Wednesday, 28 May 2014

கோபத்துக்கு கழிவு 40வெள்ளியா?


            சீனர் கடைக்குச் சாப்பிடப்போனோம்.10 நிமிடம் ஆகி ஆர்டர் பண்ணிய குளிர்பானம் வந்தன. அரைமணி நேரம் ஆனது சாப்பாடு வரவில்லை.பேசாமல் இருந்தேன் ,பிறகு சாப்பாடு வந்தது எங்களுக்கு அல்ல,எங்களுக்கு பின்னால் வந்த மேஜைக்கு போனது.இனியும் பேசாமல் இருப்பேனா? கூப்பிட்டேன் ‘எங்கே உணவு’?லேட் ஆகுமா?என்றேன்.
           சில சீனர் கடைகளில் தமிழர்களை மதிப்பது குறைவு காரணம் நாம் அவர்களைப்போல பாம்பும் பன்றி இறைச்சியும் சாப்பிடமாட்டோம் ,ரொம்ப குறைவான விலைக்கு சாப்பிடுவோம் என்ற இளக்காரம்!அந்த நேரம் வூட்டுக்காரய்யா பக்கத்து கடையில் ஏதோ வாங்க போய்விட்டார். கடைக்காரியும் ‘இரு தோ வருது ‘என்று சொல்லிச் சென்றவள் ,40 நிமிசம் ஆனது.இனியும் தாங்காது ;என்று எழுந்து ‘ஹலோ நாங்க குடிச்ச டிரிங்ஸ் மட்டும் பில் போடு நான் கிளம்புகிறேன்’என்று குரலை உயர்த்தினேன். 
          முதலாளி ஓடிவந்தாள் ‘என்ன மேடம்?’என்றாள்.’40 நிமிசம் ஆச்சு!என்ன நடக்குது?என்றேன். ‘இல்லை நீ சைவம் அசைவம் கலந்து ஆர்டர் செய்ததால் வந்த கோளாறு ‘என்று சமாளித்துக்கொண்டே கடைப் பெண்ணிடம் சைகையில் பேசினாள்.அவளும் ஏதோ ஒரு ஐயிட்டத்தைக் கொண்டு வந்து வைத்தாள் ‘இது என்ன?’ என்றேன். இல்லை ..வந்து ..’என்று நீட்டினாள்.நான் இதை ஆர்டர் செய்யலை ,போதும் பில் போடு ‘என்று எழுந்தேன் (உள்ளுக்குள் பயம்தாம் இருந்தாலும் கோபத்தைக்காட்டணுமே?) பிள்ளைகளும் ‘அம்மா பேசாமல் இருங்க,’என்று கண் ஜாடை செய்தனர். 
          அதற்குள் வூட்டுக்காரய்யா வரவே ’கடைக்காரி ஐயாவிடம் ‘சாரி ..பூரி’என்று மழுப்பினாள்’நிலைமையை அறிந்தவர் பிள்ளைகள் இன்னும் சாப்பிடல ,அதான் இதான் என்று என் கோபத்துக்கு விளைக்கம் கூறிக்கொண்டிருந்தார்,நான் அவளிடம் ’ஆர்டர் செய்ததை கான்செல் பண்ணு ‘என்று காருக்குள் போனேன். சாரி மேடம் ’‘என்றாள்.பசங்களும் என்னோடு ஓடி வந்தார்கள்.சற்று நேரம் கழித்து பொட்டலங்களோடு வந்த கணவர்’ அவளும் ரொம்ப மன்னிப்புக் கேட்டாள்,எனிவேய் ரிம100 பில்,லேட் ஆகியதால் ரிம60தான்’பில் போட்டாள்’என்றார்.’அடடா!அப்படின்னா இனிமேல் போகிற கடையில் எல்லாம் சண்டைபோடலாமே,கழிவு விலை கிடைக்கும்’என்றேன்.முன் சீட்டில் இருந்து ஒரு குரல்’இனி உன்னை கடைக்கு அழைச்சிட்டுப்போனால்தானே?நான் அப்படி நடந்துகொள்ள காரணம் ஒரு பாடம் புகட்டவே மேலும் நம் இனம் என்றால் ஏளன புத்தி வரக்கூடாது என்பதால் மட்டுமே.
                        உரிமையைத் தட்டிகேட்டால் தப்பா?

Sunday, 25 May 2014

ஒரு தவறுன்னா பரவாயில்லை!

                         சென்றமாதம்  காலையிலே 6 மணிக்கெல்லாம் காரை விட்டேன், யூனிவர்சிட்டி மருத்துவமனைக்கு. மலாயா பல்கலைக்கழகம் அருகே இருப்பதால்  அதன் பெயர் பல்கழைக்கழக மருத்துவமனை.எனக்கு கண்,காது,தொண்டை நிபுணரைச் சந்திக்க தேதி நியமனிக்கப்பட்டிருந்தது.
             பொதுவாகவே அந்த மருத்துவமனைக்கு போகும் சாலைகள் சாதா நாட்களிலே கொடுரமான நெரிசல் ஏற்படும்.அதுவும் திங்கட்கிழமைகள் ,பள்ளி நாட்களில் சொல்லவே வேண்டாம்.ஆகவே நெரிசலைத் தவிர்க்க , காலையிலே காரை விட்டேன். அப்படி ஓடவும் ஒரு காரணம் உண்டு.பிரத்தியேக கார் பார்க்கில் கார் நிறுத்தும் இடம் ரொம்ப குறுகலாக இருக்கும்.என்னால் அப்படி உள்ள இடத்தில் காரை நுழைக்கவோ? காரைப்பார்க் பண்ணவோ ரொம்ப கஷ்டப்படுவேன்.என் கார் ஸ்டேரிங் பவர் ஸ்டேரிங் அல்ல என்பதால்!
           
