Sunday, 31 March 2013

ஏப்ரல் ஃபூல் கற்பித்த பாடம்(1/4/1987)           
           1/4/87 என் சக தோழிகளுன் நான் சிற்றுண்டிக்கு சென்ற போது எல்லோரும் என்னைப்பார்த்து சிரித்தனர்.அந்த சமயம் அங்கே வந்த என் ஆங்கில ஆசிரியையும் சிரித்துக்கொண்டே வந்து ,என் சட்டையில் ஒட்டியிருந்த i am april fool என்ற துண்டு சீட்டை எடுத்து என் கையில் கொடுத்து விட்டு'who is yr naughty friend'என்றபடி நகர்த்தார்.பிறகுதான் தெரிய வந்தது,என் சக தோழிகளில் ஒருவளின் ஐடியா படி நடந்த கூட்டு சதி அதுவென்று.செய்த அவளுக்கு ஒரே சிரிப்பு நான் அவமானப்பட்டது.எனக்கு கோபம் இருந்தாலும் கொஞ்சநேரம் அவள் மகிழ்ச்சியாய் இருக்கட்டும் ,எனக்கும் இறைவன் ஒரு வாய்ப்பு கொடுப்பார் என்று விட்டுவிட்டேன்(எனக்கு யாராவது ஏதாவது செய்தால் ,அதை எப்படியாவது அவர்களுக்கு செய்யனும்..பழி வாங்குதல்)நல்லதா இருந்தால் இரு மடங்கு செய்வேன் ,தீயதாக இருந்தால் நல்லா வலிக்கும்படி செய்வேன்(நானும் சராசரி மனுசிதானே).ஆனால் இப்போ நான் நல்லபிள்ளை..ஹி ஹி ஹி நம்புங்களேன்.
                                                                     

             மறு ஆண்டு வந்தது.அந்த தோழி கொஞ்சம் மறதி ,அது எனக்கு சாதகமாக அமைய நான் அவளை எல்லோர் முன்னிலையிலும் 'உன்னை கணக்கு டீச்சர் கூப்பிட்டார்'என்று பொய் சொல்ல அவளும் வேக வேகமாய் போய்,அன்று அந்த டீச்சர் பள்ளிக்கு வரவில்லை என்று தெரிந்துகொண்டு வந்து ,எல்லோரும் அவளைப்பார்த்து சிரிக்க கோபமாய் போய் உட்கார்ந்தாள்.'நான் சென்ற வருடம் செய்த தப்புக்கு மன்னிப்பு கேட்டுவிட்டேன் ,நீ இன்னும் அப்படி நடந்துகொள்ளலாமா?என்றெல்லாம் கண் கலங்க கேட்டாள்.என்னுடன் கூட்டணி சேர்ந்த தோழியையும் கோபித்துக்கொண்டாள்.எனக்கு அவளைபபார்க்க பாவமாக இருந்தது 'நீ பிறரை விமர்சிக்கும்போது ,மற்றவரின் விமர்சனத்து தயாராக இரு'என்ற வாசகத்தை அவள் கேட்டதில்லைபோலும்.
                                                                     
