Tuesday, 25 December 2012

இறக்கும் வரை நடைபிணமாகவே வாழ்ந்தான்

                                                                                         
  இன்றோடு என் நண்பனும் என் தோழியின் காதலனுமான திரு.போல் அண்டனி இறந்து 12 வருடங்கள்.எனக்கு என் தோழி அறிமுகமானது நாங்கள் இருவரும் வேலை நிமித்தமாக ஜப்பான்  சென்ற போது ,ஒரே அறையில் தங்கினோம்.போல், அவர் காதலி ,நான் மூவரும் இதற்கு முன்பு பார்த்துதுண்டு ,ஒரே கம்பெனியில் வேலை செய்தோம்  ஆனால் பேசியது இல்லை.போல் உயர்பதவியில் இருந்தவர் ,எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன் கொஞ்சம் proud என்றே நினைத்தேன். போல் அடிக்கடி அவளோடு ஜப்பானுக்கு போன் பண்ணி பேசுவார் ஆனால் போன் பண்ணும்வேளைகளில் அவள் இல்லாவிட்டால் என்னோடு பேசுவார்.’செல்வி அவளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்,அவள் என் உயிர்’என்றெல்லாம் உருகுவார்.போலும் அவர் காதலி இருவருமே கிறிஸ்துவர்கள்.மேலும் இருவருமே ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவார்கள் .என் தமிழ் போலுக்கு ரொம்ப பிடிக்கும் என்பார்.

             அவர்கள் காதைலைக்கண்டு பொறாமைப்படாத  ஆட்களே இல்லை.
     ஆனால் எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை  பட் என்னையும் இப்படி யாராவது காதலிப்பார்களா”என்று ஏங்கியதுண்டு.அப்படி ஒரு காதல்.போல் அவளை மனைவி தன் மனைவி  என்றே சொல்லுவார்.போலின் காதலி ,யூரேசன் என்று அழைக்கப்படும் கலப்பு திருமணத்தில் பிறந்தவள். அப்பா தமிழ் ,அம்மா யூரேசன் ,ஆகவே அவளுக்கு வெள்ளைக்காரர்கள் பழக்க வழக்கம் அதிகம்.ஜப்பானிலிருந்து திரும்பிய சில மாதங்களில் அவள் வேலை மாற்றலாகி சென்றாள்.போல் எவ்வளவோ தடுத்தும் கேட்கவில்லை.போலின் பயமே ,அவள் யாரிடமாவது பழகி மனம் மாறிவிடக்கூடும் என்ற காரணமே.இறுதியில் நடந்ததும் அதுதான்.போன இடத்தில் வெள்ளைக்காரனைப்பார்த்ததால் ,கருப்பு போலைக் கை கழுவினாள்.வெளியூருக்கு பறந்தாள்.மீண்டும் வந்தாள் ,மீண்டும் பறப்பாள்.போலும் வசதியானவர்தான் ஆனால் குடும்ப சுமை அவர்மேல் நிறுத்தப்பட்டது.ஆகவே இவளுக்கு சுமை எல்லாம் சுமக்க முடியுமா என்ன?போல் இடிந்து போனார்.என்னிடம் அழுதார்.நண்பர்களிடம் அழுதார்.காலில் விழாத குறையாக கெஞ்சினார்.நடைபிணமானார்.ஒருமுறை ,போலுக்காக அல்ல அவரின் காதலுக்காக அவளோடு பேசினேன்.அவள் சொன்னது ‘அவருக்கு அவர் குடும்ப சுமை ,வேலை அதிகம் ,சோ என்னால் வெயிட் பண்ண முடியாது!’இனி நான் என்ன பேசமுடியும்.