             அப்படி ஒருமுறை என் தங்கை மருத்துவமனையில் அட்மிட் ஆனதால் அவள் காரை முதன்முதலாக நான் ஓட்ட வேண்டிய நிலைமை!காரை எடுத்து இறங்கிய நொடியில் சர்ரேன்று குறுகலான பாதையில் கார் தேய்ச்சிக்கொண்டுப்போனது.சுமார் ரிம300 வெள்ளி செலவு வச்சது.அன்று முதல் எனக்கு அங்கே கார் பார்க் பண்ண பயந்து கொண்டு ,திறந்த வெளியிலோ அல்லது மருத்துவமனைக்கு வெளியிலே காரை பார்க் பண்ணிவிடுவேன்.அன்று என் தோழி சொன்னால்’டீச்சர் நீங்கள் ஏன் கஷ்டப்படுறிங்க கொஞ்சம் சீக்கிரமா போனால் கேட் அருகிலேயே கார் பார்க் பண்ணலாம்’ என்றாள். சரி அவ அடிக்கடி போய் வருபவள் ஆனால் கணவர்தான் கார் ஓட்டுவார் ,இவளுக்கு காரைப்பத்தி ஒரு மண்ணும் தெரியாது.அவ கணவரைக் கேட்டிருக்க வேண்டும்.

              நானும் ரொம்ப திறமையாய் காரை விட்டேன்.மருத்துவமனையை நெருங்கிய போது காலை மணி 6.30. நானும் தோழி சொன்ன இடத்துக்கு காரை விட்டேன். கார் போய் நுழைவாயிலில் நின்று டிக்கெட் எடுத்தால்  தானியங்கி கேட் திறக்கும்.அந்தோ பரிதாபம்! , நான் தவறுதலாக நுழைந்துவிட்டேன்.என்னால் டிக்கெட் எடுக்கமுடியவில்லை காரணம் அது மருத்துவமனை ஊழியர்களின் பார்க்கிங் இடம் ,பாஸ் இருந்தால் மட்டுமே கேட் திறக்கும்,நானும் பின்னால் போகமூடியாமல் காலையிலே அழாத குறையாய் நிற்க எனக்கு பின்னால் (நல்லவேளை காலை 6.30 என்பதால்) ஒரு நான்கு கார்கள் மட்டுமே  கடுப்பில் ஹார்ன் அடித்துக்கொண்டு நின்றன. என் பின்னால் நின்ற நர்ஸ் இறங்கி அவர்களிடம் நிலைமையை விளக்கி விட்டு நான் பின்னால் ரிவர்சில் போக ஏதுவாக அவள் காரை ரிவர்சில் எடுத்து எனக்கு வழி கொடுத்தாள்.அழுதே விட்டேன் .

                      அப்படியே போய் ரொம்ப சிரமப்பட்டு காரை ஓரிடத்தில் வைத்துவிட்டு ,மீண்டும்  தவறான இடத்தில் பார்க்கிங்  டிக்கெட் எடுக்க போனேன்.நல்லவேளையாக அங்கே இருந்த செக்யூரிட்டி காண்பித்தான். அப்போதான் தெரியும் ,நான் போகும் கிளினிக் எங்கோ இருக்கிறது நான் காரைப் பார்க் பண்ணியது வேறு ஒரு இடத்தில் என்று.’சரி காரை வைத்துவிட்டாய்,இனி காரை எடுத்தால் அப்புறம் பார்க்கிங் கிடைக்காது’என்றார் செக்யூரிட்டி.என்ன செய்ய! சுமார் அரை கிலோ மீட்டர் காலையிலே அவசர அவசரமாக  ஓடினேன்.நிறைய மாற்றங்கள் ,புதிய கட்டிடங்கள் ,பல புதிய அறைகள் என எல்லாமே புதிதாக இருந்தன.இரண்டு வருடங்களில் அப்படி ஒரு மாற்றம்.அங்கே போய் நம்பர் எடுத்தேன் .என் டெர்ன் ஐந்து காட்டியது.கொஞ்சம் அமர்ந்த்து ஆ.வி புத்தகத்தைப்புரட்டினேன்.மனம் ஏதோ தவறு என்று சொல்வதுபோல அசெளகரியமாக இருந்தது. எட்டிப்பார்த்தேன் நான் உட்கார்ந்து இருந்தது கண் கிளினிக். டிக்கெட்டை அங்கேயே கடாசி விட்டு பக்கத்தில் இருந்த காது கிளினிக் வந்தேன்.இரண்டு கவுண்ட்டர் ,சரியா படிக்காமல் (கண்ணாடி அணியாமல்)டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மீண்டும் உட்கார்ந்தேன் .

