Thursday 23 April 2015

(அ)நாகரீகமா?

                நாங்கள் வளரும்போதும் சரி ,எங்களைச் சுற்றியுள்ள அண்டைவீட்டுத் தோழிகளும் சரி, அந்த காலத்தில் பெண்பிள்ளைகள் உள்ளே அணியும் ஆடைகளை ,துவைத்த பிறகும்,வெளியே உலரப்போடவிடாமல் ,வீட்டின் உள்ளேயே மறைத்து உலரச் செய்ய சொன்ன அம்மாக்கள் இருந்த இதே பூமியில்தான், உள்ளே அணிந்திருக்கும் ஆடைகளை ,வெளியே காட்டிக்கொள்ளும் பெண்பிள்ளைகளின் பழக்கத்தையும் பார்த்த்துக்கொண்டிருக்கும் அம்மாக்களை என்னச் சொல்ல?கிராம வாழ்க்கை போய்விட்டால் ,கற்றுக்கொடுக்கும் பழக்கமும்,கற்றுக்கொள்ளும் பாடமும் அப்படியே போய்விடுமா என்ன? ஆடைகுறைப்புதான் கற்பழிப்புக்கு காரணம் என சொல்லும் ரகம் அடியேன் இல்லை!இதையெல்லாம் பெற்றோர்கள் பார்த்தும் பார்க்காமல் இருக்கிறார்கள்?அல்லது கற்றுக்கொடுத்தும், கேக்காமல் திரியும் டீன் ஏஜ் பசங்களா?

               ஒரு கூட்டுக்குடும்பத்தில் கணவன் மனைவியாக ஒரு தம்பதி இருந்தால், அவர்கள் கணவன் மனைவி என்பது யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டால்தான் உண்டு.அப்படி காட்டிக்கொள்ளாமல் பண்புடன் வாழ்ந்த காலம் போய்,இப்போ காதல் செய்ய தொடங்கியவுடன் ,அனைத்து செயல்களையும் செல்ஃபி அல்லது வீடியோவில் பதிவு செய்து உலகமே பார்க்கும் வண்ணம் செய்கின்றனர்!இறுதியில் எதிர்பார்க்காத விபரீதங்களை மட்டுமே கேட்கவும் காணவும் முடிகிறது!

               இதையெல்லாம் கேட்டால்,’பத்து வயசுல போட்ட சட்டையை ,இப்ப்போ போட முடியுமான்னு 'கேட்கறாங்கள். 'மாற்றம் வரும்போது மாறிக்கொள்ளுங்கள்' என்றும் விவாதம் பண்ணுகிறார்கள்.சரிதான் பத்து வயசு போட்ட சட்டையை இப்போ போடத்தான் முடியாது ஆனால் பத்து வயசுல 'அம்மான்னு' கூப்பிட்ட அன்னையை இப்போ 'அத்தைன்னா' அழைக்கிறோம்?
      ஏன் நமக்கு வம்பு?நம்ம வீட்டில் எல்லாத்தையும்  சரியாக நடத்துவோமே!

Saturday 4 April 2015

சிற்றின்பமா?பேரின்பமா?அதுக்கும் மேல..

                            கோயில் கோபுரங்களில் நாம் காணும் சிற்பங்கள் சில நம் மனதைச் சஞ்சலப்படுத்தும் வண்ணமும்,சிலரின் மனதை நிலைக்குலையச் செய்யும் வகையிலும்  வடிவமைக்கப்பட்டிருக்கும் (எல்லோருக்கும் அல்ல)!!!.அதை அடியேன் பல தமிழ்நாட்டு கோவில் கோபுரங்களில், கண்டதுண்டு.
             குழைந்தையைப் பிரசவிப்பது  போல, ஆண்பெண் உறவு  . தாவணியோ ரவிக்கையோ போடாத சாமி சிலை என பல்வகையான சிலைகளைக் கண்டதுண்டு. அவ்வளவு ஏன் கருவறைக்குச் செல்லும்முன் அங்கே உள்ள துவார பாலகன்  சிலைகூட சிலநேரங்களில் அப்படியே காட்சிகொடுக்கும்.வெளியில் இருக்கும் வெறும் சிற்பத்தைக் கண்டு மனதை சஞ்சலப்படுத்திக்கொண்டு அப்படியே திரும்பி போகப்போகிறாயா?அல்லது அதையெல்லாம் தாண்டி ,உள்ளே கருணையே வடிவமான அன்னை இருக்கிறாள்.கேட்பதைக் கொடுப்பவள்.
             வெளியில் கண்ட  பெண் சிற்பத்தைப்போல , அவளும் பெண் தான்.ஆனால் உள்ளே அவள் வீற்றிருக்கும் விதம் , அனைத்து மும்மலங்களையும் அழித்து,உன் திருவடி போதும்,இதைவிட வேற எதை நாங்கள் கண்டு இன்புற்றிருக்கப் போகிறோம் என்ற தத்துவத்தை  கற்பிப்பது போல அமைந்திருக்கும்  !அவளைப்போய் பார் . கோபுரத்தில்  உனக்கு கிடைத்தது வெறும் சிற்றின்பம் மட்டுமே ,உள்ளே உனக்கு கிடைக்கப்போவதோ பேரின்பம்! அதைப்பற்றுவதற்குத்தான் இதயெல்லாம் நீ கடந்து போக வேண்டிகிடக்கு என்று பொருள் படும்.ஆனால் இன்றுவரை கற்றுத்தேர்ந்த பலருக்குக்கூட இது எட்டவில்லையே?அவர்களும் அதைக் கேலிக்கூத்தாகத்தானே, பேசியும் வர்ணித்தும் வருகின்றனர்?
                         நம் முன்னோர்களின் செயல் ஒவ்வொன்றிலும் ஓர் அர்த்தம் மறைந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை!திருவள்ளுவரின் குறளும் அதைத்தானே உணர்த்திச் செல்கிறது!

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

குறள் விளக்கம்
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.