              ‘நீங்களாவது சொல்லுங்க செல்வி அவளிடம் ,அந்த வெள்ளைக்காரனெல்லாம் ,பாசமாக இருக்கமாட்டான்.காமம்தான் பெரிதாக நினைப்பான் ,அவளை அனுபவித்தவுடன் தூக்கி வீசிச்செல்வான் என்று வெட்கத்தை விட்டு என்னிடம் பேசினார்!எனக்கோ செய்வதறியாது வாயடைத்துப்போனேன்.இந்த அளவு ஒரு ஆண் என்னோடு பேசும் ஒரு நட்பாக நான் போலைக்கருதவில்லை ,அப்படி ஒரு நெருக்கமும் இல்லை.போலும் அந்த அளவுக்கு தரம் இறங்கி பேசும் ஆடவரும் இல்லை .அப்படி பேசுகிறார் என்றால் அந்த அளவுக்கு உடைந்து போயிருக்கார் என்று என் மனம் குமுறியது.என்னோடெல்லாம் பேசுவதற்கே யோசிக்கும் போல் ,இப்படி உரிமையோடு பேசுகிறார் என்றால் ,ஜப்பானில் நான் அவளைக் கவனித்துக்கொண்ட விதம்.மூச்சுக்கு மூச்சு என்னை ,உடன் பிறவா அக்கா ,அக்காவென சொல்லிக்கொள்வாள்.போலுக்காக பல மானேஜர்கள் ,உயர்பதவியில் உள்ள சில தமிழர்கள் எல்லாம் அவளிடம் பேசி பார்த்தனர்.வென்றது வெள்ளைத்தோலும் பணமும் மாயையும் மட்டுமே!அந்த காரணத்தால் போல் தன் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

           ஒரு நாள் இரவு  வேலை முடிந்து  நெடுஞ்சாலையில் தூக்கலக்கம் காரணமாக காரை நிறுத்திவிட்டு ,தூங்கும்வேளையில் எவனோ இடித்து விட்டு போய் விட்டான்.மூன்று நாட்கள் கோமாவில் இருந்து ,அப்படியே இறந்தும் போனார்.போலின் அசைவற்ற உடலைக்கண்டு அழாத ஆண்களே இல்லை .சீனன் ,மலாய்க்காரன் என்று அனைத்து நண்பர்களும் அழுதனர்.நான் போல் வீட்டு வாசலை மிதித்தேன்.என் வாழ்வில் நான் என் அப்பாவின் இறப்பைத் தவிர்த்து ,முதன்முதலாக கதறி அழுத ஒரு மரணம் என்றால் அது போலுடைய மரணம்தான்.என்னைக்கட்டியணைத்து அழுத அவருடைய அம்மா ‘என் பையன் அவன் அப்பா மாதிரிம்மா ,இனி ஒவ்வொரு கிறிஸ்மஸ் நாளும் எனக்கு இருள் சூழ்ந்த நாளே.எப்படி என் பிள்ளை இல்லாத நாட்களை நான் கடக்கப்போகிறேனோ?என்று வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதார்.என்னதான் அவள் எடுத்த முடிவு அவள் சொந்தவிசயமோ அவள் வாழ்க்கையோ ,இறைவனிடம் பதில் சொல்லனுமே?அவர் அவளுக்கு செலவழித்த பணத்தையோ பொருளையோ திரும்ப கொடுக்கலாம ஆனால் அவர் உயிரை? என் வாழ்வில் ஒருவளை நான் மன்னிக்கவேமுடியாது  என்றால் அது அவளாகத்தான் இருக்க முடியும்.
                                                                                                                                                    
                                                                     
                                                                             

Saturday, 22 December 2012

மழலைக்கல்வி என்பது......?

                                                                                 
            இன்னும் ஒரு வாரத்தில் பள்ளி திறக்கப்படும் இந்த சீசனில் பல பெற்றோர்களுக்கு பல கவலைகள்.அதாவது தங்கள் பிள்ளைகளின் கல்வியைப் பற்றிதான்..4 வயது குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர் போன் செய்து,’டீச்சர் என் பிள்ளையை இப்போ பள்ளிக்கு அனுப்பலாமா,அல்லது அடுத்த வருடம் அனுப்பலாமா?என பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன!நாம் அனைவரும் தற்பொழுது too ambitious parents என்றால் அது பொய்யா என்ன?
                                                                                 
