Saturday, 9 February 2013

ஏங்கிய ஒன்று கிடைக்கப்பெறும்போது!


நமக்கு கிடைக்காத ரொம்ப நாள் ஏங்கிய,கிடைத்தும் சரியாக பூர்த்தியாகாத ஒன்று கிடைக்கும்போது,அதை எப்படியெல்லாம் வைத்துபோற்றுவோம்.உயிருக்கும் மேலாக,இறைவனுக்கு அருகில் ,இமைப்பொழுதும் சதா அதே எண்ணத்தில்தான் இருப்போம்,மிதப்போம். அப்படி எல்லோருக்கும் ஏதாவது ஒரு அனுபவம் இருக்கும்,எனக்கும் உண்டு (அது என்னவென்று நீங்கள் கேட்பதுவும் எனக்கு விளங்குது,ஆனால் ரகசியம் என்று மட்டுமே சொல்ல முடியும்).       
                                                   
 சரி இப்போ விசயம் என்னவென்றால்,சித்தப்பா மகள் என் வீட்டுக்கு அருகில் குடி வந்திருக்கிறாள்.அவள் கண்வனின் அப்பா யூரேசன்ஆனால் அம்மா தமிழச்சிதான்.அப்பா ஒழுங்காக ஒரு  வேலை செய்து நான் பார்த்ததே இல்லை.வீட்டிற்கு வருவார்,மனைவியை அடிப்பார்,அந்த மனைவி சேமிச்சு வைத்திருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு போவார்.கிராம வீட்டில் என் பக்கத்து வீடு தோழியின் சின்னம்மா பையந்தான் அந்த மாப்பிள்ளை.எப்போதுமே ஏதாவது ஒரு உறவினர் வீட்டில்தான் அந்த தாய் அந்த 14 பிள்ளைகளோடு இருப்பார்.எத்தனை நாள்தான் எல்லோரும் சகித்துக்கொள்வார்கள்?
                                 
வறுமையின் காரணமாக பதிநான்கு பேர் கொண்ட உடன்பிறப்புகளை எல்லாம் ,அந்த தாய் சின்ன வயசிலே ஆசிரமம் ,சர்ச்சில் கொண்டுபோய் விட்டு வளர்த்தார்.அப்பா அம்மா இருந்தும் அனாதையாக வளர்ந்த அந்த பையனின் மனதில் அன்பு ஏக்கம் இருக்கே?வந்த ஒரே வாரம்தான் என் பிள்ளைகளை அவன் பிள்ளைகள் போல அன்பு காட்டுவதும்.என்னை வாய் நிறைய அக்கா அக்கா என்றும் அழைப்பான்.அவன் வீட்டில் எந்த நேரமும் விருந்தாளிகள் இருக்கவேண்டும்என்றே நினைப்பான்.அவன் அப்பாவை அவன் பார்த்தது கிடையாது.என் அண்டை வீடு என்பதால்,நான் அவனிடம் சொல்வேன் ‘உன் அப்பா இப்படி இருப்பார்,ஆங்கிலம்தான் பேசுவார்,மற்றபடி கெட்டதை சொன்னது கிடையாது அவனிடம்.
                               

அவர்கள் பையனுக்கு தற்பொழுது ஒரு வயது ஆகிறது.பையன் ஹைப்பெர் ஆக்டிவ்,படு சுட்டி ஆனால் தாய் கண்டிக்கவே கூடாது என்பான் பையனின் அப்பா.ஐந்தாவது மாடி வீட்டில் இருந்து பொருட்களை கீழே வீசுவதும்,கோபம் வந்தால்வீட்டில் உள்ள மொபைல் போன்,ரிமொட் கண்ட்ரோலை எடுத்து வீசுவதும் அந்த குட்டி பையனின் பழக்கம்.பாருங்க அக்கா வாசன் இருக்கற இடமே தெரியல,ஆனால் என் பையன் ரொம்ப ராங்கி,அடித்தால் அவர் என்னிடம் சண்டைக்கு வருகிறார் என்றாள் சித்தப்பா பொண்ணு.அதைக்கேட்ட அந்த் கணவன் சொல்கிறான் நீ அவனை அடித்தோ கண்டீசனாகவோ ,ஒழுங்காக கவனிக்காமல் இருக்கிறாய் என்று எனக்கு தெரியவந்தால்,நான் உன்னை அடிக்கமாட்டேன்,என் தாய் அனுபவிப்பதை நீ அனுபவிக்கவேண்டாம்,ஆனால் என் பையனைத் தூக்கிகொண்டு வெளியேறிவிடுவேன் .என் பணம் காசு ,வீடு சொத்து எல்லாத்தையும் எடுத்துக்கொள் ஆனால் ஒரு குடும்பம் இல்லாமல் நான் வளர்ந்த அந்த வலியை நீயும் அனுபவிக்கனும் என்று கூறும்போதே கலங்கிய அவன் கணகளைக் கண்டேன்.
                                 
