Wednesday, 19 November 2014

உண்மையை உணர்த்திய பதிவு!



ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.
கடவுள்: "வா மகனே.......
.நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."
ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா?
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
"மன்னித்துவிடு மகனே........
உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்........."
"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"
"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"
"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........
அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........
குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"
"என் உடல்?..........."
"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."
"என் ஆன்மா?"
"இல்லை........அது என்னுடையது.........."
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........
கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை.
நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது.
வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான்.
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய்.
எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே......
.அது மட்டுமே நிரந்தரம்.......
-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு
போக முடியாது....
                                                                  

Friday, 19 September 2014

வரலாற்றில் முதன்முறையாக!

                                                                         
                மேல்படிப்புக்கு கொஞ்சம்  அல்ல நிறையவே பணத்தட்டுப்பாடு .நல்லவேளை தெய்வாதினமாக, முன்பு 12 வருடங்கள்  வேலை செய்ததால் . ஊழியர் சேமநிதி வாரியத்தில் எனக்கும் பணம் இருந்தது! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இதுதானோ? அடடா !12 வருடங்களுக்கு இவ்வளவு பணம் இருக்கே!இன்றுவரை வேலை செய்திருந்தால் ,இன்னும் அதிகப்பணம் இருக்குமே?என்று தோழி கூறிய அடுத்த கணம் மனம் ஏங்க நினைத்தது.மறுகணம் என் மனசாட்சி ‘உனக்கு ஒதுக்கப்பட்டது இதுதான்,அதற்கு மேல் உள்ள பணத்தில் உன் பெயர் எழுதப்படவில்லை
.இருப்பதை வைத்து பரவசப்படு, ஒரு சிலருக்கு அது கூட இல்லை,வியர்வை சிந்தி உழைத்து ,முறையான கம்பெனி இல்லை ,ஏமாத்துக்கார முதலாளிகள் ,நமக்கு இதுதான் ,‘என்று நினைத்த அடுத்த கணம் செவிட்டில் அறைந்தது போல ஓர் உணர்வு!

                   சரி விசயம் அதுவல்ல. மலேசியாவில் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஊழியர் சேமநிதி வாரியத்தில் பணம் (இருந்தால்)எடுக்கவேண்டுமென்றால் ,ஒன்று வீடு வாங்கினால் கொடுப்பார்கள் அல்லது மேல்படிப்படிக்கு மட்டுமே கொடுக்கப்படும்.வேற எந்த காரணத்துக்கும் பணம் கொடுக்கப்படாது( சைக்கிள் கேப்ல எனக்கு இன்னும் ஐம்பது வயசு ஆகலையாம்!!!!!)அலுவலகத்தை தொடர்பு கொண்டு ‘கல்விக்கு பணம் எடுக்க என்ன விதிமுதிமுறைகள் ?’என கேட்டுக்கொண்டேன். அந்த சமயம் தொடர்பில் இருந்த மலாய்க்காரப்பையன் ‘அக்கா நீ எங்கே வசிக்கிறாய் ?என்றான் .’பூச்சோங் என்றேன்.அக்கா உன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு கிளை இருக்கு.உனக்கு தெரியாதா?என்றான்.நிஜமாகவே எனக்கு தெரியாது,மேலும் எனக்கு இது புதிய தகவல் அதைவிட முக்கியம் எனக்கு மகிழ்ச்சியான விசயம்.காரணம் இது போன்றை நிறைய  அரசு அலுவல்கள்  பெட்டாலிங் ஜெயா மற்றும் கோலாலும்பூரரில்தான் இருக்கும்.பையனிடம் தீர விசாரித்து ,என்னவெல்லாம் கொண்டு போகணும் என்று என்னை தயார் பண்ணிக்கொண்டேன்.ஆனாலும் அரசு சார்ந்த அலுவல்களில் கண்டிப்பாக இரண்டு மூன்றுமுறை நம்மை அலைய வைப்பார்கள்  என்று சொல்லமாட்டேன் அலைய வேண்டி இருக்கும் என்பது 101% நிச்சயம்.

                    காலையில் அனைத்து டாக்யூமெண்ட்களையும்  எடுத்துக்கொண்டு ஓடினேன்.வழக்கம்போல் அரசு அலுவல தாரகமந்திரமாக ‘இன்குயரி கவுண்டரில் இன்று ‘சிஸ்டம் டவுன் ,நீ வரும்முன் ஒரு போன் பண்ணிட்டு வா என்று ஒரு நம்பரை கொடுத்தாள்.’சனி கார் சக்கரத்தில் உட்கார்ந்து வந்திருப்பான் போல?’’சரி நான் கொண்டு வந்த டாக்குமெண்ட்ஸ்களை சரி பார்க்கணும் ,இல்லையென்றால் நான் சும்மா சும்மா வரமுடியாது’என்று வழக்கமான தொனியில் சொன்னேன்’சரி அப்படின்னா நம்பரை எடுத்துக்கொண்டு ,அந்த கவுண்டரில் போய் கேட்டுக்கொள் என்றாள்.திரும்பி பார்த்தேன் என்ன ஆச்சரியம்?அங்கே உள்ள இருக்கையில் ஒருவர் கூட இல்லை.சிஸ்டம் டவுன் என்று சொல்லி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் போல?நம்பரை எடுத்தவுடன் என்னை அழைத்தார்கள்.அங்கே யாருமே இல்லை என்பதால்.

                 ’ரொம்ப அழகாக சிரித்த முகத்துடன் (கொஞ்சம் நேருக்கு மாறான செயலாக இருந்தது),சின்ன  பெண்  மலாயில் ’என்ன அக்கா ?’என்றாள்.’என் விபரங்களையும் நோக்கத்தையும் சொன்னேன்.’நான் சும்மா சும்மா வரமுடியாது, (நிறைய வேலைகளைத் தவிர்ர்த்து முகநூலில் பிசி என்பது அவளுக்கு தெரியாது),கொஞ்சம் பிசி,சோ என் தஸ்தாவேஜுக்களை சரி பார்த்து சொல் ‘என்றேன்.அவளும் ‘பரவாயில்லை ,நான் உனக்கு செய்து தருகிறேன் ,இப்போ சிஸ்டம் ஓகே ‘என்றாள்!என்னடா இது?இப்போதான் அவ சொன்னாள்,இன்றைக்கு ஒரு மலேசியா முழுவதும் சிஸ்டம் டவுன்???அதற்குள் அந்த குட்டி என் கையில் உள்ள உறையை எடுத்துக்கொண்டு  அனைத்து தாட்களையும் திருப்பி பார்த்தாள்.’ஓகே அக்கா, அனைத்தும் சரியா இருக்கிறது.இதோ இங்கே மட்டும் கையொப்பமிடு ‘என்றாள்.

                        பிறகு என்ன தொகை? உனக்கு எவ்வளவு  கொடுக்கணும்?பல்கலைக்கழகத்துக்கு எவ்வளவு ?என்று கணக்கு போட்டு, பெருவிரல் அச்சுகளை எடுத்துக்கொண்டாள். என்னால் நம்பவே முடியவில்லை.ஒரு பத்து நிமிடத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து ,ஒரு மகிழ்ச்ச்சியான செய்தியும் சொன்னாள்.’உன் சொந்த பணத்தை நீ செலுத்தியிருந்தால் அதன் ரசிதைக்கொடு ,அதையும் உன் வங்கியில் போட்டு விடுவோம்.ரசீதைக்கொடுத்தேன்,அந்த பணம் உனக்கு சொந்தம் ,ஆகவே உன் வங்கிக்கு அனுப்பிவிடுவோம்,சோ மீதப்பணம் உன் பல்கலைகழகத்துக்குப் போய்சேரும் ‘என்றாள்.

                      சிவசிவா..வந்த வேலை இத்தனை சுலபமாக முடிந்ததே?நான் காண்பது கனவா? அவளுக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னேன்.வெளியே வந்து காரில் ஏறிய பின்புதான் யோசித்தேன் ,அடடா அவளிடம் ஒரு வார்த்தை சொல்ல மறந்துவிட்டேன்’உன் வேலையும் சரி உன் செயலும் சரி ,மிகுந்த திருப்தியைக்கொடுக்கிறது.இப்படி எல்லோரும் இருப்பதில்லை அது தமிழர்களாக இருந்தாலும்’என! சரி மீண்டும் அடுத்த முறை போகும்போது அவசியம் சொல்லிவிட்டு அவளோடு ஒரு படமும் எடுத்துக்கொள்வேன்.

*இதைப்படிக்கும் மலேசிய,பூச்சோங் வட்டார  மக்களே ,இங்கே ஒரு கிளை இருப்பது உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ளுங்கள்.நேரத்தை விரயம் செய்யாதீர்கள் ,எதற்கும் ஒரு முயற்சி இருத்தல் நலம்.காரியம் கைகூடும்.
                                                                       

Sunday, 14 September 2014

மனிதனும் தெய்வமாகலாம்!

                                                             

             மலாயா,பர்மா,சயாம் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்பு அதிகம்.அதிலும் மலாயாவில் ’சாலை ஓரங்களில் கொட்டிக்கிடக்கும் சக்கரையில் உட்காரும் காக்கைகளையும் குருவிகளையும் விரட்டும் வேலை கூட உண்டு.யாரெல்லாம் போகப்போறிங்கள், எங்களோடு வரவும்’என்ற சிலரின் ஆசைவார்த்தைகளை கேட்டுக்கொண்டு நிலப்பட்டாக்களை,நகைகளை  விற்றும் ,அடகு வைத்தும் தங்களின் தாய்நாடான இந்தியாவை விட்டு ,வெளியேறி வந்து ,இங்கே வந்து ரயில் தண்டவாளங்கள் போடவும் ,ரப்பர் தோட்டத்தில் பால் மரம் சீவுவதற்கும் கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்ட கோடான கோடி தமிழர்கள்.

             தாய்நாட்டை விட்டு வந்த அவர்களை  ,சில தரப்பினர்  '3T'அடிப்படையில் tamil school,temple,toddyshop  என  மயக்கி ஏமாற்றி வேலை வாங்கியதாக என் தாத்தா கூறி கேட்டதுண்டு.அப்படியெல்லாம் ஆசை வார்த்தைகளை கேட்டு வந்த எத்தனைபேர் மறுபடியும் தாய்நாட்டுக்குச் சென்றனர்? அந்த காலங்களில் உண்மையாகவே பணக்காரகள் மட்டும்தான் தமிழ்நாட்டுக்கு வான் ஊர்தியில் செல்லமுடியும் என நினைக்கிறேன்.இந்தியா போவது என்பது யூகிக்கமுடியாத ஒரு நிலையாக ஒருகாலகட்டம் வரையில் இருந்துவந்தது..

               யார்  இந்த நாட்டுக்குச் சொந்தக்காரன்?யார் முதலில் வந்தனர்? இந்நாடு யாருக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில் யார் ?சாரி ’எந்த’ மதத்தினர் அதிகமாக இருக்கின்றனரோ அவர்களே நாட்டின்  உரிமையாளர்கள்!பெரிய எதிர்ப்பார்ப்பில் இங்கே புலம்பெயர்ந்த  பலருக்கு இன்னமும் ஏமாற்றமே மிஞ்சியது. திரும்பி போகமுடியாமல் எத்தனையோ பேர் இங்கேயே தஞ்சம் புகுந்தனர்.வசதியுள்ளவர்கள் வான் ஊர்தியிலும் ,மற்றவர்கள் வ.உ.சி கப்பலிலும் செல்வதுண்டு. குடும்பத்தையும் தங்களது வீடுகளையும்  விட்டு எத்தனைப்பேர்களால் மீண்டும் அங்கே போக முடியாமல் போனது?சொந்த நாட்டை விட்டு வந்து ஊரான் நாட்டில் பத்தோடு பதினொன்றாக வாழ்ந்து வரும் கொடுமை இருக்கே?ஆனால் அதை விட கொடுமை ,இறுதி மூச்சுவரை தங்கள் தாய்நாட்டுக்கு போகமுடியாமல் போனதுதான்!

                பெற்ற தாய்தந்தையருக்கு கொள்ளி வைக்ககூட முடியாத நிலை,காரணம் பணத்தட்டுப்பாடு.ஊரிலிருந்து கடிதம் வந்தால் ,ஏதோ அவர் குடும்பமே வந்ததுபோல என் தாத்தாவும் அப்பாவும் குதூகலித்த நாட்களைக் கண்டதுண்டு. எப்படியும் என் ப்ரோவிடெண்ட் பணத்தை எடுத்து நான் இந்தியா போவென் ,நான் பிறந்த வீட்டைப் போய் பார்ப்பேன்’என்று ஆசை ஆசையாய் இருந்த என் தந்தையினால் கூட அந்தகால கட்டத்தில் (90களில்) போகமுடியாமல் போனது.காரணம் அன்றைய காலகட்டத்தில் விமான டிக்கெட்டின் விலை.ஒரே ஒரு கப்பல் போய்க்கொண்டிருந்தது ஆனால் அதையும் வியாபார தந்திரத்தால் எரித்துவிட்டதாக கேள்விப்பட்டதுண்டு.

           ஆனால் இன்று நினைத்தவர்கள் எல்லாம் தமிழ்நாடு போகலாம்,குடும்பம் குடும்பமாக போகலாம்.ஒரு வருடத்தில் பலமுறை போகலாம்.அட ஏன் அவ்வளவு தூரம் பேசனும்?நானே இதுவரையில் ஒன்பது முறை தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டேன்.இத்தனைக்கும் சேமிப்பு என்ற ‘கெட்டப்பழக்கமே’என்னிடம் இல்லை.ஆனால் உடனடியாக ஒரு தொகையைச் செலுத்தில் என்னாலும் போக முடிகிறது.அதெற்கெல்லாம் காரணம் ஏர் ஆசியாவின்  திரு.டோனி பெர்னாண்டஸ் என்ற நல்ல மனிதன்!அதிலும் அவர் ஓர் இந்தியர் என்பதில்தான் எத்தனை எத்தனை பெருமை?எங்களைப்போன்ற நடுத்தர மக்களின் மனதில் கோட்டையாய் உட்கார்த்திருக்கும் தன்னலமற்ற மனிதர்!

             ஆமாம் தன் வியாபாரத்தில் ஆரம்பகாலத்தில் பல மில்லியன்களை இழைந்தவர் ஆனாலும் தன் அதீத திறமையாலும் நல்ல மனதினாலும் விட்ட இடத்தைப் பிடித்த மாமனிதர்.அண்மையில் செவிவழி கேட்ட ஒரு விசயம்.விமானத்தை விட்டு இறங்கி தமிழ்நாட்டு மண்ணை மிதித்ததும் ஒரு மூதாட்டி ‘அப்பா டோனி தம்பி,நீ எங்கேடா இருக்கே? நான் சாவதற்குள்  என் தாய்மண்ணை மிதிச்சிட்டேன் .இனி என் உயிர் இங்கே போனாலும் என் கட்டை நல்லபடி வேகும் உனக்கு என் கையால ஒரு மாலை போடணும் ‘என கண்ணீர் மல்க கதறியதாக ஒரு சம்பவம் !

             ’தமிழ்நாடா? அதுக்கெல்லாம் கொடுப்பினை இருக்கணுமே’என்று பெருமூச்சு விட்ட எத்தனை லட்சம் மக்கள் இன்று அவர் தயவால் போய்வந்தனர். அட நான் கூட ஒருமுறை வெறும் ஐம்பது வெள்ளி டிக்கெட் விலையில் போனதுண்டு.ஆனால் என்ன என் அப்பாவை எங்களால் இறுதி வரை அனுப்பமுடியாமல் போனதே என்ற கவலை மட்டும் இன்னும் மனதை உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது.திரைக்குப் பின்னால் இருந்துகொண்டு பல லட்சோப லட்ச மக்களின் மனதில் நடமாடும் தெய்வம் என போற்றப்படும் டோனி பெர்னாண்டஸ் அவர்களே,நீர் நீடுழி வாழ்க.மனிதனும் தெய்வமாகலாம் என நிரூபித்துக்காட்டியர் .
                                                                             

Friday, 29 August 2014

மன்னித்தருள்க என் நட்புக்களே!




