Sunday 24 November 2013

பிறப்பு ,இருப்பு ,இறப்பு!

படித்தேன்...வியந்தேன்..... பகிர்கிறேன்!

பிறப்பு ,இருப்பு, இறப்புகளுக்கு உரிய ,பிறப்பில் ஓர் எள் அளவு கூட இன்பம் இல்லை!
பிறப்பில் வரும் 5 துன்பங்கள்:
1)குழந்தை கருவில் இருக்கும்போது,இரண்டு மலை நெருக்குவது போலநெருக்குண்டல்.
2)கடலில் மிதப்பது போல கருப்பப்பை நீரில் மிதத்தல்,
3)இரும்புக்குடத்தில் சூடேற்றுவது போல இரத்தச் சூட்டால் வேதல்,
4)மலையின் மீதிலிருந்து கீழே தள்ளுவது போல பிரசூத வாயுவால் தள்ளப்படுதல்,
5)ஆலையில் இட்ட கரும்பு போல யோனித் துவாரத்தில் நெருக்குண்டு வெளியே வருதல்.

இறப்பில் வரும் துன்பம்;
இறப்பில் வரும் துன்பத்தை இறைவன் மட்டுமே அறிவான்.எனவே அது பிறப்பால் வரும் துன்பம் போல எட்டு மடங்கு என ஓர் அளவையால் சொல்லப்பட்டது.

இருப்பில் வரும் துன்பங்கள் :
குழந்தைப்பருவம்,குமரப்பருவம்,வயோதிகப்பருவம் என மூன்று பருவங்களிலும் அறியாமை ,வியாதிகள்,,பசிநோய்,காமநோய்,செல்வத்தை தேடுதல்,நரை, திரை,மூப்பு என எப்பொழுதும் துன்பமே தவிர இன்பம் இல்லை

பசிநோயும் காமநோயும் குன்மம் எனப்படும் ஒருவகை வயிற்றுவலி போன்றது.அவ்வலிக்கு உவர்மண் நீர் குடித்தால் அப்போதைக்கு அடங்கிப்பின்னர் தோன்றும்.அதுபோல பசியும் காமமும் அருந்துதல் பொருந்துதலால் அப்போதைக்கு அடங்கிப்பின்னர் தோன்றும்.எனவே இவ்விரண்டும் விட்டு ஒழிக்க அரியது என்று அறிக!!



Wednesday 13 November 2013

கவையாகி கொம்பாகி....

            ‘கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நல்மரம்’.   இப்படி 18 வயதில் எங்கள் ஊரில் சபைநடுவே(வகுப்பறையில்)முழுமையாக ஒரு வாக்கியத்தை மும்மொழிகளான தமிழ்மொழி ,மலாய்மொழி மற்றும் ஆங்கிலமொழிகளில் வாசிக்க முடியாமல் முழிப்பதாக திடுக்கிடும்  செய்தி வருடாவருடம் கண்டறியப்படுகிறது. இதில் நம் இன மாணர்வகளும் அடங்குவர் என்ற செய்திதான் நெஞ்சை பிழியவைக்கிறது.
        இடைநிலைப்பள்ளிக்கல்வியை பெரும்பாலும் ஐந்து வருடங்கள் முறையே  பயில்கிறோம். ஐந்தாம் படிவம்(form 5) என்று கூறப்படும்  18 வயதில்  பயிலும் மாணவனுக்கு சரியாக ஒரு வாக்கியத்தை முழுமையாக மும்மொழிகளிலும் நிறுத்தாமல்  வாசிக்க தெரிவதில்லை என்கிற விசயம் மிகுந்த வேதனைக்குரிய விசயம். இதைவிட வருத்தத்துக்குரிய விசயம் அவன் பெற்றோர்களுக்கு வேற எதுவாகவும் இருக்கவே முடியாது!அத்துடன் அவன் பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.இனி முதியோர் கல்வியில்தான் அவன் எழுத  வாசிக்க பழகவேண்டும் என்று சொன்னாலும் அது பொய்யாகி விடாது.
               அதேப்போல சாதாரண கூட்டல், பெருக்கல் கணிதம் கூட செய்யத்தெரிவதில்லை.இந்த தேர்வுதான் மலேசியாவில் ஒவ்வொருவருடைய தலையெழுத்தையும் மாற்றியமைக்கும்.நேர்க்காணலுக்கு சென்றால் குறைந்த பட்சம் இந்த தேர்வில் என்ன கிரேட் ?எடுத்துள்ளோம் என்பதைத்தான் கேட்பார்கள்.அதேப்போல மேற்படிப்புக்குச் செல்ல  இந்த கல்வித்தகுதி மிக மிக அவசியம்.இங்கே எழுதப்படிக்கத் தெரியாவதவனுக்கு, இனி வாழ்க்கை எங்கே தொடங்கும்?

