Wednesday, 30 October 2013

அசுரர்களும் வதங்களும்!

                           பொதுவாக நம் இந்துக்களின் பண்டிகை மற்றும் பெருநாட்கள் அனைத்திலும் ஏதாவது ஓர் அசுரனைக் கொல்லும் விழா இருக்கும்!நவராத்திரியில் மஹிசாசுரன் வதம், கந்த சஷ்டியில் சூரனை சம்ஹாரம் செய்யும் படலம் ,தீபாவளியில் நரகாசுரன் வதம், விநாயக சதுர்த்தியில் கஜாமுக அசுரன் வதம் என்று இன்னும் பல உண்டு!
                                                             
      அசுரன் என்பவன் மனிதன் தான் ,அவனைக்கொன்று அது ஒரு விழாவா?என்று ஒரு சாரார் கேட்கும் கேள்விகளுக்கு என்ன சொல்லலாம் ? தீய குணங்களான அசுர குணத்தை, நம் உள்ளத்தில் இருந்து அழித்தால், நீக்கினால் ,அந்த தினம் யாவுமே நமக்கு திருநாள் ,பெருநாள் ,பண்டிகை நாள் என்பதுதான் அவைகளின் நீதி!

            தீபாவளிக்கு பட்பல கதைகள் உண்டு.தாமோதரனை அன்னை யசோதா கயிற்றில் கட்டிய நாள், இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாள், கண்ணன் நரகாசுரனை கொன்ற நாள் என்று இன்னும் எத்தனையோ புராணங்கள் சொல்வதுண்டு.எது எப்படியோ இருள் நீங்கி,தீமைகள் விலகி, அசுர குணம் கொண்ட உள்ளத்தை தெளிய வைக்கும் திருநாள்தான் தீப ஒளி திருநாள். பட்டாசு கொளுத்தும் பழக்கம் சீனர்களிடம் இருந்து நாங்கள்(மலேசியாவில்)’காப்பி பேஸ்ட்’ பண்ணிக்கொண்டோம்!அதுதான் உண்மை,அதுக்கும் விளக்கம் கேட்டால்,பின்னே எங்கே போவது?      


            ஒன்பது நாட்கள், ஊசி முனையில் அம்பாள் தவம் இருந்து பலம் பெற்று மகிசாசுரனை வதம் செய்ய புறப்படுகிறாள் என்று கதையாக சொன்னால், அந்த காலத்தில் பயபக்தியாக அம்பாளை விரதமிருந்து வழிபடுவார்கள்.அந்த ஒன்பது நாட்கள் பெண்கள், பெண் தெய்வமான அம்பாளை வழிபட ஒரு ஐடியா. பெண்குலத்தை மதிக்கவும் மரியாதை செய்யவும் அந்த கதை சொல்லப்பட்டிருக்கலாம்.சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல பெண் பொங்கி எழுந்தால் அவளுக்கும் கோபம் வரும் ,அசுரனையே வெல்லும் பலமும் வரும்,வரலாம் என்பதுக்காக ஓர் உதாரணம்!அதுக்காக பெண்களெல்லாம் ஊசி மேல் உட்கார்ந்து தவம் செய்ய முடியுமா? லாஜிக் இருக்கா?
                                                                 

        ராமாயணத்தில் பத்து தலை இராவணன் வருவான். அவனை இராமன் வதம் செய்வதாக புராணம்!பத்து தலை உள்ள மனிதனுக்கு சளிப்பிடித்தால் ,அவன் முகத்தில் உள்ள பத்து மூக்குகளையும் ஒரே நேரத்தில் எப்படி ‘கர்சீப்’கொண்டு துடைப்பான் ?’என்று  யாரோ ஓர் அறிஞர் கிண்டலாய் கேட்டதாக எங்கோ படித்த ஞாபகம்! பத்து தலை என்பதை பத்து தீய குணங்களாக வர்ணிக்கின்றனர் . அதை வென்று வெற்றியடைகிறான் இராமன்.அதுமட்டுமின்றி (சில)தவிர்க்க முடியாதபிரச்சனைக் களைய உற்றார் உறவுகள் ,உடன்பிறப்புகள் நட்புகள் அனைவரும் அவசியம் என்பதை உணர்த்தவே  இலட்சுமணன்,சுக்ரீவன் ,ஜடாயு,வாலி, மற்றும் குகன் போன்ற பாத்திரங்கள்.அனைத்தையும் நம்ப வேண்டாம் ,வேண்டிய விசயங்களை எடுத்துக்கொள்வோமே!
                                                                 
             கந்த சஷ்டி ஆறு நாட்கள் விரதம்.ஆறாவது நாள் சூரனை வதம் செய்ய முருகன் புறப்படுகிறார் என்பது புராணம். ’சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்’ என்பது சஷ்டி எனும் நாளில் விரதம் இருப்பது,இடைவிடாது இறைவனை தியானிப்பது போன்றவை  அகம் என்னும் உள்ளத்தில்(பையில்) நன்மைகளைக் கொண்டு வரும் என்பதனை  விளக்குவதை நாம் அறிவோம்! எப்படி இந்த பழமொழி மாறிவிட்டதோ,அதுபோலத்தான் புராணங்கள் சொல்லும் உட்கருத்து அல்லது நீதியும் தற்போது மாறி வருகின்றன!
                                                     

