Thursday, 29 November 2012

கருணை இல்லம் நோக்கி என் பயணம்

             வருடா வருடம் ஏதாவது ஒரு நடவடிக்கைச் செய்வதில் தீவிரமாக செயல்படும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த சைல்டு(CHILD NGO) ஆசிரியைகள் ,இந்த வருடம் ஏதாவது  ஒரு பயனுள்ள காரியம் செய்வோம் என்று யோசித்தபோது தோன்றியதுதான் இந்த ‘ரவாங் சாரதா இல்லத்துக்குப் பயணம்.Selangor Teachers Club ,president அடியேன் என்ற முறையில் ,ஆசிரியர்களோடு இது பற்றி கலந்தாலோசிக்க எனக்கு உத்தரவு வழங்கப்பட்டது.சுமார் 35 ஆசிரியைகளைக்(சிலாங்கூரில் மட்டுமே) கொண்ட இயக்கம் அது.மலேசியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலர்பள்ளிகள் சைல்ட் (அரசு சார்பற்ற  இயக்கம்)வழி இயங்கி வருகின்றன.
                                                                                               
       இந்த அரிய திட்டத்திற்கு எல்லா ஆசிரியைகளும் பச்சைக்கொடி காட்டவே ,தேதியும் நிர்ணயிக்கப்பட்டது.கேட்டதும் கொடுக்கும் மனப்பக்குவம் கொண்ட எனதருமை பெற்றோர்களிடமும் ,என் பள்ளி செயற்குழு உறுப்பினர்களிடமும் விசயம் தெரிவிக்கப்பட்டவுடன்,’டீச்சர் எப்போ பணம் வேணும்னு சொல்லுங்க ,வங்கி அக்கெளண்ட் எண்களை கொடுங்க ,பணம் அதில் போட்டு விடுகிறோம் ‘என்று உரிமையோடு சொன்ன அந்த நல்ல உள்ளங்களின் சப்போர்ட்டுடன் களத்தில் இறங்கினோம்.
                                                                                     
            24 நவம்பர் காலையில் கோலாலும்பூரில் இருந்து மின்ரயில்(commuter)ஏறினோம்.கொஞ்சம் தாமதமாக ரயில் ஏறினோம்(எப்போதுமே தமிழன் சொன்ன நேரத்துக்கு போகமாட்டோமே?)
என் சக ஆசிரியை கொஞ்சம் தாமதமாகமாக்கிவிட்டாள்.கோலாலும்பூரில் இறங்கி,அங்கே பசியாறையை வாங்கிக்கொண்டு ,ரயில் வ்ரும் நேரம் வரை ,உணவை அருந்தினோம்.அப்படித்தானே நேரத்தை மிச்சம் பண்ண முடியும்.
குறித்த நேரத்தில் ரயில் வந்தது.பயணம் தொடர்ந்தது.நல்ல வேளை அன்று சனிக்கிழமை காலை என்பதால் ,அவ்வளவாக கூட்டம் இல்லை என்றே சொல்லலாம்.தாரளமாக உட்கார்ந்து செல்ல சீட் கிடைத்தது.இம்முறை மாற்றுத்திறனாளிகள் சீட்களில் நான் உட்காரவில்லை-முக்கிய குறிப்பு!
                                                                                     
                 ரவாங் நகரத்தை அடைய சுமார் அரைமணி நேரம் ஆனது.எந்த தடங்கலும் இல்லாம்ல் போய்ச் சேர்ந்தது மனதுக்கு நிம்மதியாய் இருந்தது.ஏதும் நல்ல காரியம் செய்வதென்றால் நமக்கு பல தடைகள் வருமே?அங்கே எங்களுக்காக தயார் நிலையில் இருந்த காரில் இல்லைத்தை அடைந்தோம்.ஒரே பச்சைபபசேல் என்ற சூழல்.பூச்சோங்கில் வீடுகளைச் சுற்றிலும் கட்டடங்கள்தான் இருக்கும்.மரங்கள் இருப்பது அரிது.சோ ,எனக்கு ரொம்ப பிடித்த வீடாக அமைந்தது.உள்ளே நுழைந்ததும் ,நான் தடையின்றி அங்கே சென்றதன் காரணமும் புரிந்தது.ஆம், மிகவும் புனிதமாக அமைதியாக என்னை வரவேற்கவே காத்திருந்ததுபோன்ற அந்த பூஜையறையும் அங்கே உள்ள படங்களும்.பொதுவாகவே சமய சொற்பொழிவுகளிலோ, சமயம் சார்ந்த நிகழ்வுகளிலோ நாம் கலந்து கொள்ள வாய்ப்புக்கிடைத்தால் ,என் குரு சொல்வது ஒன்றுதான்’உங்களை ,இன்று இங்கே கலந்து கொள்ள வைத்தது நாங்களோ ,நீங்கள் எடுத்த முடிவோ இல்லை ,இறைவன் உங்களை அனுப்பிவைத்திருக்கிறான்,மேலும் நீங்கள் செய்த புண்ணியம்!எனக்கு பதில் கிடைக்க ,இறைக்கு நன்றி சொல்லி உள்ளே நுழைந்தேன்.
                                                                                                     