              என் பள்ளி வாழ்க்கையும் முடிவுற்றது .என்னை அவள் மன்னிக்கவே இல்லை.இன்றும் அவள் எப்போதாவது பார்த்தாலோ பேசினாலோ (மனதில் ஒரு கோபம்)இருப்பதை உணர்வேன்.ஆனால் நான் அவளை ஒரு மனநோயாளியாகத்தான் பார்க்கிறேன்.பிறகு என்ன சொல்ல?ஆனால் அன்று அந்த தினம் ஒரு விசயத்தைப் புரிந்து கொண்டேன் ,கற்றும்கொண்டேன் அதாவது 'வேடிக்கையாய் கூட நண்பனின் மனதைப் புண்படுத்தாதே'என்பதை.என் வாழ்க்கையில் இன்னும் அதைக்கடைப்பிடித்து வருவதால் இன்னும் நான் நட்புலகில் மஹாராணி என்றே போற்றப்படுகிறேன்.ஆனால்  என் நட்புகளில் சிலரும் சரி,என் முக்கிய உறவுகளில் சிலருக்கு அந்த கெட்டப்பழக்கம் இருப்பது எனக்கு தெரியும் .அதாவது வேடிக்கையாக பிறர் மனம் புண்படும் படி பேசுவது!எனக்கு அவர்கள் மேல் பரிதாபம் மட்டுமே வரும் காரணம் அபப்டிப்பட்டவர்கள் ஒன்று மனநோயாளிகள் அல்லது பக்குவப்படாதவர்கள் என்ற லிஸ்ட்டில்தான் நான் வைத்துளேன்.அப்படிப்பட்டவர்களிடம் எனக்கு கோபம் வருவதில்லை என்பது இன்னுமொரு சிறப்பு.என்னைப்பொறுத்தவரையில் அவர்கள் என் பசங்களைப்போல் அவர்களும் முதிர்ச்சியடையாதவர்கள்!
                                                                           

Wednesday, 27 March 2013

செல்வியின் தற்கொலை முயற்சி!

               என் பதினெட்டு வயசில் எனக்கு மருந்து பொட்டல உறையினால் ஏற்பட்ட மிக மோசமான ஒரு அனுபவத்தைத்தான் இங்கே பகிர்ந்து கொள்ள போகிறேன்.சின்ன சின்ன வலிகளுக்கெல்லாம் மருந்து உண்ணும் பழக்கம் நம் வீட்டில் கூடவே கூடாது.தொடர் வலி ,தாங்கமுடியாத வலிகள் என்றால் மட்டுமே மருத்துவரைக் கண்டு மருந்து சாப்பிட அனுமதி.வலிகளைத் தாங்கி கொள்ள பழக்கப்படுத்தப்பட்ட பெண் பிள்ளைகள் என்றால் அது நாங்கள்தான்.தாங்க முடியாத வலியென்றால் டாக்டரை அணுகணும் ,மந்திரவாதி  போய் பார்ப்பது ,சூனியம் ,செய்வினை எல்லாம் நம் வீட்டில் இல்லாத பழக்கம்!                                                            
                                                                 
            அந்த வகையில் என் பதினெட்டு வயசில் எனக்கு  gastric  வலி ஏற்பட்டது.முறையாக உணவு உண்ணாத பட்சத்தில்தான் அந்த வலி வரும் என்பது பலரின் கருத்து ஆனால் அது தவறான கருத்து.அந்த சமயம் நான் ஆசிரியைப் பயிற்சிக்கு போக எண்ணியிருந்த காலம் ,என் கனவு கூட ஆனால் மலாய்மொழியில் தேர்ச்சி மட்டுமே கிடைத்திருந்தது.ஆசிரியைப் பயிற்சிக்கு (credit) சிறப்பு தேர்ச்சி பெற்றிருக்கனும் ,அந்த வகையில் நான் ஒரு புள்ளியில் அந்த தகுதியை இழந்தேன்.அந்த சோகம் என்னை வாட்டியது .நாளடைவில் அதுவே கேஸ்ட்ரிக் வலியை உண்டாக்கியது.எனக்கு சின்ன பிள்ளையில் ஆட்டிறைச்சி உண்டால் வயிற்று வலி வருவது சகஜம்.ஒருவேளை அப்படித்தான் என்று பாட்டி வைத்தியம் செய்தேன் ,ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை.பல வைத்தியம் செய்தும் வலி குணமடையவில்லை.வலியால் துடித்தேன் ,அம்மாவுக்கும் இது அசாதாரண வலியென்று பட்டு விடவே என் வட்டாரத்தில் மிகப்பெரிய மற்றும் ரொம்ப நம்பிக்கையான மருத்துவமனைக்கு அனுப்பினார்.
                                                                                   

