சொர்க்கமே என்றாலும் அது கிராமத்து வாழ்க்கைப்போல வருமா?அட என்னதான் நவீனம் என்றாலும் ,இந்த ந(ர)கர வாழ்க்கை இனித்திடுமா?
”கிராமத்து வீடுகளில் இடைவெளி உண்டு ஆனால் கிராம மக்களின் மனதில் இடைவெளி இல்லை அதேப்போல நகர வீடுகளில் இடைவெளி இல்லை ஆனால் நகர மக்களின் மனதில் இடைவெளி உண்டு”.முகநூலில் என்னை அதிகம் கவர்ந்த அதேவேளையில் ஆயிரம் உண்மை அடங்கிய வரிகளும் கூட.
கூட்டுக்குடும்பமாய் வாழ்வதே ஓர் வரம் ,அதிலும் கிராம வீட்டில் கூட்டுக்குடும்பமாய் வாழ்வது இரண்டு குடும்பம் நமக்கு இருப்பது போல் ஓர் உணர்வு.அப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்த என் வாழ்க்கை ,இப்போ ந(ர)கரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி போவதை என்னவென்று சொல்ல?பிறந்தது ,படிச்சது ,வளந்தது என்று எல்லாமே தோட்டப்பள்ளி மற்றும் கிராம வீடுகளில் ஊறிப்போன நமக்குதானே தெரியும் அந்த அனுபவங்கள்.அம்மா வேலைக்குப் போன காலங்களில் கூட,எங்களுக்கு அம்மா ஏக்கம் வந்தது இல்லை.
அக்கம்பக்கம் இருக்கும் தோழிகளின் அம்மாக்கள் எங்க அம்மாவுக்கு நிகராக பார்த்துக்கொள்வார்கள். ’சாப்பிட்டிங்களா? ,குளிச்சாச்சா? துணிகள் எல்லாம் எடுத்து உள்ளே வையுங்கள், அம்மா வர நேரம் போய் வேலையைப் பாருங்கள்’என்று பக்கத்துவீட்டிலிருந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.ஆனால் இப்போ உள்ள ந(ர)கரத்தில் , யார் வீட்டில் இருக்கிறார்கள்.வீட்டில்தான் இருக்கிறார்களா?வேலைக்குப் போகிறார்களா என்று கூட தெரிவதில்லை. கிராம வீட்டில் பூட்டு ,தாழ்ப்பாளே இருக்காது.எங்காவது வெளியூர் போவதாக இருந்தால்தான் ,பூட்டைத் தேடி பூட்டு போடுவோம்.
சும்மா ஒரு நாலஞ்சி மணி நேரம் வெளியே போவதாக இருந்தால் ,பக்கத்து வீட்டில் சொல்லிவிட்டுப்போவோம். அப்படி வீட்டைப்பூட்டினாலும் சாவியை அக்கம்பக்கத்தில் கொடுத்துச் செல்வோம்.வீட்டுக்கு யாரும் வந்தால் ,நாம் திரும்பி வரும்வரை அவர்கள் வீட்டில் அழைத்துக்கொண்டுபோய் டீ ,காப்பி எல்லாம் போட்டுக்கொடுத்து நாங்கள் திரும்பியவுடன் விருந்தாளியை வீட்டுக்கு அனுப்புவார்கள்.இன்றைய சூழலில் பூட்டிய வீட்டுக்கு முன் லாரியை கொண்டு வந்து வச்சி, ஒரு வீட்டு பொருட்களை களவாடிக்கொண்டு போவது மலேசியாவில் சர்வசாதாரணமாய் போய்விட்டது.வீட்டில் காலையில் துணிகளை உலரப்போட்டு விட்டு வெளியே போய்விட்டால்,மாலை வீடு திரும்பும் வேளை ,பாட்டிகள் எடுத்து அதை மடித்துக்கூட வீட்டு முன்னால் உள்ள நாற்காலிகளில் வைத்துவிடுவார்கள்.என் வீட்டில் நான் வேலைக்குப்போகும்போது துணிகளைப்போட்டு விட்டுப்போனால் ,மழையில் நனைத்து ,சிலவேளைகளில் கால்வாயில் அடித்துச் செல்லும்?அப்படி ஓர் அவல நிலை.
என்ன உணவு சமைத்தாலும் குறைந்தது ஒரு இரண்டு வீடுகளுக்காவது கொடுத்து மகிழ்ச்சியடைவார்கள். அல்லது பலகாரம் செய்யும்போது எல்லோரும் கூட்டாக சேர்ந்து செய்து ஆளுக்கு கொஞ்சம் என பகிர்ந்து கொண்டு சாப்பிடும் வழக்கமும் இருந்தது.இப்போவெல்லாம்,உணவு சமைத்தால் படம் பிடிச்சி ஃபேஸ்புக்கில் மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள்! (முகநூலில் படிச்சது). வெளியூரில் இருந்து நம் வீட்டுக்கு வரும் உறவுக்காரர்களைக்கூட அவர்கள் வீட்டு உறவுக்காரர்கள் போல நினைத்து பழகும் கிராமிய மக்கள்.ந(ர)கரத்தில் அக்கம்பக்கத்தில் சீனரா?தமிழரா?மலாய்க்காரரா?என்று குடியேறி சில மாதங்கள் ஆன பிறகுதான் அறியமுடியும்.
சினிமாவில் வருவது போல அக்கம்பக்கம் திருமணம் என்றால் , எல்லோர் வீட்டிலேயும் குதூகலம்.’’ஊர்ல கல்யாணம் என்றால் மார்ல சந்தனம் பூசிக்கொள்வதுப் போல”என்பதற்கு ஈடாய் இருக்கும்.சம்பந்தப்பட்ட வீட்டில் விசேசம் என்றால் அதிகமான ஆட்கள் வந்து தங்குவார்கள். உறங்க இடம் போதாது.ஒரே ஒரு குளியலறையில் எத்தனைப்பேர் தான் வரிசையில் நின்று குளிப்பது என்று எல்லோர் வீட்டுக்கும் ஒரு ஐந்து பேர்கள் அனுப்பி வைப்பார்கள்.
