Friday, 15 August 2014

உலகம் அழியப் போகிறதா?

                                                                                         
               சின்னப்பிள்ளைகளாய் இவ்வுலகில்  உலா வந்த காலங்களில், உலகம் அழியப்போகுது என்று பெரியவர்கள் பேசிக்கொண்டால் ,வாய் வரைக்கொண்டு போன சோறு அப்படியே தட்டில் தானாய் விழும்.அப்படி  ஒரு பயம் .உலகம் அழிந்தால் நாமெல்லாம்  செத்துப்போயிடுவோமே?அப்பா அம்மா கூட வரமாட்டாங்களே?ஒரே இருட்டாய் இருக்குமே?எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்க இடம் கிடைக்குமா?என்றெல்லாம் கூட தோணும்!

          அதிலும் ஒவ்வொரு புதிய வருடத்தில்  உலகம் அழியும் என்று உறுதியாக, எங்க ஊர் மருத்துவச்சி கிழவி சொல்லும்போது,அந்த தில்லைநாதனின் அருகில் இருக்கும் சிவகாமியம்மை சொல்வது போலவே இருக்கும்.அதுக்கு காரணம் அந்த பாட்டி ,யாராவது நிறைமாத கர்ப்பிணியைப் பார்த்து ’இன்னிக்கு ராத்திரி வலி வரும்,இல்லாட்டா காலையில் பொறந்திடும் ‘என சொன்னுச்சினா அதே போல நடக்கும்.அதுமட்டுமா ,சும்மா கண்ணாலே வயிற்றை ஸ்கேன் பண்ணி உள்ளே இருப்பது ’ஆண் குழந்தையா ?பெண்குழந்தையா’ என சரியா சொல்லும்.

           அப்படிப்பட்ட ஆளுங்க உலகம் அழியப்போவதைப் பத்தி பேசினால்,நமக்கு பீதி பேதியாகத்தானே போகும்! உலகம் 2000 இல் அழியும் என்று வதந்தி கிளம்பியது.நான் கும்பிடாத சாமியே இல்லை.எங்க ஊர் மசூதியில் மட்டும்தான் நுழையவில்லை,காரணம் அங்கே இந்துக்களை அனுமதிப்பதில்லை.மற்ற எல்லா வழிபாட்டுத்தலங்களிலும் போய் கும்பிடுவேன்.அப்படி ஒரு பயம்.காலம் இப்படியே செல்லச்செல்ல சமய வகுப்புகளில்   பேசுகையில் ’உலகம் அழியும்,எப்போது என்றால் சில சம்பவங்கள் உலகில் நடக்கும் தருணம். அதைத்தான்  வைணவர்கள் ’கலிகாலம்’ என்றும் கூறுவார்கள்.

          அந்த சில சம்பங்கள் என்னவாக இருக்கும்?உலகம் வெப்பம் தாங்காமல் வறட்சி ஏற்படும் ,அப்போ தண்ணீர் பஞ்சம் உண்டாகும்.எங்கள் ஊரில் அனுபவித்துவிட்டோமே?அதுமட்டுமா  உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு நாட்டின், முக்கிய சொத்து ஒன்றை ,மன சாட்சியே இல்லாமல்  ஒரு தரப்பினர் சதி செய்து தகர்க்கும் காலம் உலகம் அழியும்!நடந்துச்சுதானே? கலிகாலத்தில்  ஒரே பிரசவத்தில் 5  குழந்தைகள் பிறக்குமாம்.அண்மைய மருத்துவ உலகத்தில் அப்படி ஒரே பிரசவத்தில்  ஒன்பது குழந்தைகள் வரை பிறந்திருக்கும் போல?உலகம் அழியப்போகிறதா?