              நான் அங்கேதான் என் பிள்ளைகளையும் ஈன்றெடுத்தேன் ,என் பல பிரச்சனைகளையும் தீர்வு கண்ட மருத்துவமனை அதுதான்.டாக்டர் பரிசோதித்தார் ,பல சோதனைகளுக்கு பிறகு ,அது கேஸ்டிரிக் வலி என்று கண்டு பிடித்தார்.தீராத வலி என்பதால் ஓர் அருமையான வலி மாத்திரையும் வழங்கினார்.வீடு வந்து சேந்தேன்.மனதில் கவலைகள் இருந்தால் அந்த வலி வரும் என்றும் டாக்டர் எடுத்துரைத்தார்.பொதுவாக கேஸ்ட்ரிக் வலிக்கு விழுங்காமல் மென்று தின்னும் ஒரு இனிப்பு மாத்திரை முதன்மை மருந்து.அதுவும் எனக்கு வழங்கப்பட்டது.அந்த மாத்திரை மிட்டாய் போல இருந்ததால் என் தம்பி ,ஆர்வமாய் என் மருந்துகளை எடுத்து பார்த்தான் ,'அக்கா எனக்கும் இனிப்பு மருந்து வேண்டும் 'என்று எடுத்து சாப்பிட்டான் .அந்த சமயம் எனக்குதான் முதன்முறையாக அந்த இனிப்பு மாத்திரை கிடைத்திருந்தது.பிறகு மருந்துகளை எடுத்து அங்கும் இங்கும் போட்டு விடவே ,நான் தான் மருந்துகளை எடுத்து மருந்து உறைகளில் (paper cover)வைத்தேன்.பிறகு உறைகளில் எழுதியிருந்தது போலவே ,ஒரு வேளைக்கு இரண்டு மாத்திரை என சாப்பிட்டேன்.என்ன ஆச்சரியம்?ஒரு மாதகாலம் தீராத வலி பைய பைய நின்றது.இரவானது .லேசான போதைப்போல இருந்தது.பொழுது விடிந்தது.என் போதை நிலை மோசமாக இருந்தது,எல்லோரும் வேலைக்கு சென்றனர்.அம்மா அப்பாவின் கம்பெனியில் டீ லேடியாக வேலைக்கு செல்வார்.
                                                                     

              அக்கா மகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு..நான் ஒரு நிலையில் இல்லாதது போல உணர்ந்தேன்.ஏதோ ஒரு மயக்கம் ,என்னவென்று சொல்ல தெரியவில்லை ,என் கழுத்து தானாகவே மேலே நோக்கி இழுப்பது போல இருந்தது.ஆனால் அது வலி அல்ல ஆனால் எனக்கு அழனும் போல இருந்தது.எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் அந்த நிலையை ஏற்றுக்கொள்ளமுடியாமல் கதறி அழுதேன் ,என் அக்கா மகள் கைகுழந்தை ,அவளும் என்னைப்பார்த்து அழ,அக்கம் பக்கம் கூட்டம் கூடியது.கிராமத்து வீடுகளின் சிறப்பே அதுதானே.நகரத்தில் வெட்டிக்கொன்றால் கூட எவனும் வரமாட்டானே?என்ன ஆச்சு ?என்ன ஆச்சு ,எல்லோரும் ஓடி வர ,எனக்கு என்ன ஃபீல் பண்ணுகிறது என்று சொல்ல தெரியவில்லை.வைத்தியத்துக்குப் பேர்போன பாட்டி வந்தார்.பாட்டிக்கு ஒன்னும் புரிபடல, சாமியாடும் பாட்டி வரவழைக்கப்பட்டார் ,எனக்கு ஏதோ பிடிச்சி ஆட்டுது ,போய் மந்திரிச்சி பாருங்க என்றார்.நல்லவேளை என் தோழி(என் அண்ணி) என் அம்மாவுக்கு போன் பண்ணி சொல்ல அரைமணி நேரத்தில் அம்மா சீனருடைய காரில் வந்து சேர்ந்தார்.
                                                                           

