை,சச்சரவு என்று பெயர்போட்டேன்.ரொம்பவே பழசாகிப்போச்சு ,கடையில் கொடுத்தால் ,கயலாங் கடைக்கு முகவரி கொடுக்கிறானுங்க?இருந்தாலும் வச்சிருக்கிறேன்.

                 அப்படியே காலத்தை ஓட்டினேன்.சில மாதங்களுக்கு முன்  என் பாலர்பள்ளியைத் தேர்ந்தெடுத்து ஒரு புதிய மடிகணினியை கொடுப்பாங்களா?எங்கள் என்.ஜி.ஓ.இப்போ அதன் தயவில்தான் ஆல் இன் ஆல்!
                                                         
                      
                                     ஒரு வழியாக கொடுத்த வேலையைச் செய்த திருப்தியில் ,விடைபெறுகிறேன்.யாரையாவது கோர்த்து விட்டால்தானே தொடர் பதிவுக்கு மரபு?யாரையாவது மாட்டி விடலாம் என யோசித்த வேளையில்......

               இவர்கள் யாராவது கைகொடுப்பார்கள் என்று பெரிதும் நம்புகிறேன்!
மகேந்திரன் பன்னீர்செல்வம்
Venkatasubramanian Sankaranarayanan 
ஸ்கூல் பையன்

            

Sunday, 21 July 2013

அது ஆவியா ?பேயா?

                     இந்த கேள்விக்கு எனக்கு சின்ன பிள்ளைமுதல் சரியான பதில் யாருமே சொல்லவில்லை.அப்பாவைப் பொருத்த வரை ,நாங்கள் பயப்படக்கூடாது என்று ரொம்ப கவனமெடுத்து இந்த கேள்விகளுக்கு பதில் ‘இல்லை’என்றே சொல்வார்.அம்மா அவர் அனுபவப்பட்டதைச் சொல்லுவார் ஆனால் நாங்கள் பயந்தால் அடி கொடுப்பார்.பயத்தை தெளிய வைக்க அறையில் என்னைப்போட்டு அடைத்ததும் உண்டு.அப்பா வழி தாத்தா நிறைய உண்மைப் பேய் கதைகளைச் சொல்லுவார் ஆனால் அவரிடம் பயம் என்று நான் பார்த்ததே இல்லை.ஜப்பானியர் காலத்தில் விடிய விடிய பிணத்துக்கு தோண்டி வைத்திருந்த குழியில் படுத்து உறங்கியதுண்டு என்று தைரியம் சொல்லுவார்.                                  
                         
                             ஆனால் நான் அனுபவப்பட்ட சில விசயங்களைத்தான் இங்கே கிறுக்கியுள்ளேன்.என் 7 வ்யதில் நான் என் தோழி(தற்போது என் அண்ணி) அவள் அண்ணாவும், இரண்டு அக்காள் எல்லோரும் குளிக்கச் சென்றோம்.அந்த அண்ணாவும் ,தோழியின் மூத்த அக்காளும் ,குட்டையில் மூழ்கி இறந்தனர்.எங்கள் கண் முன்னே!(என் வாழ்வில் மறக்க முடியாத துயரம்.அந்த பாதிப்பு இன்னும்கூட என் பிள்ளைகளை நான் மட்டுமே நீச்சல் குளம் மற்றும் கடலில் குளிக்க அழைத்துச் செல்வேன்.)என் தங்கையை அந்த அண்ணா ரொம்ப அன்பாக பார்த்துக்கொள்வார்.அவர்கள் சாவுக்குப்பிறகு பல பேருடைய உயிரைக்குடித்த அந்த குட்டையில் பேய் உலாவுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.நாங்கள் எல்லாம் உறைந்து போய் கிடந்தோம்!                            
                         
                         சிலமாதங்களுக்குப் பிறகு என் வலதுபக்க அண்டைவீட்டுத் தோழியின் அண்ணா  பள்ளி முடிந்து நான் ,என் அண்ணா ,என் தங்கை மற்றும் அந்த பக்கத்துவீட்டு தோழன் எல்லாம் ஒன்றாகத்தான் வீடு வந்து சேர்ந்தோம்.அவன் வந்ததும் மதியம் உறங்கும் பழக்கம் உள்ளவன் .நமக்கு சுட்டுப்போட்டாலும் அன்று முதல் இன்று வரை மதியம் உறக்கம் வராது!நானும் தங்கையும் ,என் வீட்டுப்பின்னால் ,ஒரு குட்டிக்காட்டு அருகே கொய்யா பழம் பறிக்கச் சென்றோம்.பழம் பறித்து விட்டு திரும்போது ஓரு உருவம் எங்களை உரசி ஓடோடிச் சென்றது!யார் என்று திரும்பி பார்த்தால் ,பக்கத்துவீட்டுத் தோழன்.

