Sunday, 3 November 2013

அத்தை வருவாளா?

அத்தை வருவாளா?

(என் முதல் சிறுகதையை தீபாவளி அன்பளிப்பாக அனைவருக்கும் சமர்பிக்கின்றேன். குறையை என்னிடம் கூறுங்கள்,நிறைகளை உங்கள் நட்புகளிடம் பகிருங்கள்)

              காளியப்பன் அமராவதி குடும்பத்தில்,சிவகாமி  அனைத்து உறவுகளையும் பெற்று பிறந்தவள். ஆம் ,அவளுக்கு முன்பு அக்காள்கள்,அண்ணன்கள் ,அவளுக்கு பிறகு தங்கை தம்பி என்று எல்லா உறவுகளும் அவளுக்கு மட்டும் அந்த குடும்பத்தில் கிடைக்கப்பெற்று பிறந்தவள்.கொஞ்சம் சுட்டி ,வாய் துணுக்கு ,நியாயம் என்று வந்தாள் எப்பேர்பட்ட பெரிய இடமானாலும் சண்டைப்போடுபவள் .சிவகாமியின் தந்தை வெகு சீக்கிரமே இவ்வுலகை விட்டுப்பிரிந்தார்.

                தன் பெற்றோர்களையும் உடன் பிறப்புகளையும் யாராவது ஏதும் சொல்லிவிட்டாள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு போகும் சுபாவம் கொண்டவள் சிவகாமி.அவள் உடன்பிறப்புகளோடு எப்படியும் சண்டை செய்து கொள்வாள் ஆனால் பிறர் பேச விட்டுக்கொடுக்கமாட்டாள்.ஆயிரம் உறவுகள் இருந்தாலும் தன் உடன்பிறப்புகள் ஒருவர் இல்லாவிட்டாலும் ,அது எத்தனைப் பெரிய நிகழ்ச்சியானாலும் போகமாட்டாள்.’என் பெற்றோர்களையும் உடன்பிறப்புகளையும் மதிக்காத வீட்டுக்கு நான் ஏன் போகவேண்டும்?’என்று கோவித்துக்கொள்வாள்.அதனால் பல உறவுகளைப் பகைத்துக்கொண்டவள்.

              சிவகாமிக்கு திருமண வயது வந்தது. அவ்வளவு சீக்கிரம் எந்த வரனும் அமைந்த பாடில்லை.சிவகாமியும் அவ அம்மாவிடம் ‘முதலில் அண்ணாவுக்கு முடித்துவையுங்கள்,எனக்கு பிறகு பார்க்கலாம்’என்றாள்.காரணம் அவ அன்ணனுக்கு பார்த்த பெண்ணுக்கும் சிவகாமிக்கும் ஒத்த வயது ,அந்த பெண்ணுக்கும் வயது ஓடிக்கொண்டிருக்கே?அவளின் மூத்த அண்ணன் கரிகாலன்.

             கரிகாலனுக்கு திருமணம் ஆனது.கூட்டுக்குடும்பமாய்  வாழ்ந்துவந்த இடத்தில் பிரச்சனையைக் கொண்டு வந்து சேர்த்தாள் கரிகாலனின் மனைவி புவனா. மாமியாரை எதிர்க்க முடிந்தவளால் ,நாத்தனாரை எதிர்க்க முடியவில்லை.சிவகாமி அண்ணிக்கு கொடுத்த மரியாதையை மீண்டும் பிடுங்கிக்கொண்டாள் .ஹ்ம்ம்ம் அண்ணியோடு சண்டைப்போட்டாள். கரிகாலன் அவன் மனைவி பக்கம் பேசுவது, வழக்கமான ஒன்றுதானே!
அவன் எப்போதும் படிச்ச முட்டாள் போலவே பேசுபவன்.சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசுவான் ,பிறகு வருந்துவான்.

            ஆனாலும் சிவகாமியின் மேல் அவனுக்கு அடக்கமுடியாத கோபம் காரணம் சிவகாமி நியாயமாக பேசுபவள் , சிலவிசயங்களில் கரிகாலன் செய்யும் தவறுகளையும் சுட்டிக்காட்டினாள் சிவகாமி. சில சமயங்களில் புவனா ,’என் வயதுதான் உனக்கும் ஆனால் இன்னும் திருமணம் ஆகாமல் கிடைக்கிறாய்,இதுதான் உனக்கு சாபம் ‘என்று கூட கஷ்டப்படுத்துவாள்,ஆனால்  சிவகாமி எதற்கும் செவி சாய்க்காமல் நாட்களை ஓட்டினாள்.எது எப்படியோ தன் அண்ணன் மற்றும் அக்காள்கள் வீட்டுப்பிள்ளைகளை தன் பிள்ளைகளைப்போல பாசம் வைத்து பாவிப்பாள்.