                     அம்மாவுக்கு மட்டும் எனக்கு ஏதோ பிரச்சனை என்று படவே ,அண்ணாவை வரவழைத்து காரில் மருத்துவமனைக்கு கொன்டு செல்லப்பட்டேன்.அம்மா எப்போதுமே ஒருபடி அதிகமாக செயல்படுபவர்.நேற்று நான் சாப்பிட்ட மருந்துகளையும் கையோடு கொண்டு வந்தார்.emergency ward-இல் அனுமதிக்கப்பட்டேன்.காரில் அம்மா அழுதார்,என்னா ஆச்சு?என்ன பண்ணுது ,என்னத்த பண்ணி தொலச்ச?ஐயோ என் புள்ள்ளையைக் காப்பாத்து ,என்றெல்லாம் புலம்பிகொண்டே வந்தார், என்னை மடியில் கிடத்திக்கொண்டு.எனக்குத்தான் என்ன பண்ணுகிறதென்றே சொல்ல தெரியலையே.வார்டில் என் பெயர் அழைக்கப்பட்டது.அம்மா துடித்துப்போனார்,என்னால் நடக்கவே முடியல,மோசமாகி போனேன்.நர்ஸ்கள் தாங்கி பிடித்துக்கொண்டனர்.நான் என்னை மிக மோசமாக கருதினேன் ஆனால் உள்ளே இருந்த டாக்டர் 'செல்விக்கு என்ன என்றார்.'எனக்கு சொல்ல தெரியல டாக்டர் ஆனால் எனக்கு கழுத்து நரம்பு பின்னால் இழுத்துக்கொள்வது போல் இருக்கு' என்றேன் அழுதுகொண்டே.
                                                                               

                   டாக்டர் சில கேள்விகளை அந்த மோசமான நிலையிலும் கேட்டுத் தொலைத்தார்.செல்வி பரிட்சையில் பெயில் ஆகிவிட்டாயா ?டாக்டரின் கேள்வி.;இல்லை'என் பதில்.'அம்மா உன்னை அடித்தாரா?கேள்வி ,'இல்லை'என் பதில்.அப்பா அடித்தாரா?அப்பா எங்களை அடிக்க மாட்டார்'என் பதில்.உன் சமீப மாதவிடாய் கோளாறு இருக்கா?கேள்வி ,'இல்லை'பதில் ,சரி உனக்கு பாய்பிரண்ட் இருக்கானா"கேள்வி,"இல்லை' பதில்.அடுத்த கேள்வி ரொம்ப மோசமான கேள்வி ஆனாலும் நான் கதறி அழுதேன் கோபம் இல்லை ,ஏன் டாக்டர் முட்டாள்தனமாக பேசுகிறார் ,என் நிலை பரிதாபமாக இல்லையோ என்ற ஆதங்கம் .செல்வி நீ யருடனாவது பழகி ,உறவு ஏதும் வைத்துக்கொண்டாயா?ஐயோ ஏன் டாக்டர் இப்படி கேக்கறிங்க ,என் அம்மாவைக்கூப்பிடுங்க ,நான் செத்துடுவேன் போல என்று கதறினேன்.டாக்டர் மெதுவாக சொன்னார் ,ஆமாம் நீ தற்கொலை முயற்சி செய்திருக்கிறாய் ,நீ அளவுக்கு அதிகமாக ஏதோ மாத்திரைச் சாப்பிட்டிருக்கிறாய் (over dose tablets),என்ன காரணம் பொய் சொல்லாமல் சொல் செல்வி'என்றார்.அம்மா உள்ளே வாங்கம்மா ,மருந்து கொண்டு வாங்க என்று கத்தினேன்.என்அம்மா ஓடி வந்தார்.டாக்டர் மருந்தைப் பார்த்தார்,என் கண்கள் இருண்டன.என்னமோ எறும்பு கடிப்பது போல உணர்ந்தேன்.
                                                                           
