Friday, 28 February 2014

உயிர் போனாலும் உடல் வாழ்கிறதே!

                                                                           
          குமார் ,என் கிராமத்து வீட்டின் அண்டை வீட்டுக்கார தோழன். ரொம்ப ரொம்ப நெருங்கிய நட்பு எங்களுக்கும் தேவி அம்மாவுக்கும்(குமாரின் அக்கா தேவி,சோ குமாரின் அம்மாவை ’தேவி அம்மா’ என்றுதான் அழைப்போம். அதேப்போல என் அக்காவின் பெயர் ராதா,எங்கள் அம்மாவையும் எல்லோரும் ராதாம்மா என்றுதான் அழைப்பர்.சுமார் 30 வருடம் எங்கள் பக்கத்து வீட்டில் தேவியம்மா குடும்பம் இருந்தார்கள்.இரவில் நம் வீட்டில் ஏதும் சத்தம் கேட்டால் கூட ,தேவியம்மாவும் பிள்ளைகளும்,’ராதா அம்மா ,என்ன சத்தம்,கதைவைத் திறங்க,ஏதும் பிரச்சனையா ?என்று பதற்றப்படுவார்கள்.அதுதான் கிராம வாழ்க்கையின் நட்பு .அவர்களின் ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது பையன் தான் குமார்.
           நாங்கள் கிராம வீட்டை விட்டு வந்தபோது தேவியம்மா அப்படிதான் அழுதார். எங்களை எங்கே பார்த்தாலும் ‘நலமா ,வீட்டுக்கு வாங்க, ஏன் போன் பண்றதே, அம்மா எங்கேடி ?அதேப்போல அவர்கள் பிள்ளைகள் அனைவரும் ரொம்ப அன்பு கொண்டாடுவார்கள் காரணம் பொதுவாக கிராம வீடு என்றால் பைப்படி சண்டையெல்லாம் வரும்,ஆனால் என் அம்மாவும் சரி ,தேவியம்மாவும் சரி யாருடனும் சண்டை செய்ய மாட்டார்கள்.
                  அந்த குமார், கடந்த வாரம் சனிக்கிழமை.வீட்டின் அருகே  மோட்டார் விபத்தில் காயமுற்று கோமா ஸ்டேஜில் கிடந்தார்.கேட்டவுடன் ஏதோ எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ஏதோ ஆகிவிட்டதுபோல மனம் கனத்தது.சரி அம்மாவை அழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை(இன்று ) மருத்துவமனை போகலாம் என்றிருந்தேன்.
           ஆனால் குமார் முந்திக்கொண்டார்). ஆமாம் நேற்றிரவு குமார் இறந்தார். நெஞ்சைக் கிழித்த அந்த சோக செய்தி,என் அம்மா ஒரு கணம் செஞ்சைப்பிட்த்துக்கொண்டு அப்படியே நாற்காலியில் உட்கார்ந்தார்.’புள்ள கண்ணைத் தொறந்துட்டதா சொன்னானுங்களே? என்ன ஆச்சு?ஐயோ என்னால போய் பார்க்க முடியலையே,புள்ள போயிட்டானா? செய்தியைச் சொன்ன என்னால் ,அதைப்பார்க்க இயலாமல் உள்ளே சென்றேன்,என் தம்பி வந்து ஆறுதலாய் அம்மாவிடம் ஏதோ சொன்னான்.
            பிறகு ஒரு போன் அழைப்பு.என் அக்கா போனில் அழைத்து ‘அம்மாவிடம் சொல் ,நாளை மறுநாள்தான் ,எடுக்கிறார்களாம்.அவன் தன் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளதால்,அனைத்தையும் வெட்டி அறுவைச் சிகிட்சை செய்த பின்புதான் சவம் கிடைக்குமாம், அவசரப்பட்டு போக வேண்டாம்’என்றார். இதுவரை குமாரைப் பிரிந்த சோகத்தில் அழுத என் கண்கள் ,இப்பொழுது அதே கண்கள் கொஞ்சம் ஆனந்த்க் கண்ணீரையும்  சேர்த்தே வடிக்கிறதே?ஆமாம் உயிர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் , அவன் உடல் உறுப்புகள் பலருக்கு வாழ்க்கை கொடுக்கபோகுதே? குமார் இறக்கவில்லை, அவன் இறந்தும் வாழ்கிறான்!அம்மாவிடம் கூறினேன்!
                                                             
வலப்பக்கம் என் அம்மா,இடப்பக்கம் தேவி அம்மா!

