Monday, 25 August 2014

அவருக்கு (சிவனுக்கு)நன்றி!

                         கடந்த வாரம் வியாழக்கிழமை (21/8/14)காலை மணி 8.45க்கு என் பள்ளியின் இரும்பு  கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ,கோபமாய் திட்டிக்கொண்டே ’இந்த அப்பா அம்மாவுக்கு இப்போதான் மணி எட்டுபோல?எத்தனை தடவைச் சொன்னாலும் சரியான நேரத்துக்கு வரமாட்டாங்க ‘என்று எட்டிப்பார்த்தேன்.’அங்கே மூன்று மலாய்க்கார அதிகாரிகள் நின்றுகொண்டிருந்தனர்.தூக்கிவாரிப்போட்டது!

            ஒருகணம் நிலை தடுமாறினேன். பிறகு சுதாகரித்துக்கொண்டு ,’ஒரு நிமிடம் ’என்று உள்ளே வந்து சக ஆசிரியையிடம் கை ஜாடைக்காட்டினேன்.’அதிகாரிகள் கவனம் ‘ என்று.அவளும் ஆடிப்போய்விட்டாள்.நானும் வேணும் என்றே(அதற்குள் ஆசிரியை மாணவர்களுக்கு உடனடி சிலவிசயங்களை உஷார் படுத்த ஏதுவாக)மெதுவாக ,சாவியை எடுத்துக்கொண்டு பயப்படாதமாதிரி போய் கதவைத் திறந்தேன். நாங்கள் முறையே கல்வி அமைச்சு ,கல்வி இலாகா ,பெட்டாலிங் கல்வி அலுவல அதிகாரிகள்’,உள்ளே வரலாமா?என்றனர்.

                ஐயோ!எனக்கு தலையே சுத்திப்போச்சு.இதில் யாராச்சும் ஒருத்தர் வந்து ,தஸ்தாவேஜுக்கள் கேட்டாலே சமாளிக்கமுடியாதே?மூவரும் சேர்ந்து ?அதிலும் கல்வி அமைச்சு அதிகாரி?சிவாயநம’என்று பயத்தை அடக்கிகொண்டு சிரமப்பட்டு சிரித்துக்கொண்டே அழைத்துச் சென்றேன்.உள்ளே சென்ற மூவரும், நாலா பக்கமும் போய் கண்காணித்தனர். ஆனால் ஏனோ சற்றுமுன் இருந்த பயம் எங்கோ போய் மறைந்தது.அதிகாரியும் என் சக ஆசிரியைகளிடம் ‘உங்க வேலையைத்  தொடரலாம்,நான் உங்க பிரின்சிப்பாலிடம் பேசவேண்டும்’என்றார்கள்.

                    ‘நான் தான் அந்த (துரதிஸ்ட)பிரின்சி’என்று அறிமுக படுத்திக்கொண்டேன். மூவரில் ஒரு வயதானவர் மட்டுமே என்னை அழைத்து ‘ஒரு நாற்காலியை எடுத்துக்கொண்டு என் அருகில் உட்கார் ‘என்றார்.கொஞ்சம் வயதானர் ஆனால் ரொம்ப பொறுமையாக பேசினார். மற்ற இருவரும் எனக்கு எதிரே நாங்கள் பேசுவதை பார்க்கும் வகையில் நாற்காலியைச் சரி செய்துகொண்டு உட்கார்ந்தனர்.’என் பெயரைக்கேட்ட வந்த அதிகாரி ‘சரி செல்வி ,உன் பள்ளி அரசுடன் பதிவு செய்து கொண்ட பள்ளி ஆனால் ஏன் இன்னும் மாணவர்கள் பெயர்களை சிஸ்டம்ல பதியவில்லை.அது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? அப்படி நீ செய்யாத பட்சத்தில் ஒரு மாணவனுக்கு தலா ரிம.5,000 வெள்ளிவரை நாங்கள் அபராதம் வழங்க எங்களுக்கு உரிமை உண்டு ‘என்றார்.