                    என் பிறந்தநாளில் என் இன்பாக்சுக்கு சுமார் ஆயிரம் மேசேஜ்கள் வந்தன.வந்துகொண்டும் இருக்கின்றன, சுமார் 1800 நட்புகளில் ஆயிரம் நட்புகள் இன்பாக்சில்தான் வாழ்த்து கூறினார்கள்,ஆனால் என்னால் அவை அனைத்துக்கும் பதில் அல்லது நன்றி சொல்ல முடியவில்லை நட்புக்களே.என்னை முதற்கண் மன்னியுங்கள். நான் ஒவ்வொரு மேசேஜ்களாக திறந்து பதில் போடமுடியாத நிலை மட்டுமே காரணம் அன்றி வேற எந்த காரணமும் இல்லை. மற்ற நாட்களில் நான் இன்பாக்சில் யாரிடமும் பேசுவதில்லை ,சாட்டிங் பழக்கம் எனக்கு இல்லை ஆனால் உங்கள் வாழ்த்துக்கு பதில் போடுவதும் அப்படியே என நினைக்க வேண்டாம்.அதற்காக வருந்துகிறேன், காரணம் முன்பு போல என்னால் கணினியில் நிறைய நேரம் செலவிடமுடியவில்லை நட்புக்களே.நான் முகநூலுக்கு (இணையத்துக்கு)மதியம் மட்டுமே வருகிறேன்.அதிலும் என் பிள்ளைகளுக்கு இந்த வருடம் தேர்வு.அவர்களும் என் கணினியை பயன்படுத்துகின்றனர்.அதுமட்டுமின்றி என் பல்கலைக்கழக இடுபணிகளையும் நான் செப்டெம்பர் மாதத்திற்குள் முடித்தாக வேண்டிய சூழ்நிலை.நிஜமாகவே நேரம் பற்றாக்குறைதான் காரணம்.
பலநட்புகள் இதனால் என்னிடம் கோபித்துக்கொண்டனர்.
மீண்டும் சொல்கிறேன் நட்புகளே...நேரம் போதவில்லை,பார்க்கும்போதெல்லாம்,முகநூலில் இருப்பதுபோல தோணலாம் ஆனால் பல வேலை பளுக்களுக்கிடையிடையே நான் வந்துபோகிறேன்.இது என் மிக நெருங்கிய சிலநட்புகளுக்கு புரியும்.
நான் நட்புகளை மிகவும் மதிப்பவள் . இந்த காரணத்தினால் நான் உங்கள் வாழ்த்துக்களை அலட்சியம் செய்கிறேன் என நினைத்துவிடாதிர்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என் நிலையை புரிந்து கொள்ளவேண்டிக்கொள்கிறேன்!

Monday, 25 August 2014

அவருக்கு (சிவனுக்கு)நன்றி!

                         கடந்த வாரம் வியாழக்கிழமை (21/8/14)காலை மணி 8.45க்கு என் பள்ளியின் இரும்பு  கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ,கோபமாய் திட்டிக்கொண்டே ’இந்த அப்பா அம்மாவுக்கு இப்போதான் மணி எட்டுபோல?எத்தனை தடவைச் சொன்னாலும் சரியான நேரத்துக்கு வரமாட்டாங்க ‘என்று எட்டிப்பார்த்தேன்.’அங்கே மூன்று மலாய்க்கார அதிகாரிகள் நின்றுகொண்டிருந்தனர்.தூக்கிவாரிப்போட்டது!

            ஒருகணம் நிலை தடுமாறினேன். பிறகு சுதாகரித்துக்கொண்டு ,’ஒரு நிமிடம் ’என்று உள்ளே வந்து சக ஆசிரியையிடம் கை ஜாடைக்காட்டினேன்.’அதிகாரிகள் கவனம் ‘ என்று.அவளும் ஆடிப்போய்விட்டாள்.நானும் வேணும் என்றே(அதற்குள் ஆசிரியை மாணவர்களுக்கு உடனடி சிலவிசயங்களை உஷார் படுத்த ஏதுவாக)மெதுவாக ,சாவியை எடுத்துக்கொண்டு பயப்படாதமாதிரி போய் கதவைத் திறந்தேன். நாங்கள் முறையே கல்வி அமைச்சு ,கல்வி இலாகா ,பெட்டாலிங் கல்வி அலுவல அதிகாரிகள்’,உள்ளே வரலாமா?என்றனர்.

                ஐயோ!எனக்கு தலையே சுத்திப்போச்சு.இதில் யாராச்சும் ஒருத்தர் வந்து ,தஸ்தாவேஜுக்கள் கேட்டாலே சமாளிக்கமுடியாதே?மூவரும் சேர்ந்து ?அதிலும் கல்வி அமைச்சு அதிகாரி?சிவாயநம’என்று பயத்தை அடக்கிகொண்டு சிரமப்பட்டு சிரித்துக்கொண்டே அழைத்துச் சென்றேன்.உள்ளே சென்ற மூவரும், நாலா பக்கமும் போய் கண்காணித்தனர். ஆனால் ஏனோ சற்றுமுன் இருந்த பயம் எங்கோ போய் மறைந்தது.அதிகாரியும் என் சக ஆசிரியைகளிடம் ‘உங்க வேலையைத்  தொடரலாம்,நான் உங்க பிரின்சிப்பாலிடம் பேசவேண்டும்’என்றார்கள்.

                    ‘நான் தான் அந்த (துரதிஸ்ட)பிரின்சி’என்று அறிமுக படுத்திக்கொண்டேன். மூவரில் ஒரு வயதானவர் மட்டுமே என்னை அழைத்து ‘ஒரு நாற்காலியை எடுத்துக்கொண்டு என் அருகில் உட்கார் ‘என்றார்.கொஞ்சம் வயதானர் ஆனால் ரொம்ப பொறுமையாக பேசினார். மற்ற இருவரும் எனக்கு எதிரே நாங்கள் பேசுவதை பார்க்கும் வகையில் நாற்காலியைச் சரி செய்துகொண்டு உட்கார்ந்தனர்.’என் பெயரைக்கேட்ட வந்த அதிகாரி ‘சரி செல்வி ,உன் பள்ளி அரசுடன் பதிவு செய்து கொண்ட பள்ளி ஆனால் ஏன் இன்னும் மாணவர்கள் பெயர்களை சிஸ்டம்ல பதியவில்லை.அது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? அப்படி நீ செய்யாத பட்சத்தில் ஒரு மாணவனுக்கு தலா ரிம.5,000 வெள்ளிவரை நாங்கள் அபராதம் வழங்க எங்களுக்கு உரிமை உண்டு ‘என்றார்.

                     அப்படி ஒரு சிஸ்டம் இருப்பது எனக்கு தெரியாதே ?என்றேன்.ஏப்ரல் 30ம் தேதியோடு நாங்கள் கொடுத்த கெடுகாலம் முடிந்தது,இருப்பினும் நிறைய பள்ளிகள் இன்னும் பதிவு செய்யவில்லை,ஆகவேதான் ,இந்த வாரம் இந்த பகுதியில் சுமார் 15 குழுக்கள் கொண்ட எங்கள் பணியாளர்கள் களத்தில் இறங்கிவிட்டோம். ’சரி நான் கேட்கும் டாக்குமெண்ட்ஸ்களைக் கொண்டு வா’என்றார்.எல்லாத்தையும் கொண்டு வந்து வைத்தேன். ஒவ்வொன்றாக திறந்து பார்த்தார்.பிறகு பிள்ளைகளின் பெயர்பட்டியலைக் கேட்டார்.கொடுத்தேன்.(எப்போதும் அதிகாரிகள் கேட்கும் டாக்குமெண்ட்ஸ்களைக் கொடுத்தாலே அவர்களுக்கு நம் மீது நல்ல நம்பிக்கை வரும்;என்று எனது முன்னாள் ஜப்பானிய நிறுவனத்தின் மேலாளர் திரு.தர்மலிங்கம் அடிக்கடி கூறுவார்.அதை இன்னும் நான் கடைப்பிடித்து வருகிறேன்.

                  ’சரி இப்போதான் உன் வேலை ஆரம்பம் செல்வி’என்றார் அதிகாரி. இந்த பிள்ளைகள் பெயர் பட்டியலை நீ சிஸ்டம்ல போய் எல்லோருடைய மை கிட் எண்களை  (அடையாள அட்டை எண்கள்).உடனே பதிய வேண்டும்.அப்படி நீ செய்தவுடன் அது அரசுடன் சம்பந்தப்பட்ட அலுவலகம் போய்ச்சேரும்’என்றார்.பிறகு ஒவ்வொரு மாணவர்களின் அடையாள எண்களையும் நான் கொடுத்த பட்டியலில்  எழுதி எடுத்துக்கொண்டார்.’ஒருவேளை நீ   ஒவ்வொரு மாணவனின் டிடெய்லும் அப்டேட் செய்ய சோம்பல் பட்டுக்கொண்டு பொய் பொய்யாக உன் விருப்பப்படி செய்ய வாய்ப்பிருக்கு,அதை பரிசோதிக்கவே நானும் எழுதி எடுத்துச் செல்கிறேன்.

                    பிறகு அவராகவே தொடர்ந்தார்.’செல்வி அங்கே நீல உடையில் இருக்கும் அதிகாரி கல்வி அமைச்சுவைச் சார்ந்தவர் .அவருக்கு எந்த பள்ளியில் எது சரியில்லை என்று பட்டால் உடனே கடிதம் கொடுத்து பள்ளியை இழுத்து மூட அதிகாரம் இருக்கிறது.இருந்தாலும் நான் உடனே அப்படி செய்யவேண்டாம்.நாங்கள் பெட்டாலிங் கல்வி அலுவலக அமைப்பில் இருந்து முதலில் உங்களுக்கு உதவ முன் வந்துள்ளோம்.அதுதான் அவரும் என்னுடன் வந்திருக்கிறார் ‘என்றார்.இங்கே ஏதேனும் அவருக்கு திருப்தி இல்லை என்றால்,நீ என்னை மன்னித்து விடு’என்றும் மெதுவாக என்னிடம் கூறினார்.எனக்கு தலையே சுற்றியது!கேட்டவுடன் பணம் கொடுத்து உதவும் என் பள்ளியின் செயற்குழு உறுப்பினர்களுக்கு என்ன பதில் சொல்வேன்?

                     ஒரு மாணவனுக்கு தலா ரிம.5,000 வெள்ளியா?. அப்பகூட பயத்தைக்காட்டிக்கொள்ளாமல் ‘சரி ,எப்படி அப்டேட் செய்வது? என்று கேட்டேன்.அவரும் மிக பொறுமையாய் ஒரு தாளில் எழுதிக்காட்டினார். அடுத்து சில மாணவர்களின் சுயவிவர கோப்புகளை கேட்டார்.எடுத்துக்கொடுத்தேன்.என் கெட்ட நேரம் ,அங்கே ஒரு தவறு காத்துக்கொண்டிருந்தது.ஆம் ஒரு மாணவனின் பிறப்பு பத்திரம் இல்லாத ஒரு கோப்பும்  அதில் இருந்தது. ஒவ்வொரு மாணவனின் பிறப்புபத்திரம் அவசியம் கோப்புகளில் வைத்திருக்கவேண்டும்.ஆனால் அதற்கு என்னிடம் ஒரு பதிலும் இருந்தது.அந்த மாணவனின் அப்பா இந்தோனேசிய சிறைச்சாலையில் இருக்கிறார்.அம்மா மட்டுமே குடும்பத்தை வைத்துக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார். அவனுடைய பிறப்பு பத்திரம் அவனின் தாத்தா வீட்டில் இருக்கிறது.அம்மாவும் டென்சன் ,வேலைப்பளு காரணமாக ,அங்கே செல்ல இயலவில்லை’என்றேன்.பள்ளிக்கு அவன் கட்டணம் செலுத்தி பல மாதங்கள் ஆகிவிட்டது துவான்( ஐயா). ‘என்றேன்.

                      ‘அவன் எப்படி படிக்கிறான் ?என்று வினவினார் அதிகாரி.நல்ல மாணவன் ,கெட்டிக்காரன் .பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் எல்லாம் பெற்றுள்ளான்’என்றேன்.அதற்கு அதிகாரி கூறிய வார்த்தைகள்’டீச்சர் நீ அவனுக்கு உதவி செய்,உனக்கு இறைவன் வேற வழியில் உதவுவான்.மேலும் பூச்சோங்கில் மிகவும் குறைந்த (ரிம150)வெள்ளிக்கு இயங்கும் பாலர்பள்ளி உன் பள்ளிதான் போல?இதுவே நீ செய்யும் சேவை. வாடகையே ஆயிரம் வெள்ளி போனால் ,என்ன வருவாய் இருக்கு?என்று அவரே கணக்கு போட்டு பார்த்து விட்டு ,உன் அறப்பணியைக் கண்டு நான் வியக்கிறேன்.எல்லோரும் பணம் சம்பாதிக்கவே பாலர்பள்ளிகள் நடத்துகிறார்கள்,ஆனால் நீ சேவையாக செய்வது மிகபெரிய விசயம்’என்றார்.கொஞ்சம் மனம் ரிலாக்சாக ஃபீல் பண்ணியது.

                     மீண்டும் அதிகாரி ‘செல்வி உனக்கு மீண்டும் சொல்கிறேன்,உடனடியாக நீ சிஸ்டம்ல அப்டேட் செய்தாக வேண்டும்,உனக்கு ஏழு நாட்கள்தான் நான் கொடுப்பேன்.அதன் பிறகு செய்யாவிட்டால் ,அந்த நீல உடை அதிகாரியின் முடிவுதான் ,நானும் எடுக்க வேண்டி வரும்’என்று கூடி ,கடவு சொற்களையும் ,இணைய முகவரியையும் கொடுத்துவிட்டு,’நான் உனக்கு உதவி செய்துவிட்டேன்,இனி நீ எனக்கு உதவி செய். உடனே செய்’என்றார்.நானும் ரொம்ப தைரியமாக ‘துவான்,இன்று இரவே முடித்துக்கொடுக்கிறேன்’என்றேன்.ஆனால் அரசு சம்பந்தப்பட்ட இணைய தளங்களில் ஏதேனும் அப்டேட் செய்வது என்பது யானைக்கு கோவணம் கட்டுவதுபோல !ஆம்..அம்புட்டு நேரம் ஹேங் ஆகும்.எல்லோரும் பயன்பாட்டில் இருப்பதால் ,அப்படித்தான் ஆகும் என பதில் சொல்வார்கள். அனைவரும் விடைபெற்றனர்.

                         அப்பாடா! பிரசவ வலி தீர்ந்ந்ததுபோல ஒரு ரிலாக்ஸ்.போன மூச்சு வந்தது. கொஞ்சம் ஆசிரியைகளோடு விசயங்களைப் பறிமாறிக்கொண்டு ,உடனே நிலைமைய என் என்.ஜி.ஓவில் அழைத்துக்கூறினேன். சுமார் 15 குழுக்கள் இங்கே களத்தில் இறங்கிவிட்டன.உடனே சுற்று வட்டாரப்பள்ளிகளுக்கு தகவல் கொடுத்து அப்டேட் செய்ய சொல்லுங்கள்,அபராதம் ரிம5000 !‘என்றேன்.காட்டுத்தீப்போல எல்லோருக்கும் செய்தி பரவியது.

                      வீடு திரும்பியவுடன் என் சிஸ்டம்ல ஏழரை வந்து உட்காந்துகொண்டான் .ஆம்!அவர் கொடுத்த இணைய முகவரிக்கு மட்டுமே என்னால் நுழைய முடிந்தது.மற்றபடி என்னால் கடவு சொல்லை போட்டு அக்செஸ் பண்ண முடியவில்லை.’சரி வெள்ளிக்கிழமை எப்படியும் செய்யலாம்’ என இருந்தேன்.விதி வெள்ளிக்கிழமையும் விளையாடியது.கடவு சொல் போட்டாலும் என்னால் திறக்க முடியவில்லை,அதுதான் சொன்னேனே யானைக்கு கோவணம் கட்டுவதுபோல?என்று.சரி இதுக்கு மேல் ஒன்னும் செய்வதற்கு இல்லை’என அதிகாரியை அழைத்தேன்.அவரும் ‘அப்படியா?சரி இந்த எண்ணுக்கு அழைத்து சிஸ்டம் ஒருங்கிணைப்பாளரிடம் பேசு’என்றார்.

