Wednesday, 30 October 2013

அசுரர்களும் வதங்களும்!

                           பொதுவாக நம் இந்துக்களின் பண்டிகை மற்றும் பெருநாட்கள் அனைத்திலும் ஏதாவது ஓர் அசுரனைக் கொல்லும் விழா இருக்கும்!நவராத்திரியில் மஹிசாசுரன் வதம், கந்த சஷ்டியில் சூரனை சம்ஹாரம் செய்யும் படலம் ,தீபாவளியில் நரகாசுரன் வதம், விநாயக சதுர்த்தியில் கஜாமுக அசுரன் வதம் என்று இன்னும் பல உண்டு!
                                                             
      அசுரன் என்பவன் மனிதன் தான் ,அவனைக்கொன்று அது ஒரு விழாவா?என்று ஒரு சாரார் கேட்கும் கேள்விகளுக்கு என்ன சொல்லலாம் ? தீய குணங்களான அசுர குணத்தை, நம் உள்ளத்தில் இருந்து அழித்தால், நீக்கினால் ,அந்த தினம் யாவுமே நமக்கு திருநாள் ,பெருநாள் ,பண்டிகை நாள் என்பதுதான் அவைகளின் நீதி!

            தீபாவளிக்கு பட்பல கதைகள் உண்டு.தாமோதரனை அன்னை யசோதா கயிற்றில் கட்டிய நாள், இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாள், கண்ணன் நரகாசுரனை கொன்ற நாள் என்று இன்னும் எத்தனையோ புராணங்கள் சொல்வதுண்டு.எது எப்படியோ இருள் நீங்கி,தீமைகள் விலகி, அசுர குணம் கொண்ட உள்ளத்தை தெளிய வைக்கும் திருநாள்தான் தீப ஒளி திருநாள். பட்டாசு கொளுத்தும் பழக்கம் சீனர்களிடம் இருந்து நாங்கள்(மலேசியாவில்)’காப்பி பேஸ்ட்’ பண்ணிக்கொண்டோம்!அதுதான் உண்மை,அதுக்கும் விளக்கம் கேட்டால்,பின்னே எங்கே போவது?      


            ஒன்பது நாட்கள், ஊசி முனையில் அம்பாள் தவம் இருந்து பலம் பெற்று மகிசாசுரனை வதம் செய்ய புறப்படுகிறாள் என்று கதையாக சொன்னால், அந்த காலத்தில் பயபக்தியாக அம்பாளை விரதமிருந்து வழிபடுவார்கள்.அந்த ஒன்பது நாட்கள் பெண்கள், பெண் தெய்வமான அம்பாளை வழிபட ஒரு ஐடியா. பெண்குலத்தை மதிக்கவும் மரியாதை செய்யவும் அந்த கதை சொல்லப்பட்டிருக்கலாம்.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல பெண் பொங்கி எழுந்தால் அவளுக்கும் கோபம் வரும் ,அசுரனையே வெல்லும் பலமும் வரும்,வரலாம் என்பதுக்காக ஓர் உதாரணம்!அதுக்காக பெண்களெல்லாம் ஊசி மேல் உட்கார்ந்து தவம் செய்ய முடியுமா? லாஜிக் இருக்கா?
                                                                 

        ராமாயணத்தில் பத்து தலை இராவணன் வருவான். அவனை இராமன் வதம் செய்வதாக புராணம்!பத்து தலை உள்ள மனிதனுக்கு சளிப்பிடித்தால் ,அவன் முகத்தில் உள்ள பத்து மூக்குகளையும் ஒரே நேரத்தில் எப்படி ‘கர்சீப்’கொண்டு துடைப்பான் ?’என்று  யாரோ ஓர் அறிஞர் கிண்டலாய் கேட்டதாக எங்கோ படித்த ஞாபகம்! பத்து தலை என்பதை பத்து தீய குணங்களாக வர்ணிக்கின்றனர் . அதை வென்று வெற்றியடைகிறான் இராமன்.அதுமட்டுமின்றி (சில)தவிர்க்க முடியாதபிரச்சனைக் களைய உற்றார் உறவுகள் ,உடன்பிறப்புகள் நட்புகள் அனைவரும் அவசியம் என்பதை உணர்த்தவே  இலட்சுமணன்,சுக்ரீவன் ,ஜடாயு,வாலி, மற்றும் குகன் போன்ற பாத்திரங்கள்.அனைத்தையும் நம்ப வேண்டாம் ,வேண்டிய விசயங்களை எடுத்துக்கொள்வோமே!
                                                                 