                      ஏன் அவ்வளவு அவசரமாக ஓடுகிறான்? என்று நாங்களும் அவன் பின்னே ஓடினோம்.அவன் மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தான்.முன்பெல்லாம் திறந்த வெளி டாய்லெட் என்பதால் ,அவன் அங்கேதான் போயிருக்க வேண்டும் என்று நானும் தங்கையும் வீட்டுக்கு வந்தோம்.ஆனாலும் மனசு ஏதோப்போல இருப்பதால் ,பக்கத்துவீட்டுக்குப் போய் ‘தேவியம்மா(தோழனின் அக்கா பெயர்) சுரேஷ் எங்கே?ஏன் எங்களை உரசிட்டு வேகமா ஓடினிச்சி?’என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான்.அங்கே எனக்கு அதிர்ச்சியூட்டும் பதிலும் காட்சியும் இருந்தன?ஆம், தேவியம்மா ‘அவன் பள்ளிக்கூடம் முடிஞ்சி வந்தது முதல் உறங்குறானே?’என்றார்.அடுத்து அவன் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததையும் என் கண்ணால் பார்த்தேன்.தேவியம்மா என் கதையை ஒரு பொருட்டாக கேட்கவே இல்லை.சின்னப்பிள்ளை என்னம்மோ உளறுதுன்னு அவுங்க வேலையைக் கவனிச்சாங்க. ஓடி வந்து வீட்டில் சொன்னேன் ,அம்மா ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.நானும் தங்கையும் ஆடிப்போனோம்.அப்போ அங்கே ஓடியது யார்?
                                                                     
                       
                        அம்மா முன்பு ரப்பர் வெட்டுத்தொழிலாளி.காலை ஆறு மணிக்கு வேலைக்கு போயிடுவாங்க.பிறகுதான் அப்பா வேலைக்கு போவார்.நான் தங்கை ,தம்பி உறங்கும் அறையில் அம்மா இல்லை.நான் கண் விழித்துப்பார்த்தபோது ,அப்போ மின்சாரம் இல்லை,மண்ணெணெய் விளக்கில் ஓர் உருவம் என்னைக் கடந்து சென்றது.ஐயோ! என்னால் கத்தவோ ,அசையவோ முடியவில்லை.ஒரு 2 நிமிடங்களில் அந்த வெள்ளைப் பெண் உருவம் ,பலகை அறையை ஊடுருவி காணாமற்போனது.நான் பிணம்போல கிடந்தேன்!வியர்த்து விருவிருக்க அந்த உருவத்தைப்பார்க்க முடிந்தது ஆனால் கத்த முடியவில்லை?யாரோ வாயை அழுத்திப்பொத்திக்கொண்டதுபோல!சில மணித்துளிகள் கழித்து ,’அப்பா’என அலறினேன்.அப்பா ஒடி வந்து கட்டி அணைத்தார்.’ஏம்மா ,என்னம்மா?என்று பதறினார்.’நான் பார்த்தேன் என்னம்மோ போச்சுப்பா ,நான் பார்த்தேன் ‘என்று கத்தினேன்.தங்கையும் தம்பியும் எழுந்து ,பயத்தில் என்னிடம் வரவே இல்லை.
                                                             
                           
                         அப்பாவும் என்னைத் தேற்றுவதற்கு என்னென்னவோ சொன்னார்.’பேய் இரவில்தான் வரும்மா,இப்போ காலையாகிவிட்டது,வீட்டில் சாமிப்படம் இருக்கு,எப்படி பேய் வரும்?நல்ல பிள்ளை இல்லை ,மறந்துட்டு தூங்குமா’என்று சர்வசாதாரணமாய் கூறிவிட்டு வேலைக்குப் புறப்பட்டார்.அன்று முதல் அந்த அறைக்குள் நான் தனியா போனதாக நினைவே இல்லை.அங்கேயும் என் பேச்சை யாருமே கேட்கவில்லை ,மதிக்கவும் இல்லை.அப்போ நான் பார்த்தது என்ன?
                                                                       
                   
                          திருமணமாகி என் கணவரின் அக்காள் வீட்டில் ஓராண்டு குடியிருந்தேன் .அது மலாய்க்காரர்கள் அதிகம் வாழும் இடம்.என் மாமனார் அந்த வீட்டில் இருந்துதான் நோய்வாய்ப்பட்டு வேறு இடத்தில் போய் இறந்தார்.மலாய்க்காரர்கள் வாழும் பகுதியில் ‘ஜின்’என்று சொல்லும் ஒருவகைப்பேயை வளர்ப்பார்கள் என்று இங்கே அதிகம் கேள்விப்பட்டதுண்டு.நான் இருந்த அந்த வீட்டிலும் மூன்று தலை மனிதன் முன்பு வந்துபோனதை என் நாத்தனாரின் மகள் பார்த்து பயந்து போனதாக தகவல்கள் கேள்விப்பட்டதுண்டு!

                     இந்த கன்றாவியை எல்லாம் ஏன் என்னிடம் சொல்லுவாங்களோ தெரியாது?நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயம் ,ஒருநாள் வேலைக்குப்போகாமல் மதியம் அறையில் படுத்திருந்தேன்.வீட்டில் யாருமே இல்லை ,மதியம் இரண்டு மணி இருக்கும் ,திடிரென சமையலறையில் ஓர் வேகமான சத்தம்.ஆப்படிக்கரண்டியை ஓங்கி சட்டியில் அடித்தால் கேட்குமே அந்த சத்தம் .என்னால் நன்கு உணரமுடிந்தது.எப்பேர்பட்ட பயத்தின் உச்சக்கட்டத்திலும் திடிரென ஒரு தைரியம் சில நொடிகளில் வந்து போகும்!அது எனக்கு வந்தது.கதைவைத் திறந்து ,சட்டியை ஆராய்ச்சி செய்தேன்,அந்த சட்டி மேல் இருந்த ஆப்படிக்கரண்டியில் இருந்து  சொட்டு சொட்டாக எண்ணெய் ரொம்ப நேரமாய் ஒழுகிக்கொண்டிருப்பது  ஒழுகியது?அப்போ அது யார் வேலை?
                                                                 