                   எங்கள் ஊரில் வெள்ளிக்கிழமை மாலை 4.30க்கு மேல்  அரசு அதிகாரிகள் போன் கால்களை அட்டெண்ட் செய்ய மாட்டார்கள். சோ நானும் ,கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லையே? என்று மன உளைச்சலுக்கு ஆளானேன்.சனிக்கிழமை எனக்கு வகுப்பு ,இரவில் ஆசிரமத்தில் பூஜை.ஞாயிற்றுக்கிழமை தேவாரப்போட்டி,மாலைதான் வீடு வந்து சேர்ந்தேன்.மிகவும் களைப்பானேன்.முகநூலை எட்டிப்பார்க்ககூட நேரமும் மனமும் இல்லாத நிலையில் ,என் கவலையெல்லாம் ‘எப்போ நான் செய்து முடிக்கப்போகிறேன்?

              இன்று காலை பள்ளிக்கு வந்ததும் ,அந்த அதிகாரி கொடுத்த எண்களுக்கு போன் செய்தேன்.மறுமுனையில் எப்போதும் போல பதில்’நான் வெளியே இருக்கிறேன், அலுவலகம் சென்றவுடன் ,நீங்கள் என்னை அழைக்கவும்’என்று பதில் வந்தது. அவர்கள் கொடுத்த காலம் ஏழுநாட்கள்,அதில் மூன்று நாட்கள் கழிந்துவிட்டன.’எப்படியும் முடித்து விடலாம் ‘என முடிவில் மீண்டும் கடவு சொற்களைப்போட்டேன்.என்ன ஆச்சரியம்?என்னால் அந்த பேஜ்க்கு போக முடிந்தது. அதிகாரி சொன்ன வழிமுறைகளைக் கொண்டு ஒரு மாணவனின் பெயரைத் தட்டினேன்.அவனுடைய முழு விவரங்கள் அங்கே இருந்தது.நான் அதை அப்டேட் செய்யவே இல்லையே?எப்படி ?மீண்டும் ஒரு மாணவனின் பெயரைத் தட்டினேன்.அவனுடைய குறிப்புகள் அனைத்தும் அங்கே இருந்தது.என்னடா இது?என் ஆசிரியைகள் இருவருக்கும் sap system செய்யத் தெரியாது.

                   பின்னே எப்படி? சரி ஒரு புதிய மாணவனின் பெயரைத் தட்டினேன்.அவனுடைய குறிப்பும் அப்டேட் செய்யப்பட்டிருந்தது.சரி பள்ளியின் மாணவர்கள் பட்டியல் என்று தட்டினேன்.என் அனைத்து மாணவர்களின் குறிப்பும் அங்கே அப்டேட் செய்யப்பட்டிருந்தது. ஆ!நான் காண்பது கனவா?ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு ,என் ஆசிரியை ஒருவளை அழைத்துக் காட்டினேன்.அவள் சுமார் பத்து வருடங்கள் அரசு ஊழியராக  பணியாற்றியவள்.அவளும் பார்த்துவிட்டு ‘டீச்சர் ,அரசாங்க ஊழியர்கள் மறந்து  கூட நம் வேலைகளை செய்யமாட்டார்கள்.அவர்களுக்கு அதுக்கு நேரமும் இல்லை,நேரம் இருந்தாலும் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வார்கள். நீங்க முன்பு ஏதும் அப்டேட் செய்தீர்களா?நன்கு யோசித்துப்பாருங்கள்’என்றாள். வாய்ப்பே இல்லையே,கடவு சொல்லே வியாழக்கிழமைதானே கிடைத்தது’என்றேன்.

                        சரி அந்த அதிகாரிக்கு போன் போட்டு கேளுங்கள் என்றாள் ஆர்வமாய்.ஆமாம் ,நாம் ஏதேனும் எண்களைத் தவறாக டைப் செய்திருந்தால் கூட திருத்தமாட்டார்கள்,நம்மை அழைத்து ‘இது தவறு நீதான் திருத்தவேண்டும் ‘என்று சொல்லும் அரசு ஊழியர்களா? நம் வேலைகளைச் செய்வார்கள்’என்ற கேள்விகளைச் சுமந்துகொண்டு போன் பண்ணினேன்.’துவான்,நீங்கள் சொன்ன கடவு சொல்லில் நுழைந்துபார்த்தேன்.என் 25 மாணவர்களின் குறிப்பும் அங்கே இருக்கின்றன.எப்படி?என்று கேட்டேன்.

                        அதிகாரியும் சிரித்துக்கொண்டே ‘நீ எனக்கு போன் செய்தமுதல் நாள் நானும் போய் சிஸ்டம்ல பார்த்தேன். நீ மீண்டும் எனக்கு போன் பண்ணியவுடன் உன் முயற்சி எனக்கு பிடித்திருந்தது. சிலர் என்னதான் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்,பயப்படவும் மாட்டார்கள் ,ஆனாம் நீ போராடிய விதம் ,மேலும் அன்று உன் பள்ளியில் நீ காண்பித்த கோப்புகள் யாவும் எனக்கு திருப்தியாக இருந்தன!ஆகவே, நானே உனக்காக எல்லாத்தையும் அப்டேட் செய்தேன்.எனக்கும் மனமும் உண்டு, நேரமும் இருந்தது.ஆனால் அடுத்த வருடம் இதுபோல நான் செய்து கொடுக்க மாட்டேன்.கவனத்தில் கொள்’சரி செல்வி நீ ஓய்வு எடுத்துக்கொள்’என்று சிரித்துக்கொண்டே போனை வைத்தார். அது வெறும் சிரிப்பு அல்ல,தெய்வீக சிரிப்பு! ஆமாம்,இளைய வயதினர் கூட கணினியில் உட்கார்ந்து பிறர் வேலைகளை செய்ய மறுக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு அரசு அதிகாரியா?இன்னும் நான் கனவு காண்பது என்னைக் கிள்ளிப் பார்க்கிறேன்.

                 அவர் சொன்ன அந்த வரிகள் என் செவிகளில் ஒலித்தது’
நீ பிறருக்கு உதவி செய்தால்,இறைவன் உனக்கு வேறு வழியில் உதவி செய்வான்! அவர் கொடுத்த வேலை என்னவோ கொஞ்ச நேரத்துவேலைதான் ஆனால் அதை எனக்காக அவர் ஏன் செய்யவேண்டும்?அதுவும் தமிழர்கள் நடத்தும் பள்ளிக்காக அவருக்கு என்ன அக்கறை?
                                                                        

Monday, 18 August 2014

புதுப்பிக்கப்பட்ட நட்பை..மீட்டுக்கொண்டான் நமன்!

                                                                       
            கடந்த 12 வருடங்களுக்கு முன் ஜப்பானிய நிறுவனத்தில் திரு.குமாரசாமி  எங்களோடு பணிபுரிந்தார்.மிகவும் நகைசுவை உணர்வுடன் பேசுபவர்.உதவும் மனப்பான்மை கொண்டவர். நான் வேலையை ராஜினாமா செய்தவுடன், எப்போதாவது தொலைபேசியில் பேசுவார்.பிறகு பைய பைய தொடர்பு காணாமற்போனது .சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு ,இரண்டு மாதங்களுக்கு முன் ,என் தோழியை எதேச்சையாக  சந்தித்த அவர்,என் தொலைபேசியை எண்களை எடுத்துக்கொண்டு என்னை அழைத்தார்.

           ’ஹலோ செல்வி இருக்காங்களா?என்றார். ‘செல்வி போனுக்கு அழைத்தால் செல்விதானே பேசுவேன்’என்றேன். ‘இல்லை நான் உங்க ரசிகர் ’என்று அவர் பாணியில் கிண்டலடிக்க,குரலை அனுமானித்துக்கொண்டு ‘உலகம் முழுவதும் ரசிகர்கள்,நீங்கள் எந்த நாட்டு ரசிகர்?’என்றேன். ‘குமார் என் கிட்டேயேவா?என்றேன். ‘என்ன செல்வி ,உன் பேச்சில் ஒரு மாற்றமும் இல்லை.அப்படியேதான் பேசுகிறாய்.அதே பிடிவாதம் ,மர்ம போன் என்றாலே ,ஒரு கோபம் கலந்த பதில்’ என்றார்.காரணம் அலுவலகத்தில் இருந்த காலங்களில் ,அடிக்கடி மிமிக்ரி செய்து ,நல்லா திட்டு வாங்கியவர் குமார்.’உங்க குரல் எனக்கு தெரிந்துவிட்டது ’குமார்.என்றேன்.

                சுமார் அரைமணி நேரம் பேசினார்.அவருக்கு ஆண் குழந்தை பிறந்தபோது ‘நானும் (கனடா)தோழியும் சேர்ந்து கணிச்ச பெயரை அவர் பையனுக்கு வைத்தார். என்னை மறக்காமல் இருந்தமைக்கு நன்றி ‘என்றேன். ’என்ன செல்வி பைத்தியமா?என் பையனைப்  பெயர் சொல்லி அழைக்கும்போதெல்லாம் நீங்களும்  புஷ்பாவும் என் நினைவில் வந்து போவீர்கள்.அப்படி இருக்க எப்படி மறப்பேன்?’என்றார். அதன் பிறகு குமார் போன் பண்ணவே இல்லை.நானும் வேலை ,படிப்பு ,டியூசன்,முகநூல் என்று என் அருகில் உள்ளவர்களைத் தொடர்பு கொள்ளாமல் இருந்தேன்.

                      நேற்று  நாடு தழுவிய நிலையில் ஒரு கருத்தரங்குக்குச் சென்றபோது ,அங்கே பழைய அலுவலக நண்பர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.எல்லோரிடமும் பேசி விடைப்பெற்றபோது ,மீண்டும் பழைய அலுவக நினைவுகளில் சிக்குண்டு ,அந்த நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டே வீடு வந்த போது,குமாருக்கு போன் செய்ய வேண்டும். அவர்தான் ஒவ்வொரு முறையும் போன் செய்கிறார் .ஒருவேளை நான் போன் செய்யாததால் என் மீது கோபம் போல?’என்று  நினைத்துக்கொண்டு ,’சரி பிறகு பழைய போனில் எண்களைத் தேடி அழைக்கலாம் ‘என அப்படியே மறந்துவிட்டேன்.
                     இரவில் போன் அலறியது.மறுமுனையில் தோழியின் குரல் ,பதற்றமாக ‘செல்வி ,குமார் மாரடைப்பால் இறந்துட்டார்...ஐயோ நல்ல நண்பரை இழந்துவிட்டோமே’என்றாள்!உறைந்து போனேன்.செய்வதறியாது நின்றேன்.உடனே கனடாவில் இருந்து விடுமுறைக்கு வந்திருக்கும் தோழிக்கு விசயத்தைச் சொன்னேன். என்ன வேலையானாலும் போய் பார்த்தே ஆகவேண்டும் ‘என்று பள்ளிக்கு விடுமுறை எடுத்துக்கொண்டு ஓடினேன்.கனடா தோழி என்னைக் கண்டவுடன் அணைத்துக்கொண்டு ‘'nice to see you selvi but feel bad to meet you here selvi!' என்றாள். அழாமல் இருக்க ரொம்ப சிரமப்பட்டேன்! 
           தொடர்பிலிருந்து காணமற்போனவர் ,அப்படியே போயிருக்கலாமே?ஏன் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு நட்பை புதுப்பித்தார்..இவ்வுலகை விட்டுப்பிரியப்போகிறேன் ‘என்று சொல்லாமல் சொல்வதற்காகவா?

Friday, 15 August 2014

உலகம் அழியப் போகிறதா?

                                                                                         
               சின்னப்பிள்ளைகளாய் இவ்வுலகில்  உலா வந்த காலங்களில், உலகம் அழியப்போகுது என்று பெரியவர்கள் பேசிக்கொண்டால் ,வாய் வரைக்கொண்டு போன சோறு அப்படியே தட்டில் தானாய் விழும்.அப்படி  ஒரு பயம் .உலகம் அழிந்தால் நாமெல்லாம்  செத்துப்போயிடுவோமே?அப்பா அம்மா கூட வரமாட்டாங்களே?ஒரே இருட்டாய் இருக்குமே?எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்க இடம் கிடைக்குமா?என்றெல்லாம் கூட தோணும்!

          அதிலும் ஒவ்வொரு புதிய வருடத்தில்  உலகம் அழியும் என்று உறுதியாக, எங்க ஊர் மருத்துவச்சி கிழவி சொல்லும்போது,அந்த தில்லைநாதனின் அருகில் இருக்கும் சிவகாமியம்மை சொல்வது போலவே இருக்கும்.அதுக்கு காரணம் அந்த பாட்டி ,யாராவது நிறைமாத கர்ப்பிணியைப் பார்த்து ’இன்னிக்கு ராத்திரி வலி வரும்,இல்லாட்டா காலையில் பொறந்திடும் ‘என சொன்னுச்சினா அதே போல நடக்கும்.அதுமட்டுமா ,சும்மா கண்ணாலே வயிற்றை ஸ்கேன் பண்ணி உள்ளே இருப்பது ’ஆண் குழந்தையா ?பெண்குழந்தையா’ என சரியா சொல்லும்.

           அப்படிப்பட்ட ஆளுங்க உலகம் அழியப்போவதைப் பத்தி பேசினால்,நமக்கு பீதி பேதியாகத்தானே போகும்! உலகம் 2000 இல் அழியும் என்று வதந்தி கிளம்பியது.நான் கும்பிடாத சாமியே இல்லை.எங்க ஊர் மசூதியில் மட்டும்தான் நுழையவில்லை,காரணம் அங்கே இந்துக்களை அனுமதிப்பதில்லை.மற்ற எல்லா வழிபாட்டுத்தலங்களிலும் போய் கும்பிடுவேன்.அப்படி ஒரு பயம்.காலம் இப்படியே செல்லச்செல்ல சமய வகுப்புகளில்   பேசுகையில் ’உலகம் அழியும்,எப்போது என்றால் சில சம்பவங்கள் உலகில் நடக்கும் தருணம். அதைத்தான்  வைணவர்கள் ’கலிகாலம்’ என்றும் கூறுவார்கள்.

          அந்த சில சம்பங்கள் என்னவாக இருக்கும்?உலகம் வெப்பம் தாங்காமல் வறட்சி ஏற்படும் ,அப்போ தண்ணீர் பஞ்சம் உண்டாகும்.எங்கள் ஊரில் அனுபவித்துவிட்டோமே?அதுமட்டுமா  உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு நாட்டின், முக்கிய சொத்து ஒன்றை ,மன சாட்சியே இல்லாமல்  ஒரு தரப்பினர் சதி செய்து தகர்க்கும் காலம் உலகம் அழியும்!நடந்துச்சுதானே? கலிகாலத்தில்  ஒரே பிரசவத்தில் 5  குழந்தைகள் பிறக்குமாம்.அண்மைய மருத்துவ உலகத்தில் அப்படி ஒரே பிரசவத்தில்  ஒன்பது குழந்தைகள் வரை பிறந்திருக்கும் போல?உலகம் அழியப்போகிறதா?

         அதுமட்டுமா? பால்குடிமறவா பச்சிளங்களைக்கூட கற்பழிக்கும் காமுகர்கள் கலிகாலத்தில்தான் வாருவானுங்களாமே?வந்துட்டானுங்களே? பத்திரிக்கையில் தலைப்புச்செய்தி அதுதானே? கற்பழித்த பெண்ணின் கருப்பையை கைவிட்டு வெளியே இழுத்துப்போட்ட காமுகர்களும் பாரதநாட்டில் பிறந்திருக்கின்றனரே?தங்கையைக் கற்பழித்தவனின் உறுப்பை அறுத்து ,அவன் வாயிலே திணித்து கொடூர கொலையும் ,அதையும் காணொளியாக பதிவு செய்து நமக்கு கொடுத்த ,உலகம் அழியப்போகிறதா? கடவுளாக போற்றும் குருமாரர்களே பக்தைகளை பலவந்தம் செய்யும் கேவலமும் ,கர்ப்பகிரகத்தில் காமலீலை புரியும் மஹா கேவலமும் கலிகாலத்தில்தான் அரங்கேறுமாம்!எங்கேயோ கேள்விப்பட்டமாதிரி தோணுமே?

