Sunday, 20 May 2012

உண்மை அன்பையும் ,இயற்கையையும் தடுக்க முடியுமா?

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னாள் ,என் மாணவன் ஒருவன் ,6 வயது பையன்,தினமும்  காலையில் ,எனக்கு ஒவ்வொரு விதமான பூ கொண்டு வந்து கொடுப்பான்.அவன் தந்தை பள்ளிக்கு வரும்போது ,டீச்சர் இன்னிக்கு கொடுத்த பூ ,இந்த கடையில் வாங்கிய செடி ,அங்கே வாங்கியது என்று விளக்கம் கொடுப்பார்.அதிலே தெரியும் அவருக்கு செடி நடுவதில் இருக்கும் ஆர்வம்!’என் டீச்சருக்கு நான்  செய்ததை ,என் பையன் செய்கிறான் டீச்சர் ‘என்பார்.’ஒரே ஆண் வாரிசு டீச்சர்,என் கனவே அவன்தான்.அவனுக்காக எல்லாமே சேர்த்து வைக்கிறேன்.இரண்டு பெண் பிள்ளைகள்.அவர் நல்ல வசதியானவர் ஆனாலும் அவர் என்ன தொழில் செய்கிறார் என்பது எனக்கு மர்மமாகவே இருக்கும்.காரணம் அவர் கட்டணம் செலுத்த வரும்பொழுதோ அல்லது பள்ளிக்கு ஏதாவது நன்கொடை கொடுக்க வந்தாலோ,அவர் பணப்பையில் கட்டுக்கட்டாக கசாமுசாவென கிடக்கும்  பணத்தை அவர் எடுத்து மேஜை மேல் வைக்கும் விதம்???எனக்கு சந்தேகமாக வே இருக்கும்!அது அவர் தனிப்பட்ட விசயம் ,எங்களுக்கு நல்லது செய்கிறார் அது போதும் என்று பேசாமல் இருப்பேன்.

அவர் வீட்டில் நிறைய பூச்செடிகள் வைத்திருக்கிறாராம்.அது அவருக்கு பொழுதுபோக்கு என்று அவர் மனைவி சிலநேரங்களில் வந்தால்,சொல்லுவார்.இப்படி இருக்க ஒருமுறை எனக்கு அந்த பையன் கொண்டு வந்த பூ ,நான் இதுவரையில்  பாத்திராத பூ!மல்லிகைப்பூதான் ஆனால் சுமார் எலுமிச்சைப்பூப்போல அளவு,சுமார் மூன்றுக்கும் மேலான அடுக்கு (இதழ்கள்).நிஜமாகவே அவன் கொடுத்த பூக்களில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த பூ.உடனே அவனை அழைத்து,அம்மாவை எனக்கு போன் பண்ண சொல் என்றேன்,என் சக ஆசிரியர்களிடமும் காட்டினேன்.அவர்களும் இது மல்லிகைவகைத்தான் ஆனால் மிக அரிது கிடைப்பது என்றனர்.
                                                                         
மறுநாள் ,அந்த மாணவனின் அப்பா ,ஏதோ முக்கியமான விசயம்னு பள்ளிக்கூடத்திற்கே வந்தார்.என்ன டீச்சர் ,பையன் போன் பண்ண சொன்னிங்கன்னு சொன்னான்,அதான் வந்தேன்’என்றார்.ஐயையோ,முக்கியமான விசயம் ஒன்னும் இல்லைங்க பிரதர் ,வந்து நேற்று அவன் கொடுத்த பூ ரொம்ப ,அழகாக இருந்தது,வித்தியாசமாகவும் இருந்தது,அதான் அது பற்றி கேட்க ‘என்று கொஞ்சம் பயந்துகொண்டே சொன்னேன்(ஆமாம்,காலையில் வேலைக்கு போகும் அவரை ,சும்மா கூப்பிட்டு பூ நல்லாயிருக்கு பொடலங்காய் நல்லாயிருக்குன்னு).ஆனால் அவரோ ‘ஓ அதுவா டீச்சர் ,அது எட்டடுக்கு மல்லிகைன்னு சொல்வாங்க.அது எல்லாரிடமும் வளராது,ரொம்ப நல்லா பராமறிக்கணும்.இருங்க நாளைக்கும் கொடுத்து விடுகிறேன் ,என்று சொல்லி ,வந்ததுக்காக  பள்ளிக்கட்டணம் செலுத்திவிட்டு சென்றார்.
தின்மும் அந்த பூ என் பள்ளியின் பூஜை அறையை அலங்கரிக்கும்.நாட்கள் ஓட ஓட ஒருநாள்,அந்த பையனின் அம்மா ,பள்ளிக்கு அந்த பூச்செடியை கொண்டு வந்து கொடுத்தார்,என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.’இந்தாங்க டீச்சர் ,நீங்க அவர்கிட்டே சொன்னதும் ,வீட்டில் வந்து ,ஒரு கிளையை உடைத்து ,வேறொரு ஜாடியில் நட்டு வைத்தார்,கொஞ்சம் வளர்ந்து இலைகள் வந்தவுடன் கொடுக்கலாம்னு ,வீட்டில் வைத்திருந்தார்,  இப்போ கொடுப்பதற்கு தயாராகிவிட்டது’என்றார்.எனக்கு ஒரே ஆச்சரியம் ,இப்படியும் நல்ல கணவன் மனைவியா??என் ஆசைக்கு இப்படி ஒரு முக்கியத்துவமா?
வீட்டில் வைத்து நல்லபடி பராமறித்து வந்தேன்.எப்போடா பூ பூக்கும் என்று ஆர்வமாய் எட்டி எட்டிப்பார்ப்ப்பேன்.
                                                                               