                     

                    நான் தற்போது குடியிருக்கும் வீட்டிற்கு வந்த புதிதில் ,என் அண்டைவீட்டில் ஓர் இறப்பு.நான் வந்த புதிது என்பதால் எனக்கு பழக்கம் இல்லாததாலும்  நான் போகவில்லை.ஓர் இந்திய குடும்பம் அது.யார் இறந்தார் என்று கூட நான் கேட்டுக்கொள்ளவில்லை காரணம் நான் புதிய வீடு குடி வந்த டென்சன் ,குழந்தைபெற்று இரண்டுமாதங்கள் ,அந்த டென்சன் மறுபுறம்.ஓய்வில்லாத வாழ்க்கை.சில மாதங்கள் கழித்து ,அந்த குடும்பம் அந்த வீட்டைக் காலி பண்ணி சென்றார்கள்.கொஞ்ச காலம் கழித்து ,ஒரு சீனப்பெண்மணி தன் குடும்பத்தோடு குடியேறினார்.எங்கள் ப்ளாக்கில் இருக்கும் அனைத்து வீடுகளின் தபால் பெட்டிகளும் அந்த வீட்டு கதவுக்கு எதிர்புறம்தான் இருக்கும்.ஆகவே போகும்போதும் வரும்போது ,அந்த சீனப்பெண்மணியைப்பார்த்து சிரிப்பேன்.
                                                               

                   ஒருமுறை அந்த சீனப்பெண் ஓடோடி வந்து என்னிடம் அரைகுறை மலாய்மொழியில் ‘தங்கச்சி என் வீட்டில் முன்பு யாரும் இறந்து போனார்களா ?என்று பதற்றமாய் கேட்டார்.’நானும் யோசித்து ‘ஆமாம் முன்பு யாரோ இறந்து போனாங்க ,பிறகுதான் அந்த குடும்பம் காலி பண்ணி போனதாக கூறினேன்.’ஏன் ஆண்ட்டி என்னாச்சு?என்றேன்.’அந்த ஆண்ட்டி சொன்ன விசயம் எனக்கு தலைச்சுற்றி ,ஒருகணம் மூர்ச்சையானேன்.’நேற்று இரவு என் மகள் டாய்லெட் போய் அறைக்குள் நுழையும்போது .அவள் அறையிலிருந்து ஓர் உருவம் ,கூன் விழுந்த கிழவன் உருவம் நடக்க முடியாமல் அவளைக் கடந்துபோனதாம்???’.ஐயோ எனக்கு இரத்தமே உறஞ்சிப்போனது.இதை உறுதிப்படுத்த என் அண்டைவீட்டுத் தோழி (எனக்கு முன்பே அங்கே வசிப்பவர்) ,அவளிடம் ஓடிப்போய் ,அந்த வீட்டில் முன்பு யார் இறந்து போனது?என்று கேட்டேன்.ஒரு வயதான கூன் விழுந்த தாத்தா ‘என்றதும் என் தைரியத்துல தீயை வைக்க?என்று ஆடிப்போனேன்.
                                                                         
             
                       அன்று முதல் நான் தபால் பெட்டிக்கு போகவே மாட்டேன்.என் கணவருக்கு அந்த வேலை ,இல்லாவிட்டால் யாரும் பசங்க அந்தப்பக்கம் போனால் உதவி கேட்பேன்.சிறிது காலம் கழித்து அந்த சீன ஆண்ட்டியும் அந்த வீட்டைவிட்டு போனார்கள்.எனக்கும் பைய பைய பயம் குறைந்தது.இருந்தாலும் இரவு 7 மணிக்கு மேல் அந்த பக்கம் போகவே மாட்டேன்.இன்னும் கூட சிலவேளைகளில் என் வீட்டில் இரவில் சில நேரங்களில் உறக்கம் இல்லாமல் தவிக்கும்ப்போது வெளியே வந்து டிவியில் பாடல்கள் கேட்பேன்.அந்த சமயம் யாரோ ஃப்ரிட்ஜைத் திறப்ப்துபோல தோணும்! திடிரென யாரோ ஓடுவதுபோல தோணும்? சில நொடிகள் மூச்சு நின்று போவதுபோல இருக்கும் ,இருப்பினும் என் அப்பா சொல்லி சென்றது ‘வீட்டில் சாமிப்படம் இருக்குதானே??உனக்கு சாமி பிடிக்கும்தானே?அபப்டின்னா உன்னை எதுவும்  நெருங்கமுடியுமா?  இந்த வரிகள்தான் இந்த மோசமான  பயந்தாகொள்ளிக்கு பூஸ்ட்!
                                                                   

Tuesday, 25 June 2013

என்னை ஏமாற்றிய சில தருணங்கள்!