                  என் பக்கத்து இருக்கையில் இருந்த பெண்மணியும் டிக்கெட் வைத்திருந்தாள். அவள் வைத்திருந்த டிக்கெட்டில் E போட்டு பிறகு எண் இருந்தது.எனக்கு வெறும் எண் மட்டுமே.அவளிடம் காட்டி ஏன் எனக்கு இ இல்லை ’என்றேன்.’நீ காது பார்க்க வந்தியா ?என்றாள்’ஆமாம் ‘என்றேன்.’அப்படின்னா நீ வலப்பக்கம் இருக்கும் கவுண்ட்டரில் டிக்கெட் எடு,இது கர்ப்பப்பை கவுண்டர் ‘என்றாள்.ஏன் கர்ப்பை கிளினிக் சம்பந்தமில்லாமல்  இங்கே இருக்கிறது?என்று கொஞ்சம் கோபமாக கேட்டேன்.அவளும் மெதுவாக ’நம் நாட்டில் எது சிஸ்டமெட்டிக்-ஆக இருக்கு?என்றாள். மேலும் ‘நீ இங்கே புதுசா”என்றாள்.இல்லையே என் பிரசவம் தொடங்கி பல சிகிச்சைக்கு இங்குதான் வருவேன்.ஒரு இரண்டு வருசமா ரொம்ப நலமாக இருப்பதால் ,இங்கே வர வேண்டிய வேலை இல்லை’ என்றேன்.சிரித்தாள் ,’இரண்டு வருடங்களில் நிறைய மாற்றங்கள் தோழி’சரி போய் முதலில் டிக்கெட்டைச் சரியா எடு ‘என்று பணித்தாள்.

                    நான்காவது தவறு?சரி போய் டிக்கெட் எடுத்து காத்திருந்தேன்,என் டெர்ன் வந்ததும் உள்ளே போய் ,இங்கே எந்த தவறும் நிகழக்கூடாது என்று ரொம்ப கவனமா டாக்டரிம் காதைக் காட்டினேன் ஆனால் டாக்டர் தவறான காதை(வலியில்லாத காதை)முதலில் பார்த்தார்.காது நிபுணர்கள் எப்போதும் நார்மலான காதைத்தான் முதலில் பார்ப்பார்களாமே?எல்லாம் முடிந்து ‘நல்லா இருக்கு,நீ இனி வலி என்றால் மட்டும் வரலாம்’என்றார். எங்கேடா வேறு எதுவும் தவறு நடந்திடும் என்று அவசர அவசரமாக ஓட்டமும் நடையுமாய் திரும்பினேன்.

             அந்த தவறுகளில் நிறைய அனுபவம் பெற்றேன். நிறைய  மாற்றங்கள் செய்யப்பட்டன. என்னைப்போல நீண்டநாட்கள் போகாதவர்கள் யாரும் அங்கே போவதாக கூறினால், சரியான வழி,பார்க்கிங்,கிளினிக் என்று விலாவாரியாக கூறி அனுப்புவேன்.திரும்பியவுடன் அவர்கள் வந்து நன்றி கூறிவிட்டு’நல்லவேளை நீங்கள் சரியா சொன்னீங்கள், இல்லாட்டா பழைய கட்டிடங்களில் போய் அலைமோதிக்கொண்டு இருப்போம் ‘என்பார்கள்.
                 என் ஜப்பானிய பாஸ் எப்போதும் ஒன்று சொல்வார்:
             learn from mistakes and mistake  makes a man perfect!

         



Friday, 23 May 2014

ஒரு பாராட்டும்... உற்சாகமான சொல்லும்!


                 எப்போதும் காலையில் 6.15 க்கு அலார்ம் அடித்தும் எழ மாட்டான், நான் அவசர அவசரமா பூஜையை முடித்துக்கொண்டு ஓடி வந்து எழுப்புவதற்குள் மணி 6.30 ஆகிடும் . அப்போ கூட எழமுடியாமல் சிரமப்பட்டு எழுந்து குளிக்கப்போகும் என் மகன் ,கடந்த இரண்டு நாட்களாக ஆறு மணிக்கெல்லாம் எழுந்து எனக்கு முன்பே கிளம்பி ’சீக்கிரம்ம்மா,சீக்கிரம்மா’என்று காருக்குள் போய் உட்கார்ந்து கொள்வான்.
           அதற்கு ஒரே ஒரு காரணம்தான், அவன் கவுன்சிலிங் ஆசிரியை இரண்டு நாட்களுக்கு முன்பு போன் பண்ணி’டீச்சர் வாசனிடம் கொடுங்கள் ‘என்றார்.’ஏன்?’என்றேன்.’ஒரு நியூஸ் சொல்லனும்’என்றார்.கொடுத்தேன் ‘அவன் பேசும்போது அவன் முகமலர்ச்சியைக் கண்டேன்.’பிறகு போனைக்கொடுத்தான்.
’டீச்சர் உங்கள் பையன் போனமுறை ஒழுங்காக செய்யாத தேசியமொழி பரிட்சையில் இந்த முறை ‘ஏ’வாங்கியிருக்கான்.நிறைய முயற்சிகள் போட்டுள்ளான். என் பிள்ளை தேர்ச்சியடைந்ததுபோல ஃபீல் பண்ணுறேன்..வாழ்த்துக்கள்’.வீட்டுக்கு வந்து சாப்பிடாமல் கூட போன் பண்ணுகிறேன்’என்று முடித்தார்.
          போனைவைத்தவுடன் ஓடி வந்து அணைத்துக்கொண்டு ;அம்மா நான் ‘ஏ’ எடுத்தேன் ‘என்றான்.யார் என் வீட்டுக்கு (பெரிம்மா,சித்தி,மாமா,என் தோழிகள்)போன் செய்தாலும் ஓடிப்போய் போனை எடுத்து ,என்னிடம் அந்த விசயத்தைச் சொல்லச்சொல்லி காதில் கிசுகிசுப்பான்.
                  பெற்றோர்களே..ஆசிரியப்பெருமக்களே ஒரு உற்சாகமான சொல்,ஒரு பாராட்டு (அதுவும் எதிர்பாராத வகையில்) எப்படி அவனுள் மாற்றைத்தை கொண்டு வந்துள்ளது?இன்னும் அவன் எட்டிப்பிடிக்க எவ்வளோ சிரமங்கள் இருந்தாலும் அந்த சின்ன மாற்றம் ,ஒரு மகிழ்ச்சிதானே?
           