                   நேரத்தை வீணடிக்காமல் உடைகளை மாற்றிய பின்பு சமையலில் இறங்கினோம்.ஆளுக்கொரு வேலையாக செய்தோம்.கொஞ்சம் அசுத்தமாக கிடந்த பொருட்களை (சிரித்துக்கொண்டே..அதான் நமக்கு நல்லா வருமே)சுத்தம் செய்ய சொல்லி அங்கேயுள்ள பெண்பிள்ளகளைப் பணித்தேன்.’அதுக்கு செல்வி டீச்சர்தான் லாயக்கு சிரித்துக்கொண்டே திட்டுவாங்கன்னு ,என் சக டீச்சர்கள் நல்ல பெயரை எடுத்துக்கிட்டாங்க.
சொல்லிய வேலைகளை சிரமம் பாராமல் செய்துகொடுத்த
பெண்பிள்ளைகளுக்கு,நன்றிடா செல்லங்களே!(கொஞ்சம் பயம்தான் ,என்னடா அறிமுகமே இல்லை,திட்டி திட்டி வேலை வாங்குறாங்களேன்னு?)

        ”too many cooks will spoil the soup”என்ற கூற்றினைப் பொய்யாக்கினோம்.ஆமாம் ,ஒவ்வொரு சமையலையும் எல்லோருடைய ஆலோசனைப்படிக் கேட்டு மகிழ்ச்சியுடன்  சமைத்துமுடித்தோம்.சமைத்த உடன் அங்கே இருந்த பாத்திரங்களையெல்லாம் சொல்லாமலேயே வந்து ‘விடுங்க டீச்சர் ,இன்று எங்கள் ரூட்டின் சமையலறை சுத்தம் செய்வது’என்று சில பெண்பிள்ளைகள் சுத்தம் செய்ய ஒரு கூட்டம் ,சமைத்தை  கொண்டு போய் அடுக்கி வைக்க ஒரு கூட்டம் என சுலபமாய் எங்கள் வேலைகளை ,குட்டிகள் முடித்துக்கொடுத்தனர்.

         சமையலை முடித்தபின்பு ,உணவுக்கு தயாரானோம்.எல்லோரும் அங்கே உணவைச் சுவைத்துக்கொண்டிருக்கும் நான் கொஞ்சம் தாமதமாக சென்றேன்.அங்கே  எல்லோரும் முறையாக அமர்ந்து ,அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்ததைப்பார்த்தபோது ,எங்களுக்கு 70 மார்க்குகள் கிடைத்திருக்கும் போல?ஆமாம் ,தினமும் ஒரே சமையல்காரரின் கையில் சமைத்து உண்பது நமக்கே ( தினமும் நம் வீட்டின் புலம்பல்கள் அதானே)பிடிக்காது.4 முதல் 19 வயது பெண்பிள்ளைகள் ,அதுகளுக்கு மட்டும் எப்படி பிடிக்கும்?’சமையல் சூப்பர் டீச்சர்,ரொம்ப நல்லா இருக்கு (இருங்கடி அவுங்க போகட்டும் ,உங்களுக்கு இருக்கு என்ற சமையல்காரம்மாவின் இன்னர் வாய்ஸ்??).நான் சமைத்த இறால் சம்பல் ,கொஞ்சம் காரம் இருப்பினும் ,பசங்க சுவைத்து சாப்பிடும்போது அதன் சுவையும் எனது மகிழ்ச்சியும் இரட்டிப்பானது போல இருந்தது.
சாப்பிட்ட பின்பு .......உறக்கம்தான்(நம் பிரச்சனை நமக்கு)ஆனால் எல்லோருக்கும் கேம்ஸ் தயாரித்து வைத்திருந்தோம்.அதுக்கான சாக்லெட்கள் ,பரிசுப்பொட்டலங்கள் எல்லாம் கொண்டு சென்றிருந்தோம்.ஒவ்வொரு விளையாட்டிலும் சளைக்காமல் விளையாடிய குழந்தைகள் என்றால் அது 4 வயது குழந்தைகள்தான்.’டீச்சர் ,மிட்டாய் கொடுங்க டீச்சர் ,நான் ஜெயிச்சிட்டேன் ‘என்று கேட்டு கேட்டு விளையாட்டில் ஆர்வமாய் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து வயது பிள்ளைகளையும் பார்க்கும்போது என்னையறியாமல் என் கண்கள் கலங்கின .நமக்கு ஏதும் ஆகிவிட்டால் ?நம் பிள்ளைகளின் நிலை?இந்த பயம் எனக்கு அடிக்கடி வந்து போகும்!