                   சின்ன பிள்ளை முதலே என்னைப்பற்றி என் அப்பா சொல்லும் ஒன்று நான் ரொம்ப ராசியான பிள்ளையாம்.ஆம் நான் பிறந்த சமயம் அப்பாவுக்கு லாட்டரியில் பணம் கிடைத்ததாம்.மேலும் நான் வீட்டில் ஐந்தாவது பெண் பிள்ளையாம் .மலேசியாவில் அபப்டி ஒரு அப்பட்டமான நம்பிக்கைகூட உண்டு .ஐந்தாவது பெண் பிள்ளை என்றால் அவள் குடி போகும் வீட்டுக்கு அதிர்ஷ்டம் என்று.அந்த அடிப்படையில் கூட பலர் பெண் கேட்டு திருமணம் செய்து கொள்வதை கண் கூடாக காண முடியும்.ஆனால் என்னைப்பற்றி நான் நினைக்கும் ஒன்று எப்போதுமே என்  கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது!                                                                                
                   அதற்கு ஒரு காரணமும் உண்டு.இல்லை பல காரணங்கள் உண்டு.சின்ன வயசுல ,நாங்கள் வறுமை குடும்பத்தில் இருந்து வந்தோம் என்பதை நான் பல இடங்களில் சொல்லியதுண்டு.நினைத்த மாத்திரத்தில் எங்கேயும் போகமுடியது ,வாங்கி சாப்பிடமுடியாது.ஷாப்பிங் இல்லை.விடுமுறைக்கு மட்டுமே அப்பா ,அவ்வா பாட்டி வீட்டுக்கு அழைத்து போவார்.அதுவும் பணம் இருந்தால்.ஒருமுறை நவம்பர் மாதம் ,அப்பா அறிவிப்பு செய்தார்.’சரி அடுத்தவாரம் பாட்டி வீட்டுக்கு போகலாம்’என்று.ஐயோ எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .பக்கத்துவீட்டு தோழி ஒருநாள் முன்னதாகத்தான் .ரொம்ப பெருமையா ‘நாங்கள் எங்க அத்தை வீட்டுக்கு போகிறோம்,நீங்கதான் வீட்டுலே உக்காந்து இருப்பிங்க’என்று.அப்போ அதுவெல்லாம் மானப்பிரச்சனையாச்சே!                                                                          
                 அன்று காலையிலே எழுந்து (அம்மா எழுப்பாமல்) வேலைகளைச் செய்தோம்.பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய டிராவல் பேக்கில் எங்கள் துணிகளையெல்லாம் பேக் பண்ணினோம்.விடுமுறைக்கு முன்பு ஆசிரியர் ‘யாரெல்லாம் தூரமா பயணம் செய்கிறீர்களோ,ஏதாவது கதைப்புத்தகம் கையோடு கொண்டு போங்கள்’என்று சொன்னதால் ,ஒரு பேக்கில் கதைப்புத்தகங்கள்.பாட்டி வீடு ஜோகூரில்.ஆகவே பயணம் சுமார் 5 மணி நேரம்.அம்மா எங்களின் எக்சைட்டிங் பார்த்து’ஏய் ஒழுங்கா இருங்க,இன்னும் அப்பா முடிவு பண்ணல,அப்பா சம்பளம் கிடைத்தால்தான் போகலாம் ‘என்றார்.
                 ஆனால் நாமதான் யார் சொன்னாலும் கேட்க மாட்டோமே?காதிலே போட்டுக்கொள்ளாமல் ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்தோம்.அப்பா வரும் நேரம் ,குளிச்சி கிளம்பி உட்கார்ந்திருந்தோம்.அப்பா வந்தார் ஆனால் அவர் எதிர்பார்க்கவில்லை நாங்கள் இப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று.வீடு வந்தது அப்பா ரொம்ப சாதாரணமாய் ‘இன்னும் சம்பளம் போடல,முதலாளி வெளியூர் போயிட்டான் ,அடுத்த வாரம்தான் வருவான்’என்று.மேலும் அவன் காரும் நமக்கு கிடைக்காது ‘என்றார்.என் இதயம் சுக்கு நூறாய் வெடித்தது.எல்லோரும் நார்மலாய் இருந்தனர் ஆனால் என்னால் அப்படி முடியல காரணம் நான் தான் ஏற்பாட்டுக்குழு தலைவியாச்சே?அந்த ஏமாற்றம் என்னை வெகுவாய் வாட்டியது காரணம் அடுத்த வாரம் பள்ளி விடுமுறை முடியும் வாரமாச்சே?                                                                                
                   12 வயதில் தலைமை மாணவி என்பது மிக முக்கிய பொறுப்பும் பதவியும். ஆக என்னைத் தேர்ந்தெடுக்க எல்லா ஆயத்தங்களும் நடந்துகொண்டிருந்தன.பரிட்சையில் முதல் நிலையில் வருபவர்களுக்குதான் அந்த வாய்ப்பு பிரகாசம் ஆனால் அதில் இன்னுமொரு தகுதி அடக்கம் என்பது பிறகுதான் எனக்கு தெரியவந்தது.என் வகுப்பில் என்னுடன் சேர்த்து என் தோழிகள் இரண்டு பேர் முதல் ,இரண்டாம்,மூன்றாம் நிலையில் தேர்வில் வருவது வழக்கம்.அந்த வகையில் நானும் இன்னொரு தோழியும் முதல் நிலை ,சோ இரண்டாம் இடம் இல்லை,மூன்றாம் நிலையில் இன்னொரு தோழி.என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.முடிசூட்டு விழாவுக்கு தயாராகும் இளவரசி போல நான் தயாராகினேன்.என்னை அந்த வருட கட்டொழுங்கு ஆசிரியர் வர சொன்னதாக தகவல்.என் கனவுகள் எல்லாம் என் கண் முன்னே!ஓடினேன்.படி ஏறி ஆபிசுக்குள் போனேன்.                                                                            
