Tuesday, 18 March 2014

இது சாபமா?அல்லது இயற்கை சீற்றமா?

              சுவர்ண பூமி! மலேசிய திருநாடு !வந்தாரை வாழவைக்கும் பசுமை நாடு!அதுதான் எங்கள் மலேசிய திருநாடு!உலக கரைவரைப்படத்தில் பிறநாடுகளோடு , எங்களை ஒப்பிட்டால் நாங்கள் ஒரு புள்ளியே!’திரைக்கடல் ஓடியும்  திரவியம் தேடு ’என்று தமிழ் மொழியில் மட்டும்தான் சொல்லிவைத்தார்களா அல்லது வேற்றுமொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளனரா ?என்று கேட்கும் அளவுக்கு வெளிநாட்டினர் இங்கே பஞ்சம் பொழைக்க வந்துவிட்டனர். இந்தோனேசியர்,வங்காளதேசி,பாகிஸ்தானி, நேப்பாளி ,தாயிஸ் , தமிழ்நாட்டினர்,பர்மா,மியான்மார்,வியட்நாமி  என்று பல நாட்டினர் முகாம் போட்டிருக்கும் நாடுதான் எங்கள் மலாயா திருநாடு! வேற்று நாட்டினர்களின் வருகையாலோ என்னவோ?இன வாரியாக  மூன்றாம் நிலையில் இருந்த தமிழர்கள் தற்போது நான்காம் நிலைக்கு தள்ளப்பட்ட  அவலமும் எங்கள் சொந்த ஊரில்  !
                 அந்த சுவர்ணபூமிக்குத்தான் தற்பொழுது கட்டம் சரியில்லைப்போலும்.ஏழரைச் சனியா?அல்லது அஷ்டம சனியா? எவராலும் கணிக்க முடியவில்லை.கடந்த சில மாதங்களாக மலேசிய நாட்டைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கும் சில நெருக்கடிகள் அல்லது (எமகண்டம் என்றும் போட்டுக்கொள்ளலாம்) டெங்கி காய்ச்சல், அளவுக்கு அதிகமான வெயில்,தண்ணீர் பற்றாக்குறை,மோசமான புகைமூட்டம் , தற்போதைய(ஆனால் இறுதியாக என்றும் சொல்லிவிட முடியாது) மாயமாய் மறைந்த மாஸ் விமானம்!
              அப்பப்பா! சுகாதார அமைச்சர் தொடங்கி சுற்றுச்சூழல் அமைச்சர் என்று இறுதியாக பிரதமர் மற்றும் இடைக்கால போக்குவரத்து அமைச்சர் வரை ,அனைவரின்  தூக்கத்தையும்  விலைக்கு வாங்கிச் சென்ற அந்த நெருக்கடிகள் எங்கள் நாட்டுக்கு சாபமா?அல்லது இயற்கைத் தாயின் சீற்றமா? கடந்த ஆண்டுகளை விட மூன்று மடங்கு அதிகரித்த டெங்கி காய்ச்சல்! இந்த முறை டெங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்ட பலரை இறப்பு விழுங்கிச் சென்றதுதான் வருத்தமான செய்தி.அதிக வெப்பம் காரணமாக கொசுக்கள் அதிகரித்தன,அதுவே டெங்கி நோய்க்கு வாசலாக அமைந்தன!
              பள்ளி ,அண்டைவீட்டார், உறவுகள் ,அறிமுகமானவர்கள் என்று யாரைக்கேட்டாலும் ,’டெங்கி சஸ்பெக்ட்’ மருத்துவமனையில் இருந்தேன்’! இது என்னம்மோ சந்தைக்குப்போய் வருவது போல  சர்வசாதரணமான பேச்சாக ஆகிப்போனது. டெங்கி காய்ச்சலில்  இறந்துபோன ,என் மகளின் சக வகுப்புத் தோழியின் தாயின் மரணம்பற்றிக்கூட  முகநூலில் பகிர்ந்திருக்கிறேன். டெங்கி மரண ஓலங்கள் ஓய்வதற்குள் , நீர் பற்றாக்குறை!அதிக வெயில் காரணமாக நீர் வறட்சி கண்டதும் இந்த சுவர்ண பூமியில்தான். அங்கும் இங்குமாக நீர் பங்கீட்டு முறையில் ஆங்காங்கே நீர் தட்டுப்பாடு செய்து ,அனைவருக்கு நீர் கிடைக்குமாறு பிரச்சைனையைக் களைந்தனர்.சிலவேளைகளில் செயற்கை மழையைப் பெய்யச் செய்வர்.