         அதுமட்டுமா? பால்குடிமறவா பச்சிளங்களைக்கூட கற்பழிக்கும் காமுகர்கள் கலிகாலத்தில்தான் வாருவானுங்களாமே?வந்துட்டானுங்களே? பத்திரிக்கையில் தலைப்புச்செய்தி அதுதானே? கற்பழித்த பெண்ணின் கருப்பையை கைவிட்டு வெளியே இழுத்துப்போட்ட காமுகர்களும் பாரதநாட்டில் பிறந்திருக்கின்றனரே?தங்கையைக் கற்பழித்தவனின் உறுப்பை அறுத்து ,அவன் வாயிலே திணித்து கொடூர கொலையும் ,அதையும் காணொளியாக பதிவு செய்து நமக்கு கொடுத்த ,உலகம் அழியப்போகிறதா? கடவுளாக போற்றும் குருமாரர்களே பக்தைகளை பலவந்தம் செய்யும் கேவலமும் ,கர்ப்பகிரகத்தில் காமலீலை புரியும் மஹா கேவலமும் கலிகாலத்தில்தான் அரங்கேறுமாம்!எங்கேயோ கேள்விப்பட்டமாதிரி தோணுமே?

            முன்பெல்லாம் புற்று நோயில் யாராவது இறந்துவிட்டால் ,அந்த வியாதி பெயரைச் சொல்லாமல் ‘அதான்.. அந்த .....நோய்,ஐயோ ஆளையே கொல்லுமே?என்றெல்லாம் பீடிகை போட்டு,அதுவும் ரகசியமாக பெரியவங்க பேசுவாங்கள்.ஏதோ அந்த நோயின் பெயரைச் சொல்லக்கூடாத மாதிரியும்,அதைச் சொல்வது என்னவோ பெரிய பாவம் என்னும் நோக்கத்தில்.ஆனால் இப்போதைய காலக்கட்டத்தில் , மனிதன் கண்டிப்பாக ஏதாவது ஒருவித  புற்றுநோயில்தான் இறக்கப்போகிறான் என மருத்துவ உலகம் அஞ்சுகிறது.அதுமட்டுமா? அந்த காலத்தில் எல்லாம் ,இது போன்ற பணக்கார வியாதிகள் வயசானவர்களுக்கு மட்டும்தான் வரும்.தற்போது பிறந்த குழந்தைக்கு புற்றுநோய்!உலக அழிவின் அறிகுறியா?வாயிலே நுழைய முடியாத நோய்கள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் பல உயிர்களைப் பலி கொள்கின்றன.எபோலா நோய் பரவிய சிலநாட்களில் ஆயிரம் பேருடையை உயிரை பலி கொண்டதாம்?

                   இயற்கை பேரிடர் நடந்தால் உலகம் அழியப்போவது திண்ணம்!இது ஓர் அசைக்க முடியாத நம்பிக்கை. போனவாரம் கூட சீனாவை  நிலநடுக்கம் உலுக்கியது.சென்னையில் இடிமின்னல் தாக்கியபோது அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்து உயிர்கள் பலி!சுனாமியைப் பற்றி சொல்லவே வேண்டாம். அடிச்சி துவைச்சி கழுவிப்போட்டதுபோல,கடல் சீற்றம் !கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்துகொண்டுதானே வருது?திருவிழா நெரிசலில் உயிர்பலி!வழிபாட்டு தலங்களில் உயிர் பலி!தேவாலயத்துக்குச் சென்ற ஊர்தி விபத்து.சிவதலங்களுக்குச் சுற்றுலா சென்ற கார் விபத்து. தொழுகையின்போது குண்டு வெடித்து உயிர் பலி.

