Sunday, 19 January 2014

அடுத்த கணம்!

         நானும் என் அண்ணாவும் ,எங்கள் குடும்ப  நண்பரான டாக்சி ஓட்டுனர் காரில் ஒரு இடத்துக்குச் சென்றுக்கொண்டிருந்தோம்.வழியில் காரை நிறுத்தினான் ஓர் இளைஞன்.டிரைவர் அண்ணா ‘எப்படிம்மா ஏத்திக்கொள்ளலாமா ?என்று அனுமதி கேட்டார்.’சரி அண்ணா ,உங்களுக்கும் வருமானம் வரும்’என்று என் அண்ணா ஓகே சொன்னது.

         அவனும் வழியில் தமாஷாக பேசிக்கொண்டு வந்தான்.இறுதியாக எங்கள் உரையாடல் ‘பணம்’  சார்ந்து வந்தது.அப்போது நான் எப்போதும் போலவே ஒளிவுமறைவு இல்லாமல் ,என் பர்சைக்காட்டி ‘இதோ பாரு தம்பி அக்காவிடம் பணம் எல்லாம் ரொம்ப இல்லை ,இதுதான் இருக்கிறது’என்று ரிம.50 வெள்ளியை நீட்டினேன்.’எங்கே காட்டுங்கள் ’என்றவன் , சில விநாடிகளில் ‘ஏய் காட்டு’என்று ஒருமையில் வேகமாய் கத்தினான்.பின்னால் அமர்ந்த என் அண்ணனின் சத்தம் அறவே இல்லை.நொடியில் திரும்பி பார்த்தால் என் அண்ணாவின் கழுத்தில் அரிவாளை வைத்தவன் ,’சீக்கிரம் மூன்று பேருடைய பர்ஸ்களையும் எடுத்து  என்னிடம் கொடுங்கள் ‘என்றான்.

          வியர்த்து விறுவிறுக்க வேறு வழி இல்லாமல் மூவரும் பர்சை பணத்தோடு கொடுத்தோம். எனக்கு அவன் என் அண்ணாவை விட்டதே போதும் ‘என்று என் சங்கிலியையும் கொடுத்தேன். ஓரிடத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னான் அந்த கொள்ளைக்காரன் .சனியனை கழற்றி விட்டதுபோல இறக்கிவிட்டு ,மகிழ்ச்சியாக வண்டியைக் கிளப்பினோம்.டிரைவர் அண்ணாவும் ‘அப்பாடா என்ன பணம் ?என்ன பர்ஸ் ? நம்மை நல்லபடி விட்டானே?அது போதும் ‘என்ன பர்சில் இருந்த கார் லைசென்ஸ் ,மற்றும் அடையாள கார்ட் மட்டும் போய் போலிசில் ரிப்போர்ட் செய்துவிட்டு , புதுசா எடுக்கனும்’என்று பெருமூச்சு விட்டார்.

          நாங்களும் போக வேண்டிய இடத்தை கென்சல் பண்ணிவிட்டு நேரே டிரைவர் அண்ணா வீட்டிற்குச் சென்றோம்.அங்கே எங்களுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்து கிடந்தது!ஆம்,சற்று முன் இறங்கிய அந்த கொள்ளைக்காரன் ,டிரைவர் அண்ணா வீட்டை முற்றுகையிட்டு அவன் ஆட்களோடு ,எல்லோரையும் பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான் . ‘ஒழுங்காக வீட்டில் இருக்கும் பணத்தையும் நகைகளையும்  எடுத்து வையுங்கள்,இல்லாவிட்டால் உங்கள் வீட்டைச் சுத்தி பெட்ரோல் நனைத்த  கயிறு இணைக்கப்பட்டிருக்கு.ஏதேனும் பிரச்சைனை என்றால் கொளுத்திவிடுவேன் ‘என்றான்.கையில் நெருப்புபெட்டி ,அரிவாள் எல்லாம் ரெடியாக!