           மலேசியாவில் கல்வி அமைச்சின் சட்டதிட்டங்களின்படி ஒரு குழந்தை  தனது ஏழாவது வயதில்தான் தன் ஆரம்பகல்வியை அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றான்.அது ஒன்றாம் ஆண்டு .அதற்கு முன் அவன் பயிலும் மழலைக்கல்வி என்பது பெற்றோர்களின் விருப்பமே ,பள்ளிக்கு அனுப்புவதும் ,அனுப்பாமலிருப்பதுவும்.ஆம் கடந்த சில் வருடங்களாகத்தான் அரசு பாலர்பள்ளிகள்(6வயது மாணவர்களுக்கு) ,தற்பொழுது தமிழ்ப்பள்ளிகளிலும்,இயங்கி வருகிறது.அதற்கு முன் 4 -6 வயதுக்குள் ,தங்கள் பிள்ளைகளை மழலைக்கல்விக்கு அனுப்பவிருபும் பெற்றோர்கள் பணம் செலுத்திதான்  அனுப்ப வேண்டும் .இது 4 மற்றும் 5 வயதுக்கு இன்னும் அப்படியே.
                                                  
                                                                                     
         ஆனால் ஒரு குழந்தை தன் அதிகாரப்பூர்வ கல்வியை தொடங்கும் முன் ,தொடக்ககல்வி அல்லது மழலைக்கல்வி எனக்கூறும் preschool education-ஐ அவசியம் ஒரு வருடமாவது அதாவது தனது ஆறாம் வயதில் கற்க வேண்டும் என்பதே மழலைக்கல்வி ஆசிரியைகளான எங்களுக்கு வலியுறுத்தி போதிக்கப்படுகிறது.அதற்காக 4 வயதிலும் ஐந்து வயதிலும் வசதியும் விருப்பமும் உள்ள பெற்றோர்கள் அனுப்பலாம.அல்லது ஒரு சில பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் ,தங்கள் 3 வயது குழந்தையைக்கூட நர்ஸரி மற்றும் டே கேர் போன்ற பராமறிப்பு இல்லங்களுக்கு அனுப்புகின்றனர்.
                                                                                     
                ஓர் ஆசிரியையாக அல்லாமல் ஒரு தாயாக , 4 வயது மாண்வர்களுக்கு மழலைக்கல்வி கட்டாயம் என்றும், அதுவும் அதனை மழலைக்கல்வி மையங்களில்தான் சென்று பயிலவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றே சொல்லுவேன்.ஒரு தாய் வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கும் கற்றுத்தேர்ந்த தாயாக இருந்தால்,குழந்தைகளின் வயதுக்கு ஏற்றவாறு
எழுத்துப்பயிற்சி புத்தகங்களை வாங்கி வீட்டிலே எழுத வைக்கலாம.earlychildhood education சம்பந்தப்பட்ட குறுந்தட்டுகளை வாங்கி கூட குழந்தகளைப் ப்ர்க்க வைக்கலாம்.பொதுவாக 4 வயது மாணவர்களுக்கு play therapy எனும் விளையாட்டின் வழி கல்விதான் மழலைக்கல்வியில் கற்றுக்கொடுக்கபடுகிறது.
                                                                       
            ஆனால் பெரிய அளவில் பணம் செலுத்தி குழந்தைகள் செல்லும் கிண்டர்கார்டனில் பொதுவாக 4 வயது மாணவர்களை கட்டாயப்படுத்தியும் (சிலவேளைகளில் விரல்களில் அடித்தும்)எழுத படிக்க பயிற்றுவிக்கப்படுகின்றனர்.இதற்கெல்லாம் காரணம் ,பெற்றோர்களின் எதிர்ப்பார்ப்பும்தான்.புள்ளைங்க கிண்டர்கார்டனிலே எழுதனும் ,பக்கம் பக்கமாய் படிக்கனும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் பேராசை என்றே சொல்லலாம்..இது பல கிண்டர்கார்டன் மற்றும் பிரிஸ்கூலில் பார்த்ததும் உண்டு செவி வழி பல ஆசிரியர்கள் ,சொல்ல கேட்டதும் உண்டு.இது தவறே என்று சொல்லுவேன் .சுமார் 4 வயதில் கல்வியைத் தொடங்கும் ஒரு குழந்தை குறந்த பட்சம் 20 வயது வரை பயில்கிறான்.கற்கும் குழந்தைகள் எப்படியும் கற்றுக்கொள்ளும் .கருத்தரித்த மூன்றாவது மாதத்தில் ஒரு குழந்தை கற்க தொடங்குவது நாம் அறிந்ததுதானே?கர்ப்பிணிக்கு ஏழாம் மாதம் வளைக்காப்பு போட்டு ,கிண்ணத்தில் பாலை  எடுத்து ,தாயின் பின் கழுத்துப்பகுதியில் ஊற்றும் போதுஅவளுக்கு உடல் சிலிர்க்கும் சமயம் அவள் காதில் மந்திரம் சொல்வது நம் சடங்குகளில் ஒன்றுதானே?அங்கேயே அந்த குழந்தைக்கு போதனையை (இறை நாமத்தை)சொல்லுகிறோம்தானே?
                                                                               
