Saturday, 20 October 2012

சொர்க்கமே ஆனாலும் அம்மா வீட்டு தீபாவளிபோல வருமா?

                   தீபாவளி என்றாலே எங்கள் வீடுதான் எல்லோருக்கும் பிடிக்கும் .இதற்கு காரணம், என் அப்பாவும், என் அம்மாவும் அவர்களின் குடும்பத்தில்மூத்தவர்கள்.என் அப்பா பத்து பேர்களில் மூத்தவர்,என் அம்மாவும் மூத்த பெண்(முதலாவது என் தாய்மாமன்)அம்மாவின் உடன்பிறப்புகளும் பத்துபேர்.இதுபோக ,என் அப்பா என்றால் ,உறவினர்களுக்கு ரொம்ப பிடிக்கும்!அவ்ர் ரொம்ப உதவி செய்பவர்,சாது,கொடுக்கும் மனப்பான்மை!இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.அப்பவை மணந்ததால் அம்மாவும் ,அந்த குணஙகளைப் பெற்றார்!
                                                                                                                                                      
     நாங்கள் வசித்து வந்தது டிப்பிக்க்கல் தமிழர்கள் வசிக்கும் (கம்போங்)கிராமம்!ஆகவே அங்கே தமிழர்கள் பெருநாட்கள் என்றாலே,ஒரே ஆர்ப்பாட்டம்!அதிலும் தீபாவளி என்றால் கேட்கவே வேண்டாம்!ஒருமாதத்துக்கு முன்பே,வீட்டைச் சுத்தம் செய்வது,அலங்காரம் செய்வது,புத்தாடைகள் வாங்குவது,பலகாரங்கள் செய்வது என பல வேலைகள் மும்முரமாக நடக்கும்.போட்டாபோட்டி போட்டுக்கொண்டுதான் பல வேலைகள் செய்வோம்.பக்கத்துவீட்டுத்தோழியின் வீட்டில்,5 விதமான பலகாரங்கள் என்றால்,உடனே நாங்கள் எக்ஸ்ட்ரா ஒன்னு செய்வோம்,அதையும் போய் உடனே, அவுங்க வீட்டில் பெருமையாய் சொல்லிட்டு வருவோம்.அவளும் அவள் தங்கையும் சளைத்தவர்கள் அல்ல,உடனே அடுத்தநாள் ,அவுங்க வீட்டில் இன்னொரு பலகாரம் இடம்பெறும்,அந்த விசயம் எங்களுக்கு தெரியவந்தால் உடனே,அம்மாவிடம் போய்,பலகாரம் செய்யனும்னு காசு கேட்போம்,ஆப்பைக்கரண்டியில் அடி விழும் ஆனால் வலிக்கவே வலிக்காது ,பக்கத்து வீட்டு எக்ஸ்ட்ரா பலகார தகவல்தான் அதிகமாக வலிக்கும்!

       என் அக்காள்கள் இருவரும் திருமணம் ஆகும்வரை,நானும் என் தங்கையும்  சின்னப்பிள்ளை,செல்லப்பிள்ளை.தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும்பொழுது,பலகார வேலைகள் அனைத்தையும் முடித்துவிடுவோம்.பிறகு அந்த வாரத்தில் வீடு கழுவுதல்,ஒட்டடை அடித்தல்,பக்கத்துவீட்டை எட்டிப்பார்த்து ஏதாவது ஐடியாவைத் திருடி,வீட்டை அலங்கரித்தல் இப்படியே ஓடும்!தீபாவளி முதல்நாள்,யாராவது உறவினர் கண்டிப்பாக குடும்ப சகிதம்(அப்பா வழி)நம் வீட்டுக்கு வருவாங்க.அப்படி வரும் உறவினர்களில் எங்கள் வயது உள்ள சித்தப்பா பிள்ளைகள் என்றால்,கேட்கவா வேண்டும் எங்க சந்தோசத்திற்கு!தீபாவள் ஈவ், காலையில் ,பொதுவாக சீக்கிரமே  எழனும்!அப்போத்தான் அப்பாகூட காரில் மார்க்கெட் போகமுடியும்.லேட் என்றால்,தண்டனை வீட்டில் வேலை செய்து சாகனும்??ஊர் சுத்த முடியாதே!அப்பா காரில்,பக்கத்து வீட்டுத்தோழி(அவளுக்கு அப்பாவும் இல்லை,அண்ணனும் இல்லை)ஆகவே ,நாம்தான் எங்கு போனாலும் அழைத்துச் செல்வோம்.அப்புறம் ,அப்பாவின் இரண்டாம் தங்கை(சின்ன அத்தை)அவருக்கு கணவர் இல்லை,ஆகவே அவரையும் போய் ,காரில் அழைத்துக்கொண்டுதான் மார்க்கெட் போவோம்!                                                                         
                                                                           