            முன்பெல்லாம் புற்று நோயில் யாராவது இறந்துவிட்டால் ,அந்த வியாதி பெயரைச் சொல்லாமல் ‘அதான்.. அந்த .....நோய்,ஐயோ ஆளையே கொல்லுமே?என்றெல்லாம் பீடிகை போட்டு,அதுவும் ரகசியமாக பெரியவங்க பேசுவாங்கள்.ஏதோ அந்த நோயின் பெயரைச் சொல்லக்கூடாத மாதிரியும்,அதைச் சொல்வது என்னவோ பெரிய பாவம் என்னும் நோக்கத்தில்.ஆனால் இப்போதைய காலக்கட்டத்தில் , மனிதன் கண்டிப்பாக ஏதாவது ஒருவித  புற்றுநோயில்தான் இறக்கப்போகிறான் என மருத்துவ உலகம் அஞ்சுகிறது.அதுமட்டுமா? அந்த காலத்தில் எல்லாம் ,இது போன்ற பணக்கார வியாதிகள் வயசானவர்களுக்கு மட்டும்தான் வரும்.தற்போது பிறந்த குழந்தைக்கு புற்றுநோய்!உலக அழிவின் அறிகுறியா?வாயிலே நுழைய முடியாத நோய்கள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் பல உயிர்களைப் பலி கொள்கின்றன.எபோலா நோய் பரவிய சிலநாட்களில் ஆயிரம் பேருடையை உயிரை பலி கொண்டதாம்?

                   இயற்கை பேரிடர் நடந்தால் உலகம் அழியப்போவது திண்ணம்!இது ஓர் அசைக்க முடியாத நம்பிக்கை. போனவாரம் கூட சீனாவை  நிலநடுக்கம் உலுக்கியது.சென்னையில் இடிமின்னல் தாக்கியபோது அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்து உயிர்கள் பலி!சுனாமியைப் பற்றி சொல்லவே வேண்டாம். அடிச்சி துவைச்சி கழுவிப்போட்டதுபோல,கடல் சீற்றம் !கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்துகொண்டுதானே வருது?திருவிழா நெரிசலில் உயிர்பலி!வழிபாட்டு தலங்களில் உயிர் பலி!தேவாலயத்துக்குச் சென்ற ஊர்தி விபத்து.சிவதலங்களுக்குச் சுற்றுலா சென்ற கார் விபத்து. தொழுகையின்போது குண்டு வெடித்து உயிர் பலி.

          மலேசியாவைப் பொறுத்தவரையில் சிலவிசயங்கள் நம் அறிவுக்கு எட்டாத விசயம் என்றே நாங்கள் நினைத்து வந்தோம்.அதாவது வான் ஊர்தி காணாமல் போவது.இன்று கண்டுபுடிக்கவே முடியாத அளவுக்கு ஒரு போயிங் ரக வான் ஊர்தி காணாமற் போச்சே?அறிவியலும் நவீனமும் பின்னிப்பிணைந்திருக்கும் இவ்வேளையில் ,அந்த விமானத்தை தேடுவதற்கு மந்திரவாதிகளை அழைத்து வந்த காமெடியும், உலக அழிவுக்கு இட்டுச்செல்லும் என்று சொன்னால் மறுக்கவா முடியும்?அவன் ஊர் சண்டைக்கு ,ஊரான் வீட்டு விமானத்தைச் சுட்டு வீழ்த்துவானாம் ?நடந்துச்சே?

             சகோதர சண்டையில் மதத்தின் பெயரைச் சொல்லி உயிரோடு நம் கண் முன்னே நொடி நேரத்தில் நூற்றுக்கும் மேல் உயிர்களைப் பழி வாங்கும் செயலை தினமும் காண்கிறோம்.அது எதன் அடையாளம்?மதத்தில் தீவிரம் என்று பிற மதங்களை குறை கூறி கூவி கூவி பேசும் அவலமும் இந்த கலிகாலத்தில் கண்முன்னே அரங்கேறுகின்றதல்லவா?தன்னை ஏமாற்றியவ(ன்)ள், ’எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்’என்று வாழ்த்திய மனிதர்கள் வாழ்ந்த இதே உலகில்தான்  ,ஒரு பெண் தன்னை ஏமாற்றியதால் ,அவளுடைய அந்தரங்ககதையை பதிவு செய்து உலகத்துக்கு காட்டும் விநோதமும் கலிகாலத்தில் சர்வசாதரணமாய் போய்க்கொண்டிருக்கின்றன!விலங்குகள் மனிதை அழித்த காலம் போய் ,மனிதனை மனிதனே அழிக்கும் காலம்தான் கலிகாலம்.பின்னே உலகம் அழியாதா என்ன?

              சரி இறுதியாய் என்னதான் முடிவு பண்ணுவது?உலகம் அழியுமா?அழியத்தான் வேண்டுமா?அதனால் உனக்கு என்ன பலன்?நான் ஏங்கி ஏங்கி வேண்டிய  ஒன்று எனக்கு கிடைக்காத ,நடக்காத பட்சத்தில் உலகம் அழியட்டும் என்று நினைப்பது ஓவ்வொரு தனிமனிதனின் சுயம்தானே?
இத்தனையும் நடந்துகொண்டிருக்கும்போது ,’உங்க இறைவன் என்ன செய்துகொண்டிருக்கிறான்?என்று சிலர் கேட்கிறார்கள்...’ஹாஹ்ஹாஹாஹா அவர்களுக்கு நாம்  சொல்லும் ஒரே பதில்,அவன் ரொம்ப பிசியா இன்னுமொரு உலகத்தைப்படைத்துக்கொண்டும் ,இந்த உலகத்தைப் பையை பைய அங்கும் இங்குமாக அழித்துக்கொண்டிருக்கிறான்!

             பசுவை பாசத்தோடு இணைத்து ,அதன் பற்றை அறுக்கச் செய்யும் பதியின் செயல்தான் உலக அழிவாக இருக்குமோ???

Wednesday, 28 May 2014

கோபத்துக்கு கழிவு 40வெள்ளியா?


            சீனர் கடைக்குச் சாப்பிடப்போனோம்.10 நிமிடம் ஆகி ஆர்டர் பண்ணிய குளிர்பானம் வந்தன. அரைமணி நேரம் ஆனது சாப்பாடு வரவில்லை.பேசாமல் இருந்தேன் ,பிறகு சாப்பாடு வந்தது எங்களுக்கு அல்ல,எங்களுக்கு பின்னால் வந்த மேஜைக்கு போனது.இனியும் பேசாமல் இருப்பேனா? கூப்பிட்டேன் ‘எங்கே உணவு’?லேட் ஆகுமா?என்றேன்.
           சில சீனர் கடைகளில் தமிழர்களை மதிப்பது குறைவு காரணம் நாம் அவர்களைப்போல பாம்பும் பன்றி இறைச்சியும் சாப்பிடமாட்டோம் ,ரொம்ப குறைவான விலைக்கு சாப்பிடுவோம் என்ற இளக்காரம்!அந்த நேரம் வூட்டுக்காரய்யா பக்கத்து கடையில் ஏதோ வாங்க போய்விட்டார். கடைக்காரியும் ‘இரு தோ வருது ‘என்று சொல்லிச் சென்றவள் ,40 நிமிசம் ஆனது.இனியும் தாங்காது ;என்று எழுந்து ‘ஹலோ நாங்க குடிச்ச டிரிங்ஸ் மட்டும் பில் போடு நான் கிளம்புகிறேன்’என்று குரலை உயர்த்தினேன். 
          முதலாளி ஓடிவந்தாள் ‘என்ன மேடம்?’என்றாள்.’40 நிமிசம் ஆச்சு!என்ன நடக்குது?என்றேன். ‘இல்லை நீ சைவம் அசைவம் கலந்து ஆர்டர் செய்ததால் வந்த கோளாறு ‘என்று சமாளித்துக்கொண்டே கடைப் பெண்ணிடம் சைகையில் பேசினாள்.அவளும் ஏதோ ஒரு ஐயிட்டத்தைக் கொண்டு வந்து வைத்தாள் ‘இது என்ன?’ என்றேன். இல்லை ..வந்து ..’என்று நீட்டினாள்.நான் இதை ஆர்டர் செய்யலை ,போதும் பில் போடு ‘என்று எழுந்தேன் (உள்ளுக்குள் பயம்தாம் இருந்தாலும் கோபத்தைக்காட்டணுமே?) பிள்ளைகளும் ‘அம்மா பேசாமல் இருங்க,’என்று கண் ஜாடை செய்தனர். 
          அதற்குள் வூட்டுக்காரய்யா வரவே ’கடைக்காரி ஐயாவிடம் ‘சாரி ..பூரி’என்று மழுப்பினாள்’நிலைமையை அறிந்தவர் பிள்ளைகள் இன்னும் சாப்பிடல ,அதான் இதான் என்று என் கோபத்துக்கு விளைக்கம் கூறிக்கொண்டிருந்தார்,நான் அவளிடம் ’ஆர்டர் செய்ததை கான்செல் பண்ணு ‘என்று காருக்குள் போனேன். சாரி மேடம் ’‘என்றாள்.பசங்களும் என்னோடு ஓடி வந்தார்கள்.சற்று நேரம் கழித்து பொட்டலங்களோடு வந்த கணவர்’ அவளும் ரொம்ப மன்னிப்புக் கேட்டாள்,எனிவேய் ரிம100 பில்,லேட் ஆகியதால் ரிம60தான்’பில் போட்டாள்’என்றார்.’அடடா!அப்படின்னா இனிமேல் போகிற கடையில் எல்லாம் சண்டைபோடலாமே,கழிவு விலை கிடைக்கும்’என்றேன்.முன் சீட்டில் இருந்து ஒரு குரல்’இனி உன்னை கடைக்கு அழைச்சிட்டுப்போனால்தானே?நான் அப்படி நடந்துகொள்ள காரணம் ஒரு பாடம் புகட்டவே மேலும் நம் இனம் என்றால் ஏளன புத்தி வரக்கூடாது என்பதால் மட்டுமே.
                        உரிமையைத் தட்டிகேட்டால் தப்பா?

Sunday, 25 May 2014

ஒரு தவறுன்னா பரவாயில்லை!

                         சென்றமாதம்  காலையிலே 6 மணிக்கெல்லாம் காரை விட்டேன், யூனிவர்சிட்டி மருத்துவமனைக்கு. மலாயா பல்கலைக்கழகம் அருகே இருப்பதால்  அதன் பெயர் பல்கழைக்கழக மருத்துவமனை.எனக்கு கண்,காது,தொண்டை நிபுணரைச் சந்திக்க தேதி நியமனிக்கப்பட்டிருந்தது.
             பொதுவாகவே அந்த மருத்துவமனைக்கு போகும் சாலைகள் சாதா நாட்களிலே கொடுரமான நெரிசல் ஏற்படும்.அதுவும் திங்கட்கிழமைகள் ,பள்ளி நாட்களில் சொல்லவே வேண்டாம்.ஆகவே நெரிசலைத் தவிர்க்க , காலையிலே காரை விட்டேன். அப்படி ஓடவும் ஒரு காரணம் உண்டு.பிரத்தியேக கார் பார்க்கில் கார் நிறுத்தும் இடம் ரொம்ப குறுகலாக இருக்கும்.என்னால் அப்படி உள்ள இடத்தில் காரை நுழைக்கவோ? காரைப்பார்க் பண்ணவோ ரொம்ப கஷ்டப்படுவேன்.என் கார் ஸ்டேரிங் பவர் ஸ்டேரிங் அல்ல என்பதால்!
           
             அப்படி ஒருமுறை என் தங்கை மருத்துவமனையில் அட்மிட் ஆனதால் அவள் காரை முதன்முதலாக நான் ஓட்ட வேண்டிய நிலைமை!காரை எடுத்து இறங்கிய நொடியில் சர்ரேன்று குறுகலான பாதையில் கார் தேய்ச்சிக்கொண்டுப்போனது.சுமார் ரிம300 வெள்ளி செலவு வச்சது.அன்று முதல் எனக்கு அங்கே கார் பார்க் பண்ண பயந்து கொண்டு ,திறந்த வெளியிலோ அல்லது மருத்துவமனைக்கு வெளியிலே காரை பார்க் பண்ணிவிடுவேன்.அன்று என் தோழி சொன்னால்’டீச்சர் நீங்கள் ஏன் கஷ்டப்படுறிங்க கொஞ்சம் சீக்கிரமா போனால் கேட் அருகிலேயே கார் பார்க் பண்ணலாம்’ என்றாள். சரி அவ அடிக்கடி போய் வருபவள் ஆனால் கணவர்தான் கார் ஓட்டுவார் ,இவளுக்கு காரைப்பத்தி ஒரு மண்ணும் தெரியாது.அவ கணவரைக் கேட்டிருக்க வேண்டும்.

              நானும் ரொம்ப திறமையாய் காரை விட்டேன்.மருத்துவமனையை நெருங்கிய போது காலை மணி 6.30. நானும் தோழி சொன்ன இடத்துக்கு காரை விட்டேன். கார் போய் நுழைவாயிலில் நின்று டிக்கெட் எடுத்தால்  தானியங்கி கேட் திறக்கும்.அந்தோ பரிதாபம்! , நான் தவறுதலாக நுழைந்துவிட்டேன்.என்னால் டிக்கெட் எடுக்கமுடியவில்லை காரணம் அது மருத்துவமனை ஊழியர்களின் பார்க்கிங் இடம் ,பாஸ் இருந்தால் மட்டுமே கேட் திறக்கும்,நானும் பின்னால் போகமூடியாமல் காலையிலே அழாத குறையாய் நிற்க எனக்கு பின்னால் (நல்லவேளை காலை 6.30 என்பதால்) ஒரு நான்கு கார்கள் மட்டுமே  கடுப்பில் ஹார்ன் அடித்துக்கொண்டு நின்றன. என் பின்னால் நின்ற நர்ஸ் இறங்கி அவர்களிடம் நிலைமையை விளக்கி விட்டு நான் பின்னால் ரிவர்சில் போக ஏதுவாக அவள் காரை ரிவர்சில் எடுத்து எனக்கு வழி கொடுத்தாள்.அழுதே விட்டேன் .

                      அப்படியே போய் ரொம்ப சிரமப்பட்டு காரை ஓரிடத்தில் வைத்துவிட்டு ,மீண்டும்  தவறான இடத்தில் பார்க்கிங்  டிக்கெட் எடுக்க போனேன்.நல்லவேளையாக அங்கே இருந்த செக்யூரிட்டி காண்பித்தான். அப்போதான் தெரியும் ,நான் போகும் கிளினிக் எங்கோ இருக்கிறது நான் காரைப் பார்க் பண்ணியது வேறு ஒரு இடத்தில் என்று.’சரி காரை வைத்துவிட்டாய்,இனி காரை எடுத்தால் அப்புறம் பார்க்கிங் கிடைக்காது’என்றார் செக்யூரிட்டி.என்ன செய்ய! சுமார் அரை கிலோ மீட்டர் காலையிலே அவசர அவசரமாக  ஓடினேன்.நிறைய மாற்றங்கள் ,புதிய கட்டிடங்கள் ,பல புதிய அறைகள் என எல்லாமே புதிதாக இருந்தன.இரண்டு வருடங்களில் அப்படி ஒரு மாற்றம்.அங்கே போய் நம்பர் எடுத்தேன் .என் டெர்ன் ஐந்து காட்டியது.கொஞ்சம் அமர்ந்த்து ஆ.வி புத்தகத்தைப்புரட்டினேன்.மனம் ஏதோ தவறு என்று சொல்வதுபோல அசெளகரியமாக இருந்தது. எட்டிப்பார்த்தேன் நான் உட்கார்ந்து இருந்தது கண் கிளினிக். டிக்கெட்டை அங்கேயே கடாசி விட்டு பக்கத்தில் இருந்த காது கிளினிக் வந்தேன்.இரண்டு கவுண்ட்டர் ,சரியா படிக்காமல் (கண்ணாடி அணியாமல்)டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மீண்டும் உட்கார்ந்தேன் .

                  என் பக்கத்து இருக்கையில் இருந்த பெண்மணியும் டிக்கெட் வைத்திருந்தாள். அவள் வைத்திருந்த டிக்கெட்டில் E போட்டு பிறகு எண் இருந்தது.எனக்கு வெறும் எண் மட்டுமே.அவளிடம் காட்டி ஏன் எனக்கு இ இல்லை ’என்றேன்.’நீ காது பார்க்க வந்தியா ?என்றாள்’ஆமாம் ‘என்றேன்.’அப்படின்னா நீ வலப்பக்கம் இருக்கும் கவுண்ட்டரில் டிக்கெட் எடு,இது கர்ப்பப்பை கவுண்டர் ‘என்றாள்.ஏன் கர்ப்பை கிளினிக் சம்பந்தமில்லாமல்  இங்கே இருக்கிறது?என்று கொஞ்சம் கோபமாக கேட்டேன்.அவளும் மெதுவாக ’நம் நாட்டில் எது சிஸ்டமெட்டிக்-ஆக இருக்கு?என்றாள். மேலும் ‘நீ இங்கே புதுசா”என்றாள்.இல்லையே என் பிரசவம் தொடங்கி பல சிகிச்சைக்கு இங்குதான் வருவேன்.ஒரு இரண்டு வருசமா ரொம்ப நலமாக இருப்பதால் ,இங்கே வர வேண்டிய வேலை இல்லை’ என்றேன்.சிரித்தாள் ,’இரண்டு வருடங்களில் நிறைய மாற்றங்கள் தோழி’சரி போய் முதலில் டிக்கெட்டைச் சரியா எடு ‘என்று பணித்தாள்.