                   ஒருவழியாக அந்த பிரச்சனைக்கு ‘பைபை’ சொல்லி விடைகொடுக்கும்போது மோசமான புகை மூட்டம் நாட்டையே உலுக்கி கொண்டிருக்கிறது.அதிக வெப்பம் காரணமாக காடுகள் தானாக தீப்பிடித்து எரிந்தன.ஓர் ஆன்மீகவாதியும் ,நண்பருமான ஒருவர் தன் அனுபவத்தைக் கூறினார்.’சென்ற வாரம் ஜோகூர் மாநிலம் போனபோது என் 50 வயதில் இதுவரை நான் பார்க்காத ஒரு சம்பவம்மா அது!ஆம்,நெடுஞ்சாலையில் என் வலது மற்றும் இடப்பக்கம் காட்டுத்தீ பற்றிக்கொண்டு எரிந்தது.என் வாழ்க்கையில் அப்படி நான் பார்த்ததே இல்லை.இது யாருடைய வயித்தெரிச்சலோ?காட்டுக்குள் அப்படி  ஒரு காட்டம் செல்விம்மா’என்றார்.மோசமான புகைமூட்டத்துக்கு இதுவும் ஒரு காரணம்!சென்ற ஆண்டு API (AIR POLLUTION INDEX) 200-ஐத் தாண்டிய போது, சில மாநிலங்களில் ,மக்கள் சுவாசக்கோளாறு நோயில் பாதிப்பதைத் தவிர்க்க ஊரடங்கு  சட்டம் அமலாக்கப்பட்டது!. எந்த கேள்விகளும் அல்லாமலே பள்ளிகள் மூடப்பட்டன. .ஆனால் இந்த வருடம் API (AIR POLLUTION INDEX) 300-ஐத் தாண்டியும் ஒரு நடவடிக்கையும் எடுக்கமுடியாமல்  , திணறிக்கொண்டிருக்கும் அமைச்சர்கள்.ஆமாம்  அதற்குள் மாஸ் விமானம் மாயமாய் மறைந்தது.
                  மற்ற நெருக்கடிகளில் நாம் மூக்கை நுழைத்து ஆருடங்கள் கூறினாலும் விமானம் மாயமான விசயத்தில் எதையும் கணிக்க இயலவில்லை. அது விபத்தா, பிணைநாடகமா? கடத்தலா?அல்லது அரசியல் நாடகமா? ஏனோ எம் நாட்டிற்கு இப்படி ஒரு சத்திய சோதனை?1993-இல்  வேலை நிமித்தம் ஜப்பான் நாடு சென்றபோது ‘ஒரு ஜப்பானியர் என்னிடம் கேட்ட கேள்வி ,தூக்குமாட்டிக்கொள்வது போல இருந்தது?’நீ எந்த நாடு ?’என்றார். நானும் பந்தாவாக ’மலேசியா’என்றேன்.அதற்கு அவர் அறைகுறை ஆங்கிலத்தில் ஒரு மரத்தைக்காட்டி மலேசியாவில் எல்லோரும் மரத்தில் வீடு கட்டிதானே வாழ்ந்தார்கள்?”என்றார்.எங்கள் நாட்டின் வளர்ச்சி அவருக்கு தெரியவில்லையா?அல்லது நாங்கள் புகழ் அடைந்து வருவது அவருக்கு பொறாமையா? எனக்குள் எழுந்த கேள்வி.இதை என் மேலாளரிடம் கூறி குறைப்பட்டுக்கொண்டபோது .அவர் கூறியதாவது ‘ஆம் செல்வி,நம் நாடு இன்னும் இவனுங்க நாட்டைப்போல வளர்ச்சியடையவில்லை, அதான் மரத்தில் தொங்கிகிடக்கிறீங்களான்னு கேட்கிறான்,விட்டுத் தொலைங்க,ஒருநாளைக்கு உலகமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு மலேசியாவை எல்லோரும் திரும்பி பார்ப்பார்கள்’என்றார்.
                    தற்போதைய விமானம் காணாமற் போன விசயத்தில் உலகமே எங்களைத் திரும்பி மட்டும் பார்க்கவில்லை,திருப்பி திருப்பி பார்ப்பதுதான் மிகுந்த வேதனையாய் இருக்கிறது.ஆம்,சில சொந்த விசயங்களுக்காக சிலரை வெறுத்தாலும் ,உலக நெருக்கடியில் சிக்குண்டு கிடக்கும் ,எங்கள் ஊர் அமைச்சர்கள் மேல் இனம் புரியாத பரிதாபம்  இருக்கவே செய்கிறது என்பதுதான் உண்மையும் கூட.இன்னும் என்னவெல்லாம் நாங்கள் அனுபவிக்கப்போகிறோம்? என்ன சாபம் ? யாருடைய கோபம்?அல்லது உலக அழிவுக்கு முதல் அறிகுறிகள் யாவும் எமது சுவர்ணபூமியில் இருந்து வெளிப்படுகிறதா?
                   ”விடியலை நோக்கி   நாங்களும் எங்கள் சுவர்ணபூமியும்”