             கந்த சஷ்டி ஆறு நாட்கள் விரதம்.ஆறாவது நாள் சூரனை வதம் செய்ய முருகன் புறப்படுகிறார் என்பது புராணம். ’சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்’ என்பது சஷ்டி எனும் நாளில் விரதம் இருப்பது,இடைவிடாது இறைவனை தியானிப்பது போன்றவை  அகம் என்னும் உள்ளத்தில்(பையில்) நன்மைகளைக் கொண்டு வரும் என்பதனை  விளக்குவதை நாம் அறிவோம்! எப்படி இந்த பழமொழி மாறிவிட்டதோ,அதுபோலத்தான் புராணங்கள் சொல்லும் உட்கருத்து அல்லது நீதியும் தற்போது மாறி வருகின்றன!
                                                     

                    கஜாமுக அசுரனை அழிக்க ‘ஓம்’என்ற பிரணவ மந்திரத்தில் இருந்து உருவான விநாகயபெருமான், அதே முகம் கொண்டு உருவெடுக்கிறார். அசுரனை அழிக்க தன் தந்தத்தை உடைக்கிறார்(மஹாபாரதம் வியாசர் கூற ,விநாயகர் எழுத தன் தந்தத்தை உடைத்த கதையும் சொல்லக்கேட்டுள்ளேன்). அசுரன் சினிமாவில் வரும் வில்லனைப்போல உடனடியாக மாறி ,உன் காலடியில் ‘எலியாக’கிடக்கிறேன்’என்று சொல்வதாக விநாயக சதூர்த்திக்கு ஒரு புராணம் உண்டு. என்னை அழிக்க கூடியவன் மனிதனாக இருக்ககூடாது ,மிருகமாக இருக்ககூடாது,என்னைப்போல அசுரனாக இருக்ககூடாது’என்று சிவபெருமானிடம் அசுரன் தவம் கேட்கிறான்.கொடுத்த சிவபெருமான் , முழிக்கிறாராம்??(பரம்பொருளுக்கே சோதனையா/) உடனே விநாயகர் இப்படி உருவெடுக்கிறார்,அதாவது முகம் மிருகமாக, உடல் அசுரனைப்போல, கால்கள் மனிதனைப்போல (மனிதன் பாதி ,மிருகம் பாதி கலந்து செய்த கலவைப்போல)!                                                 

                 பண்டிகைகள் என்பது நாம் இறைவனை வழிபடவும் ,உறவுகளோடு கூடி இருக்கவே என்பதைத்தான் உணர்த்திச் செல்கிறதே ஒழிய, அசுரன் இறந்ததை ஒரு பெருநாளாக ,மகிழ்ச்சியாக கொண்டாடுகிறீர்களா?என்ற கேள்விகளெல்லாம் வீண் விதண்டாவாதம்?
                                                            