                அங்கே வகுப்பாசிரியர்,கட்டொழுங்கு ஆசிரியர்,தலைமையாசிரியர் என்று எல்லோரும் ஏதோ ஒரு போஸ்ட்மார்ட்டம் பண்ணிய பிறகு களைச்சிபோன மாதிரி இருந்தனர்.என் வகுப்பாசிரியர் என்னை அழைத்து 'செல்வி ஐயா உன்னிடம் ஒன்னு சொல்லுவார்,கேட்டுவிட்டு வகுப்புக்கு வா’என்று விடபெற்றார்.என்ன ஒரே புதிரா இருக்கே?மேலும் அதிர்ச்சி என்னவென்றால் ,என் தோழிகள் இருவரும் அங்கே முகத்தில் மகிழ்ச்சியுடம் காணப்பட்டனர்.கட்டொழுங்கு ஆசிரியர் ’செல்வி ஒரு விசயம்மா ,இல்லை தலைமை மாணவியாக உன்னை தேர்ந்தெடுக்க முடியவில்லை,அதுக்கு காரணம் நீ ரொம்ப குள்ளமாக இருக்கிறாய்!மாணவர்கள் பயப்படும் அளவுக்கு உன் உடல் வாகு இல்லை,ஒரு கம்பீரம் இல்லை ,ஆகவேதான் இந்த பிள்ளைகளை எடுத்துவிட்டோம்!என் தலையில் ஒரு கல்லைப்போட்டதுபோல் இருந்தது?அப்போவே அழுகையை மறைக்கும் திராணி எங்களுக்கு அதிகம் இருந்தது என்றே சொல்லலாம்.
எந்த உறுதியும் இல்லாமல் வீட்டில் எல்லோரிடமும் சொல்லிட்டோமே?எப்படி ?பக்கத்து வீட்டு தோழியை எங்களால் கவிழ்க்க முடிந்த ஒரே ஆயுதம் படிப்புதான்.ஆனால் நான் ஏமாந்துட்டேனே??                                                                                
                            என் அம்மாவின் உடன் பிறந்த அண்ணாவும் தம்பிகளும் அரசு அதிகாரிகள்.அம்மா திருமணம் செய்து வந்த பிறகு ரொம்ப நாட்களுக்கு அம்மாவை வந்து பார்த்ததே இல்லையாம் .ஒன்று தாய்மாமான் நிறைய பொறுப்புகள் கொண்டவர்.மற்றொன்று முன்பெல்லாம் ஜோகூரில் இருந்து கோலாலும்பூர் வருவது என்றால் செலவு அதிகமாகும்.இன்னொன்று அம்மா வசதியில்லாத குடும்பத்தில் வாழ்ந்து வந்ததால் ,அம்மாவின் பிறந்த வீட்டில் யாரும் வந்து தொந்தரவு கொடுக்கமாட்டார்களாம்.
நாங்கள் எல்லாம் தலையெடுத்து ஓரளவு வசதி வந்த பிறகுதான் எல்லோரும் வாருவாங்க ,கலந்து கொள்வார்கள்.அந்த வகையில் எனக்கு 13 வயசு இருக்கும் .மூத்த தாய்மாமன் கோலாலும்பூர் வருவதாக தகவல் .அதில் இன்னுமொரு மகிழ்ச்சி ஐயிட்டம் ,அவர் எங்கள் வீட்டில் இரவு  உணவுக்கு வந்து விட்டு பிறகு மீண்டும் ஜோகூர் கிளம்புவதாக கேள்வி.ஏனோ தெரியாது,அவர்கள் எங்களுடன் குளோசாக இருந்தது கிடையாது ஆனால் பாசம் அதிகம் ,அதுக்கு ஒரு காரணம் அப்பா அவர்களிடம் வைத்திருந்த மரியாதை.ரொம்பெ பெருமையாக சொல்லுவார்.அதைக்கேட்டு கேட்டு எங்களுக்கும் எங்கள் தாய்மாமன் மீது அதிக அன்பு.                                                                                  
                 அம்மா மாமா வரவை எதிர்பார்த்து விதவிதமாக சமைத்தார்.மாமா தமிழைவிட ஆங்கிலம் ,மலையாளம் தான் அதிகம் பேசுவார்.சோ நானும் என் தங்கையும் தாய்மாமா மனதில் இடம்பிடிக்க எண்ணி ,எப்படியோ எங்கள் வீட்டில் கிடந்த ‘ரெபிடெக்ஸ் ஆங்கிலம் பயிலுங்கள்’புத்தகத்தில் இருந்து சில முக்கிய வசனங்களை மனப்பாடம் செய்தோ.மாயை வாழ்க்கைக்கு அப்படி ஓர் ஆசை அந்த சமயம். அதிலும் நான் ஒருவாரம் முன்பே எங்கள் அறையில் யாருக்கும் தெரியாமல் பயிற்சி செய்வேன்.மாமா வந்தால் எப்படி வரவேற்பது?என்ன சொல்லி கைகுலுக்குவது?அவர் ஏதும் வாங்கி வந்தால் எப்படி நன்றி சொல்வது?அவர் வீட்டுக்கு போய் ‘அந்த வீட்டில் செல்வி ரொம்ப ஸ்மார்ட் ‘என்று சர்டிஃபிப்கேட் கொடுக்கணும் என்று ரொம்பவே உழைத்தேன் ஆனால் அறைக்குள்.அந்த நாளும் வந்தது .வழிமேல் விழிவைத்து காத்திருந்ந்தோம் ,போற வர கார்களையெல்லாம் , எட்டி எட்டி பார்ப்போம்!.வீட்டில்  போன் இல்லை.பக்கத்து வீட்டு தோழி கொஞ்சம் வசதியானவள் .அப்போவே அவ வீட்டில் போன் இருந்தது.