Friday, 14 March 2014

மாசற்ற மலேசியாவும்,மாஸ் விமானமும் !

நாட்கள் எட்டைத் தொட்டுவிட்டன,
எங்கே சென்றாய் எம் நாட்டு விமானமே?

மாசற்ற மலேசியா மேல்,
தூசுக்கள் கொட்டிக்கிடக்கும் வேளையில்,

மா(பேச்)சுக்களையும் கொட்டிச் சென்றாய்,
மாஸ் விமானமே!

அண்டைநாடும் வந்தன,
அயல்நாடுகளும் கைகோர்த்துக்கொண்டன,

அல்லாஹ்வையும் கேட்டேன்,
யேசுவையும் கேட்டேன்,
என் அப்பன் ஈசனையும் கேட்டேன்,

இன்னும் கிடைக்கவில்லையே?
இனியும் இறையை நம்பும் செல்வியே,

கடவுள் இருக்கிறானா?
இருந்தால் காட்டியிருப்பானே?

எள்ளி நகைக்கிறான்,
என் நாத்திக நண்பன்!

ஆன்மீக நம்பிக்கையும்
அசைவற்றுப்போகிறது,
அவனது இந்த சொற்கள்!

அமைச்சரும் அறிவிலியாக தெரிகிறான்!
ஆண்டவனும் அவன் பட்டியலில்
போய்ச்சேருகிறான்,

ஆத்திரம் மட்டுமே மிஞ்சியது,
அவர்கள் இருவரின் மேலும்!

தொலைக்காட்சியே !
நல்லதொரு பதிலைச் சொல்லாமல்,
எனக்கு நீ ,

தொல்லைக்காட்சியாக தெரிவது,
என் கோபமா?என் அறியாமையா?

இன்று இறங்கி இரந்து..இறந்துகொண்டிருக்கும்
என் உலக மக்களுக்கு 
இனிய செய்தியைச் சொல்வாயா?
ஈசா?யேசு?ஈசனே?

காத்திருக்கிறோம் கையில் பூக்களுடன்,
மலர் வளையங்கள் அல்ல,

என்பதையும்  இயற்கைக்கு,
இறுதியாகவும் உறுதியாகவும்
எச்சரிக்கிறோம்!
                


(இன்னும் ஏமாற்றைத்தயே கொடுக்கும் மாஸ் விமானத்தின் மேல் கோபம் எழுந்த போது மனதில் உதித்த வரிகள்)

Tuesday, 11 March 2014

உனது உரிமை இழக்காதே!