                    நான்காவது தவறு?சரி போய் டிக்கெட் எடுத்து காத்திருந்தேன்,என் டெர்ன் வந்ததும் உள்ளே போய் ,இங்கே எந்த தவறும் நிகழக்கூடாது என்று ரொம்ப கவனமா டாக்டரிம் காதைக் காட்டினேன் ஆனால் டாக்டர் தவறான காதை(வலியில்லாத காதை)முதலில் பார்த்தார்.காது நிபுணர்கள் எப்போதும் நார்மலான காதைத்தான் முதலில் பார்ப்பார்களாமே?எல்லாம் முடிந்து ‘நல்லா இருக்கு,நீ இனி வலி என்றால் மட்டும் வரலாம்’என்றார். எங்கேடா வேறு எதுவும் தவறு நடந்திடும் என்று அவசர அவசரமாக ஓட்டமும் நடையுமாய் திரும்பினேன்.

             அந்த தவறுகளில் நிறைய அனுபவம் பெற்றேன். நிறைய  மாற்றங்கள் செய்யப்பட்டன. என்னைப்போல நீண்டநாட்கள் போகாதவர்கள் யாரும் அங்கே போவதாக கூறினால், சரியான வழி,பார்க்கிங்,கிளினிக் என்று விலாவாரியாக கூறி அனுப்புவேன்.திரும்பியவுடன் அவர்கள் வந்து நன்றி கூறிவிட்டு’நல்லவேளை நீங்கள் சரியா சொன்னீங்கள், இல்லாட்டா பழைய கட்டிடங்களில் போய் அலைமோதிக்கொண்டு இருப்போம் ‘என்பார்கள்.
                 என் ஜப்பானிய பாஸ் எப்போதும் ஒன்று சொல்வார்:
             learn from mistakes and mistake  makes a man perfect!

         



Friday, 23 May 2014

ஒரு பாராட்டும்... உற்சாகமான சொல்லும்!


                 எப்போதும் காலையில் 6.15 க்கு அலார்ம் அடித்தும் எழ மாட்டான், நான் அவசர அவசரமா பூஜையை முடித்துக்கொண்டு ஓடி வந்து எழுப்புவதற்குள் மணி 6.30 ஆகிடும் . அப்போ கூட எழமுடியாமல் சிரமப்பட்டு எழுந்து குளிக்கப்போகும் என் மகன் ,கடந்த இரண்டு நாட்களாக ஆறு மணிக்கெல்லாம் எழுந்து எனக்கு முன்பே கிளம்பி ’சீக்கிரம்ம்மா,சீக்கிரம்மா’என்று காருக்குள் போய் உட்கார்ந்து கொள்வான்.
           அதற்கு ஒரே ஒரு காரணம்தான், அவன் கவுன்சிலிங் ஆசிரியை இரண்டு நாட்களுக்கு முன்பு போன் பண்ணி’டீச்சர் வாசனிடம் கொடுங்கள் ‘என்றார்.’ஏன்?’என்றேன்.’ஒரு நியூஸ் சொல்லனும்’என்றார்.கொடுத்தேன் ‘அவன் பேசும்போது அவன் முகமலர்ச்சியைக் கண்டேன்.’பிறகு போனைக்கொடுத்தான்.
’டீச்சர் உங்கள் பையன் போனமுறை ஒழுங்காக செய்யாத தேசியமொழி பரிட்சையில் இந்த முறை ‘ஏ’வாங்கியிருக்கான்.நிறைய முயற்சிகள் போட்டுள்ளான். என் பிள்ளை தேர்ச்சியடைந்ததுபோல ஃபீல் பண்ணுறேன்..வாழ்த்துக்கள்’.வீட்டுக்கு வந்து சாப்பிடாமல் கூட போன் பண்ணுகிறேன்’என்று முடித்தார்.
          போனைவைத்தவுடன் ஓடி வந்து அணைத்துக்கொண்டு ;அம்மா நான் ‘ஏ’ எடுத்தேன் ‘என்றான்.யார் என் வீட்டுக்கு (பெரிம்மா,சித்தி,மாமா,என் தோழிகள்)போன் செய்தாலும் ஓடிப்போய் போனை எடுத்து ,என்னிடம் அந்த விசயத்தைச் சொல்லச்சொல்லி காதில் கிசுகிசுப்பான்.
                  பெற்றோர்களே..ஆசிரியப்பெருமக்களே ஒரு உற்சாகமான சொல்,ஒரு பாராட்டு (அதுவும் எதிர்பாராத வகையில்) எப்படி அவனுள் மாற்றைத்தை கொண்டு வந்துள்ளது?இன்னும் அவன் எட்டிப்பிடிக்க எவ்வளோ சிரமங்கள் இருந்தாலும் அந்த சின்ன மாற்றம் ,ஒரு மகிழ்ச்சிதானே?
           
ஆகவே ....யாராக இருந்தாலும் பாராட்டப்பழகுவோம்..மாற்றத்தைக்கொண்டு வருவோம்!

Tuesday, 13 May 2014

முதல் பிரசவம்!

                  ஒவ்வொரு பெண்ணாலும் தன் வாழ்க்கையில் மறக்கமுடியாத அந்த தருணம், தனது முதல் பிரசவம் என்றே சொல்லலாம்!அதைத்தான் அன்னையர் தினத்தில் எழுத தொடங்கி  ,கொஞ்சம் லேட் பிரசவமாக இன்று வெளியீடு காண்கிறது . திருமணமாகி திட்டமிட்டபடியே குழைந்தப்பேறு கிட்டியது,மாதங்கள் ஓடின!ஒன்பதாம் மாதமும் நெருங்கியது. என் அம்மா அடிக்கடி சொல்லும் ஒரே சொல்’ சுகப்பிரசவம்தான் சிறந்தது.அறுவை சிகிட்சை என்றால் உங்களுக்குத்தான் கஷ்டம் .குளிக்க சிரமம்.பிள்ளையைத் தூக்க சிரமம் ‘என்று சொல்லி சொல்லி பயமுறுத்துவார்.

          அதற்காகவே நிறைய நடப்பேன். ஆனாலும் எதுக்கு பயந்தேனோ ?அதுதான் நடந்தது!ஆம் அறுவை சிகிட்சை பிரசவம்தான்!.அந்த இறுதி பரிசோதனையில்  மருத்துவர் ‘செல்வி இந்த மாதம் ரொம்ப கவனம் ,வீட்டில் பெரியவங்க இருக்காங்கதானே?’என்றார்.ஆமாம் டாக்டர் ,நான்  வளைக்காப்பு போட்டவுடன் அம்மா வீட்டில்தான் இருக்கிறேன்’என்றேன்.அம்மா வீட்டிலா??என்று ஒரு சில மருத்துவ ரகசியங்களைச் சொல்லி ‘சரி பரவாயில்லை, வலி வந்தால் உடனே வரனும்’என்று அனுப்பி வைத்தார்.இல்லாவிட்டால் நாங்கள் கொடுக்கும் தேதியில் வந்து அட்மிட் ஆகனும்’என்றார்.

           கொடுக்கப்பட்ட தேதியும் வந்தது,வலிதான் வரவில்லை. காலையில் அட்மிட் செய்தார்கள். கண்ணீரோடு என் அம்மா வழியனுப்பிவைத்தார். வார்டில் அனுமத்தித்தவுடன் , உடைகளை மாற்றச் சொல்லி . படுக்கையில் படுக்கச் செய்தார்கள். மருத்துவர் வந்தார்.நெற்றி நிறைய திருநீறு அணிந்து இருந்தார்.அப்பாடா?நம்ம இனம்’என பெருமூச்சு விட்டேன்.என் கையைக் குத்தி மருந்து தண்ணீர் உடலில் போக ஊசி செலுத்தினார்.பயத்தில் ஒரே உதறல். ‘என்ன செல்வி ?பயமா?என்றார்’ஆமாம் என்று சொல்வதற்குள் கண்ணீர் பொல பொலவென புரண்டோடியது.சிரித்தார்.’கொஞ்ச நேர வலி, பிறகு மகிழ்ச்சி ,ஆனால் என்ன ?செயற்கையாக  வலி வரச் செய்தால் அது ரொம்ப வலிக்கும் ‘என்றார்.அடுத்த கணம் அழ ஆரம்பித்தேன்.’என்னது இது ?சின்னப்பிள்ளை மாதிரி என்று கைகளைப் பற்றி ‘ஒன்னும் பயம் வேண்டாம்’எல்லாம் நல்லபடி நடக்கும் ‘என்றார்.

               நல்லவேளை அந்த மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான் .காலையில் ஒரு பாட்டில் மருந்து நீர் ,உடலில் ஏறியது ,வலி இல்லை. இடையில் வேற ஒரு சிகிட்சையும் நடந்தது .அதுவும் ,கைக்கூடவில்லை.இரவு வரை,பாட்டில்கள்  என்ணிக்கை அதிகரித்தன. வலி ஏற்படவில்லை.மலாய்க்கார  மருத்துவர் வந்தார்’என்ன செல்வி இன்னும் வலி இல்லையா ?என்றார்.’இல்லை என்றேன்.மீண்டும் நம்ம மருத்துவர் வந்து ‘என்னம்மா இது?கல் போல கிடக்கிறாய்? ஒரு பாட்டில் நீர் ஏறினாலே வலி வரும் , ரெண்டு ட்ரிட்மெண்ட் கொடுத்தாகிவிட்டது,இன்னும் வலி இல்லையா?why you are very strong?என்றார். என் பதில் கண்ணீர் மட்டுமே!

                 ’ஏனோ தெரியல?நம்ம பெண்கள்தான் பிரசவத்துக்கு ரொம்ப கஷ்டப்படறாங்க,மலாய்க்கார பெண்களைப் பாருங்க,வரதும் தெரியாது,வலியும் தெரியாது ,பிரசவிச்சிட்டு போயிடுவாங்க’என்று புலம்பிக்கொண்டே நம்ம  மருத்துவர் , அவர் வேலையைச் செய்தார்.இரவில் லேசாக வலி வந்தது .ஆனால் அது வலியே இல்லை என மருத்துவர் கூறினார்.  காலையில் பார்த்துவிட்டு அறுவை சிகிட்சைதான் செய்யவேண்டி வரும் போல’என்று கூறி மருத்துவர் விடைபெற்றார்.நர்ஸ்கள் கண்காணிப்பில் இருந்தேன் ,அப்ப்ப்பபோ மருத்துவர்கள் எட்டிப்பார்த்துச் செல்வார்கள்.முதல் பிரசவம் என்பதாலும் ,அன்று கடமையில் இருந்த பெரும்பாலான  மருத்துவர்கள் தமிழர்கள்  என்ற கூடுதல் நல்ல விசயமோ  என்னவோ ? எனக்கு நல்ல கவனிப்பு கிடைத்தது என்றே சொல்லலாம்.

                பொழுதும் விடிந்தது. அன்று 20/10/99 ,பிரசவ வார்டில் உணவு உண்ட ஒரே அம்மா நானாகத்தான் இருப்பேன். உணவு வந்தது.ஆனால் சாப்பிட முடியவில்லை, பயம் காரணமாக.தமிழ் டாக்டர்கள்  புடைசூழ ‘செல்வி உன் குழந்தை மூச்சு திணற வாய்ப்பு உண்டு ,ஆகவே அறுவை சிகிட்சை செய்யப்போகிறோம் ,அதிலும் உனக்கு epidural எனும் ஊசி செலுத்திதான் அறுவை சிகிட்சை செய்வோம் ,அதற்கு நீ கையெழுத்திடவேண்டும் ;என்று ஓர் இளைஞன் டாக்டர் கூறினார்.ஓரளவு எனக்கு அந்த சிகிட்சை முறை தெரியும் .அதாவது முதுகெலும்பில் ஊசி செலுத்தியவுடன் ,இடுப்புக்கீழே செயலிழந்தது போல ஆகிடும்!நானோ ’அந்த முறை நல்லதல்ல,பிற்காலத்தில் அது சைட் எஃப்ஃபெக்ட்ஸ் அதிகமாமே?என்று வாதாடினேன்.கொஞ்சம் கோபமான அந்த இளைஞர் டாக்டர் ‘உனக்கு யார் சொன்னது?என்று குரலை உயர்த்தி கேட்டார்.என் தோழிகள் சிலர் கூறினார்கள் ‘என்றேன்.’ஓஹோ அப்படியா?அவர்களில் யாராவது மருத்துவரா?என்று கோபமாக கேட்டார்.எனக்கோ பயம் மட்டுமே இருந்தது. பதில் சொல்ல முடியவில்லை.

             அந்த நேரம் நான் கையெழுத்திட மறுத்ததால் ,அந்த  மூன்று மருத்துவர்கள் ஏதோ பேசிவிட்டு , அதில் ஒருவர் அறையை விட்டு வெளியேறினார்.சிறிது நேரத்தில் வேற ஒரு மருத்துவருடன் வந்தார்.புதிதாக வந்தவர் என்னிடம் வந்து’ வணக்கம்மா என் பெயர் ப்ரோஃபெசர் சிவகுமார். உன் குழந்தை மூச்சு திணற தொடங்கியிருக்கும் ,பனிகுடம் உடைந்து பல மணிநேரம் ஆகியதால் ,இனி காத்திருக்க முடியாது. நீ கையொப்பமிடு , ஒன்னும் பயமில்லை’என்று அந்த எபிடுரல் ஊசியைப் பற்றிய ஓர் அறிக்கையை வாசிக்கச்  சொல்லி சற்று முன் என்னைத் திட்டிய மருத்துவரை அழைத்தார்.அவரும் அதை எனக்கு வாசித்துக் காட்டினார்.பிறகு இறுதியில் ‘ரொம்ப பிடிவாதம் டாக்டர் ,சொன்னால் கேட்காமல் .......’என்று பேசியவரை,அந்த ப்ரொஃபெசர் வழிமறித்து ‘ கண் ஜாடைக்காட்டினார்’அப்படி பேசாதே ‘என்று.
       
                இறுதியாக கையொப்பமிட்டேன்.சில சம்பிரதாய கேள்விகளுக்குப் பிறகு  ஒரு  பெரிய உருவம் வந்து என் முதுகெலும்பில் ஓர் ஊசியை செலுத்தினார்.அப்பப்பா!கொடூரமான வலி ,மறு கணம் என் இடுப்புக்கீழே செயல் இழந்துபோனதுபோல உணர்ந்தேன்,சற்று முன் பேசிய ப்ரொஃபெசர் சிவா வந்தார். அவருடன்  மற்றுமொரு மருத்துவரும் வந்தார்.செல்வி நலமா ?என்றார்.’ஹ்ம்ம் என்றேன்.டாக்டர் சிவா கையில் கத்தியை எடுத்து ,உங்க  ஒரு காலை மடக்குங்க ‘ என்றார்.’டாக்டர் என் கால் இருப்பதை என்னால் உணரமுடியவில்லை’ என்றேன்.சரி அப்போ ஓகே ,நாங்கள் வெட்டும்போது வலி வந்தால்  வேகமாக சொல்லுங்கள் ‘என்றார்.

               புதிதாக வந்த மருத்துவர் என் தலை மேல் கைகளை வைத்து என்னுடன் பேச்சுக் கொடுத்தார். ’இன்னும் சிறிது நேரம் பொறுங்க செல்வி ,உங்க  பிள்ளையைப் பார்க்கலாம். வலி இருக்கா ?’என்றார்.இல்லை என்றேன். என்ன பிள்ளை உங்களுக்கு  ஆசை ? ஏன் உங்களுக்கு  வலி இல்லை?உங்க அம்மா எப்படி உங்களைப் பிரசவித்தார்?’ நார்மலா ,அல்லது ஆப்ரேசனா?என்று என் தலையில் கைவைத்து வறுடியபடியே பேசிக்கொண்டிருந்தார்.பிறகு ’செல்வி,வயிற்றில் உள்ள ஏழு லேயர்களில் இப்போ இறுதி லேயரைக் கிழிக்கப்போகிறோம் ,அங்கேதான் உன் பிள்ளை இருக்கும்’ என்றார்.