ஆபத்து அவசரத்துக்கு அவ வீட்டு போன் நம்பரைத்தான் உறவினர்களிடம் கொடுத்து வைப்பது வழக்கம்.இரவு அவள் வீட்டில் இருந்து ஒரு குரல் ;ஏங்க ராதா அம்மா(என் அம்மாவின் பட்டப்பெயர்) போன் ,யாரோ கூப்பிடறாங்க’அம்மாவும் போய் பேசிட்டு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் வந்தாங்க.அப்பா என்ன என கேட்டார்.’அண்ணா வரலையாம் ,அவர் கோர்ஸ் முடிந்து அரசு அதிகாரிகளுடன் காரில் போவதால் சொந்த வேலைக்காக எங்கேயும் போக அனுமதியில்லையாம்’என்று முடித்தார். ஐயோ !மாமா வரலியா?வரலியா? நாங்கள் ஏழுபேரும் கோரசாக கேட்ட கேள்வி ?சரி வாங்க நாம சாப்பிடலாம்’என்று எல்லோரும் இரவு உணவுக்கு ரெடி .ஏனோ எனக்கு மட்டும் சோறு வயிற்றுக்குள் போக அடம்பிடித்தது?                                                                          
            முன்பெல்லாம் எங்களுக்கு என்று சட்டை வாங்குவது தீபாவளிக்கு மட்டுமே.மற்ற நாட்களில் அக்கா இருவர் மற்றும் அத்தை போட்டு பாதி நொந்துபோன உடைகள்தான் எங்களுக்கு.அப்படி இல்லாவிட்டால் ,என் அத்தை ஒரு பணக்கார அம்மா வீட்டில் வேலை செய்து வந்தார்.சிங்கையில் பெரிய உத்தியோகத்தில் அந்த அம்மாவின் கணவர் வேலை செய்துவந்தார்.அவுங்க வீட்டில் வாங்கி அவுங்க பிள்ளைகளுக்கு பிடிக்காத உடைகள் அல்லது அதுங்க போட்ட சில அழகான உடைகளை கொண்டு வந்து அத்தை கொடுப்பாங்க.அதில் போடும்படியான உடைகளைத் தேர்ந்தெடுத்து அம்மா துவைத்து கொடுப்பாங்க.அந்த வகையில் அந்த சீசனில் ஒரு அழகான பூ போட்ட கவுன் famous!அப்படி இப்படின்னு எங்களுக்கு அந்த கவுன் சிக்கியது.எனக்கும் தங்கைக்கும் சண்டை .நான் அவளை  வென்று கையிலிருந்து  புடுங்கி எடுத்து போய் ஒளிவச்சிட்டேன்.ஆனால் தவறான இடத்தில் வைத்துவிட்டேன்!துணிகளை வீசும் ஒரு பையில் திணித்து வைத்தேன்.                                                                                  
                   எப்போடா எங்கேயும் போவோம் ? அந்த கவுன் போட்டு போகலாமே ?என் ஆசை ,கனவு!இரண்டு மூன்று நாட்கள் கழித்து ,சித்தப்பா வந்து .அப்பாவிடம் ‘அண்ணா செல்வியையும் சுகுணாவையும் நாளை என் முதலாளி சீனர் வீட்டில் விருந்துக்கு கூட்டி போகிறேன் .ரெடியா இருக்க சொல்லுங்கள்’என்றார்.ஐயோ !சீன வீட்டில்  விருந்து என்றால் ,எப்படி போகனும்?என் கவுனுக்கு வேலை வந்துவிட்டது.குளித்துவிட்டு ஓடிப்போய் அந்த கவுன் இருந்த பையைத் தேடினேன்.பையைக்காணவில்லை ‘அம்மா எங்கே அந்த பையைக் காணோம்?என்று அலறினேன்.அம்மாவும் ‘அது வீசவேண்டிய துணிதானே காலையிலே உங்கப்பா கொண்டு போய் ஆற்றில வீச சொல்லிட்டேன்!முன்பெல்லாம் குப்ப்பைகளை ஆற்றில்தானே வீசுவோம்?ஐயோ!!!ஏன் ஏன் இறைவன் எனக்கு மட்டும் இப்படி?ஓவென அழுதேன் .அம்மா ‘ஏன் என்னாச்சு’என்று அங்கிருந்து கத்தினார்.என் சட்டை அதுலத்தான் வச்சேன்மா’ஏன் வீசினிங்க? ‘.எனக்கு என்ன தெரியும்?நீ என் கிட்ட சொன்னியா?எனக்கு பதில் சொல்ல பொறுமை இல்லை.என் தங்கையும் ஸ்பாட்டுக்கு வந்து ‘என்னை ஏமாத்தி புடுங்கிட்டு ஓடினாய்?வெரி வெரி குட்’என்று சொல்ல ,அதுதான் எனக்கு இன்னும் அழுகாச்சி அழுகாச்சியா வந்துச்சி.’நான் எங்கேயும் போகல,எனக்கு சட்டை இல்லைன்னு ‘ பழைய சட்டையைப்போடு ,கவிழ்ந்து படுத்து அழுதேன்.
’போகாட்டால் பரவாயில்லை அண்ணாவும் பாப்பாவும் போகட்டும்’என்று அம்மா என் உணர்வை மதிக்கவே இல்லை!                                                                              
                  அந்த ஏமாற்றங்கள் அப்படியே போகாமல் இன்னமும் விமானம் ஏறி வந்து ஏமாத்திக்கொண்டுதா இருக்கு!ஆனாலும் ஏதோ கொஞ்சம் கொஞ்சமாய் பக்குவப்பட்டு விட்டதால் ,எதிர்பார்ப்புகளைக் குறைத்து ஏமாற்றங்களை அலட்சியம் செய்ய பழகிக்கொண்டோம்!எதிர்ப்பார்ப்புகளை குறைத்தால் ஏமாற்றமும் குறையும் என்று அன்றைக்கே யாரும் சொல்லவும் இல்லை.அப்படி ஒன்றைக் கற்றுக்கொடுக்க முகநூலும் இல்லையே!
           