          எப்போதுமே நான் என் அப்பாவிடம் கற்றுக்கொண்ட விசயம்,’நம் தரப்பில் தவறு இல்லை என்றால் யாருக்கும் பயப்படாமல் குரல் கொடு,உன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்’.அதேப்போல கொஞ்சம் வளர்ந்து பெரியவளானதும் ஆசிரியர்கள்  நட்புக்கள் என்று  எல்லோரும் உன் உரிமை இழக்காதே ‘என கற்றுக்கொடுத்தார்கள்.
            சிறுவயதில் பிறர் முன்னிலையில் பேச ரொம்ப பயப்படுவோம்.அதற்கு காரணம் நாங்கள் வளர்க்கப்பட்ட சூழ்நிலை.கூட்டுக்குடும்பம் ,தாத்தா பாட்டி,சித்தப்பா சித்தி ,அத்தை மாமா என்று  எல்லோர் பேச்சுக்கும் கட்டுப்பட்டு வளர்ந்து வந்தோம்.சிலவேளைகளில் நாங்கள் சொல்லும் விசயம் சரியாக இருந்தாலும் அதை ஒரு பொருட்டா யாருமே மதிப்பதில்லை.அதனாலே அவையில் பேச பயப்படுவோம்.ஆனால் என் வயது ஒத்த பள்ளித்தோழிகள் வீட்டில் சில டிசிசன் எடுப்பதுவும் ,பெரிய மனுசிகள் போல் பேசுவதும் ,எனக்கு ஆச்சரியமுமாகவும் ,ஒரு பக்கம் பொறாமையாகவும் இருக்கும்(நமக்கு அந்த் ஆட்டோரிட்டிகள் இல்லையே?)இன்னும் கூட (திருமணமாகி பருவம் அடைந்த பிள்ளை இருந்தும்)சில விசயங்களைப் பேச நாங்கள் தயங்குவது எங்களுக்கு மட்டுமே தெரியும்!
         சரி விசயத்திற்கு வருவோம். அப்படிப்பட்ட பயந்த சூழலில் வளர்ந்த நான் ,சில காலக்கட்டம் வந்ததும் ,மிகவும் தைரியமாக குரல் கொடுக்க தொடங்கினேன்.என் தரப்பில் நியாயம் இருந்தால் யாருக்கும் பயப்படாமல் பேச ஆரம்பித்தேன்.அது எந்த லெவலில் உள்ளவர்களாக இருந்தாலும்.பலருக்கு அதனால் நம்மைப் பிடித்து போனது ஆனால் சிலருக்கு (அவுங்க தவற்றைச் சுட்டிக்காட்டுவதால்) பிடிக்காமல் போகும்.பள்ளிக்கூடமோ ,அலுவலகமோ, அல்லது உறவுகள் கூடும் இடமோ ,என்னுடைய தவறு இல்லை என்றால் தட்டிக்கேட்பேன்.
           அப்படித்தான் ஒருமுறை அந்த சம்பவம் நடந்தது.ஆம் நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காலம் அது.ஜப்பானிய அலுவலகத்தில் மிகவும் பொறுப்பான ஒரு வேலையில்(ஷிப்பிங் டிபார்ட்மெண்ட்) பிசியாக இருந்த காலம்.சும்மா விடுமுறை எல்லாம் எடுக்க முடியாது. என் வங்கி ஏடிஎம் அட்டையைத் தவறுதலாக மணிபர்சோடு தொலைக்காட்சியின் மேல் வைத்து விட்டேன் போல. சிலநாட்கள் கழித்து பணம் எடுக்க, இயந்திரத்தில் விட்டேன்,your card is deactiv என்று  ஏதோ ஒரு மேசேஜ் காட்டியது.மூன்று தடவைக்கு மேல் விட்டால் ஏடிஎம் கார்ட் உள்ளே மாட்டிக்கொள்ளும்.ஆகவே நான் வங்கியைத் தொடர்பு கொண்டேன்.
           அங்கே கணினி மட்டுமே பேசியது.அது சொன்னபடி நான்  எண்களை அழுத்தவே அது சொன்ன பதில்  ‘உடனே உன் கார்ட்டை எடுத்துக்கொண்டு ஹெச் .கியூ போ’.அங்கே மீண்டும் அவர்கள் அதை ஆக்டிவேட் பண்ணுவார்கள் என்றார்கள். ஐயோ !வேலை ஒருபுறம் ,நிறைமாதம் வேறு.எனக்கு ஹெச்.கியூ போகவும் தெரியாது?இப்படி பல பிரச்சனைகள்.சரி நண்பர் வங்கி ஊழியர் (ஆனால் அவர் வேற வங்கி) அவரிடம் கேட்டபோது,’அது ஒன்னும் பெரிய விசயம் அல்ல, அதை ஆக்டிவேட் பண்ணுவானுங்க,நீ கார்ட்டின் பின்னால் உள்ள 24 மணி நேர சேவைக்கு போன் பண்ணிப்பார்’என்றார்.
              24 மணி நேர சேவை என்றால் போன் பண்ணியவுடன் போனுக்கு பதில் சொல்ல வேண்டும்?ஆனால் நான் போன் பண்ணினேன், ரொம்ப நேரம் கழித்து ஒருவர் போனை எடுத்தார், விசயத்தைச் சொன்னேன்,அவர் வேற ஒருவருக்கு  அழைப்பை அனுப்பினார்,அங்கே மீண்டும் என் பிரச்சனையைச் சொன்னேன்,மீண்டும் வேற நபருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.ஆனால் அழைப்பு துண்டிக்கப்பட்டது.மீண்டும் போன் பண்ணினேன்,அதேப்போல விசயத்தைக் கேட்டு ,மீண்டும் கால் டிரான்ஸ்ஃபர்.என்னால் இப்பொழுது பொறுமை காக்க முடியவில்லை.அஹிம்சயைத் துறந்து ,வன்(வாய்ச்சொல்)முறையில் இறங்கினேன்.ஆமால் நேரே கால் செண்டருக்கு போன் பண்ணி ,’ஏடிஎம் கார்ட் பிரச்சனைப்பற்றி பேசனும் ,உயர் அதிகாரியின் எண்களைக்கொடுங்கள்’ என்றேன்.
          உடனே நம்பர் கொடுக்கப்பட்டது.அழைத்தேன்,அங்கே சனி வேற ரூபத்தில் போய் நின்றான்! ஆமாம் போன் பண்ணி உயர் அதிகாரியைக் கூப்பிடுங்க ‘பிளிஸ்’என்றேன்.போனை எடுத்தவள்,போனை வைத்துவிட்டு(மறந்துபோய்) ,தன் சக தோழியோடு ‘..........என்ற பெயரைச் சொல்லி ‘இன்னிக்கு பீசாங் கோரேங்(வாழைக்காய் பஜ்ஜியும்) தே தாரிக்( டீ) குடிக்க எங்கே போகலாம்’என்று அளவளாவிக்கொண்டிருந்தாள்.
            நாட்டுக்கு தேவையான அந்த உரையாடலைக் கேட்டு என்னால் அமைதி காக்க முடியவில்லை,அவள்களின் உரையாடலில் இடம்பெற்ற பெயரை  மட்டும் மனதில் கொண்டு, மீண்டும் போனை அழுத்தினேன்.’மீண்டும் அவளேதான்,நானும் ‘ஹலோ நான் உங்க கஸ்டமர்.எனக்கு பிரச்சனை என்றால் உதவாமல் ,அங்கும் இங்கும் அலைக்கழிக்கிறிங்களா?என்றேன். நியூஸ் பேப்பரில் போடவா? (சும்மாதான் ஒரு பந்தாவுக்கு?நாம் எழுதுவதை நமக்கே வாசிக்க முடியாது,பிரெஸ்காரன் படிக்கவா போறான்?)ஹோட் லைனில் போடவா?என்றேன்’(நம்மை மதிச்சி எவன் போடப்போறான் ?என்ற ரகசியம் நமக்குதானே தெரியும்?)எனக்கு உடனடியாக உயர் அதிகாரியிடம் பேச வேண்டும்’ என்றேன் கொஞ்சம் உயர்த்திய குரலில் .உடனே அந்த குமாஸ்தா  போனை உயர் அதிகாரிக்கு அனுப்பினாள்.பிறகு ஏதோ கிசு கிசு என்பதை என்னால் ஒட்டுக்கேட்க முடிந்தது.மறுமுனையில்:

‘ஹலோ ஐ அம் மிஸ்...................... வாட் இஸ் யூவர் ப்ராப்ளம்?,
 ‘யெஸ் மேம் ,ஐ அம் செல்வி, யூ ஆர் ?,
’ஐ அம் கவிதா’,
‘ஓ கவிதா !ஆர் யூ தமிழ்?,
‘யெஸ் ,பேசுவேன்’,
‘உங்க ஏடிஎம் அட்டையில் 24 மணி நேரம் என்றால் என்ன அர்த்தம்?’,
’ஏன்?என்ன ஆச்சு’
’.மேடம் கூப்பிட்டு எவ்வளவோ நேரம் கழித்துதான் போனை எடுக்கறாங்க,அது மட்டுமா?நான் நிறைமாத கர்ப்பிணி, என்னை ஹெச்.கியூ போகச்சொல்லி வேற அலைய வைக்கறிங்கள்?போன் போட்டவுடன் ஒரு பதில் கொடுக்க நான் சுமார் ஒரு மணி நேரம் என் பில்லை கறைக்கவேண்டி இருக்கு?இந்த லட்சணத்தில் உங்கள் குமாஸ்தாக்கள் வேலை முடிஞ்சி எங்கே போய் டீ குடிப்பது?’என்பதில்தான் குறியா இருக்காங்களே ஒழிய ,ஒரு போனுக்கு பதில் சொல்ல தகுதி இல்லை?இதுதான்  மிக சிறந்த சேவையா?என்று மனசில் உள்ளதை அப்படியே கொட்டித்தீர்த்தேன்.
           சற்று நேரம் அமைதியா கேட்டவர் ‘அந்த குமாஸ்தா பெயர் என்ன? அதான் போனை வைத்துவிட்டு, டீ குடிக்க....என்று கேட்பதற்குள் ,நான் பெயரைச் சொன்னேன்(ஒருவேளை நான் பொய் சொல்லுகிறேனா?என்று சோதிக்கவோ என்னவோ தெரியவில்லை)!
பெயரைக் கேட்டுவிட்டு  ’ஒன் மினிட் மேடம் செல்வி’என்று சில நிமிடங்கள் ஏதோ கிசு கிசு சம்பாஷனை நடந்தது.
            பிறகு அந்த அதிகாரி ‘செல்வி வெரி சாரி, நீங்கள் ஹெச்.கியூ எல்லாம் போகவேண்டாம் , ப்ரோசிடியர் படி அங்கேதான் போய் உங்கள் கார்ட்டை ஆக்டிவேட் பண்ணனும் ஆனால் உங்களுக்கு சில அசெளகரியங்கள் ஏற்பட்டதால் ,அதை நானே களைகிறேன்,உங்கள் ஏடிஎம் கார்ட்டின் பின்னால் குறித்துள்ள எண்களை மட்டும் கூறுங்கள் ‘என்றார்.பிறகு அரைமணி நேரம் கழித்து போய் ஏடிஎம்மில் பணம் எடுத்துப்பாருங்கள் ‘என்றார்.செல்வி பணம் எடுத்துவிட்டால் ,இதுதான் என் பெர்சனல் நம்பர் ,உடனே எனக்கு கால் பண்ணுங்கள்’என்றார்.
          நானும் அரைமணி நேரம் கழித்து போய் பணம் எடுத்தேன்,கார்ட் இயங்கியது. (நல்லவேளை என்  பேங்க் பேலன்ஸ் என்னவென்று அந்த அதிகாரி கேட்கவில்லை?)நூறு இநூறுக்குத்தான்  இந்த பில்டப்பா?என நினைச்சிருப்பாங்கள்?
சரி பணம் கிடைத்த மகிழ்ச்சி ,ஹெச் ,கியூ போய் அலையவேண்டியதில்லை என்ற மகிழ்ச்சி மறுபுறம்,ஓட்டமும் நடையுமாய் வந்து அவர் கொடுத்த எண்ணுக்கு போன் செய்தேன்.
’ரொம்ப நன்றி கவிதா ,கார்ட் வேலை செய்யுதுலா’என்றேன்.
‘ஓகே செல்வி, மீண்டும் எங்கள் வங்கியோடு இணைந்திருக்க கேட்டுக்கொள்கிறேன்’என்றார்.
‘கண்டிப்பாக ‘என்றேன்.
‘செல்வி தயவு செய்து நியூஸ்,ஹோட்லைனில் என் வங்கி பெயரைப்போட்டு அசிங்கப்படுத்தவேண்டாம்’என்று கெஞ்சிக்கேட்டுகொள்கிறேன்.நடந்த தவற்றுக்கு நான் வருந்துகிறேன்’என்றார்.
‘ஐயோ உட்கார்ந்த இடத்தில் என் பிரச்சனையை முடிச்சிக்கொடுத்திட்டிங்களே,கண்டிப்பாக அப்படியெல்லாம் போக மாட்டேன்’என்று நன்றி கூறி விடைபெற்றேன்!

            பேசவேண்டிய நேரத்தில் பேசினால் நடக்காத சிலகாரியமும் நகரும்!


             

 

Friday, 28 February 2014

உயிர் போனாலும் உடல் வாழ்கிறதே!