            சரி இந்த பிரச்சனையின் முதல் காரணம் என்னவென்று ,நான்காம் படிவ ஆசிரியரைச் சென்றுக்கேட்டால் ,’நாங்கள் என்ன செய்ய ,மூன்றாம் படிவத்தில் அவனைக் கண்டுகொள்ளாமல் அப்படியே எங்களிடம் அனுப்பினர் என்று பதில் வரும்.சரி மூன்றாம் படிவம் வரை அவன் என்ன செய்தான் என்று கேட்டால் , முதல் படிவத்தில் அவன் சேரும்போதே இப்படித்தானே வந்தான்? பிறகு எப்படி நாங்கள் தட்டி நிமிர்த்துவது?

        அப்படியென்றால் அவன் ஆரம்பள்ளியில் என்னத்த படிச்சித் தொலைச்சான் என்று கோபப்பட மட்டுமே தோணும்.அங்கே போய் கேட்டால், ஒன்றாம் வகுப்பில் சேரும்போது அவனுக்கு ஓர் எழுத்து எண்கள் கூட தெரியாமல்தான் வந்தான்’.அப்படியென்றால் , மழலைக்கல்வி ஆசிரியரிடம் இறங்கி போய் கேட்டால், ’நீங்கள் வேற அவனை எங்களிடம் பேபி சிட்டருக்கு ஆள் இல்லையேன்னுதான் அனுப்பி விட்டாங்க, அவன் எங்களிடம் வரும்போது பென்சில் பிடிக்க தெரியாது, ஏடுகளைத் திருப்பக்கூட அவன் பெற்றோர்கள் பழக்கி கொடுக்கவில்லை?இப்போ புரியுதா ஆப்பு யாருக்கு ரெடியாகிறது?என்று.இறுதியில் பழி பெற்றோர்களின் தலையில் போய் விழுகிறது அல்லது உட்புகுத்தப்படுகிறது!

        ஆமாம் பெற்றோர்களே ,அதிலும் வீட்டில் இருக்கும் தாய்மார்களே, 4 வயது ஆகும் குழந்தைகளை பென்சில் பிடிக்க,எழுத்துக்களை அறிமுகம் செய்ய ஆவன படுத்துங்கள்.”அதான் பணம் கட்டி பள்ளிக்கூடம் அனுப்புகிறோமே ,அங்கே ஆசிரியர்கள் பாடு அவன் பாடு ‘என்று அலட்சியம் செய்யாமல் முடிந்த வரை உங்கள் பங்கினைக் கொஞ்சமாவது அப்ளைப் பண்ணுங்கள்.கருத்தரித்த மூன்றாவது மாதத்தில்(நான் கேட்டவரையில்) குழந்தை கற்க தொடங்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

        ஒரு சாதாரண பாரம் பூர்த்தி செய்யக்கூட  தெரியாமல் நாம் பெற்ற பிள்ளையின் நிலைமை உருவாக நாமும் ஒரு காரணகர்த்தாவாக இருந்திட கூடாது.பல்கலைக்கழகம் வரை பயின்றுதான் முன்னேற வேண்டும் என்று இல்லை,அடிப்படைக்கல்வி அறிந்த ஒரு மனிதனாக சமுதாயத்தில் அவனும் நடமாட நாமும் துணை நிற்போமே!

Thursday 7 November 2013

இல்லை இருபது!



உடையது விளம்பேல்!

(எல்லோரும் தங்களிடம் இருப்பது பற்றி பெருமையாய் பேசுவாங்க!,நாம ஒரு மாறுதலுக்கு இல்லாததைப்பற்றி பேசுவோமே!)