Friday, 21 February 2014

நமக்கு தெரியாமல் போகும் நம்மைச் சார்ந்தவர்களின் இறப்பு!

             

        சில விசயங்களை நாம் எழுதி லைக் மற்றும் கமெண்ட் கிடைத்த போது இல்லாத ஒரு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ,யாராவது போனிலோஅல்லது நேரிலோ பார்த்து ,’அன்றைக்கு நீங்கள் எழுதிய அந்த விசயம் ,உண்மையில் மனசைப் பாதித்தது டீச்சர் ‘என்று சொல்லும்போதுதான் நம் எழுத்துக்கும் அப்படி ஒரு உந்துதல் உண்டு என்றே தோணுது.

    அந்த வகையில் அன்று நான் எழுதிய இந்த விசயத்தைப் படித்துவிட்டு என் நண்பன் தொலைபேசியில் அழைத்து ‘செல்வி அந்த இறப்பு விசயம் என்னை ரொம்பவே பாதித்தது செல்வி.உண்மையில் மனசில் லேசான பயம் கூட ஏற்பட்டது.நம்மைச் சுற்றி உள்ளவர்கள் இறந்துபோவதும் அது நமக்கு தெரியாமல் போவதும் ஐயோ!யாருக்கும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது செல்வி.இனி எல்லா நண்பர்களையும் போனில் அழைத்து அடிக்கடி நலம் விசாரிக்கவேண்டிய எண்ணம் வந்தது ‘என்றான்.அவன் சொன்ன அந்த விசயம் இதுவே :


Selvi Sk
19 February near Kuala Lumpur
ச்சே..ச்சே என்ன உலகம்?
நேற்று நான் வழக்கமாக செல்லும் பாதையில் ஓர் இறப்பு!பேருந்து ,கார் செல்லும் பிரதான பாதையில் பந்தல் போடப்பட்டிருந்தது.ஆகவே மாற்று சாலையில் செல்லவேண்டிய கட்டாயம். நானும் அவசரமான உலகில் உழன்று கொண்டிருப்பதால்,இறப்பு வீட்டை சுமார் மூன்று முறை கடந்தும் எதையும் சரியாக கவனிக்கவில்லை.இன்று பள்ளி முடிந்து அழுதுகொண்டே ஓடி வந்த என் மகள்,’அம்மா என் தோழியின் அம்மாதான் நேற்று இறந்துபோனவர் அம்மா.ஐயோ யாருமே சொல்லவில்லையே, ரொம்ப கவலையா இருக்கு ‘ என்று அழுது புலம்பினாள்.அவர்களுடைய இரண்டு பிள்ளைகளும் என் மாணவிகள்.அடிக்கடி பள்ளிக்கு வந்து பிள்ளைகளின் படிப்பை விசாரிந்துச் செல்வார்.மிகவும் பொறுப்பான அம்மா. மனசே சரியாக இல்லை. டெங்கி காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்கள்.’என்னால் அவளுக்கு போய் ஆறுதல் கூட சொல்லமுடியவில்லைம்மா,அவங்க பிரேதம் அவர் மாமா வீட்டில் வைத்து அடக்கம் செய்யப்பட்டதாம்.அந்த மாமா வீடுதான் நான் கடந்து போன வீடு!
#ச்சே கேட்டதுமுதல் மனம் நெகிழ்ந்து போனது.நன்கு அறிமுகமானவரை இறுதியில் போய் பார்க்க வாய்ப்பில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?ஏனோ இரண்டு மூன்று நாட்களாக எல்லாமே வெறுப்பாகவே இருக்கிறது!