ஆகவே ....யாராக இருந்தாலும் பாராட்டப்பழகுவோம்..மாற்றத்தைக்கொண்டு வருவோம்!

Tuesday, 13 May 2014

முதல் பிரசவம்!

                  ஒவ்வொரு பெண்ணாலும் தன் வாழ்க்கையில் மறக்கமுடியாத அந்த தருணம், தனது முதல் பிரசவம் என்றே சொல்லலாம்!அதைத்தான் அன்னையர் தினத்தில் எழுத தொடங்கி  ,கொஞ்சம் லேட் பிரசவமாக இன்று வெளியீடு காண்கிறது . திருமணமாகி திட்டமிட்டபடியே குழைந்தப்பேறு கிட்டியது,மாதங்கள் ஓடின!ஒன்பதாம் மாதமும் நெருங்கியது. என் அம்மா அடிக்கடி சொல்லும் ஒரே சொல்’ சுகப்பிரசவம்தான் சிறந்தது.அறுவை சிகிட்சை என்றால் உங்களுக்குத்தான் கஷ்டம் .குளிக்க சிரமம்.பிள்ளையைத் தூக்க சிரமம் ‘என்று சொல்லி சொல்லி பயமுறுத்துவார்.

          அதற்காகவே நிறைய நடப்பேன். ஆனாலும் எதுக்கு பயந்தேனோ ?அதுதான் நடந்தது!ஆம் அறுவை சிகிட்சை பிரசவம்தான்!.அந்த இறுதி பரிசோதனையில்  மருத்துவர் ‘செல்வி இந்த மாதம் ரொம்ப கவனம் ,வீட்டில் பெரியவங்க இருக்காங்கதானே?’என்றார்.ஆமாம் டாக்டர் ,நான்  வளைக்காப்பு போட்டவுடன் அம்மா வீட்டில்தான் இருக்கிறேன்’என்றேன்.அம்மா வீட்டிலா??என்று ஒரு சில மருத்துவ ரகசியங்களைச் சொல்லி ‘சரி பரவாயில்லை, வலி வந்தால் உடனே வரனும்’என்று அனுப்பி வைத்தார்.இல்லாவிட்டால் நாங்கள் கொடுக்கும் தேதியில் வந்து அட்மிட் ஆகனும்’என்றார்.

           கொடுக்கப்பட்ட தேதியும் வந்தது,வலிதான் வரவில்லை. காலையில் அட்மிட் செய்தார்கள். கண்ணீரோடு என் அம்மா வழியனுப்பிவைத்தார். வார்டில் அனுமத்தித்தவுடன் , உடைகளை மாற்றச் சொல்லி . படுக்கையில் படுக்கச் செய்தார்கள். மருத்துவர் வந்தார்.நெற்றி நிறைய திருநீறு அணிந்து இருந்தார்.அப்பாடா?நம்ம இனம்’என பெருமூச்சு விட்டேன்.என் கையைக் குத்தி மருந்து தண்ணீர் உடலில் போக ஊசி செலுத்தினார்.பயத்தில் ஒரே உதறல். ‘என்ன செல்வி ?பயமா?என்றார்’ஆமாம் என்று சொல்வதற்குள் கண்ணீர் பொல பொலவென புரண்டோடியது.சிரித்தார்.’கொஞ்ச நேர வலி, பிறகு மகிழ்ச்சி ,ஆனால் என்ன ?செயற்கையாக  வலி வரச் செய்தால் அது ரொம்ப வலிக்கும் ‘என்றார்.அடுத்த கணம் அழ ஆரம்பித்தேன்.’என்னது இது ?சின்னப்பிள்ளை மாதிரி என்று கைகளைப் பற்றி ‘ஒன்னும் பயம் வேண்டாம்’எல்லாம் நல்லபடி நடக்கும் ‘என்றார்.

               நல்லவேளை அந்த மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான் .காலையில் ஒரு பாட்டில் மருந்து நீர் ,உடலில் ஏறியது ,வலி இல்லை. இடையில் வேற ஒரு சிகிட்சையும் நடந்தது .அதுவும் ,கைக்கூடவில்லை.இரவு வரை,பாட்டில்கள்  என்ணிக்கை அதிகரித்தன. வலி ஏற்படவில்லை.மலாய்க்கார  மருத்துவர் வந்தார்’என்ன செல்வி இன்னும் வலி இல்லையா ?என்றார்.’இல்லை என்றேன்.மீண்டும் நம்ம மருத்துவர் வந்து ‘என்னம்மா இது?கல் போல கிடக்கிறாய்? ஒரு பாட்டில் நீர் ஏறினாலே வலி வரும் , ரெண்டு ட்ரிட்மெண்ட் கொடுத்தாகிவிட்டது,இன்னும் வலி இல்லையா?why you are very strong?என்றார். என் பதில் கண்ணீர் மட்டுமே!