ஒரு வீட்டில் இறப்பு என்றால் கிராமத்தில் யார் வீட்டிலும் வானொலி ,தொலைக்காட்சி என்று எந்த சத்தமும் இரண்டு மூன்று நாட்களுக்கு கேட்காது.ஆனால் இன்றைக்கு அண்டை வீட்டில் இறப்பு என்றால் கதவை மூடிக்கொண்டு உள்ளே இருப்பார்கள் ஒழிய ,வெளியே எட்டிப்பார்த்து ஏதும் உதவி வேண்டுமா?என்று கூட கேட்கமாட்டார்கள். யார் இறந்தது என்று கூட தெரியாமல் பரபரப்பான உலகில் உழன்று கொண்டிருக்கிறோம்?ஏன் அவ்வளவு தூரம் போகனும்?நானே அண்மையில் நான் வழக்கமாக போகும் ஒரு வீட்டில் இறப்பு ,யார் என்று தெரியாமல் வீட்டை ரெண்டுமூணு தடவைக் கடந்து போனேன்,இறுதியில் என் மகளோடு படித்த தோழியின் அம்மா என்று தெரிய வந்து நான் அடைந்த வேதனை இருக்கே?(இதை என் சுவரில் கூட பகிர்ந்திருந்தேன்).
எனக்கு தெரிந்து கிராம வீடுகளில் விருந்து என்றால், வெளியே ஆர்டர் கொடுக்கும் பழக்கம் அரிது.விருந்து என்றால் எல்லோரும் அவர்கள் வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களைக் கொண்டு வந்து காய்கறிகள் நறுக்குவது,சமைப்பது என எல்லா உதவிகளுக்கும் வேலைஇல்லாத அன்புமிக்க பணியாட்கள் இருப்பார்கள்.இன்றைக்கு தேதிக்கு பக்கத்து வீட்டில் விருந்துக்கு வர சொல்லிச் சொன்னால் ,எங்கேயோ போய்விட்டு ,இரவில் கொஞ்ச நேரம் கடமைக்கு வந்து தலையக் காட்டிவிட்டு போகிறார்கள் அல்லது மொய் பணம் ,பரிசுகளை வேறு யாரிடமாவது கொடுத்தனுப்பிவிடுகிறார்கள்.அதில் நானும் அடங்குவேன் என்பதில் வெட்கப்படுகிறேன்.
கார் வசதி உள்ளவர்கள் மார்க்கெட் அல்லது டவுனுக்குச் சென்றால் எல்லோரிடமும் போய் தெரியப்படுத்தி என்ன வேண்டும் என்று லிஸ்ட் போட்டு ,வாங்கி வந்து கொடுப்பார்கள்.ஆனால் நாகரீக நாட்களில் யாராவது மார்க்கெட் அல்லது கடைக்குப்போவதைப் பார்த்துவிட்டு ஏதும் வாங்கி வரச் சொன்னால் கூட பல காரணங்கள் சொல்வதுண்டு. பிறகு வாங்காமல் வந்தும் ஏதாச்சும் காரணம் சொல்வார்கள்.என்னத்தச் சொல்ல?காரில் ஏற்றிக்கொண்டு நாம் போகும் இலக்கு வரை கொண்டுபோய் விடுவார்கள்.பணம் கொடுத்தால் வாங்கவே மாட்டார்கள்.ஆனால் இன்றைக்கு அப்படி இருக்காங்களா?உயிருக்கு போராடிக்கொண்டு உதவி கேட்டால் கூட ,போன் எடுக்க மாட்டார்கள்.கதவைத் தட்டிக் கூப்பிட்டாலும் திறப்பதில்லை!
பாவம் ஒரு பக்கம் .பழி ஒரு பக்கம் என்று கூறுவது போல.நாமும் ஒரு வழியில் இந்த சமூகத்தில் இப்படியெல்லாம் நடக்க காரணியாகவும் இருக்கிறோம் என்று நினைக்கும்பொழுது மனம் எங்கோ ஒரு மூலையில் வலிக்கவே செய்கிறது.நம் காலமே இவ்வளவு மோசமாக போய்க்கொண்டிருக்கும்போது ,நம் சந்ததியினர் இன்னும் என்னவெல்லாம் எதிர்நோக்கப்போகிறார்களோ? என்று நினைக்கும்போது ஏதோ ஒரு பயமும் கவலையோடு ஒட்டிக்கொள்கிறது.
எங்கேயாவது இப்படி ஒரு வீடும் ,கிராமும் எனக்கு கிடைக்குமா?
மிக எதார்த்தமாக வேதனையை சொல்லிடீங்க ..
ReplyDeleteநிஜமான ஏக்கம் தான் டீச்சர்! பகிர்வு மிகவும் அருமை!
ReplyDeleteபழைய நாட்கள் திரும்பாது! இப்போது கிராமங்கள் கூட மாறிவருகின்றன! அக்கம் பக்கம் யார் என்ன? என்று யாரும் கண்டு கொள்வது இல்லை! சிறப்பான பகிர்வு! நன்றி!
ReplyDeleteநகர வாழ்க்கையில் இழந்தவை தான் அதிகம்..... தில்லி போன்ற பெருநகரில் பல வருடங்களாக இருக்கும் எனக்கும் இதே போன்ற எண்ணங்கள் அவ்வப்போது வந்து போகும்.....
ReplyDelete