                     அப்படி ஒரு சிஸ்டம் இருப்பது எனக்கு தெரியாதே ?என்றேன்.ஏப்ரல் 30ம் தேதியோடு நாங்கள் கொடுத்த கெடுகாலம் முடிந்தது,இருப்பினும் நிறைய பள்ளிகள் இன்னும் பதிவு செய்யவில்லை,ஆகவேதான் ,இந்த வாரம் இந்த பகுதியில் சுமார் 15 குழுக்கள் கொண்ட எங்கள் பணியாளர்கள் களத்தில் இறங்கிவிட்டோம். ’சரி நான் கேட்கும் டாக்குமெண்ட்ஸ்களைக் கொண்டு வா’என்றார்.எல்லாத்தையும் கொண்டு வந்து வைத்தேன். ஒவ்வொன்றாக திறந்து பார்த்தார்.பிறகு பிள்ளைகளின் பெயர்பட்டியலைக் கேட்டார்.கொடுத்தேன்.(எப்போதும் அதிகாரிகள் கேட்கும் டாக்குமெண்ட்ஸ்களைக் கொடுத்தாலே அவர்களுக்கு நம் மீது நல்ல நம்பிக்கை வரும்;என்று எனது முன்னாள் ஜப்பானிய நிறுவனத்தின் மேலாளர் திரு.தர்மலிங்கம் அடிக்கடி கூறுவார்.அதை இன்னும் நான் கடைப்பிடித்து வருகிறேன்.

                  ’சரி இப்போதான் உன் வேலை ஆரம்பம் செல்வி’என்றார் அதிகாரி. இந்த பிள்ளைகள் பெயர் பட்டியலை நீ சிஸ்டம்ல போய் எல்லோருடைய மை கிட் எண்களை  (அடையாள அட்டை எண்கள்).உடனே பதிய வேண்டும்.அப்படி நீ செய்தவுடன் அது அரசுடன் சம்பந்தப்பட்ட அலுவலகம் போய்ச்சேரும்’என்றார்.பிறகு ஒவ்வொரு மாணவர்களின் அடையாள எண்களையும் நான் கொடுத்த பட்டியலில்  எழுதி எடுத்துக்கொண்டார்.’ஒருவேளை நீ   ஒவ்வொரு மாணவனின் டிடெய்லும் அப்டேட் செய்ய சோம்பல் பட்டுக்கொண்டு பொய் பொய்யாக உன் விருப்பப்படி செய்ய வாய்ப்பிருக்கு,அதை பரிசோதிக்கவே நானும் எழுதி எடுத்துச் செல்கிறேன்.

                    பிறகு அவராகவே தொடர்ந்தார்.’செல்வி அங்கே நீல உடையில் இருக்கும் அதிகாரி கல்வி அமைச்சுவைச் சார்ந்தவர் .அவருக்கு எந்த பள்ளியில் எது சரியில்லை என்று பட்டால் உடனே கடிதம் கொடுத்து பள்ளியை இழுத்து மூட அதிகாரம் இருக்கிறது.இருந்தாலும் நான் உடனே அப்படி செய்யவேண்டாம்.நாங்கள் பெட்டாலிங் கல்வி அலுவலக அமைப்பில் இருந்து முதலில் உங்களுக்கு உதவ முன் வந்துள்ளோம்.அதுதான் அவரும் என்னுடன் வந்திருக்கிறார் ‘என்றார்.இங்கே ஏதேனும் அவருக்கு திருப்தி இல்லை என்றால்,நீ என்னை மன்னித்து விடு’என்றும் மெதுவாக என்னிடம் கூறினார்.எனக்கு தலையே சுற்றியது!கேட்டவுடன் பணம் கொடுத்து உதவும் என் பள்ளியின் செயற்குழு உறுப்பினர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?