Sunday, 16 June 2013

யாரிடமோ சொல்வதை ,இறைவனிடம் சொல்லுங்கள்!

                        இறைவனிடம் கையேந்துங்கள்,அவன் இல்லையென்று சொல்வதில்லை.ஆனால் நாம்தான் அவனிடம் சொல்வதை விட்டு நம் பிரச்சனைகளை எல்லோரிடமும் கூறிக்குறைப்பட்டுக்கொள்கிறோம்.யாராவது ஆறுதலாய் ஏதும் சொல்வார்களோ,அல்லது நாம் செய்த தவற்றினை நியாயப்படுத்தி சொல்வார்களா என்றெல்லாம் ஒரு எதிர்பார்ப்பும் உண்டு.என்ன செய்ய நாமும் சராசரி மனுச ஜென்மம் ஆயிற்றே?

                 எங்கள் கிராமத்தில்  என் அண்டைவீட்டு குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம்.சுமார் பத்து வருடங்களுக்கு முன் ,(வாணி)அவள் வீட்டில் அவள் ஒரே பெண்பிள்ளை.அழகுக்கு பஞ்சமே இல்லை.வடநாட்டுப்பெண்ணைப்போல வெள்ளைத்தோல் ,சாந்த குணம் ,நல்ல பெற்றோர்கள் ,இரண்டு சகோதரர்கள் என்ற அருமையான குடும்பம்.18 வயதுக்கு பிறகு ,காதல் வயப்பட்டாள்,திருமண ஏற்பாடுகள்மும்முரமாய்  நடந்துகொண்டிருக்கும் வேளையில் அந்த அதிர்ச்சி செய்தி எங்கள் கிராமத்தையே ஒரு கலக்குகலக்கியது.அவளுடைய மாப்பிள்ளையை போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக போலிசார் கைது செய்தனர்!
                                                                               
                       பிறகென்ன ?கோர்ட் ,கேஸ் ,குற்றம் என்று மாப்பிள்ளைக்கோலத்தில் இருக்கவேண்டியவன்  கைதியாக கம்பிக்கு பின்னால் சென்றான்.நண்பரின் காரை அவன் ஓட்டிச்சென்றதால் ,அது அவன் செய்த குற்றம் இல்லை என்று தீர்ர்ப்பானது ,இருந்தும் அவனுக்கும் அதில் பங்கு உண்டு என்று  அவனை நாடு கடத்த கோர்ட் அனுமதி கொடுத்தது.கடாரம் கொண்ட கெடா மாநிலத்தின் எல்லைக்கு அனுப்பபட்டான்.இங்கே வாணி அழுது புரண்டாள்.இருட்டு அறைக்குள் உண்ணாவிரதமிருந்தாள்.குடும்பமே அதிர்ச்சிக்குள்ளானது.நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடைபெறவில்லை.கேட்பவருக்கெல்லாம் பதில் சொல்லி மாளவில்லை.அவமானம் ஒருபக்கம் ,வேதனை மறுபக்கம்.
                                                                             
                     ’இனியும் என்னால் பிரிந்து வாழ முடியாது’ என்று  நீதிமன்ற அனுமதியுடன் வாணி ,அவன் இருந்த கடாரம் மாநிலத்துக்கே சென்றாள்.ராமன் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று திருமணமும் சில முக்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்தது.வருடங்கள் உருண்டோடின,கர்ப்பம் ஆனாள்.பெண் குழந்தைப்பிறந்தது.தாய் வீட்டுக்கு வந்தாள்.அவனுடைய தண்டனைக்காலமும் முடிவு பெற்றது.அவனும் அவளோடு வந்து சேர்ந்தான்!கொஞ்சகாலம் உருப்படியாய் இருந்தவன் சிலநாட்கள் கழித்து மீண்டும் ஒரு தவற்றைச் செய்தான்.அவன் தாயிடம் யாரோ வட்டிக்குப் பணம் வாங்கி விட்டு ஏமாற்றியதால் ஆத்திரம் அடைந்தவன் ,அவனை சக நண்பர்களோடு சேர்ந்த்து அடித்துக் கொலை செய்தான்!மீண்டும் சிறைவாசம்!