                மூன்று மணி நேரம் ,மார்க்கெட்டிங்,முடித்து வீடு திரும்புவோம்.அதற்குள், வீட்டில் அக்காள் மற்றும் எங்களோடு வளர்ந்த என் அப்பாவின் கடைசி அத்தையும் எல்லா வேலைகளையும் முடித்துவிடுவர்!நானோ வாங்கி வந்த பூக்களையெல்லாம்,ஜாடியில் அழகுபடுத்தி வைப்பேன்,அண்ணா இருவர் மற்றும் தம்பியும் சேர்ந்து வீட்டை ரொம்ப அழகாக அலங்கரிப்பார்கள்!!அப்படி இப்படின்னு ,இரவாகி விடும்!குளித்த உடன்,இறந்த பெருசுகளுக்கு படையல் போடுவோம்!கண்டிப்பாக அந்த நிகழ்வில் ,அழையா விருந்தாளியாகா யாராவது வந்து கலந்து சாப்பிட்டு செல்வார்கள்(அப்படி படையல் விருந்தில் அழையாமல்  வருபவர்கள்,இறந்தவர்கள்தான் அவர்கள் உருவில் வருவதாக பக்கத்து வீட்டுப் பாட்டி சொல்லும்?)ஆனால் இது வருடா வருடம் நடக்கும் என்பதுதான் ஆச்சரியமும் உண்மையும் கூட!

  என்னதான் செய்வோம்னு தெரியாது ,ஆனால் விடிய விடிய விழித்துக்கொண்டு வேலைகள் இருந்த வண்ணம் இருக்கும்.விடியற்காலை ஐந்து மணிக்கு ,அம்மா வெந்நீர் போட்டு ,ஒவொருவருக்கும் எண்ணெய் தேய்த்து விடுவார்.பிறகு புது உடை ,நகைகள் போட்டுக்கொள்வோம்.அன்று மட்டும் அம்மா கையில் ஸ்பெசல் தோசை இட்லி கிடைக்கும்(மற்ற நாட்கள் ,நாங்க்ள் (பெண்பிள்ளைகள்)சாப்பிடாவிட்டாலும் அம்மா வருத்தப்படமாட்டார்.).யாராவது உறவினர்கள் அல்லது நண்பர்கள் ,நம் வீட்டில் காலைப்பசியாறைக்கு வருவது வழக்கமான ஒன்று.

             அண்டைவீட்டாருக்கு பலகாரம் ,பசியாறைக்கொடுக்கும் சம்பிரதாயம் எங்கள் கம்போங்கில் முக்கிய கலாச்சாரம் என்றே சொல்லலாம்.அப்படி ஒரு சகோதரத்துவமாக பழகி வந்தோம்.மதிய உணவுக்கு தயார் செய்தல்,மாலை காப்பி டீ என்று இரவாகிவிடும்.சுமார் ஐந்து நாட்களாக தொடந்து ஒவ்வொரு சித்தப்பா குடும்பம்(அப்பா வழி)சித்தி குடும்பம்(அம்மா வழி)என்று விருந்தாளிகள் வந்த வண்ணம் இருப்பார்கள்.வீடே குதூகலமாய் இருக்கும்.வேலையே ஓயாது ஆனால் களைப்பு தெரியாது காரணம் விரும்பியும் பகிர்ந்தும் வேலைகளைச் செய்வோம்!

 இப்படியெல்லாம் கொண்டாடிய தீபாவளி ஒரு வருசம் ,அம்மா வரவேற்பறையின் மூளையில் கண்ணீர் (அலங்)கோலமாக.அண்ணா மற்றும் தம்பி மூவரும் செய்வதறியாது டிவியில் லயித்துக்கிடக்க,நானும் தங்கையும் எதையும் பார்க்க விருப்பம் இல்லாமல் அறையில் வெறுமென படுத்துக்கொண்டும் அழுதுகொண்டும் .போன் மேல் போன் அலறியவாறு அப்பா உற்வினர்களும் ,அம்மா உறவினர்களும் !அண்டைவீட்டாரின் விதவிதமான பலகாரங்கள் எங்கள் டைனிங் மேஜையில் குவிந்து கிடக்க.எல்லாத்துக்கும் மேலாக எங்கள் அப்பா ,வெறும் நிழற்படமாக மட்டுமே வரவேற்பறையில் மேல், எங்களைப்பார்த்து கவலையாக இருப்பதை உணர்ந்தேன்.ஆம் 1992 அப்பா இறந்த வருட தீபாவளி கோலம் அது!
                                                                           
                                                                                       

3 comments:

  1. நானும் மாமியார் வீட்டில்.. எதிலுமே நாட்டமில்லாமல் அழுதவண்ணம் அந்த வருட தீபாவளியில்.. மாமி எவ்வளவோ ஆறுதல் சொல்லியும்.. ஆள விடு நான் என் வீட்டிற்குப் போகணும் என்கிற சிந்தனை மட்டுமே என்னுள். இன்னமும் நினைத்துப்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. அப்பாவின் நினைவுகளை சொல்லி எங்களையும் எங்கள் அப்பாக்களை நினைவு கூரவைத்துவிட்டீர்கள்.....அப்பாவுக்கு எனது அஞ்சலிகள்.....

    ReplyDelete
  3. எங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாட்டங்கள் இருப்பதில்லை என்றாலும் குழந்தைகளுக்காக பண்டங்கள் அம்மா செய்து தருவார், அப்பா பட்டாசுகள் வாங்கித்தருவார்....மற்றபடி கொண்டாட்டங்கள் கிறிஸ்மஸ், புது வருங்களுக்குதான் கொண்டாட்டம், புதுதுணிகள் எல்லாம்...!

    ReplyDelete