                                                                           
          குமார் ,என் கிராமத்து வீட்டின் அண்டை வீட்டுக்கார தோழன். ரொம்ப ரொம்ப நெருங்கிய நட்பு எங்களுக்கும் தேவி அம்மாவுக்கும்(குமாரின் அக்கா தேவி,சோ குமாரின் அம்மாவை ’தேவி அம்மா’ என்றுதான் அழைப்போம். அதேப்போல என் அக்காவின் பெயர் ராதா,எங்கள் அம்மாவையும் எல்லோரும் ராதாம்மா என்றுதான் அழைப்பர்.சுமார் 30 வருடம் எங்கள் பக்கத்து வீட்டில் தேவியம்மா குடும்பம் இருந்தார்கள்.இரவில் நம் வீட்டில் ஏதும் சத்தம் கேட்டால் கூட ,தேவியம்மாவும் பிள்ளைகளும்,’ராதா அம்மா ,என்ன சத்தம்,கதைவைத் திறங்க,ஏதும் பிரச்சனையா ?என்று பதற்றப்படுவார்கள்.அதுதான் கிராம வாழ்க்கையின் நட்பு .அவர்களின் ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது பையன் தான் குமார்.
           நாங்கள் கிராம வீட்டை விட்டு வந்தபோது தேவியம்மா அப்படிதான் அழுதார். எங்களை எங்கே பார்த்தாலும் ‘நலமா ,வீட்டுக்கு வாங்க, ஏன் போன் பண்றதே, அம்மா எங்கேடி ?அதேப்போல அவர்கள் பிள்ளைகள் அனைவரும் ரொம்ப அன்பு கொண்டாடுவார்கள் காரணம் பொதுவாக கிராம வீடு என்றால் பைப்படி சண்டையெல்லாம் வரும்,ஆனால் என் அம்மாவும் சரி ,தேவியம்மாவும் சரி யாருடனும் சண்டை செய்ய மாட்டார்கள்.
                  அந்த குமார், கடந்த வாரம் சனிக்கிழமை.வீட்டின் அருகே  மோட்டார் விபத்தில் காயமுற்று கோமா ஸ்டேஜில் கிடந்தார்.கேட்டவுடன் ஏதோ எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ஏதோ ஆகிவிட்டதுபோல மனம் கனத்தது.சரி அம்மாவை அழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை(இன்று ) மருத்துவமனை போகலாம் என்றிருந்தேன்.
           ஆனால் குமார் முந்திக்கொண்டார்). ஆமாம் நேற்றிரவு குமார் இறந்தார். நெஞ்சைக் கிழித்த அந்த சோக செய்தி,என் அம்மா ஒரு கணம் செஞ்சைப்பிட்த்துக்கொண்டு அப்படியே நாற்காலியில் உட்கார்ந்தார்.’புள்ள கண்ணைத் தொறந்துட்டதா சொன்னானுங்களே? என்ன ஆச்சு?ஐயோ என்னால போய் பார்க்க முடியலையே,புள்ள போயிட்டானா? செய்தியைச் சொன்ன என்னால் ,அதைப்பார்க்க இயலாமல் உள்ளே சென்றேன்,என் தம்பி வந்து ஆறுதலாய் அம்மாவிடம் ஏதோ சொன்னான்.
            பிறகு ஒரு போன் அழைப்பு.என் அக்கா போனில் அழைத்து ‘அம்மாவிடம் சொல் ,நாளை மறுநாள்தான் ,எடுக்கிறார்களாம்.அவன் தன் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளதால்,அனைத்தையும் வெட்டி அறுவைச் சிகிட்சை செய்த பின்புதான் சவம் கிடைக்குமாம், அவசரப்பட்டு போக வேண்டாம்’என்றார். இதுவரை குமாரைப் பிரிந்த சோகத்தில் அழுத என் கண்கள் ,இப்பொழுது அதே கண்கள் கொஞ்சம் ஆனந்த்க் கண்ணீரையும்  சேர்த்தே வடிக்கிறதே?ஆமாம் உயிர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் , அவன் உடல் உறுப்புகள் பலருக்கு வாழ்க்கை கொடுக்கபோகுதே? குமார் இறக்கவில்லை, அவன் இறந்தும் வாழ்கிறான்!அம்மாவிடம் கூறினேன்!
                                                             
வலப்பக்கம் என் அம்மா,இடப்பக்கம் தேவி அம்மா!

Friday, 21 February 2014

நமக்கு தெரியாமல் போகும் நம்மைச் சார்ந்தவர்களின் இறப்பு!

             

        சில விசயங்களை நாம் எழுதி லைக் மற்றும் கமெண்ட் கிடைத்த போது இல்லாத ஒரு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ,யாராவது போனிலோஅல்லது நேரிலோ பார்த்து ,’அன்றைக்கு நீங்கள் எழுதிய அந்த விசயம் ,உண்மையில் மனசைப் பாதித்தது டீச்சர் ‘என்று சொல்லும்போதுதான் நம் எழுத்துக்கும் அப்படி ஒரு உந்துதல் உண்டு என்றே தோணுது.

    அந்த வகையில் அன்று நான் எழுதிய இந்த விசயத்தைப் படித்துவிட்டு என் நண்பன் தொலைபேசியில் அழைத்து ‘செல்வி அந்த இறப்பு விசயம் என்னை ரொம்பவே பாதித்தது செல்வி.உண்மையில் மனசில் லேசான பயம் கூட ஏற்பட்டது.நம்மைச் சுற்றி உள்ளவர்கள் இறந்துபோவதும் அது நமக்கு தெரியாமல் போவதும் ஐயோ!யாருக்கும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது செல்வி.இனி எல்லா நண்பர்களையும் போனில் அழைத்து அடிக்கடி நலம் விசாரிக்கவேண்டிய எண்ணம் வந்தது ‘என்றான்.அவன் சொன்ன அந்த விசயம் இதுவே :


