Thursday, 13 February 2014

’அன்பர்கள் தின ’ஸ்பெசல் உண்மை சம்பவம்!

              இதை நான் சொல்லியே ஆகணும்.மறைத்து வச்சிருக்கும் அளவுக்கு அப்படி  ஒன்னும் பெரிய சிதம்பர ரகசியம் அல்ல!1998 ,அந்த வருடம் வெலண்டைய்ன் டே! ரொம்ப முக்கியமான வருசம்.ஹ்ம்ம் !அதுதான் முதன்முதலாய் அதிகாரப்பூர்வமாக மாப்பிள்ளை அமைந்து ரொம்ப பிசியாக இருந்த வருசம். திருமண தேதியும் நிச்சயிக்கப்பட்டது.ஆனால் அந்த வருசம்  டேட்டிங் போக  வாய்ப்பு கிடைக்கவில்லை,காரணம் இருவருக்குமே வேலை,சோ எதுவும் இண்டரஸ்டிங் இல்லாததால் அமைதியாக கையில் ரோஜாப்பூவோடு திரிந்த பெண் தோழிகளை ஆபிசில் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தேன்.நமக்குதான் காதல் எல்லாம்  சரிப்பட்டு வரலியே,நேரே திருமணம்தானே?(கொடுத்து வச்சது அவ்வளவுதான்?)
       14/2/1998 ஆபிசில் வேலை செய்து கொண்டிருந்த சமயம். மதியம் 1 மணிப்போல என் மேஜை போன் அலறியது. சாப்பிட்டு விட்டு மானேஜர் முதல் குமாஸ்தா என எல்லோரும் கொஞ்சம்நேரம் கண் அயருவோம். சோ ,மயான அமைதியாய் இருக்கும் அலுவலகம்.மறுமுனையில் ஓர் அழகான கம்பீர குரல் ‘செல்வியா ?
‘ஆம் செல்விதான்!’
‘என்ன நலமா செல்வி?
‘ஹ்ம்ம் நலம்தான்,யாரு இது?’
’அது இருக்கட்டும் ,கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா?’
‘என்ன ....?
‘உங்களுக்கு மாப்பிள்ளை செட் ஆகிவிட்டது!’
‘ஆமாம் ,அது சரி நீங்க?’
‘என்ன செல்வி நாங்களும் கேட்டிருந்தோம்,ஒருபதிலும் சொல்லவே இல்லை,இப்போ திடிர்னு கேள்விப்பட்டேன்,அதான் கன்ஃபெர்ம் பண்ணிக்கதான்’
’ஹலோ ,யார் நீங்க?என்னால் இதுக்கு மேல் அமைதியா பேசமுடியவில்லை.
ஆனால் மறுமுனையில் பேசிய அந்த நபர் ரொம்ப டீசண்ட்டாகவே பேசினார்.
‘பிளிஸ் யாருன்னு சொல்லுங்க’என்று கொஞ்சம் கெஞ்சி பேசினேன்.
‘நல்லா யோசித்துப்பாருங்க செல்வி,என் தோழி மூலம் கேட்டிருந்தேன்,ஒருமுறை போனில் பெயர் சொல்லாமல்  பேசினேன்.நீங்கள் முகத்தில் அறைந்தது போல பேசிட்டிங்க,சோ நானும் மெதுவா பேசலாம்னு இருந்துட்டேன் ‘என்றார்.
......சில நிமிடங்கள் என் எண்ண குதிரையை ஓட்டினேன்...ஐயோ !யாருன்னே தெரியலையே? ’.ஒருவேளை அந்த சமயம் எனக்கு என்று மாப்பிள்ளை நிச்சயம் ஆகாமல் இருந்திருந்தால் ,கொஞ்சம் சிரத்தை எடுத்து யோசித்திருப்பேன் போல?
’ஹலோ பிளிஸ் எனக்கு மணியாகுது ,நீங்க யாருன்னு சொல்லுங்களேன்’என்று கொஞ்சம் குரலை உயர்த்திப்பேசினேன்.
‘என்ன கோபம் செல்வி ,ஆனாலும் என்ன நல்ல நட்பாக இருக்கலாமே?என்றார்.
‘சரி உங்க பெயர்,எங்கிருந்து கூப்பிடுறிங்க?’
‘இதே கோலாலும்பூர்தான் , உங்களை அடிக்கடி பார்ப்பது இல்லை ஆனால் பல ஃபங்சனில் பார்த்ததுண்டு’.
‘சரி எனக்கு மணி ஆகிவிட்டது,பைபை (ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும் சும்மா பொய்யாக) ொன்னேன்.