                 அவளுக்கும் வரன் வந்து திருமணம் செய்து கொண்டு புகுந்த வீடு போனாள். அண்ணன் அண்ணியிடம் உள்ள கோபம் எல்லாம் மறந்து அடிக்கடி அம்மா வீட்டுக்கு வந்து போவாள்.காலங்கள் ஓடின .சிவகாமியும் தாயானாள்.வருடா வருடம் தீபாவளி தன் பிறந்த வீட்டில்தான் கொண்டாடுவாள். அவள் கணவனுக்கு பெற்றோர்கள் இல்லை,ஆகவே அவனும் சிவகாமியின் தாய் வீட்டிற்கே செல்ல ஆசைப்படுவான்.கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்த அவளுக்கு தனிமை என்பது ஒத்துவராத விசயம் .

                     அதுவும் பண்டிகை பெருநாட்கள் என்றால் ,சாமான் சட்டிகளைக்கட்டிக்கொண்டு அவள் தாய் வீடு அல்லது கணவனின் உடன்பிறப்பு வீடு என்று போய்விடுவாள் .வருடா வருடம் தீபாவளி மட்டும் அவள் அம்மா வீட்டில்தான் இருப்பாள்.இரண்டு நாட்கள் கழித்துதான் கணவன் அவன் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.அரேஞ்ச் மேரேஜ் என்பதால் சிவகாமிக்கும் அவள் கணவனுக்கும் அடிக்கடி ஒத்துப்போகமுடியாமல் போகும் ஆனால் சிவகாமி ரொம்பவே விட்டுக்கொடுத்து போவாள்.அது அவள் வளர்க்கப்பட்ட முறை,கூட்டுக்குடும்பத்தில் கற்றுக்கொண்ட பாடம்.

                   சமாளிக்க வேண்டியதை சமாளித்து வந்தாள். ஒருமுறை ஏதோ பிரச்சனையால் அவ கணவனோடு ஏதோ பெரிய சண்டை போட்டாள். அவள் அம்மா வீட்டில் போய் முறையிட்டாள். வழக்கம்போல அவ அம்மா ‘சின்ன சின்ன பிரச்சனைகளையெல்லாம் இங்கே கொண்டு வந்து பிரச்சாரம் பண்ணாதே, நாங்கள் எதுவும் கேட்கப்போவது இல்லை’வாழ்க்கையில் எல்லாம் சகஜம்’என்று அதை சீரியசாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

                     விசயம் அவ அண்ணன் கரிகாலனின் காதுக்கு போனது. பழைய காட்டத்தையெல்லாம் மனசில் வைத்துக்கொண்டிருந்த கரிகாலன் இதுதான் சமயம் என்று வசை பாட ஆரம்பித்தான்.எதையோ பேசப்போய் வாய் தவறி ‘ஆமாம் கல்யாணம் ஆகும் முன்னே என்னையும் என் மனைவியையும் என்னமாதிரி பேசினா? இப்போ அனுபவிக்கிறாள், நல்லா அனுபவிக்கட்டும். இது அவளுக்கு நல்ல பாடம் ,இன்னும் அழுவட்டும் ,என்று அதோடு  நிறுத்தாமல் சிவகாமியின் கணவனிடமே ‘அவளுக்கும் வாய் கொஞ்சம் அதிகம்தான்,அது எங்களுக்கு தெரியும் , நீங்கதான் கொஞ்சம் தட்டி வைக்கணும் ‘என்றும் பழையை பகையை வைத்து போட்டுக்கொடுத்தான்.ஆனால் பின் விளைவுகளை யோசிக்காமல் பேசினான் .என்னம்மோ என் மனைவி கூட வம்புக்கு வந்தாள்,இப்போ தெரியுதா? குடும்பம் என்றால் என்னவெல்லாம் பிரச்சனை வரும் ‘என்று.

                    சிவகாமியின் கணவனுக்கு இது ஒன்னு போதுமே? உன் அண்ணனே உன் வாய் அதிகம் என்று சொல்கிறார்.முடிந்தால் உன்னை ரெண்டு போட்டு அடக்கி வைக்க சொன்னார்’என்றான் .சிவகாமிக்கு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவள் நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்தது. ஏமாற்றமும் கோபமும் அவ கண்ணை மறைத்தது ,போனை எடுத்தால் ,கண்முடித்தனமாய் குறுந்தகவலை டைப் பண்ணினாள்.அதில் ‘இனி உன் வீட்டு வாசலை நான் மிதிக்கபோவதில்லை, இதுவரை என்னை வரவேற்று உபசரித்து உனக்கும் உன் மனைவிக்கும் நன்றி. அம்மாவின் மரணத்திற்கு மட்டுமே உன் வீட்டு வாசலை மிதிப்பேன்’என்று அனுப்பினாள். ஏமாற்றம்தான் அவளை அப்படி செயல்பட வைத்தது.

                    மறு கணம் கரிகாலன் ஆடிப்போனான். வருந்தினான். உடன்பிறப்புகள் அனைவரிடமும் காட்டி ‘நான் எதுக்கு சொன்னேன்,அவ இப்படி எடுத்துக்கொண்டாளே? என்ன சின்னைப்பிள்ளைத்தனம் ? இது அவள் பிறந்த வீடு, அவளை நான் வரவேண்டாம்’என்று சொன்னேனா ?என்றெல்லாம் உளறினான்.இதுவெல்லாம் அவனுக்கு வாடிக்கையான விசயம் .பேசுவதும் பிறகு வருந்துவதும் ஆகவே கரிகாலனின் மற்ற உடன்பிறப்புகளுக்கு இது பெரிய விசயமாய் படவில்லை.