                    கஜாமுக அசுரனை அழிக்க ‘ஓம்’என்ற பிரணவ மந்திரத்தில் இருந்து உருவான விநாகயபெருமான், அதே முகம் கொண்டு உருவெடுக்கிறார். அசுரனை அழிக்க தன் தந்தத்தை உடைக்கிறார்(மஹாபாரதம் வியாசர் கூற ,விநாயகர் எழுத தன் தந்தத்தை உடைத்த கதையும் சொல்லக்கேட்டுள்ளேன்). அசுரன் சினிமாவில் வரும் வில்லனைப்போல உடனடியாக மாறி ,உன் காலடியில் ‘எலியாக’கிடக்கிறேன்’என்று சொல்வதாக விநாயக சதூர்த்திக்கு ஒரு புராணம் உண்டு. என்னை அழிக்க கூடியவன் மனிதனாக இருக்ககூடாது ,மிருகமாக இருக்ககூடாது,என்னைப்போல அசுரனாக இருக்ககூடாது’என்று சிவபெருமானிடம் அசுரன் தவம் கேட்கிறான்.கொடுத்த சிவபெருமான் , முழிக்கிறாராம்??(பரம்பொருளுக்கே சோதனையா/) உடனே விநாயகர் இப்படி உருவெடுக்கிறார்,அதாவது முகம் மிருகமாக, உடல் அசுரனைப்போல, கால்கள் மனிதனைப்போல (மனிதன் பாதி ,மிருகம் பாதி கலந்து செய்த கலவைப்போல)!                                                 

                 பண்டிகைகள் என்பது நாம் இறைவனை வழிபடவும் ,உறவுகளோடு கூடி இருக்கவே என்பதைத்தான் உணர்த்திச் செல்கிறதே ஒழிய, அசுரன் இறந்ததை ஒரு பெருநாளாக ,மகிழ்ச்சியாக கொண்டாடுகிறீர்களா?என்ற கேள்விகளெல்லாம் வீண் விதண்டாவாதம்?
                                                            

              வேற்று மதத்தைச் சார்ந்த என் தோழி ஒருமுறை என்னிடம்’உங்கள் (சைவ சமயத்தில்) 365 நாட்களும் பண்டிகையா?அந்த ராத்தி ,இந்த ராத்திரி,அந்த பூசம் ,இந்த நட்சத்திரம் ‘என்று கிண்டலாய்ச் சொன்னாள்.(பாவம் விசயம் புரியாதவள்? )விளக்குவது நம் கடமை!நாம் கற்றைதைச் சொல்வோமே,என்று சொன்னேன். ‘கண்டதையும் தின்பதுவும் ,வெந்ததையெல்லாம் தின்பதுவும் என்றில்லாமல் ‘ஒரு சில விதிமுறைகளை வரையறுத்து ,குறிப்பிட்ட காலத்தில் இப்படி செய்ய வேண்டும் .மேலும்  ஒவ்வொரு நாளும் இறைவனை நினைக்கவும் பிரார்த்திக்கவும்தான் இத்தனை விழாக்கள்,பண்டிகைகள்’என்றேன்.மன்னிப்புக் கேட்டாள். மன்னித்தேன்.மறந்தேன்! 

**உண்மையில் இப்படி ஒரு பதிவை எழுதவேண்டும் என்று நினைக்கவே இல்லை.நண்பரின் முகநூலில் ‘நரகாசுரன் தமிழன்,ஆகவே அவனை அழித்த தினமாக தீபாவளியை வடநாட்டினர் கொண்டாடுவதாக படித்தேன்.உடனே எழுதினேன்.இதனால் பல இலக்கியவாதிகளும் புரட்சியாளர்களும் ‘உங்களுக்கு புராணம் ,இதிகாசமெல்லாம்’என்ன தெரியும் ,ஏது தெரியும்?என்று சண்டைக்கு வரப்போகிறார்கள்.     

          என் அறிவுக்கு எட்டிய ஒரு சில விசயங்களைப் பகிர்ந்துள்ளேன். என் மாணவ செல்வங்களுக்கும் இதைத்தான் ஓவ்வொரு விழா கொண்டாடும்வேளையில் கதையாக கூறி இறுதியில் உட்கருத்தை புகுத்துவோம்.ஆகவே விசயம் தெரிந்தவர்கள் அமைதி காக்கலாம்,தெரியாதவர்கள் உட்கருத்துக்களையும் ,விசயங்களையும் பிறரோடு பகிரலாமே? எதோ ரொம்ப 'அறிவாளித்தனமாய்' எழுதியதாக கருதவேண்டாம் நட்புக்களே!

Tuesday, 29 October 2013

ஏழையின் தீபாவளி !


அந்த ஒருநாள் மட்டுமே...