தொடர்ந்தான்,’அக்கா நீ பயப்படாதே உன் தங்கையை அப்படி நான் விட்டுபோக மாட்டேன்.அப்படியிருந்தால் என் தாயே எதிர்த்த இந்த திருமணத்தை நான் வெற்றிகரமாக்கிவிட்டேன்.ஒரு பெண்,அன்பு,அதுக்காக ஏங்கும் மனிதர்கள்,இதையெல்லாம் நான் நன்கு அறிந்தவன்.என்னையும் சரி, எங்கள் பிள்ளையும் சரி அன்பால் நீ அடக்கவேண்டும் என்றுதான் சொல்லவருகிறேன்.அக்கா 14 பேர் கொண்ட உடன்பிறப்பில் நான் கடைசி.அப்பா அம்மா இருந்தும் கடைக்குட்டி நான் தனிமையில் ஆசிரமத்தில் வளர்ந்த அந்த வலி யாருக்குமே வரக்கூடாது.என் அப்பா எவ்வளவு மோசமான அப்பாவோ,நான் அவரைப் பார்த்த்து கூட இல்லை,நீங்கள் சொல்லிதான் அவர் எப்படி இருப்பர் என்று எனக்கு யூகிக்க முடிகிறது,என் அம்மா அவர் படத்தைக்கூட என்னிடம் காட்டியது இல்லை.நான் அனுபவித்த எதையும் என் பிள்ளை  எந்த விதத்திலும்  இம்மியளவும் அனுபவிக்ககூடாது என்று கண்ணீர் மல்க கூறினான்.
திரும்பி அவன் முகத்தைப்பார்த்தேன் ‘அன்பே சிவம்’.அவன் அனுமதியோடுதான் இந்த பதிவையும் எழுதினேன்.
                                    


Friday, 1 February 2013

மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுளா?

பிளிஸ் இதைக்கொஞ்சம் படிங்க!

மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது எவ்வாறு உண்மையாகும்?
மன்னிப்பவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்குமா என்பது ஒரு விசித்திரமான கேள்வி என்று முதற்பார்வையில் நமக்கு தோன்றலாம்.மன்னிப்பவருக்கு எப்படி ஆயுள் நீடிக்கும்?மன்னிக்கப்பட்டவருக்கு ஆயுள் நீடிக்கும் என்பதில் அர்த்தமிருக்கின்றது’என்றெல்லாம் கேட்டாலும் கேட்கலாம்.மேலும் மன்னிக்கும் போது நம் கோபமும் ரோசமும் மனதுக்குள் அடக்கிவைப்பதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பதல்லவா நிஜ விளைவு என்றும் நாம் எண்ணுவதிலும் விசயமிருக்கு.

நமக்குள்ளிருக்கும் உணர்ச்சிகளை வெளியேற்றி விடுவோமானால் விறைப்பிலிருந்து விடுபட்டு உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி பிறக்கும் என்று அறிந்த ஒன்றே.ஆனால் மன்னிக்கிறவன் உணர்ச்சிகளை மனதுக்குள்ளேயே ஒதுக்கி வைத்திருக்கும் நீடித்த ஆயுளை பெறுவான் என்பதிலும் சாஸ்திர அடிப்படை இருப்பதாக நாம் உணர்வதில்லை.


பாவம் மனிதத் தன்மைக்குரியதும் மன்னிப்பு இறைவனுக்குரியதும் என்பது மத போதனைகள் வெளிப்படுத்தியுள்ளன.ஆனாலும் மன்னிப்பும் நீடித்த ஆயுளும் எவ்வாறு சம்பந்தப்படிக்கின்றன என்பதை அமெரிக்காவில் மிசிகன் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
ஒருவருக்கு மன்னிப்பளித்ததும் அவரிடம் கருணை காட்டியதாக உணரும் நற்சிந்தனை மன்னிப்பவருக்குள் உருவாகின்றதனால் அவர் மகிழ்வுறுகின்றான்.ஆனால் தண்டனை அளிக்கும் போது குற்ற உணர்ச்சி அவரைத் துரத்தி வருவதும் மன நிம்மதியை அழிப்பதுமே விளைவுகள்.


மகிழ்வுற்ற மனதுடையவனுக்கு நீடித்த ஆயுள் உண்டாகும் என்பதையே டாக்டர் லாரன் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார்.

(இன்று வாங்கிய ஒரு புத்தகத்தில் படித்தை பகிர்ந்து கொண்டேன்)