                     ஒரு மாணவனுக்கு தலா ரிம.5,000 வெள்ளியா?. அப்பகூட பயத்தைக்காட்டிக்கொள்ளாமல் ‘சரி ,எப்படி அப்டேட் செய்வது? என்று கேட்டேன்.அவரும் மிக பொறுமையாய் ஒரு தாளில் எழுதிக்காட்டினார். அடுத்து சில மாணவர்களின் சுயவிவர கோப்புகளை கேட்டார்.எடுத்துக்கொடுத்தேன்.என் கெட்ட நேரம் ,அங்கே ஒரு தவறு காத்துக்கொண்டிருந்தது.ஆம் ஒரு மாணவனின் பிறப்பு பத்திரம் இல்லாத ஒரு கோப்பும்  அதில் இருந்தது. ஒவ்வொரு மாணவனின் பிறப்புபத்திரம் அவசியம் கோப்புகளில் வைத்திருக்கவேண்டும்.ஆனால் அதற்கு என்னிடம் ஒரு பதிலும் இருந்தது.அந்த மாணவனின் அப்பா இந்தோனேசிய சிறைச்சாலையில் இருக்கிறார்.அம்மா மட்டுமே குடும்பத்தை வைத்துக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார். அவனுடைய பிறப்பு பத்திரம் அவனின் தாத்தா வீட்டில் இருக்கிறது.அம்மாவும் டென்சன் ,வேலைப்பளு காரணமாக ,அங்கே செல்ல இயலவில்லை’என்றேன்.பள்ளிக்கு அவன் கட்டணம் செலுத்தி பல மாதங்கள் ஆகிவிட்டது துவான்( ஐயா). ‘என்றேன்.

                      ‘அவன் எப்படி படிக்கிறான் ?என்று வினவினார் அதிகாரி.நல்ல மாணவன் ,கெட்டிக்காரன் .பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் எல்லாம் பெற்றுள்ளான்’என்றேன்.அதற்கு அதிகாரி கூறிய வார்த்தைகள்’டீச்சர் நீ அவனுக்கு உதவி செய்,உனக்கு இறைவன் வேற வழியில் உதவுவான்.மேலும் பூச்சோங்கில் மிகவும் குறைந்த (ரிம150)வெள்ளிக்கு இயங்கும் பாலர்பள்ளி உன் பள்ளிதான் போல?இதுவே நீ செய்யும் சேவை. வாடகையே ஆயிரம் வெள்ளி போனால் ,என்ன வருவாய் இருக்கு?என்று அவரே கணக்கு போட்டு பார்த்து விட்டு ,உன் அறப்பணியைக் கண்டு நான் வியக்கிறேன்.எல்லோரும் பணம் சம்பாதிக்கவே பாலர்பள்ளிகள் நடத்துகிறார்கள்,ஆனால் நீ சேவையாக செய்வது மிகபெரிய விசயம்’என்றார்.கொஞ்சம் மனம் ரிலாக்சாக ஃபீல் பண்ணியது.

                     மீண்டும் அதிகாரி ‘செல்வி உனக்கு மீண்டும் சொல்கிறேன்,உடனடியாக நீ சிஸ்டம்ல அப்டேட் செய்தாக வேண்டும்,உனக்கு ஏழு நாட்கள்தான் நான் கொடுப்பேன்.அதன் பிறகு செய்யாவிட்டால் ,அந்த நீல உடை அதிகாரியின் முடிவுதான் ,நானும் எடுக்க வேண்டி வரும்’என்று கூடி ,கடவு சொற்களையும் ,இணைய முகவரியையும் கொடுத்துவிட்டு,’நான் உனக்கு உதவி செய்துவிட்டேன்,இனி நீ எனக்கு உதவி செய். உடனே செய்’என்றார்.நானும் ரொம்ப தைரியமாக ‘துவான்,இன்று இரவே முடித்துக்கொடுக்கிறேன்’என்றேன்.ஆனால் அரசு சம்பந்தப்பட்ட இணைய தளங்களில் ஏதேனும் அப்டேட் செய்வது என்பது யானைக்கு கோவணம் கட்டுவதுபோல !ஆம்..அம்புட்டு நேரம் ஹேங் ஆகும்.எல்லோரும் பயன்பாட்டில் இருப்பதால் ,அப்படித்தான் ஆகும் என பதில் சொல்வார்கள். அனைவரும் விடைபெற்றனர்.

                         அப்பாடா! பிரசவ வலி தீர்ந்ந்ததுபோல ஒரு ரிலாக்ஸ்.போன மூச்சு வந்தது. கொஞ்சம் ஆசிரியைகளோடு விசயங்களைப் பறிமாறிக்கொண்டு ,உடனே நிலைமைய என் என்.ஜி.ஓவில் அழைத்துக்கூறினேன். சுமார் 15 குழுக்கள் இங்கே களத்தில் இறங்கிவிட்டன.உடனே சுற்று வட்டாரப்பள்ளிகளுக்கு தகவல் கொடுத்து அப்டேட் செய்ய சொல்லுங்கள்,அபராதம் ரிம5000 !‘என்றேன்.காட்டுத்தீப்போல எல்லோருக்கும் செய்தி பரவியது.