Selvi Sk
19 February near Kuala Lumpur
ச்சே..ச்சே என்ன உலகம்?
நேற்று நான் வழக்கமாக செல்லும் பாதையில் ஓர் இறப்பு!பேருந்து ,கார் செல்லும் பிரதான பாதையில் பந்தல் போடப்பட்டிருந்தது.ஆகவே மாற்று சாலையில் செல்லவேண்டிய கட்டாயம். நானும் அவசரமான உலகில் உழன்று கொண்டிருப்பதால்,இறப்பு வீட்டை சுமார் மூன்று முறை கடந்தும் எதையும் சரியாக கவனிக்கவில்லை.இன்று பள்ளி முடிந்து அழுதுகொண்டே ஓடி வந்த என் மகள்,’அம்மா என் தோழியின் அம்மாதான் நேற்று இறந்துபோனவர் அம்மா.ஐயோ யாருமே சொல்லவில்லையே, ரொம்ப கவலையா இருக்கு ‘ என்று அழுது புலம்பினாள்.அவர்களுடைய இரண்டு பிள்ளைகளும் என் மாணவிகள்.அடிக்கடி பள்ளிக்கு வந்து பிள்ளைகளின் படிப்பை விசாரிந்துச் செல்வார்.மிகவும் பொறுப்பான அம்மா. மனசே சரியாக இல்லை. டெங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்கள்.’என்னால் அவளுக்கு போய் ஆறுதல் கூட சொல்லமுடியவில்லைம்மா,அவங்க பிரேதம் அவர் மாமா வீட்டில் வைத்து அடக்கம் செய்யப்பட்டதாம்.அந்த மாமா வீடுதான் நான் கடந்து போன வீடு!
#ச்சே கேட்டதுமுதல் மனம் நெகிழ்ந்து போனது.நன்கு அறிமுகமானவரை இறுதியில் போய் பார்க்க வாய்ப்பில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?ஏனோ இரண்டு மூன்று நாட்களாக எல்லாமே வெறுப்பாகவே இருக்கிறது!

Thursday, 20 February 2014

முகநூ(லி)ல் திருவிளையாடல்



பிரிக்கமுடியாது : காப்பி பேஸ்ட்டும் , சேரிங்கும்
பிரியக்கூடாதது : முதன்முதலில் சேர்த்த நட்பு,
சேர்ந்தே இருப்பது : பொறாமையும்,வயித்தெரிச்சலும்
சேராதிருப்பது : நல்ல ஸ்டேடசும் நிறைய லக்ஸ்களும்,
சொல்லக்கூடாதது : புதிய பெண் நட்பிடம் ரகசியம்,
சொல்லக்கூடியது : நம் நட்பு நம்மைப்பற்றி பேசிய பெருமை பேச்சு,
பார்க்ககூடாதது : நம் நட்பு வேற ஆளுக்கு போடும் லைக் அண்ட் கமெண்ட்,
பார்க்ககூடியது : என் நட்பு எனக்கு போடும் லைக்ஸ் அண்ட் கமெண்ட்,
கலையில் சிறந்து : என் ப்ரோஃபைல் படங்கள்
நாடகம் என்பது : நம் நட்பு வேற பெண்ணுக்கு போடும் லைக் பார்த்துட்டு பார்க்காததுபோல பாசாங்கு செய்வது,
பாட்டுக்கு : Asb Pradeep(நல்ல  பாடல்களைத்  தேடிபோடும் நண்பர்,
ஆசைக்கு : நல்லா இல்லாத படங்களைப்போட்டு லைக்ஸ் தேடும் சிலர்,
அழகுக்கும் அறிவுக்கும்: Selvi Sk
(முதன் முறையாக என் அறிவை பிழிந்து பிழிந்து நான் எழுதிய வசனம்..சொல்லிப்புட்டேன்)

Thursday, 13 February 2014

’அன்பர்கள் தின ’ஸ்பெசல் உண்மை சம்பவம்!