               டாக்டர் சிவா தன் மாணவ டாக்டர்களிடம் ஏதேதோ என் உடலில் காட்டி காட்டி கேள்வி கேட்ட வண்ணம் தன் கடமையில் ஈடுபட்டிருந்தார். இறுதியாக என் தலைமாட்டில் இருந்த மருத்துவர் ‘செல்வி உன் பிள்ளையை வெளியே எடுக்கப்போகிறோம் ‘ அது அழும் குரல் உனக்கு கேட்கும்’ என்றார்.அறையின் மேலே சிலிங்கில் தொங்கும் டியூப்  லைட்டில் ரத்தம் வழிவது மட்டுமே என் கண்களுக்கு தெரிந்தது ,ஆனால் நான் மயக்கமடையவில்லை. இப்போ எனக்கு குழந்தை அழுகுரல் கேட்டது, ப்ரொஃபெசர் சிவா ,தன் மாணவர்களுக்கு ஆர்வமாய் எதையோச் சொல்லிகொண்டிருந்தார்.

                   என் தலைமாட்டில் இருந்த மருத்துவர்,’செல்வி உன் குழந்தை இவ்வுலகத்துக்கு வந்து விட்டது,இன்னும் சில நொடிகளில் நீ பார்க்கலாம் ‘என்றார். டாக்டர் சிவா குழந்தையை நர்சிடம் கொடுப்பதை பார்க்கமுடிந்தது. நர்ஸ் என் அருகில் வந்து ‘இதோ உன் பேபி ,என்ன பேபி சொல்? ‘என்று குழைந்தையின் பிறப்புறுப்பைக் காட்டினாள்’பெண்’என்றேன். என்ன அதிசயம் குழந்தை என்னைப் பார்த்தது.டாக்டர்கள் சிரித்தார்கள்.’இப்போ குழந்தைகள் அம்மாவைப் பர்ப்பது ரொம்ப நார்மல்’என்று டாக்டர் சிவா கூறியதைக் கேட்க முடிந்தது.சில நொடிகளில் குழந்தையைக் கொண்டு சென்றாள் நர்ஸ்.

              என் அருகில் இருந்த டாக்டர் என்னிடம் ’ரொம்ப சமத்தாக எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்திங்கம்மா  செல்வி,இதற்கு முன் வந்த மலாய்க்கார பெண்ணுக்கு தொடர்ச்சியா ஆப்ரேசன் செய்ய முடியவில்லை,பல சிக்கல்கள் ஆனால் உங்க முழு ஒத்துழைப்புக்கு நன்றி’என்று கூறி விடைபெற்றார். டாக்டர் சிவா தன் கடமையை மாணவர்களிடம் ஒப்படைத்து ‘வார்ட்டுக்கு போங்கம்மா, அங்கே வரேன்’ என்று விடைபெற்றார்.

              எல்லாம் ஒரு கனவு போல இருந்தது.மறுநாள்தான் அந்த மறுத்துப்போன உணர்வு குறைந்து, அறுவை சிகிட்சை வலி எடுத்து.அறுவை சிகிட்சை பிரசவம் ஒரு கொடூரமான அனுபவம்.எல்லோரும் சுகப்பிரசம அடைய வேண்டிக்கொள்ளுங்கள் அம்மாக்களே!ஆனாலும் நமக்கு விதிக்கப்பட்டதுதானே கிடைக்கும்?
                                                                                      


Sunday, 4 May 2014

நவீனத்துவமும் ந(ர)கர வாழ்க்கையும்!

              சொர்க்கமே என்றாலும் அது கிராமத்து வாழ்க்கைப்போல வருமா?அட என்னதான் நவீனம் என்றாலும் ,இந்த ந(ர)கர வாழ்க்கை இனித்திடுமா?
”கிராமத்து வீடுகளில் இடைவெளி உண்டு ஆனால் கிராம மக்களின் மனதில் இடைவெளி இல்லை அதேப்போல  நகர வீடுகளில் இடைவெளி இல்லை ஆனால் நகர மக்களின் மனதில் இடைவெளி உண்டு”.முகநூலில் என்னை அதிகம் கவர்ந்த அதேவேளையில் ஆயிரம் உண்மை அடங்கிய வரிகளும் கூட.

                கூட்டுக்குடும்பமாய் வாழ்வதே ஓர் வரம் ,அதிலும் கிராம வீட்டில் கூட்டுக்குடும்பமாய் வாழ்வது இரண்டு குடும்பம் நமக்கு இருப்பது போல் ஓர் உணர்வு.அப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்த என் வாழ்க்கை ,இப்போ ந(ர)கரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி போவதை என்னவென்று சொல்ல?பிறந்தது ,படிச்சது ,வளந்தது என்று எல்லாமே தோட்டப்பள்ளி மற்றும் கிராம வீடுகளில் ஊறிப்போன நமக்குதானே தெரியும் அந்த அனுபவங்கள்.அம்மா வேலைக்குப் போன காலங்களில் கூட,எங்களுக்கு அம்மா ஏக்கம் வந்தது இல்லை.

            அக்கம்பக்கம் இருக்கும் தோழிகளின் அம்மாக்கள் எங்க அம்மாவுக்கு நிகராக பார்த்துக்கொள்வார்கள். ’சாப்பிட்டிங்களா? ,குளிச்சாச்சா? துணிகள் எல்லாம் எடுத்து உள்ளே வையுங்கள், அம்மா வர நேரம் போய் வேலையைப் பாருங்கள்’என்று பக்கத்துவீட்டிலிருந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.ஆனால் இப்போ உள்ள ந(ர)கரத்தில் , யார் வீட்டில் இருக்கிறார்கள்.வீட்டில்தான் இருக்கிறார்களா?வேலைக்குப் போகிறார்களா என்று கூட தெரிவதில்லை. கிராம வீட்டில் பூட்டு ,தாழ்ப்பாளே இருக்காது.எங்காவது வெளியூர் போவதாக இருந்தால்தான் ,பூட்டைத் தேடி பூட்டு போடுவோம்.

               சும்மா ஒரு நாலஞ்சி மணி நேரம் வெளியே போவதாக இருந்தால் ,பக்கத்து வீட்டில் சொல்லிவிட்டுப்போவோம். அப்படி வீட்டைப்பூட்டினாலும் சாவியை அக்கம்பக்கத்தில் கொடுத்துச் செல்வோம்.வீட்டுக்கு யாரும் வந்தால் ,நாம் திரும்பி வரும்வரை அவர்கள் வீட்டில் அழைத்துக்கொண்டுபோய் டீ ,காப்பி எல்லாம் போட்டுக்கொடுத்து நாங்கள் திரும்பியவுடன் விருந்தாளியை வீட்டுக்கு அனுப்புவார்கள்.இன்றைய சூழலில் பூட்டிய வீட்டுக்கு முன் லாரியை கொண்டு வந்து வச்சி, ஒரு வீட்டு பொருட்களை களவாடிக்கொண்டு போவது மலேசியாவில் சர்வசாதாரணமாய் போய்விட்டது.வீட்டில் காலையில் துணிகளை உலரப்போட்டு விட்டு வெளியே போய்விட்டால்,மாலை வீடு திரும்பும் வேளை ,பாட்டிகள் எடுத்து அதை மடித்துக்கூட வீட்டு முன்னால் உள்ள நாற்காலிகளில் வைத்துவிடுவார்கள்.என் வீட்டில் நான் வேலைக்குப்போகும்போது துணிகளைப்போட்டு விட்டுப்போனால் ,மழையில் நனைத்து ,சிலவேளைகளில் கால்வாயில் அடித்துச் செல்லும்?அப்படி ஓர் அவல நிலை.

             என்ன உணவு சமைத்தாலும் குறைந்தது ஒரு இரண்டு வீடுகளுக்காவது கொடுத்து மகிழ்ச்சியடைவார்கள். அல்லது பலகாரம் செய்யும்போது எல்லோரும் கூட்டாக சேர்ந்து செய்து ஆளுக்கு கொஞ்சம் என பகிர்ந்து கொண்டு சாப்பிடும் வழக்கமும் இருந்தது.இப்போவெல்லாம்,உணவு சமைத்தால் படம் பிடிச்சி ஃபேஸ்புக்கில் மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள்! (முகநூலில் படிச்சது). வெளியூரில் இருந்து நம் வீட்டுக்கு வரும் உறவுக்காரர்களைக்கூட அவர்கள் வீட்டு உறவுக்காரர்கள் போல நினைத்து  பழகும்  கிராமிய மக்கள்.ந(ர)கரத்தில் அக்கம்பக்கத்தில் சீனரா?தமிழரா?மலாய்க்காரரா?என்று  குடியேறி சில மாதங்கள் ஆன பிறகுதான் அறியமுடியும்.

            சினிமாவில் வருவது போல அக்கம்பக்கம் திருமணம் என்றால் , எல்லோர் வீட்டிலேயும் குதூகலம்.’’ஊர்ல கல்யாணம் என்றால் மார்ல சந்தனம் பூசிக்கொள்வதுப் போல”என்பதற்கு ஈடாய் இருக்கும்.சம்பந்தப்பட்ட வீட்டில் விசேசம் என்றால் அதிகமான ஆட்கள் வந்து தங்குவார்கள். உறங்க இடம் போதாது.ஒரே ஒரு குளியலறையில் எத்தனைப்பேர் தான் வரிசையில் நின்று குளிப்பது என்று எல்லோர் வீட்டுக்கும் ஒரு ஐந்து பேர்கள் அனுப்பி வைப்பார்கள்.

            ஒரு வீட்டில் இறப்பு என்றால் கிராமத்தில் யார் வீட்டிலும் வானொலி ,தொலைக்காட்சி என்று எந்த சத்தமும் இரண்டு மூன்று நாட்களுக்கு கேட்காது.ஆனால் இன்றைக்கு அண்டை வீட்டில் இறப்பு  என்றால் கதவை மூடிக்கொண்டு உள்ளே இருப்பார்கள் ஒழிய ,வெளியே எட்டிப்பார்த்து ஏதும் உதவி வேண்டுமா?என்று கூட கேட்கமாட்டார்கள். யார் இறந்தது என்று கூட தெரியாமல் பரபரப்பான உலகில் உழன்று கொண்டிருக்கிறோம்?ஏன் அவ்வளவு தூரம் போகனும்?நானே அண்மையில் நான் வழக்கமாக போகும் ஒரு வீட்டில் இறப்பு ,யார் என்று தெரியாமல் வீட்டை ரெண்டுமூணு தடவைக் கடந்து போனேன்,இறுதியில் என் மகளோடு படித்த தோழியின் அம்மா என்று தெரிய வந்து நான் அடைந்த வேதனை இருக்கே?(இதை என் சுவரில் கூட பகிர்ந்திருந்தேன்).

        எனக்கு தெரிந்து கிராம வீடுகளில் விருந்து என்றால், வெளியே ஆர்டர் கொடுக்கும் பழக்கம் அரிது.விருந்து என்றால் எல்லோரும் அவர்கள் வீட்டில் உள்ள தட்டுமுட்டு  சாமான்களைக் கொண்டு வந்து காய்கறிகள் நறுக்குவது,சமைப்பது  என எல்லா உதவிகளுக்கும் வேலைஇல்லாத அன்புமிக்க பணியாட்கள் இருப்பார்கள்.இன்றைக்கு தேதிக்கு பக்கத்து வீட்டில் விருந்துக்கு வர சொல்லிச் சொன்னால் ,எங்கேயோ போய்விட்டு ,இரவில் கொஞ்ச நேரம் கடமைக்கு வந்து தலையக் காட்டிவிட்டு போகிறார்கள் அல்லது மொய் பணம் ,பரிசுகளை வேறு யாரிடமாவது கொடுத்தனுப்பிவிடுகிறார்கள்.அதில் நானும் அடங்குவேன் என்பதில் வெட்கப்படுகிறேன்.

         கார் வசதி உள்ளவர்கள் மார்க்கெட் அல்லது டவுனுக்குச் சென்றால் எல்லோரிடமும் போய் தெரியப்படுத்தி என்ன வேண்டும் என்று லிஸ்ட் போட்டு ,வாங்கி வந்து கொடுப்பார்கள்.ஆனால் நாகரீக நாட்களில் யாராவது மார்க்கெட் அல்லது கடைக்குப்போவதைப் பார்த்துவிட்டு ஏதும் வாங்கி வரச் சொன்னால் கூட பல காரணங்கள் சொல்வதுண்டு. பிறகு வாங்காமல் வந்தும் ஏதாச்சும் காரணம் சொல்வார்கள்.என்னத்தச் சொல்ல?காரில் ஏற்றிக்கொண்டு நாம் போகும் இலக்கு வரை கொண்டுபோய் விடுவார்கள்.பணம் கொடுத்தால் வாங்கவே மாட்டார்கள்.ஆனால் இன்றைக்கு அப்படி இருக்காங்களா?உயிருக்கு போராடிக்கொண்டு உதவி கேட்டால் கூட ,போன் எடுக்க மாட்டார்கள்.கதவைத் தட்டிக் கூப்பிட்டாலும் திறப்பதில்லை!

       பாவம் ஒரு பக்கம் .பழி ஒரு பக்கம் என்று கூறுவது போல.நாமும் ஒரு வழியில் இந்த சமூகத்தில் இப்படியெல்லாம் நடக்க காரணியாகவும் இருக்கிறோம் என்று நினைக்கும்பொழுது மனம் எங்கோ ஒரு மூலையில் வலிக்கவே செய்கிறது.நம் காலமே இவ்வளவு மோசமாக போய்க்கொண்டிருக்கும்போது ,நம் சந்ததியினர் இன்னும் என்னவெல்லாம் எதிர்நோக்கப்போகிறார்களோ? என்று நினைக்கும்போது ஏதோ ஒரு பயமும் கவலையோடு ஒட்டிக்கொள்கிறது.

             எங்கேயாவது இப்படி ஒரு வீடும் ,கிராமும் எனக்கு கிடைக்குமா?
                                                             


Monday, 28 April 2014

பழமை என்றும் இனிமை!

               தமிழ்மொழியில்  எவ்வளவோ  சிறப்புகள் இருந்தாலும்,நான் சில பெரிசுகள் கிட்ட கேட்டு ரசித்த இந்த சொல்லாடைகளை மறக்கத்தான் முடியுமா?என் பாட்டி ஈரோட்டிலிருந்து வந்தவர்.அவரிடமும் என் அண்டைவீட்டு தோழியின் அம்மா மற்றும் என் அம்மாவிடமும் கேட்டவைகளை இங்கே பறிமாறிக்கொ(ல்)கிறேன்!இவைகளை முதன்முதலாய் கேட்கும் போது  நானும் என் மூன்று அக்கா தங்கை எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.பிறகு அதையே வச்சி பாட்டியும்  அம்மாவும் திட்டி திட்டி அது நார்மலா போச்சு. என் தோழிகள் மத்தியில் நான் ரொம்ப ‘விசயம்’தெரிந்தவளாக விளங்க இவைகளும் ஒரு காரணம்.இன்னும் நிறைய இருக்கு,அவைகள் யாவும் தணிக்கைக்கு உடபட்டவை என்பதால் வெளியிடவில்லை!

  1.ஓடற நாயைக் கண்டால் தொரத்துற நாய்க்கு தொக்கா போகும்.

  2.அஞ்சும் அஞ்சும் பத்து,ஆயும் தாயும் பொண்ணு

  3.பூசி மொழுகின வீட்டில் நாய் நுழஞ்ச மாதிரி

  4.நரிக்கு நாட்டாமை கொடுத்தால் ,நாலு வெள்ளாடு கேக்குமாம்

  5.முழுத்தேங்காயை நாய் உருட்டிட்டு போன மாதிரி

  6.கெட்ட நேரம் வந்தால்,ஒட்டகத்தின் மேலே ஏறி நின்னாலும் நாய் கடிக்குமாம்.