           சிலர் டே கேர் என்னும் பராமறிப்பு இல்லங்களில் காலையில் கல்வி கற்கவும் பிறகு மதியம் தொடங்கி மாலை வரை டியூசன் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.இதுவே அந்த குழந்தைகளுக்கு ஒருவித வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும்.ஆகவேதான் 4 வயதில் குழந்தைகளை கல்வி கற்க அனுப்புவது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விசயம் என்றே சொல்கிறேன்.என்னதான் காசு கட்டி அனுப்பினாலும் கற்கும் குழந்தைள் மட்டுமே வெகு விரைவில் அனைத்தையும் கிரகித்துக்கொள்ளும்.ஆகவே மழலைக்கல்வி என்பது ஒரு குழந்தையை ஆரம்பக்கல்விக்கு தயார் படுத்துவது,அதாவது பென்சிலைப்பிடிக்க பழக்குவது,பக்கங்களைப்புரட்ட,எழுத்துக்களையும் எண்களையும் அறிந்துகொள்ள ,பள்ளி மற்றும் அந்த சூழலை அவனுக்கு அறிமுகபடுத்துவதுதான்  நோக்கமே தவிர அந்த பிஞ்சுகளிடம் அதிகம் எதிர்பார்ப்பது என்பது கூடவே கூடாது!ஆறு வயது மாணவர்களுக்கு தேர்வு தாளில் ஆங்கிலத்தில் examination  என்று கூட அச்சிடாமல் assesment என்றே அச்சிட வேண்டும்.காரணம் எக்ஸாம் என்றாலே அதுகளுக்கு பயம் வந்துவிடும் என்பதால்.
                                                                               
மலேசியா பொறுத்தவரையில் ஒரு மாணவன் ஆறு வயதில் கற்கும் அதே syllabus தான் ஒன்றாம் ஆண்டிலும் பயில்கிறான்.ஒருக்கால் தனியார் பள்ளி அல்லது இண்டர்நேஷனல் பள்ளியாக இருந்தால் கொஞ்சம் வேறு பட்டிருக்கும் .4 தொடங்கி 6 வ்யது வரை ,ஒரே விசயத்தை ,அரைத்த மாவை கற்றுக்கொள்கிறான்.மீண்டும் ஒன்றாம் ஆண்டிலும் அதே கல்விதான்.அதை தெளிவாக பெற்றோர்கள் புரிந்து கொண்டாலே எதிர்பார்ப்பு குறைய வாய்ப்புகள் பிரகாசமா இருக்கு
                                                                               

