Monday, 18 August 2014
புதுப்பிக்கப்பட்ட நட்பை..மீட்டுக்கொண்டான் நமன்!
கடந்த 12 வருடங்களுக்கு முன் ஜப்பானிய நிறுவனத்தில் திரு.குமாரசாமி எங்களோடு பணிபுரிந்தார்.மிகவும் நகைசுவை உணர்வுடன் பேசுபவர்.உதவும் மனப்பான்மை கொண்டவர். நான் வேலையை ராஜினாமா செய்தவுடன், எப்போதாவது தொலைபேசியில் பேசுவார்.பிறகு பைய பைய தொடர்பு காணாமற்போனது .சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு ,இரண்டு மாதங்களுக்கு முன் ,என் தோழியை எதேச்சையாக சந்தித்த அவர்,என் தொலைபேசியை எண்களை எடுத்துக்கொண்டு என்னை அழைத்தார்.
’ஹலோ செல்வி இருக்காங்களா?என்றார். ‘செல்வி போனுக்கு அழைத்தால் செல்விதானே பேசுவேன்’என்றேன். ‘இல்லை நான் உங்க ரசிகர் ’என்று அவர் பாணியில் கிண்டலடிக்க,குரலை அனுமானித்துக்கொண்டு ‘உலகம் முழுவதும் ரசிகர்கள்,நீங்கள் எந்த நாட்டு ரசிகர்?’என்றேன். ‘குமார் என் கிட்டேயேவா?என்றேன். ‘என்ன செல்வி ,உன் பேச்சில் ஒரு மாற்றமும் இல்லை.அப்படியேதான் பேசுகிறாய்.அதே பிடிவாதம் ,மர்ம போன் என்றாலே ,ஒரு கோபம் கலந்த பதில்’ என்றார்.காரணம் அலுவலகத்தில் இருந்த காலங்களில் ,அடிக்கடி மிமிக்ரி செய்து ,நல்லா திட்டு வாங்கியவர் குமார்.’உங்க குரல் எனக்கு தெரிந்துவிட்டது ’குமார்.என்றேன்.
சுமார் அரைமணி நேரம் பேசினார்.அவருக்கு ஆண் குழந்தை பிறந்தபோது ‘நானும் (கனடா)தோழியும் சேர்ந்து கணிச்ச பெயரை அவர் பையனுக்கு வைத்தார். என்னை மறக்காமல் இருந்தமைக்கு நன்றி ‘என்றேன். ’என்ன செல்வி பைத்தியமா?என் பையனைப் பெயர் சொல்லி அழைக்கும்போதெல்லாம் நீங்களும் புஷ்பாவும் என் நினைவில் வந்து போவீர்கள்.அப்படி இருக்க எப்படி மறப்பேன்?’என்றார். அதன் பிறகு குமார் போன் பண்ணவே இல்லை.நானும் வேலை ,படிப்பு ,டியூசன்,முகநூல் என்று என் அருகில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளாமல் இருந்தேன்.
நேற்று நாடு தழுவிய நிலையில் ஒரு கருத்தரங்குக்குச் சென்றபோது ,அங்கே பழைய அலுவலக நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.எல்லோரிடமும் பேசி விடைப்பெற்றபோது ,மீண்டும் பழைய அலுவக நினைவுகளில் சிக்குண்டு ,அந்த நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டே வீடு வந்த போது,குமாருக்கு போன் செய்ய வேண்டும். அவர்தான் ஒவ்வொரு முறையும் போன் செய்கிறார் .ஒருவேளை நான் போன் செய்யாததால் என் மீது கோபம் போல?’என்று நினைத்துக்கொண்டு ,’சரி பிறகு பழைய போனில் எண்களைத் தேடி அழைக்கலாம் ‘என அப்படியே மறந்துவிட்டேன்.
இரவில் போன் அலறியது.மறுமுனையில் தோழியின் குரல் ,பதற்றமாக ‘செல்வி ,குமார் மாரடைப்பால் இறந்துட்டார்...ஐயோ நல்ல நண்பரை இழந்துவிட்டோமே’என்றாள்!உறைந்து போனேன்.செய்வதறியாது நின்றேன்.உடனே கனடாவில் இருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் தோழிக்கு விசயத்தைச் சொன்னேன். என்ன வேலையானாலும் போய் பார்த்தே ஆகவேண்டும் ‘என்று பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு ஓடினேன்.கனடா தோழி என்னைக் கண்டவுடன் அணைத்துக்கொண்டு ‘'nice to see you selvi but feel bad to meet you here selvi!' என்றாள். அழாமல் இருக்க ரொம்ப சிரமப்பட்டேன்!
தொடர்பிலிருந்து காணமற்போனவர் ,அப்படியே போயிருக்கலாமே?ஏன் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு நட்பை புதுப்பித்தார்..இவ்வுலகை விட்டுப்பிரியப்போகிறேன் ‘என்று சொல்லாமல் சொல்வதற்காகவா?
Subscribe to:
Post Comments (Atom)
ஆழ்ந்த இரங்கல்கள்! சில சமயம் உள்ளுணர்வு இப்படி அமைவது உண்டு! என்னுடைய சித்தப்பா இறப்பதற்கு முன் என்ன நினைத்தாரோ தான் பிறந்த ஊருக்கு சென்று பார்த்து வந்தார். அடுத்த ஒருவாரத்தில் இறந்து போனார்!
ReplyDeleteஅன்புள்ள செல்வி , உங்களின் இந்த நினைவுகூரல் என் கண்களை ஈரமாக்கியது. எத்தனையோ பேர் நம் வாழ்க்கை எனும் பூங்காவனத்தில் நடந்து சென்றிருந்தாலும், சில அன்பான நண்பர்கள் ஆழமான கால் தடங்களை நம் இதயத்தினுள் பதித்து சென்று விடுகின்றனர், நம் நண்பர் குமாரசாமியை போல். உங்களை போலவே எனக்கும் அவருடனான நினைவுகள் நிறைய உண்டு. ரொம்பவும் நகைச்சுவை உணர்வுமிக்க அன்பான நண்பர், என் திருமணம் முடிந்த உடனேயே இவருடனான நட்பு விட்டு போயிருந்தாலும், அவருடன் நீங்கள், நான், சாந்தி, மேகலா, சந்திரன் சார், பாலையா சார், பாலா சார் எல்லோரும் பழகிய அந்த பொன்னான நாட்கள் என்றும் மறக்க முடியாதவை.....செய்தி கேட்டு நானும் அதிர்ந்துதான் போனேன் செல்வி...அவர் ஆதமா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம்...
ReplyDelete