  7.ஆத்துல பெருங்காயத்தை கரச்ச கதைப்போல

  8.ஆத்து நிறைய தண்ணி ஓடினாலும் நாய் நக்கிதான் குடிக்கனும்

  9.வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டுன மாதிரி

  10.எடவாதத்தூல ஒரு கொடவாதம் போல

  11.நடக்ககஷ்டப்பட்டவன் சித்தப்பா பொண்ணைக் கட்டிக்கிட்டானாம்

  12.கோழி மேச்சாலும் குமினியில மேய்க்கனுமாம்

  13.ஊர்ல கல்யாணமாம் ,மார்ல சந்தனம் பூசிக்குவான்

   14.ராவுத்தரே புல்லு சாப்பிடுறாராம் ,குதிரைக்கு கோதுமாவு ரொட்டி கேக்குதாம்

   15.யானைக்கு கோவணம் கட்டுறமாதிரி

   16.வேணும்னா வேர்ல கூட காய்க்குமாம்,வேண்டாம்னா கொம்புல கூட காய்க்காதாம்

   17.ஆட்டையும் மேச்ச்சுக்கனும் அண்ணனுக்கு பொண்ணையும் பார்த்துக்கணும்

    18.அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்

     19.ஒப்புக்கு சித்தப்பா உப்பை போட்டு நக்கப்ப்பா

      20.பன்னிக்குட்டி தென்னை மரம் ஏறிச்சாம்.
         இப்படி உங்களுக்கு ஏதும் சரக்கு இருந்தால் எடுத்து விடுங்க,தெரிந்துகொள்வோம்!
                                                          

Thursday, 24 April 2014

ஒரு பீர் போத்தல் !

                 ஒரு ‘பீர் ‘போத்தல் வாங்க நான் பட்ட பாடு இருக்கே?

            என் தோழியின் மகளை  தினமும் அவள் பாட்டி வீட்டில் இறக்கி விட்டு வருவேன்.சிலவேளைகளில் என் மகனுக்கு காத்திருக்கும்வேளையில் அங்கே உட்கார்ந்திருப்பேன்.பள்ளியின் அருகில் அவர் வீடு என்பதால் ,அங்கேயே சிறிது நேரம் இருப்பேன்.அது எஸ்டேட் (கிராம)வீடு.சோ வீட்டைச் சுற்றிலும் மரங்கள், குருவிகளின் ரீங்காரம் , பச்சைப்பசேல் என எனக்கு பிடித்த அமைப்பு.அதுமட்டுமின்றி நான் படிச்ச  தமிழ்ப்பள்ளியும் அங்கேதான் உண்டு.

          ஏதோ தொலைத்த ஒன்றை மீட்பது போல் இருக்கும் அங்கே இருப்பது.நான் போகும்போதெல்லாம் தோழியின் அம்மா எனக்காக முருங்கை கீரை எடுத்து வைத்திருப்பார். மரவள்ளிக்கிழங்கு சமைத்துக்கொடுப்பார்.கிராமிய சமையல்களை  சுவையாக சமைத்துவிட்டு எனக்காக காத்திருப்பார்.அந்த அன்பை நான் அதிகம் ரசிப்பேன். பிள்ளைகள் எல்லோரும் தொலைவில் இருப்பதால் ,தனிமையில் இருப்பவர் அந்த பாட்டி.  என் தோழி மட்டுமே தினமும் அவள் அம்மா  வீட்டுக்குப் போவாள்.பெற்ற தாயைப்போல  என்னிடம் அன்பு காட்டுவார்.

          நானும் பாட்டிக்கு வெத்தலைப்பாக்கு ,மற்றும் சில பூஜைப்பொருட்கள்  வாங்கி கொடுப்பேன். அன்றைக்கு வழக்கம் போல பாட்டி வீட்டுக்கு போய் உட்கார்ந்திருந்தேன். ’சாம்பார் ,கீரை ,அப்பளம் .வெள்ளிக்கிழமை ஸ்பெசல் ,இன்னிக்கு நீ சாப்பிட்டுத்தான் போகனும்’ என்றார் பாட்டி.சாப்பிட்டு முடிச்சி ,கொஞ்சம் பேசிவிட்டு கிளம்பும்போது ‘ஏதும் வேணுமா சொல்லுங்கம்மா நாளைக்கு வாங்கி வரேன்,’என்றேன்.எனக்கு என்னம்மா வேணும்? வெத்தலைப்பாக்கு வாங்கி கொடும்மா போதும்’என்றார்.சரிம்மா என்று விடைபெற்றேன்.காருக்கு ஓடி வந்த பாட்டி ‘அம்மா ஒரு போத்தல் பீர் வாங்கி வாம்மா,நாளைக்கு மதுரை வீரனுக்கு சாமி கும்பிடனும்.கருவாடு இருக்கு,சுருட்டு இருக்கு, பீர் மட்டும் ஒரு டின் வாங்கி வாம்மா’என்றார்.

          ஐயோ !இது என்னடா வம்பா போச்சு? காவல் தெய்வ வழிபாடு எல்லாம் நான் ஆதரிப்பவள் அல்ல’என கூற முடியுமா? நான் எங்கே போயி?சரி என்ன ஆகப்போகுது ?வாங்கிக்கொடுப்போம் ‘என்று முடிவெடுத்து ,மறுநாள் பள்ளி முடிந்து ,என் சக ஆசிரியையோடு காரில் கிளம்பினேன். ‘டீச்சர் , யாரும் பார்க்கறவங்க தப்பா நினைக்கப்போறாங்க,பள்ளிக்கூடம் முடிஞ்சி இந்த பொம்பள ,பீர் வாங்கிட்டு போகுது,குடிச்சிட்டு தூங்கும் போல?’சோ யாரும் தமிழர்கள் இல்லாத கடையா பாருங்க,போகலாம்’ என்றேன்.பொதுவாக பூச்சோங்கில் பலருக்கு நம்மைத் தெரியும் ,ஒன்று ஆசிரியைத் தொழிலில் சுமார் பத்து வருடம் அனுபவம்  என்பதால் சுற்று வட்டாரத்தில் எல்லா பெற்றோர்களும் தெரிந்தவர்கள் ,மற்றொன்று இங்கேயே பிறந்து வளர்ந்ததால் ,எல்லோரும் பழக்கமானவர்களாகவே படும்.எங்க கெட்ட நேர்ம், அன்னிக்குன்னு பார்த்து எல்லா கடைகளிலும் தமிழர்கள் அதிலும் நன்கு அறிமுகமானவர்களே, ஏதாவது ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தனர். தோழியும் நானும் மாத்தி மாத்தி ஒரு ஐந்து கடைகளில் போய் வேற பொருள் தேடுவதுபோல தேடினோம்.கேட்க வெட்கமாகவும் பயமாகவும் இருந்தது.

            ‘டீச்சர்  இனி எங்கே போவது?, எல்லா கடைகளிலும் ,கடைக்கு வெளியிலும் நமக்கு தெரிஞ்சவங்களாகவே இருக்காங்க,வேண்டாம் டீச்சர் ஒரு பத்து வருசமா நல்ல பெயரை கிரியேட் பண்ணிட்டோம்,இப்ப ஒரு பீர் போத்தல் வாங்க போய் பெயரு கெட்டுப்போக போவுது,உங்க வீட்டுக்காருகிட்ட சொல்லி வாங்கி கொடுக்க முடியாதா ? ‘என்றாள்.’ஐயோ பாட்டி எதிர்பார்ப்பாங்களே, இன்னிக்கு வேணுமாம்.’பாட்டியிடம் பொய் சொல்லவும் மனமில்லை.சரி கொஞ்சம் தூரமா போய் ஒரு சீனன் கடையை கண்டுபிடிச்சி கையில் வெறும் நான்கு வெள்ளி மட்டுமே கொண்டு போனேன்.அடிக்கடி வாங்கிய அனுபவம் இருந்தால் விலை தெரியும். சீனப்பெண்ணிடம் பீர் வேண்டும் என்றேன்.என்ன பீர்?வெள்ளையா கருப்பா?என்றாள்.யாருக்கு கலர் எல்லாம் தெரியும்?.இங்கே மலேசியாவில், சீனர்களும் நம் காவல் தெய்வங்களை வணங்குவதால் ,சாமி கும்பிடற பீர்’என்றேன். எடுத்துக்கொடுத்தாள்.காசை நீட்டினேன்.’ஹலோ இது 6.30 காசு’என்றாள்.’ஐயோ ஓடிப்போய் காரில் காசை எடுத்து வந்து கொடுத்தேன்.யாரும் வருவதற்குள் போய் ஆகனுமே?’சரி சரி கருப்பு பையில் போடு ‘என்றேன்.கருப்பு பையா?ஏற இறங்க பார்த்தாள்.குடிக்கறதுக பீர்,இதுல கெளரவமா?என்னும் ஜாடையில் போய் பையைத் தேடிக்கொண்டு வந்து போட்டுக்கொடுத்தாள்.

             ஓட்டமும் நடையுமாய் ஓடி காருக்குள் நுழைந்தேன்.தோழி என்னைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள். ‘டீச்சர் உங்களைப்பார்த்தால் ரொம்ப ஆவலா தேடித்தேடி கிடைத்தவுடன் ஏதோ காணாததைக் கண்டதுபோல வியர்த்து விறுவிறுத்து ஓடிவர்றிங்க’என்றாள்.ஏண்டி சொல்லமாட்டாய்?
பாட்டி வீட்டை அடைந்ததும் ,பாட்டி ஓடி வந்து ‘வாம்மா சாப்பிட்டு போவ ,ரொம்ப களைப்பா இருக்கப்போல?’என கேட்டாங்க?இல்லைம்மா ,வந்து இந்தாங்க பீர் ‘என்றேன்.ரொம்ப நன்றிம்மா. இன்னிக்கு ஐய்யா சாமிக்கு பூஜை செய்யனும். நான் எங்கம்மா கடைக்கு போறது?என்று முணுமுணுத்துக்கொண்டே ,கையில் போத்தலை வாங்கிக்கொண்டு வீட்டுக்குபோய் வீட்டில் கதவருகே மாட்டியிருந்த மதுரைவீரன் சாமிப்படத்துக்கு அருகில் வைத்தார்.ஏதோ எல்லா கோரிக்கையும் நிறைவேறியது போல பாட்டியின் முகத்தில் சிரிப்பு.நானும் விடைபெற்றேன்.
                                                                   
           ’ஸ்ஸப்பா! நான் நல்லவள்னு காட்டிக்க ஒரு பதிவே எழுத வேண்டிக்கிடக்கு போங்க!’

Sunday, 13 April 2014

சொக்கா ..எனக்கில்லை...எனக்கில்லை!

                 1993-இல்  நான் நீதிமன்ற  மொழிபெயர்ப்பாளர் வேலைக்கு தகுதியைக் கொண்டிருந்ததால்  எனக்கு நேர்காணலுக்கு  அழைப்பு வந்தது. முதன்முதலாக அரசு வேலைக்கு நேர்காணல் செல்லவிருந்ததால் ஒரே பரபரப்பு.மேலும் அந்த சமயம்தான் நான் ஜப்பானியர் நிறுவனத்தில் வேலைக்குச்  சேர்ந்து நல்ல நட்புக்களை எல்லாம் சம்பாதித்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த நேரம் என்றும் சொல்லலாம். ஒரு புறம் அந்த வேலை கிடைத்தால் ,இவர்களை எல்லாம் இழந்து விடுவோமோ ?என்ற கவலை.மறுபுறம் அரசு வேலை. அப்பா நினைத்தது போல  வீட்டில் யாராவது ஒருவராவது  செய்யலாமே,என்கிற ஏக்கம்.
                 அரசு வேலைக்கு நேர்காணல் என்பதால் ,போலிசில் பணிபுரியும் என் தாய்மாமன் நிறைய விசயங்களை சொல்லிக்கொடுத்தார்.காபிநெட்ல உள்ள அமைச்சர்கள் பெயர் எல்லாம் நினைவில் வைத்துக்கொள் ,கேட்பானுங்க’என்றெல்லாம் என்னை ஓரளவு தைரியப்படுத்தி அவரே அவர் காரில் வந்து ஏற்றிக்கொண்டு போனார். அங்கே போய் நுழைந்தவுடன் நான் மட்டுமே சின்னப்பொண்ணு . எல்லோரும் ரிட்டையர்ட் ஆசிரியர்கள்,அரசு வேலையில் ரிட்டையர்ட் ஆன பல கிழங்களும் வந்து காத்துகிடந்தனர்.
               எனக்கு ஒரே படபடப்பு.மாமா ரொம்ப தைரியப்படுத்தினார்.’இந்த ரிட்டையர்ட் கிழங்களுக்கு இங்கு என்ன வேலை?’ என மாமாவும் முணக்கிகொண்டே அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருக்க ,என்னை அழைத்தனர்.உள்ளே நுழைந்தால் இரண்டு வயசான தமிழ் அதிகாரிகள்.’உட்காரச் சொன்னார்கள்.பிறகு ஆங்கிலத்தில் பொளந்து கட்டினார்கள் கேள்விகணைகளால். அந்த சமயம் நான் வேலை மற்றும் வெளியுலகத்துக்கு புதியவள்.நான் நல்லா உளறினேன் என்பது எனக்கு தெரியும் ,இருந்தாலும் அவர்கள் கேள்விகளுக்கு பதில் கொடுத்தேன்,எதையோ தமிழில் இருந்து ஆங்கிலத்தில் சுருக்கமாய எழுதச் சொன்னார்கள் ஆனால் ஸ்பாக்கன் இங்கிலிஷ்ல நான் தடுமாறியதை என்னால் உணரமுடிந்தது.
              சரி போய் வா ,என்று முடித்துக்கொண்டனர்.வெளியில் வந்தவுடன் மாமா ‘என்ன ஆச்சு?’என்று ஓடிவந்தார். ஐயோ பதற்றம் மாமா ‘என்றேன். ’அதான் சரியான போட்டிதான் போல,கொஞ்ச நேரம் வெளியில் இருந்து எல்லோரிடமும் பேசினேன்,உனக்கு வாய்ப்பு குறைவுதான் போல,சரி வா,நீ என்ன வேலை இல்லாமலா இருக்கிறாய்?என்று ஆறுதல் கூறி வீட்டில் விட்டுச் சென்றார்.மாதங்கள் ஓடின , ஒரு பதிலும் இல்லை.என் ஆசையும் நிராசை ஆனது.
            அதே வேலைக்கு சில வருடங்கள் கழித்து என் சக ஆசிரியை ஒருத்திக்கு அழைப்பு வந்தது. அவளும் என்னிடம் வந்து ‘எப்படி டீச்சர்?என்ன கேப்பானுங்க?என்னால் செய்ய முடியுமா?உங்களுக்கே  கிடைக்கவில்லையென்றால் நான் எம்மாத்திரம்?’ என்றாள்.அப்படி இல்லை அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வராது’என்றேன். அவள் கல்வி தகுதி என்னைவிட ஒரு படி அதிகம்.அதாவது நான் படிவம் 5 பாஸ் , அவள் படிவம் 6 பட் ஃபெயில்!
          எல்லோரும் வாழ்த்தி அவளை அனுப்பி விட்டோம் .என்னதான் ஆகியிருக்கும் என்று ஆர்வமாய் (நான் தான் அதிகமாக)காத்திருந்தோம்.மறுநாள் வந்தவள் ,என்னைக் கட்டிப்புடிச்சிக்கொண்டு ‘டீச்சர் என்ன டீச்சர் ஒன்னுமே கேட்கல, ஒரே ஒரு பாடல் மட்டும் பாட சொன்னங்க, சிறு வயசு பசங்கதான் இண்டர்வியூ பண்ணினாங்க,எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லை டீச்சர். ஐயோ நம்முடைய ப்ரிப்ரேசன் எல்லாம் வேஸ்ட்தான்,மலாய் மொழியில் பேச சொன்னார்கள்  ‘என்றாள்.
         ஒரே மாதத்தில் ,மீண்டும் கடிதம் வந்தது.அவளுக்கு வேலை கிடைத்து விட்டது என்றும் பதில்!அவளைவிட நான் அதிகம் மகிழ்ச்சி அடைந்தேன்.வேலைக்குச் சேர்ந்தாள்.பல மாதங்கள் கழித்து அவளைச் சந்தித்த போது ‘போங்க டீச்சர் நீங்க செய்ய வேண்டிய வேலையில் நான் ,நான் செய்ய வேண்டிய வேலையில் நீங்கள்,அது எனக்கு சரிப்பட்டு வரல,வேறு வழியில்லாமல் செய்கிறேன் ‘என்றாள்.
             அப்போ எனக்கு கோபம் எல்லாம் என்னை இண்டர்வியூ பண்ணிய அந்த ரெண்டு கிழடுகள் மேல்தான் .ஏன் அவுங்க அப்பா வீட்டுச் சொத்தா குடிமுழுகிப்போகும்,எனக்கு அந்த வேலையைக் கொடுத்திருந்தால்?
 என்ன செய்ய இதைத்தான் சொல்வார்களோ ‘கெட்ட நேரம் வந்தால் ஒட்டகத்தின் மேல் ஏறி நின்னாலும் ,நாய் கடிக்கும் என்று! 