1.முத்து பதித்த நகை எதுவுமே என்னிடம் இல்லை.(அதுக்காக வைரம் பதித்தது இருக்கான்னு கேட்கப்படாது)

2.எனக்கு அறிமுகம் இல்லாதவர்களின்(பெண்களின்)கிசு கிசு கேட்க ஆசையே இல்லை.

3.பிறர் வைத்திருக்கும் பொருள்மேல் மோகம் எப்போதுமே இல்லை.(வாங்க வக்கில்லை)

4.காலேஜ் வாழ்க்கை ரொம்ப ஆசை ஆனால் போனதே இல்லை?(ஒழுங்கா படிச்சிருக்கனும் ?)

5.ஒருபக்கம் விடாமல் ஆங்கில புத்தகம் எதையும் படித்ததே இல்லை( புரிந்தால்தானே படிக்க?)

6.கணவருக்கு தெரியாமல் அவர் பணத்தை செலவு செய்ய மனம் வந்ததே இல்லை(வாய்ப்பு கிடைத்தும்)

7.நட்புக்காக , போன் பில் கணக்கு பார்க்கும் பழக்கம் இல்லவே இல்லை(உள்ளூர் நட்புகளுக்கு மட்டும்)

8.என்னதான் ருசியாகவும் மணமாக இருந்தாலும் பிடிக்காத உணவை டேஸ்ட் பண்ணும் ஆசை வந்ததே இல்லை.

9.காதல் பண்ணிய அனுபவம் இல்லை,நேராக திருமணம்தான்(ராசி இல்லையோ)

10.நகைசுவை உணர்வு இல்லாத நட்புகளோடு கொஞ்ச நேரம் கூட பேசுவது இல்லை.(நான் ரொம்ப ஸ்டிரிக்டு)

11.ஆடம்பர வாழ்க்கைக்கு மனம் ஆசைப்பட்டதே இல்லை(சட்டியில் இருந்தால்தானே?)

12.ஒருநாளைக்கு கூட போனில் பேசாத நாட்களே இல்லை(1990 வீட்டில் போன் வந்தநாள் முதல் இன்று வரை)

13.நான் இல்லாத பட ஆல்பங்களைப்பார்க்கும் பழக்கம் அறவே இல்லை(கட்டாயப்படுத்தினால் மட்டுமே உண்டு)

14.பல வர்ணங்களில் உதட்டுச்சாயம் என்னிடம் இல்லை(ஒரே வர்ணம்தான்)

15.புத்தகம் படிக்க மட்டுமே எப்போதுமே நேரம்‘இல்லை’(முகநூலில் மொக்கைபோட நேரம் சரியா இருக்கு)

16.அன்பு சம்பந்தப்பட்ட விசயங்களில் மட்டும் பொறாமை இல்லாமல் இல்லை.

17.சாப்பிடாமல் உறங்கிய நாட்கள் உண்டு,ஆனால் பேசாமல்(மெளனவிரதம்)இருந்த நாட்களே இல்லை.(இந்தியன் செத்துப்போயிடுவானே?)

18.இதுவரையில் சொத்தைப்பல் இல்லை,பல்வலியும் ஏற்பட்டது இல்லை.(32 பற்களும் வரிசையாக )

19.ஒருக்காலக்கட்டம் வந்தவுடன் அண்ணந்தம்பிகளோடு பேசுவது இல்லை(எல்லோரிடமும் சண்டைன்னா?)

20.பாடல்கள் கேட்காமல் ஒருநாள் கூட கழிந்ததே இல்லை

Sunday 3 November 2013

அத்தை வருவாளா?

அத்தை வருவாளா?

