Saturday 14 March 2015

தொலைத்த பொக்கிஷங்கள்!

            தொழில்நுட்ப வளர்ச்சியில் உழன்று கொண்டிருக்கும் மனிதர்கள் .நொடிக்கு ஒரு (நல்ல)விசயத்தை இழந்து வருவது உண்மையென்றால் ,நம்பாமல் இருக்கமுடியுமா?
              ந(ர)கரத்தில் தான் நவீனத்துவம் தலைவிரித்தாடுகிறது என்றால் கிராமங்களிலும் தற்போது பல விசயங்களைக் காணமுடியவில்லையே!
அரிசி குத்தும் அக்கா மகளே நீ கை விலக்கி கை உலுக்கு உலக்கையத்தான் கையமாத்தி குத்தும்போது ,வலிக்கவில்லையா?அரிசி குத்தும்போது வலிக்கவில்லையா?என்ற பாடலுக்கு ஏற்றாற்போல ,எத்தனை வீடுகளில் உலக்கையும் உரலையும் கொண்டு அரிசி குத்துகிறோம்?அட எத்தனைப்பேர் வீட்டில் உலக்கை உரல் பயன்பாட்டில் இருக்கின்றது?
                மலேசியாவில் இறப்பு வீடுகளில் பிரேதம் சுடுகாட்டுக்குக் கொண்டுச் சென்றவுடன் , வாசலுக்கு இடையே உலக்கையை போடுவது ஒரு சம்பிரதாயம். ஆனால் , அந்த வீட்டில் இறப்பு  செய்தி கூட சோகமாக இராது, வாசலுக்கு இடையே போட உலக்கை இருக்காது, என்பதுதான் ரொம்ப சோகமான செய்தியாக இருக்கும்!பக்கத்து வீட்டில் கேட்போம்,’இல்லை’..அடுத்த வீட்டில் ‘இல்லை’ மாமா வீட்டில் ,’இல்லை’ மச்சான் வீட்டில் ’இல்லை’.கடைசியாய் சுடுகாட்டுக்குப் போன, ஆண்களிடம் போன் போட்டு ’வரும்போது கடையில்(அப்படி இந்தியர் கடை இருந்தால்)ஒரு உலக்கை வாங்கிட்டு வாங்க’என்ற அவல நிலைக்கு வந்து விட்டோம்.
                   பொருள் செரிந்த பாடல்களை இழந்தோம்.பொருட்களை இழந்தோம். பைய பைய பலவற்றையும் இழந்துவிட்டோம்.அந்த வகையில் ,கிராமத்தில் நாம் விளையாடிய பல விளையாட்டுக்கள் இன்றைக்கு இல்லாமல் போய்விட்ட வேதனை இருக்கே?முன்னோர்கள் யாவரும் மூடர்கள் அல்லர். ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தத்தைச் சொல்லிச் சென்றனர்.அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த ,விட்டுச் சென்ற அனைத்துமே பொக்கிஷங்கள்.பெயர் தெரியாமல்,நோக்கம் புரியாமல் விளையாடிய எத்தனை விளையாட்டுக்கள் ,நம் மூளைக்கு ஒரு பூஸ்ட் ஆக அமைந்தன.எப்போதும் நம் மூளை ஃப்ரெஸ்சா இருக்க அந்த விளையாட்டுக்களை நமக்கு இ(வி)ட்டுச் சென்றனர்.
                                                           
கல்லாங்காய்
இந்த விளையாட்டை எத்தனைப் பெண்பிள்ளைகள்  பைத்தியமாக விளையாடி இருப்போம்?கண் ,கை  நகர்  பயிற்சி(hand eye coordination).ஒரு கையால் மேலே பறக்கும் காயை பிடிக்கவேண்டும்,அதேவேளையில் தரையில் கிடக்கும் காய்களை எடுக்கவேண்டும்.இப்ப உள்ள பிள்ளைகளால் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாட முடியுமா?சந்தேகம்தான். 

பல்லாங்குழி
மனக்கணக்குப் போட  மிகச் சிறந்த விளையாட்டு.கணிதம் (எண்கள்) பயில எளிய வழி. இன்னமும் என் அத்தைகள் விளையாடும்போது , நான் திரு திருவென முழித்துமுழித்துப் பார்ப்பேன். என்னடா இது?என்னம்மோ கணக்குப்பண்ணி போடுறாங்களே?ஆனால் அத்தைகள் மூவரும் ஒன்னாங்கிளாஸ் கூட படிக்கவில்லை!

பாம்பும் படியும்
ரொம்ப சிம்பளாக வாழ்க்கையில் நடக்கும் வெற்றி தோல்விகளைச் சொல்லும் விளையாட்டு.அதே நேரத்தில் எண்களை ஏறுவரிசையிலும் இறங்கு வரிசையிலும் பயில மிகச்சிறந்த கேம் இதுவென்றே சொல்வேன்.படியில் ஏறினால் வெற்றி ஆனால் ,அங்கே பாம்பு உருவத்தில் தோல்வி எந்நேரமும் உனக்காக காத்திருக்கும் ,ஆகவே வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் மாறி மாறி வரும் ,அது நிரந்தரமும் அல்ல என்ற அரிய ரகசியத்தை அடக்கிய விளையாட்டல்லவா?