                 பல மணி நேரங்கள் கழித்து கண் விழித்தேன்.அம்மா என் கைகளைப் பற்றிக்கொண்டு அழுதுகொண்டிருந்தார்.அருகில் டாக்டர். உடலில் தண்ணீர் டியுப் வழியாக ஏறிக்கொண்டிருந்தது.அம்மா டாக்டரை அழைத்தார்.'செல்வி ஆர் யூ ஓகே?'என்றார்.ஆமாம் ஆனால் லேசா மயக்கமா இருக்குது டாக்டர் என்றேன்.கழுத்து சரியாகிவிட்டது என்றேன்.சரி உன்னைப் பரிசோதித்து இந்த மாத்திரைகளைக் கொடுத்த டாக்டர் பெயர் தெரியுமா என்றார்.பெயரைச் சொன்னேன்.உன் மாத்திரைகள் தவறான அளவுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கு .ஒரு வேளைக்கு ஒரு மாத்திரை சாப்பிடனும் ஆனால் இரண்டு என்று தவறாக எழுதியிருக்கு என்றார்.நான் உடனே 'இல்லை இல்லை டாக்டர் ,என் தம்பி நேற்று மருந்துகளை வெளியே எடுத்தான் .நான் தான் பிறகு பொட்டலங்களில் போட்டு வைத்தேன்.நான் தான் தவறாக போட்டிருக்கணும் டாக்டர் என்று என் தவற்றைக் குறிப்பிட்டேன்.'ஓகே ,அதானே இது ஆபத்தான மருந்து ,அதான் நானும் யோசித்தேன், டாக்டர் தவறாக எழுத வாய்ப்பு இல்லை என்று சொல்லி அந்த மாத்திரைகளை என்னிடம் இருந்து அகப்பற்றிக்கொண்டார்.'இதை சாப்பிட்டால் மரணம் அடைவோம் என்று உனக்கு தெரிந்து விட்டது ,ஆகவே இந்த மருந்துகளை இனி உனக்கு நான் கொடுக்கப்போவதில்லை ',பதிலுக்கு வேறு மருந்துகளை கொடுத்து அம்மாவைப் பாராட்டினார்.'நல்லவேளை கையோடு மருந்துகளை கொண்டு வந்ததால் சிகிச்சை சுலபமாக முடிந்தது,சரி அவளை நடக்க விடாமல் ,வாடகை காரில் கூட்டி செல்லுங்கள்,ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறாள் 'என்று கூறி வழியனுப்பி வைத்தார்கள்.'என் அம்மா என்னை கிராமத்துக்கோயிலுக்கு அன்று இரவு அழைத்துச் சென்று நன்றி கூறி ,நேர்த்தியாக திருவிழாவுக்கு பால் குடம் எடுக்க வைத்தார்.அதை இன்னும் நான் செய்து வருகிறேன்.
                                                                           
                 என்றாவது ஒருநாள் நாம் எல்லோருமே ஏதாவது ஒரு நோயினால்தான் இறப்போம் ஆனாலும் மரணத்தை நாமாக தேடி செல்வது இது போன்ற சின்ன சின்ன தவறுகளால்தான்.படிப்பவர்களுக்கு பயனாக அமையும் என்றே எதிர்ப்பார்க்கிறேன்.என் அம்மாவின் அதிரடி முடிவினாலும்(பேய் பிசாசு என்றில்லாமல்) டாக்டரின் அக்கறையினாலும் நான் இன்று இங்கே இருக்கிறேன்.மருந்து மாத்திரைகளை விளையாட்டாக போட்டு வைப்பதால் ஏற்பட்ட விளைவு ,இன்று நினைத்தாலும் அந்த கழுத்து நரம்பு பட்டபாடு .இறைவனுக்கு இன்னும் நன்றி கூறிக்கொள்கிறேன்.போயிருந்தால் இன்றைக்கு செல்வி போய் பல வருடங்கள் ஆகியிருக்கும்...!