Tuesday, 13 May 2014

முதல் பிரசவம்!

                  ஒவ்வொரு பெண்ணாலும் தன் வாழ்க்கையில் மறக்கமுடியாத அந்த தருணம், தனது முதல் பிரசவம் என்றே சொல்லலாம்!அதைத்தான் அன்னையர் தினத்தில் எழுத தொடங்கி  ,கொஞ்சம் லேட் பிரசவமாக இன்று வெளியீடு காண்கிறது . திருமணமாகி திட்டமிட்டபடியே குழைந்தப்பேறு கிட்டியது,மாதங்கள் ஓடின!ஒன்பதாம் மாதமும் நெருங்கியது. என் அம்மா அடிக்கடி சொல்லும் ஒரே சொல்’ சுகப்பிரசவம்தான் சிறந்தது.அறுவை சிகிட்சை என்றால் உங்களுக்குத்தான் கஷ்டம் .குளிக்க சிரமம்.பிள்ளையைத் தூக்க சிரமம் ‘என்று சொல்லி சொல்லி பயமுறுத்துவார்.

          அதற்காகவே நிறைய நடப்பேன். ஆனாலும் எதுக்கு பயந்தேனோ ?அதுதான் நடந்தது!ஆம் அறுவை சிகிட்சை பிரசவம்தான்!.அந்த இறுதி பரிசோதனையில்  மருத்துவர் ‘செல்வி இந்த மாதம் ரொம்ப கவனம் ,வீட்டில் பெரியவங்க இருக்காங்கதானே?’என்றார்.ஆமாம் டாக்டர் ,நான்  வளைக்காப்பு போட்டவுடன் அம்மா வீட்டில்தான் இருக்கிறேன்’என்றேன்.அம்மா வீட்டிலா??என்று ஒரு சில மருத்துவ ரகசியங்களைச் சொல்லி ‘சரி பரவாயில்லை, வலி வந்தால் உடனே வரனும்’என்று அனுப்பி வைத்தார்.இல்லாவிட்டால் நாங்கள் கொடுக்கும் தேதியில் வந்து அட்மிட் ஆகனும்’என்றார்.

           கொடுக்கப்பட்ட தேதியும் வந்தது,வலிதான் வரவில்லை. காலையில் அட்மிட் செய்தார்கள். கண்ணீரோடு என் அம்மா வழியனுப்பிவைத்தார். வார்டில் அனுமத்தித்தவுடன் , உடைகளை மாற்றச் சொல்லி . படுக்கையில் படுக்கச் செய்தார்கள். மருத்துவர் வந்தார்.நெற்றி நிறைய திருநீறு அணிந்து இருந்தார்.அப்பாடா?நம்ம இனம்’என பெருமூச்சு விட்டேன்.என் கையைக் குத்தி மருந்து தண்ணீர் உடலில் போக ஊசி செலுத்தினார்.பயத்தில் ஒரே உதறல். ‘என்ன செல்வி ?பயமா?என்றார்’ஆமாம் என்று சொல்வதற்குள் கண்ணீர் பொல பொலவென புரண்டோடியது.சிரித்தார்.’கொஞ்ச நேர வலி, பிறகு மகிழ்ச்சி ,ஆனால் என்ன ?செயற்கையாக  வலி வரச் செய்தால் அது ரொம்ப வலிக்கும் ‘என்றார்.அடுத்த கணம் அழ ஆரம்பித்தேன்.’என்னது இது ?சின்னப்பிள்ளை மாதிரி என்று கைகளைப் பற்றி ‘ஒன்னும் பயம் வேண்டாம்’எல்லாம் நல்லபடி நடக்கும் ‘என்றார்.

               நல்லவேளை அந்த மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான் .காலையில் ஒரு பாட்டில் மருந்து நீர் ,உடலில் ஏறியது ,வலி இல்லை. இடையில் வேற ஒரு சிகிட்சையும் நடந்தது .அதுவும் ,கைக்கூடவில்லை.இரவு வரை,பாட்டில்கள்  என்ணிக்கை அதிகரித்தன. வலி ஏற்படவில்லை.மலாய்க்கார  மருத்துவர் வந்தார்’என்ன செல்வி இன்னும் வலி இல்லையா ?என்றார்.’இல்லை என்றேன்.மீண்டும் நம்ம மருத்துவர் வந்து ‘என்னம்மா இது?கல் போல கிடக்கிறாய்? ஒரு பாட்டில் நீர் ஏறினாலே வலி வரும் , ரெண்டு ட்ரிட்மெண்ட் கொடுத்தாகிவிட்டது,இன்னும் வலி இல்லையா?why you are very strong?என்றார். என் பதில் கண்ணீர் மட்டுமே!