                      வீடு திரும்பியவுடன் என் சிஸ்டம்ல ஏழரை வந்து உட்காந்துகொண்டான் .ஆம்!அவர் கொடுத்த இணைய முகவரிக்கு மட்டுமே என்னால் நுழைய முடிந்தது.மற்றபடி என்னால் கடவு சொல்லை போட்டு அக்செஸ் பண்ண முடியவில்லை.’சரி வெள்ளிக்கிழமை எப்படியும் செய்யலாம்’ என இருந்தேன்.விதி வெள்ளிக்கிழமையும் விளையாடியது.கடவு சொல் போட்டாலும் என்னால் திறக்க முடியவில்லை,அதுதான் சொன்னேனே யானைக்கு கோவணம் கட்டுவதுபோல?என்று.சரி இதுக்கு மேல் ஒன்னும் செய்வதற்கு இல்லை’என அதிகாரியை அழைத்தேன்.அவரும் ‘அப்படியா?சரி இந்த எண்ணுக்கு அழைத்து சிஸ்டம் ஒருங்கிணைப்பாளரிடம் பேசு’என்றார்.

                   எங்கள் ஊரில் வெள்ளிக்கிழமை மாலை 4.30க்கு மேல்  அரசு அதிகாரிகள் போன் கால்களை அட்டெண்ட் செய்ய மாட்டார்கள். சோ நானும் ,கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே? என்று மன உளைச்சலுக்கு ஆளானேன்.சனிக்கிழமை எனக்கு வகுப்பு ,இரவில் ஆசிரமத்தில் பூஜை.ஞாயிற்றுக்கிழமை தேவாரப்போட்டி,மாலைதான் வீடு வந்து சேர்ந்தேன்.மிகவும் களைப்பானேன்.முகநூலை எட்டிப்பார்க்ககூட நேரமும் மனமும் இல்லாத நிலையில் ,என் கவலையெல்லாம் ‘எப்போ நான் செய்து முடிக்கப்போகிறேன்?

              இன்று காலை பள்ளிக்கு வந்ததும் ,அந்த அதிகாரி கொடுத்த எண்களுக்கு போன் செய்தேன்.மறுமுனையில் எப்போதும் போல பதில்’நான் வெளியே இருக்கிறேன், அலுவலகம் சென்றவுடன் ,நீங்கள் என்னை அழைக்கவும்’என்று பதில் வந்தது. அவர்கள் கொடுத்த காலம் ஏழுநாட்கள்,அதில் மூன்று நாட்கள் கழிந்துவிட்டன.’எப்படியும் முடித்து விடலாம் ‘என முடிவில் மீண்டும் கடவு சொற்களைப்போட்டேன்.என்ன ஆச்சரியம்?என்னால் அந்த பேஜ்க்கு போக முடிந்தது. அதிகாரி சொன்ன வழிமுறைகளைக் கொண்டு ஒரு மாணவனின் பெயரைத் தட்டினேன்.அவனுடைய முழு விவரங்கள் அங்கே இருந்தது.நான் அதை அப்டேட் செய்யவே இல்லையே?எப்படி ?மீண்டும் ஒரு மாணவனின் பெயரைத் தட்டினேன்.அவனுடைய குறிப்புகள் அனைத்தும் அங்கே இருந்தது.என்னடா இது?என் ஆசிரியைகள் இருவருக்கும் sap system செய்யத் தெரியாது.