வீட்டின் சமையலறையில்,
கோழிக்கறி,
ஆட்டுக்கறி,
அவித்த முட்டை,

(அ.ஒ.நா)
சீடை ,முறுக்கு,அதிரசம்,
என்றுமே இல்லாத இனிப்புகள்,

(அ.ஒ.நா)
சண்டைப்போடும் அப்பா உறவினர்
வீட்டுக்கு வந்து போவது,

(அ.ஒ.நா)
பக்கத்துவீட்டு பங்களா வீட்டில்
கொடுக்கும் ‘கொஞ்சம்’நல்ல உடைகள்,

(அ.ஒ.நா)
முன் வீட்டு எஜமானியம்மா
கொடுக்கும் இட்லியும் இடியாப்பமும்,

(அ.ஒ.நா)
காலை உணவாக
அம்மா சுடும் தோசை,
மட்டன் குழம்பு,

(அ.ஒ.நா)
பணக்கார்கள் கொடுக்க முன்வருவது,
ஏழைகள் பலர் கண்ணில் படுவதுவும்

(அ.ஒ.நா)
எங்களுக்கு காசு கிடைப்பதுவும்,
திண்பண்டங்கள் திகட்டிப்போவதும்,


(அ.ஒ.நா)
பணக்காரன் வீட்டில்,
பாத்திரம் கழுவும் தொழிலுக்கு
அம்மா விடுமுறைப்போட்டு
வீட்டில் இருப்பது,

(அ.ஒ.நா)
முரட்டு மாமா வீட்டில்
டிவி பார்க்க அனுமதி கொடுப்பது,

(அ.ஒ.நா)
அம்மாவுக்கு கோபம் தராத,
அப்பாவின் குடிபோதை

(அ.ஒ.நா)
ஷோ கேசில் இருக்கும்,
கண்ணாடி பாத்திரத்தில்
சாப்பாடு கிடைக்கும்,

(அ.ஒ.நா)
வீட்டில் எவ்வளவு  வேலைக்கொடுத்தாலும்
எங்களுக்கு சலிப்பே வராது,

(அ.ஒ.நா)
யாரும் சொல்லாமல்
நாங்கள் வேலையைச் செய்வோம்!
...................................................................................................................................................................
                                       அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..
                                                                                                                                                                 Sunday, 20 October 2013

திருச்சியை நோக்கி எங்கள் பயணம்!

             கடந்த மாதம் திடிரென ஓர் அழைப்பு.மறுமுனையில் என் அக்கா ‘ஹலோ அடுத்த மாதம் திருச்சிக்கு ஃப்ரி டிக்கெட் இருக்கு,மாமாவுக்கு ஆஃப்பர் கிடச்சிருக்கு, மிக குறைந்த சீட்கள் மட்டுமே உண்டு ,சீக்கிரம் சொல் வருகிறாயா? சீக்கிரம் ,சீக்கிரம் , தாமதம் ஆனால் வேற ஆள் போட்டிருவாங்க ‘என்று அவசரப்படுத்தினார்கள் கணவன் மனைவி சகிதம்.’சரி இரு தேதி பார்க்கனும் ‘என்று முடிப்பதற்குள் ‘ஐயோ ஹாஜ் பெருநாள் லீவுலதான்.வெள்ளிக்கிழமைப்போய் அடுத்த பொதுவிடுமுறையில் வரவேண்டியதுதான்’என்று டிடெய்லுடன் என் சம்மதத்துக்கு ஆளாய்ப்பறந்தனர்.’சரி அப்படின்னா போடு’என்றேன்.மறுபடியும் போன் ‘பத்து பேருக்கு கிடைச்ச வாய்ப்பில் ஐந்து பேர் மட்டுமே நுழைய முடிந்தது,நல்லவேளை நீ உடனே ஓகே சொன்னாய்’ என்றார் அக்கா.                                                                                                  கையில் பணம் இருக்கா?என்று கூட யோசிக்கவில்லை,ஆனால் ஓகே சொல்லியாச்சே?என்று கொஞ்சம் தயங்கினேன்.ஆனாலும் மனதில் ஒரு ஆறுதல் இருந்தது அதாவது தமிழ்நாடு போகனும் என்றால் நேரமும் பணமும் எப்படியும் கிடைக்கும். கிடைத்தது !.எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே கணவர்  பணம் கொடுத்தார்.நான் திட்டமிட்ட பணத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு மற்றவற்றை வங்கியில் போட்டுவிட்டு கிளம்பினேன்.11/10/13 வெள்ளிக்கிழமை மாலை மணி 4 க்கு விமானத்தில் இருக்கனும். காலையில் ஆரவாரமாய் பள்ளியில் சரஸ்வதி பூஜை செய்துவிட்டு ,ஆர்ப்பாட்டமாய் மதியம் 12 மணிக்கெல்லாம் அம்மா, அக்காள்கள் ,அண்ணி ,மாமா என்று ஆறு பேர் வி.நிலையம் சென்றடைந்தோம்.
                                                                                       