              இதை நான் சொல்லியே ஆகணும்.மறைத்து வச்சிருக்கும் அளவுக்கு அப்படி  ஒன்னும் பெரிய சிதம்பர ரகசியம் அல்ல!1998 ,அந்த வருடம் வெலண்டைய்ன் டே! ரொம்ப முக்கியமான வருசம்.ஹ்ம்ம் !அதுதான் முதன்முதலாய் அதிகாரப்பூர்வமாக மாப்பிள்ளை அமைந்து ரொம்ப பிசியாக இருந்த வருசம். திருமண தேதியும் நிச்சயிக்கப்பட்டது.ஆனால் அந்த வருசம்  டேட்டிங் போக  வாய்ப்பு கிடைக்கவில்லை,காரணம் இருவருக்குமே வேலை,சோ எதுவும் இண்டரஸ்டிங் இல்லாததால் அமைதியாக கையில் ரோஜாப்பூவோடு திரிந்த பெண் தோழிகளை ஆபிசில் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தேன்.நமக்குதான் காதல் எல்லாம்  சரிப்பட்டு வரலியே,நேரே திருமணம்தானே?(கொடுத்து வச்சது அவ்வளவுதான்?)
       14/2/1998 ஆபிசில் வேலை செய்து கொண்டிருந்த சமயம். மதியம் 1 மணிப்போல என் மேஜை போன் அலறியது. சாப்பிட்டு விட்டு மானேஜர் முதல் குமாஸ்தா என எல்லோரும் கொஞ்சம்நேரம் கண் அயருவோம். சோ ,மயான அமைதியாய் இருக்கும் அலுவலகம்.மறுமுனையில் ஓர் அழகான கம்பீர குரல் ‘செல்வியா ?
‘ஆம் செல்விதான்!’
‘என்ன நலமா செல்வி?
‘ஹ்ம்ம் நலம்தான்,யாரு இது?’
’அது இருக்கட்டும் ,கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா?’
‘என்ன ....?
‘உங்களுக்கு மாப்பிள்ளை செட் ஆகிவிட்டது!’
‘ஆமாம் ,அது சரி நீங்க?’
‘என்ன செல்வி நாங்களும் கேட்டிருந்தோம்,ஒருபதிலும் சொல்லவே இல்லை,இப்போ திடிர்னு கேள்விப்பட்டேன்,அதான் கன்ஃபெர்ம் பண்ணிக்கதான்’
’ஹலோ ,யார் நீங்க?என்னால் இதுக்கு மேல் அமைதியா பேசமுடியவில்லை.
ஆனால் மறுமுனையில் பேசிய அந்த நபர் ரொம்ப டீசண்ட்டாகவே பேசினார்.
‘பிளிஸ் யாருன்னு சொல்லுங்க’என்று கொஞ்சம் கெஞ்சி பேசினேன்.
‘நல்லா யோசித்துப்பாருங்க செல்வி,என் தோழி மூலம் கேட்டிருந்தேன்,ஒருமுறை போனில் பெயர் சொல்லாமல்  பேசினேன்.நீங்கள் முகத்தில் அறைந்தது போல பேசிட்டிங்க,சோ நானும் மெதுவா பேசலாம்னு இருந்துட்டேன் ‘என்றார்.
......சில நிமிடங்கள் என் எண்ண குதிரையை ஓட்டினேன்...ஐயோ !யாருன்னே தெரியலையே? ’.ஒருவேளை அந்த சமயம் எனக்கு என்று மாப்பிள்ளை நிச்சயம் ஆகாமல் இருந்திருந்தால் ,கொஞ்சம் சிரத்தை எடுத்து யோசித்திருப்பேன் போல?
’ஹலோ பிளிஸ் எனக்கு மணியாகுது ,நீங்க யாருன்னு சொல்லுங்களேன்’என்று கொஞ்சம் குரலை உயர்த்திப்பேசினேன்.
‘என்ன கோபம் செல்வி ,ஆனாலும் என்ன நல்ல நட்பாக இருக்கலாமே?என்றார்.
‘சரி உங்க பெயர்,எங்கிருந்து கூப்பிடுறிங்க?’
‘இதே கோலாலும்பூர்தான் , உங்களை அடிக்கடி பார்ப்பது இல்லை ஆனால் பல ஃபங்சனில் பார்த்ததுண்டு’.
‘சரி எனக்கு மணி ஆகிவிட்டது,பைபை (ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும் சும்மா பொய்யாக) ொன்னேன்.
‘ஹலோ என்னலா நீங்க”இன்னும் அந்த கோபம் போகல செல்வி?’
’சரி ’என்று சிரித்துக்கொண்டே எதையோ சொல்ல நினைக்கும்போது தடால் என ஒரு பெரிய சத்தம் ,’ஆ’என்று அந்த ஆணின் குரல் ,நாற்காலியில் இருந்தே கீழே விழுந்ததுபோல சத்தம்.மறுமுனையில் அலுவலகத்தில் ‘ஏய் வாட் ஹேப்பேண்ட் ..என்று சில குரல்கள் மட்டுமே கேட்டன.
         நானும் ஹலோ ஹலோ என்று கத்தினேன். ஒரு பதிலும் இல்லை.போனைத் தட்டி தட்டிப் பார்த்தேன்.என் பதற்றத்தைக் கேட்டுக்கொண்டிருந்த தோழிகள் ‘என்னாச்சு செல்வி ?யார் ?என்று என்னை அணுகினர். மெதுவாய் கிசு கிசுவென என் தோழிகளிடம் கூறினேன்,உடனே தோழி புஷ்பா’இரு ஹேச்.ஆர் டிபார்மெண்டுக்கு போன் பண்ணி அந்த போன் காலை எங்கிருந்து வந்தது என்று கண்டுபுடிக்கலாம் ‘என்றாள்.ஆனால் ஹே.ஆர் ‘முடியாது ,போலிஸ் கேஸ் ,அல்லது சீரியஸ் பிரச்சனைகளுக்கு மட்டுமே அந்த மாதிரி செய்வோம் ‘என்றார்கள்.
           நாங்களும் இரண்டு மூன்று நாட்களில் போன் வரும் என்று ஏமாந்து போனதுதான் மிச்சம். திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன.நேற்று என் பிள்ளைகளோடு பேசிக்கொண்டு இந்தக்கதையைச் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தேன் .பின்னால் இருந்து ஒரு குரல் ‘நல்ல வேளை அவன் தப்பிச்சான்,இல்லாட்டா என்னைப்போல அவன் மாட்டியிருப்பான் ‘என்று.இதைக்கேட்டதும் என் பிள்ளைகளுக்கு இன்னும் சிரிப்பு அதிகம் ஆனால் எனக்கு கடுப்புதான் வந்தது என்பது உண்மை!.லேசாய் திரும்பி ஒரு பார்வை பார்த்துட்டு அறைக்குள் போனேன்,என் மகன் ஓடி வந்து ‘அப்பா சும்மாதான் சொல்றாரும்மா ‘என்றான்.
        இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன அந்த குரலுக்கு உரியவர் யார் என்று தெரியவில்லை ஆனால் அவர் கீழே விழுந்து(என் யூகம்) என்ன ஆச்சோ ? அவர் யாராக இருப்பார்?என்ற கேள்விகள் என் மனதில் இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கிறது!ஒவ்வொரு வருடம் அன்பர்கள் தினத்தில் இந்த சம்பவம் மனதுக்குள் வந்தால் அந்த முகம் தெரியாத நபரின் குரலும் வந்துபோகும்.காதுக்கு எட்டிய குரல் ,கண்ணில்  படாத முகம்!
                                                           
(நானும் தோழி புஷ்பாவும் அலுவலக உடையில்)
.