ஒரு குரூப் விளையாட்டுகளைக் கவனிக்க ,நாங்கள் தேநீர் தயாரிக்க ஆயத்தமானோம்.சத்தியமாக நான் தேநீர் கலக்கவில்லை,அந்த பிள்ளைகளுக்கு என்னால் அந்த கொடுமை நேரக்கூடாது என்பதில் ரொம்ப கவனமாய் இருந்தேன்.’தேநீர் ரெடியாவிட்டது,வாங்க சீக்கிரம் ,நாம் கிளம்பும் நேரம் வந்துவிட்டது’என்று அறிவித்தவுடன் ,அந்த பிஞ்சுகளின் கண்களில் ஒரு சோகம்?அதைப்பார்க்க எங்களுக்கு நிஜமாக மனமில்லை.ஆனால் எல்லோரும் அதைக்காட்டிக்கொள்ளாமல் ,தேநீர் பறிமாறப்பட்டது.சென்வீச் தயார் பண்ணிக்கொடுத்தோம்.ஏதோ முழுமையடைந்தது போல உணர்ந்தேன்.

மணி மாலை 4 ஆகவே ,கிளம்ப தயாரானோம்.அதுக்கு முன்பு எங்களுக்கு ஸ்பான்சர் மூலம் கிடைத்த பணத்தைப்,பண உறைகளில் போட்டு ,அங்கே இருந்த அனைவருக்கும் (சமையல்காரம்மா ,வார்டன் உட்பட)எல்லோருக்கும் கொடுத்தோம்.எதிர்பார்த்தைதைவிட பணம் அதிகமாகவே கிடைத்தது.அதிலும் என் பள்ளியில் நான் அங்கே போன பிறகும் ,போனில் அழைத்து ,பணம் போட்டிருக்கேன் ,எடுத்துக்கொள்ளுங்கள் செல்வி என்ற நல்ல உள்ளங்கள் இருப்பதுவும் ஆச்சரியம்தானே?கொடுக்கப்பட்ட பிறரின் பணம் சரியான முறையில் போய்சேர்க்கவேண்டியது நம் கடமையாச்சே?அதில் நான் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டேன்.அனைத்து ஆசிரியைகள் கையிலும் சுமார் ஐந்து உறைகளைக்கொடுத்து ,பிள்ளைகளிடம்  கொடுக்க சொன்னேன்.அந்த கணம் அந்த பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.மீதப்பணத்தை அங்கே இருந்த உண்டியலில் போட்டேன்.

நாங்கள் விடைபெறும் நேரம் .அணைத்து முத்தமிட்டு ,இனி அப்படியொரு வாய்ப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் வெளியேறினோம்.இந்த புனித காரியம் செவ்வென நடந்தேற எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.வேலை நடக்க வேண்டும் என்றால் ,’திட்டவும் செய்வேன் ,சிரிக்கவும் செய்வேன்’ என்ற என் செயலுக்கு எதிர்ப்பு சொல்லாமல் எனக்கு அனைத்து வகைகளிலும் ஒத்துழைத்த என் உடன்பிறவா சகோதரிகளுக்கு நான் நன்றி சொல்லியே ஆகனும்.சில குறைகள் இருந்தாலும் ,99% திருப்தியுடன் திரும்பினேன்.

.இதுவரையில் இதுபோன்ற இல்லங்களுக்கு நிதியுதவியும் பொருளுதவியும் செய்தால் மட்டும் போதும் என்று தவறாக நினைத்துக்கொண்டிருந்த எனக்கு ,முடிந்த வரையில் நாமாக சென்று ,அங்கே உள்ளவர்களுக்கு விருப்பமானவற்றை தெரிந்துகொண்டு ,அதனை செயல்படுத்தினால் அவர்கள் அடையும் எல்லையில்லா மகிழ்ச்சியை   உணரமுடிந்தது.மேலும் நன்கொடையாக கொடுக்கப்படும் பொருட்கள் அங்கே மிதம்மிஞ்சி கிடைப்பதைக்கண்டோம்(தெர்ந்துகொண்டோம்)இனி வரும் காலங்களில் இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக்கொள்ள எண்ணம் கொண்டுள்ளேன்.இன்று இந்த பொன்னான வாய்ப்பை அளித்த இறைக்கு நன்றி  கூறியே ஆகவேண்டும்.என் கடன் பணி செய்து கிடப்பதே!

(’அர்த்தமுள்ள தீபாவளி விருந்து’என்ற ஆல்பம் என் முகநூலில் ,ஏனைய படங்களுடன் )