          மலேசியாவைப் பொறுத்தவரையில் சிலவிசயங்கள் நம் அறிவுக்கு எட்டாத விசயம் என்றே நாங்கள் நினைத்து வந்தோம்.அதாவது வான் ஊர்தி காணாமல் போவது.இன்று கண்டுபுடிக்கவே முடியாத அளவுக்கு ஒரு போயிங் ரக வான் ஊர்தி காணாமற் போச்சே?அறிவியலும் நவீனமும் பின்னிப்பிணைந்திருக்கும் இவ்வேளையில் ,அந்த விமானத்தை தேடுவதற்கு மந்திரவாதிகளை அழைத்து வந்த காமெடியும், உலக அழிவுக்கு இட்டுச்செல்லும் என்று சொன்னால் மறுக்கவா முடியும்?அவன் ஊர் சண்டைக்கு ,ஊரான் வீட்டு விமானத்தைச் சுட்டு வீழ்த்துவானாம் ?நடந்துச்சே?

             சகோதர சண்டையில் மதத்தின் பெயரைச் சொல்லி உயிரோடு நம் கண் முன்னே நொடி நேரத்தில் நூற்றுக்கும் மேல் உயிர்களைப் பழி வாங்கும் செயலை தினமும் காண்கிறோம்.அது எதன் அடையாளம்?மதத்தில் தீவிரம் என்று பிற மதங்களை குறை கூறி கூவி கூவி பேசும் அவலமும் இந்த கலிகாலத்தில் கண்முன்னே அரங்கேறுகின்றதல்லவா?தன்னை ஏமாற்றியவ(ன்)ள், ’எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்’என்று வாழ்த்திய மனிதர்கள் வாழ்ந்த இதே உலகில்தான்  ,ஒரு பெண் தன்னை ஏமாற்றியதால் ,அவளுடைய அந்தரங்ககதையை பதிவு செய்து உலகத்துக்கு காட்டும் விநோதமும் கலிகாலத்தில் சர்வசாதரணமாய் போய்க்கொண்டிருக்கின்றன!விலங்குகள் மனிதை அழித்த காலம் போய் ,மனிதனை மனிதனே அழிக்கும் காலம்தான் கலிகாலம்.பின்னே உலகம் அழியாதா என்ன?

              சரி இறுதியாய் என்னதான் முடிவு பண்ணுவது?உலகம் அழியுமா?அழியத்தான் வேண்டுமா?அதனால் உனக்கு என்ன பலன்?நான் ஏங்கி ஏங்கி வேண்டிய  ஒன்று எனக்கு கிடைக்காத ,நடக்காத பட்சத்தில் உலகம் அழியட்டும் என்று நினைப்பது ஓவ்வொரு தனிமனிதனின் சுயம்தானே?
இத்தனையும் நடந்துகொண்டிருக்கும்போது ,’உங்க இறைவன் என்ன செய்துகொண்டிருக்கிறான்?என்று சிலர் கேட்கிறார்கள்...’ஹாஹ்ஹாஹாஹா அவர்களுக்கு நாம்  சொல்லும் ஒரே பதில்,அவன் ரொம்ப பிசியா இன்னுமொரு உலகத்தைப்படைத்துக்கொண்டும் ,இந்த உலகத்தைப் பையை பைய அங்கும் இங்குமாக அழித்துக்கொண்டிருக்கிறான்!

             பசுவை பாசத்தோடு இணைத்து ,அதன் பற்றை அறுக்கச் செய்யும் பதியின் செயல்தான் உலக அழிவாக இருக்குமோ???

4 comments:

  1. மிக நல்ல கட்டுரை...
    உலகம் அழியப் போவதாக கதைகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் பல இடங்களில் போரினால் அழிவுகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.

    ReplyDelete
  2. கடிதத்தில் அணுகுண்டு வைத்து அனுப்பி அழிவை ஏற்படுத்த தீவிரவாதிகள் முயற்சி - போலீஸ் தகவல்...என்னமா கிளம்புறாங்க ?

    சூப்பர் பதிவு டீச்சர்...!

    ReplyDelete
  3. உலகம் அழியாமல் இருப்பதன் மாயை மனிதம் சிறிதேனும் எங்கோ உயிர்த்திருக்கிறது ...

    ReplyDelete