(என் முதல் சிறுகதையை தீபாவளி அன்பளிப்பாக அனைவருக்கும் சமர்பிக்கின்றேன். குறையை என்னிடம் கூறுங்கள்,நிறைகளை உங்கள் நட்புகளிடம் பகிருங்கள்)

              காளியப்பன் அமராவதி குடும்பத்தில்,சிவகாமி  அனைத்து உறவுகளையும் பெற்று பிறந்தவள். ஆம் ,அவளுக்கு முன்பு அக்காள்கள்,அண்ணன்கள் ,அவளுக்கு பிறகு தங்கை தம்பி என்று எல்லா உறவுகளும் அவளுக்கு மட்டும் அந்த குடும்பத்தில் கிடைக்கப்பெற்று பிறந்தவள்.கொஞ்சம் சுட்டி ,வாய் துணுக்கு ,நியாயம் என்று வந்தாள் எப்பேர்பட்ட பெரிய இடமானாலும் சண்டைப்போடுபவள் .சிவகாமியின் தந்தை வெகு சீக்கிரமே இவ்வுலகை விட்டுப்பிரிந்தார்.

                தன் பெற்றோர்களையும் உடன் பிறப்புகளையும் யாராவது ஏதும் சொல்லிவிட்டாள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போகும் சுபாவம் கொண்டவள் சிவகாமி.அவள் உடன்பிறப்புகளோடு எப்படியும் சண்டை செய்து கொள்வாள் ஆனால் பிறர் பேச விட்டுக்கொடுக்கமாட்டாள்.ஆயிரம் உறவுகள் இருந்தாலும் தன் உடன்பிறப்புகள் ஒருவர் இல்லாவிட்டாலும் ,அது எத்தனைப் பெரிய நிகழ்ச்சியானாலும் போகமாட்டாள்.’என் பெற்றோர்களையும் உடன்பிறப்புகளையும் மதிக்காத வீட்டுக்கு நான் ஏன் போகவேண்டும்?’என்று கோவித்துக்கொள்வாள்.அதனால் பல உறவுகளைப் பகைத்துக்கொண்டவள்.

              சிவகாமிக்கு திருமண வயது வந்தது. அவ்வளவு சீக்கிரம் எந்த வரனும் அமைந்த பாடில்லை.சிவகாமியும் அவ அம்மாவிடம் ‘முதலில் அண்ணாவுக்கு முடித்துவையுங்கள்,எனக்கு பிறகு பார்க்கலாம்’என்றாள்.காரணம் அவ அன்ணனுக்கு பார்த்த பெண்ணுக்கும் சிவகாமிக்கும் ஒத்த வயது ,அந்த பெண்ணுக்கும் வயது ஓடிக்கொண்டிருக்கே?அவளின் மூத்த அண்ணன் கரிகாலன்.

             கரிகாலனுக்கு திருமணம் ஆனது.கூட்டுக்குடும்பமாய்  வாழ்ந்துவந்த இடத்தில் பிரச்சனையைக் கொண்டு வந்து சேர்த்தாள் கரிகாலனின் மனைவி புவனா. மாமியாரை எதிர்க்க முடிந்தவளால் ,நாத்தனாரை எதிர்க்க முடியவில்லை.சிவகாமி அண்ணிக்கு கொடுத்த மரியாதையை மீண்டும் பிடுங்கிக்கொண்டாள் .ஹ்ம்ம்ம் அண்ணியோடு சண்டைப்போட்டாள். கரிகாலன் அவன் மனைவி பக்கம் பேசுவது, வழக்கமான ஒன்றுதானே!
அவன் எப்போதும் படிச்ச முட்டாள் போலவே பேசுபவன்.சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசுவான் ,பிறகு வருந்துவான்.

            ஆனாலும் சிவகாமியின் மேல் அவனுக்கு அடக்கமுடியாத கோபம் காரணம் சிவகாமி நியாயமாக பேசுபவள் , சிலவிசயங்களில் கரிகாலன் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டினாள் சிவகாமி. சில சமயங்களில் புவனா ,’என் வயதுதான் உனக்கும் ஆனால் இன்னும் திருமணம் ஆகாமல் கிடைக்கிறாய்,இதுதான் உனக்கு சாபம் ‘என்று கூட கஷ்டப்படுத்துவாள்,ஆனால்  சிவகாமி எதற்கும் செவி சாய்க்காமல் நாட்களை ஓட்டினாள்.எது எப்படியோ தன் அண்ணன் மற்றும் அக்காள்கள் வீட்டுப்பிள்ளைகளை தன் பிள்ளைகளைப்போல பாசம் வைத்து பாவிப்பாள்.