           

Saturday, 5 April 2014

படைத்தவனின் குறையா?

                                                                                         
             பிறந்தது முதல் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த எங்களுக்கு குழந்தைகள் வளர்ப்பு ,பராமரிப்பு எல்லாம் ரொம்ப சின்ன விசயம்.ஆம்,சித்தப்பா பிள்ளைகள்,அத்தை பசங்க என்று ஒரு கூட்டமே நம் வீட்டில் இருப்பார்கள்.பிள்ளைகளை குளிப்பாட்டி விடுவது,உணவு ஊட்டுவது ,படிச்சிக்கொடுப்பது என்று எல்லாம் சின்ன வயதிலே அத்துப்பிடி.ஆகவே ஒரு குழந்தையின் பரிணாம வளர்ச்சி,அசைவுகள் ,வேறுபாடுகள் எல்லாம் பார்த்த மாத்திரத்தில் கண்டு கொள்ளமுடியும் .நானும் ரெண்டு பிள்ளைகளுக்கு தாய்,அதுமட்டுமின்றி மழலைக்கல்வி ஆசிரியையாக கடந்த பத்து வருடங்களாக பணிபுரிந்துவருகிறேன். ஆகவே பிள்ளைகள் விசயத்தில் நமக்கு ஓரளவு அனுபவம் உண்டு.சரி இப்போ விசயத்துக்கு வாரேன்.(என் 4 வயது மாணவனைப் பற்றிய விசயம்தான் இது. அவன் பெயரை ‘கணபதி’என்று மாற்றியுள்ளேன்)
              முதன்முதலாய் கணபதியை( 4 வயது) அவன் தாய் ,பள்ளியில் கொண்டு வந்து சேர்த்து விட்டு ‘டீச்சர் ,இன்னும் சரியா பேச வரவில்லை,கொஞ்சம் பிடிவாதம் பண்ணுவான்.அவன் இன்னும் வெளியுலகம் போனதில்லை...என்று அடுக்கடுக்காய் பல விசயங்களைச் சொன்னார். சொல்லவேண்டிய மிக முக்கிய விசயத்தைச் சொல்லவில்லை!அவனைப்பார்த்ததும் மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தையும் கண்டுபிடிக்கலாம்.அவன் தாயும்  அவனுடன் பள்ளியில் உட்கார்ந்து கொள்வார். ஓரிரு நாட்கள் கழித்து ,’டீச்சர் இனி நான் இருக்க முடியாது வேலைக்குச் செல்கிறேன்.என் பையனைப் பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள் என்று விடைபெற்றார்.அவன்  அக்கா கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு எங்களிடம் பயின்றவள்.ரொம்ப அழகாக இருப்பாள்.மற்ற மாணவர்களை விட கொஞ்சம் வேறுப்பட்டிருப்பாள்.சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வாள். மிககுறைவான கவனம் செலுத்துபவள். ஆனால் கணபதி அளவுக்கு மோசம் இல்லை.
           அதேப்பிரச்சனைதான் இவனுக்கும்ஆரம்பகாலத்தில் அவனை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.பிற மாணவர்களை அடிப்பது ,கத்துவது ,எங்களை அதட்டுவது .அவ்வளவு ஏன் ?மலம் போவது கூட தெரியாமல்,அப்படியே உட்கார்ந்திருப்பான், இப்படி  பல  அசெளகரியங்களைக் கொடுத்து வந்தான் கணபதி. கொஞ்சம் அஹிம்சையைத் துறந்து  ,பிரம்பு எடுத்து பயம் வர செய்வோம்(பல நேரங்களில் ஆசிரியைகளுக்கு கிடைக்காத மரியாதைகள் ‘மிஸ்டர் பிரம்பு’க்கு கிடைக்கும். சரி கொஞ்ச நாட்கள் கழித்து  ஓகே பண்ணிடலாம் என்று நினைத்தது என் பேராசைதான்!கற்றல் நேரத்தில் அவன் எங்களுக்கு ஒத்துழைக்கவே மாட்டான். ஓரிடத்தில் உட்கார்ந்து எழுதவேமாட்டான்.புத்தகங்களில் பயமின்றி கிறுக்கித் தள்ளுவான். ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவனால் அமைதியாக உட்கார முடியாது.கண் நகர் பயிற்சியில் சிறிதும் கவனம் செலுத்தமாட்டான். அவன் பாஷையில் ஏதோ உளறிக்கொண்டிருப்பான். .
                    ‘என்ன டீச்சர் முடிவு எடுக்கப்போறிங்க? முடியாது டீச்சர்.அவன் அம்மாவைக் கூப்பிடுங்க பேசலாம்’என்று சக ஆசிரியைகள் அவசரப்படுத்தினர்.’பார்க்கலாம்,பிறகு முடிவெடுக்கலாம் ‘என்று ஆசிரியைகளோடு பேசி அமைதிப்படுத்தினேன்.ஒருமுறை மெண்டரிங் செய்ய வந்த என் விரிவுரையாளர்’இவனுக்கு உங்களால் கற்றுக்கொடுக்க முடியுமா? அதற்கு நிறைய ரிஸ்க் எடுக்கணும், முடிந்தால் செயலில் இறங்குங்கள் ,இல்லையேல் பெற்றோரை அழைத்து பேசி அனுப்பிவிடுங்கள்’என்றார்.கணபதியின் மருத்துவ சான்றிதழை எடுத்து பார்த்தேன் .அதில் எதுவும் குறிப்பிட்டு எழுதவில்லை(ஆனால் அவர்கள் எழுதியிருக்க வேண்டும் ,அதுதான் விதிமுறை).கணபதியின் அம்மாவுக்கு போன் பண்ணினேன்.குரலில் ஒரு பதற்றம்,அவசரம் ‘என்ன டீச்சர் என்ன ஆச்சு?’இல்லை கணபதியைப் பற்றி கொஞ்சம் பேசணும் ,உடனே வந்தால் நல்லது ‘என்றேன்.
                 மறுநாள் தாயார் வந்தார். என் முகத்தைப் பார்க்கவே இல்லை.அலட்சிய பார்வையில்  ஒரு குற்ற உணர்வும் ஒளிந்து கொண்டிருந்தது. ஒரு மரியாதைக்கூட வணக்கம் சொல்லவில்லை.ஏதோ சண்டைக்கு வந்ததுபோல வந்து உட்கார்ந்தார்.இது போல நிறைய  பெற்றோர்களைப் பார்த்துவிட்டேன்.சண்டையும் போட்டுள்ளேன்.சோ இதெல்லாம் எனக்கு ஜூஜுபி மேட்டர்.‘உட்காருங்க கொஞ்சம் பேசணும்’என்றேன். நீங்க என்ன பேசப்போறிங்க என்பது எனக்கு தெரியும் டீச்சர் ’என்று கொஞ்சம் கோபத்துடன் அவன் பொருட்களை பேக் பண்ணினார். ‘கணபதிக்கு......என்று நான் சொல்லி முடிப்பதற்குள் அவராகவே ‘அவன் ஒரு ஆட்டிஸம் பேபி,அதானே  டீச்சர் சொல்ல வர்றிங்க”’என்றார் குரலை உயர்த்தியபடி.’ஆமாம் ஆனால் ஏன் நீங்க அதை அவன் மருத்துவ சான்றிதழில் குறிப்பிடவில்லை?என்று நானும் என் பாணியில் குரலை உயர்த்தினேன்’இல்லை டீச்சர் ..வந்து .....அது ...’என்று மென்று விழுங்கினார். (எந்த தாயுமே தன் பிள்ளையின் குறையை எடுத்துரைக்க மாட்டார்களே,இது உலக நியதிதானே?)‘தப்பு சிஸ்டர் ,இது மிகப்பெரிய தப்பு,நாளைக்கு அவனுக்கு ஏதும் பிரச்சனை என்றால் பதில் சொல்வது எங்கள் கடமை.எங்களை கம்பி எண்ண வைச்சிருவிங்க போல? என்றேன் நானும் கோபமாக.
                 ஒரு தாயாக அவர் கண்களில் நீர் . ’மன்னிச்சிருங்க டீச்சர் ,நான் நடந்து கொண்ட விதம் ,பதில் சொல்லியது எல்லாத்துக்கும் மன்னிச்சிருங்க டீச்சர் என்று என் கைகளைப் பற்றிக்கொண்டார். அந்த கணம் என்னாலும் அழுகையை மறைக்கமுடியவில்லை.நம்மால் சிரிப்பு அழுகை இரண்டையுமே அடக்க இயலாது ,அதிலும் இது சொல்ல முடியாத சோகம் ஆயிற்றே?சொல்லவா வேண்டும்.இருப்பினும் கொஞ்சம் முயற்சி செய்து ப்ரோஃபெசன்னலாக பேசி ஆகனுமே? சோ ,பேச்சைத் தொடர்ந்தேன். ’இல்லை சிஸ்டர் அவனுக்கு எங்களால் உதவ முடியுமா என்று தெரியவில்லை,எங்கள் பணியில் எங்களுக்கு சவாலானா ஒரு மாணவன் அவன்’என்றேன்.
                 என் கைகளைப் பற்றிய தாய் ‘இல்லை டீச்சர் ,உங்கள் அனைவரையும் எனக்கு முன்பே தெரியும் .உங்கள் மேல் உள்ள நம்பிக்கையால்தான் நான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். என் பிள்ளையின் நிலை எனக்கு தெரியும்.அவனுக்கு நீங்கள் மற்ற மாணவர்களைப்போல எழுதப்படிக்க சொல்லிக் கொடுக்க வேண்டாம் , பிற மாணவர்களோடு சேர்ந்து விளையாடட்டும். கெட் டூ கெதெர் , சேரிங் அண்ட் கேரிங் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளட்டும் டீச்சர், என் சைடில் இருந்த எந்த கேள்வியும் உங்களை நோக்கி வராது.என்னால் நிறைய பணம் எல்லாம் செலுத்தி அவனை ஸ்பெசல் பள்ளிக்கூடம் அனுப்ப இயலாது.என்னை நம்புங்கள் டீச்சர்.என் பணியிடத்திலேயே பாலர்பள்ளி உண்டு ஆனாலும் நான் ஏன் இங்கே கொண்டு வந்து சேர்க்கணும் ? உங்கள் மேலும் இந்த பள்ளியின் மேலும் உள்ள நம்பிக்கைதான் டீச்சர்’என்றார்.என் இரண்டாவது பெண்ணையும் உங்களிடம்தானே போட்டேன். ஆனால் அவள் இவன் அளவு இல்லை , இவன் உங்களுக்கு சவால்தான்’என்று தொடர்ந்தார்.
                   ’டீச்சர் நான் இங்கே கிளம்பி வரும்போது  என் மூத்த பெண் ‘எங்கேம்மா போறிங்கன்னு கேட்டாள் ?’உன் தம்பியைப்பற்றி டீச்சர் பேசனுமாம்,வேறென்ன அவனை வீட்டுக்கு கூட்டிப்போக சொல்வார்கள் ’என்றேன்.அதற்கு அவள் ’ஏம்மா எனக்கு மட்டும் இப்படி தங்கை தம்பி‘என்று அழுகிறாள்.நான் என்னத்த சொல்லி சமாளிப்பது?” என்றார். நான் இந்த சமயம் வேதனையின் உச்சக்கட்டத்தில் இருந்தேன். ‘ ஒரு கணம் கண்களை மூடினேன். சரி வருவது எதுவாகிலும் சமாளிப்போம் ‘என்று உறுதி கொண்டேன் ஆனாலும் என் சக ஆசிரியைகளின் முடிவும் முக்கியமானதாயிற்றே?அவர்களை நோக்கினேன். என்னைப்போலவே பல சமயங்களில் முடிவெடுப்பவர்கள்  அவள்கள் இருவருமே. அப்படி ஒரு டிரெய்னிங்தான்! நான் பேசுவதற்குள் எழுந்த அந்த தாயார், ‘டீச்சர் என் பிள்ளையை இப்போ வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்திட்டிங்களா? அவனுக்கு உதவ மாட்டிங்களா? அவன் இந்த சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டுவிடுவானா” என்று கேள்விகளை என் மேல் வீசினார்.
                  அவனை கைகழுவி விட நினைத்த எங்கள் எண்ணங்கள் சுக்கு நூறாய் உடைந்தது. நெஞ்சில் அம்பு கிழித்தது போல இருந்தது.என்னிடம் ஒரு  குணம் எப்போதும் உண்டு.பிறர் பிரச்சனையில் உன்னை வைத்துப்பார் ,அதன் வலி புரியும் ‘என்பது.அதற்கேற்பத்த்தான் நான்  எப்போதும் செயல் படுவேன்.ஆகவேதான் பல நல்ல மனிதங்களை சம்பாதித்து உள்ளேன்.அதேவேளையில்.... , இதனால்தான் ,பணம் சம்பாதிக்க முடியாமல் போனதுவும்!’இல்லை அவன் இருக்கட்டும் ,எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம். அதற்கும் மேல் அவன் இருக்கிறான் ,அவன் பார்த்துக்கொள்வான் ‘என்றேன்.  என் ஆசிரியைகளைப் பார்த்தேன்’போங்க டீச்சர் எவ்வளவோ பார்த்துட்டோம் ,இது என்ன ?கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும்.இருக்க பழகுவோம்’என்றார்கள். அதுதான் நான் அவளுங்களை பல சமயங்களில் ,என் இடது மற்றும் வலது கை என்று சொல்வதன் ரகசியம்!
                         கனத்த இதயத்துடன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கணபதியின் கைகளை எடுத்து என் கைகளில் திணித்து விட்டு விடைபெற்றார் அந்த தாய். ஆனால் என் கண்கள் இன்னும் காயவில்லை. என்.ஜீ.ஓ வின் இயக்குனரும் ஒரு மருத்துவ நிபுணர்தான் ,அவரோடு சேர்த்து இன்னும் எனக்கு தெரிந்த சில மருத்துவர்களுக்கு போன் பண்ணி அட்வைஸ் கேட்டேன்.  இண்டர்நெட்டில் போய் சில தகவல்கள் சேகரித்தேன். வீட்டுக்கு வந்ததும் முகநூலில் ஒரு ஸ்டேடஸ் போட்டேன்.அங்கே என் அருமை நட்புகள் கொடுத்த இணைப்புகள் எனக்கு மேலும் உதவிக்கொண்டிருக்கிறது.
                      ஒரு மாணவனுக்காக நான் மாணவியாகிறேன். தினமும் கணபதியிடம் ஏதோ ஒன்றை நான் கற்றுக்கொள்கிறேன்.  அவனுக்காக சில விசயங்களில் மாற்றம் கொண்டு வந்துள்ளேன். பிரம்பு எடுக்காமல் ,கோபப்படாமல் , சகிப்புத்தன்மையை அதிகப்படுத்திக்கொண்டு என்னை மாற்றிக்கொண்டு வருகிறேன்.அது முடியுமா ? அந்த பொறுமை எனக்கு வருமா?இறைவா வரனும், மாறனும் . சமுதாயத்துக்கு அவனை ஒரு சராசரி மனிதனாக கொடுக்க நினைக்கும் என் எண்ணம் ஈடேறுமா?  அவன் தாயார்  கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் ஆனால் என் கண்கள் இன்னும் ஈரமாகவே உள்ளன. ‘கவிப்பேரரசு ‘சங்கீத ஜாதி முல்லை’என்ற பாடல் வரிகளை எழுதும்போது அவர் கண்களில் வழிந்த நீர் காகிதத்தில் வழிந்து அந்த வரிகளை ஈரமாக்கியதாம் ,அதைப்போல இங்கே இதை எழுதும்போது என் கண்ணீரும் கீ போர்ட்டில் விழுந்தன!
                               "teaching is a life long learning' ...for a sake of ganapathy!