Thursday, 6 December 2012

ஈகோ என்ற ஈரெழுத்து

                                           
     அந்த ஈரெழுத்து ,உடல் என்ற மூவெழுத்துக்குள் புகுந்து இந்த ஆன்மாவை  ஆட்டிப்படைக்கும் ஆதிக்கம் இருக்கே?ஆங்கிலத்தில் ஈகோவை edging god out என்று சொல்வதாக ஒரு புத்தகத்தில்  படித்த ஞாபகம்!படிக்காதவனுக்கு  பணம் இருந்தால் ஈகோ.படித்தவனுக்கு தான் வகிக்கும் பட்டம் பதவியில் ஈகோ.பணமும் இருந்து பதவியும் இருந்தால்...கேட்கவா வேண்டும் ஆனால் எல்லோரும் அப்படி அல்ல!மனைவி கணவனை விட கொஞ்சம் அதிகம் படித்திருந்தாலோ அல்லது சம்பாதித்தாலோ,கணவனுக்கு கண்டெய்னர் கணக்கில் ஈகோ வந்துவிடும்.அவள் ரெண்டும் ரெண்டும் நான்கு என்று சொன்னாள் கூட ,சில கணவர்மார்கள் இல்லை ’4’ என்று ஆங்கிலத்தில் சொல்வதும் சில இடங்களில் கண்டதுண்டு.நன்றாக ஆங்கில புலமை நம்மில் சிலருக்கு இருந்தால்,தாய்மொழி பேசும் தமிழனைக்கண்டால் ஈகோ!
                                   
         எத்தனை மனிதர்கள் தாங்கள் செய்தது தப்பு என்று தெரியவரும் வேளையில், மனசார மன்னிப்புக்கேட்கிறோம்?எப்படி கேட்பது,மன்னிப்பு கேட்பது நமெக்கெல்லாம் அம்புட்டு பெரிய கேவலமான செயலாச்சே?மன்னிப்பது வெட்கமல்ல,மன்னிக்காமல் இருப்பதுதான் கேவலமான செயல் என்று எங்கோ படித்த ஞாபகம்.நமக்கு எப்போது கோபம் வருகிறது?நாம் எங்கே தோற்றுப்போகிறோமோ,அங்கேதான் நமக்கு கோபமும்..அதனையடுத்து ஈகோவும் தலைத்தூக்கி நிற்கும்.ஒரு சிலகுருமார்களுக்கு தன் சிஷ்யன் தன்னைவிட கொஞ்சம் முதிர்ச்சியடைந்திருந்தாலும் ஏற்றுக்கொள்ள மனம் இடம் கொடுப்பதில்லை. ஒரு சிலரிடம் ஒரு பழக்கம் உண்டு.அவர்கள் படித்த ஒன்றை நம்மிடம் பகிரும்போது ,’ஓ இதுவா ,நான் ஏற்கனவே படிச்சிட்டேன்’என்று உண்மையைச் சொன்னால் கூட அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியாது?அதெப்படி நான் இலக்கியவாதி ,படைப்பாளன் என்னை முந்திக்கொண்டு நீ படித்திருக்கமுடியும்?
                                       
      உன் மதம் பெரிசா என் மதம் பெரிசா?என்பதில் ஒரு ஈகோ,அதைவிட,உன் ஜாதி பெரிசா என் ஜாதி பெரிசா என்பதில் ஓர் அகங்காரம்.என் கடவுள்தான் முதலில் வந்தார்,பிறகுதான் உன் கடவுள் என்று கூவும் ஒரு ரகம்.இனங்களுக்குள் ஒரு பிரச்சனை.எந்த இனம்,எவன் பெரியவன்?ஆப்ரிக்க கறுப்பின மக்களுக்கு தங்களை ‘கறுப்பன்’என்று சொன்னால்தான் விரும்புவார்களாம்.ஆனால் எங்கள் ஊரில் சீனன் ,எங்களை கறுப்பன் என்றால் ,அடித்தே கொன்று விடலாம் போல  ஓர் உணர்வு வரும்!ஏன் அவ்வளவு தூரம் போவானேன்,நம் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூட சாமிகளுக்கிடையே யார் பெரியவன் என்ற ஆணவம் உள்ள  கதைகள் கேட்டதுண்டு.அதெவெல்லாம் ஏதோ ஒன்றை நமக்கு உணர்த்தவே ஒழிய வேறொன்றுமில்லை.அவருக்கே அப்படி என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?அப்படித்தானே கேட்க தோணுது?

                                  
      தெரிந்த தோழி ஒருவள் அரசு வேலை.நம்மில் சிலபெண்களுக்கு ,அரசுப்பணி என்றால் சொல்லவே தேவையில்லை.திருமணம் ஆகி பல பிரச்சனைகளோடு வாழ்க்கை.எல்லோருக்கும் அப்படித்தானே ஆனால் கண்வன் குடும்பத்தில் பிரச்சனை.கணவ்ர் குடும்ப உறுப்பினர்கள் படிக்காதவர்கள் தான் படித்தவள் என்கிற அகங்காரம் தலைத்தூக்கவே,ஆட்டமாய் ஆடுகிறாள்.விளைவு, விவாகம் ரத்து!தன் கண்வன் ரொம்ப நல்லவர்,’அவருக்கு என்னைத் தள்ளிவைக்க மனம் இருக்காது ,அவர்கள் குடும்பம்தான் இப்படி செய்ய தூண்டியது?ஆமாம் குடும்ப உறுப்பினர்கள் தம்பி மனைவியோடு சேரவே கூடாது என்ற ஈகோ?இந்த வரட்டுக்கெளரவம் ,கணவன் மனதில் ஆசை இருந்தாலும் ,எப்படி நாமாக போவது?குடும்பத்தை எதிர்த்துக்கொண்டு எப்படி செயல்படுவது என்று தன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.

                              
      இன்னொருபுறம் ,கண்வனுக்கும் மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு.மாமியார் மருமகள் பிரச்சனைதான்.ஊதி ஊதி பெரிதாக வெடிக்க,மருமகள் வெளியேற்றம்.அம்மாவுக்கு கணவர் இல்லை,கருணையால் மகனைத் தன் வசம் இழுக்கிறார்.மருமகளிடம் தோற்றுப்போகக்கூடாது என்ற ஈகோ?விளைவு மகனின் வாழ்க்கை பகடைக்காய்!மகனும் அம்மா பிள்ளையாம்,எங்கம்மாவை மதிக்காதவள் என்று பிள்ளையை தாயிடம் இருந்து அபகரித்துக்கொண்டு ,மனைவியை தள்ளி வைக்கிறான்.தாயோடு அந்த கணவன் இருக்கிறான் ஆனால் அவன் பிள்ளை மட்டும் தன் தாயோடு இல்லாமல் பாட்டியோடு?என்ன நியாயம்?இப்படி எத்தனை வாழவேண்டிய தம்பதிகள் அகங்காரம் ஆணவச் செருக்கினால் ,மனதில் ஆசை இருந்தும் ஈகோ தடுக்கிறது.இன்னும் தனிமனிதனாய் ஆனால் ஆசைகளை சுமந்துகொண்டு.எத்தனைக் காதல்கள் ஈகோ என்ற கல்லறைக்குள் உயிருடன் புதைக்கப்பட்டு ,வாழத்துடித்துக்கொண்டிருக்கின்றன?

                                
          ஒரே குடும்பத்தில் ஒரே வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் எத்தனைக் குடும்பத்தில் உறவாடிக்கொண்டிருக்கின்றன?அவன் அதைச் சொன்னான்,இவள் இதைச் செய்தால் ,நான் சாகும்வரை முகத்திலே விழிக்கவேண்டாம்?நாம் யார் பிறரை அப்படி சொல்ல.நம்மில் இருக்கம் ஆன்மாதானே இந்த உடலுக்கு சொந்தல்.இடையில் வாடிக்கையாக  வந்து இவ்வுடலில் புகுந்துகொண்ட நமக்கு என்ன உரிமை இருக்கு?ஆனால் மாற்றான் தாயின் வயிற்றில் பிறந்தாலும் ,நட்பு என்கிற பெயரில் எத்தனை உயிர்கள் உடன்பிற்ப்புகளாகவே வாழ்ந்து வருகிறோம்?என்றாவது ஒருநாள் இதைப்பற்றி யோசித்திருப்போமா?நமக்குத்தான் அதுக்கெல்லாம் நேரம் இல்லையே?உயிருக்குயிராய் இருந்த நட்புகள் ,இன்று கண்ணுக்குத்தெரியாத தூரத்தில் முடங்கிக்கிடப்பதுவும் ஈகோவின் வருகைதானே?ஒருவர் அடிக்கடி இப்படி சொல்வாராம்,’என்னைக் கேட்காமல் என் வீட்டில் மூச்சுக்கூட விடமாட்டார்கள் ,அப்படி ஓர் ஆணவம்,அகங்காரம்!இறுதியில்,அவர் இறக்கவிருந்த சமயங்களில் அவர் மூச்சை அவரே விடமுடியாமல் செயற்கை மூச்சு(கேஸ்) வழி அவருக்கு போய்க்கொண்டிருந்ததாம்.சுகி.சிவம் ஐயாவின் புத்தகத்தில் படித்து நன்றாக சிரித்தேன். 
                                   