Thursday, 20 February 2014

முகநூ(லி)ல் திருவிளையாடல்பிரிக்கமுடியாது : காப்பி பேஸ்ட்டும் , சேரிங்கும்
பிரியக்கூடாதது : முதன்முதலில் சேர்த்த நட்பு,
சேர்ந்தே இருப்பது : பொறாமையும்,வயித்தெரிச்சலும்
சேராதிருப்பது : நல்ல ஸ்டேடசும் நிறைய லக்ஸ்களும்,
சொல்லக்கூடாதது : புதிய பெண் நட்பிடம் ரகசியம்,
சொல்லக்கூடியது : நம் நட்பு நம்மைப்பற்றி பேசிய பெருமை பேச்சு,
பார்க்ககூடாதது : நம் நட்பு வேற ஆளுக்கு போடும் லைக் அண்ட் கமெண்ட்,
பார்க்ககூடியது : என் நட்பு எனக்கு போடும் லைக்ஸ் அண்ட் கமெண்ட்,
கலையில் சிறந்து : என் ப்ரோஃபைல் படங்கள்
நாடகம் என்பது : நம் நட்பு வேற பெண்ணுக்கு போடும் லைக் பார்த்துட்டு பார்க்காததுபோல பாசாங்கு செய்வது,
பாட்டுக்கு : Asb Pradeep(நல்ல  பாடல்களைத்  தேடிபோடும் நண்பர்,
ஆசைக்கு : நல்லா இல்லாத படங்களைப்போட்டு லைக்ஸ் தேடும் சிலர்,
அழகுக்கும் அறிவுக்கும்: Selvi Sk
(முதன் முறையாக என் அறிவை பிழிந்து பிழிந்து நான் எழுதிய வசனம்..சொல்லிப்புட்டேன்)

Thursday, 13 February 2014

’அன்பர்கள் தின ’ஸ்பெசல் உண்மை சம்பவம்!