           எல்லோரும் நடுநடுங்கி போனோம். ஆனால் டிரைவர் அண்ணா கோபமாக ‘அவன் என்ன செய்யப்போறான் , யாரும் பயப்படவேண்டாம் ‘என்று கத்தினார். அந்த சமயம் அண்ணாவின் ஒரே மகள் வெளியே வர ‘அந்த கொள்ளைக்காரன் ‘உன் மகள் உனக்கு வேண்டுமா?என்றான் .இதையும் கேட்ட பிறகு ,’அண்ணா என்ன பணம் ,நகை?தூக்கி வீசுங்கள்,சம்பாதித்துக்கொள்ளலாம்’என்று நாங்கள் பெண்கள் கதறினோம். வீட்டில் மறைத்து வைத்திருந்த எல்லா நகைகளும் வெளியே வந்தன. அப்போ கொள்ளைக்காரன் சொன்னான் ,’டேய் முட்டாளுங்களா காரில் நான் உங்கள் பர்சை கேட்டேனே ,பணத்தை மட்டும் கொடுத்திருக்கலாம்தானே? ஏண்டா உங்க அடையாள அட்டையும் சேர்த்துக்கொடுத்து என்னை இன்னும் கெட்டவனாக்கிட்டிங்கள்?அதில் உங்கள் வீட்டு முகவரியைப்பார்த்தேன்,சரி இன்னும் நிறைய சம்பாதிக்கலாம்’என்றுதான் இந்த முயற்சியை மேற்கொண்டேன்.சரி அடுத்த  இரண்டு அடையாளக்கார்டில் இருக்கும் வீட்டிற்கு என் ஆட்கள் போயிட்டாங்கள்’என்று என்னையும் என் அண்ணனையும் பார்த்தானே படுபாவி?

          அடுத்த கணம் ....’ஐயோ !என் வீட்டில் என் பிள்ளைகள் மட்டுமே தனியாக இருப்பாங்களே?என்று அலறி ‘இறைவா காப்பாத்து’என்று கண்ணை மூடி திறந்தேன். வியர்த்து விறுவிறுத்துப்போய் நான் என் படுக்கையறையில்  இருளில் வெடவெடத்துப்போய் கிடப்பதை உணர்ந்தேன்.அடச்சே இது கனவா? நன்கு கண்களைத் திறந்து பார்த்தேன். விடியற்காலை. என்னை நன்கு சுதாகரித்துகொண்டு எட்டிப்பார்த்தேன் ,ஆழ்ந்த உறக்கத்தில் என் மகள்.பக்கத்து அறையில் போய் எட்டிப்பார்த்தேன். என் மகனும் கணவரோடு நிம்மதியாய் உறங்கிகொண்டிருந்தான். என் வீடு மிக சிறியது என்பதால் ,ஒரே சுற்றில் பூஜையறை ,சமையலறை என்று வீட்டில் உள்ள அனைத்தையும் சரி பார்த்துவிட்டு , கைகால்களை கழுவிக்கொண்டு திருநீறு இட்டுக்கொண்டு படுக்கைக்குச் சென்றேன்.

      (இன்று காலையில் நான் கண்ட கனவு .என்னமோ 12 வயசு மாணவன் எழுதும் கட்டுரைப்போல இருக்குதா?ஆனால் உண்மையில் எனக்கு ஏற்பட்ட மோசமான கனவு அனுபவம்.மலேசியாவில் நொடிக்கொரு முறை இப்படிப்பட்ட கொலை கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன!அதில் வேதனை, பாதிக்குபாதிக்கு பேர் நம்ம இளைஞர்கள்தான். மனசாட்சியின்றி சரமாரியாக வெட்டி சாய்ப்பது.சுட்டுத்தள்ளுவது, கொடூரமான கொலை’.உயிரைக் கையில்  பிடிச்சிக்கிட்டு உலா வருகிறோம்) 

         அண்மையில் டிவியில் ஒளியேறிய காரைக்கால் அம்மையார் பாடல் வரிகளை நினைத்தேன் ;இனி பிறவாத வரம் வேண்டும் , என் பிழையாலேமீண்டும் பிறந்தால், உன்னை மறவா வரம் வேண்டும்!சத்தியமாக அப்படி ஆசை இல்லை. இனி மானுட பிறவியே வேண்டாம்!மனிதனே மனிதனைக்கண்டும் பயப்படும் ஒரே இனம் மானுட பிறவி. அந்த ஈனப்பிறவி இனி வேண்டாம். சின்னப்பிள்ளையாக இருந்த காலங்களில் பேய் கனவும் சாமி கனவும்தான் வரும்.ஆனால் இப்போவெல்லாம் இப்படிப்பட்ட கனவுகள்.

            கனவு என்பது நம் எண்ணங்களின் பிரதிப்பலன்.ஆனாலும் நேற்றிரவு நான் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் படுக்கைக்குச் சென்றேன்.பின்னே ஏன் இப்படி ஒரு கனவோ?ஒருவேளை சிலநாட்களுக்கு முன் என் கண் முன்னே ஒருதமிழன் அரிவா சண்டையைப்பார்த்த தாக்கமோ ?
எது எப்படியோ நான் இன்னும் உறைந்துபோய்தான் இருக்கேன்.
அர்ஜூன் ,விஜயகாந்த் நடித்த படங்கள் போலவும் ,ஒரு பயங்கரமான  தெலுங்கு டப்பிங்  படமான ‘பழிக்குப்பழி’படம் போலவே இருந்தது என் கனவு!
           அவனிடமே அனைத்தையும் விட்டு விடுவோமே!போற்றியோ நமசிவாய!