              எல்லோர் லக்கேஜ்களிலும் ஏதோ ஓர் அடையாளமாக ரிப்பன் எல்லாம் கட்டியிருந்தார்கள் ,என் லக்கேஜ்ஜில் மட்டும் இல்லை.மாமா ‘எப்படி உன் லக்கேஜ்ஜை கண்டு பிடிப்பாய் ?என்றார்.பின்னால் திருப்பி லக்கேஜ்ஜின் கீழே லேசாய் கிழிந்தும் ,மேலும் நான்கு டயர்களில் இரண்டு காணாமற்போயிருக்கு’அதுதான் அடையாளம் என்றேன். நாயகன் பட டியூனில் எல்லோரும் பரிதாபப்படுவார்கள் என்று நினைத்தது என் தவறுதான்/எல்லோரும் கோரசாக ‘ஆனை வாங்க காசு இருக்காம் ,சவுக்கு வாங்க காசு இல்லை,வருசா வருசம் ஊர் சுத்த கிளம்புகிறாய் ,ஆனால் ஒரு லக்கேஜ் வாங்க முடியாது’இப்படியெல்லாம் சொல்லி சிம்பதி கிரியேட் பண்ணாதே?என்று கிண்டலாய் அண்ணி சொல்ல,எனக்கு கோபமே வரலையாம்!அதானே உண்மை!                                                                          
                                                                                           


              சுமார் ஏழெட்டு முறை தமிழ்நாடு போய்விட்டதால் அப்படி ஒரு பதற்றமும் இல்லை.எல்லா பரிசோதனைக்கூடங்களிலும் முன்னேறி போய் ‘duty free' கடையில் வழக்கம் போல் நல்ல மணம் உள்ள பெர்ஃபியூம்களை ஓசியில் டெஸ்டிங் என்ற பெயரில் தடவிக்கொண்டோம் ஆனால் வாங்கவில்லை!அம்புட்டு விலைப்போட்டால்? “நான்சென்ஸ் ஃபெல்லாவ்ஸ்”.அப்படி இப்படி என்று  மாலை மணி மூன்று முப்பதுக்கு விமானத்தின் உள்ளே நுழைந்தோம்.மணி 4.30 ஆகியது ,விமானம் கிளம்பவில்லை.வழக்கம் போல்,எப்போதும்போல், as usual விமானம் தாமதம்!ஹ்ம்ம் தமிழர்கள் கூடி இருக்கும் இடம் என்றால் தாமதமும் ஒட்டிக்கொள்ளுமோ?விமானியும் தன் திறமையால் ‘பயணிகளே என்ன கோளாறோ தெரியவில்லை ,ஐந்து நிமிடம் ஆகலாம் ,அரை மணி நேரம் ஆகலாம் ‘என்று கூறி கூறி வெற்றிகரமாய் ஒருமணி நேரம் ஆனது.(ஆனால் ஓர் உண்மை, நான் சென்ற ஏர் ஆசியா  இதுவே  முதன்முறையாக தாமதமாக கிளம்பியது )
                                                                                                 


                அன்னை திரேசா ஒருமுறை விமானம் தாமதமாக கிளம்பும் ‘என்று கேள்விப்பட்டதும் ‘சரி காலையில் நான் ஜெபம் செய்யவில்லை,இந்த நேரத்தைப் பயன்படுத்தி தியானம் செய்கிறேன் ,நான் அந்த தாமதமான காரணத்துக்கு நன்றி  சொல்லனும்’என்று சொன்னதுபோல நாமும்  பெருந்தன்மையாய்  நடந்துகொள்ள முடியுமா?அதுக்கெல்லாம் ஒரு தகுதி இருக்கனுமே?சரி வழக்கம் போல என் ஹாபியாக ,  மொபைலில் பாடல்கள் கேட்க தொடங்கினேன்.பயணத்தில் நான் அதிகம் வெறுக்கும் பயணம் விமானப் பயணமே!ஆமாம் கார் ,பேருந்து என்றால் கொஞ்சம் வெளியே போய் இளைப்பாறி வரலாம்,இங்கே முடியுமா?அவசரத்தில் போனதால் புத்தகங்களும் எடுத்துப்போகவில்லை.    
                                                                             


                      ’சரி நம் பக்கத்தில் ஓர் இந்தியர் இருக்கிறார்,ஆள் பார்த்தால் நல்லா டிப்டாப்பாக இருந்தார்,ஏதும் புத்தகம் இருந்தால் வெட்கத்தை  விட்டு கேட்கலாம்’ என்ற முடிவில் இருந்தேன். ஆனால் அதிர்ச்சியை மட்டுமே கொடுத்தார்.வேற என்ன? ஓர் ஆங்கில புத்தகம் ,அதுவும் என்ன தலைப்புன்னு கூட புரியாத புத்தகத்தை திறந்து ரொம்ப ஆர்வமாய் படிக்க தொடங்கினார். நமக்கு ஒத்து வராத டிபார்ட்மெண்ட் என்று முகத்தை அந்தப்பக்கம் திருப்பிக்கொண்டேன்.பின்னால் அக்காள் ,அண்ணி ,அம்மா எல்லோரும் உறங்கினார்கள் ,ஐயோ எனக்கு அதிகம் கோபம் வரும் விசயம் என்னோடு பயணிப்பவர்கள் உறங்குவது?காரணம் என்னால் எந்த வண்டியில் பயணம் செய்தாலும் பத்து நிமிடத்துக்கு மேல் உறங்கவே முடியாது?என்ன சாபமோ? 
                                                                                           


          சரி மீண்டும் பக்கத்து ஆங்கில புத்தக ஓனர் ,ஏதோ பை பிரிக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். ஆஹா ,ஏதோ பிஸ்கட் பொட்டலம் ,’அப்பாடா கண்டிப்பாக நம்மிடம் ’வேண்டுமா?என்று கேட்பார் போல என்று நானே கற்பனைப் பண்ணிக்கொண்டு கண்டும் காணாதது போல திரும்பி கொண்டேன்!அட தெய்வமே!மனுசன் பொட்டலத்தைப் பிரிச்சி சில நிமிடங்களில் சாப்பிட்டு விட்டு குப்பையையும் வீசினார்.’இன்றைக்கு நான் எது மூஞ்சியில முழிச்சேனோ? அவசர அவசரமாய் வந்ததால் எதுவும் வாங்கவில்லை, எதுவும் எடுத்தும் போகவில்லை சோ என் வேகம் எனக்கு  சோகம்!                                                                                            


            பணம் எல்லாம் மாமாவிடம் கொடுத்து வைத்திருந்ததால் ,அவரை தொந்தரவு பண்ண வேண்டாம்’என்று அமைதியாய் இருந்தேன்.கொஞ்ச நேரம் கழித்து பின்னால் திரும்பி அக்காளையும் அண்ணியையும் எழுப்பிவிட்டேன்.இன்னும் அரைமணி நேரம் எழுந்திருங்கள் ‘என்று . சில நிமிடங்களில் விமானியின் குரல் ‘பயணிகளே இன்னும் பத்து நிமிடங்களில் நாம் தரையிறங்க உள்ளோம்....திருச்சி உள்ளூர் நேரம் , விமானம் எத்தனை கிலோமீட்டர் தொலைவில்’என்ற தகவல்களுடன்.’அப்பாடா! ,எல்லோர் முகத்திலும் ஒரு புத்துணர்ச்சி. அருகில் இருந்த ஆங்கில ஓனர் மெதுவாய் சிரித்தார்.
‘பயணிகளே வெற்றிகரமாய் தரையிறங்கினோம்,மீண்டும் ஒருமணி நேரம் தாமதத்துக்கு...’என்று இழுத்தார்.’அடடா ஏதும் கொடுப்பாங்களோ?என்று எதிர்பார்த்தால் ‘மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
                                                                                          

            எது எப்படியோ நல்லபடியா கொண்டு வந்த சேர்ந்த புண்ணியவானுக்கும் இறைவனுக்கும்  நன்றி சொல்லி இறங்கினோம். விமான நிலையத்தில் நம்மை வரவேற்க டிரைவர் காத்திருப்பார் என்று எதிர்பார்த்து போன இடத்திலும் ஏமாற்றம் .தம்பி கொஞ்சம் தாமதமாய் வந்தார்.அந்த இடைவேளையில் அங்கே நடந்துகொண்டிருந்து சில கூத்துகளையும் கொடுமைகளையும் கொடூர பசியிலும்  ரசிக்க முடிந்தது.டெம்போ வந்தது. ’வண்டியை முதலில் சங்கீதா ஹோட்டலுக்கு விடுங்க,சாப்பிடனும்’மாமாவின் கட்டளை!
               இவ்வேளையில் எங்கள் ஊர் ஏர் ஆசியாவுக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கோம்.ஒருக்காலம் தமிழ்நாடு போவதென்றால் மிகவும் அரிது.உண்மையிலே வசதி படைத்தவர்கள் மட்டுமே போக முடியும் அல்லது அவசர தேவை என்று வந்தால் கடன் பட்டுதான் போக முடியும் ஆனால் தற்பொழுது என்னைப்போன்ற நடுத்தர வருமானம் பெறும் அனைவராலும் பயணிக்க முடிகிறதே.நன்றி திரு.டோனி ஃபெர்னாண்டாஸ் அவர்களே!.
                                                                                                     

 

Friday, 18 October 2013

’ஒரு பால்’

          (திருச்சியில் ஷாப்பிங் செய்த போது நான் கண்ட ஒவ்வொரு ஜீவன்களைப் பற்றிய பாடல்தான் இது)

       பிறர் மெய்ச்சிக்கொள்ள உடுத்திக்கொண்டு  ஷாப்பிங் செய்யும் மனைவிகள் ஒருபால்....!

       பணமே இல்லாமல் கடன் வாங்கி மகிழ்ச்சியாய் ஷாப்பிங் செய்யும் மனைவிகள் ஒரு பால்..!
.
       ஆபிசில் வாங்கிய கடனை எப்படி கொடுப்பேன்?என்று யோசித்தவாறு மனமின்றி ஷாப்பிங் வந்த கணவர்கள் ஒருபால்...!

      ’என் அம்மாவுக்கும் ,அவ அம்மாவுக்கு எடுப்பதுபோலவே எடுப்பாளா?என்ற கனவில் கணவர்கள் ஒருபால்.....!

       கணவரின் பணம் இல்லாமல் நிம்மதியாய் அவ பணத்துல ஷாப்பிங் செய்யும் வேலைக்குப்போகும் மனைவிகள் ஒருப்பால்....!

        கொடுத்த பணத்தில் எவ்வளவு சேமிக்கலாம் என்று திட்டம் போட்டு வாங்கும் பெண்கள் ஒருபால்..!

       ‘இம்முறையாவது எனக்கு தரமாக எடுப்பாளா ?மருமகள் என்ற எதிர்பார்ப்பில் மாமியார்கள் ஒருபால்...!

        கூட்டத்தில் அல்ப்ப சுகத்துக்கு  முட்டி மோதி களிகொள்ளும் இளைஞர்கள் ஒருபால்..!

         எப்படியும் அவன் இங்கே வருவான் என்று  கூட்டத்தில் அலைபாயும் கண்களுடன் யுவதிகள் ஒருபால்...!

          அக்காள்  அணிந்து நொந்து போன செருப்பை தங்கை அணிந்து சிரத்தையுடன் நடந்துபோன சிறுமிகள் ஒருபால்..!

          நொந்துபோன செருப்பும் ,அளவில் பெரிய அக்காவின் செருப்பு கொடுக்கும் வலியை தாங்கிகொண்டு நடந்துபோன சிறுமிகள் ஒருபால்...!

          வலியை வெளியே சொன்னாள் ஷாப்பிங் வாய்ப்பு கிடைக்காமல் போயிடும் என்ற பயத்தில் நொந்துபோன பாப்பாக்கள் ஒருபால்...!

          பெத்தவங்க சிரமம் தெரியாமல் பிச்சிபுடுங்கி பிடிவாதமாய் உடைகள் வாங்கும் வாண்டுகள் ஒருபால்...!

          வீட்டின் சிரமம் புரிந்து ‘வேண்டாம் அம்மா ,வேண்டாம் அக்கா’என்று அடக்கமாய் நடந்துகொள்ளும் பசங்க ஒருபால்....!

         அந்த நெருக்கடியிலும் கைக்குழந்தைகளை ஏந்திக்கொண்டு அயராமல் அலைமோதும் தாய்மார்கள் ஒருபால்..!

         ’அவள் எப்படியும் சமாளித்து வாங்கிடுவா ,நமக்கென்ன என்று டாஸ்மாக்கை நோக்கி ஓடும் ஆண்கள் ஒருபால்....!

          நமக்கு நெனச்சமாதிரி வாங்கி வருவாங்களா?என்ற எதிர்பார்ப்பில்  தங்கை தம்பிகளைப் பொறுப்பாக  கடை வாசலில் காவல் காக்கும் உடன்பிறப்புகள் ஒருபால்....!

          கூட்டத்தையும் பண்டிகையையும்  தன் வசம் கொண்டு சம்பாதிக்க நினைக்கும் சில அதிகாரிகள் ஒருபால்..!

           எது நடந்தாலும் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் வியாபாரிகள் ஒரு பால்....

          ஏழை வியாபாரிகளிடம் கூட அதிகாரத்தை பாவித்து பணம் பிடுங்கும் சில கல்நெஞ்சுக்கார .....ஒரு பால்....!

           எங்களுக்கே இடம் இல்லை ,இதுங்க வேற ?என்று எங்களை திட்டியும் முறைக்கும் மக்கள் ஒரு பால்...!

            அங்கே உள்ள மக்கள் கூட்டம் போதவில்லை என்று வெளியூரில் இருந்து அங்கே போய் ஷாப்பிங் செய்யும் எங்களைப் போன்ற பிசிபாடிகள் ஒருபால்....!

**என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமானே ,அடுத்த வருசமும் தமிழ்நாட்டுக்கு ஷாப்பிங் போக எமக்கு அருள் கிட்டுவாயாக!

(மனதில் தோன்றியதை கிறுக்கியுள்ளேன் ,யாரையும் புண் படுத்தும் நோக்கில் அல்ல நட்புக்களே)

Sunday, 6 October 2013

ச.கி.உ

                நீங்கள் நினைக்கும் அளவுக்கு இது  ஏதோ கட்சியின் பெயர் அல்ல! நமக்கு, சமயத்தில் கிடைத்த உதவியைத்தான் இப்படி சுருக்கி எழுதியுள்ளேன்.பல இக்கட்டான சூழலில் நாம் உழன்று அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது ,அந்த நேரத்தில் நமக்கு கிடைத்த உதவிகளைத்தான் இங்கே திரும்பி பார்க்கப்போகிறேன்!