                 அவளுக்கும் வரன் வந்து திருமணம் செய்து கொண்டு புகுந்த வீடு போனாள். அண்ணன் அண்ணியிடம் உள்ள கோபம் எல்லாம் மறந்து அடிக்கடி அம்மா வீட்டுக்கு வந்து போவாள்.காலங்கள் ஓடின .சிவகாமியும் தாயானாள்.வருடா வருடம் தீபாவளி தன் பிறந்த வீட்டில்தான் கொண்டாடுவாள். அவள் கணவனுக்கு பெற்றோர்கள் இல்லை,ஆகவே அவனும் சிவகாமியின் தாய் வீட்டிற்கே செல்ல ஆசைப்படுவான்.கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த அவளுக்கு தனிமை என்பது ஒத்துவராத விசயம் .

                     அதுவும் பண்டிகை பெருநாட்கள் என்றால் ,சாமான் சட்டிகளைக்கட்டிக்கொண்டு அவள் தாய் வீடு அல்லது கணவனின் உடன்பிறப்பு வீடு என்று போய்விடுவாள் .வருடா வருடம் தீபாவளி மட்டும் அவள் அம்மா வீட்டில்தான் இருப்பாள்.இரண்டு நாட்கள் கழித்துதான் கணவன் அவன் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.அரேஞ்ச் மேரேஜ் என்பதால் சிவகாமிக்கும் அவள் கணவனுக்கும் அடிக்கடி ஒத்துப்போகமுடியாமல் போகும் ஆனால் சிவகாமி ரொம்பவே விட்டுக்கொடுத்து போவாள்.அது அவள் வளர்க்கப்பட்ட முறை,கூட்டுக்குடும்பத்தில் கற்றுக்கொண்ட பாடம்.

                   சமாளிக்க வேண்டியதை சமாளித்து வந்தாள். ஒருமுறை ஏதோ பிரச்சனையால் அவ கணவனோடு ஏதோ பெரிய சண்டை போட்டாள். அவள் அம்மா வீட்டில் போய் முறையிட்டாள். வழக்கம்போல அவ அம்மா ‘சின்ன சின்ன பிரச்சனைகளையெல்லாம் இங்கே கொண்டு வந்து பிரச்சாரம் பண்ணாதே, நாங்கள் எதுவும் கேட்கப்போவது இல்லை’வாழ்க்கையில் எல்லாம் சகஜம்’என்று அதை சீரியசாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

                     விசயம் அவ அண்ணன் கரிகாலனின் காதுக்கு போனது. பழைய காட்டத்தையெல்லாம் மனசில் வைத்துக்கொண்டிருந்த கரிகாலன் இதுதான் சமயம் என்று வசை பாட ஆரம்பித்தான்.எதையோ பேசப்போய் வாய் தவறி ‘ஆமாம் கல்யாணம் ஆகும் முன்னே என்னையும் என் மனைவியையும் என்னமாதிரி பேசினா? இப்போ அனுபவிக்கிறாள், நல்லா அனுபவிக்கட்டும். இது அவளுக்கு நல்ல பாடம் ,இன்னும் அழுவட்டும் ,என்று அதோடு  நிறுத்தாமல் சிவகாமியின் கணவனிடமே ‘அவளுக்கும் வாய் கொஞ்சம் அதிகம்தான்,அது எங்களுக்கு தெரியும் , நீங்கதான் கொஞ்சம் தட்டி வைக்கணும் ‘என்றும் பழையை பகையை வைத்து போட்டுக்கொடுத்தான்.ஆனால் பின் விளைவுகளை யோசிக்காமல் பேசினான் .என்னம்மோ என் மனைவி கூட வம்புக்கு வந்தாள்,இப்போ தெரியுதா? குடும்பம் என்றால் என்னவெல்லாம் பிரச்சனை வரும் ‘என்று.