                     இந்த வருடம் தீபாவளியும் நெருங்கியது , சிவகாமியின் தாய் வீட்டில் களைக் கட்டியது. ஆரவாரமாய் ஆர்ப்பாட்டமாய் எல்லாம் தயாரானது. சாயம் அடித்தல் பலகாரம் சுடுதல்.புத்தாடைகள் என்று ஆர்ப்பாட்டம். இன்னும் இரண்டே நாட்கள் , தடபுடலாய் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. விடிந்தால் தீபாவளி. குதூகலமாய் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த வேளையில் கரிகாலனின் மகள் ஆதிரை ‘அப்பா வருசா வருசம் அத்தை வருவாங்க.நம் வீடே களை கட்டும். இந்த வருசம் அத்தை வருவாங்களா அப்பா?

          ’ஆயிரம் பேர் இருந்தாலும் ,உங்களை மதிக்காத ஒரு விருந்து என்றால் அத்தை அந்த வீட்டு வாசலைக்கூட மிதிக்க மாட்டாங்க அப்பா. எது எப்படியோ உங்களை விட்டுக்கொடுக்காமல் மத்தவங்க கிட்டே பேசுவாங்க ஆனால் அவுங்கள வீட்டுக்கு அழைக்கனும் என்று தோணலையா அப்பா? அப்படி என்ன அத்தை தப்பா பேசினாங்க? நீங்கள் சொன்ன சொல்லுக்கு பதில் கொடுத்தாங்க,எனக்கு என்னம்மோ நீங்கள் செய்வது சரியாக படவில்லை அப்பா.அத்தை இல்லாத தீபாவளியா?நினைச்சிக்கூட பார்க்க முடியவில்லையே என்றாள். (அவள் அப்படி பேசியதில் சுயநலமும் உண்டு.ஆம் சிவகாமியின் மகளும் கரிகாலனின் மகளும் நெருங்கிய தோழிகள் போல. தோழி வராமல் தீபாவளியா?என்றுதான் அவ வருத்தம் ).

                      அதை அப்படியே அத்தை மேல் பாசம் போல கொட்டினாள்.
மனசில் வரட்டுக்கெளரவம் இருந்தாலும் மகளின் சொற்கள் அம்பாய் அவன் மனதைக் குத்தின. கரிகாலன் ‘ச்சே தப்பு பண்ணிட்டோமே’போனை எடுத்தான் , ஏதோ எண்களை டயல் செய்தான் . ஸ்கிரினில் ‘சிவகாமி’என்று காட்டியதை அவன் மகள் ஓரக்கண்ணில் பார்த்து மகிழ்ந்தாள்......அத்தை வருவாளா?

முற்றும்...                                

10 comments:

 1. எளிய நடையில் "அத்தை வருவாளா" சிறுகதை முயற்சி, சூப்பர்ப் டீச்சர் வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 2. வீம்பு கொண்ட அத்தை வரவே மாட்டாள்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா வீம்பு கொண்டவளா அத்தை?

   Delete
 3. மனதில் வரட்டுக்கெளரவம் இருக்கும் வரை........ அனைத்தும் சிரமம் தான்...!

  ReplyDelete
 4. விட்டுக்கொடுத்தாலே வாழ்க்கை சுவாரஸ்யம்... இல்லையென்றால் ம்ஹூம்..

  ReplyDelete
 5. சிறந்த முயற்சி & சிறப்பாக இருந்தது.முதல் முயற்சி என்பதால்,நீண்ட வசனங்கள் போலும்?ள,ள்,ல் ............மீள் பார்வைக்கு உட்படுத்தல் அவசியம்.டீச்சருக்கு மாணவர் திருத்தம் சொல்வது.................. மொத்தத்தில் உணர்வை நெருடிய சிறு கதை,வாழ்த்துக்கள்!மெருகேற்றலாம்,நன்று &நன்றி!!!

  ReplyDelete
 6. கதை அருமை..
  சில மாறுதல்கள் தேவை என்று நினைகிறேன்..

  ஒரே ஒரு சந்தேகம், "இது யாரோ ஒருவரின் உண்மை கதை" போல் உள்ளது...

  ReplyDelete
 7. பாசமும் ஏக்கமும்
  கதை முழுதும் வியாபித்திருக்கிறது...
  வருவாள் அத்தை என்றே நம்புவோம்...
  கதை நல்லா இருக்குது சகோதரி...

  ReplyDelete
 8. அழகான அருமையான கதை...
  அத்தை வருவாளா... அழைப்பார் அழைத்தால் வருவாள்...
  சின்னச் சின்ன மாற்றங்கள் தேவை...
  முதல் முயற்சிதானே.... அடுத்த கதையில் எல்லாம் சரியாகும்...
  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete