Sunday 27 September 2015

என்னை ,நான் வெறுத்த நொடிகள்!



      தமிழ்நாட்டில் இருந்து வீடு திரும்பியவுடன் கொஞ்சம் பிசியாக வேலைகள் செய்துகொண்டிருந்தேன்.எப்போதும் என் வீட்டுக்கு துணிகள் விற்க வரும் பாகிஸ்தானி ,கொஞ்ச காலமாக காணவில்லை.எப்போதும் வீட்டுக்கு வந்தால் ,கலகலப்பாக பேசுவான். என் கணவருடன் ரொம்ப குளோஸ் நட்பு.உரிமையோடு அக்கா ..அக்கா என அழைப்பான்.ரொம்ப மரியாதையாக பேசுவான்.திடிரென நேற்று என் வீட்டு முன் வந்து நின்றான்.’அக்கா ..அக்கா ‘என்றான்.நானும் வேலை பிசியால் உள்ளே இருந்துகொண்டு ’ஏன் என்ன விசயம் ?எனக்கு துணி எதுவும் வேண்டாம் ‘என்றேன்.அவனோ ’இல்லைக்கா உன்னைப்பார்க்கவேண்டும் ‘என்றான்.
       எட்டிப்பார்த்தேன்,கையில் துணி மூட்டைகள் எதுவுமில்லை.நான் ஏதும் காசு கொடுக்க வேண்டியிருக்கா?இருக்காதே..நான் துணிகள் வாங்கி ரொம்ப நாளாச்சே,ஏன் என்னைப் பார்க்கவேண்டும்? இப்படி யோசித்துக்கொண்டே ,’என்ன விசயம் நான் வேலையாக இருக்கேன்’ இன்னொரு நாளைக்கு வா ‘என கூறிகொண்டே வெளியே போனேன்.அவன் முகத்தில் மிகுந்த சோகம்.’அக்கா அன்னைக்கு வந்தேன்,உன் கணவர் நீ தமிழ்நாட்டுக்குப் போயிட்டேன்னு சொன்னார்.மீண்டும் இந்த தேதியில் வருவேன்னு சொன்னார் ,அதான் அக்கா வந்தேன்’என்றான்.
     ’எனக்கு துணி ஒன்னும் வேணாம்.நான் தமிழ்நாட்டில் எல்லா சாப்பிங்கும் செய்துட்டேன் ‘என்றேன்.’இல்லைக்கா நான் அதுக்கு வரவில்லை,அக்கா நானும் ஊருக்குப் போனேன்.என் அப்பா இறந்துபோயிட்டார் அக்கா.என்னால் இங்கே இருக்கமுடியவில்லை.நான் கிளம்பி போயிட்டேன்.நான் போவதுக்குள் காரியம் எல்லாம் முடிஞ்சது.ஒரு மாசம் இருந்துட்டேன்.இப்போதான் வந்தேன்.வந்து என்னால் இங்கே இருக்கவேமுடியவில்லைக்கா, ரொம்ப சோகமாக இருக்கு.என் கவலைகளை யாரிடமாவது சொல்லி அழனும் போல இருந்துச்சு.அதான் உன்னைத் தேடி வந்தேன்கா,நீயும் ஊருக்குப் போய் விட்டதாக உன் கணவர் சொன்னார்.அதான் மீண்டும் உன்னைப் பார்த்து சொல்லிவிட்டுப் போகலாம் என வந்தேன்’என்று கண்ணீர் மல்க கூறினார்.
      ஐயோ குடும்பத்தை விட்டு வந்து ,இப்படிப்பட்ட சோகம் எப்படி வாட்டும் என நமக்கும் தெரியுமே!’ச்சே ..ச்சே வருத்தப்படாதே, உள்ளே வா காப்பி ,டீ கலந்து கொடுக்கிறேன்..கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போ ’என்றேன்.(அவன் அப்பா இறந்த செய்தியை விட மோசமான துன்பம் நான் போடும் காப்பி என நினைத்தானோ ???என்னவோ.) ரொம்ப பிடிவாதமாய் ‘எதுவும் வேண்டாம் அக்கா,நான் இன்னும் சில நாட்கள் கழிச்சி வாரேன்.உன்னிடம் சொல்ல வேண்டும் என மனசு சொன்னதால்தான் உன்னைத் தேடி வந்தேன் அக்கா. போயிட்டு வாரேன் ‘என விடைபெற்றான்.
       எந்த மனநிலையில் யார் வருகிறார்கள் என்று கூட புரிந்துகொள்ளாமல் கொஞ்சம் நேரம் அவனை உதாசினப்படுத்திவிட்டதை நினைத்து ரொம்ப வருந்தினேன்...வெட்கப்பட்டேன்.......இன்னமும்!