                 ’ஏனோ தெரியல?நம்ம பெண்கள்தான் பிரசவத்துக்கு ரொம்ப கஷ்டப்படறாங்க,மலாய்க்கார பெண்களைப் பாருங்க,வரதும் தெரியாது,வலியும் தெரியாது ,பிரசவிச்சிட்டு போயிடுவாங்க’என்று புலம்பிக்கொண்டே நம்ம  மருத்துவர் , அவர் வேலையைச் செய்தார்.இரவில் லேசாக வலி வந்தது .ஆனால் அது வலியே இல்லை என மருத்துவர் கூறினார்.  காலையில் பார்த்துவிட்டு அறுவை சிகிட்சைதான் செய்யவேண்டி வரும் போல’என்று கூறி மருத்துவர் விடைபெற்றார்.நர்ஸ்கள் கண்காணிப்பில் இருந்தேன் ,அப்ப்ப்பபோ மருத்துவர்கள் எட்டிப்பார்த்துச் செல்வார்கள்.முதல் பிரசவம் என்பதாலும் ,அன்று கடமையில் இருந்த பெரும்பாலான  மருத்துவர்கள் தமிழர்கள்  என்ற கூடுதல் நல்ல விசயமோ  என்னவோ ? எனக்கு நல்ல கவனிப்பு கிடைத்தது என்றே சொல்லலாம்.

                பொழுதும் விடிந்தது. அன்று 20/10/99 ,பிரசவ வார்டில் உணவு உண்ட ஒரே அம்மா நானாகத்தான் இருப்பேன். உணவு வந்தது.ஆனால் சாப்பிட முடியவில்லை, பயம் காரணமாக.தமிழ் டாக்டர்கள்  புடைசூழ ‘செல்வி உன் குழந்தை மூச்சு திணற வாய்ப்பு உண்டு ,ஆகவே அறுவை சிகிட்சை செய்யப்போகிறோம் ,அதிலும் உனக்கு epidural எனும் ஊசி செலுத்திதான் அறுவை சிகிட்சை செய்வோம் ,அதற்கு நீ கையெழுத்திடவேண்டும் ;என்று ஓர் இளைஞன் டாக்டர் கூறினார்.ஓரளவு எனக்கு அந்த சிகிட்சை முறை தெரியும் .அதாவது முதுகெலும்பில் ஊசி செலுத்தியவுடன் ,இடுப்புக்கீழே செயலிழந்தது போல ஆகிடும்!நானோ ’அந்த முறை நல்லதல்ல,பிற்காலத்தில் அது சைட் எஃப்ஃபெக்ட்ஸ் அதிகமாமே?என்று வாதாடினேன்.கொஞ்சம் கோபமான அந்த இளைஞர் டாக்டர் ‘உனக்கு யார் சொன்னது?என்று குரலை உயர்த்தி கேட்டார்.என் தோழிகள் சிலர் கூறினார்கள் ‘என்றேன்.’ஓஹோ அப்படியா?அவர்களில் யாராவது மருத்துவரா?என்று கோபமாக கேட்டார்.எனக்கோ பயம் மட்டுமே இருந்தது. பதில் சொல்ல முடியவில்லை.