                ஒருமுறை நான் ,இடுப்பு வலியால் அவதிப்பட்டபோது ,மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க சொல்லி அனுப்பினர்.எனக்கு புது அனுபவம் .உடன் யாரும் வரவும் இல்லை, நான் எக்ஸ்ரே எடுக்கச் சென்றபோது ,ரிம60 வெள்ளி கட்டணம் செலுத்திய பிறகு ரசீதைக்கொண்டு வந்தால்தான் எக்ஸ்ரே எடுப்போம் என்று அங்கே தெரிவித்தனர்.என் கையில் ஐந்தே வெள்ளிதான் இருந்தது.

         ‘சரி நான் போயிட்டு இன்னொரு நாளைக்கு’வருகிறேன் என்றேன்.’உன் விருப்பம் ஆனால் அப்பாய்ண்மெண்ட் கிடைக்க தாமதம் ஆகும்’என்றனர்.’இல்லை என்னிடம் பணம் இல்லை’என்றேன்.’ஓ !இதுதான் உன் பிரச்சனையா? கீழே ஓர் அறையில் போய் உன் பிரச்சனையைச் சொல் ,பிறகு அவர்கள் என்ன சொல்கிறார்கள்’என்று வந்து சொல்’என்று அனுப்பினர்.

                   நானும் தயங்கி தயங்கிப் போய் நின்றேன்.உள்ளே வரிசையில் நிறைய பேர்.பேசிக்கொண்டிருக்கும் அதிகாரி ஒரு தமிழர்.’ஐயோ !தமிழர் கிட்ட பணம் இல்லை’என எப்படி சொல்வது?’ என்று யோசித்துக்கொண்டிருந்த வேளை என் பெயரை அழைத்தனர்.’என்னம்மா உன் பிரச்சனை?என்றார்.’சார் நான் எக்ஸ்ரே எடுக்க வந்தேன் ,பணம் போதவில்லை,அடுத்தமுறை வருகிறேன்’என்றேன்.

             அவர் ஏற இறங்கப்பார்த்தார்.பிறகு நான் கொண்டுபோன கடிதத்தில் ஏதோ எழுதி கையெழுத்திட்டார்.எனக்கு ஒன்னுமே புரியவில்லை.ஆனால் ஏதோ ஒரு சொல்யூசன் செய்துவிட்டார் என்றே தோணியது. அவசர அவசரமாக (எக்ஸ்ரே அறையை அடைக்கும்முன்)ஓடிப்போய் அங்கே உள்ள ஸ்டாஃப் கையில் கொடுத்தேன்.அங்கே இருந்த இருவருமே என்னிடம் ‘அவர் உன் உறவினரா?’என்று கேட்டனர்.எனக்கு புரியவில்லை,’ஏன் இல்லையே ?என்றேன்.’இல்லை உன் முழுப்பணத்தையும் அவரே செலுத்தி கையொப்பம் இட்டு விட்டார்.இனி நீ பணம் செலுத்த தேவையில்லை!என்றனர். 

         ஆ!எனக்கு ஒன்னுமே புரியவில்லை ஆனாலும் அந்த ஸ்டாஃப் இருவரும் தமிழச்சி என்பதால் கிடைத்த முழு உதவி என்று கிசுகிசுத்தது என் காதில் விழுந்தது. யார் என்றே தெரியாமல் அவர் செய்த அந்த உதவி என்னால் இன்று வரை மறக்கவே முடியாது.அது ஒன்றும் பெரிய தொகை இல்லைதான் ஆனால் என்னைப்போல நாலைந்து பேருக்கு செய்தாலே அவர் சம்பளம் போய்விடுமே!

              ***சரி நட்புகளே ,என்னைப்போலவே உங்களுக்கும் ச.கி.உ அனுபவத்தைத்  தொடரலாமே. உதவ மனமில்லாமல் இருப்பவர்கள் உதவி செய்ய ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும் அல்லது அவர்கள் என்றோ செய்த உதவியை இன்று நீங்கள் பகிர்வதால் அது அவர்கள் கண்ணில் படலாம் அல்லது காதில் போய்ச் சேரட்டுமே!
                     என் பதிவுலகில் உள்ள அனைவருக்கும் ஏதாவது ஓர் வகையில் இப்படி ஏதாவது அனுபவம் இருக்கும்.பகிருங்கள் பதிவுல நட்புக்களே!!!
               

Tuesday, 1 October 2013

என் தோல்விக்குப் பின்னால்...

                  ஒவ்வொரு  ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாளாம்.ஆனால் என் ’தோல்விக்குப்’ பின்னால் சில ஆண்கள் இருந்தார்கள்.ஹ்ம்ம்ம் இப்போது நினைச்சாலும் கொலையே பண்ணலாம் போல தோணும்!
                  முதன்முதலில் பள்ளிப்பருவம் முடிந்தவுடன் எங்கள் ஊர் பத்திரிக்கை ஒன்றில்(பெயர் சொல்ல விரும்பவில்லை) நிருபர் வேலைக்கு  வாய்ப்பு கிடைத்தது!இங்கே தமிழ்மொழியில் சிறப்புத் தேர்ச்சியும் கூடவே சிபாரிசும் (அந்தகாலத்தில்)இருந்தால் போதும்.எனக்கு முதலாவது தகுதி இருந்தது,இரண்டாவது இருப்பதுபோல ஒரு அறிகுறி.