                 ’ஏனோ தெரியல?நம்ம பெண்கள்தான் பிரசவத்துக்கு ரொம்ப கஷ்டப்படறாங்க,மலாய்க்கார பெண்களைப் பாருங்க,வரதும் தெரியாது,வலியும் தெரியாது ,பிரசவிச்சிட்டு போயிடுவாங்க’என்று புலம்பிக்கொண்டே நம்ம  மருத்துவர் , அவர் வேலையைச் செய்தார்.இரவில் லேசாக வலி வந்தது .ஆனால் அது வலியே இல்லை என மருத்துவர் கூறினார்.  காலையில் பார்த்துவிட்டு அறுவை சிகிட்சைதான் செய்யவேண்டி வரும் போல’என்று கூறி மருத்துவர் விடைபெற்றார்.நர்ஸ்கள் கண்காணிப்பில் இருந்தேன் ,அப்ப்ப்பபோ மருத்துவர்கள் எட்டிப்பார்த்துச் செல்வார்கள்.முதல் பிரசவம் என்பதாலும் ,அன்று கடமையில் இருந்த பெரும்பாலான  மருத்துவர்கள் தமிழர்கள்  என்ற கூடுதல் நல்ல விசயமோ  என்னவோ ? எனக்கு நல்ல கவனிப்பு கிடைத்தது என்றே சொல்லலாம்.

                பொழுதும் விடிந்தது. அன்று 20/10/99 ,பிரசவ வார்டில் உணவு உண்ட ஒரே அம்மா நானாகத்தான் இருப்பேன். உணவு வந்தது.ஆனால் சாப்பிட முடியவில்லை, பயம் காரணமாக.தமிழ் டாக்டர்கள்  புடைசூழ ‘செல்வி உன் குழந்தை மூச்சு திணற வாய்ப்பு உண்டு ,ஆகவே அறுவை சிகிட்சை செய்யப்போகிறோம் ,அதிலும் உனக்கு epidural எனும் ஊசி செலுத்திதான் அறுவை சிகிட்சை செய்வோம் ,அதற்கு நீ கையெழுத்திடவேண்டும் ;என்று ஓர் இளைஞன் டாக்டர் கூறினார்.ஓரளவு எனக்கு அந்த சிகிட்சை முறை தெரியும் .அதாவது முதுகெலும்பில் ஊசி செலுத்தியவுடன் ,இடுப்புக்கீழே செயலிழந்தது போல ஆகிடும்!நானோ ’அந்த முறை நல்லதல்ல,பிற்காலத்தில் அது சைட் எஃப்ஃபெக்ட்ஸ் அதிகமாமே?என்று வாதாடினேன்.கொஞ்சம் கோபமான அந்த இளைஞர் டாக்டர் ‘உனக்கு யார் சொன்னது?என்று குரலை உயர்த்தி கேட்டார்.என் தோழிகள் சிலர் கூறினார்கள் ‘என்றேன்.’ஓஹோ அப்படியா?அவர்களில் யாராவது மருத்துவரா?என்று கோபமாக கேட்டார்.எனக்கோ பயம் மட்டுமே இருந்தது. பதில் சொல்ல முடியவில்லை.

             அந்த நேரம் நான் கையெழுத்திட மறுத்ததால் ,அந்த  மூன்று மருத்துவர்கள் ஏதோ பேசிவிட்டு , அதில் ஒருவர் அறையை விட்டு வெளியேறினார்.சிறிது நேரத்தில் வேற ஒரு மருத்துவருடன் வந்தார்.புதிதாக வந்தவர் என்னிடம் வந்து’ வணக்கம்மா என் பெயர் ப்ரோஃபெசர் சிவகுமார். உன் குழந்தை மூச்சு திணற தொடங்கியிருக்கும் ,பனிகுடம் உடைந்து பல மணிநேரம் ஆகியதால் ,இனி காத்திருக்க முடியாது. நீ கையொப்பமிடு , ஒன்னும் பயமில்லை’என்று அந்த எபிடுரல் ஊசியைப் பற்றிய ஓர் அறிக்கையை வாசிக்கச்  சொல்லி சற்று முன் என்னைத் திட்டிய மருத்துவரை அழைத்தார்.அவரும் அதை எனக்கு வாசித்துக் காட்டினார்.பிறகு இறுதியில் ‘ரொம்ப பிடிவாதம் டாக்டர் ,சொன்னால் கேட்காமல் .......’என்று பேசியவரை,அந்த ப்ரொஃபெசர் வழிமறித்து ‘ கண் ஜாடைக்காட்டினார்’அப்படி பேசாதே ‘என்று.
       