       ஒரு கதை.ஒரு காகம் ஒரு மாமிசத்துண்டைக் கவ்விக்கொண்டு பற்க்கிறது.அதனைத் துரத்திக்கொண்டு கழுகும் சில பறவைகளும் பறக்கின்றன.காகமும் உயரப் பறக்கிறது.பறவைகள் விட்டபாடில்லை.இறுதியில் காகம் உயரப் பறந்து சென்று மாமிசத் துண்டை ,கீழே போடுகிறது,மற்ற பறவைகள் ,அதனை நோக்கி கீழே பறக்கின்றன.காகத்துக்கு மற்ற பறவைகளிடமிருந்து விடுதலை கிடைக்கிறது.அப்ப்போதான் காகத்துக்குப் புரிந்ததாம் ‘நான் மாமிசத்துண்டி இழந்தது என்னவோ உண்மைதான் ஆனால் நான் இப்போது பெற்றிருப்பது எத்தனைப் பெரிய சுதந்திரம்’என்று?
நமக்குள் இருக்கும் அகங்காரம் கூட இந்த மாமிசத் துண்டைப்போலத்தான்.இதை நாம் கைவிட்டுவிட்டால் வாழ்க்கை லேசானதாக ஆகிவிடும்.


      விட்டுப்போன உறவுகள்,பந்தங்கள் ,நட்புகள் ,காதல்கள் ,திருமணங்கள் அனைத்தையும்  இனி எப்பொழுது மீட்டுக்கொண்டு வரப்போகிறோம் அல்லது அவைகளாக வரத்தான் போகுதா?நாம் வாடிக்கையாக வந்து குடியிருக்கும் இவ்வுடலுக்கு எப்பொழுது காலாவதி நோட்டிஸ் இறைவன் அனுப்பபோகிறானோ?பிறரை மகிழவைத்துப்பார்,உனக்கு மகிழ்ச்சி கிட்டும் என்பது போல்,நம்மால் முடிந்தவரை ஈகோவை தூரவைத்து இன்பத்தை அருகில் கொண்டு வருவோம்.இந்த உலகில் நாம் ஒரு சுற்றுப்பயணியாக வந்திருக்கிறோம்.மீண்டும் திரும்பிபோக,வண்டியைத் தயார் நிலையில் வைத்திருக்கிறான் இறைவன்.நாம் கடந்து போகும் காலம் வெகுதூரமில்லை.உண்மையாக நேசித்தவர்களைத்தான் நாம் உரிமையோடு கோபித்துக்கொள்வோம்.அதே உரிமையில் மீண்டும் உறவைப் புதுப்பித்துக்கொள்ளுவதில் என்ன தயக்கம்?

                                                       
      நமது வேதத்தில் அர்த்த சாஸ்த்திரம் ,தர்ம சாஸ்த்திரம்,காம சாஸ்த்திரம் ,மோஷ சாஸ்த்திரம் என்று நான்கு வகைகள்.இதில் கடைசியாக சொல்லும் மோஷ சாஸ்த்திரத்தில் ‘அகங்காரத்தை விட்டொழித்தால்தான் நமக்குள் இருக்கும் ஆனந்த சொரூபத்தை நம்மால் தரிசிக்க முடியும்’என்று கூறப்படுகிறது.(மனசே ரிலாக்ஸ் பிளிஸ்).இறைவன் என்கிற கடலில் நாம் ஒரு அலை என்பதை உணராத அகங்கார ஆட்டங்கள் அவஸ்தை..அசிங்கம்..அலங்கோலம்.நமது ஒவ்வொரு இயக்கமும் கடவுளின் இயக்கமே என்பதை உணரும் பூரண சரணாகதியே ஞானத்தின் பிறப்பு,நிம்மதி  நிலை!