ஹை ஜம்ப்(high jump)
முன்பு நாங்கள் விளையாடிய இந்த விளையாட்டைத்தானே இப்போ ஒலிம்பிக்கில் hurdle தாண்டும் விளையாட்டாக காப்பி பண்ணி ஓடுறாங்கள்.கையில் பிடித்திருக்கும் கயிற்றை கொஞ்சம் கொஞ்சமாய் உயர்த்தி உயர்த்தி ,இறுதியில் தோழிகள் அவர்கள் தலைக்கு மேல் வரை கொண்டுபோக ,அதையும் தாண்டி பலமுறை வெற்றிவாகை சூடியுள்ளேன் அடியேன்.இந்த விளையாட்டை விளையாடினால் உயரமாக வளர்வோம் என்ற உண்மை என் விசயத்தில் மட்டும் பொய்யாகிப்போனது.ஆம்! நான் உயரமாக வளரவில்லை ,மாறாக பக்காவாட்டில்தான் வளர்ந்தேன் என்ற சோகம் இன்னும் என்னுள் தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது?

இந்த விளையாட்டுக்கு நாங்கள் வைத்த பெயரைச் சொல்ல மனமில்லை.ஆகவே ஆங்கிலத்தில் hop with one foot என்றழைக்கப்படும் இந்த விளையாட்டில் உடலைச் சரி சமமாக வைத்து ஒரு காலில் தாவிச் செல்லும் நுணுக்கம் எல்லோருக்கும் வருமா என்ன?என் மாணவர்களுக்கு இந்த விளையாட்டைக் கற்றுக்கொடுக்க நாங்கள் பட்ட பாடு இருக்கே. fine motor skill and gross motor skill என்றழைக்கப்படும் தசை சமபந்தப்பட்ட விளையாட்டுக்களை தற்போது மேலை நாடுகளில் தங்களின் பள்ளி பாடத்திட்டத்தில் ஓர் அம்சமாகவே அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூப்பூக்க....
எண்களையும் கற்றுக்கொள்வோம்,ஒருவன் பின் ஒருவராக ,தன் முறை வரும்வரை காத்திருத்தல் என்ற நன்னெறி (take turn)பண்புகளைக் கற்றுக்கொடுக்கும் விளையாட்டு.
ஆடுபுலி ஆட்டம்
இன்றுவரை இந்த விளையாட்டை நான் தூர நின்று பார்த்ததுண்டு ஆனால் விளையாடியதில்லை.அதிலும் ஏதோ கணக்கு உண்டு என்பது மட்டும் புரியும்.
பள்ளிக்கூடம் போகாத நம் முன்னோர்கள் பலரும் மனக்கணக்கு போடுவதில் மிகச்சிறந்த வல்லுனர்கள் என்பதில் ஐயமில்லை.அதுக்குக் காரணம் ?
         எங்கள் ஊரில் இந்த விளையாட்டை ‘காண்டா கவுண்டி’ என்றே அழைப்போம். ஒருவகையில் கிரிக்கெட்டும் ,கோல்ஃப் விளையாட்டையும் சேர்த்த கலவை விளையாட்டு போல இருக்கும்.குறி பார்த்து அடிக்கவேண்டும்.எதிரணி கையில் அந்த குச்சி அகப்படுவதற்குள் தொடங்கிய இடத்தில் போய் நிற்கவேண்டும்.
கிளிப்பறி விளையாட்டு
தொடக்கத்தில் இருந்தே நம்மை இறுதியில் நிற்கும் கிளியிடம் நெருங்கவிடாமல் ஒவ்வொரு வரிசையிலும் இருவர் நின்று இடையூறு செய்வர்.வாழ்க்கையின் தத்துவமும் அதுதானே?
கண்ணாமூச்சி ஏனடா?
       ம்ம்ம்!இந்த விளையாட்டை விளையாடத எவருமே இல்லை என்று சத்தியம் பண்ணிச் சொல்லலாம்.கண்ணை மூடிக்கொள், அருகில் நிற்பவன் கூட கண்ணில் பட மாட்டான். அவன் கண்ணில் சிக்கினால்,ஏதோ புதையலைக் கண்டு பிடித்த மகிழ்ச்சி!
          

                இப்படி எத்தனை எத்தனை அரிய பொக்கிசங்களை நம் வாரிசுகள் இழந்துவிட்டனர்? இப்போது அவர்கள் விளையாடுவதெல்லாம் போன் கேம்ஸ்,மற்றும் கணினி கேம்ஸ்.கண்ணுக்கு கெடுதல். மூளை  வளர்ச்சியின்மை.மதியிறுக்கம் , உணர்ச்சிகளைத் தூண்டும் தீயவிசயங்களை மட்டுமே தற்போதைய தொழில்நுட்பம் கொடுத்துச் செல்கிறது.இதிலிருந்து மீள்வது எப்படி ?யாருடைய பங்கு பெரும்பங்கு?பெற்றோர்களா?ஆசிரியர்களா?பாட்டித்தாத்தாக்களா?அல்லது வீட்டில் குழைந்தகளைப் பார்த்துக்கொ(ல்)ள்ளும் பணிப்பெண்களா?யார் மீது பழியைச் சுமத்தி நாம் குளிர்காயலாம்?ஆமாம்,பிள்ளைகளிடம் குறைகளைக் கண்டால் அதைத்தானேச் செய்வோம்?