                இறுதியாக கையொப்பமிட்டேன்.சில சம்பிரதாய கேள்விகளுக்குப் பிறகு  ஒரு  பெரிய உருவம் வந்து என் முதுகெலும்பில் ஓர் ஊசியை செலுத்தினார்.அப்பப்பா!கொடூரமான வலி ,மறு கணம் என் இடுப்புக்கீழே செயல் இழந்துபோனதுபோல உணர்ந்தேன்,சற்று முன் பேசிய ப்ரொஃபெசர் சிவா வந்தார். அவருடன்  மற்றுமொரு மருத்துவரும் வந்தார்.செல்வி நலமா ?என்றார்.’ஹ்ம்ம் என்றேன்.டாக்டர் சிவா கையில் கத்தியை எடுத்து ,உங்க  ஒரு காலை மடக்குங்க ‘ என்றார்.’டாக்டர் என் கால் இருப்பதை என்னால் உணரமுடியவில்லை’ என்றேன்.சரி அப்போ ஓகே ,நாங்கள் வெட்டும்போது வலி வந்தால்  வேகமாக சொல்லுங்கள் ‘என்றார்.

               புதிதாக வந்த மருத்துவர் என் தலை மேல் கைகளை வைத்து என்னுடன் பேச்சுக் கொடுத்தார். ’இன்னும் சிறிது நேரம் பொறுங்க செல்வி ,உங்க  பிள்ளையைப் பார்க்கலாம். வலி இருக்கா ?’என்றார்.இல்லை என்றேன். என்ன பிள்ளை உங்களுக்கு  ஆசை ? ஏன் உங்களுக்கு  வலி இல்லை?உங்க அம்மா எப்படி உங்களைப் பிரசவித்தார்?’ நார்மலா ,அல்லது ஆப்ரேசனா?என்று என் தலையில் கைவைத்து வறுடியபடியே பேசிக்கொண்டிருந்தார்.பிறகு ’செல்வி,வயிற்றில் உள்ள ஏழு லேயர்களில் இப்போ இறுதி லேயரைக் கிழிக்கப்போகிறோம் ,அங்கேதான் உன் பிள்ளை இருக்கும்’ என்றார்.

               டாக்டர் சிவா தன் மாணவ டாக்டர்களிடம் ஏதேதோ என் உடலில் காட்டி காட்டி கேள்வி கேட்ட வண்ணம் தன் கடமையில் ஈடுபட்டிருந்தார். இறுதியாக என் தலைமாட்டில் இருந்த மருத்துவர் ‘செல்வி உன் பிள்ளையை வெளியே எடுக்கப்போகிறோம் ‘ அது அழும் குரல் உனக்கு கேட்கும்’ என்றார்.அறையின் மேலே சிலிங்கில் தொங்கும் டியூப்  லைட்டில் ரத்தம் வழிவது மட்டுமே என் கண்களுக்கு தெரிந்தது ,ஆனால் நான் மயக்கமடையவில்லை. இப்போ எனக்கு குழந்தை அழுகுரல் கேட்டது, ப்ரொஃபெசர் சிவா ,தன் மாணவர்களுக்கு ஆர்வமாய் எதையோச் சொல்லிகொண்டிருந்தார்.

                   என் தலைமாட்டில் இருந்த மருத்துவர்,’செல்வி உன் குழந்தை இவ்வுலகத்துக்கு வந்து விட்டது,இன்னும் சில நொடிகளில் நீ பார்க்கலாம் ‘என்றார். டாக்டர் சிவா குழந்தையை நர்சிடம் கொடுப்பதை பார்க்கமுடிந்தது. நர்ஸ் என் அருகில் வந்து ‘இதோ உன் பேபி ,என்ன பேபி சொல்? ‘என்று குழைந்தையின் பிறப்புறுப்பைக் காட்டினாள்’பெண்’என்றேன். என்ன அதிசயம் குழந்தை என்னைப் பார்த்தது.டாக்டர்கள் சிரித்தார்கள்.’இப்போ குழந்தைகள் அம்மாவைப் பர்ப்பது ரொம்ப நார்மல்’என்று டாக்டர் சிவா கூறியதைக் கேட்க முடிந்தது.சில நொடிகளில் குழந்தையைக் கொண்டு சென்றாள் நர்ஸ்.

              என் அருகில் இருந்த டாக்டர் என்னிடம் ’ரொம்ப சமத்தாக எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்திங்கம்மா  செல்வி,இதற்கு முன் வந்த மலாய்க்கார பெண்ணுக்கு தொடர்ச்சியா ஆப்ரேசன் செய்ய முடியவில்லை,பல சிக்கல்கள் ஆனால் உங்க முழு ஒத்துழைப்புக்கு நன்றி’என்று கூறி விடைபெற்றார். டாக்டர் சிவா தன் கடமையை மாணவர்களிடம் ஒப்படைத்து ‘வார்ட்டுக்கு போங்கம்மா, அங்கே வரேன்’ என்று விடைபெற்றார்.

              எல்லாம் ஒரு கனவு போல இருந்தது.மறுநாள்தான் அந்த மறுத்துப்போன உணர்வு குறைந்து, அறுவை சிகிட்சை வலி எடுத்து.அறுவை சிகிட்சை பிரசவம் ஒரு கொடூரமான அனுபவம்.எல்லோரும் சுகப்பிரசம அடைய வேண்டிக்கொள்ளுங்கள் அம்மாக்களே!ஆனாலும் நமக்கு விதிக்கப்பட்டதுதானே கிடைக்கும்?
                                                                                      


Sunday, 4 May 2014

நவீனத்துவமும் ந(ர)கர வாழ்க்கையும்!