             அந்த நேரம் நான் கையெழுத்திட மறுத்ததால் ,அந்த  மூன்று மருத்துவர்கள் ஏதோ பேசிவிட்டு , அதில் ஒருவர் அறையை விட்டு வெளியேறினார்.சிறிது நேரத்தில் வேற ஒரு மருத்துவருடன் வந்தார்.புதிதாக வந்தவர் என்னிடம் வந்து’ வணக்கம்மா என் பெயர் ப்ரோஃபெசர் சிவகுமார். உன் குழந்தை மூச்சு திணற தொடங்கியிருக்கும் ,பனிகுடம் உடைந்து பல மணிநேரம் ஆகியதால் ,இனி காத்திருக்க முடியாது. நீ கையொப்பமிடு , ஒன்னும் பயமில்லை’என்று அந்த எபிடுரல் ஊசியைப் பற்றிய ஓர் அறிக்கையை வாசிக்கச்  சொல்லி சற்று முன் என்னைத் திட்டிய மருத்துவரை அழைத்தார்.அவரும் அதை எனக்கு வாசித்துக் காட்டினார்.பிறகு இறுதியில் ‘ரொம்ப பிடிவாதம் டாக்டர் ,சொன்னால் கேட்காமல் .......’என்று பேசியவரை,அந்த ப்ரொஃபெசர் வழிமறித்து ‘ கண் ஜாடைக்காட்டினார்’அப்படி பேசாதே ‘என்று.
       
                இறுதியாக கையொப்பமிட்டேன்.சில சம்பிரதாய கேள்விகளுக்குப் பிறகு  ஒரு  பெரிய உருவம் வந்து என் முதுகெலும்பில் ஓர் ஊசியை செலுத்தினார்.அப்பப்பா!கொடூரமான வலி ,மறு கணம் என் இடுப்புக்கீழே செயல் இழந்துபோனதுபோல உணர்ந்தேன்,சற்று முன் பேசிய ப்ரொஃபெசர் சிவா வந்தார். அவருடன்  மற்றுமொரு மருத்துவரும் வந்தார்.செல்வி நலமா ?என்றார்.’ஹ்ம்ம் என்றேன்.டாக்டர் சிவா கையில் கத்தியை எடுத்து ,உங்க  ஒரு காலை மடக்குங்க ‘ என்றார்.’டாக்டர் என் கால் இருப்பதை என்னால் உணரமுடியவில்லை’ என்றேன்.சரி அப்போ ஓகே ,நாங்கள் வெட்டும்போது வலி வந்தால்  வேகமாக சொல்லுங்கள் ‘என்றார்.

               புதிதாக வந்த மருத்துவர் என் தலை மேல் கைகளை வைத்து என்னுடன் பேச்சுக் கொடுத்தார். ’இன்னும் சிறிது நேரம் பொறுங்க செல்வி ,உங்க  பிள்ளையைப் பார்க்கலாம். வலி இருக்கா ?’என்றார்.இல்லை என்றேன். என்ன பிள்ளை உங்களுக்கு  ஆசை ? ஏன் உங்களுக்கு  வலி இல்லை?உங்க அம்மா எப்படி உங்களைப் பிரசவித்தார்?’ நார்மலா ,அல்லது ஆப்ரேசனா?என்று என் தலையில் கைவைத்து வறுடியபடியே பேசிக்கொண்டிருந்தார்.பிறகு ’செல்வி,வயிற்றில் உள்ள ஏழு லேயர்களில் இப்போ இறுதி லேயரைக் கிழிக்கப்போகிறோம் ,அங்கேதான் உன் பிள்ளை இருக்கும்’ என்றார்.

               டாக்டர் சிவா தன் மாணவ டாக்டர்களிடம் ஏதேதோ என் உடலில் காட்டி காட்டி கேள்வி கேட்ட வண்ணம் தன் கடமையில் ஈடுபட்டிருந்தார். இறுதியாக என் தலைமாட்டில் இருந்த மருத்துவர் ‘செல்வி உன் பிள்ளையை வெளியே எடுக்கப்போகிறோம் ‘ அது அழும் குரல் உனக்கு கேட்கும்’ என்றார்.அறையின் மேலே சிலிங்கில் தொங்கும் டியூப்  லைட்டில் ரத்தம் வழிவது மட்டுமே என் கண்களுக்கு தெரிந்தது ,ஆனால் நான் மயக்கமடையவில்லை. இப்போ எனக்கு குழந்தை அழுகுரல் கேட்டது, ப்ரொஃபெசர் சிவா ,தன் மாணவர்களுக்கு ஆர்வமாய் எதையோச் சொல்லிகொண்டிருந்தார்.