இப்படியே சிலமாதங்கள் கழித்து ,ஒருநாள்   அந்த நெஞ்சைப் பிழிய வைக்கும் செய்தி  வந்தது.ஆம்,அந்த தந்தையை ரெஸ்டாரண்ட்டில் வெட்டிக்கொலை செய்தனர் என்ற செய்தி.பள்ளிமுடிந்து பதறியடித்து ஓடினேன்..ஐயோ ,மலைப்போல் நின்றவரை சாய்ச்சிட்டானுங்களே பாவிங்க?? பிசினெஸ் பொறாமையால் கொல்லப்பட்டார் என்று கேள்வி!பெட்டிக்குள் அந்த தந்தை,இது நிஜமா??என்னால் யூகிக்கவே முடியவில்லை.ஐயோ ..’டீச்சர் ,என் பையனுக்கு ஒன்னுமே தெரியல டீச்சர்,அவனைப்பார்த்துக்குங்க டீச்சர்னு,மனைவி ,அழ..வேறென்ன? நமக்கும் மறைத்தாலும் கண்ணீர் மடிதாண்டி விடுமே??
இதற்கு மேல் அங்கே நிற்பது சரியில்லை என்று வெளியேறிவிட்டேன்.
 அந்த சம்பவம் என்னால் மறக்கமுடியாத ஒன்று.ஆனாலும் பள்ளி உறவு என்பதால் கொஞ்சம் மறக்க முயற்சி செய்தேன்.இருந்தாலும் அவர் கொடுத்த செடியைப்ப்பார்ர்கும் போதெல்லாம் ,அவர் இல்லையென்றாலும் அந்த செடி இருக்கு,என்றாவது ஒருநாள் பூக்கும் என்ற நம்பிக்கையே!ஆனால் என் நம்பிக்கை பாழாய் போனது.நான் செடி வைத்திருந்த இடத்தில் இந்தோனேசிய வேலைக்காரனுங்க ,ஏதோ பொருட்களை கிடத்தி வைத்திருந்தனர்.என் வீடு தரை வீடு ,என்பதால் ,அவனுங்க பொருட்களை என் அனுமதியோடு அங்கே விட்டு செல்வார்கள் ,பிறகு வேலைக்குப்போகும்பொழுது,எடுத்துச் செல்வார்கள் .அப்படி எடுக்கவும் வைக்கவும் இருக்க,அந்த செடிமேல் ஏதோ திராவாகம் பட்டு, செடி நாளடைவில் பட்டுப்போனது!இது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது,அவனுங்க திட்டலாம் என்றால் ,பயம் .எதையும்செய்ய துணிந்தவனுங்க ,அவனுங்க!சரி மனதை கஷ்டப்பட்டு தேத்திக்கொண்டேன்.கேட்டாலும் திரும்ப வரவா போகுது ,செத்தது??
 அன்று முதல் அந்த செடிப்பக்கம் போகவே மாட்டேன்.பார்க்கும் போதெல்லாம் வயிறெரியும்.இது நடந்து ஒரு மூன்று மாதங்கள் ஆகின.

இன்று காலையில் ஏதேச்சையாக அந்த செடிப்பக்கம் போன எனக்கு ஓர் ஆச்சரியம்!என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.ஆம் பட்டுப்போன அந்த செடியின் தண்டில் கீழ் மீண்டும் அந்த செடி முளைத்து இருந்தது!ஐயோ ,இறந்த அந்த மனுசன் உயிர்பெற்றதுபோல ஒரு மகிழ்ச்சி ,அப்படிப்பட்ட வருத்தமும் வேதனையும் தந்தது செடி செத்துபோனபோது!கடையில் வாங்கலாம்   ஆனால் ஒருவர் அன்பாக கொடுப்பதுக்கு சமமாகுமா??                                                      
இதுதான், இயற்கையைத் தடுக்கவா முடியும் ,உண்மை அன்பை மூடி வைக்கவா முடியும் என்று கேட்கிறார்கள்??இன்று முதல் நல்லபடி பராமறிப்பேன்.என் ஆசை நிறைவேறுமா?அந்த செடியில் பூக்கும் முதல் பூ ,என் பூஜை அறைக்கு ,இரண்டாம் பூ ,இறந்துபோன அந்த தந்தைக்கு சமர்ப்பணம்!

10 comments:

  1. நல்லமனிதர்களை இந்த உலகம் வாழவிடாது என்பதை பார்த்து மனம் துடிக்கிறது.

    ReplyDelete
  2. பூவின் மீது விருப்பம் கொள்ளும் மனிதர்கள் ரொம்ப சாதுவானவர்கள் என கேள்விப்பட்டு இருக்கேன் அப்படிபட்டவரையும் பொறாமை உலகம் விட்டு வைக்கவில்லை....!!!

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் ,ஆனால் அவர் வேலை கந்து வட்டில் வசூல் என்றே நினைக்கிறேன் மனோ.

      Delete
  3. செடி பூப்பூத்து உங்கள் பூஜை அறையை நிச்சயம் அலங்கரிக்கும்.

    ReplyDelete
  4. அண்ணி....படிச்சேன்...ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது...அதுவும் நீங்க விவரிக்கிறதில் ஒரு உயிர் இருக்கு அண்ணி....எல்லாமே எனக்கு விஷுவல் ஆ டிஸ்ப்ளே ஆச்சு...நல்லா எழுதுறீங்க...சீக்கிரம் அடுக்கு மல்லிப்பூ பூத்து குலுங்கும்...உங்கள் விருப்பம் நிறைவேறும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆனந்தி,மிக்க மகிழ்ச்சிடா

      Delete
  5. Great writing. It touched my soul. Your wish will be fulfilled soon. He presented it to you wholeheartedly, there is no way that the plant will die.

    ReplyDelete