              சொர்க்கமே என்றாலும் அது கிராமத்து வாழ்க்கைப்போல வருமா?அட என்னதான் நவீனம் என்றாலும் ,இந்த ந(ர)கர வாழ்க்கை இனித்திடுமா?
”கிராமத்து வீடுகளில் இடைவெளி உண்டு ஆனால் கிராம மக்களின் மனதில் இடைவெளி இல்லை அதேப்போல  நகர வீடுகளில் இடைவெளி இல்லை ஆனால் நகர மக்களின் மனதில் இடைவெளி உண்டு”.முகநூலில் என்னை அதிகம் கவர்ந்த அதேவேளையில் ஆயிரம் உண்மை அடங்கிய வரிகளும் கூட.

                கூட்டுக்குடும்பமாய் வாழ்வதே ஓர் வரம் ,அதிலும் கிராம வீட்டில் கூட்டுக்குடும்பமாய் வாழ்வது இரண்டு குடும்பம் நமக்கு இருப்பது போல் ஓர் உணர்வு.அப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்த என் வாழ்க்கை ,இப்போ ந(ர)கரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி போவதை என்னவென்று சொல்ல?பிறந்தது ,படிச்சது ,வளந்தது என்று எல்லாமே தோட்டப்பள்ளி மற்றும் கிராம வீடுகளில் ஊறிப்போன நமக்குதானே தெரியும் அந்த அனுபவங்கள்.அம்மா வேலைக்குப் போன காலங்களில் கூட,எங்களுக்கு அம்மா ஏக்கம் வந்தது இல்லை.

            அக்கம்பக்கம் இருக்கும் தோழிகளின் அம்மாக்கள் எங்க அம்மாவுக்கு நிகராக பார்த்துக்கொள்வார்கள். ’சாப்பிட்டிங்களா? ,குளிச்சாச்சா? துணிகள் எல்லாம் எடுத்து உள்ளே வையுங்கள், அம்மா வர நேரம் போய் வேலையைப் பாருங்கள்’என்று பக்கத்துவீட்டிலிருந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.ஆனால் இப்போ உள்ள ந(ர)கரத்தில் , யார் வீட்டில் இருக்கிறார்கள்.வீட்டில்தான் இருக்கிறார்களா?வேலைக்குப் போகிறார்களா என்று கூட தெரிவதில்லை. கிராம வீட்டில் பூட்டு ,தாழ்ப்பாளே இருக்காது.எங்காவது வெளியூர் போவதாக இருந்தால்தான் ,பூட்டைத் தேடி பூட்டு போடுவோம்.

               சும்மா ஒரு நாலஞ்சி மணி நேரம் வெளியே போவதாக இருந்தால் ,பக்கத்து வீட்டில் சொல்லிவிட்டுப்போவோம். அப்படி வீட்டைப்பூட்டினாலும் சாவியை அக்கம்பக்கத்தில் கொடுத்துச் செல்வோம்.வீட்டுக்கு யாரும் வந்தால் ,நாம் திரும்பி வரும்வரை அவர்கள் வீட்டில் அழைத்துக்கொண்டுபோய் டீ ,காப்பி எல்லாம் போட்டுக்கொடுத்து நாங்கள் திரும்பியவுடன் விருந்தாளியை வீட்டுக்கு அனுப்புவார்கள்.இன்றைய சூழலில் பூட்டிய வீட்டுக்கு முன் லாரியை கொண்டு வந்து வச்சி, ஒரு வீட்டு பொருட்களை களவாடிக்கொண்டு போவது மலேசியாவில் சர்வசாதாரணமாய் போய்விட்டது.வீட்டில் காலையில் துணிகளை உலரப்போட்டு விட்டு வெளியே போய்விட்டால்,மாலை வீடு திரும்பும் வேளை ,பாட்டிகள் எடுத்து அதை மடித்துக்கூட வீட்டு முன்னால் உள்ள நாற்காலிகளில் வைத்துவிடுவார்கள்.என் வீட்டில் நான் வேலைக்குப்போகும்போது துணிகளைப்போட்டு விட்டுப்போனால் ,மழையில் நனைத்து ,சிலவேளைகளில் கால்வாயில் அடித்துச் செல்லும்?அப்படி ஓர் அவல நிலை.

             என்ன உணவு சமைத்தாலும் குறைந்தது ஒரு இரண்டு வீடுகளுக்காவது கொடுத்து மகிழ்ச்சியடைவார்கள். அல்லது பலகாரம் செய்யும்போது எல்லோரும் கூட்டாக சேர்ந்து செய்து ஆளுக்கு கொஞ்சம் என பகிர்ந்து கொண்டு சாப்பிடும் வழக்கமும் இருந்தது.இப்போவெல்லாம்,உணவு சமைத்தால் படம் பிடிச்சி ஃபேஸ்புக்கில் மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள்! (முகநூலில் படிச்சது). வெளியூரில் இருந்து நம் வீட்டுக்கு வரும் உறவுக்காரர்களைக்கூட அவர்கள் வீட்டு உறவுக்காரர்கள் போல நினைத்து  பழகும்  கிராமிய மக்கள்.ந(ர)கரத்தில் அக்கம்பக்கத்தில் சீனரா?தமிழரா?மலாய்க்காரரா?என்று  குடியேறி சில மாதங்கள் ஆன பிறகுதான் அறியமுடியும்.