                   பின்னே எப்படி? சரி ஒரு புதிய மாணவனின் பெயரைத் தட்டினேன்.அவனுடைய குறிப்பும் அப்டேட் செய்யப்பட்டிருந்தது.சரி பள்ளியின் மாணவர்கள் பட்டியல் என்று தட்டினேன்.என் அனைத்து மாணவர்களின் குறிப்பும் அங்கே அப்டேட் செய்யப்பட்டிருந்தது. ஆ!நான் காண்பது கனவா?ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு ,என் ஆசிரியை ஒருவளை அழைத்துக் காட்டினேன்.அவள் சுமார் பத்து வருடங்கள் அரசு ஊழியராக  பணியாற்றியவள்.அவளும் பார்த்துவிட்டு ‘டீச்சர் ,அரசாங்க ஊழியர்கள் மறந்து  கூட நம் வேலைகளை செய்யமாட்டார்கள்.அவர்களுக்கு அதுக்கு நேரமும் இல்லை,நேரம் இருந்தாலும் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள். நீங்க முன்பு ஏதும் அப்டேட் செய்தீர்களா?நன்கு யோசித்துப்பாருங்கள்’என்றாள். வாய்ப்பே இல்லையே,கடவு சொல்லே வியாழக்கிழமைதானே கிடைத்தது’என்றேன்.

                        சரி அந்த அதிகாரிக்கு போன் போட்டு கேளுங்கள் என்றாள் ஆர்வமாய்.ஆமாம் ,நாம் ஏதேனும் எண்களைத் தவறாக டைப் செய்திருந்தால் கூட திருத்தமாட்டார்கள்,நம்மை அழைத்து ‘இது தவறு நீதான் திருத்தவேண்டும் ‘என்று சொல்லும் அரசு ஊழியர்களா? நம் வேலைகளைச் செய்வார்கள்’என்ற கேள்விகளைச் சுமந்துகொண்டு போன் பண்ணினேன்.’துவான்,நீங்கள் சொன்ன கடவு சொல்லில் நுழைந்துபார்த்தேன்.என் 25 மாணவர்களின் குறிப்பும் அங்கே இருக்கின்றன.எப்படி?என்று கேட்டேன்.

                        அதிகாரியும் சிரித்துக்கொண்டே ‘நீ எனக்கு போன் செய்தமுதல் நாள் நானும் போய் சிஸ்டம்ல பார்த்தேன். நீ மீண்டும் எனக்கு போன் பண்ணியவுடன் உன் முயற்சி எனக்கு பிடித்திருந்தது. சிலர் என்னதான் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்,பயப்படவும் மாட்டார்கள் ,ஆனாம் நீ போராடிய விதம் ,மேலும் அன்று உன் பள்ளியில் நீ காண்பித்த கோப்புகள் யாவும் எனக்கு திருப்தியாக இருந்தன!ஆகவே, நானே உனக்காக எல்லாத்தையும் அப்டேட் செய்தேன்.எனக்கும் மனமும் உண்டு, நேரமும் இருந்தது.ஆனால் அடுத்த வருடம் இதுபோல நான் செய்து கொடுக்க மாட்டேன்.கவனத்தில் கொள்’சரி செல்வி நீ ஓய்வு எடுத்துக்கொள்’என்று சிரித்துக்கொண்டே போனை வைத்தார். அது வெறும் சிரிப்பு அல்ல,தெய்வீக சிரிப்பு! ஆமாம்,இளைய வயதினர் கூட கணினியில் உட்கார்ந்து பிறர் வேலைகளை செய்ய மறுக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு அரசு அதிகாரியா?இன்னும் நான் கனவு காண்பது என்னைக் கிள்ளிப் பார்க்கிறேன்.

                 அவர் சொன்ன அந்த வரிகள் என் செவிகளில் ஒலித்தது’
நீ பிறருக்கு உதவி செய்தால்,இறைவன் உனக்கு வேறு வழியில் உதவி செய்வான்! அவர் கொடுத்த வேலை என்னவோ கொஞ்ச நேரத்துவேலைதான் ஆனால் அதை எனக்காக அவர் ஏன் செய்யவேண்டும்?அதுவும் தமிழர்கள் நடத்தும் பள்ளிக்காக அவருக்கு என்ன அக்கறை?
                                                                        

3 comments:

  1. அடுத்த வருஷமாவது பொறுப்பா இருங்க டீச்சர்...

    ReplyDelete
  2. வணக்கம்,டீச்சர்!நலமா?///நல்லார் பக்கம் தான் ஆண்டவன் எப்போதுமே!

    ReplyDelete
    Replies
    1. நலம் சகோ..ஏன் முகநூலுக்கு வருவதில்லை.

      Delete