‘ஹலோ என்னலா நீங்க”இன்னும் அந்த கோபம் போகல செல்வி?’
’சரி ’என்று சிரித்துக்கொண்டே எதையோ சொல்ல நினைக்கும்போது தடால் என ஒரு பெரிய சத்தம் ,’ஆ’என்று அந்த ஆணின் குரல் ,நாற்காலியில் இருந்தே கீழே விழுந்ததுபோல சத்தம்.மறுமுனையில் அலுவலகத்தில் ‘ஏய் வாட் ஹேப்பேண்ட் ..என்று சில குரல்கள் மட்டுமே கேட்டன.
         நானும் ஹலோ ஹலோ என்று கத்தினேன். ஒரு பதிலும் இல்லை.போனைத் தட்டி தட்டிப் பார்த்தேன்.என் பதற்றத்தைக் கேட்டுக்கொண்டிருந்த தோழிகள் ‘என்னாச்சு செல்வி ?யார் ?என்று என்னை அணுகினர். மெதுவாய் கிசு கிசுவென என் தோழிகளிடம் கூறினேன்,உடனே தோழி புஷ்பா’இரு ஹேச்.ஆர் டிபார்மெண்டுக்கு போன் பண்ணி அந்த போன் காலை எங்கிருந்து வந்தது என்று கண்டுபுடிக்கலாம் ‘என்றாள்.ஆனால் ஹே.ஆர் ‘முடியாது ,போலிஸ் கேஸ் ,அல்லது சீரியஸ் பிரச்சனைகளுக்கு மட்டுமே அந்த மாதிரி செய்வோம் ‘என்றார்கள்.
           நாங்களும் இரண்டு மூன்று நாட்களில் போன் வரும் என்று ஏமாந்து போனதுதான் மிச்சம். திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன.நேற்று என் பிள்ளைகளோடு பேசிக்கொண்டு இந்தக்கதையைச் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தேன் .பின்னால் இருந்து ஒரு குரல் ‘நல்ல வேளை அவன் தப்பிச்சான்,இல்லாட்டா என்னைப்போல அவன் மாட்டியிருப்பான் ‘என்று.இதைக்கேட்டதும் என் பிள்ளைகளுக்கு இன்னும் சிரிப்பு அதிகம் ஆனால் எனக்கு கடுப்புதான் வந்தது என்பது உண்மை!.லேசாய் திரும்பி ஒரு பார்வை பார்த்துட்டு அறைக்குள் போனேன்,என் மகன் ஓடி வந்து ‘அப்பா சும்மாதான் சொல்றாரும்மா ‘என்றான்.
        இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன அந்த குரலுக்கு உரியவர் யார் என்று தெரியவில்லை ஆனால் அவர் கீழே விழுந்து(என் யூகம்) என்ன ஆச்சோ ? அவர் யாராக இருப்பார்?என்ற கேள்விகள் என் மனதில் இன்னும் நிழலாடிக்கொண்டிருக்கிறது!ஒவ்வொரு வருடம் அன்பர்கள் தினத்தில் இந்த சம்பவம் மனதுக்குள் வந்தால் அந்த முகம் தெரியாத நபரின் குரலும் வந்துபோகும்.காதுக்கு எட்டிய குரல் ,கண்ணில்  படாத முகம்!
                                                           
(நானும் தோழி புஷ்பாவும் அலுவலக உடையில்)
.

4 comments:

 1. அப்புறமா அவர் வரவே இல்லையா அக்கா?

  ReplyDelete
 2. அடடா...! பேசினதற்கே தண்டனையா...? நான் கூட உங்களவர் தான் பேசியிருப்பார் என்று நினைத்தேன்... எதற்கும் நன்றாக விசாரணை செய்து பாருங்கள்... கடுப்பு ஆகிராதீங்க...! ஹிஹி...

  ReplyDelete
 3. போன் பண்ணுன ஆளு கோடி புண்ணியம் செய்துருப்பார் போல ஹா ஹா ஹா ஹா...

  எனக்கும் மைல்டா ஒரு டவுட்டு, உங்க வீட்டுக்காரரா இருப்பாங்களோன்னு.

  ReplyDelete