            சினிமாவில் வருவது போல அக்கம்பக்கம் திருமணம் என்றால் , எல்லோர் வீட்டிலேயும் குதூகலம்.’’ஊர்ல கல்யாணம் என்றால் மார்ல சந்தனம் பூசிக்கொள்வதுப் போல”என்பதற்கு ஈடாய் இருக்கும்.சம்பந்தப்பட்ட வீட்டில் விசேசம் என்றால் அதிகமான ஆட்கள் வந்து தங்குவார்கள். உறங்க இடம் போதாது.ஒரே ஒரு குளியலறையில் எத்தனைப்பேர் தான் வரிசையில் நின்று குளிப்பது என்று எல்லோர் வீட்டுக்கும் ஒரு ஐந்து பேர்கள் அனுப்பி வைப்பார்கள்.

            ஒரு வீட்டில் இறப்பு என்றால் கிராமத்தில் யார் வீட்டிலும் வானொலி ,தொலைக்காட்சி என்று எந்த சத்தமும் இரண்டு மூன்று நாட்களுக்கு கேட்காது.ஆனால் இன்றைக்கு அண்டை வீட்டில் இறப்பு  என்றால் கதவை மூடிக்கொண்டு உள்ளே இருப்பார்கள் ஒழிய ,வெளியே எட்டிப்பார்த்து ஏதும் உதவி வேண்டுமா?என்று கூட கேட்கமாட்டார்கள். யார் இறந்தது என்று கூட தெரியாமல் பரபரப்பான உலகில் உழன்று கொண்டிருக்கிறோம்?ஏன் அவ்வளவு தூரம் போகனும்?நானே அண்மையில் நான் வழக்கமாக போகும் ஒரு வீட்டில் இறப்பு ,யார் என்று தெரியாமல் வீட்டை ரெண்டுமூணு தடவைக் கடந்து போனேன்,இறுதியில் என் மகளோடு படித்த தோழியின் அம்மா என்று தெரிய வந்து நான் அடைந்த வேதனை இருக்கே?(இதை என் சுவரில் கூட பகிர்ந்திருந்தேன்).

        எனக்கு தெரிந்து கிராம வீடுகளில் விருந்து என்றால், வெளியே ஆர்டர் கொடுக்கும் பழக்கம் அரிது.விருந்து என்றால் எல்லோரும் அவர்கள் வீட்டில் உள்ள தட்டுமுட்டு  சாமான்களைக் கொண்டு வந்து காய்கறிகள் நறுக்குவது,சமைப்பது  என எல்லா உதவிகளுக்கும் வேலைஇல்லாத அன்புமிக்க பணியாட்கள் இருப்பார்கள்.இன்றைக்கு தேதிக்கு பக்கத்து வீட்டில் விருந்துக்கு வர சொல்லிச் சொன்னால் ,எங்கேயோ போய்விட்டு ,இரவில் கொஞ்ச நேரம் கடமைக்கு வந்து தலையக் காட்டிவிட்டு போகிறார்கள் அல்லது மொய் பணம் ,பரிசுகளை வேறு யாரிடமாவது கொடுத்தனுப்பிவிடுகிறார்கள்.அதில் நானும் அடங்குவேன் என்பதில் வெட்கப்படுகிறேன்.

         கார் வசதி உள்ளவர்கள் மார்க்கெட் அல்லது டவுனுக்குச் சென்றால் எல்லோரிடமும் போய் தெரியப்படுத்தி என்ன வேண்டும் என்று லிஸ்ட் போட்டு ,வாங்கி வந்து கொடுப்பார்கள்.ஆனால் நாகரீக நாட்களில் யாராவது மார்க்கெட் அல்லது கடைக்குப்போவதைப் பார்த்துவிட்டு ஏதும் வாங்கி வரச் சொன்னால் கூட பல காரணங்கள் சொல்வதுண்டு. பிறகு வாங்காமல் வந்தும் ஏதாச்சும் காரணம் சொல்வார்கள்.என்னத்தச் சொல்ல?காரில் ஏற்றிக்கொண்டு நாம் போகும் இலக்கு வரை கொண்டுபோய் விடுவார்கள்.பணம் கொடுத்தால் வாங்கவே மாட்டார்கள்.ஆனால் இன்றைக்கு அப்படி இருக்காங்களா?உயிருக்கு போராடிக்கொண்டு உதவி கேட்டால் கூட ,போன் எடுக்க மாட்டார்கள்.கதவைத் தட்டிக் கூப்பிட்டாலும் திறப்பதில்லை!

       பாவம் ஒரு பக்கம் .பழி ஒரு பக்கம் என்று கூறுவது போல.நாமும் ஒரு வழியில் இந்த சமூகத்தில் இப்படியெல்லாம் நடக்க காரணியாகவும் இருக்கிறோம் என்று நினைக்கும்பொழுது மனம் எங்கோ ஒரு மூலையில் வலிக்கவே செய்கிறது.நம் காலமே இவ்வளவு மோசமாக போய்க்கொண்டிருக்கும்போது ,நம் சந்ததியினர் இன்னும் என்னவெல்லாம் எதிர்நோக்கப்போகிறார்களோ? என்று நினைக்கும்போது ஏதோ ஒரு பயமும் கவலையோடு ஒட்டிக்கொள்கிறது.

             எங்கேயாவது இப்படி ஒரு வீடும் ,கிராமும் எனக்கு கிடைக்குமா?