                    சிவகாமியின் கணவனுக்கு இது ஒன்னு போதுமே? உன் அண்ணனே உன் வாய் அதிகம் என்று சொல்கிறார்.முடிந்தால் உன்னை ரெண்டு போட்டு அடக்கி வைக்க சொன்னார்’என்றான் .சிவகாமிக்கு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவள் நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்தது. ஏமாற்றமும் கோபமும் அவ கண்ணை மறைத்தது ,போனை எடுத்தால் ,கண்முடித்தனமாய் குறுந்தகவலை டைப் பண்ணினாள்.அதில் ‘இனி உன் வீட்டு வாசலை நான் மிதிக்கபோவதில்லை, இதுவரை என்னை வரவேற்று உபசரித்து உனக்கும் உன் மனைவிக்கும் நன்றி. அம்மாவின் மரணத்திற்கு மட்டுமே உன் வீட்டு வாசலை மிதிப்பேன்’என்று அனுப்பினாள். ஏமாற்றம்தான் அவளை அப்படி செயல்பட வைத்தது.

                    மறு கணம் கரிகாலன் ஆடிப்போனான். வருந்தினான். உடன்பிறப்புகள் அனைவரிடமும் காட்டி ‘நான் எதுக்கு சொன்னேன்,அவ இப்படி எடுத்துக்கொண்டாளே? என்ன சின்னைப்பிள்ளைத்தனம் ? இது அவள் பிறந்த வீடு, அவளை நான் வரவேண்டாம்’என்று சொன்னேனா ?என்றெல்லாம் உளறினான்.இதுவெல்லாம் அவனுக்கு வாடிக்கையான விசயம் .பேசுவதும் பிறகு வருந்துவதும் ஆகவே கரிகாலனின் மற்ற உடன்பிறப்புகளுக்கு இது பெரிய விசயமாய் படவில்லை.

                     இந்த வருடம் தீபாவளியும் நெருங்கியது , சிவகாமியின் தாய் வீட்டில் களைக் கட்டியது. ஆரவாரமாய் ஆர்ப்பாட்டமாய் எல்லாம் தயாரானது. சாயம் அடித்தல் பலகாரம் சுடுதல்.புத்தாடைகள் என்று ஆர்ப்பாட்டம். இன்னும் இரண்டே நாட்கள் , தடபுடலாய் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. விடிந்தால் தீபாவளி. குதூகலமாய் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த வேளையில் கரிகாலனின் மகள் ஆதிரை ‘அப்பா வருசா வருசம் அத்தை வருவாங்க.நம் வீடே களை கட்டும். இந்த வருசம் அத்தை வருவாங்களா அப்பா?

          ’ஆயிரம் பேர் இருந்தாலும் ,உங்களை மதிக்காத ஒரு விருந்து என்றால் அத்தை அந்த வீட்டு வாசலைக்கூட மிதிக்க மாட்டாங்க அப்பா. எது எப்படியோ உங்களை விட்டுக்கொடுக்காமல் மத்தவங்க கிட்டே பேசுவாங்க ஆனால் அவுங்கள வீட்டுக்கு அழைக்கனும் என்று தோணலையா அப்பா? அப்படி என்ன அத்தை தப்பா பேசினாங்க? நீங்கள் சொன்ன சொல்லுக்கு பதில் கொடுத்தாங்க,எனக்கு என்னம்மோ நீங்கள் செய்வது சரியாக படவில்லை அப்பா.அத்தை இல்லாத தீபாவளியா?நினைச்சிக்கூட பார்க்க முடியவில்லையே என்றாள். (அவள் அப்படி பேசியதில் சுயநலமும் உண்டு.ஆம் சிவகாமியின் மகளும் கரிகாலனின் மகளும் நெருங்கிய தோழிகள் போல. தோழி வராமல் தீபாவளியா?என்றுதான் அவ வருத்தம் ).

                      அதை அப்படியே அத்தை மேல் பாசம் போல கொட்டினாள்.
மனசில் வரட்டுக்கெளரவம் இருந்தாலும் மகளின் சொற்கள் அம்பாய் அவன் மனதைக் குத்தின. கரிகாலன் ‘ச்சே தப்பு பண்ணிட்டோமே’போனை எடுத்தான் , ஏதோ எண்களை டயல் செய்தான் . ஸ்கிரினில் ‘சிவகாமி’என்று காட்டியதை அவன் மகள் ஓரக்கண்ணில் பார்த்து மகிழ்ந்தாள்......அத்தை வருவாளா?

முற்றும்...