              வேற்று மதத்தைச் சார்ந்த என் தோழி ஒருமுறை என்னிடம்’உங்கள் (சைவ சமயத்தில்) 365 நாட்களும் பண்டிகையா?அந்த ராத்தி ,இந்த ராத்திரி,அந்த பூசம் ,இந்த நட்சத்திரம் ‘என்று கிண்டலாய்ச் சொன்னாள்.(பாவம் விசயம் புரியாதவள்? )விளக்குவது நம் கடமை!நாம் கற்றைதைச் சொல்வோமே,என்று சொன்னேன். ‘கண்டதையும் தின்பதுவும் ,வெந்ததையெல்லாம் தின்பதுவும் என்றில்லாமல் ‘ஒரு சில விதிமுறைகளை வரையறுத்து ,குறிப்பிட்ட காலத்தில் இப்படி செய்ய வேண்டும் .மேலும்  ஒவ்வொரு நாளும் இறைவனை நினைக்கவும் பிரார்த்திக்கவும்தான் இத்தனை விழாக்கள்,பண்டிகைகள்’என்றேன்.மன்னிப்புக் கேட்டாள். மன்னித்தேன்.மறந்தேன்! 

**உண்மையில் இப்படி ஒரு பதிவை எழுதவேண்டும் என்று நினைக்கவே இல்லை.நண்பரின் முகநூலில் ‘நரகாசுரன் தமிழன்,ஆகவே அவனை அழித்த தினமாக தீபாவளியை வடநாட்டினர் கொண்டாடுவதாக படித்தேன்.உடனே எழுதினேன்.இதனால் பல இலக்கியவாதிகளும் புரட்சியாளர்களும் ‘உங்களுக்கு புராணம் ,இதிகாசமெல்லாம்’என்ன தெரியும் ,ஏது தெரியும்?என்று சண்டைக்கு வரப்போகிறார்கள்.     

          என் அறிவுக்கு எட்டிய ஒரு சில விசயங்களைப் பகிர்ந்துள்ளேன். என் மாணவ செல்வங்களுக்கும் இதைத்தான் ஓவ்வொரு விழா கொண்டாடும்வேளையில் கதையாக கூறி இறுதியில் உட்கருத்தை புகுத்துவோம்.ஆகவே விசயம் தெரிந்தவர்கள் அமைதி காக்கலாம்,தெரியாதவர்கள் உட்கருத்துக்களையும் ,விசயங்களையும் பிறரோடு பகிரலாமே? எதோ ரொம்ப 'அறிவாளித்தனமாய்' எழுதியதாக கருதவேண்டாம் நட்புக்களே!

5 comments:

  1. ஹிஹி... எனக்கு இந்த அளவுக்குக் கூட தெரியாது... தெரிஞ்சதை பகிருங்கள்.... தெரியாதவங்க தெரிஞ்சிக்கட்டும்....

    ReplyDelete
  2. தமிழ் நாட்டிலிருந்து தான் இவ்வாறான விதண்டா வாதங்கள் வருகின்றன!கேட்டால்,கடவுளே இல்லை என்னும் கூட்டம்.எப்படி வந்தீர்கள்,உங்கள் வாழ்க்கை எப்படி என்று கேட்டாலும்.............சரி,விடுங்கள்.இந்து சமயம் புராதனமானது,போற்றுதற்குரியது என்று வேற்று மதத்தினர்&நாட்டினர் சொல்வதும்,ஆராய்ச்சிகள் செய்வதும்,கடைப் பிடிப்பதும்..........ஹூம்!எங்களவர்களுக்குப் பொழுது போக்கே இவை தான்!இதற்குச் செலவிடும் நேரத்தை ஆக்க பூர்வமாக சிந்திக்க மக்களை விட்டிருந்தால் நாம் எப்போதோ வல்லரசாயிருந்திருப்போம்!

    ReplyDelete
  3. ஆஹா அருமையான விசயங்களைச் சொல்லி இருக்கின்றீர்கள் டீச்சர்! நானே அறியாத பலதகவல் இது பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. அருமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி...

    ReplyDelete
  5. இதற்குச் செலவிடும் நேரத்தை ஆக்க பூர்வமாக சிந்திக்க மக்களை விட்டிருந்தால் நாம் எப்போதோ வல்லரசாயிருந்திருப்போம்!//

    சரியாக சொன்னீர்கள்......

    ReplyDelete