              ஆம் என் அண்ணியின் தம்பி,அவனுடைய அப்பாதான் அந்த வேலைக்கு நேர்க்காணலை நடத்துபவராக அன்று பொறுப்பேற்றிருந்தார். நான் நேர்க்காணல் போகவேண்டிய தினம் ,என் வீட்டில் என் அண்ணன்மார்கள்,அக்காவின் கணவர் என எல்லோரும் கோரசாக சேர்ந்து ’உனக்கு ஒத்து வராத வேலை அது, ரிப்போட்டர் என்றால் அவர்கள் அழைக்கும் நேரத்தில் நீ ஓடிப்போய் நிற்கனும், ஏதும் விபத்து கொலை என்றால் பயப்படாமல் அங்கே போய் செய்தி சேகரிக்கனும்,உனக்கு அந்த தைரியம் இல்லை ,நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாய் ‘என்று அப்படியே என்னை தடுத்து நிறுத்தினார்கள்!                                                                  
                                              

                 அதன் பிறகு ,விமானப்பணிப்பெண் வேலைக்கான நேர்க்காணல். அந்த வேலைக்கான பாரங்கள் கிடைக்கும் இடம் என் நண்பனின் வீட்டின் அருகே. 
       அவனுக்கு போன் செய்து ‘கொஞ்சம் அந்த பாரங்களை எடுத்து வா’என்றேன்.  அவனும் மற்றொரு நண்பனும் கொண்டு வந்து கொடுத்து விட்டு ‘செல்வி இந்த வேலைக்கு நல்ல உயரமாக இருக்கனும் , அதை விட முக்கியம் ,சிகப்பாக இருக்கனும்?எப்படி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’என்று சிரியோத்தனமாய் சிரித்து என்னையும் சிரிக்க வைத்து விட்டு ,ஆர்வத்தையே சீர்குலைத்துச் சென்றானுங்க படுபாவிகள்!

               சிறுவயது முதல் எனக்கு தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வானொலி அறிவிப்பாளர்  ஆக வேண்டும் என்று ரொம்ப விருப்பம். அதற்காக நான் பல பயிற்சிகள் செய்துவந்தேன். சொந்த முயற்சியில் வீட்டில் சிலவேளைகளில் பேசுவேன். அதை ரெக்கார்டிங் செய்து செய்து கேட்பேன்.

               என் கனவு நிறைவேறும் நாள் வந்தது. ஆம் ,பத்திரிக்கையில் அறிவிப்பு வெளியானது.மலேசிய அரசு தொலைக்காட்சியில் ’தமிழ் பிரிவுக்கு செய்தி வாசிக்க ஆள் தேவை’.ஆ!என் பல நாள் கனவு ,வேகவேகமாய் பாரங்களைப்பூர்த்தி செய்து , படங்களை எல்லாம் வைத்து எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். என் அண்ணா என் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு ,அதெல்லாம் அரசு வேலை எளிதில் நமக்கு கிடைக்காது’என்று கூறியது.

                         ‘ஏன் அப்படி சொல்ற?என்னிடம் அவர்கள் கேட்ட 10  தகுதியும்  இருக்கு’என்றேன்.அண்ணா சொன்னது ,நீ நல்லா படித்தாயா ,அவர்கள் கேட்டிருக்கும் தகுதி எல்லாம் உனக்கு இருக்கா? அந்த பத்தாவது தகுதியை சரியா படிச்சியா?அவுங்கதான் அங்கே நல்லா தெளிவா ‘ஆள் பார்க்க அழகா கவர்ச்சியா இருக்கணும்’என்று போட்டிருக்காங்களே?அப்புறமும் ஏன் உனக்கு இந்த ஆசை?’என்று அப்படியே என் ஆசைகளை நிராசையாக்கியது.நானும் பயந்துகொண்டு போகவே இல்லை!

         அதன் பிறகு ஜப்பானிய நிறுவனத்தில் வேலைக்கு போக நானே முடிவெடுத்து நானே அப்பாவிடம் கேட்டு என் முயற்சியில் போய் வேலையும் கிடைத்தது.அதேப்போலத்தான் தற்பொழுது செய்யும் ஆசிரியர் தொழிலும்!                                                                       
                                        

             ஆனாலும் இப்பொழுது நினைத்துப்பார்த்தால் அந்த வேலைக்கெல்லாம் போயிருந்தால் இதுவரையில் நான் கற்றுக்கொண்டது ,எனக்கு கிடைத்த நட்புக்கள் ,பல வாய்ப்புக்கள் அதெல்லாம் அங்கே கிடைக்கப்பெற்றிருக்குமா?அல்லது அங்கே இதைவிட பெட்டராக எதுவும் கிடைத்திருக்குமோ?
நடப்பவை யாவுமே நன்மைக்கே!