                   என் தலைமாட்டில் இருந்த மருத்துவர்,’செல்வி உன் குழந்தை இவ்வுலகத்துக்கு வந்து விட்டது,இன்னும் சில நொடிகளில் நீ பார்க்கலாம் ‘என்றார். டாக்டர் சிவா குழந்தையை நர்சிடம் கொடுப்பதை பார்க்கமுடிந்தது. நர்ஸ் என் அருகில் வந்து ‘இதோ உன் பேபி ,என்ன பேபி சொல்? ‘என்று குழைந்தையின் பிறப்புறுப்பைக் காட்டினாள்’பெண்’என்றேன். என்ன அதிசயம் குழந்தை என்னைப் பார்த்தது.டாக்டர்கள் சிரித்தார்கள்.’இப்போ குழந்தைகள் அம்மாவைப் பர்ப்பது ரொம்ப நார்மல்’என்று டாக்டர் சிவா கூறியதைக் கேட்க முடிந்தது.சில நொடிகளில் குழந்தையைக் கொண்டு சென்றாள் நர்ஸ்.

              என் அருகில் இருந்த டாக்டர் என்னிடம் ’ரொம்ப சமத்தாக எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்திங்கம்மா  செல்வி,இதற்கு முன் வந்த மலாய்க்கார பெண்ணுக்கு தொடர்ச்சியா ஆப்ரேசன் செய்ய முடியவில்லை,பல சிக்கல்கள் ஆனால் உங்க முழு ஒத்துழைப்புக்கு நன்றி’என்று கூறி விடைபெற்றார். டாக்டர் சிவா தன் கடமையை மாணவர்களிடம் ஒப்படைத்து ‘வார்ட்டுக்கு போங்கம்மா, அங்கே வரேன்’ என்று விடைபெற்றார்.

              எல்லாம் ஒரு கனவு போல இருந்தது.மறுநாள்தான் அந்த மறுத்துப்போன உணர்வு குறைந்து, அறுவை சிகிட்சை வலி எடுத்து.அறுவை சிகிட்சை பிரசவம் ஒரு கொடூரமான அனுபவம்.எல்லோரும் சுகப்பிரசம அடைய வேண்டிக்கொள்ளுங்கள் அம்மாக்களே!ஆனாலும் நமக்கு விதிக்கப்பட்டதுதானே கிடைக்கும்?
                                                                                      


6 comments:

  1. எல்லா உணர்வுகளும் ஓன்று சேரும் தருணம்

    ReplyDelete
  2. இந்த பதிவை படிக்கவே இல்லை, முதல் பிரசவத்தில் என் வீட்டம்மா கதறிய அழுகையை பொறுக்க முடியாமல் அவள் அம்மா அருகில் இருந்த படியால் ஆஸ்பத்திரியை விட்டே ஓடிவிட்டேன் நான் !

    அடுத்தநாள் அழகான குழந்தை என் கையில், என்னவளின் முத்தத்தோடு....!

    ReplyDelete
  3. //செல்வி,வயிற்றில் உள்ள ஏழு லேயர்களில் இப்போ இறுதி லேயரைக் கிழிக்கப்போகிறோம் ,அங்கேதான் உன் பிள்ளை இருக்கும்//

    எனக்கு தலை சுத்துது....

    ReplyDelete
  4. நிகழ்வை படிக்கும் போதே மனதில் திக் திக்...

    உங்களின் மன உறுதி போல் அனைவருக்கும் இருக்க வேண்டும்...

    ReplyDelete
  5. அந்த பிரசவ வார்டில் நானும் இருந்த உணர்வு. மிகச் சிறப்பாக எழுதி இருக்கீங்க......

    அறுவை சிகிச்சை மூலம் பிள்ளை பெறுவது என்பது எத்தனை கஷ்டம்........

    ReplyDelete
  6. வணக்கம் டீச்சர்!நலமா?//நல்ல அனுபவப் பகிர்வு.என் மனைவிக்கும்,இதே போல்(இரண்டாவது பிரசவம்) போராடி...............கடேசியில் அறுவை தான்,ஹூம் என்ன பண்ண?பொண்ணாப் பொறந்த பயன் புள்ள பெத்துக்கிறதில இருக்கு!

    ReplyDelete