                      பிறந்த குழந்தை அப்பன் முகம் தெரியாமல் வளர்ந்தாள்.கிராமத்து வீட்டை விட்டு அவர்களும் வெளியேறினர்.அவள் மனம் வெறுத்துப்போனாள்.குழந்தையைக் குடும்பத்தில் எந்த குறையுமின்றி வளர்த்தனர்.அவள் சோகங்களை மறைக்க ,மறக்க நினைத்து வேலைக்குச் சென்றாள்.கொஞ்சம் கொஞ்சமாய் மாறினாள்.அவள் தாய் சதா அழுதுகொண்டே இருப்பார்.என் சோகங்களை இறைவனிடமசொல்கிறேன்.அவன் என்றாவது கண்ணைத் திறந்து பார்ப்பான் ’என்று நித்தம் அழுவார்.’என் தங்கையின் நிலைமை இப்படியிருக்க நான் எங்கே திருமணம் செய்வது ?என்று ஒரு சகோதரன் பிடிவாதமாய் இருந்தான்.அவள் அழகுக்கு எத்தனையோ வரன் வந்தது ஆனாலும் பெண் பிள்ளையை நினைத்து அவள் மறுத்தாள்.வருடங்கள் ஓடின ,அவன் விடுதலையாகி வந்தான் ,இவளும் அவனுக்கு விடுதலைக்கொடுத்தாள் ,ஆம் விவாகரத்து பெற விரும்பினாள்.அவன் வீட்டாரோ உடனே அவனுக்கு பெண் பார்க்க தொடங்கினர்.
                                                                     
                                                              
                 கிராமத்து வீட்டை விட்டு வெளியேறிய வாணி குடும்பம் நான் திருமணம் செய்து தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் வந்து குடியேறினர்.தினமும் அவர்கள் குடும்பத்தைப்போய் பார்ப்பேன்.ஆறுதல் சொல்வேன் .வாணியின் தாயும் இடைவிடாது சிவபூசைகள் செய்து வந்தார்.பல வரன்கள் வந்தாலும் ,பிள்ளையின் எதிர்காலம் குறித்து ஏற்க மறுத்தாள் வாணி.ஆனாள்..........ஒரு நல்ல குடும்ப பையன் (அவனும் எங்கள் கிராமமே!) வாணிக்கு வரனாக அமைந்தான்.அவனுக்கும் அவளைப்போலவே வாழ்க்கை.அவன் மனைவி அவனை விட்டு விட்டு வேறு யாருடனோ ஓடிவிட்டாள்.அவனும் வாழ்க்கையை வெறுத்தவன்.அவனுக்கு தெரியாமல் நண்பர்கள் வாணியை அவனுக்கு கேட்க ,அவன் மறுத்தான்.வாணியும் மறுத்தாள்.சந்தர்ப்ப சூழ்நிலை ஒருமுறை இருவரும் சந்தித்துக்கொள்ள ,அவன் வாணியின் அழகிலும் பண்பிலும்  மயங்கி ,பெற்றோர்களோடு பெண் கேட்க வந்தான்.வாணி பயந்தாள்,இன்னொரு வாழ்க்கையா?குழம்பினாள்.குடும்பம் கூடி ‘நன்கு தெரிந்த குடும்பம் ,அவன் பெற்றோர்கள் அருமையானவர்கள் ‘என்றெல்லாம் அவள் மனதை மாற்றினர்.வாணி மனம் மாறினாள்!
                                                                                  

                  பையனின் பெற்றோர்கள் வானியின் மகளை ‘எங்கள் பேத்தி இத்தனை நாட்கள் உங்களோடு வாழ்ந்துவிட்டாள்,இப்போ எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் ,நாங்களும் தாத்தா பாட்டியாக இருக்க ’என்று வாணியின் பிள்ளையை விடுமுறை நாட்களில் அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.வாணியின் பெற்றோரின் பாதி பாரம் இறங்கியது.பேத்திக்கு நல்ல குடும்பம் ஒன்றூ தங்களை அடுத்து கிடைத்ததை எண்ணி கண் கலங்கினர்.வாணியும் அவனும்  பழக ஆரம்பித்தனர்.மனம் ஒத்து போனது .பத்து வருடங்கள் கழித்து வாணியின் வீட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் மிகவும் முறையாக ,திருப்தியாக ,எந்த சலசலப்பும் இல்லாமல் நடந்தேறியது.விருந்துபசரிப்பில் மாப்பிள்ளை எல்லோர் முன்னிலையிலும் ;’எங்களுக்கு நேற்று திருமணம் ஆனது ஆனால் இன்று எனக்கு பத்து வயதில் பெண் குழந்தை இருக்கிறாள் ‘என்று இரு வீட்டுப்பெரியார்கள் முன்னிலையிலும் வாணியின் மகளைத் தத்தெடுத்தார்.அந்த கண் கொள்ளாக்காட்சியைக் கண்ட அனைவரும் கண்கலங்கினர்.வாணியின் அம்மா எங்களிடம் சொன்ன வார்த்தைகள் ‘இறைவன் என்னை மன உளைச்சலில் இருந்தும் எங்கள் பாரங்களையும் இறக்கி வைக்கவும் சுமார் பத்து வருடங்கள் எடுத்துக்கொண்டான் ,இருந்தாலும் இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமைய அந்த பத்து வருடங்கள் எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை காரணம் நான் அவனோடு இத்தனை வருடங்களாய் பிடிவாதமாய் கூறிவந்ததை அவன் செவிமடுத்து வந்துள்ளானே’என்று ஆனந்த கண்ணீர் சிந்த ‘என் அப்பன் கூத்த பிரானை நான் ஒரு கணம் திரும்பிபார்க்கிறேன்!ஏதோ சினிமா பார்த்ததுபோன்ற உணர்வுடன் வீடு வந்து சேர்ந்தேன்.