              இதை நான் சொல்லியே ஆகணும்.மறைத்து வச்சிருக்கும் அளவுக்கு அப்படி  ஒன்னும் பெரிய சிதம்பர ரகசியம் அல்ல!1998 ,அந்த வருடம் வெலண்டைய்ன் டே! ரொம்ப முக்கியமான வருசம்.ஹ்ம்ம் !அதுதான் முதன்முதலாய் அதிகாரப்பூர்வமாக மாப்பிள்ளை அமைந்து ரொம்ப பிசியாக இருந்த வருசம். திருமண தேதியும் நிச்சயிக்கப்பட்டது.ஆனால் அந்த வருசம்  டேட்டிங் போக  வாய்ப்பு கிடைக்கவில்லை,காரணம் இருவருக்குமே வேலை,சோ எதுவும் இண்டரஸ்டிங் இல்லாததால் அமைதியாக கையில் ரோஜாப்பூவோடு திரிந்த பெண் தோழிகளை ஆபிசில் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தேன்.நமக்குதான் காதல் எல்லாம்  சரிப்பட்டு வரலியே,நேரே திருமணம்தானே?(கொடுத்து வச்சது அவ்வளவுதான்?)
       14/2/1998 ஆபிசில் வேலை செய்து கொண்டிருந்த சமயம். மதியம் 1 மணிப்போல என் மேஜை போன் அலறியது. சாப்பிட்டு விட்டு மானேஜர் முதல் குமாஸ்தா என எல்லோரும் கொஞ்சம்நேரம் கண் அயருவோம். சோ ,மயான அமைதியாய் இருக்கும் அலுவலகம்.மறுமுனையில் ஓர் அழகான கம்பீர குரல் ‘செல்வியா ?
‘ஆம் செல்விதான்!’
‘என்ன நலமா செல்வி?
‘ஹ்ம்ம் நலம்தான்,யாரு இது?’
’அது இருக்கட்டும் ,கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா?’
‘என்ன ....?
‘உங்களுக்கு மாப்பிள்ளை செட் ஆகிவிட்டது!’
‘ஆமாம் ,அது சரி நீங்க?’
‘என்ன செல்வி நாங்களும் கேட்டிருந்தோம்,ஒருபதிலும் சொல்லவே இல்லை,இப்போ திடிர்னு கேள்விப்பட்டேன்,அதான் கன்ஃபெர்ம் பண்ணிக்கதான்’
’ஹலோ ,யார் நீங்க?என்னால் இதுக்கு மேல் அமைதியா பேசமுடியவில்லை.
ஆனால் மறுமுனையில் பேசிய அந்த நபர் ரொம்ப டீசண்ட்டாகவே பேசினார்.
‘பிளிஸ் யாருன்னு சொல்லுங்க’என்று கொஞ்சம் கெஞ்சி பேசினேன்.
‘நல்லா யோசித்துப்பாருங்க செல்வி,என் தோழி மூலம் கேட்டிருந்தேன்,ஒருமுறை போனில் பெயர் சொல்லாமல்  பேசினேன்.நீங்கள் முகத்தில் அறைந்தது போல பேசிட்டிங்க,சோ நானும் மெதுவா பேசலாம்னு இருந்துட்டேன் ‘என்றார்.
......சில நிமிடங்கள் என் எண்ண குதிரையை ஓட்டினேன்...ஐயோ !யாருன்னே தெரியலையே? ’.ஒருவேளை அந்த சமயம் எனக்கு என்று மாப்பிள்ளை நிச்சயம் ஆகாமல் இருந்திருந்தால் ,கொஞ்சம் சிரத்தை எடுத்து யோசித்திருப்பேன் போல?
’ஹலோ பிளிஸ் எனக்கு மணியாகுது ,நீங்க யாருன்னு சொல்லுங்களேன்’என்று கொஞ்சம் குரலை உயர்த்திப்பேசினேன்.
‘என்ன கோபம் செல்வி ,ஆனாலும் என்ன நல்ல நட்பாக இருக்கலாமே?என்றார்.
‘சரி உங்க பெயர்,எங்கிருந்து கூப்பிடுறிங்க?’
‘இதே கோலாலும்பூர்தான் , உங்களை அடிக்கடி பார்ப்பது இல்லை ஆனால் பல ஃபங்சனில் பார்த்ததுண்டு’.
‘சரி எனக்கு மணி ஆகிவிட்டது,பைபை (ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும் சும்மா பொய்யாக) ொன்னேன்.
‘ஹலோ என்னலா நீங்க”இன்னும் அந்த கோபம் போகல செல்வி?’
’சரி ’என்று சிரித்துக்கொண்டே எதையோ சொல்ல நினைக்கும்போது தடால் என ஒரு பெரிய சத்தம் ,’ஆ’என்று அந்த ஆணின் குரல் ,நாற்காலியில் இருந்தே கீழே விழுந்ததுபோல சத்தம்.மறுமுனையில் அலுவலகத்தில் ‘ஏய் வாட் ஹேப்பேண்ட் ..என்று சில குரல்கள் மட்டுமே கேட்டன.
         நானும் ஹலோ ஹலோ என்று கத்தினேன். ஒரு பதிலும் இல்லை.போனைத் தட்டி தட்டிப் பார்த்தேன்.என் பதற்றத்தைக் கேட்டுக்கொண்டிருந்த தோழிகள் ‘என்னாச்சு செல்வி ?யார் ?என்று என்னை அணுகினர். மெதுவாய் கிசு கிசுவென என் தோழிகளிடம் கூறினேன்,உடனே தோழி புஷ்பா’இரு ஹேச்.ஆர் டிபார்மெண்டுக்கு போன் பண்ணி அந்த போன் காலை எங்கிருந்து வந்தது என்று கண்டுபுடிக்கலாம் ‘என்றாள்.ஆனால் ஹே.ஆர் ‘முடியாது ,போலிஸ் கேஸ் ,அல்லது சீரியஸ் பிரச்சனைகளுக்கு மட்டுமே அந்த மாதிரி செய்வோம் ‘என்றார்கள்.
           நாங்களும் இரண்டு மூன்று நாட்களில் போன் வரும் என்று ஏமாந்து போனதுதான் மிச்சம். திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன.நேற்று என் பிள்ளைகளோடு பேசிக்கொண்டு இந்தக்கதையைச் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தேன் .பின்னால் இருந்து ஒரு குரல் ‘நல்ல வேளை அவன் தப்பிச்சான்,இல்லாட்டா என்னைப்போல அவன் மாட்டியிருப்பான் ‘என்று.இதைக்கேட்டதும் என் பிள்ளைகளுக்கு இன்னும் சிரிப்பு அதிகம் ஆனால் எனக்கு கடுப்புதான் வந்தது என்பது உண்மை!.லேசாய் திரும்பி ஒரு பார்வை பார்த்துட்டு அறைக்குள் போனேன்,என் மகன் ஓடி வந்து ‘அப்பா சும்மாதான் சொல்றாரும்மா ‘என்றான்.
        இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன அந்த குரலுக்கு உரியவர் யார் என்று தெரியவில்லை ஆனால் அவர் கீழே விழுந்து(என் யூகம்) என்ன ஆச்சோ ? அவர் யாராக இருப்பார்?என்ற கேள்விகள் என் மனதில் இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கிறது!ஒவ்வொரு வருடம் அன்பர்கள் தினத்தில் இந்த சம்பவம் மனதுக்குள் வந்தால் அந்த முகம் தெரியாத நபரின் குரலும் வந்துபோகும்.காதுக்கு எட்டிய குரல் ,கண்ணில்  படாத முகம்!
                                                           
(நானும் தோழி புஷ்பாவும் அலுவலக உடையில்)
.